மத்தியதரைக் கடலில் நிகழ்ந்த பாரிய படகு விபத்தில் மேலும் 70 புலம்பெயர்ந்தோரின் உயிர்களை ஐரோப்பியக் கோட்டை பலி கொண்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்ற எதிர்ப்புத் திட்டம், கடந்த வாரத்தில் மட்டும் மேலும் பலரின் உயிர்களைப் பறித்துள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று, லிபியாவின் கடற்பகுதிக்கு அருகே மத்திய தரைக்கடலில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 70 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர். ஐரோப்பாவிற்குள் நுழையும் நம்பிக்கையில் லிபியாவிலிருந்து வெளியேறிய, குறைந்தது 100 பேர்கள்வரை ஏற்றபட்டிருந்த அந்தச் சிறிய மரப் படகில் இருந்த 32 பேர்கள் மட்டுமே உயிர் பிழைத்தனர். தங்களை எந்தவொரு கடலோர காவல்படையும் மீட்கவில்லை, ஒரு வணிகக் கப்பலே தங்களை மீட்டு லம்பேடுசா (Lampedusa) தீவுக்கு அழைத்துச் சென்றதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர்.

மத்தியதரைக் கடலில் ஏப்ரல் 4, 2026 அன்று கவிழ்ந்த 15 மீட்டருக்கும் குறைவான நீளமுள்ள தமது மரப் படகின் மீது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தொங்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் [Photo: Sea-Watch/X]

மத்தியதரைக் கடலைக் கடக்கும் அபாயகரமான பயணத்தை மேற்கொள்ளும் அவநம்பிக்கையடைந்த புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் கொடூரமான துன்பங்களுக்கு முடிவே இல்லை.

ஏப்ரல் 1 அதிகாலை, லம்பேடுசாவிலிருந்து சுமார் 85 மைல் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு புலம்பெயர்ந்தோர் படகிலிருந்து 19 உடல்களை இத்தாலிய கடலோர காவல்படை மீட்டது. 58 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர், அவர்களில் ஐவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு (MSF) மற்றும் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு (IOM) ஆகியவற்றின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், உடல் வெப்பநிலை கடுமையாகக் குறைந்ததால் அவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்று தெரிவித்தார்.

தங்களது படகு பழுதடைந்த பிறகு, மோசமான வானிலையில் பல நாட்களாக தாங்கள் தத்தளித்துக் கொண்டிருந்ததாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர். மார்ச் 30 ஆம் தேதி வாக்கில் மேற்கு லிபியாவிலிருந்து புறப்பட்ட அந்தப் படகில் சூடான், தெற்கு சூடான், சியரா லியோன், காம்பியா, நைஜீரியா, கானா மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் இருந்தனர்.

கடலைக் கடக்க முயற்சிக்கும் சிறிய படகுகளைக் கண்காணிப்பதையும், அவர்களுக்கு உதவுவதையும் ஐரோப்பிய அரசாங்கங்கள் கிட்டத்தட்ட நிறுத்திவிட்டன. இந்தப் பணியை பெரும்பாலும் கடல் கண்காணிப்பு அமைப்பு போன்ற தன்னார்வலர்களால் நடத்தப்படும் சில தொண்டு நிறுவனங்களே மேற்கொண்டு வருகின்றன. ஏப்ரல் 1 ஆம் தேதி வரையிலான வெறும் மூன்று நாட்களில் மட்டும் குறைந்தது 100 பேர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1 அன்று, மேற்கு துருக்கி அருகே புலம்பெயர்ந்தவர்கள் பயணம்செய்த காற்று ஊதப்பட்ட படகு ஒன்று கவிழ்ந்தது. நீரில் மூழ்கிய இந்தப் படகிலிருந்த ஒரு குழந்தை உட்பட 19 பேர்கள் உடல் வெப்பநிலை குறைவு காரணமாக உயிரிழந்தனர். டொச் வெல்லே என்ற பத்திரிகை செய்தியின்படி, 21 பேர்கள் இந்தப் படகிலிருந்து மீட்கப்பட்டனர்

மற்றொரு சம்பவத்தில், கடலில் கைவிடப்பட்ட ஒரு எண்ணெய் தளத்திற்கு புலம்பெயர்ந்தவர்கள் தஞ்சம் புகுந்திருக்காவிட்டால், இன்னும் பலர் உயிரிழந்திருப்பார்கள். இது குறித்து யூரோ நியூஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில், “மத்திய தரைக்கடலில் கைவிடப்பட்ட எண்ணெய்க் கிணறு மேடையில் இருந்து மீட்கப்பட்ட 44 புலம்பெயர்ந்தோருடன் கடல் கண்காணிப்பு மீட்புக் குழுவின் கப்பல் சனிக்கிழமை லம்பேடுசாவுக்கு வந்தடைந்தது. துனிசியா மற்றும் லிபியாவுக்கு இடையேயான கடற்பரப்பில் உள்ள டிடோன் என்ற எண்ணெய்க் கிணறு மேடையில், புயலில் இருந்து தப்பிக்க இந்த புலம்பெயர்ந்தோர் தஞ்சமடைந்திருந்ததாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்தோர் புதன்கிழமை முதல் அந்த கைவிடப்பட்ட எண்ணெய் தளத்தில் தங்கியிருந்தனர்.

ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஏகாதிபத்தியப் போர்கள் மற்றும் கடும் வறுமையால் சீரழிக்கப்பட்ட தங்கள் தாய்நாடுகளை விட்டு வெளியேறும் அகதிகளுக்கு, லிபியாவின் துறைமுகங்கள் இடைத்தங்கல் புள்ளிகளாகச் செயல்படுகின்றன. இதனால் லிபியாவிலிருந்து ஐரோப்பாவை நோக்கிப் புறப்படும் படகுகளில் ஏராளமான மரணங்கள் நிகழ்கின்றன. லிபியாவின் கடற்கரையிலிருந்து தப்பிக்க முற்படுபவர்களில் ஒரு சிறு பகுதியினரே வெற்றியடைகின்றனர். உலகெங்கிலும் உள்ள அகதிகளில் முழுமையாக 70 சதவீதத்தினர் அண்டை நாடுகளைத் தாண்டி எங்கும் செல்ல முடிவதில்லை. அவர்களில் பெரும்பாலானோர் ஆபிரிக்கா மற்றும் ஆசியா முழுவதிலும் உள்ள சேரிகள் மற்றும் அகதி முகாம்களில் நரக நிலைமைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் இயங்கும் லிபியா, அகதிகளுக்கான ஒரு மிகப்பெரிய நிலவறை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. கடந்த பிப்ரவரி மாதம், லிபியாவிற்கான ஐக்கிய நாடுகளின் ஆதரவு அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் ஒரு அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “நாடு முழுவதும், புலம்பெயர்ந்தோர், புகலிடம் தேடுவோர் மற்றும் அகதிகள் வலுக்கட்டாயமாக சுற்றி வளைக்கப்படுகிறார்கள், கடத்தப்படுகிறார்கள், அவர்களின் குடும்பங்களிடமிருந்து பிரிக்கப்படுகிறார்கள், தன்னிச்சையாகக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் துப்பாக்கி முனையில் முறையான சட்ட நடைமுறைகள் ஏதுமின்றி அதிகாரப்பூர்வமான, அதிகாரப்பூர்வமற்ற அல்லது சட்டவிரோதத் தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்படுகிறார்கள். அங்கு, அவர்கள் நீண்டகாலத் தடுப்புக்காவலை அனுபவிப்பதோடு, சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தைகள் மூலம் அவர்கள் விடுதலையாவதற்குப் பணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மத்திய தரைக்கடல் பகுதியில் சமீபத்தில் நிகழ்ந்த மரணங்கள், ஒரு கொடூரமான பேரழிவின் பகுதியாகும். மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு (IOM) இந்தத் தரவுகளைப் பதிவு செய்யத் தொடங்கிய 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு, 2026-ஆம் ஆண்டை “ஒரு ஆண்டின் மிக மோசமான தொடக்கமாக” இது ஆக்குகிறது.

இந்த மதிப்பீடு பிப்ரவரி 23 அன்று மேற்கொள்ளப்பட்டது. அதற்குள், ஐரோப்பாவை அடைய முயன்ற குறைந்தது 606 பேர்கள் இறந்ததாகவோ அல்லது காணாமல் போனதாகவோ ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 5 அன்று, IOM இந்த இறப்பு எண்ணிக்கையை 683 ஆகப் புதுப்பித்தது.

இத்தகைய புள்ளிவிபரங்கள் மத்தியதரைக் கடலில் நிகழும் உண்மையான இறப்பு எண்ணிக்கையை குறைத்து மதிப்பிடுகின்றன. கடந்த ஆண்டில், கடலில் காணாமல் போன மேலும் நூற்றுக்கணக்கானோரைப் பற்றிய தகவல்கள் வந்துள்ளன, அவை இன்னும் சரிபார்க்கப்பட முடியவில்லை. பிப்ரவரி மாதத்தில் மட்டும் வெறும் இரண்டு வாரங்களில், எந்தவொரு படகு விபத்துடனும் தொடர்பில்லாத 23 மனித உடல்கள் தெற்கு இத்தாலி மற்றும் லிபியக் கடற்கரைகளில் ஒதுங்கின.

சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் காணாமல் போன புலம்பெயர்ந்தோர் தரவுத் தொகுப்பின்படி, 2014 முதல் மத்தியதரைக் கடலில் மலைப்பூட்டும் வகையில் 34,570 அகதிகள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர்.

இந்த பாரிய மரணங்களின் அதிகரித்துவரும் எண்ணிக்கை என்பது, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கண்டத்தின் முக்கிய ஏகாதிபத்திய வல்லரசுகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘’ஐரோப்பியக் கோட்டை” (Fortress Europe) கொள்கையின் தவிர்க்க முடியாத விளைவாக ஏற்பட்டதாகும்.

முன்பு தீவிர வலதுசாரிகளுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு கொள்கைகள், இப்போது பெயரளவில் பழமைவாதிகளாக இருந்தாலும் சரி அல்லது சமூக ஜனநாயகவாதிகளாக இருந்தாலும் சரி, ஆளும் வர்க்கக் கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அந்நியர் மீதான வெறுப்பை உமிழும் மற்றும் அனைத்து சமூக அவலங்களுக்கும் புகலிடம் தேடுவோரை பலிகடா ஆக்கும் பாசிச சக்திகள் — இத்தாலியின் முசோலினியைப் போற்றும் ஜியோர்ஜியா மெலோனி, பிரான்சின் மரின் லு பென், ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி (AfD) மற்றும் பிரித்தானியா சீர்திருத்தக் கட்சி போன்றவை — இப்போது முதலாளித்துவத்தின் முக்கிய நீரோட்ட அரசியலில் அங்கமாகிவிட்டன.

ஐரோப்பாவின் நிலப்பரப்பில், ஆளும் கட்சிகள் முள்வேலிகள், உலோக வேலிகள், இராணுவம் மற்றும் ட்ரோன் கண்காணிப்பு மூலம் தங்கள் எல்லைகளை பலப்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு வெளி எல்லைகளிலும் மற்றும் பல உறுப்பு நாடுகளுக்குள்ளும் சித்திரவதை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு புகலிடம் தேடுவோர் மிகவும் மனிதாபிமானமற்ற சூழலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் “பாதுகாப்பான பிறப்பிட நாடுகள்” சட்டத்தை நிறைவேற்றினர். இது பெருமளவிலான நாடுகடத்தல்களுக்கு வழி வகுக்கிறது. மற்றுமொரு சட்டம், ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் “திருப்பி அனுப்பப்பட்டவர்களை தங்க வைக்கும் மையங்களை” உருவாக்குவதற்கான அடிப்படையை அமைத்துள்ளது. இந்த மையங்களுக்கு புலம்பெயர்ந்தோரும், அகதிகளும் நாடுகடத்தப்படலாம். ஐரோப்பாவின் ஆளும் வர்க்கத்தினர், இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகள் மீதான ஒவ்வொரு சட்டப்பூர்வ உறுதிப்பாடுகளையும் முறையாகக் கிழித்தெறிந்து வருகின்றனர்.

கடந்த மாதம் பொலிட்டிகோ பத்திரிகையானது, “ஜேர்மனியும் நெதர்லாந்தும், நாடு கடத்தப்படுவதற்கு முன்பு நிராகரிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை, மூன்றாம் நாடுகளில் உள்ள திருப்பி அனுப்பப்பட்டவர்களை தங்க வைக்கும் மையங்களுக்கான திட்டங்களை 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் நடைமுறைப்படுத்த விரும்புகின்றன. ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகளும் இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன” என்று செய்தி வெளியிட்டது. ஐரோப்பிய பழமைவாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகள் குழுவின் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பேச்சுவார்த்தையாளர் சார்லி வீமர்ஸ், “ஐரோப்பாவில் ஒரு புதிய ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது... நாடுகடத்தல்களின் சகாப்தம் தொடங்கிவிட்டது,” என்று அறிவித்தார்.

ஐரோப்பிய வல்லரசுகள் இந்தத் தாக்குதலுக்குத் தயாராகி வருகின்ற நிலையில், 90 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஈரானை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளியான இஸ்ரேல் முறையாக அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகப்பெரியளவிலான கட்டாய அகதிகள் இடப்பெயர்வுக்கு வழிவகுக்கக்கூடிய ஒன்றிற்கு இவை உடந்தையாக உள்ளன.

ஈரான் மீதான போர் தொடங்கிய நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் புகலிடத்திற்கான முகமை எழுதிய அறிக்கை, “பகுதி அளவிலான ஸ்திரமற்றதன்மை கூட முன்னெப்போதும் இல்லாத அளவிலான அகதிகள் நகர்வை உருவாக்கக்கூடும்” என்று குறிப்பிட்டுள்ளது. எதிர்பார்க்கக்கூடிய எதிர்வினையைத் தெளிவுபடுத்தும் விதமாக, டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் மற்றும் இத்தாலியின் மெலோனி ஆகியோர் ஒரு கூட்டு கடிதத்தில், “கடந்த காலத்தைப் போல நாம் மூழ்கிவிட முடியாது. இதன் பொருள் எமது எல்லைகளை மேலும் பலப்படுத்துவதாகும்,” என்று வலியுறுத்தினர்.

குடியேறியவர்கள் மற்றும் புகலிடம் தேடுவோர் மீதான ஐரோப்பாவின் இந்தத் தாக்குதல், ஒரு உலகளாவிய செயல்முறையின் மிக மோசமான வெளிப்பாடுகளில் ஒன்றாகும். வறுமை, வேலையின்மை மற்றும் அத்தியாவசிய சமூக சேவைகளுக்கான நிதிக்குறைப்பு ஆகியவற்றால் ஏற்படும் சமூகக் கோபத்தை, உலகைச் சுரண்டும் பெரும் கோடீஸ்வர தன்னலக் குழுக்களிடமிருந்து திசைதிருப்ப, வறுமையிலுள்ள புலம்பெயர்ந்தோர் எல்லா இடங்களிலும் மூடப்பட்ட எல்லைகளையும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரக்கத்தனமான சித்தரிப்புகளையும் எதிர்கொள்கின்றனர்.

பிப்ரவரி 26 அன்று, சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு “2025 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்தோர் வழித்தடங்களில் குறைந்தது 7,667 பேர் உயிரிழந்தனர் அல்லது காணாமல் போயுள்ளனர்” என்று குறிப்பிட்டது. இது 2024 இல் பதிவான சுமார் 9,200 இறப்புகளைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. இதன் பிறகு ஏற்பட்ட குறைவு என்பது முக்கியமாக புலம்பெயர்ந்தோரைக் கண்காணித்து பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் காரணமாகவே ஏற்பட்டது.

ஆசியா மற்றும் கிழக்கு வழித்தடத்தில் — ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதியிலிருந்து ஏமன் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையேயான பாதையில் — “3,000-க்கும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன... இது இந்த வழித்தடத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மிக மோசமான உயிரிழப்புகளைக் கொண்ட ஆண்டாக 2025-ஐ மாற்றியுள்ளது”. இதில் 1,540 ஆப்கானியர்களும் அடங்குவர்.

தஞ்சம் கோருவோர் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான இந்தக் கொடூரத்தை தொடர்வதுக்கு தொழிலாளர்களும் இளைஞர்களும் அனுமதிக்கக் கூடாது. இது, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலையை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட —பாசிச மற்றும் தீவிர வலதுசாரி சக்திகளால் வழிநடத்தப்படும்— ஒரு வலதுசாரித் தாக்குதலின் முனைப்பும், மனிதகுலத்தையே அழிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போர்களின் கசப்பான விளைவுமாகும்.

‘’ஐரோப்பியக் கோட்டை’’ தகர்க்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஐரோப்பாவின் ஐக்கிய சோசலிச அரசுகள் உருவாக்கப்பட வேண்டும். குடியேறியவர்கள், புலம்பெயர்ந்தோர், மற்றும் புகலிடம் தேடுவோரின் பாதுகாப்பு இந்தப் போராட்டத்தின் முக்கிய முழக்கமாக இருக்க வேண்டும். போர்கள், பொருளாதாரச் சுரண்டல், ஒடுக்குமுறை மற்றும் ஜனநாயக உரிமைகளின் அழிவு ஆகியவற்றிற்கு மூலக் காரணமாக விளங்கும், அத்தியாவசிய உற்பத்திச் சாதனங்களின் தனியார் உடைமையின் அடிப்படையில் உலகப் பொருளாதாரம் பகைமை கொண்ட தேசிய அரசுகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதை முடிவுக்குக் கொண்டுவர, சர்வதேசத் தொழிலாள வர்க்கம் நடத்தும் ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இது சாத்தியமாகும்.

Loading