கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் குழு “ட்ரம்பின் போர் அமெரிக்காவை பலவீனப்படுத்துகிறது” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு கடுமையான மூலோபாய நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் வெளிவந்துள்ள இந்த அறிக்கை ஒரு திட்டமிட்ட தலையீடாகும். ஈரானுக்கு எதிரான போரை எந்த அரசியல் நிபந்தனைகளின் கீழ் —உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும்— மீண்டும் தொடங்க வேண்டும், மறுசீரமைக்க வேண்டும் மற்றும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அடிப்படை நோக்கங்களுக்கு ஏற்ப ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை வரையறுப்பதே இதன் நோக்கமாகும்.
போரின் நோக்கங்களை அடைவதில் ஏற்படும் தோல்வி, உலகளாவிய அமெரிக்க அதிகாரத்திற்கு ஒரு மூலோபாயப் பேரழிவாக அமையும் என்ற கருதுகோளிலிருந்தே டைம்ஸ் தனது வாதத்தைத் தொடங்குகிறது.
ஈரான் தனது உண்மையான விருப்பத்தைத் தெரிவித்திருந்த போதிலும், தூதரகப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே பிப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட போர், அமெரிக்க அதிகாரத்திற்கு தொடர்ச்சியான மூலோபாயத் தோல்விகளை உருவாக்கியுள்ளது. அதன் முழுமையான விளைவுகள் இப்போதுதான் தெரியத் தொடங்கியுள்ளன. ஹார்முஸ் நீரிணை பெரும்பாலான வணிகப் போக்குவரத்திற்கு இன்னும் மூடப்பட்டே உள்ளது. பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தைகள் முறிந்துவிட்டதாகவும், அந்த நீரணை வழியாக நுழையும் அல்லது வெளியேறும் அனைத்துக் கப்பல்கள் மீதும் முற்றுகை விதிக்கப்படுவதாகவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ட்ரம்ப் அறிவித்தார். இதனால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100-டாலர்களைத் ஐத் தாண்டியுள்ளது.
நேட்டோ கூட்டணியின் கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் இந்தப் போரில் நேரடியாகப் பங்கேற்கவோ அல்லது நீரிணையை மீண்டும் திறக்க உதவவோ மறுத்துவிட்டன. முக்கியமான ஆயுதத் தளவாடங்களின் இருப்பு, அவற்றை மீட்டெடுக்க பல ஆண்டுகள் ஆகும் என்று பென்டகன் ஒப்புக்கொள்ளும் அளவிற்கு குறைந்துவிட்டது. அமெரிக்க இராணுவ வலிமையின் கீழ் ஈரான் வீழ்ந்துவிடுவதற்குப் பதிலாக, அமெரிக்க இராணுவ பட்ஜெட்டில் நூறில் ஒரு பங்கை மட்டுமே செலவிடும் ஒரு நாடு, ஒரே ஒரு புவியியல் முட்டுக்கட்டையை சமச்சீரற்ற முறையில் பயன்படுத்துவதன் மூலம் உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை முடக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள் 21 மணிநேரப் பேச்சுக்குப் பிறகு இப்போது தோல்வியடைந்துள்ளன.
இந்தச் சூழ்நிலையில், போரின் அடுத்த கட்டத்தின் வெற்றிக்கு அவசியமானதாக தான் கருதுவனவற்றை டைம்ஸ் கோடிட்டுக் காட்டுகிறது: அதாவது, அமெரிக்காவிற்குள் இந்தப் போருக்கு சட்டபூர்வத்தன்மையை வழங்குவதற்கு காங்கிரஸில் அங்கீகாரம் பெறுவது; சர்வதேச அளவில் ஒருமித்த கருத்து நிலவுவது போன்ற தோற்றத்தை மீண்டும் உருவாக்குவதற்கான கூட்டணி நாடுகளின் ஆதரவு; ஹார்முஸ் நீரிணைக்கான மூலோபாயத் திட்டமிடல்; மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தெளிவான நோக்கங்கள் ஆகியவையே அவை.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதான ஈடுபாடு என்பது அதன் இயல்பிலேயே ஊறிப்போயுள்ள ஒரு நிறுவனத்தின் அதிகாரத்துடன்தான், இந்த நெருக்கடியான நேரத்தில் நியூ யோர்க் டைம்ஸ் பேசுகிறது. பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொன்ற ஒரு ஆக்கிரமிப்புப் போருக்கு அமெரிக்கப் பொதுமக்களைத் தயார் செய்வதற்காக, ஈராக்கின் “பேரழிவு ஆயுதங்கள்” குறித்த புனையப்பட்ட உளவுத் தகவல்களை இதுதான் வழங்கியது. லிபியாவை நேட்டோ அழித்ததற்கும், சிரியாவில் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கும் இது ஆதரவளித்தது. ஏழு நாடுகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களைக் கொன்ற ட்ரோன் படுகொலைத் திட்டத்தை முதன்மையாக நியாயப்படுத்திய ஊடகமாக இது செயல்பட்டது. அந்த மரணங்கள் எதற்கும் இது ஒருபோதும் குற்றவியல் பொறுப்புக்கூறலைக் கோரவில்லை. அமெரிக்கப் போர்களை அது விமர்சித்த போதெல்லாம், இப்போது பயன்படுத்துவதைப்போலவே —அதாவது திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலில் ஏற்பட்ட தோல்விகள் என்ற சொற்களிலேயே— குறிப்பிட்டது. தனது நிறுவன வரலாற்றில் ஒருபோதும், அமெரிக்க ஆக்கிரமிப்புப் போரை விசாரணை அல்லது இழப்பீடு தேவைப்படும் ஒரு குற்றமாக இது வகைப்படுத்தியது இல்லை.
டைம்ஸ் இதழ் எந்த ஜனநாயகக் கட்சியின் மூலோபாய முன்னோக்கை வெளிப்படுத்துகிறதோ, அந்த ஜனநாயகக் கட்சிதான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிறுவனமயப்பட்ட அதிநவீன மற்றும் தொலைநோக்கு வடிவிலான வரலாற்று ரீதியான கட்சியாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அமெரிக்க மேலாதிக்கத்தின் கட்டமைப்பு —ஐக்கிய நாடுகள் சபை, பிரெட்டன் வூட்ஸ் நிதி அமைப்பு, இராணுவக் கூட்டணிகளின் வலைப்பின்னல், கூட்டுப் பாதுகாப்பு கோட்பாடு— ஆகியவை அனைத்தும் ஜனநாயகக் கட்சியின் ஆதரவிலேயே உருவாக்கப்பட்டன.
ஜனநாயகக் கட்சி நிர்வாகங்களே பனிப்போரைத் தொடங்கின, கொரியாவைப் பிரித்தன, 3 மில்லியன் மக்களைக் கொன்ற ஒரு பேரழிவாக வியட்நாம் போரைத் தீவிரப்படுத்தின, அரை மில்லியன் குழந்தைகளைக் கொன்ற ஈராக் மீதான பொருளாதாரத் தடைகளை விதித்தன, மேலும் மூன்று தசாப்தங்களாக ஆட்சி மாற்றப் போர்களுக்கான கருத்தியல் போர்வையாக “மனிதாபிமான தலையீடு” என்ற கோட்பாட்டை உருவாக்கின.
ட்ரம்ப், ஈரானிய நாகரிகத்தையே அழித்து அவர்களை “அவர்களுக்குச் சொந்தமான கற்காலத்திற்கே கொண்டு செல்வோம்” என்று இனப்படுகொலை நோக்கம் கொண்ட ஒரு பிரகடனமாகவே விவரிக்கக்கூடிய மொழியில் அச்சுறுத்தினார். அவரது யுத்த அமைச்சர் பீட் ஹெக்செத், “யாருக்கும் சலுகையும் இல்லை, கருணையும் இல்லை” என்று பகிரங்கமாக அச்சுறுத்தினார் —இது ஜெனிவா உடன்படிக்கையின் கீழ் போர்க்குற்றங்களைச் செய்வதற்கான நோக்கத்தின் நேரடி அறிக்கையாகும். ஏனெனில் போரிடுபவர்களுக்கு அடைக்கலம் அல்லது கருணை காட்ட மறுப்பதை ஜெனிவா உடன்படிக்கை வெளிப்படையாகத் தடை செய்கிறது.
நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் கொள்கைகளை அடிப்படை ரீதியாக மீறும் வகையில், தீவிரமான தூதரகப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே இந்தப் போர் தொடங்கப்பட்டது. அமைதிப் பேச்சுவார்த்தையின் போது ஒரு நாட்டின் தலைவரைப் படுகொலை செய்வது ஐ.நா. சாசனத்தின் பிரிவு 2(4)-ஐ மீறுவதாகும். மேலும் இது ஒரு நாட்டின் தலைவருக்குரிய தனிப்பட்ட மீறமுடியாத உரிமை மற்றும் வெளிநாட்டுத் தலையீட்டிலிருந்து அவருக்குள்ள விலக்குரிமை ஆகியவற்றுக்கும் முரணானதாகும்.
இந்த வரலாற்றுப் பதிவுகளுக்கு எதிராக, டைம்ஸ் பத்திரிகை “கவனக்குறைவு” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. ட்ரம்பின் போர் நடவடிக்கையானது, “கவனமான இராணுவத் திட்டமிடலில்” ஏற்பட்ட தோல்வி என்றும், “உள்ளுணர்வு மற்றும் விருப்பு வெறுப்புகளை” மட்டுமே நம்பியிருந்தது என்றும் அது தனது வாசகர்களுக்குக் கூறுகிறது. ஈரானிய நாகரிகத்தையே நிர்மூலமாக்குவேன் என்ற ட்ரம்பினது அச்சுறுத்தல்கள், வெறும் “பொறுப்பற்ற செயல்” என்று வகைப்படுத்தப்படுகின்றன.
ட்ரம்பின் நடத்தையை ஒரு குற்றவியல் பொறுப்பாகக் கருதாமல் ஒரு நிர்வாகத் தோல்வியாகச் சித்தரிப்பதன் மூலம், குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் இருகட்சி கூட்டணியைக் கட்டியெழுப்புவதற்கான சாத்தியத்தை டைம்ஸ் தக்கவைத்துக் கொள்கிறது —ட்ரம்பின் நடத்தை குற்றச்செயலாக வகைப்படுத்தப்பட்டு, அவர் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும் என்று கூறினால், அத்தகைய கூட்டணியை உருவாக்க முடியாது. எனவேதான், அவரது செயல்கள் ஒரு பொதுவான மூலோபாயக் கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்படுகின்றன.
“ஈரானிய ஆட்சிக்கு எவ்வித அனுதாபமும் தேவையில்லை” என்ற டைம்ஸ் பத்திரிகையின் பிரகடனம், இந்தப் போர் மனித குலத்திற்கு இழைத்துள்ள பாதிப்புகளின் முழுமையான பின்னணியில் ஆராயப்பட வேண்டும். தீவிரமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த ஒரு நாட்டில், அலி கொமேனி தங்கியிருந்த இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அவரோடு சேர்த்து அவரது குடும்ப உறுப்பினர்கள், மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கொல்லப்பட்டதோடு இந்தப் போர் தொடங்கியது. அதே நேரத்தில், இந்தத் தாக்குதல்கள் பொதுமக்கள் மீது பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தின. நம்பகமான தகவல்களின்படி, இதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர். இலக்கு வைக்கப்பட்ட அதிகாரிகளின் மனைவிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் —அதாவது அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்களுடன் குடும்ப உறவு கொண்டிருந்ததைத் தவிர “ஆட்சி”யுடன் வேறு எந்தத் தொடர்பும் இல்லாத மக்கள்— அதே தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.
இந்த யதார்த்தத்தை ஆய்வு செய்யும் டைம்ஸ் ஆசிரியர் குழு, ஈரானிய ஆட்சி எந்த அனுதாபத்திற்கும் தகுதியற்றது என்று தனது வாசகர்களுக்குத் தெரிவிக்கிறது. ஒருவேளை ஈரான் வாஷிங்டன் மீது இதேபோன்ற ஒரு முன்கூட்டிய தாக்குதலைத் தொடுத்திருந்தால் —தீவிர பேச்சுவார்த்தைகளின் போது ஜனாதிபதி, அவரது அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களைக் கொன்று, 100-க்கும் மேற்பட்ட அமெரிக்கக் குழந்தைகளைக் கொன்றது— டைம்ஸ் பத்திரிகையும் ஒட்டுமொத்த அரசியல் அமைப்பும், செப்டம்பர் 11 தாக்குதலுக்கான எதிர்வினையைக்கூட நிதானமானதாகத் தோன்றச் செய்யும் அளவுக்குக் கடும் சீற்றத்துடன் பதிலளித்திருக்கும். இதற்கான பொறுப்புக்கூறல் கோரிக்கையில் எவ்வித சமரசமும் இருந்திருக்காது.
இறந்த ஈரானியர்களுக்கு இதில் எதுவுமே கிடைக்கவில்லை. அவர்களில் கொல்லப்பட்ட குழந்தைகள் கண்டுகொள்ளப்படவில்லை. அதிகாரிகளின் விதவை மனைவிகள் எவ்வித தார்மீகக் கருணைக்கும் உரியவர்களாகக் கருதப்படவில்லை. இந்த “அனுதாபம் இல்லை” என்ற சூத்திரமானது, இந்தத் தலையங்கத்தின் வாசகர்கள் போரை மதிப்பீடு செய்ய அழைக்கப்படும் தார்மீக உலகத்திலிருந்து ஈரானியர்களை முழுமையாகத் துடைத்தெறிகிறது. அந்த உலகில், ஈரானிய உயிர்கள் என்பவை அமெரிக்க உயிர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு தாழ்ந்த நிலைப்பாட்டைக் கொண்டவையாகக் கருதப்படுகின்றன. அந்த உயிர்களைப் பறிப்பவர்களுக்கு எவ்வித அங்கீகாரமோ அல்லது பொறுப்புக்கூறலோ அவசியமில்லை என்ற நிலையை இது உருவாக்குகிறது. இது, இந்த ஆசிரியர் குழுவின் அரசியலில் தற்செயலாக நடந்த ஒன்றல்ல. இதுவே அதன் ஒழுக்கயெறியின் அடித்தளமாகும். முதல் கட்டத்தில் காணப்பட்ட அதே ஈரானிய மனித உயிர்கள் மீதான அலட்சியத்துடன் இரண்டாம் கட்டத்தையும் ஒழுங்கமைத்து நடத்துவதை உறுதி செய்வதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆசிரியர் குழுவின் அரசியல் நோக்கத்தை மிகவும் துல்லியமாக வெளிப்படுத்தும் வாக்கியம் இதுதான்: “திரு. ட்ரம்ப்பை விமர்சிப்பவர்கள் உட்பட எந்தவொரு அமெரிக்கரும், இந்த நாடு தோல்வியடைய வேண்டும் என்று விரும்புவது ஒரு தவறாகும்.”
“இந்த நாடு” என்பது, இந்தப் போரின் அனைத்து சுமைகளையும் தாங்கும் அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தைக் குறிக்கவில்லை. மாறாக, இது அமெரிக்க ஏகாதிபத்திய அரசையும், அந்த அரசு எதற்காக உலகளவில் மேலாதிக்கம் செலுத்துகிறதோ அந்த முதலாளித்துவ அதிகார அமைப்பையுமே குறிக்கிறது. “தோல்வியடைவது” என்பது, தனது இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான அடிப்படை உரிமையைக் கொண்ட ஒரு நாட்டிடம், அமெரிக்கா ஒரு மூலோபாயத் தோல்வியைத் தழுவுவதைக் குறிக்கிறது.
இந்த வாக்கியம் குறிப்பாக “திரு. ட்ரம்ப்பின் விமர்சகர்களை” நோக்கியே விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் அரசியல் உள்ளடக்கம் மிகத் தெளிவானது: அதாவது, ஈரானின் எதிர்ப்பதற்கான உரிமையை அங்கீகரித்து, போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், அப்பகுதியிலிருந்து அனைத்து அமெரிக்க இராணுவப் படைகளையும் திரும்பப் பெறவும் கோரி, தனது பகுப்பாய்வை அமெரிக்க தேசிய நலன்களின் கட்டமைப்பிற்குள் அடக்க மறுத்து, அமெரிக்காவின் குற்றவியல் இராணுவ நடவடிக்கையின் தோல்வியை வரவேற்பது என்பது, அனுமதிக்கப்பட்ட அரசியல் உரையாடல்களின் எல்லைகளுக்கு வெளியே உள்ளது.
அதற்குப் பதிலாக, அனுமதிக்கப்பட்ட எதிர்ப்பானது ட்ரம்பின் வழிமுறைகளை விமர்சிப்பதோடு, டைம்ஸ் கட்டமைத்து வரும் இருகட்சி போர் ஆதரவுக் கூட்டணிக்குத் துணை நிற்பதோடு மட்டுமே தன்னைச் சுருக்கிக்கொள்ள வேண்டும். இந்தப் போரை ஒரு குற்றம் என்று பெயரிடுபவர்களையும், போருக்கு எதிரான போராட்டத்தை அதை உருவாக்கிய முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்தோடு இணைப்பவர்களையும் நோக்கியே இந்த எச்சரிக்கை இலக்கு வைக்கிறது.
ட்ரம்ப் “காங்கிரஸை இதில் ஈடுபடுத்தி, அமெரிக்காவின் நட்பு நாடுகளிடம் உதவி கோர வேண்டும்” என்ற அழைப்பு, ஜனநாயகக் கட்சித் தலைமை என்ன பங்கை வகிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதற்கான ஒரு சமிக்கையாகும். காங்கிரஸின் அங்கீகாரம் என்பது, ஜனநாயகக் கட்சி அதிகாரப்பூர்வமாக இந்தப் போரின் இணை உரிமையாளராக மாறுவதைக் குறிக்கிறது. இதன் மூலம், ட்ரம்பின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையால் மறுக்கப்பட்ட உள்நாட்டு அரசியல் சட்டபூர்வத் தன்மையை இந்தப் போருக்கு வழங்குவதோடு, தற்போது அவருக்கு அரசியல் சுமையாக இருக்கும் ஒரு விஷயத்தை இரு கட்சிகளாலும் ஆதரிக்கப்படும் ஒரு பொதுவான தேசிய உறுதிப்பாடாக மாற்றுகிறது. நட்பு நாடுகளின் ஆதரவு என்பது போரின் இரண்டாம் கட்டத்தின் குறிப்பிட்ட நோக்கத்திற்காக நேட்டோவின் உறவை மீண்டும் கட்டமைப்பதைக் குறிக்கிறது — அதாவது, தேவைப்பட்டால் பலவந்தமாக ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்து, ஒரு ஒருங்கிணைந்த மேற்கத்திய போர் முன்னரங்கை உருவாக்குவதாகும்.
டைம்ஸின் ஆசிரியர் குழு, அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளையும் (DSA) மற்றும் ஜனநாயகக் கட்சியை நோக்கிச் சாய்ந்துள்ள ஒவ்வொரு போலி-இடது அமைப்புகளையும் அவற்றின் போக்கையும் அம்பலப்படுத்துகிறது.
உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எழும் உண்மையான சோசலிச மற்றும் தொழிலாள வர்க்க எதிர்ப்பைத் திட்டமிட்டு முடக்குவதே, அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செனட்டர் பெர்னி சாண்டர்ஸ், பிரதிநிதிகள் சபை உறுப்பினர் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் நியூ யோர்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி போன்ற முன்னணி அரசியல் பிரமுகர்களின் முக்கிய அரசியல் பணியாகும்.
போர் மற்றும் சமத்துவமின்மையால் தீவிரமடைந்துள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஆற்றலை மீண்டும் ஜனநாயகக் கட்சியின் கட்டமைப்பிற்குள்ளேயே திருப்புவதன் மூலம், அந்தத் தீவிரமயமாக்கல் ஆளும் வர்க்கத்திடமிருந்து ஒருபோதும் ஒரு நிறுவன ரீதியான அல்லது அரசியல் ரீதியான சுயாதீனத்தை எட்டிவிடாதபடி பாதுகாக்கும் அத்தியாவசிய சேவையை இவர்கள் செய்கிறார்கள். இந்த ஆசிரியர் குழுவால் வரையறுக்கப்பட்டுள்ள எல்லைகள், இடதுகளின் வட்டாரங்களுக்குள்ளேயே அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் ஒரு கருவியாக இவர்கள் செயல்படுகிறார்கள். ட்ரம்பின் பாணிக்கு எதிரான எதிர்ப்பு என்பது, அவரது நிர்வாகம் சேவை செய்யும் ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ நலன்களுக்கு எதிரான எதிர்ப்பாக ஒருபோதும் மாறிவிடாது என்பதற்கு இவர்களே உத்தரவாதமளிப்பவர்கள் ஆவர்.
ஈரானுக்கு எதிராக தற்போது பயன்படுத்தப்படும் ஆயுதங்களுக்கு நிதியளித்த ஒவ்வொரு இராணுவ நிதி ஒதுக்கீட்டு மசோதாவிற்கும் சாண்டர்ஸ் ஆதரவாக வாக்களித்தார். அவரது உள்நாட்டுத் திட்டங்கள் எதுவும் அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தின் நிதிக் கட்டமைப்பிற்கு ஒருபோதும் கடுமையான சவாலாக அமைந்ததில்லை. ஒகாசியோ-கோர்டெஸின் அரசியல் பயணம் என்ன காட்டுகிறது என்றால், தீவிரமான வாய்வீச்சுக்களுக்கும் கட்சியின் ஏகாதிபத்திய செயல்பாடுகளுக்கும் இடையில் தீர்மானகரமான மோதல் ஏற்படும் போதெல்லாம், வாய்வீச்சுக்கள் அடிபணிந்து போவதையே நிரூபித்துள்ளது. நியூ யோர்க்கின் DSA மேயரான மம்தானி, ஈரான் மீதான ஆக்கிரமிப்பிற்கு மூன்று நாட்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் ட்ரம்பை இரண்டு முறை சந்தித்து, பாசிச ஜனாதிபதியுடன் “கூட்டுறவை” முன்னெடுத்துள்ளார்.
அமெரிக்காவின் தோல்வியை விரும்ப வேண்டாம் என்று “திரு. ட்ரம்பின் விமர்சகர்களுக்கு” டைம்ஸ் எச்சரிக்கை விடுக்கும்போது, முடிவெடுக்கும் ஒவ்வொரு முந்தைய தருணத்திலும் இந்த நபர்கள் ஜனநாயகக் கட்சியின் ஏகாதிபத்திய உறுதிப்பாடுகளுக்குத் தங்களை எவ்வாறு பழக்கப்படுத்திக் கொண்டனர் என்பதைப் பார்த்த ஒரு நிறுவனத்தின் நம்பிக்கையுடன் அதைச் செய்கிறது. DSA-வின் அரசியல் என்பது உள்விவாதத்தின் மூலம் சரிசெய்யக்கூடிய ஒரு தந்திரோபாயத் தவறு அல்ல. இது ஏகாதிபத்தியத்தின் அரசியல் கூட்டாளியாக இந்த அமைப்பின் அத்தியாவசியப் பங்கைப் பிரதிபலிக்கிறது.
இந்த ஆசிரியர் குழு, அதன் முழுமையான முக்கியத்துவத்தில் எதைப் பிரதிபலிக்கிறது என்றால், இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலத்தில் இதற்கு முன் கண்டிராத ஒரு மூலோபாய நெருக்கடிக்கு, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அரசியல் ரீதியாக மிகவும் நுட்பமான பிரிவினர் அளிக்கும் பதிலையே ஆகும். கடந்த ஆறு வார கால இடைவெளியில், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு முக்கிய மற்றும் எதிர்பாராத இராணுவ மற்றும் மூலோபாயப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதன் இராணுவ இலக்குகளை அடைவதில் ஏற்பட்ட தோல்வியை விட முக்கியமானது, அதன் அரசியல் மற்றும் ஒழுக்கநெறி அந்தஸ்துக்கு விழுந்த பலத்த அடியாகும். அமெரிக்கா இன்று உலகம் முழுவதும் உள்ள பில்லியன் கணக்கான மக்களால் ஒரு குற்றவியல் சக்தியாகப் பார்க்கப்படுகிறது. ஈரானை நிர்மூலமாக்குவோம் என்று அதன் ஜனாதிபதி விடுத்த அச்சுறுத்தல் ஒருபோதும் மறக்கப்பட மாட்டாது.
ஆனால் அமெரிக்காவின் கொள்கைகள் ஒழுக்கநெறி காரணங்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஈரான் வெற்றி பெற்றதாகக் கருதப்படக் கூடாது என்பதையும், ஹார்முஸ் நீரிணை ஈரானின் ஆதிக்கத்தில் தொடர்ந்து இருக்கக் கூடாது என்பதையும், அமெரிக்காவின் மூலோபாயத் தோல்வியானது மற்ற நாடுகள் வாஷிங்டனுடனான தங்களது உறவை மதிப்பிடுவதற்கான ஒரு நிரந்தர அளவுகோலாக மாறிவிடக் கூடாது என்பதையும் டைம்ஸ் நன்கு புரிந்துகொண்டுள்ளது. அதிகத் திறமையான மற்றும் நிறுவன ரீதியாக வலுவான வழிகாட்டுதலின் கீழ், இரண்டாம் கட்டப்போரை தயாரிப்பதற்கான ஒரு கருவியாகவே இந்த ஆசிரியர் குழு சேவை செய்கிறது.
முதலாளித்துவ வர்க்கம் போரின் அடுத்த கட்டத்திற்குத் தயாராகி வரும் வேளையில், தொழிலாள வர்க்கமும் தனது எதிர்வினையை நனவுப்பூர்வமாகத் தயார் செய்ய வேண்டும். ஆளும் வர்க்கம் போரை மீண்டும் தீவிரப்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. தொழிலாள வர்க்கமும் அதற்கு எதிராகப் புரட்சிகரமான எதிர்ப்பை உருவாக்க ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
போருக்கு எதிரான போராட்டத்திற்கு ஆளும் வர்க்கத்தின் அனைத்துக் கட்சிகள் மற்றும் நிறுவனங்களிலிருந்து தொழிலாள வர்க்கத்தின் முழுமையான அரசியல் சுயாதீனம் அவசியமாகும். அதாவது, குடியரசுக் கட்சியினரைப் போலவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகக் கட்சியிடமிருந்து ஒரு தீர்க்கமான பிளவை ஏற்படுத்த வேண்டும். போரின் ஊற்றாக இருக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களைச் சுயாதீனமாகத் அணிதிரட்டுவதன் மூலமே போருக்கு எதிரான இயக்கத்தை கட்டயெழுப்ப முடியும். இந்த சுயாதீனம் —நிறுவன ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும்— என்பது ஒரு அருவமான கொள்கை அல்ல. மாறாக இது, தற்போதைய நெருக்கடியால் முன்வைக்கப்பட்டுள்ள, வரலாற்று ரீதியாக, அவசரமான ஒரு உறுதியான அரசியல் பணியாகும்.
ஏகாதிபத்தியத்தை எதிர்க்கக் கூடிய ஓர் அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவது என்பது இன்று மிகவும் அவசியமாக உள்ளது — அந்த இயக்கம், அதன் நிறுவனங்களின் கட்டமைப்பிற்குள்ளிருந்தோ, உண்மையான எதிர்ப்பைத் தடுத்து ஒடுக்குவதையே பணியாகக் கொண்டவர்களின் தலைமையின் கீழோ இருக்கக் கூடாது. மாறாக, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான வரலாற்று நலன்கள் மற்றும் தற்போதைய நெருக்கடியில் அந்த நலன்களுக்குப் பொருந்தக்கூடிய ஒரே தீர்வான சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமைய வேண்டும்.
இந்த முன்னோக்கே சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளுக்கு வழிகாட்டுகிறது. இந்தக் முன்னோக்குடன் உடன்படும் அனைத்து தொழிலாளர்களையும் இளைஞர்களையும் சோசலிச சமத்துவக் கட்சியுடன் (SEP) தொடர்பு கொள்ளவும் அதில் இணையவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
