மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஈரான் மீதான போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார அதிர்வலைகள் ஏற்கனவே தேக்கமடைந்துள்ள ஒரு பொருளாதாரத்தை மந்தநிலையை நோக்கித் தள்ளுவதால், பிரித்தானியாவில் உள்ள தொழிலாள வர்க்கம் வேலையின்மை அதிகரிப்பை எதிர்கொள்கிறது.
புதிய கணிப்புகள் தொழிலாளர் சந்தை நிலைமைகளில் ஒரு கடுமையான சரிவைக் காட்டுகின்றன; அதன்படி கூடுதலாக 250,000 வேலை இழப்புகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் உத்தியோகபூர்வ வேலையற்றோரின் எண்ணிக்கை 1.87 மில்லியனிலிருந்து 2.1 மில்லியனுக்கும் அதிகமாக உயரக்கூடும்.
பொருளாதார முன்கணிப்புக் குழுவான EY Item Club, இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளில் பிரித்தானியப் பொருளாதாரம் தேக்கமடையும் என்று எச்சரிக்கிறது; இது, தொடர்ச்சியான இரண்டு காலாண்டுகளில் பொருளாதாரச் சுருக்கம் என வரையறுக்கப்படும் ஒரு தொழில்நுட்ப மந்தநிலையின் விளிம்பில் நாட்டை நிறுத்துகிறது. ஏற்கனவே பலவீனமாக உள்ள பொருளாதார வளர்ச்சி, 2025-இல் 1.4 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு வெறும் 0.7 சதவீதமாக வீழ்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது, பிப்ரவரி மாத மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பிரதிபலித்த மிதமான மீட்சியின் முந்தைய அறிகுறிகளைத் தகர்க்கிறது.
தொழிலாள வர்க்கத்திற்கான விளைவுகள் கடுமையாக உள்ளன.. மத்திய கிழக்கு மோதலால் உருவான நெருக்கடி உலகப் பொருளாதாரம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், 2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வேலையின்மை விகிதம் தற்போதைய ஐந்து ஆண்டு உச்சமான 5.2 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதமாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தசாப்தங்களாக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் புள்ளிவிவரங்களைக் கையாண்டதன் காரணமாக, பிரித்தானியாவின் உண்மையான வேலையின்மை நிலை உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட மிக அதிகமாக உள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 16 முதல் 64 வயதுக்குட்பட்டவர்களில் ‘பொருளாதார ரீதியாகச் செயலற்றவர்கள்’ என வகைப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் 2024-இல் 22 சதவீதத்தை எட்டியுள்ளது. Publicfinance இணையதளத்தின்படி, இது சுமார் 9.1 மில்லியன் மக்களுக்குச் சமமாகும்; இது 2020-ஆம் ஆண்டு தொற்றுநோய்க்கு முன்பிருந்த 8.5 மில்லியனை விட அதிகமாகும். வைரஸ் ‘கட்டுப்பாடின்றி பரவ’ (let rip) அனுமதிக்கப்பட்டதால் பொதுச் சுகாதாரத்தின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலை இது காட்டுகிறது; இதன் விளைவாக சுமார் 2 மில்லியன் மக்கள் நீண்டகால கோவிட்-இன் பாதிப்புகளால் பலவீனமடைந்து அவதிப்படுகின்றனர்.
பிரிட்டனின் பொருளாதாரம் ஏற்கனவே அபாயகரமான நிலையில் இருந்ததுடன், நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸிடம் நிலைமையைச் கையாள்வதற்கான நிதிச் செயல்பாட்டு எல்லை நடைமுறையில் ஏதுமற்ற நிலையே காணப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அரையாண்டு அறிக்கை, நீண்டகாலப் போரும் நீடித்த உயர் எரிசக்தி விலைகளையும் உள்ளடக்கிய ஒரு மிக மோசமான “கடுமையான சூழ்நிலை” உருவானால், அது உலகளாவிய பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறது. இது 1980-க்குப் பிறகு ஏற்படும் ஐந்தாவது மந்தநிலையாக அமைவதோடு, வேலையின்மை விகிதத்தையும் வெகுவாக அதிகரிக்கும்.
2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் எரிசக்தி செலவுகள் சீரானாலும் கூட, இந்த ஆண்டு G7 நாடுகளில் பிரித்தானியாவுக்கு மிகக் கடுமையான வளர்ச்சி குறைப்பையும், அதேசமயம் மிக உயர்ந்த பணவீக்க விகிதத்தையும் IMF கணித்துள்ளது. அடுத்த ஆண்டிற்கான பிரித்தானியாவின் வளர்ச்சி முன்னறிவிப்பை IMF 0.2 சதவீத புள்ளிகளால் குறைத்து 1.3 சதவீதமாக மாற்றியுள்ளது.மேலும், வேலையின்மை 5.6 சதவீதமாக உயரக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது இது 2015 தொடக்கத்திற்குப் பிறகு காணப்படும் மிக உயர்ந்த மட்டமாகும், மேலும் கோவிட்‑19 தொற்றுநோயின் உச்சக்கட்டத்தில் இருந்த 5.5 சதவீதத்தையும் விட அதிகமாகும்.
இந்த ஆண்டிற்கான வளர்ச்சி முன்னறிவிப்பை 0.5 சதவீத புள்ளிகளால் 0.8 சதவீதமாகக் குறைத்துள்ளதுடன், பணவீக்கம் 4 சதவீதத்தை நெருங்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது - இது அரசாங்கத்தின் 2 சதவீத இலக்கின் இருமடங்கு ஆகும்.
பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்த போருக்கு முந்தைய கணிப்புகள் ஏற்கனவே துடைத்தெறியப்பட்டுவிட்டன. மார்ச் மாத தொடக்கத்தில், வரவுசெலவுத் திட்ட பொறுப்பு அலுவலகம் (OBR), பிரித்தானியப் பணவீக்கம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இங்கிலாந்து வங்கியின் 2 சதவீத இலக்கை ஒட்டியே இருக்கும் என்று எதிர்வுகூறியிருந்தது. அதன்படி, விலை உயர்வு 2026-இல் 2.3 சதவீதமாகவும், 2027 முதல் 2 சதவீதமாகவும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய எரிபொருள் விலை உயர்வால், புதன்கிழமை (ஏப்ரல் 22) வெளியிடப்பட்ட தரவுகளின்படி, பிப்ரவரி மாதத்தில் 3 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் மார்ச் மாதத்தில் 3.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையிலான உயர்வாகும். CPI என்பது பணவீக்கத்தைத் திட்டமிட்டே குறைத்துக் காட்டும் ஓர் உத்தியோகபூர்வ அளவீடாகும்; ஏனெனில் இது அடமான வட்டி மற்றும் உள்ளூர் வரி போன்ற முக்கியமான வீட்டுச் செலவுகளைத் தவிர்த்துவிடுகிறது.
பணவீக்க உயர்வு முக்கியமாகப் போக்குவரத்துச் செலவுகளால் தூண்டப்பட்டாலும், இது எப்போதும் பொருளாதாரம் முழுவதும் விலையேற்றத்தை ஏற்படுத்துகிறது; இதன் விளைவாக உணவு, பானங்கள், வீட்டு வசதி மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் செலவுகளும் அதிகரிக்கின்றன.
பிரித்தானியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகளில் கிட்டத்தட்ட பாதியளவு இறக்குமதியைச் சார்ந்திருப்பதால், அந்நாட்டின் பொருளாதாரம் எரிசக்தி விலை அதிர்ச்சிகளால் (price shocks) பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது. 2025-ஆம் ஆண்டில், பிரித்தானியாவின் எரிவாயு விநியோகத்தில் சுமார் 68 சதவீதம் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்பட்டது.
உயர்ந்து வரும் எரிசக்தி விலைகள் வீட்டு உபயோகக் கட்டணங்களை உயர்த்தி, மக்களின் வருமானத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த மாதம் வெளியிடப்பட்ட Resolution Foundation அமைப்பின் பகுப்பாய்வின்படி, ஈரான் போர் இல்லாதிருந்தால் இருந்திருக்கக்கூடிய நிலையுடன் ஒப்பிடுகையில், வேலை செய்யும் வயதுடைய சராசரி குடும்பங்களின் நிதிநிலை இந்த ஆண்டு கிட்டத்தட்ட £500 வரை மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
அதிகரித்து வரும் எரிசக்தி மற்றும் எரிபொருள் செலவுகள் குடும்ப வருமானத்தைத் தொடர்ந்து பாதித்து வருகின்றன. ஒரு சாதாரண 55-லிட்டர் குடும்பக் காரில் எரிபொருள் நிரப்புவதற்கு, போருக்கு முந்தைய காலத்தை விட தற்போது டீசலுக்கு £27 கூடுதலாகவும் (டிசம்பர் 2022-க்குப் பிறகு முதன்முறையாக அதன் விலை £100 எல்லையைத் தாண்டியுள்ளது), பெட்ரோலுக்கு £14 கூடுதலாகவும் செலவாகிறது.
இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தில் நிலவும் விலை உச்சவரம்பு முறை, மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்களிலிருந்து குடும்பங்களுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே பாதுகாப்பை வழங்குகிறது. எனினும், இது தற்காலிகமானதே; தற்போதைய உச்சவரம்பு ஜூலை 1-ஆம் தேதியுடன் காலாவதியாகிறது. எரிசக்தி ஆலோசனை நிறுவனமான Cornwall Insight-இன் சமீபத்திய கணிப்பின்படி, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான Ofgem விலை உச்சவரம்பின்கீழ், ஒரு சாதாரண இரட்டை எரிபொருள்குடும்பம் ஆண்டுக்குச் செலுத்த வேண்டிய தொகை £1,641-லிருந்து £1,861-ஆக உயரும்.
எரிபொருள் வறுமை ஒழிப்பு கூட்டமைப்பிற்காக (End Fuel Poverty Coalition), Survation நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், 83 சதவீத மக்கள் இது குறித்துக் கவலையடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஜூலை மாத விலை உச்சவரம்பு உயர்வால் ஏற்படவுள்ள £228 ஆண்டு கட்டண உயர்வைச் சமாளிக்க முடியாது என்று 44 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், பதிலளித்தவர்களில் நான்கில் ஒரு பகுதியினர், செலவுகள் அந்த அளவிற்கு உயர்ந்தால் தங்களால் “எரிசக்தி கட்டணங்களை முற்றிலும் செலுத்த இயலாது” என்று கூறியுள்ளனர்.
அதே நேரத்தில், எரிசக்தி நிறுவனங்கள் இச்சூழலால் பெருமளவில் பயனடைந்து வருகின்றன; மோதல் தொடங்கியதிலிருந்து அவற்றின் பங்கு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதோடு, அந்நிறுவனங்களின் ஒட்டுமொத்தச் சந்தை மூலதனம் £233 பில்லியனுக்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
தேசிய எரிவாயு வலையமைப்போடு இணைக்கப்படாமல், வெப்பமூட்டும் எண்ணெயைச் (மண்ணெண்ணெய்) சார்ந்திருக்கும் குடும்பங்களின் நிலைமை இன்னும் மோசமானதாக உள்ளது. பிரித்தானியாவில் - குறிப்பாகக் கிராமப்புறங்களில் உள்ள - சுமார் 1.5 மில்லியன் வீடுகள் இத்தகைய எண்ணெயையே நம்பியுள்ளன; இவற்றுக்கு அரசாங்கத்தின் விலை உச்சவரம்புப் பாதுகாப்பு கிடையாது. இதனால் முதியவர்கள் மற்றவர்களை விட மிக அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 66 வயதிற்கு மேற்பட்டவர்களில் 69 சதவீதம் பேர் (அதாவது 8.3 மில்லியன் முதியவர்கள்), தாங்கள் கடனில் மூழ்குவதை விட வெப்பமூட்டும் வசதியை அணைத்துவிடவே விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். மூன்றில் ஒரு பகுதியினர் (35 சதவீதம் அல்லது 4.2 மில்லியன் மக்கள்), சமீபகாலமாக வெப்பமூட்டும் பயன்பாட்டைக் குறைத்துள்ளதாகக் கூறியுள்ளனர்; அதேவேளையில், 19 சதவீதம் பேர் (சுமார் 2.4 மில்லியன் மக்கள்) தங்கள் வீடுகள் விரும்பத்தக்க அளவை விடக் கடும் குளிராக இருப்பதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போதைய போர்ச் சூழல் அடமானச் சந்தையிலும் (mortgage markets) தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மோதலுக்கு முன்னர், வட்டி விகிதங்கள் குறையும் என்றும் அதன் மூலம் கடன் வாங்குபவர்களுக்கான செலவுகள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாகக் கடன் வழங்குநர்கள் தற்போது அதிக நிதிச் செலவுகளையும், வட்டி விகிதக் குறைப்பிற்கான மங்கிய எதிர்பார்ப்புகளையும் எதிர்கொள்கின்றனர். Moneyfacts நிறுவனத்தின் தரவுகளின்படி, சராசரி இரண்டு ஆண்டு நிலையான அடமான வட்டி விகிதம் மார்ச் தொடக்கத்தில் இருந்த 4.83 சதவீதத்திலிருந்து 5.9 சதவீதமாக உயர்ந்துள்ளது; இதில் குறைந்த வட்டி விகிதக் கடன் ஒப்பந்தங்கள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
எரிசக்தி விலைகளில் கடைசியாக ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வு, 2022-ஆம் ஆண்டு உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து நிகழ்ந்தது; இது அப்போதைய பழமைவாத அரசாங்கத்தை £40 பில்லியன் மதிப்பிலான அவசரகால வாழ்க்கைச் செலவு ஆதரவுத் திட்டத்தை அறிமுகப்படுத்த நிர்பந்தித்தது. இத்திட்டத்தில் எரிசக்தி கட்டண உச்சவரம்பு, அனைத்துக் குடும்பங்களுக்கும் £400 எரிசக்தி கட்டணத் தள்ளுபடி மற்றும் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட உதவித்தொகைகள் ஆகியவை அடங்கும்.
வீட்டு உபயோக எரிசக்தி கட்டணங்களுக்கான பொதுவான நிதியுதவிகள் எதையும் வழங்கப்போவதில்லை என ரீவ்ஸ் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ஏழ்மையானவர்களுக்கு வழங்கப்படவுள்ள மிகக் குறைந்தபட்சத் தொகையும் கூட, ஆண்டின் இறுதியில் கருவூலத்தால் மிகுந்த தயக்கத்துடனேயே வழங்கப்படும். மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்குப் பதிலாக, முதலாளித்துவ தன்னலக்குழுக்களும் அவர்களின் ஊதுகுழல்களும், ஸ்டார்மர் அரசாங்கம் அதன் இராணுவவாதம் மற்றும் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டுமெனக் கோருகின்றன. இதன் பொருள், சமூக நலச் செலவினங்களைக் பெருமளவு குறைப்பதன் மூலம், இராணுவ வரவுசெலவுத் திட்டத்திற்கு பல பத்து பில்லியன் பவுண்டுகளைக் கூடுதலாக ஒதுக்கீடு செய்வதாகும்.
