மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெய்ஜிங்கிலிருந்து திரும்பிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஈரானுக்கு எதிரான ஒரு புதிய தாக்குதலை நடத்துவதற்கான தீவிர தயாரிப்புகளில் வெள்ளை மாளிகை ஈடுபட்டு வருகிறது.
அடுத்த வாரமே ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிர தயாரிப்புகளில் —போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து மிகப்பெரிய அளவில்— ஈடுபட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெள்ளிக்கிழமையன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சீனாவுக்கு மேற்கொண்ட முதல் அரசுமுறை விஜயமான ட்ரம்பின் பெய்ஜிங் பயணத்தில், ஈரான் மீதான போரால் தூண்டப்பட்ட நெருக்கடியே முதன்மையாக ஆதிக்கம் செலுத்தியது. ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையே பொதுவெளியில் நல்லெண்ணம் காட்டப்பட்ட போதிலும், ஈரான் நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்து எந்தவொரு பகிரங்க உடன்பாடும் எட்டப்படவில்லை; அத்துடன் உத்தியோகபூர்வ கூட்டு அறிக்கை எதுவும் வெளியிடப்படவும் இல்லை.
3,000-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் படுகொலை செய்யப்பட்டு, 81,000 சிவிலியன் கட்டிடங்கள் அழிக்கப்பட்ட போதிலும், அமெரிக்கா தனது இலக்குகள் எதையும் அடையவில்லை. அது ஈரானிய அரசாங்கத்தை கவிழ்க்கவோ, ஈரானின் இராணுவத்தை முறியடிக்கவோ அல்லது ஹார்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டைப் பெறவோ இல்லை.
போர் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்து விவாதிப்பதற்காக, ட்ரம்ப் தனது உயர்மட்ட தேசியப் பாதுகாப்புக் குழுவை செவ்வாய்க்கிழமை அன்று சிச்சுவேஷன் ரூமில் (Situation Room) கூட்டுவார் என எதிர்பார்க்கப்படுவதாக, ஆக்சியோஸ் செய்தி ஊடகம் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்தது. சனிக்கிழமையன்று ட்ரம்பின் வர்ஜீனியா கோல்ஃப் கிளப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, சிஐஏ இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப் மற்றும் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் கலந்து கொண்ட ஒரு அமர்வைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் நிகழ்கிறது.
ஞாயிறு மாலை, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய பின்னர், ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில்: “ஈரானுக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது, அவர்கள் வேகமாக நகரத் தொடங்குவது நல்லது, இல்லையெனில் அவர்களிடம் எதுவும் மிஞ்சியிருக்காது” என்று பதிவிட்டார்.
இதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கின் வரைபடத்தின் மேல் அமெரிக்கக் கொடி பதிக்கப்பட்ட, அனைத்து திசைகளிலிருந்தும் ஈரானை நோக்கி சிவப்பு அம்புக்குறிகள் சுட்டிக்காட்டும் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட படத்தை அவர் வெளியிட்டார் — இது ஈரான் மீதான அமெரிக்காவின் தரைவழிப் படையெடுப்பை சூசகமாக உணர்த்துகிறது.
ஈரானில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை அவர் பரிசீலித்து வருகிறார் என்பதற்கான சமீபத்திய அறிகுறியாக, ட்ரம்ப் இதற்கு முன்னர் ஒரு கட்டுப்பாட்டு முனையத்தில் (command console) தான் ஒரு சிவப்பு பொத்தானை அழுத்துவது போலவும், அதற்கு மேலே உள்ள திரையில் காளான் மேக வெடிப்புகள் தோன்றுவது போலவும் காட்டும் ஒரு படத்தைப் பதிவிட்டிருந்தார்
டைம்ஸ் நாளிதழின் விவரிப்பின்படி, பென்டகனின் பரிசீலனையில் உள்ள விருப்பங்களில் ஈரானுக்குள் அமெரிக்கப் படைகளை நிலைநிறுத்துவதும் அடங்கும்; இது “உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான பெரும் ஆபத்துக்களைக் கொண்டுவரும்.”
ஈரான் போரைத் தீவிரப்படுத்துவதன் மூலம், ட்ரம்ப் தனக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த நிதி தன்னலக்குழுவின் சார்பாகப் பேசுகிறார். போரைத் தொடங்கியதன் மூலம், ஈரானை அடிபணியச் செய்வதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கௌரவத்தை ட்ரம்ப் பணையம் வைத்துள்ளார். அந்த இலக்கை அடையத் தவறினால், அது அமெரிக்க முதலாளித்துவத்தின் கடன் தீர்க்கும் திறனுக்கு ஆதாரமான டாலர் மதிப்பிலான நிதி அமைப்பின் சரிவை விரைவுபடுத்தும் ஒரு பேரழிவாக ஆளும் வர்க்கத்தால் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஊடகங்களின் முன்னணிப் பிரிவுகள், ஈரான் மீதான அமெரிக்க தரைவழிப் படையெடுப்பிற்குப் பகிரங்கமாகத் தூண்டிவிட்டு வருகின்றன. ரீகன் மற்றும் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் நிர்வாகங்களில் கடற்படையின் முன்னாள் துணை உதவிச் செயலாளராக இருந்த செத் கிராப்ஸி, ஞாயிறன்று வால் ஸ்ட்ரீட் ஜேர்னலில் எழுதிய “ஈரானில் வேலையை எப்படி முடிப்பது” என்ற தலைப்பிலான கருத்துக் கட்டுரையில், ட்ரம்ப் “ பேரழிவு தரும் படைபலத்தைப் பயன்படுத்துவோம் என்று விடுத்த அச்சுறுத்தலைச் செயலாக்க வேண்டும். அதாவது, ஈரானிய அரசின் வீழ்ச்சியைத் துரிதப்படுத்துவதற்காக ஹார்முஸ் நீரிணையைப் பலவந்தமாக மீண்டும் திறப்பது உள்ளிட்ட, நேரடித் தரைப்படைப் பயன்பாட்டை உள்ளடக்கிய ஒரு பலகட்ட நடவடிக்கைக்குத் தயாராக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் எதிர்கொள்ளும் விரக்தியான நெருக்கடியைச் சுட்டிக்காட்டிய கிராப்ஸி: “இந்த ஆண்டின் எஞ்சிய பகுதிக்கு ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை சுமார் 150 டாலர் என்ற அளவில் நீடித்தால், பணவீக்கம் துரிதமடையும்; அதே நேரத்தில் முக்கிய தொழில்துறைகளின் விநியோகச் சங்கிலிகள் சீர்குலையும். ட்ரம்ப் இந்த நெருக்கடியைத் தனக்குச் சாதகமாக முடிப்பதற்கும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும், அமெரிக்காவின் நலன்கள் மற்றும் கௌரவத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில் பொருளாதார மீட்சியை உறுதி செய்வதற்கும் மிகக் குறுகிய கால அவகாசமே உள்ளது. ஆனால் அதற்கு அமெரிக்க அதிகாரத்தின் முழு அளவிலான ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஞாயிறு விவாத நிகழ்ச்சிகளிலும் புதிய தாக்குதல்களுக்கான அழுத்தம் தொடர்ந்தது. ட்ரம்பின் மிக முக்கியமான வெளியுறவுக் கொள்கைக் கூட்டாளியான தென் கரோலினாவின் குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம், மீட் தி பிரஸ் (Meet the Press) நிகழ்ச்சியில் தோன்றி, ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா மீண்டும் குண்டுவீச்சைத் தொடங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். “ஜனாதிபதி ட்ரம்ப் இராணுவ ரீதியாகச் செய்திருப்பது வியக்கத்தக்கது” என்று கூறிய கிரஹாம், “ஆனால் இன்னும் தாக்கப்பட வேண்டிய இலக்குகள் உள்ளன. அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்த நாம் செய்யக்கூடிய விஷயங்கள் பல உள்ளன. எரிசக்தி உள்கட்டமைப்புதான் அவர்களின் பலவீனமான பகுதி . நீங்கள் மீண்டும் போருக்குச் சென்றால், நான் எரிசக்தித் துறையையே பட்டியலின் முதலிடத்தில் வைப்பேன்” என்றார்.
திட்டமிடப்பட்ட இந்த போர் தீவிரமாக்கலுக்கு ஜனநாயகக் கட்சி எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. மாறாக, ஞாயிறு விவாத நிகழ்ச்சிகளில் தோன்றிய ஜனநாயகக் கட்சியினர், பெய்ஜிங் உச்சிமாநாட்டில் சீனாவுக்கு எதிராக ட்ரம்ப் போதிய அளவு ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுவதிலேயே தங்களின் வெளியுறவுக் கொள்கை கருத்துக்களை பெரும்பாலும் அர்ப்பணித்தனர்.
செனட் சபையின் சிறுபான்மைக் கட்சித் தலைவர் சக் ஷுமர் பின்வருமாறு அறிவித்தார்: “ஜனநாயகம் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்காக, ட்ரம்ப் தைவானைக் கைவிடக் கூடாது.” ஈரான் மீது ட்ரம்ப் தொடங்கியுள்ள போர், சீனாவுடனான மோதலில் இருந்து அமெரிக்காவின் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டது என்பதே ஜனநாயகக் கட்சியினரின் புகாராக உள்ளது.
ஈரானுக்கு எதிரான போரானது, அதே நேரத்தில் அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போராகவும் உள்ளது. போரினால் தூண்டப்பட்ட பணவீக்க நெருக்கடி, எரிசக்தி மற்றும் உணவுச் செலவுகளில் பெரும் உயர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில், புதிய காய்கறிகளின் விலைகள் ஆண்டு அடிப்படையில் 44 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக என்பிசி நியூஸ் (NBC News) தெரிவித்துள்ளது. பெட்ரோல் விலை தேசிய சராசரியாக ஒரு கேலனுக்கு 4.51 டாலராக உயர்ந்துள்ளது; மேலும், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை போர் தொடங்கியதில் இருந்து சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
வாழ்க்கைச் செலவின் இந்த பேரழிவுகரமான அதிகரிப்பு குறித்துப் பதிலளித்த ட்ரம்ப், இந்த மாதம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்: “நான் அமெரிக்கர்களின் நிதி நிலைமை குறித்துச் சிந்திப்பதில்லை” என்று கூறினார்.
வெளிநாட்டுப் போருக்கும், உள்நாட்டில் சமூகத் திட்டங்கள் மீதான தாக்குதலுக்கும் இடையே உள்ள தொடர்பை ட்ரம்ப் நிர்வாகம் வெளிப்படையாகக் கூறியுள்ளது. ஏப்ரல் 1 அன்று வெள்ளை மாளிகையின் ஈஸ்டர் மதிய உணவு விருந்தில் ட்ரம்ப் பின்வருமாறு அறிவித்தார்: “குழந்தை பராமரிப்பு (Daycare), மெடிகேட் [Medicaid - வறியோருக்கான மருத்துவ உதவித் திட்டம்], மெடிகேர் [Medicare - முதியோருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்] போன்ற இந்தத் தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் எங்களால் கவனித்துக் கொள்ள முடியாது. நாம் ஒரேயொரு விஷயத்தை மட்டுமே கவனிக்க வேண்டும்: அது இராணுவப் பாதுகாப்பு.” தொடர்ந்து பேசிய அவர், “நாம் போர்களை நடத்திக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.
போருக்கான செலவுகள் அரசாங்கக் கருவூலத்தின் மீதும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் முன் சாட்சியமளித்த பென்டகன் செலவுக் கட்டுப்பாட்டாளர் ஜே ஹர்ஸ்ட், இந்த போருக்கு இதுவரை 29 பில்லியன் டாலர் செலவாகியுள்ளது என்பதை ஒப்புக்கொண்டார்; இந்தத் தொகையில் அமெரிக்கத் தளங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் சேர்க்கப்படவில்லை. ஹார்வர்ட் பொதுக் கொள்கை பொருளாதார நிபுணர் லிண்டா பில்ம்ஸ் ஏப்ரல் மாதம் ஃபார்ச்சூன் (Fortune) இதழிடம் பேசுகையில்: “ஈரான் போருக்காக நாம் 1 டிரில்லியன் டாலர் செலவிடுவோம் என்பது நிச்சயம்” என்று கூறினார்.
ஈரான் மீதான போர் தீவிரமாக்கப்படுவது, வர்க்கப் போராட்டத்தின் ஒரு பெரிய எழுச்சிக்கு மத்தியில் நிகழ்கிறது. சுமார் 3,500 லாங் ஐலேண்ட் ரயில் ரோடு (LIRR) தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பணிகளைப் புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 1994 ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெற்ற இந்த முதல் LIRR வேலைநிறுத்தம், அமெரிக்காவின் மிகவும் பரபரப்பான பயணிகள் ரயில் சேவையை முழுமையாக முடக்கியுள்ளது.
மிச்சிகனின் சாகினாவ் நகரில் உள்ள நெக்ஸ்டீர் ஆட்டோமோட்டிவ் (Nexteer Automotive) நிறுவனத்தைச் சேர்ந்த 1,300 ஐக்கிய கார்த் தொழிலாளர்கள் (UAW) சங்க உறுப்பினர்கள், கடந்த ஆறு வாரங்களில் இரண்டு முறை தங்களின் சலுகைகளை விட்டுக் கொடுக்கும் ஒப்பந்தங்களை நிராகரித்துள்ளதோடு, உடனடி வேலைநிறுத்தத்தை அறிவிக்குமாறு தொழிற்சங்கத்திற்குப் பலத்த அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மிச்சிகனின் த்ரீ ரிவர்ஸ் நகரில் உள்ள அமெரிக்கன் ஆக்சில் (American Axle) ஆலையின் 1,000 UAW உறுப்பினர்கள், வரும் மே 31 அன்று தங்களது ஒப்பந்தம் முடிவடையும் போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட, மே 12 அன்று 98 சதவீத வாக்குகளுடன் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்தப் போராட்டங்களின் உடனடித் தூண்டுதலாக இருப்பது, போரினால் உருவாக்கப்பட்ட வாழ்க்கைச் செலவு நெருக்கடியாகும். எனவே, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாப்பது என்பது போருக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும்.
ஈரானிய சமூகத்தை முற்றிலுமாக அழித்துவிடுவோம் என்ற ட்ரம்பின் அச்சுறுத்தல்கள், மிகுந்த தீவிரத்துடன் கையாளப்பட வேண்டும். இந்த நிர்வாகம், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்காக—அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது உட்பட—எந்தவொரு கொடூரத்திற்கும் தயங்காத ஒரு குற்றவியல், குண்டர் ஆட்சியாகும்.
போக்குவரத்து மற்றும் வாகனத் தொழில்துறையில் நடக்கும் போராட்டங்கள், ட்ரம்பின் போர் மற்றும் சர்வாதிகாரத் திட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் முன்னோக்கிச் செல்லும் வழியைக் காட்டுகின்றன. கொலைகார ட்ரம்ப் ஆட்சியும், அதற்குத் துணைபோகும் ஜனநாயகக் கட்சியினரும், வர்க்கப் போராட்ட முறை மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் மூலமாகவே எதிர்க்கப்பட வேண்டும்.
