இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இந்தியாவின் அதி-வலது, இந்து மேலாதிக்கவாத பாஜக அரசும், ஒட்டுமொத்த இந்திய ஆளும் வர்க்கமும், பெப்ரவரி 28 முதல் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் இஸ்ரேலிய தாக்குதல் நாயும் ஈரான் மீது நடத்தி வரும் குற்றவியல் ஆக்கிரமிப்புப் போரில் முழு உடந்தையாக உள்ளன.
ஈரானிய அரசியல் தலைவர்களையும் சுமார் 2,000 சாதாரண பொதுமக்களையும் கொன்றமை; படசாலைகள், மருத்துவமனைகள், கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஏனைய பொது உள்கட்டமைப்புகள் மீது குண்டு வீசுகின்றமை; இந்தியத் தலைமையிலான கடற்படைப் பயிற்சியில் பங்கேற்று வெளியேறிய சிறிது நேரத்திலேயே, நிராயுதபாணியான ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா கப்பலை இந்தியப் பெருங்கடலில் மூழ்கடித்தமை உட்பட போர்க்குற்றத்திற்கு மேல் போர்க்குற்றத்தைக் அமெரிக்காவும் இஸ்ரேலும் குவித்து வரும் நிலையில், அதை எதிர்த்து புதுதில்லி ஒரு வார்த்தை கூடத் தெரிவிக்காமல் சமாளித்துவிட்டது.
மாறாக, ஈரானைக் கண்காணிக்கவும் தாக்குதல் நடத்தவும் பயன்படுத்தப்படும் அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்டுள்ள முழுமையான முடியாட்சி வளைகுடா நாடுகளுடன் மட்டுமே புதுதில்லி 'ஒற்றுமையை' வெளிப்படுத்தியுள்ளது.
புதுதில்லியால் கண்டிக்கப்பட்ட ஒரே நாடு ஈரான் மட்டுமே. அதுவும் ஈரான் தன்னை தற்காத்துக் கொள்ளத் துணிந்ததற்காக கண்டிக்கப்பட்டது.
கடந்த வாரம் அமெரிக்க-சார்பு, போர்-சார்பு ஐ.நா. பாதுகாப்பு சபைத் தீர்மானத்துக்கு இந்தியா இணை அனுசரணை அளித்திருந்தது. தீர்மானம் 2817, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டுள்ள சட்டவிரோத போரையும், ஈரானால் ஆத்திரமூட்டப்படாமலேயே அதன் மீது குண்டுமழை பொழிவதையும், அதன் தலைவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட 'தலை துண்டிப்பு' தாக்குதல்களையும் அலட்சியமாகப் புறக்கணித்துள்ளதன் நோக்கம், தெஹ்ரானை ஆக்கிரமிப்பாளராகச் சித்தரித்து, ஈரானிய அரசுக்கும் அதன் 93 மில்லியன் மக்களுக்கும் எதிரான அழித்தொழிப்புப் போராக ஆகியுள்ள யுத்தத்துக்கு, சர்வதேச அங்கீகாரம் என்ற போர்வையை அளிப்பதற்கே ஆகும். வாஷிங்டனின் வளைகுடா நட்பு நாடுகள் மீது தெஹ்ரான் நடத்திய பதிலடி ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைச் சுட்டிக்காட்டி, இந்தியாவால் அனுசரணையளிக்கப்பட்ட தீர்மானம், பாதிக்கப்பட்ட நாடான ஈரான் சர்வதேச சட்டத்தை மீறியதாகவும், 'சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு' அச்சுறுத்தல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டியது.
வெளிப்படையாகத் தனது ஈரானிய நட்பு நாட்டை இந்தியா இரக்கமின்றி கைவிட்டிருப்பதைப் பற்றி குறைந்தபட்சமேனும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதேபோல், கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய தாக்குதலைக் கண்டிக்க அது மறுத்துவிட்டது—தற்போதைய தாக்குதலைப் போலவே, அதுவும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளின் போர்வையின் கீழேயே கட்டவிழ்த்துவிடப்பட்டது.
கடந்த கால் நூற்றாண்டாக, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கங்களின் கீழ், புதுதில்லி, இந்திய-அமெரிக்க பூகோள மூலோபாய கூட்டாண்மையின் கீழ் முறைப்படுத்தப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான தனது கூட்டணியை, தனது வெளியுறவுக் கொள்கை மற்றும் புவிசார் அரசியல் மூலோபாயத்தின் அடிக்கல்லாக ஆக்கியுள்ளது. சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாயத் தாக்குதலில் ஒரு எதிர்ச் சக்தியாகவும், மேலும் மேலும் ஒரு முன்னணி நாடாகவும் செயல்படுவதன் மூலம், இந்திய முதலாளித்துவ வர்க்கம் தனது சொந்த கொள்ளையடிக்கும் வல்லரசு இலட்சியங்களை முன்னெடுக்க முயன்றுள்ளது.
இந்தப் பிற்போக்கு நிலைப்பாட்டிற்கு இணங்க, இந்தியா, குறிப்பாக தன்னை ஒரு இந்து சர்வாதிகாரியாகக் காட்டிக்கொள்ள விரும்பும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், இஸ்ரேலுடன் மேலும் நெருக்கமான பொருளாதார மற்றும் இராணுவ-பாதுகாப்பு உறவுகளை வளர்த்துள்ளது. உண்மையில், ட்ரம்ப்பும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் ஈரானுக்கு எதிரான தங்கள் போரை உலகமே காணும்படி வெளிப்படையாகத் தயாரித்துக்கொண்டிருந்த காலத்தையே, மோடி இஸ்ரேலுடனான இந்தியாவின் 'மூலோபாயக் கூட்டாண்மையை' வலுப்படுத்தவும், சியோனிச ஆட்சியுடனான தனது அரசாங்கத்தின் நெருக்கத்தை வெளிப்படுத்தவும் தேர்ந்தெடுத்தார். ஈரான் மீது ஏவுகணைகளும் குண்டுகளும் பொழியத் தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்திற்கு முன்பு, பெப்ரவரி 25-26 திகதிகளில் மோடி இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்டார்.
இருப்பினும், ஈரான் மீதான போரில் இந்திய அரசாங்கமும் முதலாளித்துவ வர்க்கமும் உடந்தையாக இருந்ததை ஆவணப்படுத்துவதில் சில முக்கியத்துவம் உள்ளது.
முதலாவதாக, மோடி அரசாங்கமானது தனது சொந்த வகிபாகத்தையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு கனிஷ்ட பங்காளியாக, தானும் இந்திய ஆளும் வர்க்கமும் சகித்துக்கொள்ளவும் பங்கேற்கவும் தயாராக இருக்கின்ற கொடூரங்களை மூடிமறைக்கவும் விழிப்புடன் உள்ளது.
இரண்டு நூற்றாண்டுகளாக பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்திய மக்கள் மத்தியில், குறிப்பாகத் தொழிலாள வர்க்கத்தினர் மத்தியில் மறைந்திருக்கும் ஒரு பெரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு இருப்பதை அவர்கள் நினைவில் கொண்டுள்ளார்கள்.
ட்ரம்ப்பின் உலகளாவிய வரி விதிப்புப் போர் ஏற்கனவே இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தைக் கடுமையாகக் குறைத்துள்ள சூழலிலும், பெரும் வேலையின்மை, பரவலான வறுமை மற்றும் பசியினாலும் சமூகத்தில் கோபம் அதிகரித்து வரும் நிலையிலும், இந்திய மற்றும் உலகப் பொருளாதாரத்தில் போரின் தாக்கத்தைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள்.
இந்தியா, பாரசீக வளைகுடாப் பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவையே பெருமளவில் சார்ந்துள்ளது. மோடி அரசாங்கம், எல்பிஜி விநியோகத்தை, தொழில்துறை மற்றும் வணிகப் பயனாளர்களிடமிருந்து அதை சமையலுக்குப் பயன்படுத்தும் வீடுகளுக்குத் திருப்பிவிட அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தியுள்ளது. சிறிய குடும்ப நிறுவனங்களாக இருக்கும் பல வணிக நிறுவனங்கள், தங்கள் செயல்பாட்டு நேரங்களைக் குறைக்கவோ அல்லது தங்கள் நிறுவனங்களை குறைந்தபட்சம் பகுதியளவாவது மூடி வைக்கவோ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன.
ஹோர்முஸ் ஜலசந்தியின் நீண்டகால முடக்கமும், அப்பகுதியின் பொருளாதாரங்களில் ஏற்படும் சீர்குலைவும், இந்தியாவில் எரிசக்தி செலவுகளில் ஒரு பெரும் உயர்வுக்கு வழிவகுப்பது மட்டுமன்றி, உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பையும் தூண்டும். இது, பிரதானமாக வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாய உள்ளீடுகளில் ஒன்றான யூரியாவின் விலையையும் உயர்த்துவதுடன் வளைகுடாவில் பணிபுரியும் லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் தங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பும் 50 பில்லியன் டொலர் பணவரவில் ஒரு பெரும் வீழ்ச்சியையும் ஏற்படுத்தக்கூடும்.
மக்களின் கோபத்தைத் திசைதிருப்புவதற்காக, வளைந்து கொடுக்கும் பெருநிறுவன ஊடகங்களின் உதவியுடனும் தூண்டுதலுடனும், இந்தியா ஒரு நடுநிலையான, மூன்றாம் தரப்பாக, அமைதிக்காகவும், அரசு இறையாண்மை உட்பட சர்வதேச சட்டத்தின் கொள்கைகளை நிலைநிறுத்தவும் செயல்படுகிறது என்ற பொய்யை அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையிலான இந்தியாவின் ஸ்டாலினிச 'இடதுசாரிகளின்' நச்சுத்தனமான அரசியல் செல்வாக்கைத் தகர்ப்பதற்கும், ஏகாதிபத்திய கூட்டாளியாக இந்தியா ஆற்றும் குற்றவியல் பங்கை அம்பலப்படுத்த வேண்டியது முக்கியமானதாகும்.
அவ்வாறு செய்வது, தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உண்மையான போர் எதிர்ப்பு இயக்கத்தையும், ஏகாதிபத்தியத்திற்கும் நெருக்கடியில் சிக்கியுள்ள முதலாளித்துவ அமைப்புக்கும் முடிவுகட்டுவதற்கான ஒரு சோசலிச-சர்வதேசவாத வேலைத்திட்டத்தையும் உருவாக்குவதற்கு மையமானதாகும்.
மோடியின் கீழ் இல்லாவிட்டாலும், ஒரு மாற்று வலதுசாரி, காங்கிரஸ் கட்சி தலைமையிலான முதலாளித்துவ அரசாங்கத்தின் கீழ், இந்திய முதலாளித்துவ வர்க்கமும் அதன் அரசும் உலக அரசியலில் ஒரு 'முற்போக்கான' பங்கை வகிக்க முடியும் என்று ஸ்டாலினிஸ்டுகள் கூறுகின்றனர்.
போர் சம்பந்தமான ஸ்டாலினிஸ்டுகளின் உடனடி பிரதிபலிப்பில், மோடி அரசாங்கம் அதை சர்வதேச சட்ட மீறல் என்று கண்டிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தனர் —அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இந்தியாவின் இராணுவ-பாதுகாப்பு உறவுகளைப் பெருமளவில் விரிவுபடுத்துவதில் மோடி அரசாங்கத்தின் பங்கைக் கருத்தில் கொண்டால், அது அவ்வாறு கண்டிக்கப் போவதில்லை— அப்படிச் செய்தாலும், அது ஒரு வெற்றுத் தோரணையாக மட்டுமே இருக்கும்.
பின்னர், இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் கண்ணோட்டத்தில் இருந்து வாதிட்ட சிபிஎம் அரசியல் குழுவின் ஒரு குறிப்பிடத்தக்க அறிக்கை, மோடி அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கைகோர்ப்பது, இந்தியாவின் சொந்த 'தேசிய நலன்களை' முன்னெடுப்பதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று எச்சரித்தது.
போர் தொடங்கியபோது, பாஜக அரசாங்கம் ஏறக்குறைய முழுமையாக மௌனம் காத்தது. அமெரிக்காவையோ இஸ்ரேலையோ பெயர் குறிப்பிடாத, ஈரானுக்கு எதிரான அவற்றின் அப்பட்டமான ஆக்கிரமிப்பைக் கண்டிக்காத ஒரு வஞ்சகமான மூன்று-வாக்கிய அறிக்கை மட்டுமே அதன் கருத்தாக இருந்தது. அது அனைத்துத் தரப்பினரையும் “நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்” மற்றும் “பதற்றத்தைத் தவிர்க்கவும்” வலியுறுத்தியது—அதாவது, அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலை தெஹ்ரான் பதிலடி கொடுக்காமல் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று அது அழைப்பு விடுத்தது.
அப்பொழுதும் சரி, அடுத்து வந்த நாட்களிலும் சரி, ஈரானின் தேசத் தலைவராக இருந்ததுடன், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ஷியா முஸ்லிம்களால் போற்றப்பட்ட ஒரு ஆன்மீகத் தலைவராகவும் இருந்த அயதுல்லா கமெனியைக் கொன்ற தலை துண்டிப்புத் தாக்குதலை புது தில்லி ஒருபோதும் கண்டிக்கவில்லை. அதுபோலவே, மினாபில் உள்ள ஒரு தொடக்கப் பாடசாலையில் 175 மாணவிகளையும் அவர்களது ஆசிரியர்களையும் கொன்ற அமெரிக்கத் தாக்குதலையும் அது ஒருபோதும் கண்டிக்கவில்லை.
கமெனிக்கான இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திடுவதற்காக, பாஜக அரசு வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி என்ற ஒரு அதிகாரியை புதுதில்லியில் உள்ள ஈரானியத் தூதரகத்திற்கு அனுப்ப ஐந்து நாட்கள் ஆனது. இதற்குப் பின்னர்தான் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியுடன் தொலைபேசியில் பேசியிருந்தார். இந்த மிகச்சிறிய அடையாளப்பூர்வமான செயலைக் கூட செய்யவில்லையெனில், உயர் மட்டத் தொடர்பு சாத்தியமற்றது என்று புதுதில்லிக்கு உணர்த்தப்பட்டிருக்கலாம் அல்லது அவ்வாறு கூறப்பட்டிருக்கலாம்.
இவை அனைத்துக்கும் முரணானதாகவே, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஈரான் நடத்திய பதிலடித் தாக்குதல்களுக்கு பாஜக அரசு காட்டிய பிரதிபலிப்பு உள்ளது. மார்ச் 1, ஞாயிற்றுக்கிழமை அன்று, ஐக்கிய அரபு அமீரக அதிபரைத் தொலைபேசியில் அழைத்து தனிப்பட்ட முறையில் இரங்கல் தெரிவித்த பிறகு, அதே நாளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதைக் கண்டித்து மோடி ஒரு அறிக்கையை வெளியிட்டார். 'ஐக்கிய அரபு அமீரக அதிபர், என் சகோதரர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பேசினேன்,' என்று மோடி X தளத்தில் எழுதினார். 'ஐக்கிய அரபு அமீரகம் மீதான தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்தேன், இந்தத் தாக்குதல்களில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்தேன். இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒற்றுமையாக நிற்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய சமூகத்தினரைக் கவனித்துக் கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். பதற்றத்தைத் தணித்தல், பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நாங்கள் ஆதரிக்கிறோம்,' என அவர் பதிவிட்டிருந்தார்.
அதேபோல், ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா கப்பலை அமெரிக்கா நீர்மூழ்கிக்கப்பல் மூலம் டோர்பிடோவால் இரகசியமாகத் தாக்கி மூழ்கடித்ததை புதுதில்லி ஒருபோதும் கண்டிக்கவில்லை. உலகெங்கிலும் உள்ள மாலுமிகளுடன் சேர்ந்து இந்திய இராணுவக் கடற்படைப் பயிற்சியில் கலந்துகொண்டிருந்த 150 ஈரானிய மாலுமிகளை, சட்டப்படி இல்லாவிட்டாலும் தார்மீக ரீதியாக இந்திய அரசு காப்பாற்றியருக்க வேண்டும். அது அப்படி செய்திருக்கவில்லை.
இந்திய இராணுவம் மற்றும் தேசியப் பாதுகாப்பு வட்டாரங்களில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து வருத்தம் நிலவுகிறது எனினும், இந்தியப் பெருங்கடலில் 'பாதுகாப்பு' வழங்குவதில் தனது நம்பகமான கூட்டாளி என்று கூறி பென்டகன் முகஸ்துதி செய்ய விரும்பும் இந்தியக் கடற்படையுடன் கலந்தாலோசிக்காமலேயே, இந்தியாவின் கடற்கரைகளுக்கு அப்பால் வாஷிங்டன் எதேச்சதிகாரமாக செயல்படத் தேர்ந்தெடுத்தது என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே இந்த வருத்தம் வெளிப்படுகிறது.
மேலும் படிக்க
- வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ் ஈரான் மீதான தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில், இந்தியா-இஸ்ரேல் மூலோபாய அச்சாணியை வலுப்படுத்த மோடி இஸ்ரேலுக்கு விஜயம் செய்கிறார்
- இந்தியப் பெருங்கடலில் ஒரு பெரும் படுகொலை: ஐரிஸ் டெனா கப்பல் மீது நடத்தப்பட்ட நீர்மூழ்கிக் குண்டுத் தாக்குதல்
- ஈரானிய மாலுமிகள் மீட்கப்பட்டமை பற்றிய இலங்கையின் “மனிதாபிமான” பாசாங்கை அமெரிக்க குறிப்பாணை அம்பலப்படுத்துகிறது
