ஈரான் மீதான அமெரிக்க/இஸ்ரேலிய தாக்குதலை ஸ்டார்மர் அரசாங்கம் அங்கீகரிப்பதோடு அதில் பங்கேற்கவும் செய்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஞாயிற்றுக்கிழமை மாலை, பிரிட்டனின் தொழிற்கட்சி பிரதமர் கீர் ஸ்டார்மர், டியாகோ கார்சியா —இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு கூட்டு இராணுவத் தளம்— மற்றும் இங்கிலாந்தில் உள்ள ரோயல் விமானப் படையின் (RAF) பேர்போர்ட் தளம் உள்ளிட்ட ஐக்கிய இராச்சியத்தின் அனைத்து இராணுவத் தளங்களிலிருந்தும் ஈரானைத் தாக்குவதற்கு அமெரிக்காவிற்கு அனுமதி அளித்தார்.

சனிக்கிழமையன்று ஈரான் மீது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ஆரம்ப குண்டுவீச்சில் டியேகோ கார்சியா மற்றும் பேர்போர்ட் தளங்களை பயன்படுத்த அனுமதிக்காத அரசாங்கத்தின் முடிவை ஸ்டார்மர் மாற்றியமைக்க வேண்டும் என்று டெய்லி மெயில் பத்திரிகையில் வெளியான கடுமையான விமர்சனத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அமெரிக்கா நடத்திய முதல் கட்டத் தாக்குதல்களில் டியேகோ கார்சியாவைப் பயன்படுத்த ஐக்கிய இராச்சியம் உண்மையில் அனுமதி அளித்ததா என்று அந்தப் பத்திரிகை நேரடியாகக் கேள்வி எழுப்பியது.

ஈரான் மீதான அமெரிக்க குண்டுவீச்சு குறித்து கீர் ஸ்டார்மர் அறிக்கை வெளியிடுகிறார், லண்டன் 10 டவுனிங் வீதி, பிப்ரவரி 28, 2026 [Photo by Simon Dawson/No 10 Downing Street / CC BY 4.0]

லண்டனிலுள்ள டவுனிங் வீதியிலிருந்து உரையாற்றிய ஸ்டார்மர், “நேற்று, பஹ்ரைனில் உள்ள ஒரு இராணுவத் தளத்தைத் ஈரான் தாக்கியது, அதில் பிரிட்டிஷ் படையினர்கள் நூலிழையில் உயிர் தப்பினர்” என்று கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்டார்மர் மீண்டும் வலியுறுத்திக் கூறுகையில், “ஈரானியத் தாக்குதல்களை ஏற்கனவே வெற்றிகரமாக தடுத்து நிறுத்திய ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக எங்களது பிரிட்டிஷ் போர் விமானங்கள் வானில் தயார் நிலையில் உள்ளன,” என்று கூறியவர், “ஆனால் இந்த அச்சுறுத்தலை நிறுத்துவதற்கான ஒரே வழி, ஏவுகணைகளை அவற்றின் பிறப்பிடத்திலேயே—அதாவது அவற்றின் சேமிப்புக் கிடங்குகள் அல்லது ஏவுகணைகளை ஏவப் பயன்படும் ஏவுதளங்களிலேயே—அழிப்பதுதான்” என்று கூறினார். “அமெரிக்கா அந்த குறிப்பிட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு நோக்கத்திற்காக பிரிட்டிஷ் தளங்களைப் பயன்படுத்த அனுமதி கோரியுள்ளதால்,” அதற்கு இப்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஸ்டார்மர் உரையாற்றி சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மத்திய தரைக்கடல் தீவான சைப்ரஸில் உள்ள அதன் தளமான RAF அக்ரோட்டிரி, ஒரு “சந்தேகத்திற்குரிய ட்ரோன் தாக்குதலால்” தாக்கப்பட்டதை பாதுகாப்பு அமைச்சகம் (MoD) உறுதிப்படுத்தியது. இந்தச் சம்பவத்தினால் சிறிய அளவிலான சேதங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும், உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அப்பட்டமான சட்டவிரோத ஆக்கிரமிப்பு நடவடிக்கை மற்றும் ஆட்சி மாற்றச் சதிக்கு ஸ்டார்மர் ஆரம்பத்திலிருந்தே அரசியல் பாதுகாப்பை வழங்கியதுடன், அதில் ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பையும் உறுதிப்படுத்தியுள்ளார். ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களின் முதல் அலைகளைத் தொடர்ந்து, “இந்தத் தாக்குதல்களில் ஐக்கிய இராச்சியம் எந்தப் பங்கும் வகிக்கவில்லை” என்று அவர் கூறினார். ஆனால் அவர் மேலும் கூறுகையில், “எங்கள் படைகள் சுறுசுறுப்பாக உள்ளன, மேலும் எங்கள் மக்களையும், எங்கள் நலன்களையும், எங்கள் கூட்டாளிகளையும் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த பிராந்திய பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் விமானங்கள் வானில் பறக்கின்றன” என்றார்.

“ட்ரம்ப் மற்றும் நெதன்யாகுவால் தொடங்கப்பட்ட இந்தச் சட்டவிரோதப் போரில் நேரடியாகப் பங்கேற்கும் ஐக்கிய இராச்சியத்தின் போர் விமானங்களில், கத்தார் மற்றும் சைப்ரஸிலிருந்து இயக்கப்படும் RAF டைபூன் ரக விமானங்களும் அடங்கும். F-35 போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏற்கனவே சைப்ரஸில் உள்ள RAF அக்ரோட்டிரி தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சர் ஜோன் ஹீலி ஞாயிற்றுக்கிழமை ஸ்கை நியூஸில் உறுதிப்படுத்துகையில், பிரித்தானியப் படைகள் “எமது தளங்கள், எமது மக்கள் அல்லது எமது கூட்டாளிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் [பதிலடித் தாக்குதலாக ஈரானால் ஏவப்பட்டது] ட்ரோன்களை வீழ்த்தி வருகின்றன. நாங்கள் அமெரிக்கர்களுடன் இணைந்து களம் இறங்கியுள்ளோம். மத்திய கிழக்கில் எமது தற்காப்புப் படைகளை அதிகரித்துள்ளோம். நாங்கள் அந்த வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.

ஸ்டார்மரின் உரை, ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளைக் கையாள்வதற்காக 2003-இல் உருவாக்கப்பட்ட E3 நாடுகள் (பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி) வெளியிட்ட கூட்டறிக்கையுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இந்த மூன்று ஐரோப்பிய நாடுகளும் இந்த குண்டுவீச்சுத் தாக்குதலுடன் தங்களை இணைத்துக் கொண்டன. இந்த நாடுகள் “தாங்கள் இந்தத் தாக்குதல்களில் நேரடியாகப் பங்கேற்கவில்லை” என்று கூறினாலும், “அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தில் உள்ள கூட்டாளிகள் உட்பட எங்களது சர்வதேசப் பங்காளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டன.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை. மாறாக, E3 நாடுகள் தெஹ்ரானை ஒரு ஆக்கிரமிப்பாளராகச் சித்தரித்தன: “பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஈரான் கண்மூடித்தனமான இராணுவத் தாக்குதல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்” என்று அவை குறிப்பிட்டன.

ஆரம்பகட்ட குண்டுவீச்சுகளில் தாங்கள் பங்கேற்கவில்லை என்று அதிகாரப்பூர்வமாக மறுத்தாலும், அந்தத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் பிரச்சாரங்களுக்கு ஸ்டார்மர் முழுமையான ஆதரவை வழங்கினார். “ஈரானிய ஆட்சி முற்றிலும் வெறுக்கத்தக்கது,” என்று அறிவித்த அவர், பிராந்தியத்தை சீர்குலைப்பதாக டெஹ்ரான் மீது குற்றம் சாட்டினார். “ஐக்கிய இராச்சியத்திலும் கூட, ஈரானிய ஆட்சியானது, அதிருப்தியாளர்களுக்கும் யூத சமூகத்திற்கும் நேரடி அச்சுறுத்தலாக உள்ளது,” என்று கூறிய அவர், கடந்த ஆண்டில் மட்டும் ஐக்கிய இராச்சியத்தின் மண்ணில் ஈரான் “20-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய தாக்குதல்களுக்கு ஆதரவளித்துள்ளது” என்றும் உரிமை கோரினார்.

இந்தக் கூற்றுகளுக்கு ஒரு சிறு ஆதாரம் கூட முன்வைக்கப்படவில்லை. இந்தக் கூற்றுகள் அனைத்தும், அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலை பிரித்தானியாவையே அச்சுறுத்தும் ஒரு அமைப்புக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கையாகச் சித்தரிக்கப் பயன்படுகின்றன. ஈராக்கின் இல்லாத “பேரழிவு ஆயுதங்கள்” முதல் லிபியா மற்றும் சிரியாவில் அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட “மனிதாபிமானம்” என்ற போலி வார்த்தைகள் வரை, மத்திய கிழக்கில் முந்தைய ஏகாதிபத்தியப் போர்களை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட அதே பிரச்சாரத்தையே இந்த கதையாடலும் எதிரொலிக்கிறது.

வாஷிங்டன் போருக்காக முன்வைக்கும் முக்கிய சாக்குப்போக்கையே ஸ்டார்மரும் கிளிப்பிள்ளை போலத் திரும்பக் கூறினார்: “ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை உருவாக்க அனுமதிக்கப்படக் கூடாது. அதுவே ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட எங்களது கூட்டாளிகளின் முதன்மையான இலக்காக உள்ளது” என்றார்.

தெஹ்ரான் “மேலும் தாக்குதல்களை நடத்தக் கூடாது, அதன் ஆயுதத் திட்டங்களைக் கைவிட வேண்டும், மேலும் தங்களது சொந்த எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமையைக் கொண்ட ஈரானிய மக்களுக்கு எதிரான பயங்கரமான வன்முறை மற்றும் ஒடுக்குமுறையை நிறுத்த வேண்டும்” என்று அவர் கோரினார்.

வாஷிங்டன் மற்றும் டவுனிங் ஸ்ட்ரீட்டில் இருந்து எப்போதும் ஒலிக்கப்படுவது போல, “தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானித்தல்” என்ற சொற்றொடர் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான திட்டங்களையே குறிக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர்களின் முதன்மையான கோரிக்கை என்னவென்றால், ஸ்டார்மர், தான் கடைபிடித்து வந்த பெயரளவு நிதானத்தைக் கூட கைவிட வேண்டும் என்பதாகும். பழமைவாதக் கட்சித் தலைவர் கெமி பேடனோக், “ஈரான் இஸ்லாமியக் குடியரசு மற்றும் அதன் கொடூரமான ஆட்சி ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய எமது கூட்டாளிகளுடன் நான் நிற்கிறேன்” என்று X தளத்தில் பதிவிட்டதுடன், இந்தத் குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு அரசாங்கம் வெளிப்படையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சீர்திருத்த ஐக்கிய இராச்சிய (Reform UK) கட்சியின் தலைவர் நைஜல் பரேஜ், “எமது இராணுவத் தளங்களைப் பயன்படுத்துவது குறித்த தனது முடிவை பிரதமர் மாற்றிக்கொள்ள வேண்டும், மேலும் ஈரானுக்கு எதிரான இந்த முக்கியமான போரில் அமெரிக்கர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

நைஜல் பரேஜின் கருத்துக்கள், டியாகோ கார்சியா மற்றும் பேர்போர்ட் தளங்களின் விவகாரத்தில் வாஷிங்டன் மற்றும் லண்டன் இடையே ஏற்கனவே நிலவிய பதற்றங்களைக் குறிப்பிட்டன. கடந்த ஆண்டு, தொழிற்கட்சி அரசாங்கம் சாகோஸ் தீவுக்கூட்டத்தின் இறையாண்மையை மொரிஷியஸிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதே வேளையில் டியாகோ கார்சியாவின் முழு செயல்பாட்டுக் கட்டுப்பாட்டை 99 ஆண்டு கால குத்தகைக்கு கீழ் அது தக்கவைத்துக்கொண்டது. இருந்தபோதிலும், ஈரானுக்கு எதிரான தனது தாக்குதலை அமெரிக்கா இறுதி செய்த நிலையில், சமீப நாட்களில் ட்ரம்பால் இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அதே நேரம், பிரிட்டன் அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தளங்களிலும் அமெரிக்கா பெருமளவிலான விமானங்கள் மற்றும் தளவாடங்களை நிலைநிறுத்துவதற்குத் தொடர்ந்து அனுமதி அளித்து வந்தது.

இந்த யுத்தத்தில் எந்தவித நிபந்தனையுமின்றி பிரிட்டன் நேரடியாகப் பங்கேற்க வேண்டும் என்று இராணுவப் பிரமுகர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். டெய்லி மெயில் இதழில் மேற்கோள் காட்டப்பட்ட முன்னாள் ரோயல் கடற்படைத் தளபதி டாம் ஷார்ப் கூறுகையில்: “ஈரானுக்கு எதிரான இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களைத் தொடுக்க, பிரிட்டன் தனது தளங்களை அமெரிக்கா பயன்படுத்த நாம் நிச்சயமாக அனுமதிக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் இருப்பது முட்டாள்தனம். டியாகோ கார்சியா ஒரு கூட்டுத் தளம் என்பதால் அமெரிக்கர்கள் எப்படியும் அதைப் பயன்படுத்தலாம், ஆனால் நாம் அவர்களுக்கு தீவிரமாக ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

உண்மையில், வாஷிங்டனின் இளைய பங்காளியாக, ஈரானுக்கு எதிரான இந்த இரத்தவெறி பிடித்த தாக்குதலில் முழுமையாகப் பங்கேற்க ஸ்டார்மர் அரசாங்கம் ஏற்கனவே தயாராகவே இருந்தது.

பிரிட்டன் இந்தத் தாக்குதல்களை ஆதரிக்கிறதா அல்லது அவை சட்டப்பூர்வமானவை என்று கருதுகிறதா என்று பிபிசி-யின் லாரா குவென்ஸ்பெர்க் ஆறு முறை கேட்டபோது, பாதுகாப்பு அமைச்சர் ஹீலி பதிலளிக்கையில், “அமெரிக்கா தான் எடுத்த நடவடிக்கையின் சட்டப்பூர்வ அடிப்படையை விளக்குவது அந்த நாட்டின் பொறுப்பு” என்றார். இது ஜாக் தி ரிப்பர் (19-ஆம் நூற்றாண்டில் லண்டனில் தொடர் கொலைகளைச் செய்த ஒரு மர்ம கொலைகாரன்) போன்ற ஒரு கொலைகாரனிடமே, பெண்களைக் குத்திக் கொல்வதன் சட்டப்பூர்வத் தன்மையை தீர்மானிக்கச் சொல்வதற்கு சமமானதாகும்.

பல ஆண்டுகளாக இராணுவச் செலவினங்கள் குறைக்கப்பட்ட போதிலும், பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றில் நிரந்தர அல்லது அரை-நிரந்தர இராணுவ இருப்பு உட்பட, மத்திய கிழக்கில் பிரிட்டன் கணிசமான இராணுவச் சொத்துக்களைக் கொண்டுள்ளது. பிரிட்டனின் தரப்பில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் எந்தவொரு ஈரானியத் தாக்குதலும், பிரிட்டன் நேரடியாக குண்டுவீச்சு நடவடிக்கைகளில் இறங்குவதற்கான ஒரு சாக்கு போக்காகப் பயன்படுத்தப்படலாம். மூன்று அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் எண்ணெய்க் கப்பல்கள் ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளானதாக ஞாயிற்றுக்கிழமை ஏற்கனவே ஈரானிய ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.

தொழிற் கட்சியின் இந்தப் பாதை முற்றிலும் கணிக்கக்கூடிய ஒன்றாகவே இருந்தது. போர் மற்றும் இராணுவவாதத்தின் மீதான அதன் வெளிப்படையான உறுதிப்பாட்டின் காரணமாகவே ஆளும் வர்க்கத்தால் அது அதிகாரத்திற்குக் கொண்டு வரப்பட்டது; மேலும் அதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்கு சிக்கன நடவடிக்கைகளை மக்கள் மீது திணிக்கும் பணியும் அதனிடம் ஒப்படைக்கப்பட்டது.

அக்டோபர் 2, 2024 அன்றே, உலக சோசலிச வலைத்தளம் (WSWS) ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தது. பதவிக்கு வந்த மூன்றே மாதங்களில், தொழிற் கட்சி அரசாங்கம் பிரிட்டனை அமெரிக்காவின் போர்த் திட்டங்களுடன் முன்னெப்போதையும் விட நெருக்கமாக இணைத்து வருவதாக அது குறிப்பிட்டது. அந்த நேரத்தில், ஈரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவதற்கு அமெரிக்கப் படைகளுடன் இணைந்து ரோயல் விமானப்படை ஏற்கனவே செயல்பட்டு வந்தது. “பிரிட்டன் இஸ்ரேலுடன் நிற்கிறது, அதன் தற்காப்பு உரிமையை நாங்கள் அங்கீகரிக்கிறோம்” என்று ஸ்டார்மர் அப்போது பிரகடனம் செய்தார்.

வாஷிங்டனின் முதன்மையான இராணுவ மற்றும் பாதுகாப்புப் பங்காளியாக பிரிட்டன் வகிக்கும் பாத்திரத்தை மூடிமறைக்கவே, “‘ஈரான் இப்பிராந்தியத்தை அச்சுறுத்துகிறது” என்ற ஸ்டார்மரின் கற்பனைக் கதையை WSWS விவரித்தது.

ஜூன் 17, 2025 அன்று, சோசலிச சமத்துவக் கட்சி (ஐக்கிய இராச்சியம்) “ஈரானுக்கு எதிரான ஸ்டார்மரின் போர்த் திட்டங்களை எதிர்ப்போம்!” என்ற தனது அறிக்கையில், “தூண்டப்படாத, சட்டவிரோதமான ஒரு ஏகாதிபத்திய போரில்” பிரிட்டன் தலையிடுவதற்கான “தீவிர ஏற்பாடுகள்” நடைபெற்று வருவதாக எச்சரித்தது. மேலும், “நிதானம், அமைதி மற்றும் இராஜதந்திரத்திற்கு திரும்புவதை” ஸ்டார்மர் விரும்புவதாகக் கூறப்படுவதை, ஒரு “வெறுக்கத்தக்க இழிவான மோசடி” என WSWS நிராகரித்தது.

இஸ்ரேல், காஸாவில் நடத்தும் இனப்படுகொலையில் ஸ்டார்மர் அரசாங்கம் 18 மாதங்களுக்கும் மேலாகப் பங்கேற்று வருகிறது. இது, ஆயுதங்களை வழங்குவது மற்றும் உளவுத்துறை ஆதரவை அளிப்பதோடு டெல் அவிவ் நிர்வாகத்தைப் பாதுகாத்தும் வருகிறது. இந்த மோதல் விரிவடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கை மீண்டும் காலனித்துவப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்கா தலைமையிலான தாக்குதலில் பிரிட்டன் மீண்டும் இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் இணைந்துள்ளது. இது ஒரு பெரிய உலகளாவிய போராக வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

Loading