இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஜூலை 7-8 தேதிகளில் அங்காராவில் நடைபெறுகின்ற 36வது நேட்டோ உச்சி மாநாட்டிற்குத் தயாராகும் வகையில், ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் அரசாங்கம் துருக்கியில் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்துள்ளது.
எர்டோகன் அரசாங்கம் தலைநகரில் நடைமுறையளவிலான ஒரு அவசரநிலையை அமல்படுத்தி, நூற்றுக்கணக்கான மக்களைக் கைது செய்துள்ளது. ஈரானுக்கு எதிராக ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்துக் கொண்டிருப்பவர்களும், காஸாவில் நடக்கும் இனப்படுகொலையை சாத்தியமாக்கியவர்களும், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரில் ஒரு அணுஆயுத மோதலின் அபாயத்தை உருவாக்கிக் கொண்டிருப்பவர்களுமான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசியல் குற்றவாளிகளின் கூட்டத்திற்கு எதிரான பரவலான எதிர்ப்பை ஒடுக்குவதே இதன் நோக்கமாகும். அங்காராவில் நடக்கும் நிகழ்வுகள், உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் தீர்க்க முடியாத நெருக்கடிக்கு மத்தியில் உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கித் திரும்புவதன் மிகக் கூர்மையான வெளிப்பாடாகும்.
அங்காரா ஆளுநர் அலுவலகம், ஜூன் 28 முதல் ஜூலை 10 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பத்திரிகை அறிக்கைகளுக்கு 13 நாட்கள் தடையை அறிவித்தது. கடந்த வார இறுதியில், 18 மாகாணங்களில் நடத்தப்பட்ட வீடுகளில் சோதனைகளின் போது 100க்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, அங்காராவில் நேட்டோ எதிர்ப்புப் பேரணி மீது போலீசார் தாக்குதல் நடத்தி 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். டசின் கணக்கான இடதுசாரி ஊடகங்கள் மற்றும் அமைப்புகளின் சமூக ஊடகக் கணக்குகள் முடக்கப்பட்டன. இது முந்தைய வாரங்களில் நடந்த நூற்றுக்கணக்கான தடுப்புக்காவல்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதும் ஏற்கனவே நிகழ்ந்த நிலையில், தற்போது இந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தனது சொந்த நலன்களை முன்னெடுப்பதற்காக துருக்கிய ஆளும் வர்க்கம் பங்கேற்கும் வெளிநாட்டிலான ஏகாதிபத்தியப் போரும், உள்நாட்டில் சமூக எதிர்ப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போலீஸ்-அரசு அடக்குமுறையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகும்.
துருக்கியில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான இந்தப் பாரிய தாக்குதலுக்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல், ஊடக நிறுவனங்களின் ஒப்புதல் உள்ளது. ஆசியா மற்றும் ஐரோப்பாவையும், மத்திய தரைக்கடலையும் கருங்கடலையும் இணைக்கும் முக்கிய புவியியல் சந்திப்பில் அமைந்துள்ள துருக்கி, அமெரிக்கா தலைமையிலான அனைத்து ஏகாதிபத்திய சக்திகளின் போர்களை முன்னெடுப்பதற்கும், மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்துவதற்கும், உலகை வன்முறையான முறையில் மறுபங்கீடு செய்வதற்குமான திட்டங்களில் ஒரு முக்கிய கூட்டாளியாகக் கருதப்படுகிறது. ரஷ்யா மற்றும் ஈரானுக்கு எதிரான போர்களில் மட்டுமல்லாமல், சீனாவின் உலக இணைப்புத் திட்டம் BRI [பட்டுப்பாதை முன்முயற்சி] போன்ற திட்டங்களைச் சீர்குலைப்பது உட்பட, சீனாவை இலக்காகக் கொண்ட போர் தயாரிப்புகளிலும் துருக்கி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மேலும், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏகாதிபத்தியப் போர்களில் இருந்து தப்பியோடும் அகதிகளை, ஐரோப்பிய வல்லரசுகளின் சார்பில் எர்டோகன் தொடர்ந்து துருக்கியிலேயே தங்கவைத்து வருகிறார்.
ஜனவரி 2025 இல் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதன் பின்னர், துருக்கியில் அரசியல் எதிர்ப்புக்கு எதிரான ஒடுக்குமுறை மேலும் தீவிரமடைந்துள்ளது. துருக்கியின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புலின் மேயரும், 15.5 மில்லியன் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுக் மக்கள் கட்சியின் (CHP) ஜனாதிபதி வேட்பாளருமான எக்ரெம் இமாமோக்லு, மார்ச் 2025 முதல் சிறையில் உள்ளார். அதன் பின்னர், CHP நிர்வாகத்தின் கீழுள்ள டசின் கணக்கான நகராட்சிகளில் பொலிசார் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
உச்சி மாநாட்டிற்கு முன்பாகவே, நீதிமன்ற உத்தரவின் பேரில் CHP கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையினர், அவர்களது பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன், அடலார் நகர மேயர் அலி எர்கான் அக்போலட் உட்பட மேலும் பல மேயர்களும் கைது செய்யப்பட்டனர். மார்ச் 2024 தேர்தல்களில் முன்னணி கட்சியாக உருவெடுத்துள்ள CHP-யை, எர்டோகன் ஒரு அரசியல் சதியின் மூலம் செயலிழக்கச் செய்து வருகிறார். இவை அனைத்தும் நேட்டோ தலைநகரங்களில் முழுமையான மௌனத்துடன் எதிர்கொள்ளப்பட்டுள்ளன.
வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களின் ஒப்புதலுடன் எர்டோகன் உருவாக்கியுள்ள ஜனாதிபதி சர்வாதிகார ஆட்சி, இதேபோன்ற அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அரசாங்கங்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது. தேர்தல்களை ரத்து செய்யவும், தனது எதிரிகளைச் சிறையில் அடைக்கவும் தனது நோக்கத்தை வெளிப்படுத்திவரும் ட்ரம்ப், எர்டோகனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறார். ட்ரம்ப் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் எர்டோகனைப் புகழ்ந்து பேசும் வேளையில், ஜனநாயகக் கட்சியினரும் அவர்களின் ஊடகப் பத்திரிகையான நியூ யோர்க் டைம்ஸும், துருக்கியில் நடைபெற்று வரும் இந்த ஒடுக்குமுறைக்கு மறைமுகமாக ஒப்புதல் அளித்து வருகின்றன.
கடந்த திங்களன்று டைம்ஸ் பத்திரிகை “அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு, துருக்கியில் நேட்டோ புதிய மதிப்பைக் காண்கிறது” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. “உக்ரேன் மற்றும் ஈரானில் நடக்கும் போர்கள், ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியது உள்ளிட்ட உலகளாவிய நிகழ்வுகள், துருக்கிக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளன. இது, அதன் நேட்டோ நட்பு நாடுகளின் பார்வையில் நாட்டின் மதிப்பை அதிகரித்துள்ளது” என்று அது எழுதியது.
தி டைம்ஸ் பத்திரிக்கை, உண்மையில் என்ன நடக்கிறது என்பதை மூடிமறைத்தவாறே, “திரு. எர்டோகனின் அரசியல் எதிரிகள் மீதான விரிவான அடக்குமுறை” பற்றி மேலோட்டமாகக் குறிப்பிட்டது. அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வமற்ற இந்தப் பத்திரிகை எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. மேலும், உக்ரேனுக்கு ஆயுதம் வழங்குவதில் முன்னணியில் இருக்கும் ஒரு அரசு தீவிரமாக ஒரு போலீஸ்-அரசை நிறுவி வருகிறது என்ற உண்மையுடன், உக்ரேன் போர் என்பது “சர்வாதிகாரத்திற்கு” எதிரான “ஜனநாயகத்தைப்” பாதுகாப்பதற்கான ஒரு போர் என்ற அதன் கூற்றுக்களைப் பொருத்துவதற்கு அது எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இந்த உச்சிமாநாட்டின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரலானது, மீள் ஆயுதமயமாக்கலையும் ஏகாதிபத்தியப் போரையும் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு உச்சிமாநாடாக இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஜூலை 7 அன்று நடைபெற்ற பாதுகாப்புத் தொழில் மன்றத்தில் உக்ரேன் மட்டுமல்லாமல், நேட்டோவின் ஆசிய-பசிபிக் கூட்டாளிகளான ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து, தென் கொரியா மற்றும் வளைகுடா நாடுகளும் கலந்துகொண்டன. இதனால், இந்த நிகழ்ச்சி நிரல், 2022 முதல் நேட்டோ ஒரு பினாமிப் போரை நடத்தி வரும் ரஷ்யாவைத் தாண்டி, ஈரானுக்கு எதிரான தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் சீனாவிற்கு எதிரான போருக்கான தயாரிப்புகள் வரை உள்ளடக்கியதாக விரிவடைகிறது.
2035 ஆம் ஆண்டிற்குள் இராணுவச் செலவினங்களுக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5 சதவீதத்தை ஒதுக்குவது என்ற கடந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்கை செயல்படுத்துவதில் இந்த உச்சி மாநாடு கவனம் செலுத்துகிறது. இந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், நேட்டோ கூட்டாளிகள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ட்ரம்ப் நிர்வாகம் அச்சுறுத்தியுள்ளது. பிரிட்டனின் தி டெலிகிராப் பத்திரிகையின்படி, 5 சதவீத இலக்கை எட்டத் தவறினால் நீண்ட காலத்தில் குறைந்த திறன் கொண்ட ஐரோப்பாவும் கனடாவும் உருவாகும் என்று மூத்த அமெரிக்க அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வலியுறுத்தினர்.
இராணுவச் செலவினங்களை விரைவாக அதிகரிக்க வேண்டும் என்ற ட்ரம்பின் கோரிக்கையும், ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போரின் எதிர்காலம் குறித்த கருத்து வேறுபாடுகளும் இந்த உச்சி மாநாட்டிற்கான முன்னோட்டக் காலத்தை வரையறுத்தன. உக்ரேனில் உள்ள போர்முனை “உறைந்துவிட்டதாக” அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். ஐரோப்பிய வல்லரசுகள் ரஷ்ய எல்லைக்குள் தொலைதூர தாக்குதல்களை நடத்துவதன் மூலம் போரைத் தீவிரப்படுத்த முயலும் நிலையில், ஜூலை 8 அன்று அங்காராவில் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்தும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசி வழி இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டும் வரும் ட்ரம்ப், அமெரிக்காவுக்கு இலாபகரமான தனி ஒப்பந்தம் ஒன்றைத் தேடி வருகிறார். இராணுவவாதத்தை குறைப்பதற்கு பதிலாக, இந்த ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டி அதனை மேலும் தீவிரப்படுத்துகிறது.
மீள் ஆயுதமயமாக்கலுக்காக கொட்டப்படும் டிரில்லியன் கணக்கான நிதியானது, சுகாதாரம், கல்வி, ஓய்வூதியம் மற்றும் ஊதியங்களில் மேற்கொள்ளப்படும் கடுமையான வெட்டுக்களின் மூலம் தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து பறிக்கப்படுகிறது. நேட்டோவின் இரண்டாவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ள துருக்கி, தனது இராணுவச் செலவினங்களை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2 சதவீதமும், கடந்த பத்தாண்டுகளில் 94 சதவீதமும் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு, மிகப்பெரிய வாழ்க்கைச் செலவு நெருக்கடி, உண்மையான ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களின் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி, தொழிலாளர் வர்க்கத்தின் மீது சுமத்தப்படும் அதிகரித்து வரும் வரிகள், மேலும் பெருநிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் ஆகியவற்றின் மத்தியில் நிகழ்ந்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக நேரடி நேட்டோ போரைத் தூண்ட முயலும் ஐரோப்பிய வல்லரசுகளும், இதேபோல் தங்களின் மீள் ஆயுதமயமாக்கல் திட்டங்களுக்கு மிகப்பெரிய சமூக வெட்டுக்களின் மூலம் நிதி திரட்ட முயல்கின்றன. இதனுடன் கட்டாய இராணுவச் சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளும் இணைந்துள்ளன. தொழிலாளர்களாலும் இளைஞர்களாலும் எதிர்க்கப்படும் இந்த நடவடிக்கைகள் அதிகரித்து வரும் எதிர்ப்பை உருவாக்குவதால், உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் பொலீஸ்-அரசு நடவடிக்கைகளை நாடுகின்றன. ஏறத்தாழ 70,000 பாதுகாப்புப் பணியாளர்களைக் கொண்டு அங்காராவை ஒரு கோட்டையாக மாற்றியிருப்பதும், அதனுடன் இணைந்துள்ள தடுப்பு கைது நடவடிக்கைகளின் அலையும், இந்த அணுகுமுறையின் செறிவான வெளிப்பாடாகும்.
உலக ஏகாதிபத்தியத்தின் மையமான அமெரிக்காவில் இந்த மாற்றம் இன்னும் வெளிப்படையாகத் தெரிகிறது. ஜூலை 3 அன்று மவுண்ட் ரஷ்மோரில், ட்ரம்ப் ஒரு பாசிச உரையாற்றினார். இதனை “கம்யூனிச எதிர்ப்பு வெறியும் சர்வாதிகாரத்திற்கான சதியும்” என்று WSWS வகைப்படுத்தியது. அந்த உரையில் அவர் சோசலிசத்தின் மீது போர் தொடுத்து, அரசியல் எதிர்ப்பை உள்நாட்டு எதிரிகளின் செயல் என்று முத்திரை குத்தினார். இந்தக் கம்யூனிச எதிர்ப்பு, தொழிலாளர் வர்க்கத்திலிருந்து எழும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நிதிய தன்னலக்குழுவின் பீதியை வெளிப்படுத்திக் காட்டுகிறது.
சமூகப் புரட்சி குறித்த ஆளும் வர்க்கங்களின் பீதி ஆதாரமற்றது அல்ல. இராணுவவாதம் மற்றும் சமூக சிக்கன நடவடிக்கைகளின் இதே சுழல் உலகெங்கிலும் எப்போதும் வளர்ந்து வரும் வர்க்கப் போராட்ட அலையைத் தூண்டுகிறது. இந்த ஆண்டு, துருக்கி ஒரு சுயாதீனமான தொழிலாளர் இயக்கத்தின் குறிப்பிடத்தக்க அறிகுறிகளைக் கண்டுள்ளது. பொருட்களை களஞ்சியப்படுத்தும் தொழிலாளர்கள் தொடங்கி சுரங்கத் தொழிலாளர்கள் வரை, கப்பல் கட்டும் தொழிலாளர்கள் முதல் ஆசிரியர்கள் வரை, தொழிலாள வர்க்கத்தின் பிரிவினர் உத்தியோகபூர்வ தொழிற்சங்க கூட்டமைப்புகளிலிருந்து சுயாதீனமாக முக்கியமான போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவில் ஆற்றல், இரயில்வே மற்றும் மருத்துவமனை வேலைநிறுத்தங்கள், இத்தாலியில் பொது வேலைநிறுத்தங்கள் மற்றும் உக்ரேனில் பெருமளவிலான இராணுவப் விலகல்கள் ஆகியவை இந்த எழுச்சியின் சர்வதேச அறிகுறிகளாகும்.
போருக்கு எதிரான எதிர்ப்பைக் குற்றமாக்குவது என்பது நேட்டோ முழுவதும் காணப்படும் ஒரு நிகழ்வாகும். நேட்டோ ஆதரவு பெற்ற ஜெலென்ஸ்கி ஆட்சி, உக்ரேனிய ட்ரொட்ஸ்கிசவாதியான போக்டன் சிரோடியுக்கை, ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களின் ஒற்றுமைக்காகப் போராடியதற்கும், ஜெலென்ஸ்கி மற்றும் புட்டின் ஆகிய இரு ஆட்சிகளையும் எதிர்த்ததற்கும் “தேசத்துரோகம்” என்ற குற்றச்சாட்டின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் அடைத்துள்ளது. மூன்று தனித்தனி நிபுணர் அறிக்கைகள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள போதிலும், அவரது தடுப்புக் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. போக்டனைச் சிறையில் அடைக்கும் ஜெலென்ஸ்கி ஆட்சிக்கும், துருக்கியில் போர் எதிர்ப்பு செயற்பாட்டாளர்களையும் அரசியல் எதிர்ப்பாளர்களையும் சிறையில் அடைக்கும் எர்டோகன் ஆட்சிக்கும் பின்னால் ஏகாதிபத்திய சக்திகள் நிற்கின்றன.
வளர்ந்து வரும் ஒடுக்குமுறைக்கு மத்தியில், அதே நேட்டோ வல்லரசுகளிடம் “ஜனநாயகம்” மற்றும் “சமூக அமைதிக்காக” மேல்முறையீடு செய்வதுடன், அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எர்டோகனை விட சிறந்த கூட்டாளியாக இருப்போம் என்று உறுதியளிக்கும் CHP போன்ற முதலாளித்துவ எதிர்க்கட்சிகளின் தோல்வியையும் இந்த நிகழ்வுகள் அம்பலப்படுத்துகின்றன. துருக்கியிலும் உலகம் முழுவதிலும், முதலாளித்துவத்தின் எந்தவொரு பிரிவும் ஏகாதிபத்திய போரைத் தொடர்ச்சியாக எதிர்க்கவோ அல்லது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவோ முடியாது உள்ளன. அதற்கு ஆளும் வர்க்கத்தின் செல்வம் மற்றும் அதிகாரத்தின் மீது ஒரு நேரடித் தாக்குதல் தேவைப்படுகிறது.
ஏகாதிபத்திய போர் மற்றும் சர்வாதிகாரத்தை நிறுத்துவதற்கான ஒரே வழி, ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைத்து அணிதிரட்டுவதில் தான் உள்ளது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், துருக்கி மற்றும் ஏனைய நாடுகளிலுள்ள அதன் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும் போராடும் முன்னோக்கு இதுவேயாகும்.
