இலங்கை: செலவுகள் அதிகரிப்பு மற்றும் நெல் விலை சரிவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கடந்த ஒரு வாரமாக, இலங்கை முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், நெல்லுக்கு உத்தரவாத குறைந்தபட்ச விலை நிர்ணயம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டங்கள், ஈரான் போரினால் மேலும் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்களின் மீது சுமத்த முற்பட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்திற்கு எதிராக விவசாயிகள் மத்தியில் பெருகிவரும் கோபத்தை வெளிப்படுத்துகின்றன. ஏற்கனவே, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின்படி அமல்படுத்தப்பட்ட கொடூரமான சிக்கனக் கொள்கைகளால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில், நெல் கொள்வனவை அதிகரிக்கவும் கொள்வனவு விலையை உயர்த்தவும் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது. [Photo: Facebook/Battinews]

விவசாயிகள், ஒரு கிலோ நெல்லுக்கு 140 ரூபாய் உத்தரவாத குறைந்தபட்ச விலை, உரம் மற்றும் வேளாண் இரசாயனங்களின் விலைக் குறைப்பு மற்றும் மேலும் மானிய அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீட்டையும் கோருகின்றனர்.

ஜூன் 16 அன்று, வடமத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள ஹிங்குரங்கொடையில் சுமார் 2,000 விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே நாளில், திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலக அலுவலகம் முன்பாக சுமார் 500 விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜூன் 17 அன்று, அம்பாறை மாவட்டத்தின் மகாவலி சி வலயத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தெஹியத்தகண்டிய நகரில் போராட்டம் நடத்தினர்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹுங்கம தெனியாய அடவெடுன பகுதியில் சுமார் 200 விவசாயிகள் தெனியாய பௌத்தகோவில் அருகில் கூடி, தேங்காய் உடைத்து அரசாங்கத்திற்கு சாபமிட்டனர்.

வடக்கு கிளிநொச்சி மாவட்டத்தில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஜூன் 17 அன்று தங்களது நெல் விளைச்சலுக்கு நியாயமான கொள்வனவு விலையை கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாயிகள் பிரதிநிதிக்குழு ஒன்று, அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள் மற்றும் குறைந்த கொள்வனவு விலை உட்பட தங்களது குறைகளை விளக்கும் மனுவை உள்ளூராட்சி அதிகாரிகளிடம் கையளித்தது.

போராட்டக்காரர்கள், “இப்போது விவசாயிகளுக்குப் புரிந்துவிட்டது—அனைவரும் ஒரே மாதிரிதான்!” என்று முழக்கமிட்டனர். அதாவது, எல்லா அரசாங்கமும் அடிப்படையில் ஒன்றுதான் என்பதைக் குறிப்பிட்டனர். தங்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால், மாபெரும் பேரணியாக கொழும்பை நோக்கி அணிவகுப்போம் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

இந்தப் போராட்டங்கள், விவசாய அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட உள்ளூர் விவசாய அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டன. இவ்வமைப்புகள் விவசாயிகளின் நடவடிக்கைகளை விவசாய அபிவிருத்தித் திணைக்களத்துடன் இணைக்கின்றன. இந்தப் போராட்டங்கள், அரசியல் கட்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ள பிரதான விவசாய சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களிலிருந்து பெருமளவில் சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்டன. இவற்றில் சில, நேரடியாகவோ மறைமுகமாகவோ ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தை ஆதரிக்கின்றன. ஜே.வி.பி. தலைமையிலான அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவர் நாமல் கருணாரத்ன, விவசாயப் பிரதி அமைச்சராகவும் உள்ளார்.

ஜூன் 17 அன்று ஊடகங்களிடம் பேசிய விவசாய அமைச்சர் கே. டி. லால்காந்த, அவை பொலன்னறுவை மாவட்டத்தின் சில பகுதிகளில் மட்டுமே நடைபெற்றதாகக் கூறி, இந்தப் போராட்டங்களை சிறுமைப்படுத்த முயன்றார். மேலும், போராட்டங்கள் எவ்வளவு நடந்தாலும், சிறுபோக அறுவடை காலம் (நாட்டின் இரண்டு முக்கிய நெல் சாகுபடி பருவங்களில் ஒன்று; ஏப்ரல்/மே முதல் ஆகஸ்ட்/செப்டம்பர் வரை நடைபெறும்) வரும்வரை அரசாங்கம் நெல்லைக் கொள்வனவு செய்யாது என்றும் அவர் மிரட்டினார்.

“கொழும்பிலோ வேறு எங்கோ ஒரு போராட்டமோ நூறு போராட்டங்களோ நடந்தாலும் பரவாயில்லை—நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லைக் கொள்வனவு செய்வது சிறுபோக அறுவடை காலத்தில்தான்,” என்று அமைச்சர் கூறினார்.

ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபாய் உத்தரவாத விலை வழங்குவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்ற விவசாயிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த லால்காந்த, அப்போது உற்பத்திச் செலவுகள் அதிகமாக இருந்ததாகவும், தற்போதோ உற்பத்திச் செலவுகள் குறைந்துவிட்டன என்று அபத்தமாகக் கூறினார்.

உரம், வேளாண் இரசாயனங்கள், விதைநெல், வேளாண் உபகரணங்கள், நில உழவு மற்றும் அறுவடைச் செலவுகள் ஆகியவற்றின் விலை உயர்வினால் உற்பத்திச் செலவுகள் இன்னமும் மிகவும் அதிகமாகவே உள்ளன. ஒரு கிலோகிராம் நெல்லை உற்பத்தி செய்ய சுமார் 120 ரூபாய் செலவாகிறது என விவசாயிகள் மதிப்பிடுகின்றனர். ஆனால், தனியார் வர்த்தகர்களும் அரிசி ஆலை உரிமையாளர்களும் ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 90 ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர்.

ஏப்ரல் 7 அன்று, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக, 50 கிலோகிராம் உரப் பையை 10,500 ரூபாய் மானிய விலையில் வழங்குவதாக பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். ஆனால், அந்த விலையில் போதிய அளவு உரம் கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாக, அவர்கள் ஒரு மூட்டைக்கு 17,000 முதல் 18,500 ரூபாய் வரை மிக அதிக விலைக்கு தனியார் விற்பனையாளர்களிடமிருந்து உரம் வாங்கத் தள்ளப்பட்டுள்ளனர். இதர அனைத்து செலவுகளையும் சேர்த்துப் பார்க்கும்போது, ஒரு ஏக்கர் நெல் பயிர்ச்செய்கைக்கான மொத்தச் செலவு தற்போது சுமார் 130,000 ரூபாயாக உயர்ந்துள்ளதாக விவசாயிகள் உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) தெரிவித்தனர்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், மகாவலி சி வலயத்தில் உள்ள மஹியங்கனை கின்னொருவ பிரிவில் வசிக்கும் விவசாயிகளுடன் கலந்துரையாடினர். அங்கு சுமார் 300 விவசாயக் குடும்பங்கள் வாழ்கின்றன.

ஆர்.டி. ஜயசுந்தர

ஆர்.டி. ஜயசுந்தர கூறியதாவது: “இந்த முறை ஒரு புசல் நெல் பயிரிடுவதற்கு 80,000 ரூபாய் செலவானது. கடந்த முறை அது சுமார் 50,000 ரூபாய் மட்டுமே. செலவுகள் இரட்டிப்பாகிவிட்டன. இந்த நிலைமையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எண்ணெயும் வேளாண் இரசாயனங்களும் மிகவும் விலை உயர்ந்துள்ளன. அதோடு, அவை முன்புபோல தரமானவையும் அல்ல; மிகவும் தரமற்றவை. இப்படிப்பட்ட தரமற்ற இரசாயனங்களைப் பயன்படுத்தினால் விதைகளே அழிந்துபோகின்றன.

“அதன் பிறகு, திண்டாடும் விவசாயிகள் எங்கு கிடைக்கிறதோ அங்கிருந்து வேறு வேளாண் இரசாயனங்களைத் தேடி வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இவை அனைத்தும் விவசாயிகளை அழிப்பதற்காகவே செய்யப்படுகின்றன. இப்போது ஒரு TSP (டிரிப்பிள் சூப்பர் பாஸ்பேட்) உரப் பையின் விலை 14,000 ரூபாய், ஒரு MOP (மியூரியேட் ஒஃப் பொட்டாஷ்) உரப் பையின் விலை 13,000 ரூபாய். இதுபோன்ற செலவுகளை இதற்கு முன்பு ஒருபோதும் சந்தித்ததில்லை.

“நாங்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வர வாக்களித்தோம். ஆனால், இப்போது முன்னர் வாழ்ந்ததைப் போல வாழ்வதே சாத்தியமில்லை. நெல்லின் விலை குறைவாக இருந்ததால் வங்கியில் தங்கத்தை அடகு வைத்து பணம் கடன் வாங்கினோம். ஆனால் இன்னும் ஒரு கிலோ நெல்லின் விலை 90 ரூபாய் மட்டுமே. அந்தப் பணத்திலிருந்தே செலவுகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது. இது தொடரக்கூடிய நிலைமையல்ல. எப்படியிருந்தாலும், ஈரான் போரால் எண்ணெய் விலை நேரடியாக உயர்ந்தது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் அதைப் பற்றி எங்களால் எதுவும் செய்ய முடியாது.”

ஆளும் ஜே.வி.பி./தே.ம.ச. உட்பட அரசியல் கட்சிகளை விமர்சித்த ஜயசுந்தர, “அவர்கள் எல்லோரும் பொய்யர்கள். எந்த அரசாங்கமும் இந்தப் பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படவில்லை. நாங்கள் இப்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சியும் பேசவில்லை. எப்படியாவது ஆட்சிக்கு வருவது பற்றித்தான் அவர்கள் பேசுகிறார்கள்,” என்றார்.

பதிவு செய்யப்பட்ட விதைநெல் விநியோகத் தொழிலில் ஈடுபட்டுள்ள 59 வயதான ஆர்.டி. ஜயசேன, CIC ஹோல்டிங்ஸ், பிரவுன்ஸ் குழுமம் போன்ற பெரிய வேளாண் வணிக நிறுவனங்களும், உள்ளூர் செல்வந்த அரிசி ஆலை உரிமையாளர்களும் எவ்வாறு இரக்கமின்றி சந்தையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் என்பதைப் பற்றி முறையிட்டார். “இந்த நிறுவனங்களைப் போலவே, அரசாங்கமும் பணக்காரர்களை வளர்ப்பதற்காகவே செயல்படுகிறது. எங்களைப் போன்ற ஏழை மக்களை அது பாதுகாப்பதில்லை. நாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம். வீட்டுக்குள் வந்து பாருங்கள். சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 200 புசல் விதைநெல் குவிந்து கிடக்கிறது. எவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது! இப்போது அவற்றை சாதாரண நெல் விலைக்கு விற்றால், விதைநெல்லுக்கான விலையில் ஒரு சிறிய பகுதியைக்கூட எங்களால் பெற முடியாது,” என்று அவர் கூறினார்.

எச். எம். சமன் ஹேமந்த குமார

56 வயதான விவசாயியான எச். எம். சமன் ஹேமந்த குமார கூறியதாவது: “எண்ணெய், உரம் ஆகியவற்றின் விலையைப் பாருங்கள். நாங்கள் குறைந்தபட்சம் ஓரளவாவது நிலைத்திருக்க வேண்டுமென்றால், ஒரு கிலோ நெல்லின் விலை 150 ரூபாயைத் தாண்டியிருக்க வேண்டும்.”

நெல் பயிரிடுவதற்காக தங்கத்தை அடகு வைத்து 100,000 ரூபாய் கடன் பெற்றிருந்ததை நிரூபிப்பதற்காக, குமார எமது நிருபர்களிடம் அதற்கான ரசீதைக் காட்டினார். நெல்லின் விலை உயரும் என்ற நம்பிக்கையில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அவரது வீட்டுக்குள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. விரக்தியடைந்திருந்த அந்த விவசாயி கூறுகையில், “நெல்லின் விலை உயரவில்லை. இப்போது நாங்கள் வட்டி கட்டிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளோம். இதிலிருந்து யாராலும் வெளியேற முடியாது,” என்றார்.

மற்ற விவசாயிகளைப் போலவே, தேர்தல்களில் வாக்குகளைப் பெறுவதற்காக மீண்டும் மீண்டும் தங்களை ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் கைவிட்டுவிடும் அனைத்து அரசியல் கட்சிகளையும் குமார கண்டனம் செய்தார். “இந்த ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. ஆனால், அவர்களும் மற்றவர்களைப் போலவே இருக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.

சமனின் வயலில் இருந்து அறுவடை செய்யப்பட்டும் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கும் நெல்

நெல் விவசாயிகள் மட்டுமன்றி காய்கறி, உருளைக்கிழங்கு, வெங்காயம், பழங்கள், மக்காச்சோளம் மற்றும் பிற பணப்பயிர்களைப் பயிரிடும் விவசாயிகளும் இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் விதித்த உத்தரவுகளின் கீழ், அடுத்தடுத்து ஆட்சியிலிருந்த முதலாளித்துவ அரசாங்கங்கள்—குறிப்பாக ஜே. ஆர். ஜயவர்தன தலைமையிலான வலதுசாரி அரசாங்கம்—1977 முதல் திறந்த சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தின. இதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்தினதும் கிராமப்புற ஏழைகளினதும் வாழ்க்கைத் தரத்தின் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. ஏழை விவசாயிகளுக்கான மானியங்கள் திட்டமிட்டு வெட்டிக் குறைக்கப்பட்டன. அதேவேளை, விவசாயம், வேளாண் உள்ளீடுகள் மற்றும் விளைபொருள் சந்தைகள் தனியார் மூலதனத்திற்கு திறந்து விடப்பட்டன. இன்று, பெரும் வேளாண் வணிக நிறுவனங்களும், அரிசி ஆலை உரிமையாளர்களும் இந்தத் துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

அண்மைய ஆண்டுகளில், தங்களது விளைபொருட்களுக்கு நியாயமான விலையை வழங்குமாறும், உரம், வேளாண் இரசாயனங்கள் மற்றும் வேளாண் உபகரணங்களின் விலையைக் குறைக்குமாறும் கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு, கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற பிரமாண்டமான வெகுஜன எழுச்சியில் பத்தாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். அந்தப் போராட்டத்தின் விளைவாக ராஜபக்ஷ நாட்டைவிட்டு தப்பிச் சென்று பதவி விலக நேரிட்டது. எவ்வாறெனினும், தொழிற்சங்க அதிகாரத்துவம், முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி-இடது அமைப்புகள் மற்றும் ஜே.வி.பி.யினதும் காட்டிக்கொடுப்பின் காரணமாக, ஆளும் வர்க்கத்தால் ஏகாதிபத்தியத்தின் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகவரான ரணில் விக்கிரமசிங்கவை ஜனநாயக விரோதமான முறையில் ஜனாதிபதியாக நியமிக்க முடிந்தது. விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கொள்கைகளை இரக்கமின்றி அமல்படுத்தி நெருக்கடியின் முழுச் சுமையையும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மீது சுமத்தினார்.

பாரம்பரிய முதலாளித்துவக் கட்சிகள் மீது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் நிலவிய பரவலான வெறுப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக பொய் வாக்குறுதிகளை வழங்கி ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சிக்கு வந்தது. ஜே.வி.பி./தே.ம.ச. உடன் இணைந்த தொழிற்சங்கங்களும் இந்தத் தேர்தல் வாக்குறுதிகளை எதிரொலித்தன. ஆனால், திசாநாயக அந்த வாக்குறுதிகளை கைவிட்டதோடு மட்டுமல்லாமல், முந்தைய அரசாங்கங்களின் சிக்கன நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளார்.

இன்று, விவசாயிகளின் போராட்டங்களுக்கு தலைமை வழங்க முயற்சிக்கும் சில விவசாய அமைப்புகளும், அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலமோ அல்லது ஜனாதிபதி திசாநாயகவிடம் முறையிடுவதன் மூலமோ தீர்வுகளைப் பெற முடியும் என்ற அதே மாயைகளைப் பரப்பி வருகின்றன. கே. டி. லால்காந்த அல்லது பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன போன்ற அமைச்சர்களை மாற்ற வேண்டும் என்ற அவர்களது கோரிக்கைகளும் எந்த முன்னேற்றப் பாதையையும் வழங்கப் போவதில்லை.

விவசாயிகள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமெனில், பெரும் வேளாண் வணிக நிறுவனங்கள், இடைத்தரகர்கள் மற்றும் வங்கித் துறையினதும் ஆதிக்கத்திற்கு எதிராக கிராமப்புற விவசாயிகள் சுயாதீனமாக அணிதிரள வேண்டும். இந்தப் போராட்டத்தில், தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் பெருந் தோட்டங்கள், விவசாய வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை தேசியமயமாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற வேண்டும். இதன் பொருள், தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின் கீழ் விவசாயிகளும் கிராமப்புற ஏழைகளும் சமூகத்தின் சோசலிச மறுசீரமைப்பிற்காகப் போராட அணிதிரள வேண்டும் என்பதாகும்.

Loading