ஈரான் மீதான அமெரிக்கப் போர் ஈழத் தமிழர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கருதுகிறார்

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய ஏகாதிபத்தியப் போர் ஈழத் தமிழர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று, தொடர்ச்சியாக தமிழ் தேசியவாதத்துக்கு வக்காலத்து வாங்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம் கூறுகிறார்.

கே.ரி. கணேசலிங்கம்

ஏப்ரல் 19 அன்று தினக்குரல் பத்திரிகையில், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போரின் வாய்ப்புக்களும் தேக்கநிலையடைந்துள்ள ஈழத்தமிழர் அரசியலும்? என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையில் கணேசலிங்கம் எழுதியதாவது: “ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல் அதிகமான கோட்பாட்டு ரீதியான மாற்றங்களை முன் வைத்திருக்கும் அதே நேரம் உலக ஒழுங்கில் பாரியமாற்றங்களை நோக்கிய குழப்பத்தை அடைந்திருக்கின்றது. இது ஈழத்தமிழருக்கு ஆதரவானது எனவும் வாய்ப்பு கொடுக்கப்படுகின்ற சூழல் எனவும் விவாதங்கள் காணப்படுகின்றன.”

“அதனை நோக்கி தமிழரசியல் தரப்புகள் கட்சி அரசியல் தரப்புகள் நகர்வது அவசியமானது”, என்று அவர் மேலும் கூறினார்.

வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட நாடான ஈரானின் இறையாண்மையை மீறி, சர்வதேச சட்டத்தையும் மீறி, அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டணி ஈரானுக்கு எதிராகக் குற்றவியல் போரைத் தொடங்கிய ஏழு வாரங்களுக்குப் பிறகே, கணேசலிங்கத்தின் கட்டுரை தினக்குரலில் வெளிவந்தது. இந்தக் கொடூரமான தாக்குதல்களில், ஈரானின் முன்னணி அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள், நூற்றுக்கணக்கான பிள்ளைகள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ள அதேவேளை, பிரதான உள்கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், இஸ்ரேல் தனது விரிவாக்கவாத திட்டநிரலுக்காக, லெபனானுக்குள் தனது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த இந்தப் போரைப் பயன்படுத்தியுள்ளது.

எண்ணெய் வளம் நிறைந்த மத்திய கிழக்கின் மீது கட்டுப்பாட்டை நிறுவுவதன் மூலம் தனது உலகளாவிய மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டும் அமெரிக்காவின் உத்தியையும், இறுதியில் ரஷ்யாவையும் சீனாவையும் குறிவைப்பதையும் இந்தப் போர் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது, ஒரு பேரழிவு தரும் அணு ஆயுதப் பேரழிவு போருடன் மனிதகுலத்தை அச்சுறுத்தும், விரிவடைந்து வரும் ஒரு உலகளாவிய மோதலின் பகுதியாக அமைகிறது.

இந்த ஈவிரக்கமற்ற போரை, அதன் விளைவுகளைச் சந்திக்கவிருக்கும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் கண்டிக்க வேண்டும். உலகப் போரை நோக்கிய இந்த நகர்வைத் தடுத்து நிறுத்துவதற்காக, சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே அவசரமான பணியாகும்.

இருப்பினும், பேராசிரியர் கணேசலிங்கம், தீவிரமடைந்து வரும் மோதலின் விளைவுகள் குறித்து எந்தக் கவலையையும் வெளிப்படுத்தவில்லை. அவர் ஏகாதிபத்தியப் போரையோ அல்லது அது சாதாரண மக்களுக்கு ஏற்படுத்தும் பேரழிவுகரமான விளைவுகளையோ எதிர்க்கவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை. மாறாக, தமிழீழத் திட்டத்திற்கான வாய்ப்புகளைக் கண்டறிவதே அவரது அக்கறையாக உள்ளது. அவரது நிலைப்பாடு வஞ்சகமானது மற்றும் ஏகாதிபத்தியப் போருக்கு ஆதரவளிப்பதற்குச் சமமானது.

தங்களைத் தமிழ் மக்களின் விடுதலைப் போராளிகளாகப் பொய்யாகக் காட்டிக்கொள்ளும் கணேசலிங்கமும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும், ஒடுக்கப்பட்ட ஒரு நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியம் அடிமைப்படுத்துவதை ஆதரிக்கின்றன.

கணேசலிங்கம் தனிமையில் இல்லை. அவரது கருத்துக்கள், உலகப் புவிசார் அரசியலில் ஏற்படும் மாற்றங்களைத் தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகளாகக் கருதும் தமிழ் கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், புலம்பெயர் தமிழ் சமூகத்தின் சில பிரிவுகள் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் பரந்த அடுக்குகளைப் பிரதிபலிக்கின்றன.

ஏனைய ஏகாதிபத்திய குற்றங்கள் தொடர்பாகவும் இந்தக் கட்சிகள் இதேபோன்ற நிலைப்பாட்டையே எடுத்துள்ளன. கடந்த ஆண்டு, காசாவில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களைக் கொன்றதுடன், அங்குள்ள மக்களைத் தொடர்ந்து பேரழிவுக்கு உள்ளாக்கி வரும், அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் முன்னெடுக்கின்ற இனப்படுகொலையை எதிர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

கணேசலிங்கமும் இந்தக் கட்சிகளும் மாணவர்கள் மத்தியில் ஒரே அரசியல் முன்நோக்கைப் பரப்ப முயல்கின்றன. இந்த ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாடுகளை நிராகரிக்குமாறு மாணவர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

“முதலாவது நாடுகளுக்கான இறமையும் இறைமைக் கோட்பாடும் பெரும் அளவுக்கு காணாமல் போகின்ற நிலை ஒன்றை அமெரிக்க ஆளும் வர்க்கம் ஏற்படுத்தி வருகிறது. 1648 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட வெஸ்பாலியா உடன்படிக்கை (Peace of Westphalia) முடிவுக்கு வந்ததாகவே கருதப்படுகிறது…” என்று கணேசலிங்கம் மேலும் வாதிடுகிறார்.

புனித ரோமானியப் பேரரசின் ஜெர்மானியப் பகுதிகளில் பெருமளவில் நடைபெற்ற, முப்பது வருடப் போரின் முடிவில் போரிட்ட சக்திகளால் கையெழுத்திடப்பட்ட தொடர் உடன்படிக்கைகளான 1648 ஆம் ஆண்டின் வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தமானது, அரசு இறையாண்மை மற்றும் பிற நாடுகளின் விவகாரங்களில் தலையிடாமை ஆகியவற்றுடன் தொடர்புடைய கொள்கைகளை நிலைநாட்ட உதவியது. இந்தக் கொள்கைகள் வரையறுக்கப்பட்டவையாகவும் வரலாற்று ரீதியாக நிபந்தனைக்குட்பட்டவையாகவும் இருந்தபோதிலும், பிற்காலத்தில் அவை முதலாளித்துவப் புரட்சிகளின் மூலம் நவீன தேசிய-அரசு அமைப்பின் வளர்ச்சியுடன் தொடர்புபடுத்தப்பட்டன.

இருப்பினும், ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்தக் கொள்கை மீறல்களை கணேசலிங்கம் வரவேற்பதாகத் தெரிகிறது. அமெரிக்க நிதிய தன்னலக்குழுவின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அந்த நிர்வாகம், ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச நெறிமுறைகள் அழிக்கப்படுவதை, அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தும் தனது முயற்சியின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. வாஷிங்டன் ஈரானின் இறையாண்மையை மீறியுள்ளது, வெனிசுலாவின் ஜனாதிபதி மதுரோவைக் கடத்துவதில் மீண்டும் மீண்டும் தலையிட்டுள்ளதுடன் கியூபாவிற்கு எதிரான தனது அச்சுறுத்தல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இருப்பினும், தேசிய இறையாண்மை மற்றும் சர்வதேசச் சட்டம் மீதான இந்தத் தாக்குதல்களை, ஈழத் தமிழர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குபவையாக கணேசலிங்கம் கருதுகிறார்.

இருப்பினும், இத்தகைய வாய்ப்புகள் தமிழர்களுக்கோ அல்லது உலகில் உள்ள வேறு யாருக்குமோ உரியவை அல்ல; மாறாக, அவை அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய சக்திகளால் ஏற்படுத்தப்படும் உலகளாவிய பேரழிவின் ஒரு பகுதியாகும்.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் உயரடுக்கின் சில பிரிவினர், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் வடக்கிலும் கிழக்கிலும் ஒரு தனித் தமிழ் அரசையோ அல்லது இலங்கை அரசுக்குள்ளேயே அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டையோ நாடுவதற்கான வாய்ப்புகளை கணேசலிங்கம் தேடுகிறார்.

“ஈழத்தமிழர்கள் இந்தியா சார்ந்து தமது வெளியுறவு சார்ந்து நாடுகளுடன் உறவை பேணுவதில் அதிகமான கரிசனை கொள்ள வேண்டிய தேவைப்பாடு எழுந்திருக்கிறது,” என்றும் “முற்றாக சீனா ஈழத்தமிழர் அரசியலில் எதிர் நிலையைக் கொண்டுள்ள நாடு என்ற அடிப்படையில் அதனை அணுகுதல் வேண்டும்,” என்றும் கணேசலிங்கம் மேலும் கூறுகிறார்.

மற்றொரு கட்டுரையில், “2009இல் (அவர் போரின் இறுதி ஆண்டைக் குறிப்பிடுகிறார்) தமிழர்களைப் போலல்லாமல், ஈரான் ஆனது ரஷ்யா மற்றும் சீனா போன்ற பெரும் வல்லரசுகளுடனும், ஐ.நா. போன்ற உலகளாவிய நிறுவனங்களுடனும் தனது மூலோபாய கூட்டாண்மைகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது,” என்றும் கணேசலிங்கம் வாதிடுகின்றார்.

இந்தப் பேராசிரியரின் கூற்றுப்படி, இந்த நிலைமை “ஒருங்கிணைந்த தேசியத் தலைமைத்துவம், மூலோபாயத் திட்டமிடல் மற்றும் சர்வதேசக் கூட்டணிகளின் தொடர்ச்சியான முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது…” இல்லையெனில், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களும் சிறிய நாடுகளும் பேரழிவைச் சந்திக்கும்.

இந்த வாதங்களின் அரசியல் முடிவு தெளிவாக உள்ளது. கணேசலிங்கத்தின் கூற்றுப்படி, தமிழ் தேசியவாத அமைப்புகளும் உயரடுக்கினரும், உலகளாவிய நெருக்கடிகளாலும் போர்களாலும் உருவாக்கப்படும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு, பெரும் வல்லரசுகளுடன் நெருங்கிய உறவுகளை நாட வேண்டும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சூட்சுமத்தை கையாளும் ரஷ்யா மற்றும் சீனாவுடனான உறவுகள், ஈரானின் அவலநிலையைத் தீர்க்காது.

தமிழ் அரசியல் சக்திகள் சீனாவிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கணேசலிங்கத்தின் அறிவுரை முக்கியத்துவம் வாய்ந்தது. அது, தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் நீண்டகால அமெரிக்க மற்றும் இந்திய சார்பு நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. இந்த அமைப்புகள் தங்களின் சொந்த அரசியல் சலுகைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, வாஷிங்டன், வல்லரசு நாடுகள் மற்றும் புது டில்லியிடம் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

அவர்கள் நாடும் “வாய்ப்புகள்” என்பவை, முதலாளித்துவக் கட்டமைப்பிற்குள் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை நிர்வகிப்பதற்கான அதிக அதிகாரத்தைப் பெறுவதே ஆகும். இத்தகைய ஏற்பாடுகள் தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் பயனளிக்காது, மாறாக தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் சலுகை பெற்ற பிரிவினர் செழித்தோங்குவதற்குப் புதிய வழிகளை வழங்கும். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும், தனது தனி அரசிற்கான போராட்டத்தில் இதே முதலாளித்துவ முன்னோக்கையே பின்பற்றியது

கணேசலிங்கம் போன்ற கல்விமான்களும், தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும் தமிழ் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், இளைஞர்கள் அல்லது ஒடுக்கப்பட்டவர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. அவர்கள் தமிழ் உயரடுகின் சலுகை பெற்ற பிரிவினரின் நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

கொழும்பு ஆளும் வர்க்கம், தன் பங்கிற்கு, தொழிலாள வர்க்கத்தை இன அடிப்படையில் பிளவுபடுத்தவும் முதலாளித்துவ ஒற்றையாட்சி அரசைப் பாதுகாக்கவும் தமிழர்-விரோத சிங்கள பேரினவாதத்தை நம்பியிருந்தது.

திட்டமிட்ட பாரபட்சமும் இனவாதத் தூண்டுதல்களும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் உச்சக்கட்டத்தை அடைந்தன. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டமை, மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனமை உட்பட, பெரும் பேரழிவுடன் அந்தப் போர் முடிவடைந்தது. ஆளும் மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்திலிருந்தே போரை ஆதரித்ததுடன், ஆரம்பத்திலிருந்தே சிங்கள நாட்டுப்பற்றையும் தூக்கிப் பிடித்தது.

விடுதலைப் புலிகள் உட்பட தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், கொழும்பு ஆளும் வர்க்கத்தின் இனவாதப் பாகுபாட்டிற்கு எதிராக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்களின் ஆதரவைக் கோருவதன் மூலம் பதிலளிக்கவில்லை. மாறாக, அவை சிங்கள மக்களிடையே இனப் பிரிவினையை ஏற்படுத்தவே அழைப்பு விடுக்கின்றன.

உள்நாட்டுப் போரின் கசப்பான படிப்பினைகளையும், பல தசாப்த கால இனவாத அரசியலையும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களும், கிராமப்புற ஏழைகளும் கிரகித்துக்கொள்ள வேண்டும்.

இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தால் தமிழ் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் எந்தவொரு ஜனநாயகப் பிரச்சினைகளையும் தீர்க்கவோ, உழைக்கும் மக்களின் அவசர சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யவோ இயலாது. அது ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து, முதலாளித்துவ முறைமையைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. இதேபோல், தமிழ் முதலாளித்துவ வர்க்கமும் தனது சொந்த நலன்களை முன்னெடுத்துச் செல்ல வல்லரசுகளையும் இந்தியாவையும் நாடுகிறது.

அதேநேரம், ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளும், முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது சுமத்துவதில் தங்களது வர்க்க ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றன. ஈரானுக்கு எதிரான போர், ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கும் உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைத் தீவிரப்படுத்தியுள்ளது. இலங்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளுக்கு மேலாக, உழைக்கும் மக்கள் மீது புதிய சுமைகளைச் சுமத்துவதில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகவின் அரசாங்கத்திற்கு உதவத் தயாராக இருப்பதாக அனைத்து பிரதான எதிர்க்கட்சிகளும் சமிக்ஞை செய்துள்ளன.

ஒரு சோசலிசத் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகளுடன் இணைந்து முன்னெடுக்கும் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம் மட்டுமே, ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க முடியும். தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் கூட்டாளிகள் ஏகாதிபத்திய சக்திகளோ அல்லது இந்தியாவைப் போன்ற முதலாளித்துவ அரசுகளோ அல்ல, மாறாக சர்வதேசத் தொழிலாளர் வர்க்கமே ஆகும்.

இதற்கான சாத்தியக்கூறுகளின் ஒளிக்கீற்று, 2022 ஏப்ரல்-ஜூலை மாதங்களில் இனப் பிரிவினைகளைக் கடந்து நடந்த வெகுஊன எழுச்சியின் போது வெளிப்பட்டது. பிரதான சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் முதலாளித்துவக் கட்சிகள் அனைத்தும் இந்த ஐக்கியத்துக்கு எதிராகவே இருந்தன.

கணேசலிங்கம் போன்ற பேராசிரியர்களாலும், தமிழ் கட்சிகளாலும் முன்னெடுக்கப்படும் ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ சார்பு கொள்கைகளை நிராகரிக்குமாறு, சோசலிச சமத்துவக் கட்சியும், சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் தமிழ் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் கேட்டுக்கொள்கின்றன.

பெரும் வல்லரசுகள் அனைத்தும் மனிதகுலத்தை ஒரு பேரழிவு தரும் உலகப் போரை நோக்கித் தள்ளிக்கொண்டிருப்பதால், சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு சர்வதேசப் போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் முன்னால் உள்ள அவசரப் பணியாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியும், சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய குற்றவியல் போரை நிறுத்து! என்ற தலைப்பில் ஒரு பகிரங்க கூட்டத்தை நாளை செவ்வாய்க்கிழமை ஜூன் 9 அன்று யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளன. கச்சேரியடியில் அமைந்துள்ள வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு வருகை தந்து கலந்துரையாடலிலும் பங்குபற்றுமாறு தொழிலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.