இலங்கை அரசாங்கமானது அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேலுடன் இணைந்து ஈரானுக்கு எதிராகத் தொடங்கி, விரிவுபடுத்தியுள்ள அழிவுகரமான போரை மறைமுகமாக ஆதரித்து, பெப்ரவரி 28 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அமெரிக்க பாசிச ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசாவின் போர்க் குற்றவாளியான இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்தப் போர், ஏற்கனவே பெரும் உயிர் மற்றும் சொத்து இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், முழு மத்திய கிழக்கையும் ஒரு போர்க்களமாக மாற்றி வருகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட ஆத்திரமூட்டல்கள் மற்றும் போர்களுக்குப் பிறகு, இந்தப் போர் இப்போது ஈரானை முழுமையாக அடிபணியச் செய்வது அல்லது அதற்கு விசுவாசமான ஒரு கைப்பாவை அரசாங்கத்தை நிறுவி அதன் எண்ணெய் மற்றும் பிற கனிம வளங்களைக் கைப்பற்றுவது ஆகிய இறுதி இலக்குடன் நடத்தப்படுகிறது. அமெரிக்க தன்னலக்குழுவின் இறுதி இலக்கு சீனாவையும் ரஷ்யாவையும் அடிபணியச் செய்வதாகும். அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய சக்திகள், உலகை ஒரு மூன்றாம் உலகப் போருக்குள் தள்ளுகின்றன.
இலங்கையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சு, வெறும் 78 வார்த்தைகளே கொண்ட இரண்டு பத்திகளில் ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டது. அதில், 'மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல்களைத் தணித்து, கூடிய விரைவில் ஒரு அமைதியான சூழலை உருவாக்குமாறு அனைத்து தரப்பினரையும் இலங்கை வலியுறுத்துகிறது' என்று கூறப்பட்டுள்ளது.
மோதல்! அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கொலைகார நெதன்யாகு ஆகியோரால் ஈரானுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டு, மத்திய கிழக்கை ஒரு போர்க்களமாக மாற்றியுள்ள இந்தப் போர், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தைப் பொறுத்தவரை வெறுமனே ஒரு 'மோதல்' மட்டுமே. அனைத்துத் தரப்பினரும்! தரப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. அமெரிக்காவும் இஸ்ரேலும், என்ன குற்றங்கள் செய்தாவது ஈரான் அடிபணியும் வரை போர் தொடுப்போம் என்று அச்சுறுத்துகின்றன; ஆனால் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், 'அமைதியான சூழலுக்காக' யாரிடம் மன்றாடுகிறது?
இந்த அரசாங்கத்தின் அறிக்கை, ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன்னணி கூட்டாளியான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையின் நகலாகும்.
ஈரானைக் கைப்பற்றுதல் என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ள ஒரு ஏகாதிபத்தியப் போரை, ஜனாதிபதி திசாநாயகவின் அரசாங்கம், மத்திய கிழக்கில் நடக்கும் வெறும் 'மோதல்' என்று கூறி, அதன் சட்டவிரோதத் தன்மையை மூடிமறைத்து, அதற்கு ஒப்புதல் அளிப்பதாக மறைமுகமாகக் கூறியுள்ளது. போரைத் தொடங்கிய ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பெயர்களைக் குறிப்பிடக் கூட அந்த அறிக்கை மறுக்கிறது.
அது மட்டுமன்றி, பாதிக்கப்பட்டவர்களையும் ஆக்கிரமிப்பாளர்களையும் ஒரே தரப்பில் சேர்த்து, 'இரு தரப்பினரையும்' மோதலைத் தணிக்குமாறு அரசாங்கம் அழைக்கிறது. இது, தனது சொந்த இறையாண்மையை அப்பட்டமாக மீறி, நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்று, நாட்டை அழிக்கும் ஒரு போர் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எந்த எதிர்ப்பும் காட்டாமல், அதற்கு அடிபணியுமாறு ஈரானிய அரசாங்கத்தை கேட்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
இந்த அறிக்கைகளும் வார்த்தைகளும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், இதே நிலைப்பாட்டிலேயே, வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ் ஆக்கிரமிப்பாளர்களின் தாக்குதல்கள் குறித்து 'கவலை' தெரிவித்து, நிலைமையை 'தணிக்க' அழைப்பு விடுத்து ஒரு கபடத்தனமான அறிக்கையை வெளியிட்டது.
அரசாங்கம் இந்த அறிக்கையை வெளியிட்டபோது கூட, போரின் சட்டவிரோதத் தன்மை மிகத் தெளிவாக இருந்தது: ஆரம்பத் தாக்குதல்கள் நடந்த சில மணி நேரங்களிலேயே, ஈரானின் அதி உயர் தலைவர் அலி கமேனி இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது; இராணுவத் தலைமைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சர், புரட்சிகர காவலர் படையின் தலைவர், பாதுகாப்பு சபையின் செயலாளர் மற்றும் சுமார் 40 ஏனைய அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். தெற்கு ஈரானிய நகரமான மினாபில் உள்ள ஒரு பெண்கள் தொடக்கப் பாடசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது; இந்தத் தாக்குதலில் கிட்டத்தட்ட 150 பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஆனால், நேற்று நடைபெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, கமெனியும் பிற தலைவர்களும் ஒரு விபத்தில் இறந்ததைப் போல், அவர்களின் மரணங்களுக்கு அரசாங்கம் 'இரங்கல்' தெரிவிக்கும் என்று அறிவித்தார்.
'இந்த மோதல்... பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கும் ஒரு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது' என்று அரசாங்க அறிக்கை கூறியது. ஈரானுக்கு எதிரான பல தசாப்த கால வன்முறை மற்றும் முடக்கும் தடைகளை விதிப்பதையும் நியாயப்படுத்த, அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து பயன்படுத்தி வரும் பொய் என்னவென்றால், மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மைக்கும் பாதுகாப்புக்கும் தெஹ்ரான் ஒரு 'அச்சுறுத்தல்' என்பதுதான்.
ஜே.வி.பி./தே.ம.ச., ஆக்கிரமிப்பாளரையும் பாதிக்கப்பட்டவரையும் சமமாக நடத்துவதும், அமெரிக்க-இஸ்ரேலிய குற்றவாளிகளின் பெயர்களைக் குறிப்பிட மறுப்பதும், கடன்கள் மற்றும் வரிகள் தொடர்பான சலுகைகளுக்காக ஏகாதிபத்தியத்துக்குப் பின்னால் அணிசேர்ந்துள்ள கனிஷ்ட பங்காளிகளின் மொழியை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு, திசாநாயக்க ஆட்சியானது ஏகாதிபத்தியக் கொள்கைக்குத் தனது அரசியல் அடிமைத்தனத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இலங்கை போன்ற ஏகாதிபத்திய-சார்பு நாடுகளின் ஆளும் கட்சிகள் அமெரிக்காவுடன் மேலும் மேலும் நெருங்குவதானது, உலகளாவிய நிதி மூலதனம் மற்றும் ஏகாதிபத்தியத்துடன் அவை புறநிலையில் கட்டுண்டு இருப்பதில் இருந்தே தலை தூக்குகின்றது. இலங்கை போன்ற ஏகாதிபத்திய சார்பு நாடுகள், தங்களின் சொந்த நலனுக்காக, வாஷிங்டனின் நலன்களைப் புறக்கணிக்கவில்லை என்பதைக் காட்டப் போராடுகின்றன; அந்த ஆதரவின் ஒரு பகுதியாகவே இந்த தயக்கம் நிறைந்த ராஜதந்திர மொழி விளங்குகிறது.
ஒரு குட்டி முதலாளித்துவ தீவிரவாத இயக்கமாக இருந்த ஜே.வி.பி, முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு வெளிப்படையாகச் சேவை செய்யும் ஒரு அரசியல் ஸ்தாபனத்தின் கட்சியாக வெகு காலத்திற்கு முன்பே மாறிவிட்டது. அதே சக்திகளின் ஆதரவுடன் இப்போது ஆட்சிக்கு வந்துள்ள இந்தக் கட்சி, தான் செயல்படுத்தியுள்ள பெரும் சிக்கன மற்றும் முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பையும் அலட்சியம் செய்து, அஞ்சாமல் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு, அரசியல் ஸ்திரத்தன்மையும் அதேபோல் வல்லரசுகளுடனான, குறிப்பாக இந்தியா மற்றும் ஏகாதிபத்திய அமெரிக்காவுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்வதும் அவசியமாகும்.
அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையானது, உலக வல்லரசுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற நிதி நிறுவனங்களின் நம்பிக்கையை வெல்வது; அமெரிக்காவின் பிராந்திய மூலோபாயத்தின் ஒரு கனிஷ்ட பங்காளியாக இந்த நாட்டை நிலைநிறுத்துவது மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பானது ஏகாதிபத்தியத்துக்கு எதிரான எதிர்ப்பாக மாறுவதை தடுப்பது போன்ற பிரதான விடயங்களை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.
அதிகாரத்திற்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருங்கிய உறவுகளை வளர்த்து வந்த ஜே.வி.பி தலைவர்கள், ஆட்சிக்கு வந்த உடனேயே இந்தச் செயல்முறையை வேகப்படுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது. தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதப் போருக்கு அமெரிக்காவின் ஆதரவைக் கோருவதற்காக, அப்போதைய ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்கவும், தற்போதைய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தும் 2005இல் அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் காலடியில் மண்டியிட்டனர் என்பதை இங்கு விசேடமாக குறிப்பிட வேண்டும். அந்தச் சந்திப்பில், ஜே.வி.பி. தலைவர்கள், புஷ் நிர்வாகம் முன்னெடுத்த 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்று அழைக்கப்படும் நடவடிக்கைக்குத் தங்கள் ஆதரவை உறுதியளித்தனர்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 2024 தேர்தல்களை நெருங்கிய போது, ஜே.வி.பி./தே.ம.ச. கூட்டணி, இந்தியாவின் 'பாதுகாப்பு நலன்களுக்கு' அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இலங்கையின் நிலப்பரப்பு, வான்வெளி அல்லது கடற்பரப்பு பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்குத் தெளிவான வாக்குறுதியை அளித்தது. சீனாவுக்கு எதிரான அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவின் நாட்கர கூட்டணியில் இந்தியா உறுப்பினராக இருக்கும் சூழ்நிலையில், இந்த வாக்குறுதியானது, சீனா உட்பட இலக்கு வைக்கப்பட்ட நாடுகளுக்கு எதிரான அமெரிக்க-இந்தியப் போர் முன்னணியுடன் இலங்கை அணிசேர்வதைக் குறித்தது.
இதை வெறும் வார்த்தைகளால் மட்டுமன்றி செயலிலும் உறுதிப்படுத்தும் வகையில், 2025 ஏப்ரலில் நரேந்திர மோடியின் கொழும்பு விஜயத்தின் போது, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதல் முறையான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை 'மேம்படுத்தவும் நிறுவனமயமாக்கவும்' ஏற்படுத்தப்பட்ட இந்த ஐந்தாண்டு உடன்படிக்கையில், 'இந்தியாவின் பாதுகாப்பிற்குப் பாதகமான முறையில் எந்த வகையிலும்' தனது நிலப்பரப்பு பயன்படுத்தப்படுவதை இலங்கை அனுமதிக்காது என்று திசாநாயக தில்லிக்கு உறுதியளித்தார். அந்த உறுதிமொழியானது, தீவிலும் அதன் கடற்பரப்பிலும் சீனாவின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், இந்தோ-பசிபிக் போட்டிகளில் இலங்கையை இந்தியாவுடன் அணிதிரட்டுவதற்குமான ஒரு சபதமாகப் பரவலாகப் பொருள் கொள்ளப்பட்டது.
அதே ஆண்டு நவம்பரில், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், இலங்கையை அமெரிக்காவுடனான கூட்டு நடவடிக்கைகளுடன் இணைத்து, நாட்டின் ஆயுதப் படைகளை மொன்டானா தேசிய பாதுகாப்புப் படை மற்றும் அமெரிக்க சமுத்திர பாதுகாப்பு படைப் பிரிவுகளுடன் இணைத்து, அமெரிக்காவுடன் விசேட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இரு அரசாங்கங்களும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை -ஏனையவற்றோடு சேர்த்து இந்து-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்தும்- ஒரு 'வரலாற்று மைல்கல்' மற்றும் 'முற்போக்கான நடவடிக்கை' என்று வர்ணித்தன. இதனால், சீனாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவத்தின் ஆத்திரமூட்டல்களுடன் இந்தத் தீவு நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுடன் திசாநாயக அரசாங்கத்தின் உறவுகள் ஆழமடைந்து வருவதற்கான தெளிவான அறிகுறியாக, போர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, பெப்ரவரி 21 அன்று, அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர், பாதுகாப்புத் துணைச் செயலாளரையும் அதிகாரிகளையும் சந்திக்க இலங்கைக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார்.
மேற்கு ஆசியாவில் வேகமான அமெரிக்காவின் இராணுவ கட்டியெஉப்பல் நேர வேளையில் நடைபெற்ற இந்த பயணத்தில், (இரு தரப்பினரும்) சேர்ந்து எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்கள் உட்பட பல்வேறு கூட்டாண்மை பற்றிய விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்னர் (பெப்ரவரி 18), இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டிற்காக இந்தியா வந்திருந்த திசாநாயக, புது தில்லியில் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோரை சந்தித்ததோடு, 'பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்த இணைந்து செயல்படுவது' குறித்து கலந்துரையாடியிருந்தார். ஈரானுக்கு எதிரான போரில் இலங்கையை இழுப்பதில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பதை இந்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) ஒரு போலியான போர் எதிர்ப்பு முகமூடியை அணிந்துகொள்ள வீண் முயற்சி செய்தது. மார்ச் 2 அன்று பாராளுமன்றத்தில் பேசிய ஐ.ம.ச. தலைவர் சஜித் பிரேமதாச, 'ஒரு இறையாண்மை கொண்ட அரசுக்கு எதிரான ஆக்கிரமிப்புச் செயலைக் கண்டிக்க அரசாங்கம் தயங்கக்கூடாது' என்று கூறி, ஈரான் மீதான தாக்குதலை 'பகிரங்கமாக கண்டிக்குமாறு' சவால் விடுத்தார். தனது தாய் கட்சியான, அமெரிக்க ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சியின் ஏகாதிபத்திய ஆதரவுக் கொள்கைகளிலிருந்து விலகாத ஐ.ம.ச., போருக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றது.
ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், கட்டார் மற்றும் பஹ்ரைன் மீதான பதிலடித் தாக்குதல்களையும் அரசாங்கம் கண்டிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை, அவரது எதிர்ப்பின் பொய்மையை அம்பலப்படுத்துகிறது. ஈரானின் தாக்குதல்களின் முதன்மை நோக்கம், இந்த நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை அழிப்பதாகும். அந்த வகையில், ஐ.ம.ச. தலைவரின் இந்தக் கூற்று, தாக்குதல்களுக்கு எதிராகத் தன்னைத் தற்காத்துக் கொள்ள ஈரானுக்கு உரிமை இல்லை என்றே மறைமுகமாக உணர்த்துகிறது.
இதற்கிடையில், லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கையின் ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக இடது முன்னணி மற்றும் இலங்கை மக்கள் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய சோசலிசக் கூட்டணி, மார்ச் 2 அன்று, வெளியிட்ட ஒரு அறிக்கை, அமெரிக்காவையும் இஸ்ரேலையும் 'வலுவாகவும் சந்தேகத்திற்கிடமின்றியும் கண்டிப்பதாக' கூறுகிறது. கடந்த காலம் முழுவதும் இந்தக் கட்சிகள் அனைத்தும் அமெரிக்காவுடன் அணிசேர்ந்த அரசாங்கங்களில் பங்காளிகளாக இருந்துள்ளன என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த அறிக்கைகள் பாசாங்குத்தனமானவை ஆகும்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் போர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) அதன் சோசலிச சமத்துவக் கட்சிகளும், சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பும், உலக சோசலிச வலைத் தளத்தில் விடுத்த எச்சரிக்கையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. உலக முதலாளித்துவ முறைமையின் அடிப்படை முரண்பாடுகள் வெடித்து, ஒரு ஆழமான நெருக்கடியில் மூழ்கி, ஏகாதிபத்திய சக்திகள், குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம், மனிதகுலத்தை ஒரு பேரழிவுகரமான உலகப் போருக்குள் தள்ளுகின்றன. சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இந்தப் பேரழிவைத் தடுக்க முடியும். இலங்கைத் தொழிலாளர்கள் அதன் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
அதன் சகோதரக் கட்சிகளுடன் இணைந்து இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சி, ஈரானுக்கு எதிரான போரை எதிர்ப்பதோடு அதற்கு எதிராக இலங்கை மற்றும் சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டப் போராடுகிறது. சோ.ச.க., இலங்கை அரசாங்கத்தின் ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாடுகளையும் எதிர்க்கிறது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் நிறுத்த வேண்டும்; மத்திய கிழக்கிலிருந்து அனைத்து அமெரிக்கப் படைகளையும் விலக்கிக்கொள்வதோடு அங்குள்ள நூற்றுக்கணக்கான இராணுவத் தளங்களை மூட வேண்டும்; நேட்டோவைக் கலைத்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பரந்த இராணுவ-உளவுத்துறை அமைப்பை ஒழிக்க வேண்டும்; ஈரான் மற்றும் ஏனைய அனைத்து நாடுகளுக்கும் எதிரான அனைத்து விதமான தடைகளையும் நிராகரிக்க வேண்டும்; இந்தப் போரைத் தொடுத்தவர்களையும் அதன் குற்றவாளிகளையும் முழுமையாகப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்; மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இந்தக் கொள்கை ரீதியான நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டு, சர்வதேசப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டில் போர் எதிர்ப்பு இயக்கமொன்றைக் கட்டியெழுப்பும் போராட்டத்தில் எங்களுடன் இணையுமாறு இலங்கையின் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் சோ.ச.க.யும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பும் அழைக்கின்றன.
மேலும் படிக்க
- இந்தியப் பெருங்கடலில் ஈரானிய கப்பலை அமெரிக்கா மூழ்கடித்ததைக் கண்டனம் செய்! ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரை எதிர்த்திடு!
- “ஒரு அணு ஆயுதப் போரின் உண்மையான ஆபத்து உள்ளது”: இலங்கை தொழிலாளர்களும் மாணவர்களும் ஈரான் போரை எதிர்க்கின்றனர்
- ஈரான் மீதான தரைவழி ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கக் கடற்படைப் பிரிவு மத்திய கிழக்கை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது
