அரசுக்கு எதிரான தொழிலாள வர்க்கப் போராட்ட அலைகளுக்கு மத்தியில், இந்தியாவின் ஆளும் தீவிர வலதுசாரி பாஜக மாநிலத் தேர்தல்களில் வெற்றிபெறுகின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

2026, மே 9, சனிக்கிழமை அன்று இந்தியாவின் கொல்கத்தாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின் போது, ​​மேற்கு வங்க மாநிலத்தின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரும் பாரதிய ஜனதா கட்சித் தலைவருமான சுபேந்து அதிகாரிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவிக்கிறார். [AP Photo/Bikas Das]

மே 4, திங்கட்கிழமை அன்று அறிவிக்கப்பட்ட ஐந்து இந்திய மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள், முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடி ஆழமடைந்து வருவதையும், புரட்சிகர சோசலிச வேலைத் திட்டம் மற்றும் மூலோபாயத்துடன் தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்குவதன் அவசரத்தையும் சுட்டிக்காட்டுகின்றன.

பெருகிவரும் சமூக எதிர்ப்பு மற்றும் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், இந்தியாவின் ஆளும் இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி (பாஜக), ஸ்தாபன அரசியலில் தன்னை ஒரு ஆதிக்கக் கட்சியாக மேலும் நிலைநிறுத்திக் கொண்டது. இந்தியாவின் நான்காவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான மேற்கு வங்கத்தில் அது முதன்முறையாக ஆட்சியை வென்றதுடன், அசாம் மற்றும் புதுச்சேரியில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.

தமிழ்நாட்டில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திரைப்பட நடிகர் விஜய்யால் நிறுவப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக), நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு சுமார் 10 ஆசனங்கள் குறைவாகப் பெற்று, 1967 முதல் மாநில அரசை மாறி மாறி ஆட்சி செய்து வந்த போட்டி தமிழ் தேசியவாத கட்சிகளான திமுக மற்றும் அஇஅதிமுகவை வீழ்த்தியது.

கேரளாவில், காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெற்று, இரண்டு முறை ஆட்சியில் இருந்த ஸ்டாலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசை வீழ்த்தியது.

ஆளும் வர்க்கம் மேலும் வலதுபக்கம் நகர்கிறது

ஒட்டுமொத்தமாக, முதலாளித்துவ வர்க்கம் மேலும் மேலும் வலதுபக்கம் நகர்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. தன்னை ஒரு 'இந்து பலசாலி' என்று காட்டிக்கொள்ள விரும்பும் நரேந்திர மோடியின் தலைமையிலான தீவிர வலதுசாரி பாஜகவை, உலக அரங்கில் தனது கொள்ளையடிக்கும் வல்லரசு லட்சியங்களை ஆக்ரோஷமாக முன்னெடுக்கவும், உள்நாட்டில் தொழிலாளர்களை சுரண்டுவதைத் தீவிரப்படுத்தவும் சிறந்த வாகனமாக அது கருதுகிறது.

நிதி திரட்டுவதில், பாஜக தனது அனைத்து தேர்தல் போட்டியாளர்களையும் விட தொடர்ந்து பெருமளவில் முன்னணியில் உள்ளது. மிக முக்கியமாக, பெருநிறுவன ஊடகங்களும், நீதிமன்றங்கள் மற்றும் தேர்தல் ஆணையம் உட்பட இந்திய அரசின் நிறுவனங்களும், அதன் வகுப்புவாதத் தூண்டுதல்கள், தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை வன்முறையாக அடக்குதல் மற்றும் வாக்காளர்களை ஒடுக்குவதன் மூலம் தேர்தல்களைக் கையாளுவதிலும் வெளிப்படையாக உடந்தையாக இருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் உடந்தையுடன், பாஜகவினரால் நிறைந்துள்ள தேர்தல் ஆணையம், தனது பெரும் சர்ச்சைக்குரிய சிறப்புத் தீவிர திருத்தத்தின் (SIR) கீழ், பெரும்பாலும் ஏழை மக்களையும், விகிதாசார அடிப்படையில் முஸ்லிம்களையும் கொண்ட இலட்சக்கணக்கான வாக்காளர்களை எதேச்சதிகாரமாக வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியது.

இந்திய மற்றும் பூகோள மூலதனத்திற்கு மகிழ்ச்சியூட்டும் வகையில், மோடி அரசாங்கம் சமீபத்திய மாதங்களில் இரண்டு முக்கிய வர்க்கப் போர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அது, பெரிய நிறுவனங்களில் பெருமளவில் ஆட்குறைப்பு செய்வதற்கு இருந்த கட்டுப்பாடுகளை நீக்கி, ஏற்கனவே பரவலாக உள்ள ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஊக்குவித்து, தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையைப் பெருமளவில் கட்டுப்படுத்தும் ஒரு தொழிலாளர் சட்ட 'சீர்திருத்தத்தை' செயல்படுத்தியுள்ளது. கிராமப்புற ஊதியங்களைக் குறைக்கும் வெளிப்படையான நோக்கத்துடன், மோடியின் பாஜக, கடந்த இருபது ஆண்டுகளாக கோடிக்கணக்கான ஏழை கிராமப்புறக் குடும்பங்களுக்கு ஒரு பிரதான வாழ்வாதாரமாக இருந்துவந்த 'கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தையும்' (MGNREGA) இரத்து செய்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் கீழ்சபையும் அதிக அதிகாரம் வாய்ந்ததுமான நாடாளுமன்ற அவையான மக்களவைத் தேர்தலில், பாஜக ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவைச் சந்தித்தது. 2014இல் மோடியின் கீழ் ஆட்சிக்கு வந்ததிலிருந்து முதல் முறையாக, அது தனது ஒட்டுமொத்த நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்தது. இதனால், சட்டங்களை நிறைவேற்றுவதற்கு அது தனது தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கூட்டாளிகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

இருப்பினும், அதன் பின்னர் பாஜகவும் அதன் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளும், மகாராஷ்டிரா, பீகார், டெல்லி மற்றும் தற்போது மேற்கு வங்காளம் போன்ற பிரதான மாநிலங்கள் உட்பட, தொடர்ச்சியான மாநில சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளைப் பெற்றுள்ளன.

எதிர்பார்த்தபடியே, பாஜகவும் பெருநிறுவன ஊடகங்களும், ஏப்ரல்-மே மாதங்களில் நடந்த மாநிலத் தேர்தல் முடிவுகளைப் பயன்படுத்திக்கொண்டு, மோடிக்கு மக்கள் ஆதரவு இருப்பதாகவும், பாஜகவின் பாசிச, இந்து மேலாதிக்க இந்தியா என்ற நோக்குநிலையான இந்துத்துவாவை மக்கள் அதிகளவில் ஏற்றுக்கொள்வதாகவும் கூறிக்கொள்கின்றன. தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்துவதும், பாஜக அரசுக்கு எதிரான எதிர்ப்பை 'ஜனநாயக விரோதமானது' என்று சித்தரிப்பதும், அதன் மூலம் அந்த எதிர்ப்பை குற்றகரமானதாக்கி நசுக்குவதை நியாயப்படுத்துவதுமே அவர்களின் நோக்கமாகும்.

உண்மை என்னவென்றால், மோடி அரசு ஒரு சமூக எரிமலையின் உச்சியில் அமர்ந்திருக்கிறது, அது அதற்கும் நன்கு தெரியும். அதனால்தான், மத சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லிம்களை, குறிவைத்து அது தொடர்ந்து மதவாதத்தைத் தூண்டுகிறது; மேலும் மேலும் அப்பட்டமான தணிக்கை முறைகளைக் கையாள்கிறது; மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வேலைநிறுத்தங்களையும் போராட்டங்களையும் அடக்குகிறது.

தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்த வேளையில், ஈரான் மீதான சட்டவிரோத அமெரிக்க-இஸ்ரேலியப் போரினால் தூண்டப்பட்ட உலகளாவிய எரிபொருள் விலை உயர்வால் உந்தப்பட்ட தொழிலாளர்களின் பெரும் எதிர்ப்பு, இந்தியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகர்ப்புறக் கூட்டமைப்புமான டெல்லியைச் சுற்றியுள்ள தொழில்துறைப் பகுதிகளில் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் அலையாக வெடித்தது. ஏப்ரல் மாத நடுப்பகுதியில் போராட்டங்கள் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, ​​அநேகமாக நிலையற்ற ஒப்பந்த தொழிலில் இருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், டெல்லியின் தொழில்துறை புறநகர்ப் பகுதியான நொய்டாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த இயக்கம், ஸ்டாலினிச மற்றும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிற தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டிற்கு வெளியே உருவானது.

உத்தரப் பிரதேசம் (நொய்டா அமைந்துள்ள இடம்), ஹரியானா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களின் பாஜக அரசுகள், தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு வன்முறை, அவதூறுகள் மற்றும் பொய்க் குற்றச்சாட்டுகளால் பதிலளித்துள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், டஜன் கணக்கான தொழிலாளர் செயற்பாட்டாளர்களைப் போலவே, சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் உள்ளனர்.

பாஜகவின் 'பலம்', காங்கிரஸ் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சியின் வலதுசாரித் தன்மையுடனும், அதன் பெயரில் பேசுவதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகள் மற்றும் அமைப்புகளால் வர்க்கப் போராட்டம் திட்டமிட்டு ஒடுக்கப்படுவதடனும் முழுமையாகப் பிணைக்கப்பட்டுள்ளது — எல்லாவற்றிற்கும் மேலாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம், ஏனைய ஸ்டாலினிச நாடாளுமன்றக் கட்சிகள் மற்றும் அவற்றின் தொழிற்சங்க அமைப்புகளும் வர்க்கப் போராட்டத்தை திட்டமிட்டு ஒடுக்குவதில் பேர் போனவை.

எதிர்க் கட்சிகளின், எல்லாவற்றிற்கும் மேலாக, ஸ்டாலினிச சிபிஎம் இன் படுதோல்வி

காங்கிரஸ் கட்சி, முதலில் அரசு தலைமையிலான தேசிய முதலாளித்துவ அபிவிருத்தியின் தோல்விக்குத் தலைமை தாங்கியதாலும், பின்னர் 1991 முதல் 2014 வரை, இந்தியாவை உலகளாவிய மூலதனத்திற்கான மலிவு உழைப்பு மையமாக மாற்றுவதற்கும், சீனாவுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு மூலோபாயக் கூட்டணியை உருவாக்குவதற்குமான முதலாளித்துவ வர்க்கத்தின் முன்னெடுப்பை வழிநடத்தியதாலும் மக்கள் மத்தியில் நற்பெயரை இழந்துள்ளது. அதன் இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (INDIA) என்ற தேர்தல் கூட்டானது ஸ்டாலினிசக் கட்சிகளை உள்ளடக்கிய ஒரு சீரற்ற கூட்டணியாகும். ஆனால் அது அடிப்படையில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட வலதுசாரி பிராந்திய, இனவாத மற்றும் சாதியவாதக் கட்சிகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. இவற்றுள் பல, பாசிச சிவசேனாவைப் போலவே, முன்பு பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தவை.

காங்கிரஸ் கட்சியால் தென்னிந்திய மாநிலமான கேரளாவில் மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்தபோதிலும், அகில இந்திய அளவில் அதன் செல்வாக்கு தொடர்ந்து சுருங்கி வருகிறது. அது தமிழ்நாட்டில் 5 இடங்களையும், மேற்கு வங்கத்தில் வெறும் 2 இடங்களையும் மட்டுமே வென்றது. மேற்கு வங்கத்தில், 294 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்ட போதிலும், அது 4 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றது. தேசிய அளவில், இந்தியாவின் 28 மாநிலங்களில் நான்கில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியை வழிநடத்துவதுடன் ஏனைய இரண்டில் ஒரு சிறிய கூட்டணிக் கட்சியாக உள்ளது; அதேநேரம், பாஜக 16 மாநிலங்களில் தனித்தும், 5 மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளுடனும் ஆட்சி அமைத்துள்ளது.

மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு, இந்தியா கூட்டணி சிதைவடையும் அபாயத்தில் உள்ளது. அதன் இரண்டு பிராந்தியத் தூண்களான தமிழ்நாட்டின் திமுகவும், மேற்கு வங்கத்தின் திரிணாமூல் காங்கிரஸும் ஆட்சியை இழந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, காங்கிரஸ் தனது திமுக கூட்டணிக் கட்சியைக் கைவிட்டு, மாநிலத்தின் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது. தோற்கடிக்கப்பட்ட திமுக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இதை 'பின்னால் குத்துதல்', 'சந்தர்ப்பவாதம்', 'துரோகம்' என்று வகைப்படுத்தியுள்ளார்.

மாநிலத் தேர்தல்களில் ஸ்டாலினிச சிபிஎம் கட்சியும் அதன் இடது முன்னணி கூட்டணிக் கட்சிகளுமே மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளன.

பல தசாப்தங்களாக, ஸ்டாலினிஸ்டுகள், தீவிர வலதுசாரி பாஜகவை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு, தொழிலாள வர்க்கத்தை பெரும் வணிகக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அடிபணியச் செய்தும், தாங்கள் ஆட்சி அமைத்த மாநிலங்களில் தொழிலாளர் விரோத, சந்தை சார்பு கொள்கைகளைச் செயல்படுத்தியும், போராட்டக் குணம்சத்துடன் வெடித்த தொழிலாளர் போராட்டங்களைத் தனிமைப்படுத்தியும், அரசியல் ஸ்தாபனத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இந்தப் வகிபாகத்திற்கு ஏற்ப, ஸ்டாலினிஸ்டுகள், தங்களின் இந்தியக் கூட்டணிக் கட்சிகளைப் புண்படுத்திவிடுவோமோ என்ற அச்சத்தில், ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியக் குற்றகரவியல் போருக்கு விரோதமான எதிர்ப்பைத் தங்கள் பிரச்சாரத்தில் ஒரு விடயமாக முன்னிறுத்தவில்லை. காசா இனப்படுகொலையையோ, இந்திய-அமெரிக்க 'உலகளாவிய மூலோபாயக் கூட்டாண்மையையோ' அல்லது ஈரான் போருக்குச் சற்று முன்னதாக மோடியும் நெதன்யாகுவும் வலுப்படுத்திக்கொண்ட இஸ்ரேலிய-இந்தியக் கூட்டணியையோ ஒரு பிரச்சினையாக அவர்கள் கையில் எடுக்கவில்லை. இந்தப் போர் இந்தியாவின் தொழிலாளர்களுக்கும் உழைப்பாளர்களுக்கும் பெருகிவரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி, உலகம் பூராவும் பெரும் தீயை மூட்டிவிட அச்சுறுத்தியுள்ள நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இந்தியா கொண்டுள்ள பிற்போக்கு கூட்டணி, தெற்காசிய மற்றும் உலக மக்களுக்கு எவ்வாறு ஒரு பேரழிவை ஏற்படுத்த அச்சுறுத்துகிறது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ள போதிலும் கூட, அவர்கள் அதை ஒரு பிரச்சினையாக எடுத்துக்கொள்ளவில்லை.

கேரளாவில், சிபிஎம் தலைமையிலான இடது ஜனநயாக முன்னணி 60 க்கும் மேற்பட்ட இடங்களை இழந்து, 2021ல் பெற்றிருந்த 99 இடங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது 35 இடங்களையே வென்றுள்ளது. தனது பத்தாண்டு கால ஆட்சியில், இடது ஜனநாயக முன்னணியானது தனியார்-அரச கூட்டாண்மையை நிறுவுதல், பெருநிறுவனங்களுக்கு வரிச் சலுகை கொடுத்தல் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்குவது உட்பட மேலும் வெளிப்படையான வலதுசாரி மற்றும் முதலீட்டாளர் சார்பு கொள்கைகளைப் பின்பற்றி, பெருநிறுவன வட்டாரங்களிடமிருந்து பாராட்டைப் பெற்றது.

கேரளாவில் சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1977 இன் பின்னர் முதன்முறையாக இந்தியாவில் ஸ்டாலினிச தலைமையிலான ஒரு மாநில அரசாங்கம் கூட அமையவில்லை.

எவ்வாறெனினும், சிபிஎம் 1977 முதல் 2011 வரை, தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் அரசாங்கத்தை வழிநடத்திய மேற்கு வங்கத்தில், சிபிஎம் மற்றும் இடது முன்னணி சந்தித்த படுதோல்வி, அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் பேரிழப்பும் ஆகும்.

2016க்கு முன்பு மாநில சட்டமன்றத்திற்கு ஒரு பாஜக உறுப்பினருக்கு மேல் ஒருபோதும் தேர்வாகியிருக்காத மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸை நிறுவி, கடந்த வாரம் வரை முதலமைச்சராகப் பணியாற்றிய மம்தா பானர்ஜி, பாஜக, தேர்தலைத் திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். வாக்காளர் பட்டியலில் இருந்து தாங்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த 23 இலட்சம் மக்களில் மிகச் சிலரை மட்டுமே இறுதியில் வாக்களிக்க அனுமதித்து, பாஜக ஒரு கீழ்த்தரமான மற்றும் நேர்மையற்ற பிரச்சாரத்தை நடத்தியது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால், தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக வழக்கமாக வன்முறையைப் பயன்படுத்திய ஒரு ஊழல் நிறைந்த, பெருவணிக ஆதரவு அரசாங்கத்தை வழிநடத்திய பானர்ஜிக்கும் அவரது திரிணாமுல் காங்கிரஸுக்கும் எதிராக வெளிப்படையான வெகுஜன எதிர்ப்பும் இருந்தது.

ஆயினும், 20 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பு எழுந்த காலத்திலிருந்தே, 'இடதுசாரிகளின்' கோட்டையாகக் கருதப்பட்டு வந்த மேற்கு வங்கத்தில், பானர்ஜிக்கு எதிரான எதிர்ப்பைத் தன்பக்கம் திரட்டுவதிலோ அல்லது, சொல்லப்போனால், மேற்கு வங்கத்தை 'வெற்றி கொள்வது' என்ற பாஜகவின் நீண்டகாலப் பிரகடனப்படுத்தப்பட்ட இலக்கை அடைவதைத் தடுப்பதாக நம்பிக்கொண்டு திரிணாமுல் காங்கிரஸைப் பற்றிக்கொண்டிருந்தவர்களின் ஆதரவைப் பெறுவதிலோ ஸ்டாலினிஸ்டுகள் முற்றிலும் திறனற்றவர்களாக நிரூபிக்கப்பட்டனர்.

சிபிஎம் வெறும் 1 இடத்தையே வென்றதுடன் அதன் இடது முன்னணி கூட்டணிகள் ஒரு இடத்தையும் வெல்லவில்லை. மொத்தத்தில், 2021ஐ விட அவர்களின் மக்கள் வாக்குகள் மிகச் சிறிதளவே அதிகரித்தன.

மேற்கு வங்கத்தில் சிபிஎம்/இடது முன்னணிக்கு ஏற்பட்ட ஆதரவின் சரிவை விவரிக்கக் கூடிய இடம் இதுவல்ல. ஆனால், இரண்டு விஷயங்களைக் குறிப்பிட வேண்டும். 2011இல் ஆட்சியை விட்டு வீழ்வதற்கு முந்தைய பத்தாண்டுகளில், அது முதலாளித்துவ ஆட்சியின் ஒரு தூணாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. தேசிய அளவில், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை (UPA) ஒன்றிணைத்துத் தாங்கிப் பிடிப்பதில் ஸ்டாலினிஸ்டுகள் முக்கியப் பங்காற்றினர். 'மனிதநேயத்துடன் கூடிய சீர்திருத்தம்' என்ற போர்வையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பெருநிறுவனங்களுக்கான வரிக் குறைப்பு, தனியார்மயமாக்கல், கட்டுப்பாடுகளை நீக்குதல் மற்றும் ஊழியர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலைக்கு வைத்துக்கொள்ளும் அனுமதியை விரிவுபடுத்துதல் உட்பட, முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை முன்னெடுத்தது. இது சமூக ஏற்றத்தாழ்வு மிகப்பெரியளவில் வளர்வதற்கு வழிவகுத்தது. புஷ் நிர்வாகம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் போர் தொடுத்தபோது, ​​ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் 'உலகளாவிய மூலோபாயக் கூட்டாண்மையில்' நுழைந்தது. இதுவே இன்றும் இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிக்கல்லாக திகழ்கிறது.

இதற்கிடையில், மேற்கு வங்கத்தில், சிபிஐ/இடது முன்னணி அரசாங்கம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறைகளில் வேலைநிறுத்தங்களைத் தடை செய்து, 'நலிவடைந்த' பொதுத்துறை நிறுவனங்களை மூடியது அல்லது விற்றுவிட்டதுடன், பெரும் வணிக நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் மற்றும் மானியங்கள் வடிவில் சலுகைகளை வழங்கியதோடு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் பிற பெரும் வணிகத் திட்டங்களுக்காக விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிரான அவர்களின் எதிர்ப்பை அடக்குவதற்கு பொலிஸ் மற்றும் குண்டர் வன்முறையைப் பயன்படுத்தியது.

இதன் விளைவாக, பேர்போன கம்யூனிச எதிர்ப்புப் பேச்சாளரும், பாஜகவின் முன்னாள் கூட்டாளியுமான பானர்ஜியால், தன்னை 'ஏழைகளுக்கு ஆதரவானவராக' காட்டிக்கொள்ள முடிந்தது.

இரண்டாவதாக, மேற்கு வங்கத்தில் சிபிஎம் கட்சி எந்த அளவுக்கு ஊழல் நிறைந்ததாகவும் வலதுசாரி சார்புடையதாகவும் மாறியிருந்தது என்பதற்கு ஓர் சான்றாக, கடந்த தசாப்தத்தின் நடுப்பகுதியில் இருந்து, குண்டர் கும்பல்களின் வலையமைப்பு உட்பட, அதன் ஆதரவு பெற்ற கட்சி அமைப்பின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி, இந்து மேலாதிக்க பாஜகவுக்குத் தாவியிருக்கின்றது.

தொழிலாள வர்க்கம் ஒரு புதிய பாதையை வகுக்க வேண்டும்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து மேலும் சில அவதானிப்புகள் அவசியமாகின்றன. விஜய் ஒரு வழக்கமான திரைப்பட நட்சத்திரமும் வலதுசாரி முதலாளித்துவ அரசியல்வாதியுமாவார். தென்னிந்தியாவில் இது போன்று பல உதாரணங்கள் உள்ளன. அவரும், அவரைச் சுற்றி அவர் திரட்டியுள்ள முன்னாள் திமுக மற்றும் அதிமுக அரசியல்வாதிகளின் கூட்டமும், பெருமளவிலான வேலையின்மை மற்றும் தொழில் நிரந்தரமின்மை, வாழ்க்கைச் செலவு நெருக்கடி, சீர்கெட்ட பொதுச் சேவைகள், பாரம்பரிய ஆளும் கட்சிகளின் ஆழமாக வேரூன்றிய ஊழல் ஆகியவற்றால் ஏற்பட்ட, பெருகிவரும் மக்கள் அதிருப்தியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற உடனேயே, பதவி விலகும் திமுக அரசு, 10 லட்சம் கோடி ரூபாய் (105 பில்லியன் டாலர்) திரட்டப்பட்ட கடன் சுமையுடன் மாநில கருவூலத்தைக் காலி செய்துவிட்டது என்று அறிவித்தார். மக்களைக் கவரும் தனது தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றையும் கொடுக்க மறுக்கும் தெளிவான நோக்கத்துடன், தனது தவெக அரசு விரைவில் மாநிலத்தின் நிதிநிலையை விவரிக்கும் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிடும் என்றும் விஜய் அறிவித்தார்.

இந்தியாவின் மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, சமீபத்திய ஆண்டுகளில் எண்ணற்ற தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களின் களமாக இருந்து வருகிறது. சிபிஎம் தலைமையிலான இந்தியத் தொழிற்சங்கங்களின் மையம் (சிஐடியு), சிபிஐ ஆதரவு பெற்ற அகில இந்தியத் தொழிற்சங்கங்களின் காங்கிரஸ் ஆகியவை, இந்தப் போராட்டங்களைத் தனிமைப்படுத்தி, திமுக அரசு தொழிலாளர்களுக்கு எதிராக பொலிசை ஏவிவிட்ட போதிலும், தங்களுக்கு ஆதரவாகத் தலையிடுமாறு திமுக அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தொழிலாளர்களைத் தூண்டின. சிபிஎம், சிபிஐ ஆகியவை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக திமுகவின் தேர்தல் கூட்டாளிகளாக இருந்து, 'சமூக நீதிக்காகன போராளி' என்ற அதன் போலி கூற்றுகளை தூக்கிப்பிடித்து வருகின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலத் தேர்தலில், திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கனிஷ்ட பங்காளிகளாக அவை போட்டியிட்டன.

தற்போது, ​​தங்களின் காங்கிரஸ் கூட்டாளிகளைப் போலவே, சிபிஎம், சிபிஐ ஆகியவையும் திமுகவைக் கைவிட்டு, புதிய தவெக அரசுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன. அப்படி இல்லையெனில், பாஜக ஆதரவு பெற்ற அதிமுக சிறுபான்மை அரசை அமைக்கக்கூடும் என்ற அடிப்படையில் அதை நியாயப்படுத்துகின்றன.

ஸ்டாலினிஸ்டுகள் வெளிப்படையாகவே தொழிலாளர் வர்க்கத்தை ஒரு முட்டுச்சந்திற்குள் வழிநடத்தியுள்ளனர். “பாஜகவை எதிர்க்கும்” பெயரில், கடந்த மூன்று தசாப்தங்களாக வர்க்கப் போராட்டத்தை ஒடுக்கி, தொழிலாள வர்க்கத்தை காங்கிரஸ் மற்றும் பிற பெரும் வணிகக் கட்சிகளுடன் முழுமையாக கட்டிப்போட்ட பின்னர், இந்து மேலாதிக்கவாத தீவிர வலதுசாரிகள் முன்னெப்போதையும் விட வலிமையாக உள்ளனர்.

தொழிலாளர் வர்க்கம், நிரந்தரப் புரட்சி மூலோபாயத்தின் அடிப்படையில் ஒரு புதிய பாதையை வகுக்க வேண்டும். லியோன் டிராட்ஸ்கியால் முதன்முதலில் விரிவாக எடுத்துரைக்கப்பட்ட இந்த மூலோபாயம், 1917 அக்டோபரில் ரஷ்யப் புரட்சிக்கும், அதை ஸ்டாலினிஸ்டுகள் சீரழித்ததற்கு எதிரான போராட்டத்திற்கும் உயிரூட்டியது.

இந்திய முதலாளித்துவத்திற்கும் அதன் அனைத்து அரசியல் பிரதிநிதிகளுக்கும் எதிரான போராட்டத்தில், இந்தியத் தொழிலாள வர்க்கம் கிராமப்புற உழைப்பாளர்களைத் தனக்குப் பின்னால் அணிதிரட்டிக்கொள்ள வேண்டும். உலக சோசலிசப் புரட்சியின் அபிவிருத்தியின் ஒரு பகுதியாக, ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவுவதன் மூலம் மட்டுமே, இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக அபிலாஷைகள் நிறைவேற்றப்பட முடியும், நிறைவேற்றப்படும்.

Loading