நீண்டகால இலங்கை ட்ரொட்ஸ்கிசவாதியான கீதானந்த ஜயசேகர, 70 வயதில் காலமானார்

இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), சுமார் நான்கு தசாப்தங்களாக சோ.ச.க.யினதும் அதன் முன்னோடியான புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கழகத்தினதும் (பு.க.க.) உறுப்பினராக இருந்த தோழர் கீதானந்த ஜயசேகர அவர்களின் மறைவை ஆழ்ந்த துயரத்துடன் அறிவிக்கிறது.

கீதானந்த ஜயசேகர

கட்சித் தோழர்கள் மத்தியில் 'கீதா' என்று பரவலாக அறியப்பட்ட அவர், ஜூன் 29 அன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர மாரடைப்பினால் காலமானார். இதய வால்வு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இதய வால்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருந்தார். கடந்த வாரம் புதன்கிழமை கடுமையான காய்ச்சலும் தொடர்ச்சியான இருமலும் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

70 வயதான கீதா, தனது மூன்று மூத்த சகோதரிகளுடன் வாழ்ந்து வந்தார். அவர், பு.க.க. ஸ்தாபகப் பொதுச் செயலாளரும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நீண்டகால தலைவருமான அமரர் தோழர் கீர்த்தி பாலசூரியவின் இளைய சகோதரர் ஆவார்.

இலங்கை சோ.ச.க.யும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், சர்வதேச சோசலிசத்தின் ட்ரொட்ஸ்கிசக் கோட்பாடுகளுக்காக தோழர் கீதா முன்னெடுத்த கொள்கை ரீதியான போராட்டத்திற்கு புகழஞ்சலி செலுத்துவதுடன், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றன. வரும் நாட்களில் அவரது வாழ்க்கை மற்றும் அரசியல் பணியை நினைவுகூரும் இரங்கல் கட்டுரை ஒன்றை நாம் வெளியிடுவோம்.

தோழர் கீதாவின் பூதவுடல், இன்று ஜூலை 1, காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை இல. 1023, குலரத்ன மாவத்தை, (புன்ஜி பொரளை) கொழும்பு 08 இல் அமைந்துள்ள நீலா மலர்சாலையில இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும். இறுதி அஞ்சலிக் கூட்டமானது இன்று ஜூலை 1, பிற்பகல் 4.15 மணிக்கு பொரளை கனத்தை மயானத்தின் புதிய பகுதியில் நடைபெறும். அதைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு தகனம் நடைபெறும்.