மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்காவின் டெட்ராய்ட் பெருநகரப் பகுதி முழுவதும் சுங்க அமலாக்கத் துறை (ICE) முகவர்களின் நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக அதிகரித்து வருகின்றன. இது ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் நாடு தழுவிய அளவில் நடத்தி வரும் கடுமையான ஒடுக்குமுறைத் தாக்குதலின் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது.
கடந்த திங்கள்கிழமை காலை, டெட்ராய்டில் புலம்பெயர்ந்தவர்கள் அதிகம் வாழும் ஹாம்ட்ராமிக் (Hamtramck) பகுதியில் உள்ள பேக்டரி ஜீரோ (Factory Zero) தொழிற்சாலை வளாகத்திற்கு வெளியே ICE முகவர்கள் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டனர். அடையாளக் குறிகள் இல்லாத நான்கு வாகனங்களில் வந்த முகவர்கள், சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை மறித்து, தொழிற்சாலைக்கு அருகிலேயே கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆலைத் தொழிலாளர்களிடையே அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்திய இந்தச் செயலுக்கு எதிராக, அவர்கள் தங்கள் புலம்பெயர்ந்த சகோதர சகோதரிகளுடன் வர்க்க ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
பிப்ரவரி 2 அன்று, ஹேசல் பார்க் பகுதியில் உள்ள அமேசான் வளாகத்திற்கு வெளியே ஒரு திடீர் சோதனை நடத்தப்பட்டது, அங்கு இரண்டு அமேசான் பிளெக்ஸ் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் தற்காலிகப் பாதுகாப்பு அந்தஸ்து கொண்ட புகலிடம் கோருபவர்கள் என்ற போதிலும், கட்டிடத்திற்குள் இருந்த தொழிலாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர்களை ICE பிடித்துச் சென்றது.
ரோமுலஸ் பகுதியில் ஒரு பண்டக சாலையை வாங்கியுள்ள ICE முகவர்கள், சவுத்பீல்டில் ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது நாடு முழுவதிலும் உள்ள பண்டக சாலைகளை தற்காலிக தடுப்பு மையங்களாக மாற்றுவதற்கான 38 பில்லியன் டாலர் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த அதிரடி கொள்முதல் நடவடிக்கையின் அளவு, ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகை பல லட்சம் மக்களைக் கூண்டோடு கைது செய்யத் தயாராகி வருவதைக் காட்டுகிறது.
இந்த ஆண்டு, மினியாபோலிஸில் நடந்த வன்முறைத் தாக்குதலுடன் தொடங்கியது. அங்கு ICE மற்றும் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) அதிகாரிகள் ரெனீ குட் மற்றும் அலெக்ஸ் ப்ரெட்டி ஆகிய இரண்டு உள்ளூர் மக்களைக் கொன்றனர். மேலும் நகரம் முழுவதிலும் வன்முறைத் தாக்குதல்களை நடத்தி, குழந்தைகள் உட்பட புலம்பெயர்ந்தவர்களைப் பிடித்து நாடு கடத்தினர் அல்லது டெக்சாஸில் உள்ள குரூரமான டில்லே உள்ளிட்ட பெரும் தடுப்பு முகாம்களுக்கு —உண்மையில் சொல்லப்போனால் இவை சித்திரவதை முகாம்கள்— அனுப்பினர்.
பத்தாயிரக்கணக்கான மக்கள் ICE-யின் அத்துமீறல்களுக்கு எதிராகப் போராடிய மினியாபோலிஸ் அனுபவத்திலிருந்து பாடங்கள் கற்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், டெட்ராய்ட் நிகழ்வுகளும் நாடு தழுவிய இந்தத் தயாரிப்புகளும், ட்ரம்ப் “தீவிரத்தைக் குறைத்து வருகிறார்” என்று ஜனநாயகக் கட்சியினரும் ஊடகங்களும் கூறுவது ஒரு மோசடி என்பதை அம்பலப்படுத்துகின்றன. குடிவரவு கெஸ்டாப்போ (Gestapo நாஜி ஆட்சியின் கீழ் இருந்த கொடூரமான இரகசிய பொலிஸ் படை) முகவர்களும் அதிரடிப்படையினரும் அங்கிருந்து வாபஸ் பெறப்படவில்லை; அவர்கள் மீண்டும் புதிய இடங்களில் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.
இதற்கு எதிரான போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு ஒழுங்கமைப்பதற்கு, மிகவும் திட்டமிடப்பட்ட மற்றும் நனவுடன் கூடிய அணுகுமுறை தேவைப்படுகிறது. மேலும், இது தொழிலாள வர்க்கத்தின் அபரிமிதமான பலத்தை அணிதிரட்டுவதாக அமைய வேண்டும்.
அடுத்த இலக்குகளில் ஒன்றாக டெட்ராய்ட் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதலானது, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான பயங்கரவாத தாக்குதல் தீவிரமடைவதைக் காட்டுகிறது. டெட்ராய்ட் பெருநகரமானது 4.4 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு முக்கியத் தொழில்துறை மையமாகும். மேலும், இது அமெரிக்க வாகனத் தொழில்துறையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இதயப் பகுதியாகும். இப்பகுதியில் கிட்டத்தட்ட 2,50,000 உற்பத்தித் துறை தொழிலாளர்கள் வசிக்கின்றனர்.
இந்த நகரம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வர்க்கப் போராட்டத்தின் செழுமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. பல தலைமுறைகளாக ஆலைகளில் உழைத்து வரும் தொழிலாளர்களின் நினைவில் இது இன்றும் உயிர்வாழ்கிறது. இதில் யூத விரோதியும் நாஜி ஆதரவாளருமான ஹென்றி போர்டுக்கு எதிராக நடத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கப் போராட்டங்களும் அடங்கும். அவரது அந்தப் பிற்போக்குத்தனமான மரபு, இன்றைய தன்னலக் குழுக்களின் மத்தியில் ட்ரம்பிற்கு கிடைக்கும் ஆதரவில் இன்னமும் பிரதிபலிக்கிறது.
வாகன உற்பத்தி ஆலைகள் இன, நிற மற்றும் தேசிய பின்னணிகளைக் கொண்ட பன்முகத்தன்மை வாய்ந்த தொழிலாளர்களைக் கொண்டுள்ளன. நாட்டின் மிகப்பெரிய, மத்திய கிழக்கிலிருந்து புலம்பெயர்ந்த சமூகங்களைக் கொண்டிருக்கின்ற நகரங்களில் டெட்ராய்ட்டும் ஒன்றாகும். பங்களாதேஷ் முதல் போலந்து வரையிலான வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் ஹாம்ட்ராமிக் நகரம், ஆழ்ந்த பன்முகத்தன்மை கொண்ட ஒரு தொழிலாள வர்க்க நகரமாகும். போர்டு நிறுவனத்தின் தலைமையகம் மற்றும் ரூஜ் வளாகம் அமைந்துள்ள டியர்போர்ன் பகுதி, அமெரிக்காவிலேயே அதிகப்படியான அரபு வம்சாவளியினரைக் கொண்ட இடமாகும்.
இதற்கு எதிராகத்தான் ட்ரம்ப் போரைத் தொடங்கியுள்ளார். ஹிட்லரின் விசிறியான அவர், அமெரிக்காவில் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுவதை விடக் குறைவான எதனையும் இலக்காகக் கொள்ளவில்லை. ட்ரம்ப் ஒரு தனிமனிதராகச் செயல்படவோ பேசவோ இல்லை. மாறாக, சட்டபூர்வமான மற்றும் ஜனநாயக ஆட்சி முறைகளுக்குப் பொருந்தாத நலன்களைக் கொண்ட பெருநிறுவன மற்றும் நிதி தன்னலக்குழுவின் பிரதிநிதியாகவே அவர் செயல்படுகிறார். ICE முகவர்களின் நடவடிக்கைகளின் இந்த பாரிய விரிவாக்கம் 2026 தேர்தல்களுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தல்கள் நடத்தப்பட்டால், துப்பாக்கி முனையில் அவற்றை நடத்தவே ட்ரம்ப் நிர்வாகம் உத்தேசித்துள்ளது.
சர்வாதிகாரத்தின் அடிப்படை இலக்கு தொழிலாள வர்க்கமே ஆகும். இந்த நடவடிக்கைகள் பேக்டரி ஜீரோ ஆலை மற்றும் ஹேசல் பார்க் அமேசான் வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், இவை நிறுத்தப்படாவிட்டால், விரைவில் இப்பகுதி முழுவதிலும் உள்ள தொழிற்சாலைகளிலும் பணியிடங்களிலும் முகவர்கள் தோன்றுவார்கள்.
மினியாபோலிஸைப் போலவே, இதற்குப் பதிலடியாக தொழிலாள வர்க்கம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். டெட்ராய்ட் வாகன ஆலைகளில் ட்ரம்ப் மீது ஆழ்ந்த பகைமை நிலவுகிறது. டியர்போர்னில் உள்ள போர்டு ரூஜ் வளாகத்திற்கு ட்ரம்ப் வருகை தந்தபோது, வாகனத் தொழிலாளி தோமஸ் “டிஜே” சபூலா என்பவர் ட்ரம்ப்பை ஆவேசமாகக் கண்டித்ததன் மூலம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். அந்த நிறுவனம் அவரை வேலைநீக்கம் செய்தபோது அவருக்கு பரந்த ஆதரவு கிடைத்தது, அதன் விளைவாக அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்.
அக்கம் பக்கத்திலுள்ள மக்கள் குழுக்கள் தன்னிச்சையாக ICE-ஐ கண்காணிக்கவும் எதிர்க்கவும் தொடங்கியுள்ளன. மிச்சிகனில் ICE-யின் நடவடிக்கைகளை விரிவாக்குவதற்கு எதிராக நகரசபை கூட்டங்களில் ஏற்கனவே கோபமான எதிர்ப்புகள் வெடித்துள்ளன. தென்கிழக்கு மிச்சிகன் முழுவதிலும் உள்ள நகரங்களில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கடந்த வாரங்களில் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) ICE-க்கு எதிரான போராட்டத்தின் அடிப்படையாகப் பின்வருவனவற்றை நகரசபைக் கூட்டங்கள் மற்றும் பிற மன்றங்களில் முன் வைக்கின்றன:
முதலாவதாக, போராட்டத்துக்கு அணிதிரட்டப்பட வேண்டிய சமூக சக்தி தொழிலாள வர்க்கமே ஆகும். இதில் வாகனத் தொழிலாளர்கள், கல்வியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அமேசான் தொழிலாளர்கள், தபால் பணியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவுகள் அடங்குவர். உற்பத்தியை நிறுத்தி, ICE மற்றும் ட்ரம்பின் கெஸ்டாப்போ முகவர்களின் நடவடிக்கைகளை முடக்கும் ஆற்றல் தொழிலாள வர்க்கத்திற்குத்தான் உள்ளது.
இரண்டாவதாக, ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கம் (UAW) மற்றும் பிற தொழிற்சங்கங்களில் உள்ள தொழிலாளர்கள், ஒவ்வொரு உள்ளூர் கிளையிலும் ICE முகவர்களுடன் எந்தவொரு ஒத்துழைப்பையும் நிராகரிக்கும் தீர்மானங்களை நிறைவேற்ற பாரிய கூட்டங்களைக் கோர வேண்டும். அமேசான் ஆலைக்குள் இரண்டு தொழிலாளர்கள் பிடிக்கப்படுவதற்குக் கதவுகளைத் திறந்துவிட்டதைப் போன்ற செயல்களைத் தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும். சக தொழிலாளர்களைப் பிடிக்க எடுக்கும் எந்தவொரு முயற்சிக்கும் பதிலடியாக வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தொழிலாளர்கள் தயாராக வேண்டும். மேலும், தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்க வேண்டும்.
இருப்பினும், இந்த முன்முயற்சியைத் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கைகளில் விட்டுவிட முடியாது. மினியாபோலிஸில், ஒப்பந்தத் தொழில்நுட்பக் காரணங்களைக் காட்டி தொழிலாளர்கள் பணியில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி, வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தடுக்க தொழிற்சங்க எந்திரம் நனவுபூர்வமாகச் செயல்பட்டது.
பேக்டரி ஜீரோ ஆலை மீதான திடீர் சோதனை அதன் தலைமையகத்திலிருந்து சில மைல் தொலைவில் நடந்திருந்தாலும், UAW தொழிற்சங்கம் இது குறித்து எதுவும் சொல்லவில்லை. இப்போது ஒரே ஒரு வேலைமுறை (shift) மட்டுமே இருக்கும் அளவுக்கு அந்த ஆலையில் நடந்து வருகின்ற பாரிய வேலைநீக்கங்கள் குறித்தும் அது எதுவும் கூறவில்லை. வேலைநிறுத்தம் செய்யும் உரிமை ஆபத்தில் இருப்பதாகவும், மறியல் போராட்டங்கள் தாக்கப்படும் என்றும் UAW தலைவர் ஷான் பெயின் எச்சரிக்கிறார். ஆனால், இதனை எதிர்த்துப் போராட அவர் எந்த நடவடிக்கையையும் முன்மொழியவில்லை. மேலும், தொழிற்சங்கத்தை எதற்கும் கட்டுப்படுத்தாத வெற்று அறிக்கைகளை மட்டுமே அவர் வெளியிட்டு வருகிறார்.
மூன்றாவதாக, எதிர்ப்பை ஒருங்கிணைக்கவும் ஒழுங்கமைக்கவும், தொழிற்சங்கம் உள்ள மற்றும் தொழிற்சங்கம் இல்லாத ஒவ்வொரு தொழிற்சாலையிலும், பணியிடங்களிலும், அக்கம் பக்கத்திலுள்ள பகுதிகளிலும் மற்றும் பள்ளிகளிலும் சாமானிய உறுப்பினர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இத்தகைய சாமானிய குழுக்களின் வலையமைப்பானது, சக தொழிலாளர்களையோ அல்லது குடும்ப உறுப்பினர்களையோ ICE முகவர்கள் கடத்த முயலும் போது, தொழிலாளர்கள் அதைக் கண்காணிக்கவும் விரைவாக பதிலடி கொடுக்கவும் ஒரு கட்டமைப்பை உருவாக்கும்.
இதற்கு முன்மாதிரிகள் உள்ளன. 2020-இல் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தொடக்கத்தில், டெட்ராய்டில் வெடித்த தன்னிச்சையான வேலைநிறுத்தங்கள், வட அமெரிக்கா முழுவதிலும் உள்ள வாகனத் தொழில்துறையைச் சில மணிநேரங்களிலேயே மூடக் கட்டாயப்படுத்தின. ICE க்கு எதிராக வாகனத் தொழிலாளர்கள் எடுக்கும் இத்தகைய நடவடிக்கை, அமெரிக்கா முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், நம்பிக்கையளிப்பதாகவும் அமையும்.
நான்காவதாக, எதிர்ப்பின் வளர்ச்சியானது தெளிவான கோரிக்கைகளுடன் இணைக்கப்பட வேண்டும். இதில் நகரத்திலிருந்தும் மாநிலத்திலிருந்தும் ICE முகவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பதும், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதும் அடங்கும்.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் இந்தப் போராட்டத்தின் தர்க்கமானது ஒரு பொது வேலைநிறுத்தத்தை நோக்கியே செல்கிறது. மினியாபோலிஸ் போராட்டத்தின் வளர்ச்சியில் இத்தகையதொரு போக்கு இயல்பாகவே உருவானது.
டெட்ராய்டில் வெடிக்கும் இத்தகைய போராட்டம், நாடு தழுவிய அளவில் தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த இயக்கத்திற்கு ஒரு தூண்டுதலாக அமையும். இது ICE -யைக் கலைக்க வேண்டும், புலம்பெயர்ந்தோர் மீதான துன்புறுத்தல்களை உடனடியாக நிறுத்த வேண்டும், சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து புலம்பெயர்ந்தவர்களையும் விடுவிக்க வேண்டும் மற்றும் அமெரிக்க அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளை மீறியதற்காக ட்ரம்ப் நிர்வாகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் பதவி விலக வைத்து, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைக்கும்.
இந்தப் போராட்டத்தில், வோல் ஸ்ட்ரீட்டின் கட்சியான ஜனநாயகக் கட்சி மீது எந்த விதமான நம்பிக்கையும் வைக்கக் கூடாது. அண்மையில் அது உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு (DHS) தற்காலிக நிதி வழங்குவதற்கு வாக்களித்தது, மேலும் அத்துறைக்கான நிதியை நிரந்தரமாகத் துண்டிக்கும் தனது பலமற்ற திட்டங்களையும் இப்போது கைவிட்டு வருகிறது. மினசோட்டாவில், உள்ளூர் ஜனநாயகக் கட்சியினர் இப்போது ICE முகவர்களுடனும் ட்ரம்ப் நிர்வாகத்துடனும் ஒத்துழைத்து வருகின்றனர்.
ஜனநாயகக் கட்சியினரின் முக்கிய கவலை பாசிசம் அல்ல. மாறாக, அடிமட்டத்திலிருந்து எழும் எதிர்ப்பின் வளர்ச்சியே ஆகும்.
ICE மற்றும் ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம், தொழிலாளர்களின் சுயாதீனமான நடவடிக்கை மற்றும் முன்முயற்சியையே சார்ந்துள்ளது. தொழிலாளர்களும் இளைஞர்களும் ICE நடத்தும் எந்தவொரு ஆத்திரமூட்டல்களுக்கும் எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும். கூட்டு நடவடிக்கை மற்றும் சமூகப் போராட்டத்தின் மூலமே எதிர்ப்பு போராட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.
இதைப் படிக்கும் தொழிலாளர்கள் இப்போதே அதற்கான அடித்தளத்தை அமைக்கத் தொடங்க வேண்டும். உங்கள் பணியிடங்களிலும் அக்கம் பக்கத்திலும் சாமானியர்களின் குழுக்களை ஒழுங்கமைக்க வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்பதை விவாதித்துத் தீர்மானிக்கக் கூட்டங்களை நடத்துங்கள். தொழிலாள வர்க்கம் தனது பலத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை உணர்ந்து கொண்டால், அதுவே பூமியின் மிகவும் பலம்வாய்ந்த சக்தி என்று உணர்ந்து கொள்ளும்.
இந்த இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உதவி செய்ய சோசலிச சமத்துவக் கட்சியும் (அமெரிக்கா) உலக சோசலிச வலைத் தளமும் தயாராக உள்ளன.
