ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் முற்றுகையும், ஈரானிய நாகரிகத்தையே அழித்துவிடுவேன் என்ற அவரது அச்சுறுத்தலும் சர்வதேச வர்க்கப் போராட்டத்தில் ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கின்றன. ஈரான் மீது ஒரு நவகாலனித்துவ ஆட்சியைத் திணிப்பதில் அவரது ஆக்கிரமிப்புப் போர் இன்னும் வெற்றிபெறவில்லை என்பதால், ட்ரம்புக்கு ஏற்பட்ட பின்னடைவு தெளிவாகத் தெரிகிறது. ஆனால், ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம், தொழிலாளர்களின் உரிமைகளையும் வாழ்க்கைத் தரத்தையும் குறிவைத்து ஒரு சமூக மற்றும் பொருளாதாரத் தாக்குதலுக்குத் தயாராவதன் மூலம் இதற்குப் பதிலளித்து வருகிறது.
ஈரான் மீதான போரையோ அல்லது ஐரோப்பாவின் எரிசக்தி விநியோகத்தைத் துண்டிக்கும் முற்றுகையையோ கண்டிக்காத பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் விஷயத்தில், இது மிகத் தெளிவாகத் தெரிகிறது. பொருளாதார மந்தநிலை அச்சுறுத்தலைப் புறக்கணித்து, பிரெஞ்சு மக்கள் ஏற்கனவே பெருமளவில் நிராகரித்த சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதற்கு, அரசாங்கம் இதை ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தத் தயாராகி வருகிறது.
பிரெஞ்சு சர்வதேச உறவுகள் நிறுவனத்தால் (IFRI) சோந்தி (Chantilly) என்ற இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் வெள்ளிக்கிழமை அன்று வரவிருக்கும் எரிசக்தி நெருக்கடியை வலியுறுத்திய, டோட்டல் எனேர்ஜி தலைமை நிர்வாக அதிகாரி பாட்ரிக் பௌயானின் கருத்துக்களுக்கும், மக்ரோனின் கருத்துக்களுக்கும் இடையே ஒரு வெளிப்படையான முரண்பாடு உள்ளது.
“சில ஆசிய நாடுகள் ஏற்கனவே அனுபவித்து வருவதைப் போன்ற ஒரு எரிசக்தி தட்டுப்பாடு காலத்திற்குள் பிரான்ஸ் நுழையும் அபாயம் உள்ளது... இந்தப் போரும் முற்றுகையும் மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்தால், மண்ணெண்ணெய் போன்ற சில பொருட்களுக்கு கடுமையான விநியோகப் பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ளத் தொடங்குவோம்” என்று பௌயான் கூறினார். அவர் மேலும் கூறுகையில்: “அட்லாண்டிக் பகுதியில் இன்னும் தட்டுப்பாடு ஏற்படவில்லை... ஆனால் உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகளில் 20 சதவீதத்தை [அதாவது பாரசீக வளைகுடா பிராந்தியத்தைச் சேர்ந்தவை] அணுக முடியாமல் விட்டுவிடுவது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்” என்றார்.
“ஐரோப்பாவின் வீட்டு வாசலில் பற்றாக்குறை உள்ளது” என்று பிரான்ஸ் இன்போ-வில், அரசியல் அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியரான தியரி புரோஸ் எச்சரித்தார். “கப்பல்கள் சொற்பமாகவே வந்து கொண்டிருக்கின்றன” என்று சுட்டிக்காட்டிய அவர், “ஆட்சி செய்வது என்பது முன்கூட்டியே கணிப்பதே ஆகும்” என்று மேலும் கூறினார்.
ஆனால், ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் இனப்படுகொலை அச்சுறுத்தல்களைக் கண்டிக்காதது போலவே, ஐரோப்பாவின் எரிசக்தி விநியோகத்தை அவர் முடக்குவதையும் மக்ரோன் அரசாங்கம் கண்டிக்கவில்லை. சனிக்கிழமை ஏதென்ஸுக்குப் பயணம் மேற்கொண்ட மக்ரோன், போரினால் ஏற்படும் பொருளாதார அபாயங்களை குறைத்து மதிப்பிட்டதுடன், பௌயானை மறைமுகமாக விமர்சித்தார்.
எரிசக்தி பற்றாக்குறை ஆபத்து குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, இந்த விஷயத்தில் தன்னிடம் சொல்வதற்கு ஏதுமில்லை என்று மக்ரோன் பதிலளித்தார்: “நீங்கள் விவரித்த மிக மோசமான சூழல்களில் ஒன்றில் நாங்கள் இல்லை. அது இன்று மிகவும் சாத்தியமானதும் அல்ல, அதைப் பற்றி நான் கருத்து தெரிவிக்கத் தேவையில்லை… தற்போதைய நிலையில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்று என்னால் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். இன்று எந்தப் பற்றாக்குறையையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்றார்.
உண்மையில், இந்த எரிசக்தி நெருக்கடியானது, ஆசியாவில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலும் பற்றாக்குறையை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. இப்போது இது பொதுவான பற்றாக்குறை என்பதற்குப் பதிலாக, விலை உயர்வாகக் காணப்படுவதற்கு என்ன காரணம் என்றால், மார்ச் 11 அன்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள் உட்பட சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) 32 உறுப்பு நாடுகள், தங்களது மூலோபாய கையிருப்பிலிருந்து 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை விடுவித்ததே ஆகும். இது IEA வரலாற்றிலேயே கையிருப்பிலிருந்து வெளியிடப்பட்ட மிகப்பெரிய அளவாகும். ஆனால் போர் தொடர்ந்தால், சில மாதங்களுக்குள் இந்தக் கையிருப்பு தீர்ந்துவிடும் என்பதால், இது நெருக்கடியைத் தீர்க்கப் போவதில்லை.
டோட்டல் நிறுவனத்தின் கவலைகள் வெறும் பீதியால் உருவானவை என்றும், அது இல்லாத ஒரு நெருக்கடியை உருவாக்கக்கூடும் என்றும் மக்ரோன் மறைமுகமாகக் குறிப்பிட்டார். “இத்தகைய பதட்டமான மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தருணங்களில், மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால், பீதி நிறைந்த செயல்பாடுகளால் அந்த பதட்டங்கள் அதிகரிப்பதே ஆகும். … மேலும் பெரும்பாலும், பீதியாலேயே பற்றாக்குறைகள் உருவாக்கப்படுகின்றன” என்றும் அவர் கூறினார்.
உண்மையில், எரிசக்தி பற்றாக்குறை மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகியவற்றின் அபாயம் என்பது பீதியை உருவாக்குபவர்களால் கற்பனை செய்யப்பட்ட ஒரு மிகைப்படுத்தப்பட்ட கட்டுக்கதை அல்ல. ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் நடத்தும் போர் ஒரு உண்மையான நெருக்கடியை உருவாக்கி வருகிறது. தொழிலாளர்கள் போரைத் தடுக்கத் தவறினால், உலகையே உலுக்கப்போகும் ஒரு பரந்த பொருளாதார மற்றும் இராணுவப் பூகம்பத்திற்கான முன்னறிவிப்புகளாகவே, தற்போது உயர்ந்துவரும் எண்ணெய் விலைகளும், பிரான்சில் உள்ள சில எரிபொருள் நிலையங்களில் நிலவும் பற்றாக்குறைகளும் இருக்கின்றன.
பிரெஞ்சு பங்குச் சந்தையிலும் பிரெஞ்சு அரசிலும் முக்கிய பங்கு வகிக்கும் டோட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் எச்சரிக்கை, மக்ரோன் இந்த ஆபத்துக்களை அறியாமையினால் அல்லாமல் தெரிந்தே மறைக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. பிரெஞ்சு மக்களின் முதுகிற்குப் பின்னால் அவர் இதை முடிவு செய்தார்; உண்மையில், போர் தொடங்குவதற்குச் சற்று முன்பு, ஈரானில் “ஒன்றாகச் சேர்ந்து பெரிய விஷயங்களைச் செய்வோம்” என்று ட்ரம்பிற்கு ஆங்கிலத்தில் ஒரு தனிப்பட்ட குறுஞ்செய்தியை மக்ரோன் அனுப்பியிருந்தார்.
ஐரோப்பாவின் பொருளாதாரத்தை ட்ரம்ப் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கும்போது, மக்ரோன் அவருக்குத் துணையாக நிற்கிறார் என்றால், அதற்குக் காரணம், பிரெஞ்சு ஏகாதிபத்தியம், குறைந்தபட்சம் இப்போதைக்காவது, அமெரிக்காவின் தோல்வியை விரும்பவில்லை என்பதே ஆகும். மத்திய கிழக்கில் உள்ள அதன் சொந்த இராணுவத் தளங்கள், அரபு ஷேக் நாடுகளுக்கு அது செய்யும் ஆயுத ஏற்றுமதி மற்றும் உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதன் வங்கிகளின் பங்கு ஆகியவற்றின் மீது இத்தகைய தோல்வி ஏற்படுத்தும் தாக்கத்தைக் கண்டு அது அஞ்சுகிறது. ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் இனப்படுகொலை அச்சுறுத்தல்களைக் கண்டிப்பது, காஸா இனப்படுகொலைக்கு மத்தியில் இஸ்ரேலிய ஆட்சியுடன் மக்ரோன் கொண்டுள்ள நட்பையும் கேள்விக்குள்ளாக்கும்.
பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் இராணுவ நெருக்கடியானது, தொழிலாளர்களின் செலவில் தீர்க்க விரும்பும் அதன் சமூக நெருக்கடியிலிருந்து பிரிக்க முடியாததாகும். 2023-ல் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்களை புதிய மக்கள் முன்னணியின் (New Popular Front) கட்சிகளும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் காட்டிக்கொடுத்ததிலிருந்து, மக்ரோன் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக ஆட்சி செய்து வருகிறார். தொடர்ச்சியாக வந்த சிறுபான்மை அரசாங்கங்கள் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்க முயன்றன. ஆனால், செல்வந்தர்களுக்கு வரி விதிக்க மறுப்பதை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கொள்கையால், பற்றாக்குறையைக் குறைக்க முடியவில்லை. ஏனெனில், பாரிஸ் இராணுவச் செலவினங்களையும் பல்லாயிரக்கணக்கான கோடி யூரோக்கள் அளவுக்கு அதிகரித்து வருகிறது.
ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் ஆக்கிரமிப்புப் போர் தூண்டிய நெருக்கடியை, பிரெஞ்சு அரசாங்கம் இப்போது தனது உள்நாட்டு அரசியல் வர்க்கப் போருக்கான நிகழ்ச்சி நிரலுக்குப் பயன்படுத்த முயற்சிக்கிறது. தொழிலாளர்களுக்கு எதிரான சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கான ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்க, இனப்படுகொலையையும் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பையும் அரசாங்கம் பயன்படுத்திக் கொள்கிறது.
பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவின் அறிக்கைகள் இதைத் தெளிவாகக் காட்டுகின்றன. கடந்த வாரம், தனது அமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தில், “இந்த நெருக்கடியின் மொத்த செலவு, இன்றுவரை, குறைந்தது 6 பில்லியன் யூரோக்களாக இருக்கலாம்” என்று அவர் அறிவித்தார். பொதுக் கணக்குத் துறை அமைச்சர் டேவிட் அமீல் இதற்குப் பதிலளிக்கையில், எரிசக்தி “நெருக்கடியால்” தேவைப்படும் “எந்தவொரு புதிய பொதுச் செலவினமும்”, ஏற்கனவே திட்டமிடப்பட்ட செலவினங்களை “ஒவ்வொரு யூரோவிற்கும் ஈடாக ரத்து செய்வதன்” மூலமே ஈடுகட்டப்படும் என்று அறிவித்தார்.
இவ்வாறாக, ஈரானிய நெருக்கடியைப் பயன்படுத்தி, நிகர செலவினங்களில் பூஜ்ஜிய அதிகரிப்பு என்ற கொள்கையை மக்ரோன் நிலைநிறுத்த முயல்கிறார். பணக்காரர்கள் மீது வரி விதிக்கப்படாமல், இது தவிர்க்க முடியாமல் கடுமையான சிக்கன நடவடிக்கையையே குறிக்கிறது.
இக்கொள்கையை எதிர்த்துப் போராட, 2023 வேலைநிறுத்தங்களின் காட்டிக்கொடுப்பிலிருந்து தொழிலாளர்கள் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். தொழிலாளர்கள் ஒரு நீண்டகாலப் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும். அவ்வாறு செய்ய, தொழிற்சங்க அதிகாரத்துவங்களிடமிருந்து தங்கள் போராட்டங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்காக, சாமானிய தொழிலாளர் மட்டத்தில் அவர்கள் சுயாதீனமாக தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மக்ரோனை வீழ்த்தக்கூடிய எந்தவொரு போராட்டத்தையும் இந்த அதிகாரத்துவங்கள் நிராகரித்தன. இருப்பினும், அத்தகைய போராட்டம் இல்லாமல், போரையும் பொருளாதார நெருக்கடியையும் நிறுத்துவது என்பது சாத்தியமில்லை.
அனைத்திற்கும் மேலாக, பிரான்சிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்கள் ஒன்றிணைய வேண்டும்: அனைவரும் பொருளாதார மந்தநிலை மற்றும் பொதுவான இராணுவப் போர்ச் சூழலின் அபாயத்தை எதிர்கொள்கிறார்கள். போர்வெறி பிடித்த முதலாளித்துவ தன்னலக்குழுக்களிடமிருந்து அதிகாரத்தைப் பறித்து, ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டியெழுப்பும் முன்னோக்கின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே தீர்க்கமான கேள்வியாகும்.
