மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
நூறு நாட்களுக்கு முன்பு, பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கின. வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்திற்கு எதிராக, உலகின் மிக சக்திவாய்ந்த ஏகாதிபத்திய நாடுகளால் இந்தப் போர் தொடுக்கப்பட்டுள்ளது.
ஈரானிய மதகுருமார்களின் ஆட்சியின் பிற்போக்குத்தனமான தன்மையைப் பொருட்படுத்தாமல், அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான அங்குள்ள மக்களின் எதிர்ப்பானது அரசியல் ரீதியாக நியாயமானது மற்றும் வீரமிக்க தன்மையைக் கொண்டதாகும். சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம், ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு எதிராக ஈரானை நிபந்தனையின்றி பாதுகாக்க வேண்டும்.
தற்போது துப்பாக்கி முனையில் ட்ரம்ப் நிர்வாகத்தால் நடத்தப்படும் “பேச்சுவார்த்தைகள்” ஒரு மோசடியாகும். இந்த வார இறுதியில் அளித்த பேட்டி ஒன்றில், ஈரான் தனது கோரிக்கைகளை ஏற்க மறுத்தால், “நான் அவர்களை நரகத்திற்கு அனுப்பிவிடுவேன்” என்று ட்ரம்ப் அறிவித்தார். ட்ரம்ப் நிர்வாகம் ஒரு “போர் நிறுத்தத்திற்கு” ஒப்புக்கொண்டாலும் கூட, வெள்ளை மாளிகையிலுள்ள குண்டர்களுடன் செய்யப்படும் எந்தவொரு ஒப்பந்தமும், இந்த ஆண்டின் போருக்கு மேடை அமைத்துக் கொடுத்த 2025 இன் “அமைதி” உடன்படிக்கையைப் போலவே அர்த்தமற்றதாகவே இருக்கும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, இஸ்ரேல் தெஹ்ரான் மீது தாக்குதல் நடத்தியது. லெபனானில், பேச்சுவார்த்தைகள் நடப்பதாகக் கூறப்படும் நிலையிலும் இஸ்ரேலின் குண்டுவீச்சு தீவிரமடைந்து, குறைந்தது 3,593 பேரைக் கொன்றுள்ளது மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற்றியுள்ளது — இந்த இறப்பு எண்ணிக்கை, கொல்லப்பட்ட 3,468 ஈரானியர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும், அவர்களுள் ஏழு கைக்குழந்தைகளும் 376 குழந்தைகளும் அடங்குவர், மேலும் 26,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்தப் போரின் போக்கில், ஏகாதிபத்தியம் காட்டுமிராண்டித்தனத்தின் புதிய ஆழத்தைத் தொட்டுள்ளது. “ஒரு ஒட்டுமொத்த நாகரிகத்தையே” அழித்துவிடுவோம் என்ற ட்ரம்பின் அச்சுறுத்தல்களும், “இரக்கமின்றி, கருணையின்றி” போர் தொடுப்பேன் என்ற ஹெக்ஸெத்தின் சபதமும், சட்டபூர்வமான தன்மையின் அனைத்து பாசாங்குகளையும் கைவிட்டுவிட்ட ஒரு தன்னலக் குழுவின் வெளிப்பாடுகளாக வரலாற்றில் பதியப்படும். ஏகாதிபத்திய நாடுகள் இப்போது நாஜிக்கள் முன்னோடியாகப் பயன்படுத்திய வழிமுறைகளைக் கொண்டு, ஒடுக்குமுறை மற்றும் அடிமைப்படுத்தும் போர்களை பகிரங்கமாக நடத்தி வருகின்றன.
எவ்வாறாயினும், அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலின் மிருகத்தனமான மற்றும் கொலைவெறித் தன்மையையும் மீறி, ஏகாதிபத்தியம் அதன் குறிக்கோள்களில் ஒன்றைக்கூட அடையத் தவறிவிட்டது. அதனால், ஈரானிய அரசாங்கத்தைக் கவிழ்க்கவோ, ஈரானின் இராணுவத்தை உடைக்கவோ அல்லது ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றவோ முடியவில்லை.
இந்தப் போர் இரண்டு முக்கிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது: அவை, ஆழமடைந்துள்ள முதலாளித்துவ அமைப்பு முறையின் உலகளாவிய நெருக்கடி, மற்றும் உலக அளவில், குறிப்பாக அமெரிக்காவில், மிகப்பெரிய அளவில் தீவிரமடைந்து வரும் வர்க்கப் போராட்டம்.
ஈரானில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள படுதோல்வி, அமெரிக்கா தலைமையிலான பொருளாதார ஒழுங்கின் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. மத்திய வங்கிகள் அமெரிக்க கருவூலப் பத்திரங்களிலிருந்து விலகி தங்கத்தை நோக்கி ஓடுவதாக ஜூன் மாதத்தில் ஐரோப்பிய மத்திய வங்கி தெரிவித்தது. தங்கம், யூரோவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் இரண்டாவது பெரிய கையிருப்புச் சொத்தாக உருவெடுத்துள்ளது — இது ஒரு வருடத்திற்கு முன்பு 20 சதவீதமாக இருந்த நிலையில் இருந்து தற்போது உலகளாவிய இருப்புகளில் 27 சதவீதமாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் தேசியக் கடன் 39 டிரில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.
அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கம்தான் இந்த போரின் விலையைச் சுமந்து கொண்டிருக்கிறது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக எரிபொருள் நிலையங்களில் எரிவாயு விலை 50 சதவீதத்திற்கும் அதிகமாகவும், தக்காளி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை கிட்டத்தட்ட 40 சதவீதமும் உயர்ந்துள்ளதுடன், பணவீக்கம் 3.8 சதவீதத்தை எட்டியுள்ளது. இது 2023 க்குப் பிந்தைய மிக உயர்ந்த அளவாகும்.
ட்ரம்ப், சமூக நலத் திட்டங்கள் மீதான தனது தாக்குதலைத் தீவிரப்படுத்த இந்தப் போரை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம், “நாம் போர்களில் ஈடுபட்டு வருகிறோம்” என்றும், அதனால் “குழந்தைப் பருவப் பராமரிப்பு, மருத்துவ உதவி, மருத்துவ பாதுகாப்பு போன்ற தனிநபர் சார்ந்த விஷயங்களைக் கவனித்துக்கொள்வது எமக்கு சாத்தியமில்லை” என்றும் அவர் அறிவித்தார். உலக உணவுத் திட்ட அமைப்பானது, இந்தப் போர் கூடுதலாக 45 மில்லியன் மக்களைக் கடுமையான பட்டினிக்குத் தள்ளக்கூடும் என்றும், இது ஒரு சாதனை அளவாகும் என்றும், இதில் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் ஏழ்மையான, இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் எச்சரித்தது.
விலைவாசி உயர்வு மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தொழிலாள வர்க்கம் எதிர்த்துப் போராடத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அமெரிக்காவில் தொழிலாள வர்க்கப் போராட்டம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது: குறிப்பாக, முப்பதாண்டுகளுக்கும் மேலான காலத்தில் லோங் ஐலேண்ட் ரயில் பாதையில் நடந்த முதல் வேலைநிறுத்தம்; கொலராடோவின் கிரீலியில் உள்ள ஜேபிஎஸ் (JBS) நிறுவனத்தில் 3,800 இறைச்சி பதப்படுத்தும் தொழிலாளர்கள் மேற்கொண்ட மூன்று வார கால வேலைநிறுத்தம், இது அந்தத் தொழில்துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு நடந்த முதல் வேலைநிறுத்தமாகும்; கலிபோர்னியாவில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் வட கரோலினாவில் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம்; பாதுகாப்பற்ற பணியாளர்கள் எண்ணிக்கைக்கு எதிராக நியூ ஓர்லியன்ஸ் மற்றும் கலிபோர்னியாவில் செவிலியர்களின் வேலைநிறுத்தங்கள்; ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவர்களின் வேலைநிறுத்தம்; மற்றும் தற்போது வாகன உதிரிபாகத் துறையை உலுக்கி வரும் கிளர்ச்சி ஆகியவை இதில் அடங்கும்.
வர்க்கப் போராட்டமானது சர்வதேச ரீதியாகவும் வெடித்துக் கிளம்புகிறது — கென்யாவில் நடக்கும் மாபெரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள், டெல்லியின் தொழில்துறை புறநகர்ப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் கிளர்ச்சி மற்றும் துருக்கியில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் உண்ணாவிரதப் போராட்டம் ஆகியவற்றில் இது வெளிப்படுகிறது.
2026 இன் முதல் காலாண்டில், எட்டு ஐரோப்பிய நாடுகள் 458 வேலைநிறுத்தங்களைப் பதிவு செய்துள்ளன. அவற்றுள் பெல்ஜியம் மற்றும் இத்தாலியில் தேசிய பொது வேலைநிறுத்தங்களும், ஸ்பெயினின் ஆண்டலூசியா மற்றும் பாஸ்க் பிராந்தியத்தில் பிராந்திய பொது வேலைநிறுத்தங்களும் அடங்கும். ஆர்ஜென்டினா பிப்ரவரியில் மிலேய் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு தேசிய பொது வேலைநிறுத்தத்தை நடத்தியது. மேலும் இந்திய மாநிலமான மகாராஷ்டிரா முழுவதும் 17 லட்சம் அரசு ஊழியர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஏகாதிபத்தியத்தைப் போரை நோக்கித் தள்ளும் முரண்பாடுகள்தான் தொழிலாள வர்க்கத்தையும் போராட்டத்தை நோக்கித் தள்ளுகின்றன. வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியானது, போரை உருவாக்கும் அதே நெருக்கடியிலிருந்தே பிறக்கிறது. அந்த நெருக்கடியிலிருந்துதான் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய ஒரே சமூக சக்தி உருவாகிறது. போரும் சமூகப் புரட்சியும் ஒரே வரலாற்றுச் செயல்முறையின் இரு பக்கங்களாகும்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போருக்கும், போர், சிக்கன நடவடிக்கை மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய பரந்த உந்துதலுக்கும் எதிராக அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் மிகப்பெரிய மற்றும் வளர்ந்து வரும் எதிர்ப்பு உருவாகி வருகிறது. ஆனால் இந்த எதிர்ப்பு என்பது, அதன் போக்கிலேயே விடப்பட்டால், அது சிதறடிக்கப்பட்டு திசை திருப்பப்படும். அதற்கு ஒரு வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கை கொண்டிருக்கின்ற தலைமையைக் கொண்டு ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.
போரை நடத்தும் அரசாங்கங்களுக்கும் கட்சிகளுக்கும் கோரிக்கைகளை வைப்பதன் மூலம் போருக்கு எதிரான போராட்டத்தை நடத்த முடியாது. அமெரிக்காவில், ஜனநாயகக் கட்சி ஈரானியத் தலைவர்களின் படுகொலையை ஆரவாரத்துடன் வரவேற்றதுடன், ட்ரம்பின் இராணுவ வரவுசெலவுத் திட்டத்திற்கும் நிதியளித்தது. அதே நேரத்தில், இந்தப் போரை ஆதரித்து அரசியல் ரீதியாக நியாயப்படுத்திவரும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள், ரஷ்யாவிற்கு எதிரான தங்களின் பினாமிப் போரை ஆயுதங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் மூலம் தீவிரப்படுத்தி வருவதுடன், மறுஆயுதமயமாக்கலுக்காக 800 பில்லியன் யூரோக்களைக் கொட்டியும் உள்ளன.
ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் —போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான— போராட்டங்களை, ஒரு சோசலிசத் வேலைத் திட்டத்துடன் கூடிய நனவுள்ள அரசியல் இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும். போருக்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க, முதலாளித்துவ அமைப்பு முறை ஒழிக்கப்பட வேண்டும்.
இதுவே சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) முன்னோக்காகும். இந்தப் போரை எதிர்க்கும் ஒவ்வொரு தொழிலாளியும், இளைஞரும் இதைத் கையில் எடுத்து, தொழிலாள வர்க்கத்திற்குத் தேவையான புரட்சிகரத் தலைமையை கட்டயெழுப்ப முன்வருமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
