இலங்கை அரசாங்கம் தமிழ் எழுத்தாளரின் புத்தக வெளியீட்டை தடுக்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மார்ச் மாத இறுதியில், அப்பட்டமான தணிக்கை நடவடிக்கையாக, நாட்டின் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணமான கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் உயர் தர மாணவர்களுக்குக் கற்பிக்கும் தமிழ் எழுத்தாளர் பிரதீபன் தீபச்செல்வனின் புத்தகங்களை இலங்கை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட படைப்புகளில், நடுகல், பயங்கரவாதி மற்றும் சயனைடு' ஆகிய மூன்று நாவல்களும் ஒரு கட்டுரைத் தொகுப்பும், ஒரு நேர்காணல் நூலும் அடங்கும்.

விருது பெற்ற எழுத்தாளர் பிரதீபன் தீபச்செல்வன் [Photo: Facebook/Nadika Asanga Weligodapola]

இந்தியாவின் சென்னையிலிருந்து அனுப்பப்பட்டு கொழும்புக்கு வந்தடைந்த ஐந்து புத்தகங்களின் 360 பிரதிகளைச் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தமை, இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்த இனவாதப் போரினால் ஏற்பட்ட சமூக, அரசியல் அனுபவங்களைக் கையாளும் இலக்கியங்களின் புழக்கத்தைத் தடுப்பதற்கான அரசின் நேரடித் தலையீட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

சிறிதளவு கூட ஆதாரம் காட்டாமல், அந்தப் புத்தகங்கள் “தேசியப் பாதுகாப்புக்கும்” “தேசிய நல்லிணக்கத்திற்கும்” அச்சுறுத்தலாக இருப்பதாக சுங்க அதிகாரிகள் கூறினர். அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க இயலாததால், இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர், சுங்க அதிகாரிகள் இந்த விவகாரத்தை புத்த சாசனம், சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட ஒரு “சிறப்புக் குழுவிற்கும்” அத்துடன் இராணுவ அதிகாரிகளுக்கும் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.

தமிழர்-விரோத பேரினவாதத்தில் ஊறிப்போயுள்ள ஆளும் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தின் தூண்டுதல் இல்லாமல், சுங்கத்துறை அதிகாரிகளால் இதுபோன்ற எதேச்சதிகாரமான, அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்படமாட்டாது.

புத்தகங்கள் பரிசீலனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள தனது பிரதிநிதிகளுக்கு அதிகாரிகள் தெரிவித்ததாக தீபச்செல்வன் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார். சுதந்திர ஊடக இயக்கம் உட்பட பல சிவில் உரிமை அமைப்புகள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்ததைத் தொடர்ந்து, சுங்கத்துறை மூன்று புத்தகங்களை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

மீதமுள்ள இரண்டு படைப்புகளும், “சமூகங்களுக்கிடையேயான நல்லிணக்கத்திற்குச் சேதம் விளைவிக்கக்கூடும்” என்ற குற்றச்சாட்டின் பேரில் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன; இந்தக் குற்றச்சாட்டுக்கு இன்னும் எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை.

அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் மேற்கொள்ளும் இந்தச் செயல்கள், “தேசிய நல்லிணக்கத்தைப் பாதுகாத்தல்” என்ற போலியான பெயரில், கருத்துச் சுதந்திரத்தின் மீதான நேரடியான மற்றும் அப்பட்டமான தாக்குதலாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) உலக சோசலிச வலைத் தளமும் இந்தத் தணிக்கை நடவடிக்கையைக் கண்டிப்பதோடு, பிரதீபனின் அனைத்துப் புத்தகங்களையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்க வேண்டும் என்றும் கோருகின்றன. எழுத்தாளர்களும் கலைஞர்களும் அரசின் தலையீடோ அல்லது அச்சுறுத்தலோ இன்றித் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்கான ஜனநாயக உரிமையைப் பெற்றிருக்க வேண்டும்.

ஏழு கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ள தமிழ் எழுத்தாளரான தீபச்செல்வன், இலங்கையின் மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரிலிருந்து உருவான கருப்பொருள்களைத் தொடர்ந்து கையாண்டு வருகிறார். அவரது படைப்புகள் சிங்களம், மலையாளம், ஹிந்தி, பிரெஞ்சு மற்றும் நோர்வேஜிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இது, இலங்கையில் உள்ள இனப் பிரிவினைகளைக் கடந்து சர்வதேச அளவில் பரந்து விரிந்த வாசகர் வட்டத்தைக் கொண்டிருப்பதை பிரதிபலிக்கிறது.

பி.பி. சரத் ஆனந்தவால் சிங்களத்தில் ஸ்மாரக ஷீலாவத என மொழிபெயர்க்கப்பட்ட அவரது முதல் நாவலான நடுகல், போர் முடிவடைந்த பின்னர் வடக்கில் வெளிவந்த முதல் நாவல் என்று கூறப்படுகிறது. அது வெளியான பிறகு, புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து விசாரணை செய்வதற்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) தீபச்செல்வனை அழைத்தது.

நடுகல், பல தசாப்தங்களாக நீடித்த தமிழர்-விரோத போரில் எழுத்தாளரின் சொந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது. அந்த மோதலால் தனது குழந்தைப் பருவமும் இலட்சியங்களும் சிதைக்கப்பட்ட ஒரு தமிழ் பிள்ளையின் நினைவுகளின் வழியே இது விரிகிறது. இந்த நாவலின் முன்னுரையில் எழுத்தாளர் கூறுவதாவது: “நாம் வன்முறையும் போரும் இல்லாத ஓர் மண்ணில் மனிதர்களாக வாழ வேண்டும். அங்குள்ள மக்களுக்குச் சுதந்திரமும் மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும். நம் பிள்ளைகளின் அந்த அப்பாவித்தனமான விருப்பத்தை இந்தப் புதினத்தின் மூலம் நான் கலந்துரையாட முயன்றிருக்கிறேன்.”

கைப்பற்றப்பட்ட நூல்களில் ஒன்று, நாட்டின் நீடித்த தமிழர்-விரோத உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட பேரழிவுகளை மையமாகக் கொண்டுள்ள அதேநேரம், மற்றொன்று, போர்க்கால அனுபவங்கள் குறித்த நேர்காணல்களைக் கொண்டுள்ளது. இந்த நூல்கள் ஒரு “பாதுகாப்பு அச்சுறுத்தலாக” அமையாது. போரைப் பற்றிய எந்தவொரு தீவிரமான ஆய்வும், தன்னிடம் பதிலில்லாத கேள்விகளை எழுப்பி, அதுவே பொறுப்புக் கூறவேண்டிய குற்றங்களைச் சுட்டிக்காட்டிவிடும் என்று கொழும்பு அரசியல் ஸ்தாபனம் அஞ்சுகிறது.

போரினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள், மாணவர்கள் மற்றும் சாதாரண மக்களின் வாழ்வின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டே தனது படைப்புகள் உருவாகின்றன என்று விளக்கிய தீபச்செல்வன், அதிகாரிகளின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். பல பத்தாண்டுகால ரத்தக் களரியால் ஆழமாகப் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில், அறிவுசார் மற்றும் பண்பாட்டுப் புரிதலுக்குப் பங்களிப்பதே தனது நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவருடைய பல நூல்கள் ஏற்கனவே சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பரந்த சிங்கள மொழி பேசும் வாசகர் வட்டத்தைக் கொண்டுள்ளன. இந்த ஒரு உண்மையே, அவருடைய எழுத்துக்கள் சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன என்ற மோசடியான கூற்றை அம்பலப்படுத்துகிறது. இன மோதலை அல்ல; மாறாக, போரையும் அதனை உருவாக்கிய முதலாளித்துவ அமைப்பையும் நேர்மையாக ஆராய்வதன் மூலம், சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களும் இளைஞர்களும் அரசியல் ரீதியான முடிவுகளை எடுத்துவிடக்கூடிய சாத்தியத்தைப் பற்றியே அதிகாரிகள் பீதியடைந்துள்ளனர்.

இந்த நூல்களையும் கட்டுரைகளையும் இராணுவ ஆய்வுக்கு உட்படுத்த அரசாங்க அதிகாரிகள் எடுத்த முடிவு, இலக்கிய மற்றும் கலைப் படைப்புகள் மீது நேரடி இராணுவத் தணிக்கையைத் திணிப்பதற்குச் சமமாகும். 2009 மே மாதம் முடிவடைந்த, கொழும்பின் அடுத்தடுத்த அரசாங்கங்களால் நடத்தப்பட்ட 26 ஆண்டுகால இரத்தக்களரி இனவாதப் போரின்போது, ​​பெரும்பான்மையான தமிழ் மக்கள் வாழும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தனது ஆக்கிரமிப்பைத் தொடர்ந்துகொண்டே, இராணுவம் அரசியல் மற்றும் நிர்வாக அமைப்பிற்குள் ஆழமாக நுழைந்துகொண்டது.

இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல, மாறாக ஒரு பரந்த போக்கின் பகுதியாகும். ரணில் விக்கிரமசிங்கவின் முந்தைய அரசாங்கத்தின் கீழ், இதே போன்ற காரணங்களுக்காக குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு பறிமுதல் செய்யப்பட்டது. கொழும்பு அரசியல் ஸ்தாபனம், எதிர்ப்புகளை அடக்குவதற்கும் சிறுபான்மை சமூகங்களை அச்சுறுத்துவதற்கும் “தேசியப் பாதுகாப்பு” மற்றும் “சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாத்தல்” என்ற கூற்றுக்களை மீண்டும் மீண்டும் முன்வைத்து வருகிறது.

ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் சமூகக் கோபத்திற்கு மத்தியிலேயே, தீபச்செல்வனுக்கு எதிரான ஜனநாயக விரோத நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. திசாநாயக்க அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கனக் கட்டளைகளைச் செயல்படுத்தி, வரி உயர்வுகள், செலவினக் குறைப்புகள் மற்றும் தனியார்மயமாக்கல் ஆகியவற்றின் மூலம் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

1948இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள், அதிகரித்து வந்த சமூகப் பதற்றங்களைத் திசைதிருப்புவதற்கும் முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாப்பதற்கும் தமிழர்-விரோத பேரினவாதத்தைத் திட்டமிட்டு வளர்த்து வந்தன. இந்தக் கொள்கை, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிரான ஒரு நீண்டகால இனவாதப் போரில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இராணுவ நடவடிக்கைகளின் இறுதி மாதங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானோர் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டனர். தொடக்கத்திலிருந்தே சிங்களப் பேரினவாதத்தில் ஊறிப்போயிருந்த ஜே.வி.பி, அந்த இனவாதப் போரின் தீவிர ஆதரவாளராக இருந்தது.

அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அமைப்பான அதிகாரமற்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தீபச்செல்வனின் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை கருத்துச் சுதந்திர மீறல் எனக் கண்டித்துள்ளது. இந்தப் பறிமுதலைக் கண்டித்துள்ள சுதந்திர ஊடக இயக்கமும், இலக்கியம் 'தேசியப் பாதுகாப்புக்கு' அச்சுறுத்தலாக அமைகிறதா என்பதைத் தீர்மானிக்கும் சுங்க அதிகாரிகளின் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

அரசாங்கத்தின் “தேசிய நல்லிணக்கம்” என்ற முழக்கத்தின் பின்னணியில் உள்ள பாசாங்குத்தனம் அப்பட்டமாகத் தெரிகிறது. தமிழ் எழுத்தாளர்கள் தணிக்கை செய்யப்படும் அதேவேளை, சிங்கள பேரினவாதம் மற்றும் இராணுவவாதப் பிரச்சாரங்கள் தடையின்றித் தொடர்ந்து பரவி வருகின்றன. 2024 மற்றும் 2025 ஆகிய இரு ஆண்டுகளிலும் கொழும்பு சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில், இனவாதப் போரைப் போற்றும் மற்றும் சிங்கள-பௌத்த மேலாதிக்கக் கருத்தியலை ஊக்குவிக்கும் புத்தகங்கள் இராணுவத்தால் நடத்தப்படும் அரங்குகளில் வெளிப்படையாகக் காட்சிப்படுத்தப்பட்டன. முந்தைய அரசாங்கமோ அல்லது தற்போதைய ஜே.வி.பி. தலைமையிலான அரசாங்கமோ இதற்கு எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.

கருத்துச் சுதந்திரத்தின் மீதான இத்தகைய தாக்குதல்கள் இலங்கைக்கு மட்டும் தனித்துவமானவை அல்ல. தெற்காசியா முழுவதும், அரசாங்கங்கள் எதிர்ப்புகளை அடக்குவதற்கு “தேசியப் பாதுகாப்பு,” “மத நல்லிணக்கம்” மற்றும் “பொது ஒழுங்கு” ஆகியவற்றைச் சாக்குப்போக்குகளாக அதிகளவில் பயன்படுத்துகின்றன. இந்தியாவில், இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம், மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட புத்திஜீவிகள் மீதான தணிக்கையையும் தாக்குதல்களையும் ஊக்குவித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில், “அரசுக்கு எதிரான பிரச்சாரத்தைப்” பரப்புவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் கைது மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்.

இந்த அபிவிருத்திகள், ஆழமடைந்து வரும் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி மற்றும் தீவிரமடைந்து வரும் ஏகாதிபத்தியப் போட்டிகளிலிருந்து பிரிக்க முடியாதவை ஆகும். உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் போர், சமத்துவமின்மை மற்றும் பொருளாதாரச் சரிவினாலும் தூண்டப்படும் சமூகக் கொந்தளிப்புகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வேளையில், சர்வாதிகார ஆட்சி வடிவங்களை வலுப்படுத்தி வருகின்றன.

இலங்கையில் பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்படுவதைக் கண்டித்த சர்வதேச பத்திரிகையாளர் சங்கம் (IFJ), இத்தகைய நடவடிக்கைகள் “ஊடகப் பணியாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் அபாயகரமாக அதிகரிக்கின்றது” என்று எச்சரித்ததோடு, பத்திரிகையாளர்கள், துன்புறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அஞ்சாமல் சுதந்திரமாகப் பணியாற்ற முடியும் என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது.

புத்தரின் அலைச்சல் எனும் நூலின் எழுத்தாளரான கே.கே. சீநாத் மற்றும் பதிப்பாளரான உபுல் சாந்த சன்னஸ்கல ஆகியோருக்கு எதிராக, கடுமையான சர்வதேச குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கு, தற்போது இலங்கையின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அரசை கேள்விக்குட்படுத்தி, ஆளும் வர்க்கத்தின் குற்றங்களை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் மீதான தாக்குதல்களை இலங்கை மீண்டும் மீண்டும் கண்டுள்ளது. மிக சமீபத்தில், நாட்டில் நிலவி வரும் எரிசக்தி நெருக்கடி குறித்து செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, சிலோன் டுடே பத்திரிகையின் பிரதி ஆசிரியரான தமிழ் பத்திரிகையாளர் சுலோச்சனா ராமையா மோகன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) துன்புறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளார்.

ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பை எந்தவொரு முதலாளித்துவக் கட்சியிடமும் ஒப்படைக்க முடியாது. தணிக்கைக்கும் இனவாதத்திற்கும் எதிரான போராட்டத்திற்கு, ஒரு சோசலிச மற்றும் சர்வதேசவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரட்டுவது அவசியமாகிறது.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் அனைத்து வகையான இனவாத அரசியலையும் நிராகரித்து, எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.

தீபாச்செல்வனின் நூல்களின் உடனடி விடுவிப்பதானது, அரசின் அடக்குமுறை, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகாரம், போர், இனவாதப் பிரிவினை ஆகியவற்றை உருவாக்கும் முதலாளித்துவ முறைமைக்கு எதிரான ஒரு பரந்த போராட்டத்தின் அங்கமாக ஆக வேண்டும்.

Loading