இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தொடுத்துள்ள சட்டவிரோதப் போரினால் ஏற்பட்டு வரும் பொருளாதாரப் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில், இந்தியர்கள் தங்களின் எரிசக்தி மற்றும் உரப் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திய சில நாட்களிலேயே, இந்தியாவின் தீவிர வலதுசாரி பாஜக ஆட்சி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது.
மே 11 அன்று குஜராத்தின் வதோதராவில் பேசுகையில், போரின் தாக்கத்தை கோவிட்-19 தொற்றுநோயுடன் ஒப்பிட்ட மோடி, 1947க்குப் பிந்தைய இந்தியாவின் போர்களின் போது செய்ததைப் போலவே இந்தியர்கள் 'ஒன்றுபடுவதோடு' 'தியாகங்களை' செய்யவும் வேண்டும் என்று வலியுறுத்தினார்.
'இந்தியா போர் அல்லது எந்தவொரு பெரிய நெருக்கடியையும் எதிர்கொள்ளும் போதெல்லாம், அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் குடிமக்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றினர். இப்போதும் நாம் அதையே செய்ய வேண்டும்' என்று மோடி அறிவித்தார்.
'நாட்டின் வளங்கள் மீதான சுமையைக் குறைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ளது,' என்று அவர் தொடர்ந்தார். குறிப்பாக, 'இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் உயர்ந்து வரும் நிலைமைகளில், உலகளாவிய விநியோகங்களும் கடுமையாக சீர்குலைந்துள்ள நிலைமைகளின் கீழ், அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கும் வகையில், இறக்குமதிக்கான செலவுகளைக் குறைக்குமாறு அவர் இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்தார். “ஒவ்வொரு துளியும் ஒரு பானையை நிரப்புவதைப் போலவே, ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய முயற்சியும் முக்கியமானது,” என்று அவர் கூறினார்.
மோடியின் உரை ஒரு இரட்டை நோக்கத்தைக் கொண்டது: ஈரான் மீதான குற்றவியல் போரால் தூண்டப்பட்ட பொருளாதார நெருக்கடியின் சுமையை இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்களை சுமக்க வைப்பதை நோக்கமாகக் கொண்ட விலைவாசி உயர்வு மற்றும் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு புதிய அலைக்கு அரசியல் அடித்தளத்தை அமைப்பது. இந்த வர்க்கப் போர் தாக்குதலுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை அப்பட்டமான தேசத்துரோகம் அல்லது அதை 'தேச விரோதம்' என்று சித்தரிப்பதும் ஆகும்.
பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்கவும், பொதுப் போக்குவரத்தை அதிகம் நம்பியிருக்கவும், வாகனங்களில் கூடிப் பயணிப்பதை அதிகரிக்கவும், 'தேவையற்ற' பயணத்தை குறைக்கவும் மோடி மக்களை வலியுறுத்தினார். அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யவும் இணையவழி கூட்டங்களை நடத்தவும் ஊக்குவிக்கப்பட்ட அதேநேரம் எரிபொருள் நுகர்வு மற்றும் பயணச் செலவுகளைக் குறைக்க தற்காலிக இணையவழி வகுப்புகளைக் கருத்தில் கொள்ளுமாறு பாடசாலைகள் கேட்டுக்கொள்ளப்பட்டன.
இந்தியா 80 சதவீதத்திற்கும் அதிகமாக எண்ணெயை இறக்குமதி செய்கிறது. போருக்கு முன்னர் பாதிக்கும் மேற்பட்டவை சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உட்பட வளைகுடா நாடுகளில் இருந்து பெறப்பட்டன.
சமையல் எண்ணெய் மற்றும் தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என்றும் மோடி இந்தியர்களை வலியுறுத்தினார். சூரியகாந்தி, சோயாபீன் மற்றும் பாமாயில் உட்பட சமையல் எண்ணெய்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அதேநேரம் தங்கம் நாட்டின் இரண்டாவது பெரிய இறக்குமதி பொருளாக உள்ளது. இது நாட்டின் நகைத் தொழிலில் ஒரு பெரிய ஏற்றுமதியாளராகவும், சாதாரண இந்தியர்களாலும், பாரம்பரியமாக, செல்வத்தின் சேமிப்பகமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
'இயற்கை விவசாய' விரிவாக்கம் என்ற பெயரில், விவசாயிகள் தங்கள் இரசாயன உரங்களின் பயன்பாட்டை பாதியாகக் குறைக்கவும், டீசலில் இயங்கும் நீர்ப்பாசன பம்புகளுக்கு பதிலாக சூரிய மாற்றுகளைக் கொண்டு வரவும் மோடி விடுத்த அழைப்பு விசேடமாக குறிப்பிடத் தக்கதாக இருந்தது. 40 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்களின் வாழ்வாதாரத்தை நம்பியிருக்கும் இந்தியாவின் விவசாயத் துறை, வளைகுடா நாடுகளில் இருந்து வரும் நைட்ரஜன் உரங்களுக்கான முக்கிய இடுபொருட்களான யூரியா மற்றும் அம்மோனியா இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ளது.
விவசாயிகள் விரைவாகவும் பெரும்பாலும் வலியின்றியும் இயற்கை உரங்களுக்கு மாற முடியும் என்ற பரிந்துரை அபத்தமானது. பாரிய அரசாங்க நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு இல்லாவிட்டால், அதன் விளைவாக விளைச்சலில் கூர்மையான வீழ்ச்சி ஏற்பட்டு, விவசாயிகளின் வருமானத்தை குறைப்பதுடன் பெரிய உணவு விலை உயர்வுகளுக்கு எரியூட்டும்.
இப்போது, போரால் தூண்டப்பட்ட இரசாயன உரங்கள் பற்றாக்குறையும் விலைவாசி உயர்வுகளும், விவசாயிகளை, குறிப்பாக குறைந்த வருமானம் ஈட்டுவோரையும் கந்துவட்டிக்காரர்களை நம்பி இருப்பவர்களையும், நைட்ரஜன் உரங்களின் பயன்பாட்டை வெட்டுவதற்கு நிர்ப்பந்திப்பதோடு, இது அதே சமூகரீதியில் எரியூட்டும் தாக்கங்களை ஏற்படுத்தும். பல கோடிக் கணக்கான மக்கள் ஏற்கனவே உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் பசியை எதிர்கொள்ளும் ஒரு நாட்டில் இது நடக்கப் போகிறது.
யுத்தம் இப்போது மூன்றாவது மாதமாக தொடர்கின்ற நிலையில், இரசாயன உரப் பற்றாக்குறை அதிகரித்தளவில் வெளிப்பட்டு வருகிறது. போர் வெடிப்பதற்கு முன்பே, 2025 இந்திய நாடாளுமன்ற அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளபடி, பதுக்கல் மற்றும் விலைவாசி உயர்வால் உந்தப்பட்ட ஒரு பெரிய சட்டவிரோத கருப்புச் சந்தைக்கு போதுமான சான்றுகள் இருந்தன.
பாஜக அரசு இதுவரை மானியம் வழங்கப்படும் இரசாயன உரங்களின் விலையை உயர்த்துவதைத் தவிர்த்து வருகிறது. ஆனால் இரசாயன உர பயன்பாட்டை வியத்தகு முறையில் குறைக்க வேண்டும் என்ற மோடியின் அழைப்பு, வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் விலை உயர்வுக்கு களம் அமைக்கும் என்பதை தெளிவாக அர்த்தப்படுத்துகிறது
இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களிடம் இருந்து அவர் கோரும் 'தியாகங்களை' 'சிறிய முயற்சிகள்' என்று மோடி வர்ணிப்பது, உழைக்கும் மக்களின் அவல நிலை குறித்து அவரது அரசாங்கத்தின் இரக்கமற்ற அலட்சியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 'தியாகம்' என்ற அவரது கோரிக்கைகளுக்கு ஒரு ஜனரஞ்சக போர்வையை வழங்குவதற்கான ஒரு பலவீனமான முயற்சியில், வெளிநாட்டில் விடுமுறை கழிப்பதையும் விமான பயணங்களையும் குறைக்குமாறு வசதி படைத்தவர்களுக்கு இந்திய பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
யதார்த்தம் என்னவென்றால், அவரது அரசாங்கம் பெரு வர்த்தகர்களின் நலன்களை நிலைநிறுத்துவதில் முற்றிலும் அர்ப்பணிப்புடன் உள்ளது. நுகர்வைக் குறைக்குமாறு உழைக்கும் மக்களுக்கு அது விடுக்கும் அழைப்பு அடிக்கோடிட்டுக் காட்டுவதைப் போல், அதிகரித்து வரும் நிதிய மற்றும் நாணய நெருக்கடியை, பெருநிறுவன இலாபங்கள் அல்லது பெரும் செல்வந்தர்களின் வருமானங்கள் மற்றும் செல்வவளத்தை பாதிக்க கூடியவாறு ஈடுகட்டுவதற்கு அது முற்றிலும் எதிராக உள்ளது.
மாறாக, யுத்தம் தொடர்கின்ற நிலையில், நெருக்கடி ஆழமடைகின்ற நிலையில், பிஜேபி அரசாங்கம் முழு சுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்த முன்னெப்போதையும் விட ஆக்கிரோஷமாக முன்நகரும்.
மோடியின் வதோதரா உரைக்கு நான்கு நாட்களுக்குப் பின்னர், அவரது அரசாங்கம் உலக எரிசக்தி விலைவாசி உயர்வில் இருந்து மக்களைப் பாதுகாப்பதை நிறுத்த வேண்டும் என்ற இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற பெருநிறுவன ஊடகங்களின் வெளிப்படையான கோரிக்கைகளுக்கு விடையிறுப்பாக, இந்த திசையில் ஒரு முதல் அடியை எடுத்து வைத்த அது, நான்கு ஆண்டுகளில் முதல் அதிகரிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தியதுடன் இந்தியாவில் போக்குவரத்து எரிபொருளாக பரவலாகப் பயன்படுத்தப்படும் CNG (இறுக்கி அடைக்கப்பட்ட இயற்கை எரிவாயு) விலையை கிலோவுக்கு இரண்டு ரூபாய் உயர்த்த உத்தரவிட்டது.
இந்த அதிகரிப்புகள் நிச்சயமாக ஒரு ஆரம்பம் மட்டுமே ஆகும். உலக கச்சா எண்ணெய் விலை, பீப்பாய்க்கு 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்ததை ஈடுசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பதிலிருந்து அவர்கள் வெகு தொலைவில் உள்ளனர் என்று ஆய்வாளர்கள் விரைவாக சுட்டிக்காட்டினர். முன்னதாக, எண்ணெய் தொழிற்துறை இழப்புகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், பாஜக அரசு எரிபொருள் சுங்க வரிகளை விலக்கிக்கொண்ட அதேநேரம், ஒட்டுமொத்த எரிபொருள் விலையை முடக்கி வைத்தது. ஆனால் இது அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களின் நஷ்டத்தை அரசாங்கத்தின் கைக்கு மாற்றியுள்ளது.
மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்ற மோடியின் ஆலோசனையைப் பொறுத்த வரையில், கட்டுமானம் மற்றும் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் முதல் தெருவோர வியாபாரிகள், விற்பனையாளர்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புத் தொழிலாளர்கள் போன்ற பரந்த பெரும்பான்மையினருக்கு அது வெறுமனே சாத்தியமற்றது. தற்போதைய மற்றும் எதிர்கால எரிபொருள் விலை உயர்வுகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவர். இந்தியா முழுவதிலும் உள்ள உணவு விநியோகத் தொழிலாளர்கள் ஏற்கனவே பாரிய வேலை நீக்கங்களை எதிர்கொண்டுள்ளனர் அல்லது போர் காரணமாக LPG (திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு) பற்றாக்குறையானது உணவகங்கள் மற்றும் உணவுக் கடைகளை நேரத்தைக் குறைக்க அல்லது மூட நிர்பந்தித்ததை அடுத்து, அவர்களின் வருமானம் மூன்றில் இரண்டு பங்கு குறைக்கப்படுவதைக் கண்டுள்ளனர்.
மோடியின் வதோதரா உரை, மறைமுகமாக வரவு-செலவு நெருக்கடி என்ற பூதத்தை கிளப்பிவிட்டுள்ளமை, இந்து மேலாதிக்கவாத பிஜேபி அரசாங்கமும் இந்திய ஆளும் வர்க்கமும் உடந்தையாக இருக்கும் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலின் விளைவாக இந்தியாவை பிடித்துள்ள ஆழமான நெருக்கடியின் ஒரு அறிகுறியாகும்.
தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் என்ற போர்வையின் கீழ், அதன் அரசியல் தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட “தலை துண்டிக்கும்” தாக்குதல்கள் முதல், ஈரானின் நாகரீகத்தையே அழிப்பேன் என்ற ட்ரம்பின் இனப்படுகொலை அச்சுறுத்தல்கள் வரை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இழைத்த அனைத்து போர்க்குற்றங்கள் சம்பந்தமாகவும் மெளனம் காக்கும் அதேவேளை, ஈரான் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக் கொண்டதற்காக, புது தில்லியின் கூட்டாளி என்று கூறப்படும் ஈரானை, புது தில்லி மீண்டும் மீண்டும் கண்டனம் செய்துள்ளது.
போர், இந்தியாவின் பொருளாதாரத்தை ஸ்திரமின்மைக்குள் தள்ளி வருகின்ற நிலையில், புது தில்லி வாஷிங்டனுடனான அதன் சீன-விரோத பூகோள மூலோபாய பங்காண்மைக்கோ அல்லது போர் தொடங்கப்படுவதற்கு முன்னதாக மோடி விஜயம் செய்த இஸ்ரேலுடனான அதன் உறவுகளையோ சேதப்படுத்தும் எதையும் செய்யாமல் இருப்பதில் உறுதியாக உள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், மோடி அவரது உரையில், போரால் பாதிக்கப்பட்டவர் யார் என்பதையும், ஆக்கிரமிப்பாளர்களுடனான இந்தியாவின் உறவுகள் மற்றும் ஆதரவையும் மூடிமறைக்கும் வகையில், ஈரான் மீதான போரை 'மேற்கு ஆசியாவில் போர்' என்று அழைத்தார்.
இந்தியப் பொருளாதாரம் அதிகரித்து வரும் அழுத்தத்தில் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் பாரிய தலையீட்டை மீறி, பெப்பிரவரி 28 யுத்தத்தின் ஆரம்பத்தில் ஏற்கனவே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்க டொலருக்கு 91 ரூபாயாக இருந்த ரூபாயின் பெறுமதி 96.5 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. ரூபாயின் மதிப்பு விரைவில் ஒரு டொலருக்கு 100 ரூபாய்க்கு கீழே சரியும் என்ற பரவலான ஊகங்கள் உள்ளன. எரிசக்தி விலை உயர்வு மற்றும் உர பற்றாக்குறையால் அழுத்தத்துக்கு உள்ளாகி வரும் இந்தியப் பொருளாதாரத்தின் சரிவுக்கு, வெளிநாட்டு முதலீட்டில் சுமார் 23 பில்லியன் டாலர் திரும்பப் பெறப்பட்டிருப்பது ஒரு முக்கிய காரணியாகும்.
'மோடியின் கருத்துக்கள் அரசாங்க நிதி மீதான அழுத்தம் ஒரு உச்சக்கட்டத்தை எட்டுகிறது என்பதையும், மேலும் ரூபாய் மதிப்புக் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதையும், சரிசெய்தல் சுமை நுகர்வோருடனேயே அதிகரித்த வகையில் பகிர்ந்து கொள்ளப்படலாம் என்பதையும் சமிக்ஞை செய்கிறது' என்று ஜப்பானிய நிதி சேவைகள் நிறுவனமான நோமுராவின் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஏப்ரல்-மே மாநிலத் தேர்தல்களுக்கு முன்னரும் பின்னரும் இந்தியப் பொருளாதாரத்தின் நிலை குறித்த மோடியின் அறிவிப்புகளில் உள்ள வேறுபாட்டை எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
தற்போதைய நெருக்கடியை கோவிட் தொற்றுநோயுடன் ஒப்பிடுகையில், 'நாம் ஒன்றாக இந்த தொற்றுநோயை சமாளித்ததைப் போலவே' 'இந்த நெருக்கடியை நாம் சமாளிப்போம்' என்று கூறுகையில், இந்தியாவின் இந்து குண்டராக இருக்கும் அவர் நினைத்ததை விட அதிகமாக கூறினார் என்பதில் ஐயமில்லை என கூறலாம். தொற்றுநோயை அரசாங்கம் அழிவுகரமாக தவறாகக் கையாண்டதுடன் 'உயிர்களை விட இலாபத்துக்கே முன்னுரிமை' என்ற கொலைகாரக் கொள்கை, இந்தியாவை தொற்றுநோயின் பூகோள மையங்களில் ஒன்றாக மாற்றியதுடன் 5 மில்லியனுக்கும் அதிகமான மரணங்களுக்கு வழிவகுத்தது.
பிஜேபி அரசாங்கம், ஒரு சமூக வெடிபொருளின் மீது ஆபத்தான முறையில் அமர்ந்துள்ளது என்பதை நன்கு அறிந்துள்ளது. வளர்ந்து வரும் சமூக அதிருப்திக்கு அதன் பிரதிபலிப்பு, அரச ஒடுக்குமுறையும் வகுப்புவாதத்தை தூண்டி விடுவதுமே ஆகும். 'தேசிய ஐக்கியம்' மற்றும் போர்க்கால 'தியாகங்கள்' பற்றிய மோடியின் வாய்வீச்சு, தொழிலாள வர்க்க எதிர்ப்பை குற்றமாக்குவதற்கு கருத்தியல் மூடுதிரையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்கூட்டிய தாக்குதலாகும்.
டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள பிஜேபி மாநில மற்றும் பிராந்திய அரசாங்கங்கள் ஊடாக வேலை செய்து, இந்தியாவின் தேசிய தலைநகரும் மிகப் பெரிய நகர்ப்புற திரட்சியுமான டெல்லியைச் சூழ்ந்துள்ள தொழிற்துறை பகுதிகளில் வெடித்த வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் அலைக்கு எதிராக மோடி ஆட்சி ஒரு பாரிய ஒடுக்குமுறை பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. உலக சோசலிச வலைத் தளம் முன்னர் அறிவித்ததைப் போல, ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் போராட்டங்களில் பங்கெடுத்ததற்காக வன்முறை குற்றச்சாட்டுக்களை முகங்கொடுக்கின்றனர். குறிவைக்கப்பட்டுள்ள ஏராளமான தொழிலாளர் ஆர்வலர்களை, 'நக்சலைட்' பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தானின் முகவர்கள் என்று அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
மேலும் படிக்க
- ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய குற்றவியல் போரினால் ஏற்பட்ட பொருளாதார அதிர்ச்சிகளால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது
- இந்தியாவில் அதிகரித்து வரும் தொழிலாளர் போராட்டங்களை அடக்கும் முயற்சியில் நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்
- அரசுக்கு எதிரான தொழிலாள வர்க்கப் போராட்ட அலைகளுக்கு மத்தியில், இந்தியாவின் ஆளும் தீவிர வலதுசாரி பாஜக மாநிலத் தேர்தல்களில் வெற்றிபெறுகின்றது
