இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
அருள்பயாஸ் என்றழைக்கப்படும் 17 வயதுத் தமிழ் இளைஞரான அயூப்ராஜ் அருள்பாயாஸ், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவின் அதிகார வரம்பிற்குட்பட்ட அல்லைப்பிட்டி வீதியில் வைத்து இலங்கைப் பொலிசால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, அருள்பயாசும் இரண்டு இளம் குடும்ப உறவினர்களும் ஒரு டொல்பின் வகை வேனில், ஒரு நெல் வயலுக்கு அறுவடைத் தொழிலாளர்களை அழைத்து வருவதற்காக அதிகாலை சுமார் 1:18 மணியளவில் அல்லைப்பிட்டிக்குப் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இருப்பினும், யாழ்ப்பாணம்–ஊர்காவற்றுறை வீதியில் அல்லைப்பிட்டி சந்தியில் உள்ள சோதனைச் சாவடியில், நிற்கும்படி மீண்டும் மீண்டும் கொடுக்கப்பட்ட உத்தரவுகளை அந்த வாகனம் மீறியதாக பொலிஸ் கூறியது. அதிகாரிகள் மண்டைத்தீவு சந்தியில் இருந்த சோதனைச் சாவடிக்கு தகவல் தெரிவித்து, ரோந்து ஜீப்பில் பயணம் செய்து அந்த வேனைத் தடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. எச்சரிக்கைக்காக மேல்நோக்கி ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பின்பும், வேன் தொடர்ந்து தப்பிச் சென்றதால், அதிகாரிகள் வாகனத்தின் மீது நேரடியாகச் சுடத் தூண்டப்பட்டதாகக் பொலிஸ் கூறியது.
பொலிசின் கூற்று, உடல் ரீதியான சான்றுகள் மற்றும் பிரேத பரிசோதனை முடிவுகளுடன் முரண்படுகின்றன. அந்த வேன் சாலையின் ஓரத்தில் முறையாக நிறுத்தப்பட்டிருந்தமை, வாகனம் நிறுத்தப்பட்ட பிறகு பாதிக்கப்பட்டவர் சுடப்பட்டிருக்கலாம் என காட்டுகிறது. பின்புறத்திலிருந்தே சுட்டதாக பொலிஸ் கூறியுள்ளது. இருப்பினும், தோட்டாவின் பாதை, வேனின் முன்பக்கத்திலிருந்து சாரதி நேரடியாகக் குறிவைத்து சுடப்பட்டதைக் காட்டுகிறது.
சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம். மயூரதன் முன்னிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், அருள்பயாசின் நெற்றியில் ஒரு தோட்டா நுழைந்து, அவரது மண்டையோட்டை ஊடுருவி, மூளையைத் துளைத்து, மரணத்திற்குக் காரணமான காயங்களை ஏற்படுத்தியது என்பது உறுதி செய்யப்பட்டது.
பொலிசார், பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்கவும் முயற்சிக்கின்றனர். அந்த வேன் கால்நடை கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும், அதன் பின்னிருக்கைகள் அகற்றப்பட்டதாகவும், மேலும் அந்த பதின்வயது இளைஞர் 'ஐஸ்' மற்றும் ஹெரோயின் உட்கொண்டிருந்ததாக நச்சியல் அறிக்கைகள் தெரிவித்ததாகவும் அவர்கள் கூறினர். துருப்பிடித்த வாள் ஒன்று, கத்தி, ஒரு புதிய கயிற்றுச்சுருள், கஞ்சா மற்றும் மாட்டு எரு ஆகியவை வாகனத்திற்குள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசு எருவின் புகைப்படங்கள் திட்டமிட்டு எடுக்கப்பட்டதாகத் தோன்றுவதாகவும், படப்பிடிப்புத் தளத்திலிருந்து 50 அடி தொலைவில் ஒரு பை எரு கண்டெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டு, பலர் இந்தக் கூற்றுகள் குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
குறிப்பாக, போரால் பேரழிவிற்குள்ளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொண்ட குற்றவியல் அல்லது பிற நடவடிக்கைகளை நியாயப்படுத்த, இலங்கை பொலிஸ் பொய்க்கதைகளைப் புனைவதில் பேர்போனது. இந்த மாகாணங்கள் கடுமையான இராணுவ ஆக்கிரமிப்பின் கீழும், அதோபோல், வலுவான பொலிஸ் பிரசன்னத்துடனும் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளதுடன், மக்களை அச்சுறுத்துவதற்காக சோதனைச் சாவடிகள் அடிக்கடி அமைக்கப்படுகின்றன.
செவ்வாய்க்கிழமையன்று கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும், பெப்ரவரி 24 வரை காவலில் வைக்கப்படுவதாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், வியாழக்கிழமையன்று, அவர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அயூப்ராஜ் அருள்பயாஸ், வட்டுக்கோட்டை கிழக்கு, சித்தன்கேனியில் வசித்தவரும் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். அவர் தன் குடும்பம் முழுவதையும் காப்பாற்றுவதற்கு கடுமையாக உழைத்து வந்தார்.
WSWS நிருபர்கள் அவர்களின் வீட்டிற்குச் சென்றபோது, அவரது உடல் தலையில் கட்டுடன் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.
நேற்று (பெப்ரவரி 12), அருள்பயாஸின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. ஒரு மாபெரும் போராட்டத்துக்கு அஞ்சி, பொலிஸ் எந்தவொரு போராட்ட நிகழ்வையும் தடைசெய்யும் உத்தரவை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெற்றிருந்தது. மிரட்டல் காரணமாக, இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் சுமார் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்கள் பாதிக்கப்பட்டவருக்கு நீதி வேண்டும் என்றும், துப்பாக்கிச் சூட்டிற்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
அவரது குடும்பத்தில் அவரது பெற்றோர் உட்பட எட்டு பேர் உள்ளனர். மேலும், அவரது பாட்டி மற்றும் திருமணமாகாத சிறிய தாய் ஆகியோர் நேரடியாக அருள்பயஸின் வருமானத்தைச் சார்ந்து வாழ்கின்றனர்.
அவரது இளைய சகோதரர் ஆறு மாதக் கைக்குழந்தை. அவரது தந்தை வேலையில்லாமல் வருமானம் ஏதும் இன்றி வாழ்கின்றார். குடும்பம் வறுமையில் வாடிக்கொண்டிருந்தது.
இதன் விளைவாக, அருள்பயாஸ் தனது கல்வியை முடிக்கும் முன்பே பாடசாலையை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அவர் பல்வேறு சிறு வேலைகளைச் செய்தார். அவர் உணவுப் பொருட்களைத் தயாரித்து வீடு வீடாக விற்றார். மேசன் மற்றும் தினக்கூலி வேலைகள் செய்து, அவர் தனது குடும்பத்தைக் காப்பாற்றினார்.
கொல்லப்பட்ட இளைஞரின் இன்னொரு சிறிய தாயாரான, எஸ். ஜெயலட்சுமி, '[சம்பவதினம்] அவர், கிளிநொச்சியில் உள்ள ஒரு நெல் வயலை அறுவடை செய்வதற்கான ஆட்கள் சிலரை அங்கு அழைத்து வருவதற்காக ஊர்காவற்றுறைப் பகுதிக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார்,' என்று கூறினார்.
'இப்போது அவர்கள், அவருக்கு எதிராக பல்வேறு குற்றக் கதைகளைப் புனைகிறார்கள்,' என்று அவர் கூறினார்.
அவரது தாய், 37 வயதான அயூப்ராஜ் ஜானகி கூறியதாவது: 'இலங்கை பொலிஸ் என் மகனை சுட்டுக் கொன்றதன் மூலம் என் குடும்பத்தை ஆதரவற்றதாக்கிவிட்டது. என் மகன் இந்தக் குடும்பத்தின் தந்தை போல, உணவு வழங்கி பராமரித்து வந்தார். என் மகனின் கடின உழைப்பைச் சார்ந்துதான் என் மற்றய பிள்ளைகளின் கல்வி இருந்தது. இப்போது எல்லாம் அழிந்துவிட்டது.'
அவர், பொலிசாரைக் குற்றம் சாட்டி பின்வருமாறு கூறினார்: 'என் மகன் ஏதாவது தவறு செய்திருந்தால், அவர்கள் அவனைக் கைது செய்திருக்கலாமே? ஏன் சுட்டுக் கொன்றார்கள்? எங்களுக்கு நிறையக் கடன்கள் உள்ளன, அவற்றை அடைக்க அவன் இரவும் பகலும் உழைத்து வந்தான். என் மகனுக்கு எந்தவித போதைப் பழக்கமும் இல்லை. சிலர் அவனது கொலையை மறைப்பதற்காக இந்தக் குற்றச்சாட்டுகளைப் பரப்புகிறார்கள். என் மகனின் கொலைக்கு நீதி வேண்டும்.'
அவரது பாட்டி, ஜே. விஜயலட்சுமி பின்வருமாறு கேட்டார்: 'சாதாரண மக்கள் தவறுதலாகக் கொலை செய்தால், இலங்கை நீதிமன்றங்கள் அவர்களுக்கு மரண தண்டனை வழங்குகின்றன. அதேபோல், என் பேரனை அநியாயமாகக் கொன்ற பொலிசாருக்கு மரண தண்டனை வழங்கப்படுமா?'
அரசாங்கம் நீதி வழங்கத் தயாராக உள்ளதா? நான் என் பேரனை நம்பி வாழ்ந்தேன். இப்போது நான் அனாதையாக விடப்பட்டுள்ளேன்.
'எங்கள் வீட்டைச் சுற்றி இரகசிய காவல்துறையினர் இருப்பதாலும், அவர்கள் கண்காணிப்பதாலும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மக்கள் துக்கவீட்டிற்கு வருவதற்கும் கூட அஞ்சுகிறார்கள்,' என்று ஒரு உறவினர் தெரிவித்தார்.
இந்தக் கொலை ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. 2016 அக்டோபரில், கொக்குவில்-குளப்பிட்டியில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் வைத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான பவண்ராஜ் சுலக்சன் மற்றும் நடராஜ் கஜன் ஆகிய இருவரையும் பொலிஸ் சுட்டுக் கொன்றது. ஆரம்பத்தில், மோட்டார் சைக்கிள் தற்செயலாக ஒரு பாதுகாப்புச் சுவரை மோதியதாகவும், மாணவர்கள் மது அருந்தியிருந்ததாகவும் கூறி, பொலிஸ் தங்கள் பொறுப்பை மறைக்க முயன்றது. பின்னர் ஒரு சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணை, மாணவர்கள் பொலிசின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதை உறுதி செய்தது.
2017 இல், யாழ்ப்பாண மாவட்டம், துன்னாலை கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான யோகராஜ் தினேஷ், ஒரு லொரியின் பின்புறத்தில் பயணம் செய்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் வாகனத்தைத் துரத்தி, பின்புறத்திலிருந்து அவர் மீது சுட்டனர்.
கொலையை நியாயப்படுத்தும் வகையில், அந்த லொரி சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட மணலை ஏற்றிச் சென்றதாக பொலிஸ் கூறியது.
அல்லைப்பிட்டியில் நடந்த சம்பவம், பொலிஸ் சோதனைச் சாவடிகளில் நிறுத்தத் தவறுவதற்காக மரணத்தை விளைவிக்கும் வன்முறையை நியாயப்படுத்தும் அளவிற்கு, அரசு வன்முறை அபாயகரமாக இயல்பாக்கப்படுவதைக் காட்டுகிறது.
தேசிய ஒற்றுமையின் பாதுகாவலனாக தன்னைக் காட்டிக்கொண்டு, ஜே.வி.பி./தே.ம.ச. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக தைப் பொங்கல் விழா நிகழ்வுகளைக் கொண்டாடிய மண்டைத்தீவு மற்றும் வேலணை ஆகிய பிரதேசங்களுக்கு அருகிலுள்ள பகுதியிலேயே செவ்வாய்க்கிழமை அன்று துப்பாக்கிச் சூடு நடந்தது.
பொலிசின் கொடூரமான, மரணத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை குறித்து அரசாங்கம் மௌனம் சாதித்து வருகிறது. அது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இராணுவ ஆக்கிரமிப்பையும் பொலிஸ் அடக்குமுறை இயந்திரத்தையும் சார்ந்திருக்கும் போக்கைத் தொடர்கிறது.
அண்மையில் பொலிஸ் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு ஒரு தனிப்பட்ட சம்பவமோ, அல்லது எதேச்சதிகாரமான பொலிஸ் நடவடிக்கைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டதோ அல்ல. 2009 மே மாத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட, வடக்கு மற்றும் கிழக்கில் 26 ஆண்டு காலம் நீடித்த தமிழர்-விரோத இனவாதப் போரின் போது அபிவிருத்தி செய்யப்பட்ட பொலிஸ்-அரசு வழிமுறைகள், தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் தொடரப்பட்டு, நாடு முழுவதும் பெருகிய முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சர்வதேச நாணய நிதியம் விதித்த சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் பரவலான எதிர்ப்பை எதிர்கொள்ளும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், பொலிஸ்-அரசு வழிமுறையை சார்ந்திருப்பதை அதிகரித்து வருகிறது.
டிட்வா சூறாவளி ஏற்படுத்திய பேரழிவைத் தொடர்ந்து, ஜனாதிபதி அனுரகுமார திசநாயக நாடு முழுவதும் ஒரு கொடூரமான அவசரகால நிலையை அறிவித்து, அதைத் திரும்பத் திரும்ப நீடித்து, பொலிஸ் மற்றும் இராணுவத்தின் அதிகாரங்களை வலுப்படுத்தி வருகிறார். அரசாங்கம் 15 அரசுதுறை சேவைகளை அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் கீழ் கொண்டு வந்து, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சிறைத்தண்டனை விதிப்பதாக அச்சுறுத்துகிறது. மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) பதிலீடு செய்வதற்காக, இன்னும் அடக்குமுறை விதிமுறைகளை உள்ளடக்கிய 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்' என்ற ஒரு மசோதாவையும் அது வரைவு செய்துள்ளது.
மேலும் படிக்க
- வட இலங்கையில் காற்றாலை திட்டத்திற்கு எதிரான வெகுஜனப் போராட்டத்தின் மீது பொலிஸ் தாக்குதல்
- இலங்கை பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் முல்லைத்தீவு பத்திரிகையாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்
- முல்லைத்தீவில் தமிழ் இளைஞனின் மரணத்திற்கு இலங்கை இராணுவமே பொறுப்பு என சந்தேகிக்கப்படுகிறது
- காரைநகரில் இலங்கை பிரதமரின் போலித் தேர்தல் வாக்குறுதிகள்
- மாணவர்களை பொலிஸ் கொன்றமைக்கு எதிராக வட இலங்கையில் நடந்த பொது வேலைநிறுத்தம்
