இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணாலம்.
ஈரானுக்கு எதிராக தீவிரமடைந்து வரும் ஏகாதிபத்தியப் போர் மற்றும் தொழிலாளர் வர்க்கம் எதிர்கொள்ளும் பணிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் நடத்தும் தொடர் கூட்டங்களின் ஒரு பகுதியாக, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்தில் அடுத்த இரண்டு பொதுக் கூட்டங்களை நடத்தவுள்ளன.
தொழிலாளர் வர்க்கம் புரட்சிகரத் தலைமையை வழங்கும் ஒரு உலகளாவிய போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) முன்னெடுக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இக்கூட்டத் தொடர் அமைந்துள்ளது.
“ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய குற்றவியல் போரை நிறுத்து!” என்ற தலைப்பின் கீழ் முந்தைய கூட்டங்கள் கொழும்பு, பேராதனை மற்றும் ஹட்டனிலும் பெரும் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. பேராதனை மற்றும் ஹட்டன் கூட்டங்களுடன் இணைந்து மறியல் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
மாத்தறைக் கூட்டம் மே 24, ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணிக்கு மாத்தறை தபால் அலுவலக கேட்போர் கூடத்திலும், யாழ்ப்பாணக் கூட்டம் ஜூன் 9, செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 4:00 மணிக்கு யாழ்ப்பாணம் கச்சேரியடியில் YMCA மண்டபத்திலும் நடைபெறும்.
2026 பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது தொடங்கிய அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலைத் தொடர்ந்து, உலகம் ஏகாதிபத்தியக் கொடூரத்திற்குள் மூழ்கி வருகிறது. 'முன்கூட்டிய' நடவடிக்கை என்று கூறப்படும் இந்தப் போர், உண்மையில் மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் மூலோபாய ஆதிக்கத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு கொள்ளையடிக்கும் ஏகாதிபத்தியத் தாக்குதலாகும். ஆரம்பகட்டத் தாக்குதல்களில் ஈரானிய சிரேஷ்ட தலைவர்களின் படுகொலைகளும், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட பொதுமக்கள் மீதான தாக்குதல்களும் அடங்கும். 'ஒரே இரவில் ஒரு முழு நாகரிகத்தையும் அழித்துவிடுவேன்' என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள அச்சுறுத்தல், இந்தப் போரின் இனப்படுகொலைத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டியது.
இந்தப் போர் ஏற்படுத்தி வரும் பேரழிவு திகைக்க வைக்கிறது. ஈரானில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கான பிள்ளைகள் உட்பட குறைந்த பட்சம் 3,375 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் போர், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைத்து, எரிபொருள் விலைகளை உயர்த்தி, உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக ஆகியுள்ளது. அதேநேரம், ஏற்கனவே சிக்கன நடவடிக்கைகளாலும் பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் சமூக இன்னல்களை இது மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.
அமெரிக்கா தலைமையிலான பல தசாப்த கால இராணுவவாதத்தின் உச்சகட்டமே இந்தப் போர் என்றும், இது ஈரான் மட்டுமல்லாமல் ரஷ்யா மற்றும் சீனாவையும் குறிவைக்கும் ஒன்றோடொன்று தொடர்புடைய உலகளாவிய மோதலின் ஒரு பகுதி என்றும் சோ.ச.க. விளக்குகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது வரலாற்றுப் பொருளாதார வீழ்ச்சியை இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் சரிசெய்ய முயல்வதுடன், மனிதகுலம் அணு ஆயுத மூன்றாம் உலகப் போரின் அபாயத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படுகிறது.
இலங்கையின் தொழிலாளர்களும் இளைஞர்களும் ஏற்கனவே இந்தப் போரின் கடும் பாதிப்பைச் சுமந்து வருகின்றனர். அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் பணவீக்கத்தின் மூலம் மக்கள் அதன் விளைவுகளை உணர்ந்து வருகின்றனர். ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 'நடுநிலைமையைக்' கடைப்பிடிப்பதாகக் கூறிக் கொண்டாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான தனது உறவுகளை ஆழப்படுத்திக்கொள்ளும் அதேநேரம், ஏகாதிபத்தியங்களின் நலன்களின் பேரில் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன கட்டளைகளையும் செயல்படுத்துகிறது.
போருக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சயாதீனமான இயக்கத்தைத் தடுப்பதில் தொழிற்சங்க அதிகாரத்துவங்களதும் போலி இடது அமைப்புகளதும் வகிபாகம் பற்றி சோ.ச.க.யும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் எச்சரிக்கின்றன.
அதே சமயம், ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டத்தை, சர்வதேச நாணய நிதிய சிக்கன வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாது என்று சோ.ச.க. வலியுறுத்துகிறது. பெரும் வல்லரசுகளைப் போரை நோக்கித் தள்ளும் அதே முதலாளித்துவ நெருக்கடியே, தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் மீது கொடூரமான தாக்குதல்களை முன்னெடுக்க அரசாங்கங்களை நிர்ப்பந்திக்கின்றது.
போரைத் தடுக்கும் திறன் கொண்ட ஒரே சமூக சக்தி, அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகளிடமிருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேசத் தொழிலாள வர்க்கமே ஆகும். அனைத்துலகக் குழுவால் முன்வைக்கப்பட்ட உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு சர்வதேசப் போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் அழைப்பு விடுக்கின்றன.
மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் அதைச் சுழ உள்ள பகுதிகளில் இருக்கும் தொழிலாளர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்களையும் இக்கூட்டங்களில் பங்கேற்குமாறும், சோசலிச எதிர்காலத்திற்கான போராட்டத்தில் இணையுமாறும் அழைப்புவிடுக்கின்றோம்.
மாத்தறை
ஞாயிறு, மே 24 | மாலை 3:00 மணி
மாத்தறை தபால் நிலைய கேட்போர் கூடம்
யாழ்ப்பாணம்
செவ்வாய், ஜூன் 9 | மாலை 4:00 மணி
யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகில் உள்ள YMCA மண்டபம்
