இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையில் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு, “உலகப் போர், ஏகாதிபத்தியம் மற்றும் பல்துருவ உலகம் என்ற மாயை” என்ற தலைப்பில் ஜூலை 8 புதன்கிழமை மாலை 7.00 மணிக்கு சூம் ஊடாக ஒரு பகிரங்கக் கூட்டத்தை நடத்துகிறது.
ஏகாதிபத்தியமானது மனிதகுலத்தை அதன் வரலாற்றிலேயே மிகப் பெரிய பேரழிவை நோக்கி இழுத்துச் செல்லும் இந்தத் தருணத்தில், இந்த முக்கியமான கூட்டத்தை நாம் நடத்துகிறோம்.
உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ தலைமையில் நடத்தப்படும் போர், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடுத்துள்ள போர், மற்றும் அமெரிக்காவின் முழு ஆதரவுடன் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து முன்னெடுத்து வரும் இனப்படுகொலை ஆகிய அனைத்தும், விரிவடைந்து வரும் உலகப் போரின் பகுதிகளாகும். ட்ரம்ப் நிர்வாகத்தின் மத்தியஸ்தத்தில் தெஹ்ரானுடன் எட்டப்பட்ட பலவீனமான போர்நிறுத்தம் தற்காலிக இடைநிறுத்தம் மட்டுமே ஆகும்.
அமெரிக்க ஏகாதிபத்தியம், எண்ணெய் வளம் நிறைந்த மத்திய கிழக்கின் மீது தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவதன் மூலமும், இறுதியில் தனது பிரதான போட்டியாளர்களாகக் கருதும் ரஷ்யா மற்றும் சீனாவை இலக்கு வைப்பதன் மூலமும், இழந்த தனது உலகளாவிய மேலாதிக்கத்தை மீள நிலைநிறுத்த முயன்று வருகிறது. ஏனைய ஏகாதிபத்திய சக்திகள் இந்தப் போர்களுக்கு ஆதரவளிக்கும் அதேநேரம், இதற்கு சமாந்தரமாக தங்களது மூலோபாய நலன்களைப் தக்கவைத்துக்கொள்வதற்காக தமது சொந்த இராணுவத் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றன.
இந்தத் தீர்மானகரமான அரசியல் அபிவிருத்திகளுக்கு மத்தியில், சர்வதேச அளவில் உள்ள தமது சகாக்களைப் போலவே, இலங்கையில் உள்ள பல்வேறு பின்நவீனத்துவ கல்வியாளர்களும் போலி-இடது அமைப்புகளும், ஏகாதிபத்தியப் போரின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை மூடிமறைப்பதன் மூலம் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை வழிதவறச் செய்யும் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான சுமித் சாமிந்த, “பல்துருவ உலகம்” உருவாகி வருவது போரின் ஆபத்தை குறைக்கிறது என்ற கட்டுக்கதையைப் பரப்பி வருகிறார். ரஷ்யா, சீனா மற்றும் பிரிக்ஸ் (BRICS) கூட்டணி போன்ற புதிய “அதிகார மையங்கள்” தலைதூக்குவதன் மூலம் புதிய பூகோள சமநிலையையும் ஸ்திரத்தன்மையையும் நிறுவ முடியும் என்று சாமிந்தவும் அவருடன் தொடர்புடையவர்களும் வாதிடுகின்றனர்.
ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட குற்றவியல் ஏகாதிபத்தியத் தாக்குதலையோ அல்லது காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனப்படுகொலையையோ, பல்லாயிரக்கணக்கான மக்களின் படுகொலையையோ ஒரு கல்வியாளர் கண்டனம் செய்யவில்லை.
முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் பப்லோவாத ஐக்கிய செயலகத்துடன் இணைந்துள்ள சோசலிச மக்கள் மன்றம் போன்ற போலி-இடது அமைப்புகளும் உலகம் ஒரு பல்துருவ ஒழுங்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்ற கருத்தையே பிரசாரம் செய்கின்றன. இலங்கையின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்காக “அணிசேரா” வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுமாறு அவை மக்கள் விடுதலை முன்னணி /தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றன.
தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களும், நெருக்கடியால் சீர்குலைந்துள்ள உலக முதலாளித்துவ ஒழுங்கின் கட்டமைப்புக்குள்ளேயே தங்களது எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதே இந்த வசதிபடைத்த மத்தியதர வர்க்க அடுக்குகளால் முன்னெடுக்கப்படும் வாதங்களின் சாராம்சம் ஆகும். பேரழிவுகரமான உலகப் போரின் மாபெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நிலையில், வெகுஜனங்களின் விழிப்புணர்வை மழுங்கடித்து, அவர்களை அரசியல் ரீதியாக நிராயுதபாணிகளாக வைத்திருப்பதே இவர்களின் நோக்கமாகும்.
உண்மையில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்து வரும் போர்த் தயாரிப்புகளுடன் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் தன்னை மேலும் மேலும் ஒருங்கிணைத்துக் கொண்டிருப்பதுடன் ஈரானுக்கு எதிரான போரைக் கண்டனம் செய்யவும் மறுத்துள்ளது. அதே நேரம், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மீது அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கனக் கொள்கை உத்தரவுகளை திணித்து வருகிறது.
போரானது முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடியின் பேரழிவுகரமான வெளிப்பாடே அன்றி, இராஜதந்திரத் தோல்விகளின் விளைவல்ல. முதலாளித்துவ தேசிய-அரசு முறைமைக்கும் பூகோளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்துக்கும் இடையிலான சமரசம் காண முடியாத முரண்பாடே போரை தவிர்க்க முடியாததாக ஆக்குகிறது. முதலாளித்துவத்தால் அமைதியான அல்லது ஜனநாயகபூர்வமான முறையில் பல்துருவ உலக ஒழுங்காக பரிணமிக்க முடியாது. இருபதாம் நூற்றாண்டில், ஏகாதிபத்தியம் மனிதகுலத்தை இரண்டு உலகப் போர்களுக்குள் தள்ளி, கோடிக்கணக்கான மக்களின் உயிர்களை பலிகொடுத்ததுடன், எண்ணிலடங்கா உற்பத்திச் சக்திகளையும் அழித்தது.
ஆளும் வர்க்கம், போரினதும் தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியினதும் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது திணித்து, மேலும் மேலும் எதேச்சாதிகார வழிமுறைகளைப் பயன்படுத்தி வரும் நிலையில், தொழிலாளர்கள் தமது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் போராடுவதால் வெகுஜனப் போராட்டங்கள் தலைதூக்கி வருகின்றன. சோசலிச மற்றும் சர்வதேசவாத வேலைத்திட்டத்தால் ஆயுதபாணியாக்கப்பட்ட தொழிலாள வர்க்கமே, அணுவாயுதப் போரை நோக்கிய ஏகாதிபத்தியத்தின் பாய்ச்சலைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஒரே புரட்சிகர சக்தியாகும்.
ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டத்தில், தற்போதைய நெருக்கடியின் வேர்கள், கல்வியாளர்கள் மற்றும் போலி-இடது போக்குகளால் முன்வைக்கப்படும் பிற்போக்கு கோட்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்படும். போருக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் புரட்சிகர வேலைத்திட்டத்தையும், அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பணிகளையும் பேச்சாளர்கள் விளக்குவார்கள்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு இந்த முக்கியமான கலந்துரையாடலில் பங்கேற்குமாறு உங்களை அழைக்கின்றோம்.
நாள்: ஜூலை 8, புதன்கிழமை
நேரம்: மாலை 7:00 மணி
கலந்துகொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்.
