இலங்கை: கவரவில தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான பழிவாங்கலை எதிர்த்திடு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மஸ்கெலியா, சாமிமலையில் கவரவில தோட்டத்தின் நிர்வாகம், பொய்யான குற்றச்சாட்டின் பேரில் தமது சக தொழிலாளர்கள் எட்டுப்பேரை இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்துப் போராடிய தொழிலாளர்களுக்கு எதிராக பழிவாங்கலை முன்னெடுத்துள்ளது. இந்த தோட்டம் ஹொரண பெருந்தோட்டக் கம்பனியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பெப்ரவரி தொடக்கத்தில் கவரவில தோட்டத்தில் வேலை நீக்கங்களுக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போது

தனது கடமைகளை 'தடுத்தனர்' என்று தோட்ட முகாமையாளர் அளித்த புகாரின் பேரில், பெப்ரவரி 23 மற்றும் 24, மஸ்கலியா பொலிஸ் 11 தொழிலாளர்களை அழைத்தது. இருப்பினும், எவ்வாறு தடுத்தனர் என்பதை முகாமையாளர் விளக்கவில்லை.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த தொழிலாளர்கள், தாம் வழமை போல் சில வேலைப் பிரச்சினைகள் குறித்து முகாமையாளருடன் கலந்துரையாடுவதற்கே சென்றதாக கூறினர். 'சமீபத்திய போராட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்களை முகாமையாளர் பழிவாங்க முயற்சிக்கிறார்,' என்றும் அவர்கள் கூறினர்.

பெப்ரவரி 23 அன்று விசாரணை நடைபெறவிருந்தாலும், தொழிலாளர்கள் பொலிஸ் நிலையத்தில் காத்திருந்தபோது முகாமையாளர் அங்கு வரவில்லை. அடுத்த நாள் அவர் தாமதமாக வந்து, தனக்கு வேலை அதிகம் இருப்பதாகக் கூறிச் சென்றுவிட்டார். பொலிசார் தொழிலாளர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர்.

வெளியிலிருந்து வேலைக்கமர்த்தப்பட்ட தற்காலிக (கைகாசு) தொழிலாளர்களை தடுத்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் இந்தத் தொழிலாளர்கள் டிசம்பர் 24 அன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருந்தனர்.

இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் (NUW) தோட்டப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் எம். சிவகுமார் மற்றும் தலைவர் ரவீந்திரன், ஆளும் மக்கள் விடுதலை முன்னணி [ஜே.வி.பி.] சார்பு அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் (ACEWU) தோட்டத் தலைவர் எம். ரமேஷ்குமார், மற்றும் ஆர். ராஜேந்திரன், மரியசந்தனம், ஜே. கார்த்திக், வி. மாதேஸ்பரன் மற்றும் ஜே. பரமசிவம் ஆகியோரும் அடங்குவர். இவர்களுக்கு மேலாக, தோட்ட முகாமையாளர் தனது பொலிஸ் புகாரில் ஏ. எலிஸ்டன், எம். நரேஷ்குமார், வி. வினோதன் ஆகியோரையும் சேர்த்துள்ளார்.

இடைநீக்கங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கவரவில தோட்டம் A பிரிவைச் சேர்ந்த அறுபதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெப்ரவரி 5 அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் WSWS செய்தியாளர்களிடம் கூறுகையில், 'வழக்கமாக நிரந்தரத் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறிக்கும் இடங்களில் கைக்காசு தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதில்லை. ஆனால் டிசம்பர் 23 அன்று, நாங்கள் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பகுதியில் பல கைக்காசு தொழிலாளர்கள் வேலைக்கமர்த்தப்பட்டனர். ஒரு கிலோ கொழுந்துக்கு 60 ரூபா அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் மாலை 4:00 மணி வரை இடைவேளை இல்லாமல் வேலை செய்து, அதிக கொழுந்துகளைப் பறிக்கிறார்கள்.

'அதிக வேலைச் சுமையை சுமக்கும் கைக்காசு தொழிலாளர்களைக் காரணம் காட்டி, நிர்வாகம் எங்களை வேலையைத் தீவிரப்படுத்த அழுத்தம் கொடுத்தது. நாங்கள் கைக்காசு தொழிலாளர்களைத் தடுக்கவில்லை, ஆனால் எங்களைப் பாதிக்கும் வகையில் வேலை செய்ய வேண்டாம் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டோம்.'

இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு எதிராக ஜனவரி 7 அன்று ஒரு உள்ளக விசாரணை நடத்தப்பட்டதுடன் நிர்வாகம் அவர்களை மீண்டும் வேலையில் சேர்க்க மறுத்துவிட்டது. இந்த முடிவுக்கு எதிராகவே வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்பட்டது.

ஏனைய தொழிலாளர்களை அணிதிரட்ட மறுத்த தோட்டத்தின் மூன்று சங்கங்களான தொழிலாளர் தேசிய சங்கம், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.) ஆகியவற்றின் தலைவர்கள், வேலைநிறுத்தத்தை முறியடிக்க நிர்வாகத்துடனும் பொலிசாருடனும் கூட்டு சேர்ந்தனர்.

பெப்ரவரி 8 அன்று, ஹட்டன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) அலுவலகத்தில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத் தலைவர் ப. திகாம்பரம் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தோட்ட அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் வேலையில் அமர்த்த வாக்குறுதியளித்ததாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை மீண்டும் கடமையில் சேருமாறு அறிவுறுத்தியதாகவும் தொழிற்சங்கத் தலைவர்கள் கூறினர். இருப்பினும், நிர்வாகம் அடுத்த நாள் அவர்களை மீண்டும் வேலையில் அமர்த்த மறுத்ததால், தொழிலாளர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்துடன் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவினதும் உறுப்பினர்கள், தொழிலாளர்களின் போராட்டத்தில் தலையிட்டனர். உண்ணாவிரதம் என்பது தொழிலாளர் போராட்டத்தின் ஒரு வழிமுறை அல்ல என விளக்கிய அவர்கள், வேலைநிறுத்தத்தை விரிவுபடுத்தவும் மறியல் போராட்டத்தை ஏற்பாடு செய்யவும் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் தோட்டங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினர் மத்தியல் பிரச்சாரம் செய்யுமாறு வலியுறுத்தினர்.

தொழிற்சங்கத் தலைவர்கள், நிர்வாகம் மற்றும் பொலிசும் சோ.ச.க./நடவடிக்கை குழுவின் தலையீடு குறித்து விழிப்படைந்தனர்.

இந்த வேலைநிறுத்தமானது தோட்டத்தின் ஏனைய மூன்று பிரிவிலும் ஏனைய தோட்டங்களிலும் உள்ள தொழிலாளர்களை ஈர்க்கும் என்று பீதியடைந்த தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. கலைசெல்வி, தோட்ட நிர்வாகத்தைச் சந்தித்தார். கலந்துரையாடலுக்குப் பிறகு, இடைநீக்கம் செய்யப்பட்ட அனைத்துத் தொழிலாளர்களையும் மீண்டும் வேலையில் அமர்த்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக அவர் போராட்டக்காரர்களிடம் கூறினார். தொழிலாளர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு வேலைக்குத் திரும்பினர். இருப்பினும், நிர்வாகம் ஆறு பேரை வேலைக்குத் திரும்பச் செய்தாலும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டத் தலைவர்கள் சிவகுமார் மற்றும் ரவீந்திரனுக்கு வேலை வழங்க மறுத்துவிட்டது.

கவரவில தோட்ட நிர்வாகம், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மத்தியில் கைக்காசுத் தொழிலாளர்களை வேலை செய்யச் சொல்வதானது, அவர்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தும் ஒரு தெளிவான ஆத்திரமூட்டலாகும்.

நிரந்தரத் தொழிலாளர்களை கைக்காசு தொழிலாளர்களைப் போலக் கடுமையாக உழைத்து அதிக விளைச்சலைப் பெறுவதற்கு அழுத்தம் கொடுப்பதானது பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் தோட்டங்களில் ஈவிரக்கமற்ற சுரண்டலை தீவிரப்படுத்துவதற்கு ஒரு புதிய வகைத் தாக்குதலைத் தயாரித்து வருவதையே காட்டுகிறது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவின் அரசாங்கமும், பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளும் ஜனவரி மாத இறுதியில் தோட்டத் தொழிலாளர்களின் தினசரி ஊதியத்தை 1,350 ரூபாயிலிருந்து 1,750 ரூபாயாக உயர்த்தும் ஒரு 'புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டன. இதன்படி, அரசாங்கம் வருகை ஊக்குவிப்புத் தொகையாக 200 ரூபாயும், கம்பனிகள் 200 ரூபாயும் செலுத்தும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்குத் தெரியாமல் கையெழுத்திடப்பட்டது. ஒரு தொழிலாளியின் குடும்பத்திற்குத் தேவையான குறைந்தபட்ச வருமானம் குறித்த அரச நிறுவனங்களின் மதிப்பீடுகளைக் கூட அரசாங்கம் புறக்கணித்திருந்தது. தாங்க முடியாத வாழ்க்கைச் செலவுக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பைத் தணிக்கவே பிரதானமாக இந்த அற்ப உயர்வு கொடுக்கப்பட்டது.

ஊதிய உயர்வுக்குப் பிறகு, கவரவில நிர்வாகம் ஒரு தொழிலாளியின் தேயிலை பறிக்கும் இலக்கை 18 கிலோவில் இருந்து 20 கிலோவாக 2 கிலோக்கள் அதிகரித்தது. சந்தேகத்திற்கு இடமின்றி, ஏனைய தோட்டங்களிலும் விரைவில் இந்தத் தாக்குதல் தொடங்கும். கைக்காசுத் தொழிலாளர்களை நிரந்தரத் தொழிலாளர்களுக்கு எதிராக நிறுத்துவது, சுரண்டலைத் தீவிரப்படுத்துவதற்கான உந்துதலின் ஒரு பகுதியே ஆகும்.

தனியார்மயமாக்கப்பட்ட தோட்டங்களைக் கட்டுப்படுத்தும் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள், ஏனைய தோட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான 'வேலையில்லாத' தற்காலிகத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றன.

அவர்களுக்கு எட்டு மணி நேர வேலை நாள் (இந்த உரிமை கூட காகிதத்தில் மட்டுமே உள்ளது), ஓய்வூதிய திட்டம் மற்றும் விடுமுறை போன்ற குறைந்தபட்ச உரிமைகள் மறுக்கப்படுகின்ற அதேநேரம், அதிக வேலைச்சுமை சுமத்தப்படுகிறது. அவர்கள் அதிக கொழுந்துகளைப் பறித்தால் மட்டுமே அதிகம் சம்பாதிக்க முடியும். எனவே இந்தத் தொழிலாளர்கள் தங்கள் ஆரோக்கியத்தை அலட்சியம் செய்து, இடைவிடாமல் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

பெருந்தோட்டங்களில் நிலவும் கடுமையான வறுமையின் விளைவாகவே தினக்கூலித் தொழிலாளர்கள் உருவாக்கப்படுகின்றனர். குறைந்த ஊதியம் காரணமாக, சில நிரந்தரத் தொழிலாளர்கள் கூட அதிக வருமானம் தேடி தோட்டங்களுக்கு வெளியே செல்கின்றனர். நீண்ட கால தொழில்கள் கிடைக்காததால், பலர் திரும்பி வந்து தோட்டங்களில் தினக்கூலி அல்லது ஒப்பந்த வேலைகளைத் தேடுகின்றனர். சிங்களக் குடும்பங்கள் வசிக்கும் அண்டை கிராமங்களில் வாழும் வேலையில்லாதவர்களும், தோட்டங்களில் அதிக விளைச்சல் இருக்கும்போது வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.

கம்பனிகளின் தொழிற்துறை பொலிசாகச் செயல்படும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் இந்தத் தொழிலாளர்களை முழுமையாக அலட்சியம் செய்கின்றன. தங்கள் சங்கத்தின் வங்கிக் கணக்குகளுக்கு உறுப்பினர் சந்தாவை சேகரிக்க கூடியவாறு அவை நிரந்தரத் தொழிலாளர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கின்றன.

கவரவில தொழிலாளர்கள் மீதான வேட்டாயாடலும் வேலைப் பளுவை அதிகரிக்கும் முயற்சியும் அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாகும். அரச துறையும் பெரிய வணிகங்களும், கடந்த காலப் போராட்டங்களில் வென்றெடுக்கப்பட்ட தொழிலாளர்களின் உரிமைகளை அபகரிப்பதற்கும், தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை, அதாவது 'தேவைப்படும்போது வேலைக்கு அமர்த்தி பின்னர் நீக்கும்' முறையை நிறுவுவதற்கும், தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களை 'வணிகர் நட்பு' சட்டங்களால் பதிலீடு செய்வதற்கும் முயன்று வருகின்றன.

கவரவிலவில் நடக்கும் பழிவாங்கலை எதிர்ப்பது என்பது, அனைத்து தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தினதும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதன் ஒரு பாகமாகும்.

பெருந்தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவானது பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்குமாறு தொழிலாளர்களை வலியுறுத்துகிறது:

கவரவில தொழிலாளர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்து; இடைநீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் வேலைநீக்க காலத்திற்கான ஊதியத்துடன் மீண்டும் வேலையில் அமர்த்து!

தற்காலிக மற்றும் நிரந்தர ஊழியர்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தும் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனியின் ஆத்திரமூட்டல் திட்டங்களை எதிர்ப்போம்! இந்த அனைத்து தொழிலாளர்கள் மத்தியிலும் ஐக்கியத்தை ஸ்தாபிப்போம்!

இத்தகைய ஒற்றுமைக்கு எதிரான தொழிற்சங்கத் தலைவர்கள், தொழிலாளர்களின் நலன்களை அன்றி, கம்பனிகளின் நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அவர்கள் தொழிற்சங்கங்களை ஜனநாயக-விரோத அமைப்புகளாகப் பயன்படுத்துகின்றனர். கவரவில போராட்டத்தில் அவர்களின் பங்கு இதை மீண்டும் நிரூபித்துள்ளது.

அதனாலேயே, பெருந்தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் ஒவ்வொரு வேலைத் தளத்திலும் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன், தொழிலாளர்கள் தங்களின் சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு வலியுறுத்துகின்றன. தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் பிரதிநிதிகளும் இந்த நடவடிக்கைக் குழுக்களில் அனுமதிக்கப்பட வேண்டும். தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளின் முகவர்களுக்கு இந்தக் குழுக்களின் கதவுகள் திறக்கப்படக்கூடாது.

இத்தகைய குழுக்களை உருவாக்குவதானது, தொழிலாளர்கள் தாங்கள் எதற்காகப் போராட வேண்டும் என்பதை ஜனநாயக ரீதியாக கலந்துரையாடவும், அதற்கு அப்பால் உள்ள ஏனைய தோட்டங்களில் உள்ள சக தொழிலாளர்களுடன் ஒருங்கிணையவும் அனுமதிக்கும். இத்தகைய உண்மையான ஒரு முயற்சியை எடுப்பதன் மூலம், அவர்கள் நாடு தழுவிய மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றிணைய முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் பெருந்தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவும் தங்கள் உரிமைகளுக்காக ஒரு பொதுவான போராட்டத்தைத் தயாரிக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்தக் கோரிக்கைகளில் அடங்குபவை: வறிய மட்ட தினக்கூலி முறையை அகற்றி, கண்ணியமான வாழ்க்கை நிலைகளை உறுதிசெய்யும் வகையில், வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு ஏற்ப கணக்கிடப்பட்டு உயர்த்தப்படும் மாத சம்பளத்தை நிறுவுதல்; இந்த தொழில்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை மற்றும் ஓய்வூதியத்துடன் கூடியதாக இருக்க வேண்டும்.

முழு வசதிகளுடன் கூடிய வீடுகள், தரமான சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகள் ஆகியவை ஏனைய கோரிக்கைகள் ஆகும்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கத்தையோ அல்லது நிறுவனங்களையோ அவர்களால் எதிர்பார்க்க முடியாது. இந்தக் கோரிக்கைகளுக்கான போராட்டமானது, பெருந்தோட்டங்கள், வங்கிகள் மற்றும் பெரிய நிறுவனங்களை தொழிலாளர்களின் ஜனநாயகத் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கின்ற, சோசலிச வேலைத் திட்டத்தை செயல்படுத்துகின்ற தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டமாகும்.

Loading