ஈரானுக்கு எதிரான வாஷிங்டனின் குற்றவியல் போர் மத்திய கிழக்கு முழுவதும் வேகமாக விரிவடைந்து ஏகாதிபத்திய சக்திகளை உள்ளிழுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

2026 மார்ச் 2, திங்கட்கிழமை அன்று ஈரான், தெஹ்ரானில் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலுக்குப் பிறகு புகைக் கூட்டங்கள் எழுகின்றன. [AP Photo/Mohsen Ganji]

சர்வாதிகாரியாக துடிக்கும் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிரான அமெரிக்க/இஸ்ரேலிய சட்டவிரோதப் போரை சனிக்கிழமை அதிகாலை நள்ளிரவில் அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, உலக சோசலிச வலைத் தளம் (WSWS) தனது ஆரம்பகட்ட பதிலில், இது “ஒரு பாரிய அரசியல் குற்றம்” என்றும், “ இந்தப் போர் தவிர்க்க முடியாமல் தீவிரமடைந்து ஒட்டுமொத்த கிரகத்தையும் ஆட்கொள்ளும்” என்றும் குறிப்பிட்டது.

மோதல் தொடங்கி நான்கு நாட்களிலேயே, இந்த அவதானிப்புகள் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்திய மதிப்பீடுகளின்படி, வாஷிங்டனும் அதன் சியோனிச கூட்டாளியும் ஈரானில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களை படுகொலை செய்துள்ளனர், அந்நாட்டின் தலைவரையும் 50-க்கும் மேற்பட்ட பிற முன்னணி சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகளையும் படுகொலை செய்துள்ளனர், மேலும் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலாச்சார இடங்களை கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.

புதன்கிழமை அதிகாலை, இலங்கைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஈரானியக் கப்பல் மீது டார்பிடோ ஏவுகணையால் தாக்குதல் நடத்தியபோது, அமெரிக்கப் போர் இயந்திரத்தை இயக்குபவர்களின் காட்டுமிராண்டித்தனம் நிரூபிக்கப்பட்டது. இந்தியாவில் ஒரு பயிற்சிப் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த அந்தக் கப்பலில் சுமார் 180 மாலுமிகள் இருந்தனர், அவர்கள் யாருக்கும் உடனடி அச்சுறுத்தலாக இருக்கவில்லை. இதுவரை 32 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர், இதனால் பலி எண்ணிக்கை 150-ஐ நெருங்க வாய்ப்புள்ளது.

பாசிச போர்ச் செயலாளர் பீட் ஹெக்செத், இந்த இரத்தக் களரியில் திளைத்து, புதன்கிழமை பென்டகன் செய்தியாளர் கூட்டத்தில், இது ஒரு “நியாயமான போர்” என்று யாரும் ஒருபோதும் கூறவில்லை என்று பெருமையடித்துக் கொண்டார். காஸாவில் 75,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைப் படுகொலை செய்த இனப்படுகொலை சியோனிச ஆட்சியைப் பற்றிக் குறிப்பிட்ட ஹெக்செத், இஸ்ரேல் இந்தப் போரை “ஈடு இணையற்ற திறமையுடன்” நடத்துவதாகவும், இஸ்ரேலுடன் இணைந்து போரிடுவது அமெரிக்காவிற்கு “ஒரு புத்துணர்ச்சி அளிப்பதாகவும்” உற்சாகத்துடன் கூறினார்.

அன்றைய தினம் முன்னதாகப் பேசிய இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் காட்ஸ், ஈரானியத் தலைவர்களைப் படுகொலை செய்யும் வாஷிங்டன் மற்றும் ஜெருசலேமின் திட்டம் தொடரும் என்பதைத் தெளிவுபடுத்தினார். “இஸ்ரேலை அழிக்கும் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கவும், அமெரிக்காவிற்கும் சுதந்திர உலகிற்கும் மற்றும் பிராந்திய நாடுகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கவும், ஈரானிய மக்களை ஒடுக்கவும் ஈரானிய பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் எந்தவொரு தலைவரும் சந்தேகத்திற்கு இடமின்றி ஒழிக்கப்பட வேண்டிய இலக்காக இருப்பார்” என்று காட்ஸ் அறிவித்தார்.

ஈரான் மீதான அமெரிக்கத் தலைமையிலான பாரிய தாக்குதலுக்கு அப்பால், இந்தப் போர் ஏற்கனவே ஒரு பிராந்திய அளவிலான பேரழிவுப் போரின் தொடக்கமாக மேன்மேலும் தோற்றமளிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளது. தெஹ்ரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ஒருசில ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து, இஸ்ரேலின் இனப்படுகொலை ஆட்சி, தலைநகர் பெய்ரூட் உட்பட லெபனான் முழுவதும் பரவலான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. லிட்டானி ஆற்றின் தெற்கே வசிக்கும் குடியிருப்பாளர்களை அந்தப் பகுதியை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டுள்ளது. புதன்கிழமை பிற்பகுதியில், இஸ்ரேலிய துருப்புக்கள் நீலக் கோட்டைத் தாண்டிச் சென்று பல லெபனான் கிராமங்களைக் கைப்பற்றியுள்ளதாக லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தூண்டப்படாத தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானின் புரட்சிகர காவல் படை வளைகுடா பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் வசதிகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளது. பஹ்ரைன் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அல்லது தூதரகக் கட்டிடங்கள் தாக்கப்பட்டுள்ளன. டஜன் கணக்கான ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை (ஆளில்லா விமானங்களை) இடைமறித்துள்ள அந்த ஏதேச்சதிகார வளைகுடா நாடுகள் முறையாகப் போரில் ஈடுபடக்கூடும் என்ற ஊகம் அதிகரித்துள்ளது.

ஈரானின் எல்லையிலுள்ள நேட்டோ உறுப்பு நாடான துருக்கிக்கும் போர் விரிவடைவதற்கான சாத்தியம் புதன்கிழமை ஒரு படி நெருங்கியது. ஈரானிய-துருக்கிய எல்லையை நெருங்கிய ஒரு ஏவுகணை நேட்டோ வான் பாதுகாப்புப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளும் போருக்குள் நெருக்கமாக இழுக்கப்படுகின்றன. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் செவ்வாய்க்கிழமை மாலை அந்நாட்டின் ஒரே விமானம் தாங்கிக் கப்பலான ஷார்ல் டு கோல் (Charles de Gaulle) கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு அனுப்பப்படுவதாக அறிவித்தார். ரஃபேல் போர் விமானங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் வான்வழி ரேடார் பிரிவுகளும் பெயரிடப்படாத மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. போரின் ஆரம்பக் கட்டங்களில் ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்துவதில் பிரெஞ்சுப் படைகள் ஈடுபட்டிருந்ததை வெளிப்படுத்திய மக்ரோன், மேலதிக நடவடிக்கைகள் குறித்து எச்சரித்தார். குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடன் பிரான்ஸ் பாதுகாப்பு ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது என்பதையும், இந்த வார தொடக்கத்தில் பிரிட்டிஷ் விமானத் தளம் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான சைப்ரஸுடன் மூலோபாயக் கூட்டாண்மை கொண்டுள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்க ஏகாதிபத்தியமும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கும் இந்த அழித்தொழிப்புப் போரின் ஆக்ரோஷம், இந்த மோதல் ஒரு பிராந்திய இரத்தக் களரியாக விரிவடைவதை அதிக சாத்தியமாக்குகிறது. காட்டுமிராண்டித்தனமான மற்றும் கண்மூடித்தனமான வன்முறையைப் பயன்படுத்துவதன் மூலம், பல தசாப்தங்களாக பிராந்தியம் முழுவதும் அவர்கள் தூண்டிவிட்ட தொடர்ச்சியான போர்கள் மற்றும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளால் உருவான சமூக மற்றும் அரசியல் பேரழிவுகளைத் தங்களால் சமாளிக்க முடியும் என்று இவ்விரு நாடுகளும் நம்புகின்றன. ட்ரம்ப்பின் போர் அறிவிப்பு தொடங்கி, 9 கோடி (90 மில்லியன்) மக்கள் வாழும் ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் கொடூரமான குண்டுவீச்சுகளை நியாயப்படுத்த, 1979 ஈரானியப் புரட்சி முதற்கொண்டு ஈரானின் கூறப்படும் பாவங்களை அமெரிக்க அதிகாரிகள் மீண்டும் மீண்டும் பட்டியலிட்டு வருகின்றனர். ஈரானிய சமூகத்தை அழிப்பதில் அமெரிக்காவிற்கு உதவுவதுடன், லெபனானில் ஹிஸ்புல்லாவை முற்றிலுமாக ஒழிக்க இஸ்ரேல் விரும்புகிறது. அமெரிக்கத் தலையீட்டாலும், நாட்டின் தெற்குப் பகுதியை இஸ்ரேல் கொடூரமாக ஆக்கிரமித்ததாலும் தூண்டப்பட்ட அந்த நாட்டு உள்நாட்டுப் போரின் இரத்தக்களரியான கொந்தளிப்புகளைத் தொடர்ந்து, 1980-களில் ஏழ்மையுற்ற ஷியா முஸ்லிம்களின் ஒரு வெகுஜன இயக்கமாக இந்த இஸ்லாமிய அமைப்பு உருவானது

ஈரானின் அரசு நிறுவனங்கள், நகரங்கள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகளைச் சீரழிப்பதுடன், ஈராக் மற்றும் சிரியாவில் பேரழிவை ஏற்படுத்தப் பயன்படுத்திய பழைய திட்டங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் இப்போது மீண்டும் கையில் எடுத்துள்ளன. ஈரானுக்குள் இன ரீதியாகவும் மத ரீதியாகவும் பிளவுகளைத் தூண்டிவிடுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். புதன்கிழமை வெளியான சி.என்.என் (CNN) செய்தியின்படி, மேற்கு ஈரானில் குர்திஷ் இன மக்களின் கிளர்ச்சியைத் தூண்டிவிடுவதற்காக, வடக்கு ஈராக்கிலுள்ள குர்திஷ் குழுக்களுக்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ (CIA) பல மாதங்களாக ஆயுதங்களை வழங்கி வருகிறது. அந்த கட்டுரை குறிப்பிட்டதாவது:

இந்த விவாதங்களை அறிந்த ஒருவர் கூறுகையில்: குர்திஷ் ஆயுதப் படைகள் ஈரானியப் பாதுகாப்புப் படைகளை நேரடியாக எதிர்த்துப் போரிட்டு, அவர்களை ஓரிடத்தில் முடக்கி வைக்க வேண்டும் என்பதே அந்தத் திட்டமாகும். இதன் மூலம், கடந்த ஜனவரி மாதக் கலவரத்தில் நடந்தது போன்ற படுகொலைகள் மீண்டும் நிகழாமல், பெரிய நகரங்களில் உள்ள ஆயுதமேந்தாத ஈரானியர்கள் எளிதாக வீதிக்கு வந்து திரள்வதற்கு வழிவகை ஏற்படும்.

மற்றொரு அமெரிக்க அதிகாரி கூறுகையில், குர்துகள் இப்பகுதியில் குழப்பத்தை விதைக்கவும், ஈரானிய ஆட்சியின் இராணுவ வளங்களை சிதறடிக்கவும் உதவ முடியும் என்றார்.

இந்த நடவடிக்கைக்கு ட்ரம்ப் நேரடி ஆதரவு அளிக்கிறார். ஈரானுக்குள் ஆயுதங்கள் கொண்டு செல்வதை எளிதாக்குமாறு கோருவதற்காக, ஈராக் குர்திஷ் பிராந்திய அரசாங்கத்தை அவர் ஞாயிற்றுக்கிழமை அழைத்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை, ஈரானின் குர்திஷ் ஜனநாயகக் கட்சியின் தலைவருடன் ட்ரம்ப் தொலைபேசியில் உரையாடினார். அண்மையில் நான்கு ஈரானிய குர்திஷ் கட்சிகளுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமைப்புகளில் இதுவும் ஒன்றாகும்; ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் ஒரு தனி குர்திஷ் தேசத்தை உருவாக்குவதே இந்த அமைப்புகளின் இலக்காகும்.

ஏராளமான சிறுபான்மையினரைக் கொண்ட, 9 கோடி மக்கள் வாழும் ஈரானை இன ரீதியாகத் துண்டாடுவது என்பது, சிரியாவின் பேரழிவையே ஒரு குழந்தை விளையாட்டு போலச் சாதாரணமானதாகத் தோற்றமளிக்கச் செய்யும். ஈரானின் ஆதரவு பெற்ற அசாத் ஆட்சியை வீழ்த்த, சி.ஐ.ஏ உதவியுடன் 14 ஆண்டுகள் அங்கு நடந்த உள்நாட்டுப் போர், லட்சக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கியதுடன் கோடிக்கணக்கான மக்களை அகதிகளாக மாற்றியது. அமெரிக்கா முதலில் குர்திஷ் சிரிய ஜனநாயகப் படைகளை ஆதரித்தது; பின்னர் தனது ஆதரவை முன்னாள் அல்-கொய்தா தலைவர் அகமது அல்-ஷாரர் தலைமையிலான சுன்னி குழுக்களுக்கு மாற்றிக்கொண்டது. டமாஸ்கஸில் உள்ள அவரது மதவாத சர்வாதிகார ஆட்சி, ஷியா சிறுபான்மையினரின் படுகொலைகளைத் தனது மேற்பார்வையில் நடத்தியதுடன், குர்திஷ் இன மக்களை அவர்களின் வலுவான இடங்களிலிருந்து விரட்டியடித்தும் உள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் துருக்கியப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Sosyalist Işitlik Partisi), குர்திஷ் தேசியவாதிகளின் ஏகாதிபத்திய சார்பு போக்கின் திவால்நிலையை விளக்கும் அறிக்கையில், ஈரான் துண்டாடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இவ்வாறு எழுதியுள்ளது:

நிலப்பரப்பால் சூழப்பட்ட மற்றும் விரோதமான அண்டை நாடுகளால் (துருக்கி, சிதைந்த ஈரான் மற்றும் அரபு ஆதிக்கம் செலுத்தும் பிரதேசங்கள்) சூழப்பட்ட ஒரு குர்திஷ் சிற்றரசு, அதன் உயிர்வாழ்விற்காக முற்றிலும் அமெரிக்கா அல்லது இஸ்ரேலின் ஆதரவையே சார்ந்திருக்கும் — இது ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கத்தைப் போலவே இருக்கும். அங்கு மக்கள் வறுமையில் வாடும் நிலையில், அதன் அரசியல் ஊழல் நிறைந்த முதலாளித்துவ-பழங்குடி குழுக்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு அமெரிக்கக் கொள்கையின் ஒரு கருவியாகச் செயல்படுகிறது.

ஈரானிலிருந்து பிரியும் ஒரு அஜர்பைஜான் அமைப்பு, துருக்கியின் ஒரு துணை நாடாக மாறும் அல்லது துருக்கி, ரஷ்யா மற்றும் மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியில் ஒரு வேட்டைப் பொருளாக மாறும். உலகின் பெரும் எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ள குஜிஸ்தான் பகுதியிலுள்ள அரபு அமைப்பு, வளைகுடா நாடுகள், அமெரிக்கா மற்றும் உலகளாவிய எரிசக்தி நிறுவனங்கள் போட்டியிட்டுச் சுரண்டும் ஒரு ஏகாதிபத்தியச் சுரண்டல் மண்டலமாக உடனடியாக மாறும். ஒரு பலூச் அமைப்பு உருவானால், அது இந்தியப் பெருங்கடல், ஹார்முஸ் நீரிணை  மற்றும் மத்திய ஆசியாவை கடலோடு இணைக்கும் நிலப்பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான வல்லரசுகளின் அதிகாரப் போட்டியில் ஒரு புதிய போர்க்களமாக மாறும்.

இதன் விளைவாக ஏற்படும் மனிதப் பேரழிவுகள் மிகக் கொடூரமானதாக இருக்கும். ஈரானின் இனக்குழுக்கள் தனித்தனி நிலப்பரப்பு மண்டலங்களாகப் பிரிக்கப்படவில்லை. லட்சக்கணக்கான அஜர்பைஜானியர்கள் தெஹ்ரானில் வாழ்கின்றனர்; குர்துகள், லூர்கள் மற்றும் பாரசீகர்கள் மேற்கு ஈரான் முழுவதும் ஒன்றுடன் ஒன்று கலந்து வாழ்கின்றனர்; குஜிஸ்தானில் அரேபியர்களும் பாரசீகர்களும் இணைந்து வாழ்கின்றனர். இன ரீதியான எல்லைகளை வரைய முற்படும் எந்தவொரு முயற்சியும், மக்கள் பெருமளவில் இடம்பெயர்தல், இனச் சுத்திகரிப்பு மற்றும் உள்நாட்டுப் போருக்கே வழிவகுக்கும். அந்தப் போர், யுகோஸ்லாவியப் பேரழிவையே மிகச் சிறியதாகத் தோற்றமளிக்கச் செய்யும் அளவுக்குப் பிரம்மாண்டமான அழிவை ஏற்படுத்தும்.

ட்ரம்ப் மற்றும் அவரது பாசிசக் கும்பல் பிரதிநிதித்துவப்படுத்தும் நிதி அதிகார வர்க்கத்தைப் பொறுத்தவரை, மத்திய கிழக்கு பிராந்தியத்தை மீண்டும் ஒரு காலனித்துவ நிலைக்குக் கொண்டுவர முடியுமென்றால், அதற்கு ஈடாக இந்த இரத்தக் களரியைத் தாராளமாகச் செலுத்த வேண்டிய ஒரு விலையாகவே அவர்கள் கருதுகிறார்கள். மனித உயிர்களின் இழப்பைப் பொருட்படுத்தாமல், எண்ணெய் மற்றும் எரிவாயுவைச் சுரண்டுவது, வர்த்தகப் பாதைகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் ரஷ்யா, சீனா போன்ற எதிரி நாடுகளை ஓரங்கட்டுவதுமே அவர்களின் முக்கிய இலக்குகளாகும். இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், அவர்கள் காஸா இனப்படுகொலையை நினைவுகூர்ந்து பார்க்க வேண்டும்.

இந்த 21-ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே. ஏகாதிபத்தியப் போர் மற்றும் சூறையாடலுக்கு மூலக் காரணமான முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வர, மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய மையங்களில் உள்ள தொழிலாளர்களுடன் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும்.

Loading