இலங்கை: மே ஃபீல்ட் தோட்டத் தொழிலாளர்கள் அதிக வேலைச் சுமைக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்கின்றனர்

கொட்டகல பெருந்தோட்ட நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் மே ஃபீல்ட் தோட்டத்தின் நான்கு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 400 தொழிலாளர்கள் ஏப்ரல் 21 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தோட்டத்தில் உள்ள அனைத்து நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். கொழும்பில் இருந்து 180 கி.மீ. தொலைவில் உள்ள கொட்டகல நகருக்கு அருகில் இந்தத் தோட்டம் அமைந்துள்ளது.

வேலைச்சுமை மற்றும் துன்பகரமான வேலை நிலமைகளுக்கு எதிராகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 1,750 ரூபாய் தினசரி ஊதியம் வேண்டும், தொழிலாளர்கள் பறிக்கும் தேயிலை கொழுந்தின் அளவிலிருந்து தினமும் 9 கிலோ குறைப்பதை நிறுத்த வேண்டும், 20 கிலோகிராம் இலக்கிற்கு மேலதிகமாக பறிக்கப்படும் கொழுந்துக்கு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர்கள் கோருகின்றனர்.

தோட்ட முகாமையாளரின் தூண்டுதலை அடுத்து, நான்கு தொழிற்சங்கங்களின் தோட்டத் தலைவர்கள் உட்பட பதினைந்து தொழிலாளர்கள் ஏப்ரல் 22 அன்று காலை பத்தனை திம்புள்ள பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அன்று மாலை பிணையிலேயே விடுவிக்கப்பட்டனர்.

மே ஃபீல்ட் தோட்ட அலுவலகத்தில் பொலிசாருடன் வாதாடும் தொழிலாளர்கள் [Photo: Facebook/Malayaga Minnal]

தோட்டத்தில் உள்ள மூன்று தொழிற்சங்கங்களான, ஜே.வி.பி. சார்பு ஆதரவு அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் (ACPWU), மலையகத் தொழிலாளர் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) ஆகியவை இந்த வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்தன.

ஜனாதிபதி அனுரகுமார திசநாயக, தோட்டத் தொழிலாளர்களின் தினசரி ஊதியத்தை 1,350 ரூபாயிலிருந்து 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1,750 ரூபாயாக (5.60 அமெரிக்க டாலர்) உயர்த்துவதாக உறுதியளித்தார். எவ்வாறெனினும், ஜே.வி.பி.யின் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமானது கடந்த தேர்தலுக்கு முன்னர் 2,000 ரூபாய் நாள் சம்பளத்துக்காகப் பிரச்சாரம் செய்திருந்த போதிலும், தேர்தலின் பின்னர் அக்கோரிக்கையைக் கைவிட்டுவிட்டது.

இருப்பினும், தொழிலாளர்களின் அதிருப்தி அதிகரித்து வந்த நிலையில், 1,750 ரூபா அற்ப ஊதிய உயர்வு அமுல்படுத்தப்பட்ட போதிலும், அதுவும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு வேலைச்சுமை அதிகரிப்புக்கு வழிவகுத்தது.

ஊதிய உயர்வை தோட்டக் கம்பனிகள் ஏற்றுக்கொண்ட போதிலும், அந்தத் தொகையை வழங்காமல் இருப்பதற்குப் பல்வேறு வழிகளைக் கையாளுகின்றன. பொதுவாக பெரும்பாலான தோட்ட நிர்வாகங்கள் கொழுந்தை நிறுக்கும் போது, கொழுந்து நிரப்பும் உறையின் பாரத்துக்காக என்று கூறி ஒரு நாளுக்கு மூன்று கிலோவை வெட்டிக் குறைக்கின்றன. மேஃபீல்ட் தோட்டத்தில், இந்த அளவு நாளொன்றுக்கு ஒன்பது கிலோவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் பரவலான வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றால் அவதிப்படுவதோடு, வீட்டு வசதி, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வி உட்பட அடிப்படை சமூக வசதிகளும் இன்றி தவிக்கின்றனர்.

எவ்வாறெனினும், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் குற்றவியல் போரினைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாட்டிலும் போல் இலங்கை அரசாங்கமும் எரிபொருள் விலையை உயர்த்தி வருகின்றமை, வாழ்க்கைச் செலவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே மோசமான வாழ்க்கை நிலைமைகளைக் எதிர்கொள்ளும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமையை இது மேலும் மோசமாக்கியுள்ளது. மேஃபீல்ட் தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், தோட்டங்களில் வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் நாளுக்கு நாள் தாங்க முடியாத அளவுக்கு மோசமடைந்து வருவதால் தலைதூக்கி வரும் அமைதியின்மையைச் சுட்டிக்காட்டுகிறது.

உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசிய ஒரு தொழிலாளி கூறியதாவது: “எங்கள் தோட்டத்தில் நாங்கள் சகிக்க முடியாத வேலை நிலைமைகளை எதிர்கொள்கிறோம். ஒரு நாளைக்கு 1,750 ரூபாய் முழு நாள் சம்பளத்தைப் பெறுவதற்கு, 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்த இலக்கை அடைவது மிகவும் கடினமாக உள்ளது. நாங்கள் 15 கிலோவுக்கும் குறைவாக கொழுந்து பறித்தால், எங்களுக்கு அரை நாள் ஊதியம் மட்டுமே கிடைப்பதோடு நிர்வாகம் நாளொன்றுக்கு 9 கிலோவைக் குறைக்கும் நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளது - அதாவது, பறிக்கப்பட்ட தேயிலையை மூன்று முறை எடைபோடும்போது, ​​ஒவ்வொரு முறையும் மூன்று கிலோ குறைக்கப்படுகிறது.

“முகாமையாளர் ஒரு ‘சர்வாதிகாரியைப்’ போல் செயல்படுகிறார். அவர் தொழிற்சங்கங்களையோ அல்லது தொழிலாளர் சட்டங்களையோ கவனிப்பதில்லை. தொழிற் திணைக்களம் தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்காமல், நிர்வாகத்திற்கே ஆதரவளிக்கிறது.”

ஓய்வுபெற்ற தொழிலாளி எஸ். ஜெயமீனா கூறுகையில், “தொழிலாளர்களுக்கு பொருத்தமான தலைமை இல்லை. முன்பு தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் சில உரிமைகளுக்காகப் போராடின, ஆனால் இப்போது அவர்கள் தொழிலாளர் உரிமைகளுக்காக இல்லை. தொழிற் திணைக்களம் கூட நிர்வாகத்தை ஆதரிக்கின்றது, அது, தொழிலாளர்களுக்கு எதிராகவே உள்ளது,” என்றார்.

தோட்டத் தொழிலாளர்கள் போதுமான ஊதியம் மற்றும் அடிப்படை சமூக உரிமைகளுக்காகப் போராட தொழிற்சங்க அதிகாரத்துவத்தை நம்பியிருக்க முடியாது; அவர்கள் தங்கள் காரியங்களைத் தாங்களே கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மே ஃபீல்டில் உள்ள தங்கள் சக வர்க்கத் தொழிலாளர்களுக்கு எதிராக, தோட்ட நிர்வாகத்தால் தூண்டிவிடப்படும் பொலிஸ் துன்புறுத்தல்களை அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் எதிர்ப்பதோடு வேலைச்சுமை அதிகரிப்புக்கு எதிராகவும் போதுமான ஊதியத்திற்காகவும் நடத்தும் போராட்டத்திற்கும் ஆதரவளிக்க வேண்டும்.

மே ஃபீல்டைப் போலவே, ஏனைய அனைத்து தோட்டங்களிலும், அதிகப்படியான வேலைச் சுமையுடன், வேலை நிலமைகள் மீதான கடுமையான தாக்குதல்கள் போன்ற பிரச்சனைகளை தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்படுத்திய ஊதிய உயர்வு ஒப்பந்தம், ஊழியர்களின் நலன்களைப் பூர்த்தி செய்யாமல், தோட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே உதவியுள்ளது.

தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட போதுமான மாத ஊதியமும், மருத்துவ விடுமுறை உட்பட, ஊதியத்துடன் கூடிய விடுமுறையும் வழங்கப்பட வேண்டும். அடிப்படை வசதிகளுடன் கூடிய வசிக்கத் தகுந்த வீடுகள் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். கம்பனிகள் பெரும் இலாபத்தை ஈட்டுகின்ற பெருந்தோட்டத் தொழிற்துறையில் செல்வத்தை உருவாக்குபவர்கள் தோட்டத் தொழிலாளர்களே.

உழைக்கும் மக்களின் உண்மையான நலன்களைக் கவனிக்க, அவர்களின் நலன்களுக்குச் சேவை செய்யும் அமைப்புகள் அவர்களுக்குத் தேவை. அத்தகைய அமைப்பு தொழிற்சங்கங்கள் அல்ல. அவை, அதிகார வர்க்கங்கள், கம்பனிகள் மற்றும் அரசின் நலன்களுக்குச் சேவை செய்யும் தொழில்துறை பொலிசாகச் செயல்படுகின்றன.

தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உண்மையான அமைப்புகள், அவர்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அவர்களின் சொந்த நடவடிக்கைக் குழுக்களே ஆகும். அதனால்தான், ஒவ்வொரு தோட்டத்திலும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் பிரிந்து, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை அமைப்பது அவசியமாகின்றது. இந்தக் குழுக்களுக்குள் தொழிற்சங்கத் தலைவர்கள் அனுமதிக்கப்படக் கூடாது.

பெருந்தோட்டங்கள் மற்றும் அதற்கு அப்பால் உள்ள அனைத்துத் தொழிலாளர்களையும் ஒன்றிணைக்கும் இத்தகைய குழுக்களால், சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடவும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தவும் முடியும்.

உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர்கள் மே ஃபீல்ட் தொழிலாளர்களைச் சந்தித்து இந்த வேலைத்திட்டத்தை விளக்கினர். ஜெயமீனா, “தொழிலாளர்களை ஒன்றிணைத்து நமது உரிமைகளுக்காகப் போராட, தொழிலாளர் நடவடிக்கைக் குழுவை அமைக்கும் உங்கள் வேலைத்திட்டம் நல்லது, அதை நான் ஆதரிக்கின்றேன்,” என்றார்.

“அமெரிக்கா-இஸ்ரேல் போருக்கு எதிரான உங்கள் பிரச்சாரத்திற்கு நானும் ஆதரவளிக்கிறேன். போர் தொடர்ந்தால், நாங்கள் பட்டினியால் வாடி இறக்க நேரிடலாம்” என அவர் மேலும் கூறினார்.

எமது நிருபர்கள் சந்தித்த பல தொழிலாளர்கள் இதே கருத்தை வெளிப்படுத்தினர்.

Loading