இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் ஏற்பாடு செய்த, 2026 மே தின இணையவழிப் பேரணியைத் தொடங்கி வைத்து, WSWS சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நார்த் ஆற்றிய உரை.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தோழர்களே, தொழிலாளர்களே, இளைஞர்களே, நண்பர்களே மற்றும் ஆதரவாளர்களே. இன்று ஒவ்வொரு கண்டத்திலும் இருந்து நாங்கள் கூடியுள்ளோம் : ஏகாதிபத்திய வன்முறைக்கும் முதலாளித்துவப் பிற்போக்கிற்கும் எதிரான போராட்டங்களில் முன்னணியில் நிற்கும் அனைவருடனும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் பிரகடனத்துடன் இந்த மே தினப் பேரணியைத் தொடங்குகிறோம்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏனைய அனைத்து ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் ஈரானுக்கு எதிராக நடத்திவரும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போரை சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் பெயரால், நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தப் போர் குறித்து தொழிலாள வர்க்கத்திடம் இரட்டை நிலைப்பாடு எதுவும் இருக்கமுடியாது: 2026 பிப்ரவரி 28 அன்று தொடங்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராகத் தங்கள் நாட்டைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஈரானிய மக்களின் உரிமையை அது நிபந்தனையின்றி வலியுறுத்துகிறது. இது சர்வதேசச் சட்டத்தின் ஒவ்வொரு கோட்பாட்டையும் மீறும் ஒரு போராகும். இது 1945-46 இல் நாஜித் தலைவர்களுக்கு எதிரான நூரேம்பேர்க் விசாரணையில் மிக உயர்ந்த சர்வதேசக் குற்றமாக வரையறுக்கப்பட்ட, அமைதிக்கு எதிரான ஒரு குற்றமாகும்.
ஏப்ரல் 7 அன்று ட்ரம்ப் ஒரு எழுத்துப்பூர்வ அறிக்கையில், “இன்று இரவு ஒரு முழு நாகரிகமும் அழிந்துவிடும், அது மீண்டும் ஒருபோதும் அதன் முன்னைய நிலைக்கு திரும்பாது” என்று அறிவித்தார். இந்த வார்த்தைகள் என்றென்றும் இழிபுகழ் பெற்றவையாக நிலைத்திருக்கும். இந்தப் பயங்கரமான அச்சுறுத்தலானது, அமெரிக்காவும் அதன் இஸ்ரேலிய-சியோனிசத் தாக்குதல் நாய்களும் இந்தப் போரை நடத்திய கொடூரத்தின், அரசியல் ரீதியாக மிகவும் அருவருப்பான வெளிப்பாடாக இருந்தது.
போர் தொடங்கியதிலிருந்து, ஈரானில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 376 குழந்தைகள் உட்பட 3,375 ஈரானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஈரானிய நகரங்கள் மீது குண்டுவீசி , அதன் விஞ்ஞானிகளையும் அரசியல் தலைவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் படுகொலை செய்து, பிள்ளைகளைக் கொன்று, ஈரானின் உள்கட்டமைப்பை அழித்து, ஒரு முழுப் பிராந்தியத்தையும் போரில் மூழ்கடித்துள்ளமை, வெகுஜனப் படுகொலைகள் மூலம் தங்கள் மேலாதிக்கத்தைத் திணிக்க முற்படும் ஏகாதிபத்திய சக்திகளின் திட்டமிட்ட செயல்களாகும்.
காஸாவில் பாலஸ்தீனிய மக்கள் மீதும், லெபனான் மக்கள் மீதும் தொடர்ந்து நடத்தப்படும் இனப்படுகொலைத் தாக்குதலை நாங்கள் அதே உறுதிப்பாட்டுடன் கண்டிக்கிறோம். பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியப் பிள்ளைகளை படுகொலை செய்து, மருத்துவமனைகள், பாடசாலைகள், நீர்வழங்கல் அமைப்புகள் மற்றும் வீடுகளையும் திட்டமிட்டு அழித்து, பட்டினியை ஒரு போர்க்கருவியாகப் பயன்படுத்தி, இஸ்ரேலிய அரசால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வல்லரசுகளின் முழு ஆதரவுடனும் தீவிர பங்களிப்புடனும் இழைக்கப்படும் குற்றங்கள் இன-தேசியவாத சியோனிச செயல்திட்டத்தின் வரலாற்று பிற்போக்குத் தன்மையை உறுதிப்படுத்தும் மறுக்கமுடியாத அட்டூழியங்களாகும்.
இலத்தீன் அமெரிக்க கடலோரக் கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட பெயர் குறிப்பிடப்படாத 180க்கும் மேற்பட்ட மீனவர்களையும் தொழிலாளர்களையும் இன்று நாம் கௌரவத்துடன் நினைவுகூருகின்றோம். போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான 'முன்கூட்டிய தாக்குதல்கள்' என்று பென்டகன் வஞ்சகமாகக் கூறிக்கொள்ளும் இந்த சம்பவங்களில், கரீபியனிலும், கிழக்கு பசிபிக் பகுதிகளிலும் அவர்கள் தங்களின் சிறிய படகுகளில் பயணிக்கும் போது அமெரிக்க ஏவுகணைகளால் சிதறடிக்கப்பட்டனர். ஏகாதிபத்திய பத்திரிகைகளில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் கூட குறிப்பிடப்படவில்லை. அவர்களது குடும்பங்களுக்கு அனுதாபமோ, இழப்பீடோ, அவர்கள் வாழ்ந்ததற்கான எந்த அங்கீகாரமோ கிடைக்கவில்லை. தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்கப் போராடிய அந்த தொழிலாளர்கள், இலத்தீன் அமெரிக்க மக்களுக்கு எதிரான ஒரு பயங்கரவாதப் பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக, உலகின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவத்தால் அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
கியூபா மீதான முற்றுகையையும், எரிபொருள் விநியோகத் துண்டிப்புகளாலும், தடைகள் மூலமும் ஒரு முழு இனத்தையே திட்டமிட்டு நசுக்குதைதையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒரு நூற்றாண்டில் மூன்றில் இரண்டு பகுதி கடந்த பின்னரும் கூட, அமெரிக்க ஆளும் வர்க்கம் கியூபப் புரட்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. 1959க்கும் 1960க்கும் இடையில், காஸ்ட்றோவின் ஆட்சி சுமார் 1.8 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க பெருநிறுவனச் சொத்துக்களைப் பறிமுதல் செய்தது. அதே நேரம், பாட்டிஸ்டாவின் சர்வாதிகாரத்தின் கீழ் செழித்து வளர்ந்திருந்த கும்பல்களின் சாம்ராஜ்யத்தையும் அந்தப் புரட்சி இல்லாதொழித்தது.
சூதாட்ட விடுதிகள் மூடப்பட்டன, தங்கும் விடுதிகள் தேசியமயமாக்கப்பட்டன, குண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது வெளியேற்றப்பட்டதுடன் மாஃபியாக்களின் சுமார் 100 மில்லியன் டாலர் முதலீடுகள் ஒரே இரவில் கணக்குகளிலிருந்து நீக்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக, பணக்கார அமெரிக்க சுற்றுலாப் பயணிகள், இராணுவத்தினர், பெருநிறுவன நிர்வாகிகள் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்குச் சேவை செய்து வந்த விபச்சார விடுதிகளை மூடும் துணிச்சலை அந்தப் புரட்சிகர ஆட்சி கொண்டிருந்தது. இந்த அவமதிப்பிற்காகவும், ஏகாதிபத்தியத்தின் சலுகைகள் மீதான இந்த மன்னிக்க முடியாத தாக்குதலுக்காகவும் அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபா மக்களை ஒருபோதும் மன்னித்ததில்லை.
ஜனவரி 3 அன்று கராகாஸில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் கடத்தப்பட்டு, சிஐஏ, செவ்ரான், ஷெல் போன்ற பெருநிறுவனங்களின் கொள்ளையர்களிடம் ஒப்படைக்கப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீதான அப்பட்டமான ஏகாதிபத்தியக் கொள்ளைச் செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தக் குற்றங்கள், தற்போது உலகில் நிலவும் சட்டமீறல்களின் உருவடிவங்களாக காணப்படுகின்றன. ஏகாதிபத்திய சக்திகள் மிகமதிப்புடன் பேசும் “விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கு” எனப்படுவது ஒரு மாபெரும் மோசடியாக அம்பலமாகியுள்ளது. நடைமுறையில் உள்ள ஒரே சட்டம், தனது நலன்களுக்கு எந்தக் கட்டுப்பாட்டையும், எல்லையையும், அரசியலமைப்பையும், நீதிமன்றத்தையும், மனித உயிரையும் ஒரு தடையாகக் கருதாத, ஒரு முதலாளித்துவ தன்னலக்குழு ஆட்சியால் கையாளப்படும் வன்முறைச் சட்டம் மட்டுமே ஆகும்.
இந்த மே தினத்தில், சுரண்டலை எதிர்த்தமை, போரை எதிர்த்தமை அல்லது தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தமை ஆகிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டு, கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, வேலையிலிருந்து நீக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டு, பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, வர்க்கப் போரின் கொடுமைகளுக்கு பலியான அனைத்துத் தொழிலாளர்களுக்கும் எமது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நேட்டோ தூண்டிவிட்ட போருக்கு துணிச்சலுடன் எதிர்ப்பு தெரிவித்ததற்காகவும், ரஷ்ய மற்றும் உக்ரேனியத் தொழிலாளர்களின் ஐக்கியத்தைப் பாதுகாத்ததற்காகவும், செலென்ஸ்கி ஆட்சியால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இளம் உக்ரேனிய ட்ரொட்ஸ்கிசவாதியும் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் தலைவருமான எங்கள் தோழர் பொக்டான் சிரோட்டியுக்கிற்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பொக்டான் ரஷ்யப் படையெடுப்பின் ஆதரவாளர் என உக்ரேனிய அரசு வழக்கறிஞர்கள் முன்வைத்த குற்றச்சாட்டை, அவரது சட்டப் பாதுகாப்புத் தரப்பு முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளது. உலக சோசலிச வலைத் தளத்தில் பொக்டான் பதிவிட்ட அறிக்கைகள், அவர் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கின்றன. அவர், செலென்ஸ்கியின் ஏகாதிபத்திய ஆதரவு கைப்பாவை அரசாங்கத்திற்கு எவ்வளவு சமரசமற்ற எதிர்ப்பாளரோ, அதே அளவு முதலாளித்துவ புட்டின் ஆட்சிக்கும் எதிர்ப்பாளராக இருக்கிறார். பொக்டானின் விடுதலைக்காகப் போராடுமாறு தொழிலாள வர்க்கத்திடம் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
துருக்கியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிலாள வர்க்கத் தலைவர்களுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவிக்கிறோம். பெருநிறுவனங்கள், அரசு மற்றும் தொழிற்சங்க அதிகாரவர்க்கத்தின் கூட்டுச் சதி குறித்த உண்மையை தொழிலாளர்களுக்கு தெரிவித்த “குற்றம்” என்று கூறப்படுவதற்காக, மார்ச் மாத நடுப்பகுதியில் கைது செய்யப்பட்டு, தற்போது சிறைத்தண்டனையையும் அரசியல் தடையையும் எதிர்கொண்டுள்ள, ஐக்கிய ஜவுளி, நெசவு மற்றும் தோல் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் மெஹ்மெட் துர்க்மானை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் நாங்கள் கோருகிறோம். எஸ்கிசெஹிரிலிருந்து அங்காரா வரை டோரூக் சுரங்கத் தொழிலாளர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க பேரணியை வழிநடத்தி, சமீப காலத்தில் பலமுறை கைது செய்யப்பட்ட, சுதந்திர சுரங்கத் தொழிலாளர் சங்கத்தின் துணிச்சல்மிக்க தலைவரும், ஊமுத்-சென் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பஷரான் அக்ஸுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். சுரங்கத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட்ட செய்தியை நாங்கள் உற்சாகமாக வரவேற்கிறோம்.
ஆனால், போராட்டங்கள் தொடர்கின்றன. சுரங்க நிறுவனங்களின் கொள்ளைக்கு எதிராக காடுகளையும் கிராம மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்கும் இளம் பெண் தலைவரான எஸ்ரா இஷிக்கையும், ஏர்டோகன் ஆட்சியால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து வர்க்கப் போராட்டக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என நாங்கள் கோருகிறோம். ஈரானுக்கு எதிரான ஏகாதிபத்தியப் போரில் துருக்கி மேலும் மேலும் நெருக்கமாக இணங்கிச் செல்வதால் தீவிரமடைந்துள்ள, மீண்டும் எழுச்சி பெற்றுவரும் சுயாதீனத் தொழிலாளர் இயக்கத்திற்கு எதிரான, துருக்கிய ஆளும் வர்க்கத்தின் திட்டமிட்ட தாக்குதலின் ஒரு பகுதியே அவர்களின் கைதுகள் ஆகும்.
அமெரிக்காவில், புலம்பெயர்ந்தோர் மீதான துன்புறுத்தல் சற்றும் குறையவில்லை. நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், ட்ரம்ப் நிர்வாகத்தால் கூட்டுத் தண்டனை நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு வரும், ஹயாம் எல் கமாலுக்கும், அவரது ஐந்து பிள்ளைகளுக்கும் நாங்கள் எங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். எண்ணற்ற நீதிமன்ற உத்தரவுகளை வெளிப்படையாக மீறி, ட்ரம்ப் நிர்வாகம் அவர்களை நாடு கடத்தும் தனது முயற்சிகளைத் தொடர்கிறது. எந்தக் குற்றமும் செய்யாத இந்தக் குடும்பத்தின் மீதான துன்புறுத்தலானது, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு எச்சரிக்கையாகும்: அதாவது, அமெரிக்காவின் குடிமக்கள், மற்றும் குடிமக்கள் அல்லாதவர்கள் என அனைத்து உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் பொலிஸ்-அரசு வழிமுறைகளுக்கு, எந்தவொரு அரசியலமைப்பு பாதுகாப்போ, நீதிமன்ற உத்தரவோ, ஜனநாயக உரிமையோ தடையாக நிற்க அனுமதிக்கப்படாது என்பதையே காட்டுகின்றது
எனவே, ICE இன் வலையமைப்பில் சிக்கி, தற்போது அமெரிக்கா முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களின் வலையமைப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு புலம்பெயர் தொழிலாளி, ஒவ்வொரு மாணவர், ஒவ்வொரு ஆண், பெண், பிள்ளைகளை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய நாங்கள் கோருகிறோம். நோர்த் லேக்கை மூடுங்கள், டில்லேயை மூடுங்கள், என்று நாங்கள் கோருகிறோம். ஃபோக்ஸ்டன், ஓட்டே மேசா, குரோம், 'அலிகேட்டர் அல்காட்ராஸ்' மற்றும் குற்றச்சாட்டு இன்றி, விசாரணை இன்றி, நம்பிக்கையின்றி மனிதர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு முகாமும் மூடப்படவேண்டும். தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கான போராட்டம் என்பது, ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமாகும்.
இறுதியாக, மினியாபோலிஸில் ICE மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு முகவர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ரெனே நிக்கோல் குட் மற்றும் அலெக்ஸ் பிரெட்டி ஆகியோரின் குடும்பங்களுக்கு இன்று மீண்டும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் மரணங்கள் மறக்கப்படாது. அவர்கள் வீணாக இறக்கவில்லை.
ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான எதிர்ப்பு, ஜனநாயக உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் பாதுகாப்பது மற்றஉம் அனைத்து வகையான வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டமும் நமது மே தினக் கொண்டாட்டத்திற்கு உயிரூட்டுகின்றன. இந்த உணர்வோடுதான் இன்றைய பேரணியை நாம் தொடங்குகிறோம்.
இருப்பினும், மே தினக் கொண்டாட்டம் சர்வதேச ஐக்கியத்திற்கான பிரகடனங்களுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது. தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயமானது தற்போதைய உலக நிலைமையைப் பற்றிய ஒரு புறநிலை ஆய்வின் அடிப்படையிலேயே வகுக்கப்படுவதால், அத்தகைய ஆய்விற்கான சந்தர்ப்பமாகவும் மே தினம் அமைய வேண்டும். உலக முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியில் ஒரு முக்கியமான காலகட்டத்தின் மத்தியில் இந்த மே தினம் அனுசரிக்கப்படுவதால், இந்தப் பணி இன்று மிகவும் அவசியமானதாக இருக்கின்றது.
ஈரான் மீதான போரும் 35 ஆண்டு காலத்தின் உச்சக்கட்டமும்
ஈரான் மீதான போர், 1991இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் தொடங்கி ஒரு தனித்துவமான 35 ஆண்டுகால வரலாற்று காலகட்டத்தின் உச்சக்கட்டத்தைக் குறிக்கிறது.
ஈரானுக்கு எதிரான போரை ஒரு தனித்த நிகழ்வாகவோ, ஒரு குறிப்பிட்ட ஜனாதிபதியின் கொள்கையாகவோ, அல்லது இஸ்ரேலிய ஆதரவுக் குழுவின் வெறும் விளைவாகவோ புரிந்துகொள்ள முடியாது. இஸ்ரேலிய ஆட்சியும், அமெரிக்காவில் உள்ள அதன் ஆதரவுக் குழுக்களும், நிச்சயமாக, பல தசாப்தங்களாக ஈரானுக்கு எதிரான போருக்காக முயன்றுவருகின்றன. ஆனால், யூத-எதிர்ப்பு மற்றும் தேசியவாத, “அமெரிக்காவிற்கு முன்னுரிமை” என்ற கொள்கையுடைய வலதுசாரிகளினதும், மத்தியதர வர்க்க போலி-இடதுகளினதும் சில பிரிவினர் மத்தியில் தற்போது பரவிவரும் கதையாடலான, தயக்கம் காட்டிய அமெரிக்க வெளியுறவுக் கொள்கை ஸ்தாபனத்தின் மீது AIPAC, நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய அரசாலும் இந்தப் போர் திணிக்கப்பட்டது என்பது முற்றிலும் பொய்யானதாகும், மற்றும் அது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான ஒரு நியாயப்படுத்தலாகவும் அமைகிறது. இஸ்ரேல் மட்டும் இல்லாதிருந்தால், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை நல்லெண்ணம் ததும்புவதாக இருந்திருக்கும் என்று அது மறைமுகமாக குறிப்பிடுகிறது.
இந்த அபத்தமான வாதம், உலகின் பிரதான எதிர்-புரட்சிகர சக்தியான அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து போர் எதிர்ப்பு இயக்கத்தைத் திசைதிருப்பி, அதனுடன் சமரசம் செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளுகிறது. சியோனிஸ்டுகளின் செல்வாக்கை அகற்றுவதைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை என இவ்வாதம் கூறுகின்றது.
வரலாற்றுப் பதிவுகளை மேலோட்டமாக ஆய்வு செய்தாலே இந்த அரசியல் கட்டுக்கதை தகர்ந்துவிடுகிறது. முதலாவதாக, தூண்டி விடுவது என்பது ஒருபுறம் இருக்க, கொலைகார வன்முறையை எப்போது, எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை. இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் நடந்த பிலிப்பைன்ஸ் இனப்படுகொலை, 1910களில் மெக்சிகன் புரட்சியை அடக்குவதற்கான கொடூரமான முயற்சிகள், மத்திய, தென் அமெரிக்கா மீதான தொடர்ச்சியான படையெடுப்புகள், ஜப்பான் மீது இரண்டு அணுகுண்டுகளை வீசியது, 1950க்கும் 1953க்கும் இடையில் மூன்று மில்லியன் கொரியர்களையும், 1961க்கும் 1973க்கும் இடையே அதே எண்ணிக்கையிலான வியட்நாமியர்களையும் கொன்றது என இரத்தக்களரி நிறைந்த வரலாற்றைக் கொண்ட, பெரும் வன்முறைகளை ஒழுங்கமைப்பதில் இது உலகின் நிகரற்ற நிபுணத்துவம் வாய்ந்தது. மேலும், கடந்த முப்பது ஆண்டுகளில் மத்திய கிழக்கில் தொடுக்கப்பட்ட அனைத்து போர்களும் இதில் உள்ளடங்குகின்றன.
வரலாற்றுப் பதிவைச் சரியாக எடுத்துக்காட்டுவதானால், இஸ்ரேல் என்பது அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ஒரு நாடாகும்; அது கடந்த 78 ஆண்டுகளாக இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும் நிதியுதவியையும் வழங்கி வருகிறது. அது மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஓர் இராணுவமயமாக்கப்பட்ட புறக்காவல் நிலையமாகச் செயல்பட்டு வந்துள்ளது.
மேலும், 1953இல் CIA ஆல் திட்டமிடப்பட்ட சதியால் அதிகாரத்தில் அமர்த்தப்பட்ட ஷாவின் கை பொம்மை ஆட்சியை வீழ்த்திய 1979 புரட்சியை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டதில்லை.
2006 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்ட ஒவ்வொரு அமெரிக்க தேசியப் பாதுகாப்பு மூலோபாய அறிக்கையிலும் ஈரான் முதன்மை எதிரிகளில் ஒன்றாகப் பெயரிடப்பட்டுள்ளது. கிளின்டன், புஷ், ஒபாமா, ட்ரம்ப்பின் முதல் பதவிக்காலம், பைடென் மற்றும் தற்போது ட்ரம்ப்பின் இரண்டாவது நிர்வாகம் ஆகியவற்றின் கீழ், ஈரான் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இரகசிய நடவடிக்கைகள், பொருளாதாரத் தடைகள், படுகொலைகள், இராணுவ அச்சுறுத்தல்களுக்கு அது உள்ளாகி வந்துள்ளது. ஈரான் மீதான போரானது மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகப் பின்பற்றப்பட்டு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இருகட்சி கொள்கையின் உச்சகட்டமாகும்.
ஆனால், மிக அடிப்படையான அர்த்தத்தில், ஏகாதிபத்தியப் போர் என்பது வெறும் அகநிலையாக எடுக்கப்பட்ட முடிவுகள், தீயவர்களின் செல்வாக்கு மற்றும் தவறான கொள்கைகளினதும் விளைவு அல்ல. மாறாக, அது முதலாளித்துவ அமைப்பின் இரண்டு இன்றியமையாத புறநிலை முரண்பாடுகளின் விளைவும் வெளிப்பாடுமாகும்: முதலாவதாக, உற்பத்திச் சக்திகளின் தனியார் உடைமைக்கும் உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் இடையிலான முரண்பாடு; இரண்டாவதாக, பொருளாதார உற்பத்தியின் பூகோளமயமாக்கப்பட்ட தன்மைக்கும், அரசியல் அதிகாரமும் மூலதனக் குவிப்பும் தொடர்ந்து ஒழுங்கமைக்கப்படும் தேசிய-அரசு அமைப்பு முறைக்கும் இடையிலான முரண்பாடாகும். கடந்த ஐந்து தசாப்தங்களாக நிகழ்ந்த உற்பத்தியின் பூகோளமயமாக்கலானது, ஒவ்வொரு கண்டத்திலுள்ள தொழிலாளர்களின் உழைப்பையும், முன்னெப்போதும் இல்லாத இறுக்கமான விநியோகச் சங்கிலிகள், நிதிப் பரிமாற்றங்கள், தகவல் வலையமைப்புகளால் பிணைக்கப்பட்ட ஒரு ஒற்றை உலகளாவிய நிகழ்வுப்போக்காக ஒருங்கிணைத்துள்ளது.
கடந்த 35 ஆண்டுகளில் நிகழ்ந்த பொருளாதார, அரசியல் அபிவிருத்தியின் முழுப் போக்கும், உலகளாவிய நெருக்கடியின் இயக்கவியல் பற்றிய இந்த மார்க்சிசப் பகுப்பாய்வை உறுதிப்படுத்தியுள்ளது.
1991இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை, அமெரிக்க ஆளும் வர்க்கம் முதலாளித்துவத்தின் ஒரு வரலாற்று வெற்றியாகப் பிரகடனப்படுத்தியது. 'சோசலிசத்தின் தோல்வி' என்பது, 1917 ஆம் ஆண்டு சோசலிச அக்டோபர் புரட்சிக்கு முன்பு இருந்த முதலாளித்துவ உலகத்தை மீட்டெடுப்பதற்கான பாதையை திறந்துவிட்டுள்ளது என அது கூறியது. புரட்சிக்குப் பின்னர் நிகழ்ந்த, சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் மாபெரும் உலகளாவிய இயக்கம், மற்றும் 1945இல் நாஜி ஜேர்மனியின் தோல்வி, 1949இல் சீனப் புரட்சியின் வெற்றி ஆகிய அனைத்தினதும் விளைவாகப் பெறப்பட்ட சமூக முன்னேற்றங்கள் சகலதும் அபகரிக்கப்பட வேண்டும் என அது கூறியது.
எவ்வாறாயினும், இந்த கொடுங்கனவு போன்ற முன்னோக்கானது, சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கான காரணங்களையும், அதன் உலகளாவிய முக்கியத்துவத்தையும் குறித்த ஒரு தவறான மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது. சோவியத் ஒன்றியத்தில் தோல்வியடைந்தது சோசலிசம் அல்ல, மாறாக அக்டோபர் புரட்சிக்கு உத்வேகம் அளித்த மார்க்சிச சர்வதேசவாதத்தை நிராகரித்த, சோசலிச-விரோத தேசியவாதத்தின் ஸ்ராலினிச ஆட்சியே ஆகும். சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதை, உலகளாவிய முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசப் போராட்டத்திலிருந்து துண்டித்த, “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற ஸ்ராலினிச வேலைத்திட்டம், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் திவாலானது என்பது நிரூபிக்கப்பட்டது.
அக்டோபர் புரட்சிக்கு ஸ்ராலினிசம் செய்த காட்டிக்கொடுப்பு பற்றிய ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, சோவியத் அதிகாரத்துவத்தின் தேசியவாதக் கொள்கைகளின் விளைவுகளை தெளிவாக முன்னறிந்திருந்தது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, 1987இல் அது கூறியதாவது:
'தொழில்நுட்பப் பற்றாக்குறையையும், தொழிற்துறைக்கும் விவசாயத்திற்கும் இடையிலான தொடர்ச்சியான முரண்பாடுகளையும் உலகச் சந்தையை அணுகுவதன் மூலம் மட்டுமே தீர்க்க முடியும். அந்தச் சந்தையில் சோவியத் ஒன்றியத்தை ஒருங்கிணைப்பதற்கு இரண்டு வழிகளே உள்ளன — ஒன்று, முதலாளித்துவ மீட்சிக்கு வழிவகுக்கும் கோர்பச்சேவின் வழி; மற்றொன்று, உலக சோசலிசப் புரட்சியின் வழி.'
அதில் கோர்பச்சேவ் முதல் பாதையைத் தேர்ந்தெடுத்தார். டிசம்பர் 1991இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமை அந்த காட்டுகொடுப்பின் உச்சக்கட்டமாக இருந்தது: அக்டோபர் புரட்சிக்கு புதைகுழி தோண்டுபவர்களாகத் தொடங்கிய ஸ்ராலினிச அதிகாரத்துவம், இன்று புட்டினால் வழிநடத்தப்படும் ஒரு புதிய ரஷ்ய தன்னலக்குழுவின் மிகவும் ஊழல் நிறைந்ததும் பேராசை கொண்டதுமான பிரிவாக முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பொறுத்தவரை, அதே அடிப்படை முரண்பாடு ஒரு மாறுபட்ட விளைவை உருவாக்கியது. ஆனால், ஸ்ராலினிச வீழ்ச்சியைப் போலவே இதுவும் ஒரு சுய தேர்வாக இருக்கவில்லை. ஜப்பானிய, ஜேர்மன் தொழிற்துறைப் போட்டியாளர்களின் எழுச்சி, ஒரு சக்திவாய்ந்த பொருளாதார, தொழில்துறை சக்தியாக சீனாவின் உருவாக்கம், உள்நாட்டு உற்பத்தித் துறையின் நலிவு, வர்த்தக மற்றும் வரவு-செலவு திட்ட பற்றாக்குறைகளின் பெருகிவரும் சுமை என, தனது பொருளாதார மேலாதிக்கம் மீளமுடியாத வகையில் அரிக்கப்பட்டதை எதிர்கொண்ட அமெரிக்க முதலாளித்துவத்தால், பொருளாதார வழிகளில் தனது முன்னைய நிலையை மீட்டெடுக்க முடியவில்லை. அது இன்னும் பெரும் ஆதிக்கத்துடன் கொண்டிருந்த ஒரே கருவி இராணுவ பலம் மட்டுமே.
தொடர்ந்து வந்த மூன்று தசாப்த கால இராணுவவாதம் ஈராக், யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, உக்ரேன் மற்றும் பிற நாடுகளைச் சிதைத்தது. இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டு, முழு சமூகங்களையும் அழித்து, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகப்பெரிய அகதிகள் நெருக்கடியை உருவாக்கியபோதிலும், இந்தப் போர்கள் படுதோல்விகளில் முடிவடைந்ததோடு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்வ வளத்தை மீட்டெடுப்பதில் தோல்வியடைந்தன.
அமெரிக்கக் குண்டுகளும் ஏவுகணைகளும் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தின. ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ நடவடிக்கைகளுடன் சேர்ந்தே, அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியும் அதிகரித்து வந்தது. ஏகாதிபத்திய அட்டூழியத்துடன், மேலும் மேலும் ஆழமான தொடர்ச்சியான நிதி நெருக்கடிகளும் சேர்ந்து வந்துள்ளன: 1994 ஆம் ஆண்டின் மெக்சிகன் பெசோ நெருக்கடி, 1997ஆம் ஆண்டின் ஆசிய நெருக்கடி, 1998 ஆம் ஆண்டின் ரஷ்யாவின் கடன் செலுத்துமதியின்மை, நீண்டகால தனியார் முதலீட்டு நிறுவனத்தின் சரிவு, 2000ஆம் ஆண்டின் டொட்-கொம் வீழ்ச்சி, 2008 ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடி, 2010-12 ஆம் ஆண்டுகளின் ஐரோப்பிய அரச கடன் நெருக்கடி, 2020 ஆம் ஆண்டின் பெருந்தொற்று அதிர்ச்சி, மற்றும் 2022 இலிருந்து டொலர் அமைப்புமுறை நெருக்கடிக்கான அறிகுறிகள் பெருகி வருவது ஆகியவை அவற்றில் சிலவாகும்.
தேசியக் கடனில் ஏற்பட்டுள்ள திகைப்பூட்டும் வளர்ச்சி, அமெரிக்காவை மையமாகக் கொண்ட பூகோள நெருக்கடியின் மிகவும் வெளிப்படையானதும் அச்சுறுத்தலானதுமான வெளிப்பாடு ஆகும். 2001இல் அது ஏறத்தாழ 5.8 டிரில்லியன் டொலராக இருந்தது. தற்போது அது 40 டிரில்லியன் டொலரை நெருங்குகிறது. தங்கத்தின் விலை, அமெரிக்க முதலாளித்துவம் எதிர்கொள்ளும் நெருக்கடியின், வரலாற்று ரீதியான பொருளாதார ரீதியான இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் வெளிப்பாடு ஆகும். டொலரை உலகின் இருப்பு நாணயமாக நிறுவிய 1944 ஆம் ஆண்டு பிரெட்டன் வூட்ஸ் மாநாட்டில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் மதிப்பு 35 டாலராக நிர்ணயிக்கப்பட்டது.
நிக்சன் நிர்வாகம் பிரெட்டன் வூட்ஸ் முறையை 1971இல் இரத்துசெய்யும் வரை அந்த விலை நீடித்தது. அது இரத்துச் செய்யப்பட்டமை தங்கத்தின் விலையில் ஒரு இடைவிடாத உயர்வைத் தூண்டி, கடந்த ஆண்டில் ஒரு வெடிக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இப்போது ஏறக்குறைய 4,500 டொலர்களாக உள்ளது. வேறுவிதமாகக் கூறினால், பல ஆயிரம் ஆண்டுகளாக மதிப்பின் அளவுகோலாகச் செயல்பட்டு வந்த தங்கத்துடன் ஒப்பிடுகையில், டொலரின் மதிப்பு அரை நூற்றாண்டுக்கும் சற்று அதிகமான காலத்தில் 99 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சியடைந்துள்ளது.
1991 முதல் 2026 வரையிலான முப்பத்தைந்து ஆண்டுகளை இந்தக் கட்டமைப்பிற்குள்தான் புரிந்துகொள்ள வேண்டும். அவை ஒரு ஒற்றை வரலாற்று நிகழ்வுப்போக்கை உருவாக்குகின்றன: பொருளாதார வழிகளில் தன்னால் கடக்க முடியாத ஒரு முரண்பாட்டை, இராணுவ வன்முறையைப் பயன்படுத்தி வெல்வதற்கான அமெரிக்க முதலாளித்துவத்தின் முயற்சியே அதுவாகும். இந்தப் போர்கள், இருபதாம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களை உருவாக்கிய, உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான அதே தீர்க்கப்படாத முரண்பாட்டால் உந்தப்படும் ஒரு தொடர்ச்சியான பாதையின் கூறுகளாக அமைந்துள்ளன.
வெளிநாட்டில் போரும் உள்நாட்டில் சர்வாதிகாரமும்
ஆனால், ஈரானுக்கு எதிரான போர் என்பது இந்த நீண்ட தொடர் இராணுவ நடவடிக்கைகளின் மற்றொரு அத்தியாயம் மட்டுமல்ல. இந்தப் போரின் பின்விளைவுகள், இந்த மோதலுக்கு ஒரு வெளிப்படையான உலகளாவிய தன்மையை அளிக்கின்றன. குறிப்பாக, இது ஏகாதிபத்திய சக்திகளால் சர்வதேச உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக நடத்தப்படும் ஒரு உலகளாவிய போராகும். ஏப்ரல் 13 அன்று, அமெரிக்கக் கடற்படை பாரசீக வளைகுடாவில் உள்ள ஈரானியத் துறைமுகங்களைத் தடுத்துள்ளது. இந்தப் போரைத் தொடங்குவதில் எந்தப் பங்கும் வகிக்காத கோடிக்கணக்கான மக்கள் தற்போது அதன் விளைவுகளை உணர்ந்து வருகின்றனர்.
அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் உணவுப் பாதுகாப்பில் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. இந்த முற்றுகையின் விளைவாக, காஸா மற்றும் சூடானில் ஏற்கனவே பரவியுள்ள பஞ்சங்கள் மேலும் ஆழமடையும், மேலும் பல நாடுகள் நெருக்கடி நிலையிலிருந்து அவசர நிலை அல்லது பேரழிவு நிலை உணவுப் பாதுகாப்பின்மைக்குத் தள்ளப்படுவதுடன் அடுத்த பன்னிரண்டு முதல் பதினெட்டு மாதங்களில் பல நாடுகளில் பிள்ளைகள் மற்றும் முதியோர்கள் மத்தியில் இறப்பு விகிதம் அதிகரிக்கும்.
இந்த விளைவுகள், வாஷிங்டனிலும் ஜெருசலேமிலும் எடுக்கப்பட்ட முடிவுகளின் நேரடி விளைவாகும். இந்த முடிவுகளின் காரணமாக, பசியாலும் தங்கள் உயிர்களாலும் விலை கொடுக்கப் போகிறவர்கள், கிழக்கு ஆபிரிக்க விவசாயிகள், தெற்காசியக் குடும்பங்கள், இந்த மோதலில் எந்தப் பங்கும் வகிக்காத நாடுகளில் உள்ள பிள்ளைகளும் ஆவர்.
ஈரானுக்கு எதிரான போர், வெளிநாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் நோக்கங்களை மட்டுமல்லாமல், உள்நாட்டில் அதனை தொடரும் ஆட்சியின் சமூக, அரசியல் யதார்த்தத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது. ட்ரம்ப் என்பவர், அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சியிலும், அதன் ஆளும் வர்க்கத்தின் சீரழிவிலும் வேரூன்றிய ஒரு நீண்டகாலப் பொருளாதார, சமூக, அரசியல் நிகழ்ச்சிப்போக்கின் விளைபொருளும், உருவகமும் அதன் உச்சக்கட்டமும் ஆக உள்ளார்.
அமெரிக்காவின் அரசியல் கட்டமைப்பு அதன் சமூக அடித்தளத்துடன் பொருந்தச் செய்யப்பட்டு வருகிறது: அதாவது, மலைக்க வைக்கும் செல்வத்தைக் கட்டுப்படுத்தி, அனைத்து சட்ட, ஜனநாயக, தார்மீக கட்டுப்பாடுகளையும் தனது நலன்களுக்கு சகிக்க முடியாத தடைகளாகக் கருதும் ஒரு தன்னலக்குழு ஆட்சியால் சமூகம் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. ட்ரம்ப்பின் எழுச்சி இந்த யதார்த்தத்தின் வெளிப்பாடாகும்.
தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலின் மூலம் ஈரானுக்கு எதிரான போருக்கு நிதியளிக்கப்படுகிறது. ட்ரம்பின் 2027 நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டம், 'பாதுகாப்பிற்காக' ஏறத்தாழ 1.5 டிரில்லியன் டொலர்களைக் கோருகிறது. இது, ஈரானுக்கு எதிரான போருக்கு மட்டுமன்றி, சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான பூகோளப் போருக்குமான தயாரிப்புகளைப் பெருமளவில் தீவிரப்படுத்துவதற்குமான, நவீன அமெரிக்க வரலாற்றிலேயே மிக உயர்ந்த இராணுவச் செலவின அளவாகும். மிக நேரடியான அர்த்தத்தில், இது ஒரு உலகப் போருக்கான வரவு-செலவுத் திட்டமாகும்.
இதற்கு எவ்வாறு நிதியளிக்கப்படப் போகிறது? இதற்கு ட்ரம்ப் தானே மிக வெளிப்படையான முறையில் பதிலளித்துள்ளார். அவர் கூறியது போல், 'நாம் போர்களில் ஈடுபட்டிருப்பதால்' சமூக நலத் திட்டங்கள் தியாகம் செய்யப்பட வேண்டும். 'பகல் நேர குழந்தை பராமரிப்பு, மெடிக்எய்ட், மெடிகெயர் போன்றவற்றை நம்மால் பராமரிப்பது சாத்தியமில்லை… நாம் ஒரு விஷயத்திலேயே கவனம் செலுத்த வேண்டும்: அது இராணுவப் பாதுகாப்பாகும்' என அவர் மேலும் வலியுறுத்தினார். கடந்த நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தால் வென்றெடுக்கப்பட்ட மெடிகெயர், மெடிக்எய்ட், சமூகப் பாதுகாப்பு, கல்வி, வீட்டுவசதி போன்ற ஒவ்வொரு குறைந்தபட்ச சமூகப் பாதுகாப்பும், இராணுவவாதத்திற்கும் ஒரு தன்னலக்குழு ஆட்சியின் செழுமைக்கும், அரசின் அடக்குமுறை எந்திரத்திற்கும் நிதியளிப்பதற்காகக் கொள்ளையடிக்கப்பட உள்ளன.
அமெரிக்காவில் நிகழ்வது வெறும் ஒரு தேசிய அரசியல் நெருக்கடி மட்டுமல்ல. அது உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெரும் கொந்தளிப்பாகும். முன்னர் உலக முதலாளித்துவத்தை ஸ்திரப்படுத்திய அமெரிக்கா, உலகளாவிய ஸ்திரமற்ற தன்மையின் மிகப்பெரிய மூலாதாரமாக மாறியுள்ளது. அமெரிக்காவில் ஜனநாயக வடிவங்களின் சிதைவு, அரசியலில் பகிரங்கமான குண்டர் கும்பல் ஆட்சியின் பக்கம் திரும்புதல், அனைத்து சமூக வாழ்வையும் தன்னலக் குழுக்களின் நலன்களுக்கு அடிபணியச் செய்தல் மற்றும் இராணுவ வன்முறையின் மூலம் உலகை மறுபங்கீடு செய்ய முனைவதும், ஒட்டுமொத்த முதலாளித்துவ ஒழுங்கின் நெருக்கடியை, அதன் மிகவும் செறிவானதும் வெடிக்கும் தன்மையுடையதுமான வடிவத்தில் வெளிப்படுத்துகின்றன.
ஒவ்வொரு பெரிய முதலாளித்துவ நாட்டிலும் இதே அடிப்படை நிகழ்வுப்போக்குகள் தெளிவாகத் தெரிகின்றன. முதலாளித்துவத்தின் நெருக்கடி உலகளாவியதாக இருப்பதுபோல், சர்வாதிகாரத்தையும் போரையும் நோக்கிய திருப்பமும் அவ்வாறே உலகளாவியதானதாக இருக்கிறது. ஐரோப்பிய ஆளும் வர்க்கம், தனது பாசாங்குத்தனமான சமாதானவாத வார்த்தை ஜாலங்களை வேகமாகவும் வெட்கமின்றியும் கைவிட்டு, தனது நீண்டகால ஏகாதிபத்திய இராணுவவாத மரபுகளைப் புதுப்பித்து, கடந்த நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களில் தங்கள் தாத்தாக்களும் பூட்டன்களும் போரிட்டு மடிந்ததைப் போல, தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் போரிட்டு மடியத் தயாராக இருக்க வேண்டும் என்று பிரகடனம் செய்கிறது. இது வெறும் வார்த்தையாடல் அல்ல. ஐரோப்பிய நேட்டோ நாடுகள் ஏற்கனவே ரஷ்யாவிற்கு எதிராக ஒரு நடைமுறைப் போரில் ஈடுபட்டுள்ளன. உக்ரேனானது, இஸ்ரேலுக்கு இணையான நேட்டோவின் கிழக்கு ஐரோப்பிய நாடாக உருமாற்றப்பட்டுள்ளது.
கடந்த நூற்றாண்டின் வரலாற்று அனுபவங்கள் குறித்த தனது ஆய்வில், 1914 இல் முதலாம் உலகப் போரை உருவாக்கிய அதே முரண்பாடுகளே 1917இல் ரஷ்யாவில் சோசலிசப் புரட்சிக்கும் வழிவகுத்தன என்று அனைத்துலகக் குழு வலியுறுத்தியது. அதே வரலாற்று இயக்கவியல் இன்றும் செயல்பட்டு வருகிறது. ஏகாதிபத்திய வன்முறையின் வெடிப்புக்கு அடிப்படையாக விளங்கும் முதலாளித்துவத்தின் பூகோள நெருக்கடியானது, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்ட வெடிப்புக்கும் தயாரிப்புச் செய்து வருகிறது.
சோசலிசப் புரட்சி தசாப்தத்தின் இரண்டாம் பாதி
2020களின் தொடக்கத்தில், சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கம் புத்துயிர் பெறும் என்று உலக சோசலிச வலைத் தளம் கணித்திருந்தது. நாம் இப்போது இந்தப் தசாப்தத்தின் நடுப்பகுதியைக் கடந்துவிட்டோம். பூகோள நெருக்கடியின் புறநிலை வளர்ச்சியானது இந்தக் கண்ணோட்டத்தை உறுதிப்படுத்துகிறது என்று அனைத்துலகக் குழு உறுதியாக நம்புகிறது.
இந்த தசாப்தத்தின் முதல் ஐந்தாண்டுகளில், ஆளும் வர்க்கத்தினரின் அரசியல் பிற்போக்கை நோக்கிய, தீவிரமடைந்த போக்கு ஆதிக்கம் செலுத்தியது. இது தற்செயலான நிகழ்வுகளின் தொடரோ அல்லது தனிப்பட்ட மக்கள் தலைவர்களின் செயலோ அல்ல; மாறாக, முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடியை ஜனநாயக வழிகளில் தீர்க்க இயலாத ஒரு உலகளாவிய தன்னலக் குழுவின் அமைப்புரீதியான பிரதிபலிப்பாகும். பெருநிறுவனங்களின் இலாபத் தேவைகளுக்காக அரசாங்கங்கள் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலியாக்கிய கோவிட்-19 பெருந்தொற்று, தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்களுக்கும் ஆளும் தன்னலக் குழுக்களின் நிதி நலன்களுக்கும் இடையிலான சமரசம் செய்ய முடியாத முரண்பாட்டை அம்பலப்படுத்தியது.
உக்ரேனில் போர் வெடித்தமை, காஸாவில் நடந்த இனப்படுகொலை, ஈரான் மீதான குண்டுவீச்சு, வெனிசுவேலா ஜனாதிபதி மதுரோவின் கடத்தல் மற்றும் மெக்சிகோ, கிரீன்லாந்து, பனாமா, கியூபா ஆகிய நாடுகளுக்கு எதிரான அச்சுறுத்தல்களும், அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள், உலகை வன்முறையாகப் பிரிப்பதன் மூலம் இந்த நெருக்கடிக்கு பிரதிபலித்து வருவதை வெளிப்படுத்தியுள்ளன.
ஏகாதிபத்திய மையங்களுக்குள், வெளிநாடுகளை நோக்கிய இந்த உந்துதல், உள்நாட்டில் சர்வாதிகார ஆட்சியை நோக்கிய ஒரு திருப்பத்திலிருந்து பிரிக்க முடியாததாக உள்ளது: ட்ரம்ப்பின் மீள்வருகையும் அமெரிக்காவில் ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தின் வெளிப்படையான கட்டுமானமும்; ஆர்ஜென்டினாவில் மிலேயின் எழுச்சி, இத்தாலியில் மெலோனியின் எழுச்சி, ஐரோப்பா முழுவதும் தீவிர வலதுசாரி அரசாங்கங்களின் எழுச்சி; ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டுச் சிதைத்தல், பொலிசை இராணுவமயமாக்குதல், புலம்பெயர்ந்தோரை துன்புறுத்துதல், மற்றும் கருத்து வேறுபாடுகளைக் குற்றமாக்குதல் போன்றவை எடுத்துக்காட்டுகளாகும். இதற்கிடையில், பெருமளவிலான ஆட்குறைப்புகள், செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் வேலை இழப்புகள், பணவீக்கம், சமூக நலத் திட்டங்கள் சிதைக்கப்படுதல் ஆகியவை பில்லியன் கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்திய போதிலும், உலகளாவிய கோடீஸ்வரர்களின் செல்வம் 2025இல் 18.3 டிரில்லியன் டொலராக உயர்ந்ததுள்ளது.
இந்த தசாப்தத்தின் முதல் பாதியில் முதலாளித்துவப் பிற்போக்கும் ஏகாதிபத்திய இராணுவவாதமும் வெடித்துக் கிளம்பியுள்ளன என்பதை மறுக்க முடியாது. உலகப் போர் என்பது எதிர்கால அச்சுறுத்தல் அல்ல, மாறாக அது தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு யதார்த்தம் ஆகும். ஆனால், போரினாலும் அடக்குமுறையினாலும் வெளிப்படும் முதலாளித்துவ அமைப்பின் அதே முரண்பாடுகளே, உலகளாவிய வர்க்கப் போராட்டம் வெடிப்பதற்கும் காரணமாக அமைந்துள்ளன.
இந்த தசாப்தத்தின் இரண்டாம் காலப்பகுதியானது, சர்வதேச அளவில் சமூகப் போராட்டத்தின் எதிர்விளைவுப் போக்கு வெடித்ததன் மூலம் பெருகிய முறையில் குணாதிசயப்படுத்தப்படுகிறது. 1845 இல் மார்க்ஸ் எழுதியதாவது: 'எனவே, வரலாற்று நடவடிக்கை எந்த அளவிற்கு முழுமையானதாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு அதன் நடவடிக்கைக்கு உட்பட்ட மக்கள் திரளின் அளவும் அதிகரிக்கும்.' இந்தப் புரிதலின் ஆரம்பகட்ட உறுதிப்படுத்தலாக, பெருந்திரளான உழைக்கும் மக்கள் சமூக, அரசியல் போராட்டங்களுக்குள் ஈர்க்கப்படுகின்றனர்.
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும், எட்டு ஐரோப்பிய நாடுகளில் தேசிய அல்லது பிராந்திய அளவிலான 5 பொது வேலைநிறுத்தங்கள் உட்பட 458 வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன. இது, 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டங்களுடன் ஒப்பிடுகையில், அளவிடக்கூடிய ஒரு வேகத்தின் அதிகரிப்பைக் இது காட்டுகிறது. 2026 இன் முதல் காலாண்டில், பெல்ஜியத்தில் மார்ச் 12 அன்றும் இத்தாலியில் மார்ச் 9 அன்றும் தேசிய அளவிலான பொது வேலைநிறுத்தங்களும், ஸ்பெயினின் அந்தலூசியா மற்றும் பாஸ்க் மாநிலங்களில் (மார்ச் 8 மற்றும் 17) பிராந்திய அளவிலான பொது வேலைநிறுத்தங்களும், வடக்கு சைப்ரஸில் ஒரு பொது வேலைநிறுத்தமும், பெப்ரவரியில் ஆர்ஜென்டினாவில் ஒரு தேசிய அளவிலான பொது வேலைநிறுத்தமும் நடைபெற்றுள்ளன, இது, 2025ஆம் ஆண்டின் ஏற்கெனவே கணிசமான வேகத்தை மிஞ்சும் வகையில், ஒரே காலாண்டில் இவ்வளவு அதிகமான பொது வேலைநிறுத்த நடவடிக்கைகள் நிகழ்ந்துள்ளன. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 17 இலட்சம் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்தங்களின் எண்ணிக்கை, அணிதிரட்டல்களின் அளவு, புவியியல் பரவல், துறைவாரியான பரவல், கால அளவு, வேலைநிறுத்த அங்கீகாரங்களுக்கான வாய்ப்பு மற்றும் அரசுப் படைகளுடனான மோதல்களின் அதிர்வெண் போன்ற புறநிலைக் குறியீடுகளைப் பொறுத்தவரையில், 2026 ஆம் ஆண்டின் முதல் மாதங்கள், 2025ஆம் ஆண்டின் அளவைத் தாண்டி வர்க்க மோதல் தெளிவாகவும், அளவிடக்கூடிய வகையிலும் தீவிரமடைந்திருப்பதைக் காட்டுகின்றன.
அமெரிக்காவில் ICE அமைப்புக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் இலட்சக்கணக்கானோரை ஈர்த்துள்ளன. மார்ச் 28 அன்று நடைபெற்ற 'மன்னர்கள் வேண்டாம்' என்ற பேரணியில் 8 மில்லியன் பேர் பங்கேற்றனர். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 42,000 ஊழியர்களும், 31,000 கைசர் சுகாதார ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டங்கள், தன்னலக்குழு ஆட்சியை பாசிசத்தையும் போரையும் நோக்கித் தள்ளும் அதே நெருக்கடியால் திணிக்கப்பட்ட நிலைமைகளுக்கு எதிராகப் போராடும் ஒரு சர்வதேசத் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் புறநிலை வெளிப்பாடுகளாகும். இந்தப் போராட்டங்கள் ஒவ்வொரு கண்டத்திலும், பொருளாதாரத்தின் ஒவ்வொரு முக்கிய துறையிலும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. இவை முதலாளிகளுடனும் அரசாங்கங்களுடனும் மட்டுமல்லாமல், வேலைநிறுத்த எதிர்ப்பு பெருநிறுவனக் பொலிஸ் படையாகச் செயல்படும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடனும் அதிகளவில் நேரடி மோதலை ஏற்படுத்துகின்றன.
இந்த இரண்டு போக்குகளில் எது மேலோங்கும் என்பதே தற்போதைய காலகட்டத்தின் தீர்க்கமான கேள்வியாகும். ஆளும் வர்க்கம், தனது அமைப்பில் ஆழமடைந்து வரும் நெருக்கடிக்கு, சமூகத்தை இராணுவமயமாக்குதல், ஜனநாயக உரிமைகளைப் பறித்தல், புலம்பெயர்ந்தோர், அரசியல் எதிர்ப்பாளர்கள் மீதான தாக்குதல், அணு ஆயுதப் பேரழிவின் அச்சுறுத்தலை தன்னுள் கொண்டுள்ள மோதல்களுக்குத் தயாராகுதல் ஆகியவை உள்ளடங்களாக பாசிசத்தையும் போரையும் கொண்டு பதிலளிக்கின்றது. பேரழிவை நோக்கிய இந்தப் பாதையைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஒரே சக்தியான தொழிலாள வர்க்கம், தனது சொந்தக் கூட்டு சமூக சக்தியை ஒன்றுதிரட்டுவதன் மூலம் அதற்குப் பதிலளித்து வருகிறது. இதன் விளைவு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதல்ல. தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களிலும், அந்தப் போராட்டங்களின் போக்கில் தொழிலாள வர்க்கம் வளர்த்துக் கொள்ளும் அரசியல் நனவு, அமைப்பு மற்றும் தலைமைத்துவத்தாலும் அது தீர்மானிக்கப்படும்.
ஒப்பீட்டளவில் சமூக சமநிலையாக இருந்த காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை உறுதியாகக் கூறமுடியும். இந்த தசாப்தத்தின் தொடக்கத்தில் அடையாளம் காணப்பட்ட புறநிலை நிலைமைகளான, போருக்குப் பிந்தைய முதலாளித்துவ அமைப்பின் சிதைவு, பழைய ஆட்சி முறைகளைத் தொடர்வதில் சாத்தியமின்மை, புரட்சிகர மாற்றம், அல்லது காட்டுமிராண்டித்தனத்திற்கு பலியாவது ஆகியன, உறுதிப்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல், தீவிரமடைந்தும் உள்ளன. தன்னலக்குழு ஆட்சியின் தாக்குதலுக்கு எதிராகப் போராடும் அதேவேளை, போரா அல்லது சமாதானமா, சர்வாதிகாரமா அல்லது ஜனநாயகமா, சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்ற, இந்தக் காலகட்டத்தின் அடிப்படைக் கேள்விகளை, நேரடியாக வரலாற்று நிகழ்ச்சி நிரலில் இடம்பெறச் செய்திருக்குமளவுக்கு, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு, ஒரு உலகளாவிய சக்தியாக உருவெடுத்திருப்பதை 2026ஆம் ஆண்டின் முதல் மாதங்கள் குறிக்கின்றன.
நான்காம் அகிலத்தை கட்டியெழுப்புங்கள்!
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, மனமுடைந்த அவநம்பிக்கையாளர்களும் ஐயுறவுவாதிகளும் இந்தக் முன்நோக்கை ஒரு கற்பனை என்று நிராகரிப்பார்கள். ஆளும் வர்க்கத்திடம் பணிந்துபோகும் அவர்கள், முதலாளித்துவத்தின் வெல்லமுடியாத தன்மையிலும், அதன் நிலைத்திருக்கும் தன்மையிலும் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர்கள். தொழிலாள வர்க்கத்தின் மீதான அவர்களின் அணுகுமுறை, அச்சமும் இகழ்ச்சியும் கலந்த ஒன்றாகும்.
ஆனால், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைமையிலான ட்ரொஸ்கிச இயக்கத்தின் புரட்சிகரக் முன்நோக்கானது, உலகளாவிய அளவில் இயங்கும் புறநிலை பொருளாதார மற்றும் சமூக நிகழ்வுப்போக்குகள் குறித்த மிகவும் யதார்த்தமான மதிப்பீட்டிலேயே வேரூன்றியுள்ளது.
தற்போதுள்ள ஒழுங்கமைப்பின் முரண்பாடுகளைத் தூண்டிய அதே உற்பத்தியின் பூகோளமயமாக்கலே, மனிதகுல வரலாற்றிலேயே உண்மையாக ஒரு புறநிலை ரீதியானதும் கட்டமைப்பு ரீதியானதுமான மிகப்பெரிய சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை உருவாக்கியுள்ளது. இந்த எண்ணிக்கையைத் திட்டவட்டமாகப் புரிந்துகொள்ள வேண்டும். 1980ஆம் ஆண்டு முதல், உலகின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியானது, தொழிலாள வர்க்கத்தின் அளவை 2 பில்லியனுக்கும் அதிகமான மக்களால் அதிகரித்துள்ளது. மனிதகுல வரலாற்றில் முதன்முறையாக, உலகின் பெரும்பான்மையான மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர் — இந்த எண்ணிக்கை ஒவ்வொரு வாரமும் மில்லியன் கணக்கில் அதிகரித்து வருகிறது.
தற்போது 500 க்கும் மேற்பட்ட நகரங்கள் பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. இது மனிதகுலத்தில் ஏறக்குறைய கால் பங்காகும்; அந்நகரங்களில் குறைந்தது 31 நகரங்கள், பத்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பெருநகரங்களாகும். மேலும் உலக வர்த்தகத்தில் மதிப்பிடப்பட்ட தொண்ணூறு சதவீதம், இத்தகைய சில டஜன் மையங்கள் வழியாகவே நடைபெறுகிறது. எதிர்வரும் பத்தாண்டுகளில் சுமார் ஒரு பில்லியன் ஆபிரிக்கத் தொழிலாளர்கள் உலகளாவிய தொழிலாளர் படையில் நுழைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, சீனா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவின் பின்தங்கிய கிராமப்புறங்களிலிருந்து பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்திச் சுற்றுகளுக்குள் இடம்பெயர்ந்த பில்லியன் கணக்கான தொழிலாளர்கள், WSWS விவரித்தபடி, 'ஒரே வாழ்நாளில் நூற்றாண்டுகள் முன்னோக்கிப் பாய்ந்துள்ளனர்.'
புறநிலைரீதியான சமூக, பொருளாதார நிகழ்ச்சிப்போக்குகள் புரட்சிகரப் போராட்டங்களை உருவாக்குகின்றன. நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் வாழ்க்கைத்தரம், தலைசுற்ற வைக்கும் அளவிலான ஏற்றத்தாழ்வு, ஆளும் வர்க்கத்தின் கோரமான ஊழல்களும் குற்றங்களும் மக்களின் சீற்றத்தையும் கோபத்தையும் தூண்டுகின்றன. ஆனால் இந்தக் கோபம், முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் விழிப்புணர்வு கொண்ட சர்வதேச அளவில் ஐக்கியப்பட்ட போராட்டமாகவும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
அத்துடன் இது, இந்த வரலாற்று சகாப்தத்தின் முக்கிய பிரச்சினையான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமைக்கான நெருக்கடிக்குத் தீர்வு காணவேண்டிய அவசியத்தை முன்கொணர்கின்றது. முதலாளித்துவ ஆட்சியின் பழைய மற்றும் பிற்போக்குத்தனமான கருவிகளான தற்போதுள்ள முதலாளித்துவக் கட்சிகள், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், முதலாளித்துவ தேசியவாத அமைப்புகள், எண்ணற்ற குட்டிமுதலாளித்துவக் குழுக்கள் ஆகியவற்றின் பிடி தகர்க்கப்பட வேண்டும். ஆளும் வர்க்கத்தின் அனைத்து முகமைகளிடமிருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
இதற்கு, அனைத்துலகக் குழுவின் தலைமையில் இயங்கும் உலகளாவிய ட்ரொஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தை உருவாக்குவது அவசியமாகிறது. அதன் வேலைத்திட்டத்தில், ஒரு நூற்றாண்டு காலப் போராட்டத்தை உள்ளடக்கிய பரந்த அளவிலான புரட்சிகர அனுபவங்கள் குவிந்துள்ளன.
அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் இன்னும் பரந்துபட்ட வெகுஜனக் கட்சிகளாக உருவாகவில்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அது ஒரு தவறு அல்ல, மாறாக, பழைய சமூக ஜனநாயக, ஸ்ராலினிச, தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்க முடிந்த ஒரு நீண்ட கால அரசியல் பிற்போக்கின் வெளிப்பாடாகும்.
ஆனால், ட்ரொட்ஸ்கி கூறியது போல், “வரலாற்றின் விதிகள் அதிகாரத்துவ எந்திரத்தை விட மிகவும் சக்தி வாய்ந்தவை.” முதலாளித்துவ நெருக்கடி உக்கிரமடைகின்றமை, வெகுஜனங்களைத் தீவிரமயப்படுத்துகிறது; அத்துடன் இது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பிரமாண்டமான வளர்ச்சிக்கான நிலைமைகளை உருவாக்கும்.
1940 மே மாதம், ஒரு ஸ்ராலினிச உளவாளியால் படுகொலை செய்யப்படுவதற்குச் சரியாக மூன்று மாதங்களுக்கு முன்பு ட்ரொட்ஸ்கியால் எழுதப்பட்ட ''நான்காம் அகிலத்தின் அறிக்கையில்'', உலக சோசலிசப் புரட்சியின் ஒப்பற்ற மூலோபாயவாதி விளக்கியதாவது:
“வரலாற்றில், போர் என்பது புரட்சியின் செவிலித் தாயாகப் பலமுறை இருந்துள்ளது. ஏனென்றால். அது காலாவதியாகிவிட்ட ஆட்சிகளை அதன் அஸ்திவாரம் வரை உலுக்கி, ஆளும் வர்க்கத்தைப் பலவீனப்படுத்தி, ஒடுக்கப்பட்ட மக்களிடையே புரட்சிகரமான சீற்றத்தின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துகிறது.”
அத்தகைய ஒரு நிலைமை உருவாகி வருகிறது. அமெரிக்க ஆளும் வர்க்கம், வெள்ளை மாளிகையில் ஒரு காவாலியை அமர்த்தி, தனது விவகாரங்களின் நிர்வாகத்தை பாதாள உலகத்திடம் ஒப்படைத்திருப்பதே, அதன் வரலாற்றுத் திவால்நிலைக்கு மறுக்க முடியாத சான்றாக உள்ளது.
மிகப் பெரிய தடைகளை எதிர்கொண்ட போதிலும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, தொழிலாள வர்க்கத்தின் முற்போக்கான பிரிவினரைத் தற்போதைய நெருக்கடிக்கு தயார்படுத்துவதற்காக அயராது உழைத்துள்ளது. நாங்கள் கடந்த 28 ஆண்டுகளாக அரசியல் பகுப்பாய்விற்கும் மூலோபாய வழிகாட்டுதலுக்கும் ஓர் ஒப்பற்ற கருவியாக செயற்பட்டு வருகின்ற உலக சோசலிச வலைத் தளத்தை உருவாக்கியுள்ளோம். அது மார்க்சிசத்தின் மரபையும், சோசலிசத்திற்கான போராட்டத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியையும் பாதுகாப்பதற்காக ஓயாத போராட்டத்தை நடத்தி வருகிறது.
அனைத்துலகக் குழுவுடன் இணைந்த கட்சிகள், தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேசக் கூட்டணியை (IWA-RFC) உருவாக்குவதன் மூலம், ஏகாதிபத்திய சார்பு மற்றும் பெருநிறுவன-சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. இதன் நோக்கம், தற்போதுள்ள தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் மீது செல்வாக்கு செலுத்துவது அல்ல, மாறாக, அவற்றுக்கு எதிராக சாமானியத் தொழிலாளர்களின் கிளர்ச்சியை ஒழுங்கமைத்து, தொழிற்சாலை மற்றும் வேலைத்தளங்களில் உள்ள தொழிலாளர் நடவடிக்கை குழுக்களுக்கு அதிகாரத்தை மாற்றுவதே ஆகும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு, இளம் தலைமுறையினருக்கு மார்க்சிசத்தைப் பயிற்றுவித்து, மனச்சோர்வூட்டும் ஆர்ப்பாட்ட அரசியலின் தந்திரோபாயங்களுக்கு எதிராக ஒரு புரட்சிகர மாற்றீட்டை வழங்கி, அவர்களின் ஆற்றல்களை தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை நோக்கித் திருப்புகிறது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் கழு உருவாக்கியுள்ள Socialism AI, 2025 டிசம்பரில் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்டது. ஆளும் வர்க்கம் தன்னை செழுமைப்படுத்திக் கொள்ளவும், தொழிலாளர்களை வறுமையில் தள்ளவும், சுரண்டலைத் தீவிரப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் வேளையில், அனைத்துலகக் குழுவானது சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் வேகப்படுத்தவும் அத்தொழில்நுட்பத்தின் மகத்தான ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்கிறது.
அனைத்துலகக் குழுவில் இயங்கும் அனைத்துப் பல்வேறு அங்கங்களும், முதலாளித்துவக் காட்டுமிராண்டித்தனத்தை தோற்கடித்து, மனிதகுலத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்பும் இலக்கை நோக்கியே இயக்கப்படுகின்றன. இந்தக் காலகட்டத்தின் அனுபவங்களிலிருந்து தேவையான முடிவுகளை எடுத்து, அதன் அங்கங்களில் தங்களை இணைத்துக்கொள்ளும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் சோசலிச புத்திஜீவிகளால் இந்தக் கட்சி கட்டியெழுப்பப்படும். ICEஐ எதிர்த்துப் போராடும் தொழிலாளர்களுக்கும், மறியல் போராட்டங்களில் ஈடுபடும் வேலைநிறுத்தக்காரர்களுக்கும், பல்கலைக்கழக வளாகங்களில் இனப்படுகொலையை எதிர்க்கும் மாணவர்களுக்கும், ஒவ்வொரு கண்டத்தின் வீதிகளிலும் திரண்டுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கும் இப்போது எழும் கேள்வி, போராடுவதா இல்லையா என்பதல்ல. மாறாக, எப்படிப் போராடுவது, எந்த பதாகையின் கீழ் போராடுவது என்பதே ஆகும்.
இந்தக் கேள்விகளுக்கான எங்கள் பதில் இதுதான்: அதிகாரத்திற்காக சர்வதேச தொழிலாளர் வர்க்கம் முன்னெடுக்கும் நனவானதும் ஒழுங்கமைக்கப்பட்டதுமான போராட்டமே முன்னேறிச் செல்வதற்கான பாதையாகும். அதன் பதாகை நான்காம் அகிலத்தினுடையது. ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை உருவாக்குங்கள் என நாம் அழைப்பு விடுக்கிறோம். சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுங்கள். உலக சோசலிசப் புரட்சியை நோக்கி முன்னேறுவோம்!.
