இந்த மொழி பெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியப் போரின் தோற்றம், அதை இயக்கும் சமூக சக்திகள் மற்றும் அதைத் தடுக்கத் தேவையான மூலோபாயம் ஆகியவற்றை விளக்க, சோசலிச சமத்துவக் கட்சியும் (இலங்கை) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் செவ்வாய்க்கிழமை, மார்ச் 17, மாலை 4:00 மணிக்கு கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் பகிரங்க கூட்டமொன்றை நடத்துகின்றன. இதில் வெளி மாவட்டங்களை அல்லது வெளி நாடுகளைச் சேர்ந்தோர் ZOOM ஊடாக பங்குபற்ற இங்கு பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
புதன்கிழமை, இந்து சமுத்திரத்தில் இலங்கையின் தெற்கு கடற்கரை பகுதியில் ஈரானின் கடற்படை போர்க்கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ். டெனாவை அமெரிக்கா மூழ்கடித்தது ஒரு குற்றவியல் படுகொலைச் செயலாகும். சுமார் 140 ஈரானிய மாலுமிகள் கடலில் மூழ்கினர்; 32 மாலுமிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஜெனீவா உடன்படிக்கைகளின்படி, அந்தக் கப்பலை தாக்கி கவிழ்த்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலே அவர்களை காப்பாற்றியிருக்க வேண்டும். ஆனால், மாறாக இலங்கை கடற்படையாலேயே அவர்கள் மீட்கப்பட்டனர்.
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் இந்தப் போர்க்குற்றத்தையும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கும் சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போரையும் கண்டனம் செய்கின்றன.
இந்தப் போரில் உடந்தையாக இருக்கும் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களையும் நாங்கள் கண்டிக்கிறோம். இந்தப் போரை நிறுத்துவதற்கு, சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப, சர்வதேச அளவில் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒன்றிணையுமாறு தெற்காசிய தொழிலாள வர்க்கத்துக்கு நாங்கள் அறைகூவல் விடுக்கின்றோம்.
வாஷிங்டனில், இந்த படுகொலையைக் கொண்டாடிய அமெரிக்க போர் செயலாளர் பீட் ஹெக்ஸெத், 'நேற்று இந்தியப் பெருங்கடலில், சர்வதேச நீரில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்திருந்த ஈரானிய போர்க்கப்பலை ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்தது... அமைதியான மரணம்' என்று கூறினார்.
ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா ஒரு இராணுவப் பணியில் ஈடுபட்டிருக்கவில்லை. அது, வங்காள விரிகுடாவில் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் சர்வதேச கடற்படை அணிவகுப்பிலும் MILAN 2026 பயிற்சிகளிலும் பங்கேற்க இந்திய அரசாங்கத்தால் அழைக்கப்பட்டிருந்தது. பெப்ரவரி 17 அன்று, இந்தியாவின் கிழக்கு கடற்படை கட்டளையகம், கப்பல் மற்றும் பணியாளர்களின் படங்களுடன் 'நீண்டகால கலாச்சார உறவுகளை' பாராட்டி, X சமூக ஊடகத்தில் பதிவிட்டு கப்பலை வரவேற்றிருந்தது. கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா போர்க்கப்பலில் ஆயுதம் இருக்கவில்லை என்பதை முழுமையாக அறிந்தே அது மூழ்கடிக்கப்பட்டது. இந்தியப் பயிற்சியின் விதிகளில் வெடிபொருட்களை எடுத்துச் செல்வதற்கான தடையும் அடங்கும். அதே பயிற்சிகளில் பங்கேற்ற அமெரிக்க கடற்படை, ஈரானிய கப்பலால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை அறிந்திருந்தது. ஹெக்செத் 'முழுமையான போர்' எனக் கூறியமை, பாசிச ட்ரம்ப் நிர்வாகம் சட்டத்தை கணக்கில் எடுக்காது என்பதை அறிவிப்பதாகும் என்பதையே இந்த அட்டூழியம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அவரது பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) தலைமையிலான அரசாங்கமும் இந்த மூழ்கடிப்பு பற்றி குற்றவியல் மௌனத்தைக் கடைப்பிடித்து வருகின்றது. இலங்கையால் அனுப்பப்பட்ட பேரிடர் அழைப்புக்கான பிரதிபலிப்பாக, கடல்சார் ரோந்து விமானங்கள் மற்றும் கடற்படை சொத்துக்களை அனுப்பி வைத்ததாக இந்திய கடற்படை கூறிய போதிலும், ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா ஏற்கனவே இந்திய கடல் எல்லையை விட்டு வெளியேறிவிட்டதால், இந்த மூழ்கடிப்புக்கு இந்தியா எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை என்றும் வலியுறுத்தியது.
முதல் நாளிலிருந்தே, புது தில்லியானது போரை விமர்சிக்கவோ அல்லது அதை நடத்தும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பெயர்களைக் குறிப்பிடவோ இல்லை, மாறாக 'சுயகட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளுமாறு' வெற்று அழைப்புகளை மட்டுமே விடுத்துள்ளது. போர் தொடங்குவதற்கு சற்று முன்னதாக, மோடி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டதுடன் ஈரானின் மீது நடத்தப்படவுள்ள குண்டுத் தாக்குதல்கள் குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கும். சில நாட்களுக்கு முன்பு தனது விருந்தினராக வந்த ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது குறித்து புது தில்லி மௌனம் சாதிப்பது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புப் போருக்கு அதன் முழு ஆதரவையும் உறுதிப்படுத்துவதாகும்.
இலங்கை அரசாங்கத்தின் பதில் அதே அளவு போலித்தனமானதாகும். சர்வதேச கடல்சார் கடமைகளுக்கு இணங்க, அதன் கடற்படை, ஐ.ஆர்.ஐ.எஸ். டெனாவிடமிருந்து மீட்புக்கான வேண்டுகோளைப் பெற்ற பின்னர், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியது. கப்பலில் இருந்த 180 பேரில், அதனால் 32 ஈரானிய மாலுமிகளை மட்டுமே காப்பாற்ற முடிந்ததுடன் சுமார் 87 உடல்களை மீட்டது.
வியாழக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக, நீர்மூழ்கிக் கப்பலின் தாக்குதலை விமர்சிக்கவோ அல்லது அமெரிக்காவின் குற்றப் பாத்திரத்தை எதிர்க்கவோ இல்லை. சுயாதீனமாக இருப்பது போல் வெற்று தோரணை காட்டிய அவர், 'நாங்கள் எந்த அரசிற்கும் சார்பாக செயல்படவில்லை, எந்த அரசிற்கும் நாங்கள் அடிபணியவில்லை' என ஊடகங்களுக்கு கூறினார்.
அவரது கருத்துக்கு நேர்மாறாக, இந்திய கடற்படை அணிவகுப்பில் ஐ.ஆர்.ஐ.எஸ். டெனாவுடன் சென்ற ஐ.ஆர்.ஐ.எஸ். புஷெர் என்ற ஒரு விநியோகக் கப்பலை அரசாங்கம் வியாழக்கிழமை கொழும்பு துறைமுகத்தில் தஞ்சமடைய ஆரம்பத்தில் அனுமதிக்க மறுத்தது. ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா மூழ்கடிக்கப்பட்ட பிறகு, தெளிவாக மற்றொரு சாத்தியமான அமெரிக்க இலக்காக புஷெர் இருந்தது.
ஏராளமான இராஜதந்திர நடவடிக்கைகளின் பின்னரே, 'இயந்திர செயலிழப்பு' என்ற அடிப்படையில் ஐ.ஆர்.ஐ.எஸ். புஷெரை அரசாங்கம் 'காவலில்' எடுத்துக் கொண்டது. கொழும்பில் தரத்த கப்பலில் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட குழுவினர் இறக்கப்பட்டு, உத்தியோகபூர்வமாக தடுத்து வைக்கப்படவில்லை என்றாலும், அவர்கள் ஒரு கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அந்தக் கப்பல், இலங்கை கடற்படையின் மேற்பார்வையின் கீழ், இலங்கையின் மறுபுறத்தில் உள்ள திருகோணமலை துறைமுகத்திற்கு மாற்றப்பட்டது.
2024இல் முதல் முறையாக ஆட்சிக்கு வந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), அதன் கடந்தகால சோசலிச மற்றும் அமெரிக்காவை இலக்குவைத்த ஏகாதிபத்திய-விரோத வாய்ச்சவடாலில் கொஞ்சமாவது எஞ்சியிருந்தால் அதையும் கைவிட்டது.
ஈரான் மீதான கொலைகார அமெரிக்க-இஸ்ரேலிய போருக்கு திசாநாயக அரசாங்கத்தின் பிரதிபலிப்பு, இந்தியாவில் உள்ள தீவிர வலதுசாரி மோடி அரசாங்கத்தின் பிரதிபலிப்பில் இருந்து வேறுபட்டதல்ல. பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது குறித்து 'ஆழ்ந்த கவலை' வெளியிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்ட வெளியுறவு அமைச்சு, 'அதிகபட்ச சுயகட்டுப்பாடு' மற்றும் 'பதட்டத்தைக் குறைக்க' அழைப்பு விடுத்தது. அது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய ஆக்கிரமிப்பாளர்களின் பெயர்களை, அல்லது தம்மால் தூண்டப்படாத ஒரு போரில் பாதிக்கப்பட்டுள்ள ஈரானின் பெயரை குறிப்பிடவில்லை.
பாலஸ்தீனியர்களுக்கு எதிராக அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலைப் போரிலும், இதே போன்ற நிலைப்பாட்டை எடுத்த அரசாங்கம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பெயரைக் குறிப்பிடாமலேயே, பதட்டத்தைக் குறைக்கவும், சுயகட்டுப்பாடு மற்றும் போர்நிறுத்தங்களுக்கும் பயனற்ற வேண்டுகோள்களை விடுத்தது.
சுயாதீனமான வெளியுறவுக் கொள்கை பற்றிய திசாநாயகவின் கருத்துக்கள் ஒரு மோசடியாகும். பதவிக்கு வந்ததிலிருந்து, அவரது அரசாங்கம் சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர்த் திட்டத்தில் கொழும்பை இன்னும் நெருக்கமாக ஒருங்கிணைத்து, இஸ்ரேலுடனான உறவுகளை வலுப்படுத்தி, அவரது வலதுசாரி முன்னோடியான ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றுகிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போரை தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான், பசிபிக் கடற்படைத் தளபதியான அமெரிக்க கடற்படை அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் பெப்ரவரி 19-21 அன்று இரண்டாவது முறையாக இலங்கைக்கு விஜயம் செய்து அமைச்சர்கள் மற்றும் இராணுவத் தளபதிகளைச் சந்தித்தார். கடற்கொள்ளை எதிர்ப்பு, மனிதாபிமானம் மற்றும் பேரழிவுகளுக்கான பதில் நடவடிக்கை என்று பெயரளவில் கூறிக்கொண்டு இந்த அமெரிக்கத் தளபதி விஜயம் செய்திருந்த காலநேரமானது, வரவிருக்கும் தாக்குதலுக்கு இலங்கையின் ஆதரவை உறுதி செய்வதற்கான அமெரிக்க நடவடிக்கையின் அறிகுறியைக் காட்டுகின்றது.
இப்போது, அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் உள்ள போர்க் குற்றவாளிகள் அயதுல்லா கமேனி மற்றும் பிற அனைத்து உயர்மட்ட ஈரானிய தலைவர்களையும் படுகொலை செய்துள்ளனர். ஒரு பெண்கள் பாடசாலையின் மீது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலில் 150க்கும் மேற்பட்ட பிள்ளைகள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் தெற்கு நகரமான காலியில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் ஒரு பாரிய படுகொலைச் செயலில் நிராயுதபாணியான ஈரானிய கடற்படைக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கூச்சலிட்ட ஜே.வி.பி. தலைவர்கள், இப்போது அதன் போர்க்குற்றங்களை விமர்சிப்பது அல்லது கண்டிப்பது ஒருபுறம் இருக்க, 'அமெரிக்கா' என்ற வார்த்தையை கூட சொல்ல முடியாதுள்ளனர்.
ஈரான் மற்றும் அதன் மக்கள் மீதான சட்டவிரோத அமெரிக்க-இஸ்ரேலியப் போருக்கும், ஈரான் அணுசக்தி நிலையங்கள் வைத்திருக்கின்றது, உள்நாட்டில் அடக்குமுறை செய்கிறது அல்லது 'பயங்கரவாதத்திற்கு' ஆதரவளிக்கின்றது என்று கூறப்படுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தனது வரலாற்று வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம், ஈரானிய அரசை அழிப்பதைத் தவிர வேறு எந்த நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. அமெரிக்கவின் பூகோள மேலாதிக்கத்திற்கு பிரதான அச்சுறுத்தலாக அது கருதும் சீனாவிற்கு எதிரான போர் தயாரிப்பில், ஈரானையும் அதன் பரந்த எரிசக்தி வளங்களையும் ஆக்கிரமிப்பதை ட்ரம்ப் நிர்வாகம் ஒரு அத்தியாவசிய படியாகக் கருதுகிறது. ஒரு பேரழிவு தரும் மூன்றாம் உலகப் போர் நெருங்கி வருகிறது.
உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவர் டேவிட் நோர்த் நேற்று விளக்கியதாவது:
ஐ.ஆர்.ஐ.எஸ். டெனாவை மூழ்கடித்த டோர்பிடோ, 140 மாலுமிகளைக் கொன்றதுடன் நின்றுவிடவில்லை. அமெரிக்க அரசாங்கம் எந்தச் சட்டத்துக்கும், எந்தவொரு உடன்படிக்கைக்கும் அல்லது எந்தவொரு நாகரிகமான நடத்தை பற்றிய நிலைக்கும் கட்டுப்படாது என்று, எந்த வருத்தமும் இன்றி உலகிற்கு அறிவித்துள்ளது. முதலாளித்துவ அமைப்பு மற்றும் இலாபக் குவிபு முறைமையாலும் விடுக்கப்படும் கட்டளைகளை மட்டுமே அது அங்கீகரிக்கும்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு புதிய குற்றமும் லியோன் ட்ரொட்ஸ்கி விடுத்த எச்சரிக்கைக்கு அதிகரித்த அவசரத்தை சேர்க்கிறது: 'ஒரு சோசலிசப் புரட்சி இல்லையேல், அடுத்த வரலாற்றுக் காலத்தில், மனிதகுலத்தின் முழு கலாச்சாரத்தையும் ஒரு பேரழிவு அச்சுறுத்தும்.'
தெற்காசியாவில் உள்ள தொழிலாள வர்க்கம், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் முதல் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஏனைய இடங்களில் அமெரிக்கா தலைமையிலான போர்களுக்கு விரோதமான எதிர்ப்பு வரை ஒரு வலிமையான ஏகாதிபத்திய எதிர்ப்பு மரபைக் கொண்டுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை நிறுத்துவதற்கும், ஒரு பேரழிவு தரும் புதிய உலகளாவிய மோதலுக்குச் செல்வதைத் தடுப்பதற்குமான போராட்டத்தில் அந்த பாரம்பரியம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள தொழிலாளர்கள், ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா மூழ்கடிக்கப்பட்டதையும், அமெரிக்காவின்-இஸ்ரேலின் அப்பட்டமான காலனித்துவ கொள்ளையடிப்பு மற்றும் போர் நடவடிக்கைகளுக்கு அவர்களின் அரசாங்கங்கள் உடந்தையாக இருப்பதையும் கண்டனம் செய்ய வேண்டும். போரின் மூல காரணமான முதலாளித்துவ அமைப்பையும், உலகை காலாவதியான போட்டி தேசிய அரசுகளாகப் பிளவுபடுத்தி வைத்திருப்பதையும் தூக்கியெறிவதற்கான, சோசலிசக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தில், தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் அவர்கள் ஒன்றுபட வேண்டும்.
