முன்னோக்கு

ஒரு வார காலமாக போர் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், தரைவழியாக ஈரான் மீது படையெடுக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அல்-ஹம்ராவில், ஒரு இராணுவ செயல்பாட்டு மையம் மற்றும் நகர்ப்புற கள வசதியைக் கொண்ட அமீரக இராணுவத் தளத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த அமெரிக்கக் கப்பலுக்குச் செல்லும், தற்காலிக டிரைடென்ட் இறங்குதுறை வழியாக அமெரிக்கக் கடற்படையினர் நடந்து செல்கின்றனர், திங்கள், மார்ச் 23, 2020. [AP Photo/Jon Gambrell]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது படையெடுத்து அதன் எண்ணெய் தளங்களைக் கைப்பற்றப் போவதாக கடந்த வியாழக்கிழமை காலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். கடந்த வாரம், அமெரிக்கா தொடர்ச்சியாக இரண்டு இரவுகளில் தெஹ்ரானிலிருந்து 40 மைல் தொலைவிற்குள் உள்ள இலக்குகளைத் தாக்கி, ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தியதைத் தொடர்ந்து இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

“வெனிசுவேலா விஷயத்தில் நாம் செய்ததைப் போலவே, குறுகிய காலத்தில் நாம் கார்க் தீவையும் இதர எண்ணெய் உள்கட்டமைப்பு மையங்களையும் கைப்பற்றி, அவற்றின் எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளின் மீது முழுமையான கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வோம்,” என்று ட்ரம்ப் வியாழக்கிழமை காலை ட்ரூத் சமூக வலைத் தளத்தில் எழுதியிருந்தார். கடந்த ஜனவரி மாதம், வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் அமெரிக்கா கடத்தி வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற்பகல் 1:41 மணிக்கு ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்: “அமெரிக்காவின் ஜனாதிபதி என்ற முறையில், இன்று மாலை ஈரானுக்கு எதிராக திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களையும், குண்டுவீச்சுகளையும் நான் ரத்து செய்துள்ளேன்,” ஒரு சாத்தியமான ஒப்பந்தம் “சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என்று அவர் எழுதினார். இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியா முதல் எகிப்து வரை 11 அரசாங்கங்களை அவர் பட்டியலிட்டார். இந்தப் பட்டியலில் ஈரான் இல்லை.

கடந்த வியாழக்கிழமை விடுக்கப்பட்ட இந்த அறிவிப்புகளில், பங்குச் சந்தையைத் தன் விருப்பப்படி கையாளுவதற்கான ஒரு பெரிய அம்சம் இருந்தது என்பதில் சந்தேகமில்லை. போர் தீவிரமடைந்ததால் ஒரு வாரமாக வீழ்ச்சிகண்டு வந்த பங்குச் சந்தை, ட்ரம்பின் பதிவிற்குப் பிறகு உயர்ந்தது. ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம், வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீடாக வெள்ளிக்கிழமை நாஸ்டாக்கில் வர்த்தகத்தைத் தொடங்குகிறது. இது ஆயிரக்கணக்கான புதிய மில்லியனர்களை உருவாக்கும் என்றும், ட்ரம்பின் முக்கிய கூட்டாளியான எலோன் மஸ்க்கின் செல்வத்தைப் பெருமளவில் விரிவுபடுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எது எப்படியிருந்த போதிலும், ட்ரம்ப் கூறுவதை அப்படியே உண்மை என்று எடுத்துக்கொள்ள முடியாது. சி.என்.என் நிறுவனத்தின் கணக்கீட்டின்படி, ஈரானுடனான ஒரு ஒப்பந்தம் மிக விரைவில் ஏற்படும் என்று, கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்த பாசிச ஜனாதிபதி குறைந்தது 38 முறையாவது கூறியுள்ளார். இவை ஒவ்வொன்றையும் தொடர்ந்து புதிய குண்டுவீச்சுகளும் அச்சுறுத்தல்களுமே வந்துள்ளன. இந்த வாரம் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், “நாம் குண்டுகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால், குண்டுகள் மூலமே பேச்சுவார்த்தை நடத்துவோம். அதில் நாங்கள் மிகவும் வல்லவர்கள். உலகில் எங்களை விடச் சிறந்தவர்கள் யாரும் இல்லை” என்று அறிவித்தார்.

அதாவது, ட்ரம்ப்பின் ஆட்சி “நாங்கள் சொல்வதைச் செய்யுங்கள், இல்லையென்றால் உங்களைக் கொன்றுவிடுவோம்” என்ற மாஃபியா கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு அவநம்பிக்கையான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. 100 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்தப் போர் படுதோல்வி அடைந்துள்ளது. ஈரானிய அரசாங்கம் இன்னும் நிலைத்து நிற்கிறது, வாஷிங்டன் மீண்டும் திறப்பதாக சபதம் செய்த ஹோர்முஸ் நீரிணை இன்னும் மூடப்பட்டே இருக்கிறது, ஈரானும் சரணடையவில்லை. கார்க் தீவைக் கைப்பற்றுவேன் என்ற தனது அச்சுறுத்தலை ட்ரம்ப் நிறைவேற்றினால், ஒட்டுமொத்த வளைகுடாவின் எண்ணெய் உற்பத்தி உள்கட்டமைப்பும் தீக்கிரையாக்கப்படும் என்பது உறுதி. இது உலகப் பொருளாதாரத்திற்கு கணக்கிட முடியாத மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

போரின் அடுத்த கட்டத்திற்குத் தயாராவதற்கான ஒரு கட்டமைப்பாக மாறக்கூடிய ஒரு “ஒப்பந்தத்தின்” இறுதி வடிவத்தை ட்ரம்ப் அறிவிக்கலாம், அல்லது அவர் பெருமளவிலும் பொறுப்பற்ற முறையிலும் போரைத் தீவிரப்படுத்தலாம். சமீபத்தில் நடந்த வெள்ளை மாளிகை ஊழியர்கள் கூட்டத்தில், ஈரானின் “சில” நிலத்தடி ஏவுகணைத் தொழிற்சாலைகளை அழிப்பதற்காகக் குறைந்த திறன் கொண்ட அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து ட்ரம்ப் கேள்வி எழுப்பியதாகவும், அணுஆயுதத் தாக்குதல் “சாத்தியமானதா” என்று கேட்டதாகவும் பத்திரிகையாளர் சீமோர் ஹெர்ஷ் கடந்த புதன்கிழமை தெரிவித்தார். அப்போது, அணு ஆயுதங்கள் குறித்து விரிவான அறிவு கொண்ட ஒரு நபர், அதனை “மிகவும் அச்சமூட்டும் மற்றும் மிகவும் தீவிரமான தருணம்” என்று குறிப்பிட்டதாகவும், மேலும் ஜனாதிபதி “ஈரானில் தோற்றுவிடக் கூடாது என்பதில் அவநம்பிக்கையுடன் இருக்கிறார்” என்றும் ஹெர்ஷ் எழுதியிருந்தார்.

இத்தகைய போர்த் தீவிரமாக்கலை நாம் “மிகவும் தீவிரமாக” பரிசீலித்து வருகிறோம் என்பதை ஈரானின் தலைமைக்கு எச்சரிப்பதே ட்ரம்பின் எண்ணமாக இருந்தது என ஹெர்ஷ் எழுதினார். அங்கு உடனிருந்த குறைந்தது ஒரு உதவியாளராவது, அமெரிக்க ஜனாதிபதி மத்திய கிழக்கில் ஓர் அணுஆயுதப் போரைத் தொடங்குவது குறித்து இவ்வளவு சாதாரணமாகப் பேசுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கம் செலுத்தும் பிரிவுகள், ட்ரம்ப் போரைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரி வருகின்றன. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் புதன்கிழமை “ட்ரம்பிற்கு ஒரு புதிய ஈரான் மூலோபாயம் தேவை” என்ற தலைப்பில் ஒரு தலையங்க கட்டுரையை வெளியிட்டது. அதில் “2006-07 இல் ஈராக்கில் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் எதிர்கொண்டதைப் போன்ற ஒரு தேர்வை ஜனாதிபதி எதிர்கொள்கிறார்” என்று அறிவித்ததுடன், புஷ்ஷின் படை அதிகரிப்பு மூலோபாயத்தை ஒரு முன்மாதிரியாகவும் அது முன்வைத்தது.

நிகழ்வுகளின் உடனடிப் போக்கு எதுவாக இருந்தாலும், இந்தப் போர் மத்திய கிழக்கைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உறுதியான நோக்கத்தில் வேரூன்றியுள்ளது. இந்தத் தீவிர நடவடிக்கை அணுஆயுதங்களைக் கொண்ட சீனாவுடனான அதன் மோதலுடனும் மற்றும் அமெரிக்காவின் உலகளாவிய போரின் தீவிரத்துடனும் பிணைக்கப்பட்டுள்ளது. 2025 ஜூன் மாதத்தில் ட்ரம்ப் அறிவித்த போர்நிறுத்தம் பிப்ரவரி 28 வரை மட்டுமே நீடித்தது. பிப்ரவரி 28 அன்று, வாஷிங்டனும் இஸ்ரேலும் ஈரானின் உச்ச தலைவர் அலி கொமேனியைப் படுகொலை செய்ததன் மூலம் போரை மீண்டும் தொடங்கின. இனி வரப்போகும் எந்தவொரு புதிய “ஒப்பந்தமும்” இதே போன்ற தன்மையைக் கொண்டதாகவே இருக்கும்.

போரின் ஒவ்வொரு கட்டமும் அதற்கு முந்தைய கட்டத்தின் தோல்வியைத் தொடர்ந்தே வந்துள்ளது. ட்ரம்ப், ஈரானிய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் ஒரு இரகசிய நடவடிக்கையுடன் இந்த ஆண்டைத் தொடங்கினார். “நாங்கள் போராட்டக்காரர்களுக்கு துப்பாக்கிகளை அனுப்பினோம், அதுவும் நிறைய அனுப்பினோம்,” என்று அவர் ஏப்ரல் மாதம் பொக்ஸ் நியூஸ் ஊடகத்திடம் கூறினார். ஆட்சிக் கவிழ்ப்பு தோல்வியடைந்தபோது, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் தலைவர்களைப் படுகொலை செய்து, வான்வழிப் போரைத் தொடங்கின. ஏப்ரல் மாதத்தில், அமெரிக்கா ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிட்டது, மேலும் வியாழக்கிழமையன்று ட்ரம்ப் படையெடுப்பு நடத்தப்போவதாக அச்சுறுத்தல் விடுத்தார்.

வாஷிங்டன் பல மாதங்களாக ஏதோ ஒரு வடிவிலான படையெடுப்பிற்குத் தயாராகி வருகிறது. ஏப்ரல் 7 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஓர் உத்தரவின்படி, “கார்க் தீவைக் கைப்பற்றுவதற்கும் ஈரானுக்குள் கடலோரப் பகுதிகளை பிரித்தெடுப்பதற்கும் பிப்ரவரி முதல் முடிக்கப்பட்ட” அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் திட்டங்களின் கீழ், 82வது வான்வழிப் பிரிவின் பாராசூட் படையினர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டதாக பத்திரிகையாளர் கென் கிளிப்பன்ஸ்டைன் திங்களன்று செய்தி வெளியிட்டார்.

அமெரிக்க ஆளும் வர்க்கத்தைப் பொறுத்தவரை, இதில் பந்தயம் கட்டப்பட்டுள்ள விஷயங்கள் மிகவும் பிரம்மாண்டமானவை: அமெரிக்காவின் உலகளாவிய அந்தஸ்து, பெருமளவில் மிகைமதிப்பீடு செய்யப்பட்ட பங்குச் சந்தையின் மதிப்பு, உலகளாவிய இருப்பு நாணயமாக டாலரின் பங்கு, மற்றும் 39 டிரில்லியன் டாலர் கடனில் இருக்கும் ஒரு அரசாங்கத்தின் கடன் தீர்க்கும் திறன் ஆகிய அனைத்தும் இந்தப் போரின் முடிவையே நம்பியிருக்கின்றன.

அரசியல் ஸ்தாபனத்தின் எந்தவொரு பிரிவும் இந்தப் போரை எதிர்க்கவில்லை. மேலும் இதற்கு எதிராக யாரும் எந்தவொரு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கவும் இல்லை.

ட்ரம்பின் படையெடுப்பு அச்சுறுத்தலுக்கு ஜனநாயகக் கட்சியின் பதில் என்னவென்றால், ஜனநாயகக் கட்சியினர் ஆயுதம் வழங்க வாக்களித்த ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவரத் தவறியதற்காக குடியரசுக் கட்சியினரைக் குறை கூறுவதே ஆகும். டிசம்பர் 2025-ல் நூற்றுப் பதினைந்து பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சியினர் தேசியப் பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்திற்கும், ஜனவரியில் 839 பில்லியன் டாலர் இராணுவ நிதி ஒதுக்கீட்டிற்கு 149 பேர்களும் வாக்களித்தனர். போரின் 100-வது நாளில், செனட் சிறுபான்மைத் தலைவர் சார்லஸ் ஷுமர் “குடியரசுக் கட்சி செனட்டர்கள் முதுகெலும்புடன் செயல்பட, விலைகள் இன்னும் எவ்வளவு காலத்துக்கு உயர வேண்டும், இராணுவக் குடும்பங்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்கு காத்திருக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

போரைத் தொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு கட்சிக்கு ஜனநாயகக் கட்சியினர் விடுக்கும் இந்த முறையீடுகள், பரந்துபட்ட மக்களின் எதிர்ப்பை நிராயுதபாணியாக்குவதை நோக்கமாகக் கொண்டவை ஆகும். போருக்கு நிதியளிப்பதற்கான 200 பில்லியன் டாலர் கூடுதல் நிதி குறித்து இரு அவைகளிலும் எந்தவொரு வாக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. மேலும் ஜூன் 4 அன்று, லெபனானில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கான தீர்மானம் பிரதிநிதிகள் சபைக்கு வந்தபோது, பெரும்பாலான ஜனநாயகக் கட்சியினர் குடியரசுக் கட்சியினருடன் இணைந்து அதை 324-க்கு 92 என்ற கணக்கில் தோற்கடித்தனர்.

கடந்த புதன்கிழமை இரவு தெஹ்ரானைச் சுற்றியுள்ள இலக்குகளை அமெரிக்க ஏவுகணைகள் தாக்கிக் கொண்டிருந்தபோது, நியூ யோர்க்கைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ், மேடிசன் ஸ்கொயர் கார்டன் அரங்கத்தில் இடம்பெற்ற தேசிய கூடைப்பந்து விளையாட்டில் நியூ யோர்க் நிக்ஸ் அணி பெற்ற வெற்றியைப் பற்றி மிகுந்த மகிழ்ச்சியுடன் சமூக ஊடகத்தில் பதிவிட்டுக் கொண்டிருந்தார்.

ஜனநாயகக் கட்சியினர் மௌனமாக இருப்பதற்குக் காரணம், அவர்களும் இதேபோன்ற ஒரு ஏகாதிபத்தியக் கொள்கையைத்தான் ஆதரிக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, கீழிருந்து எழும் எதிர்ப்பின் எழுச்சியைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள்.

இந்தப் போர் முதலாளித்துவ நெருக்கடியின் அனைத்துக் கூறுகளையும் — பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியாக — தீவிரப்படுத்தி வருகிறது. இதன் விளைவுகள் விண்ணைத் தொடும் அளவிற்கு விலைவாசி உயர்வு, உண்மையான ஊதிய வீழ்ச்சி, சமூக நலத் திட்டங்களுக்கான வெட்டுக்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதிகரித்து வரும் தாக்குதல்கள் ஆகியவற்றில் பிரதிபலிக்கின்றன. இது அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் அதிகரித்து வரும் வேலைநிறுத்த அலைகளின் மூலம் வெளிப்படும் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்திற்கு மேலும் எரியூட்டுகிறது.

உலக சோசலிச வலைத் தளம், போரின் 100 நாட்கள் குறித்த அதன் ஜூன் 8 அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டது:

ஏகாதிபத்தியத்தைப் போரை நோக்கித் தள்ளும் அதே முரண்பாடுகள்தான் தொழிலாள வர்க்கத்தையும் போராட்டத்தை நோக்கித் தள்ளி வருகின்றன. போரை உருவாக்கும் அதே நெருக்கடியிலிருந்துதான் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியும் ஊற்றெடுக்கிறது. இந்த நெருக்கடியிலிருந்தே, போருக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய ஒரே சமூக சக்தி உருவாகிறது. போரும் சமூகப் புரட்சியும் ஒரே வரலாற்றுச் செயல்முறையின் இரு பக்கங்களாகும்.

போருக்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க, முதலாளித்துவ அமைப்பு முறை ஒழித்துக்கட்டப்பட வேண்டும். வேகமாக வளர்ந்து வரும் தொழிலாளர் வர்க்க இயக்கமானது, இந்த முன்னோக்கை ஆயுதமாகக் கொண்டு, ஏகாதிபத்தியத்தையும் முதலாளித்துவ அமைப்பு முறையையும் எதிர்க்கும் ஒரு சுயாதீனமான, சர்வதேச சோசலிச இயக்கமாகத் தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும்.

Loading