உர விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக இலங்கை விவசாயிகள் பேரழிவு அபாயத்தை எதிர்கொள்கின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர், இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மீது பேரழிவு தரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. நெல், சோளம், காய்கறிகள், பழங்கள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பயிர்களைப் பயிரிடும் இலட்சக்கணக்கான விவசாயிகள் இதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணை காலவரையின்றி மூடப்பட்டுள்ளமை உலகளாவிய எரிசக்தி விலைகளில் கடுமையான உயர்வைத் தூண்டியுள்ளதுடன், சர்வதேச விநியோகச் சங்கிலிகளையும் சீர்குலைத்துள்ளது. உலகெங்கிலும் உள்ள தங்களது சக விவசாயிகளைப் போலவே, இலங்கையிலுள்ள விவசாயிகளும் எரிபொருள் மற்றும் உர விலையேற்றத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இது விவசாய உற்பத்தியைக் கடுமையாகக் குறைத்து, மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் வகையில், உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை மேலும் தீவிரமாக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தனது உரத் தேவையில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை இறக்குமதி செய்வதுடன் இதில் பெரும்பாலானவை—குறிப்பாக யூரியா—ஈரானிடமிருந்தே கொள்வனவு செய்யப்படுகின்றன.

பெப்ரவரி 28 அன்று ஈரான் போர் வெடித்ததில் இருந்து, பூகோள எரிபொருள் விலை உயர்வுக்குப் பிரதிபலிப்பாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக உள்நாட்டு எரிபொருள் விலையை 25 முதல் 35 சதவீதம் வரை உயர்த்தியுள்ளார். இருப்பினும், விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் வளர்ந்து வரும் எதிர்ப்பு மற்றும் கொந்தளிப்பு பற்றிய அச்சத்தின் காரணமாக, உர விலைகளில் அதற்கு இணையான உயர்வை ஏற்படுத்துவதை அரசாங்கம் இதுவரை தாமதப்படுத்தி வந்துள்ளது.

ஏப்ரல் 7 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய திஸாநாயக்க, தென்மேற்கு பருவமழை பயிர்ச்செய்கை காலத்திற்கு விவசாயிகளுக்குத் தேவையான உர விநியோகத்தை அரசாங்கம் 'உறுதி செய்யும்' என்று அறிவித்தார். தனியார் நிறுவனங்களிடம் இருந்து 50 கிலோகிராம் உர மூட்டையை 13,500 ரூபாவுக்கு ($US42) அரசாங்கம் கொள்வனவு செய்து, அதனை விவசாயிகளுக்கு 10,200 ரூபா மானிய விலையில் விநியோகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், போரும் ஹோர்முஸ் நீரிணை முற்றுகையும் தொடர்வதால், அரசாங்கத்தால் இந்த விலைகளைத் தக்கவைக்க முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உலக சந்தையில் ஒரு டன் யூரியாவின் விலை மார்ச் மாதத்தில் 726 டொலராகவும், ஏப்ரல் மாதத்தில் 857 டொலராகவும் உயர்ந்தது. இது கடந்த ஆண்டின் விலையை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும். உலக வங்கியின் கணிப்புப்படி, ஒட்டுமொத்த உர விலைகள் இந்த ஆண்டு 31 சதவீதம் வரை உயரக்கூடும். யூரியா விலைகள் 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 60 சதவீதம் அதிகரிக்கக்கூடும்.

திசாநாயகவினால் 'உறுதியளிக்கப்பட்ட' விலையில் தங்களால் உரங்களைக் கொள்வனவு செய்ய முடியவிலை என்றும், விவசாயத்திற்குத் தேவையான அளவுகள் கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் ஏற்கனவே புகார் தெரிவித்துள்ளனர். வரவிருக்கும் பருவமழைக் காலத்தில் பயிர்ச்செய்கை கடுமையாகப் பாதிக்கப்படும் என்று பலர் அஞ்சுகின்றனர். அரசாங்கம் உறுதியளித்த மானிய விலையில் உரங்களை வழங்கினாலும், வறுமையிலும் கடன் சுமையிலும் மூழ்கியுள்ள பல விவசாயிகளால் அதனை வாங்க முடியாது என்றே அவர்கள் கூறுகின்றனர்.

நவம்பர் 2025 இன் பிற்பகுதியில் ஏற்பட்ட டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவினால் நாட்டின் உணவுப் பாதுகாப்பு நெருக்கடி மேலும் தீவிரமடைந்தது. இது விவசாயத் துறையில் சுமார் 814 மில்லியன் டொலர் இழப்பை ஏற்படுத்தியதுடன், பெரும் போக நெல் அறுவடை மற்றும் பிற பயிர்செய்கைகளில் சுமார் 20 சதவீதத்தை அழித்தது. பெரும் போகம் என்பது இலங்கையின் முக்கிய பயிர்ச்செய்கை காலமாகும். வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 530,000 ஹெக்டேர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியதால், 227,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டு நாட்டின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியானது. அரசாங்கத்திடமிருந்து போதுமான இழப்பீடு கிடைக்காத நிலையில், பல விவசாயக் குடும்பங்கள் இன்னும் இந்தத் துயரத்திலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றன.

பருவமழைக் காலத்தில் நெற்செய்கைக்கு மாத்திரம் 98,000 டன் யூரியா தேவைப்படுவதாகவும், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்தம் 216,300 மெட்ரிக் டன் தேவைப்படும் என்றும் விவசாய விஞ்ஞானி பேராசிரியர் புத்தி மாரம்பே எச்சரித்துள்ளார். உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவகேவின் கூற்றுப்படி, தற்போது அரசாங்கத்திடமும் தனியார் நிறுவனங்களிடமும் உள்ள மொத்த இருப்பு வெறும் 151,000 டன்கள் மட்டுமேயாகும்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், அண்மையில் விவசாயிகளைச் சந்தித்து விவசாய நெருக்கடி மற்றும் உர விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள வளர்ந்து வரும் இன்னல்கள் குறித்து கலந்துரையாடினர்.

அம்பாறையைச் சேர்ந்த விவசாயியான ஏகநாயக்க, நெற்செய்கைக்கான செலவு கடுமையாக அதிகரித்துள்ளதாகக் கூறினார். “எரிபொருள் விலை உயர்வால், முன்பு ஒரு ஏக்கரை உழுவதற்கும் சமப்படுத்துவதற்கும் 25,000 ரூபாவாக இருந்த செலவு, இப்போது 28,000 ரூபாவாக உயர்ந்துள்ளது. ஒரு பருவத்திற்கு ஒரு ஏக்கருக்கு வழங்கப்படும் உர மானியம் 10,000 ரூபாவாகும், ஆனால் உரங்களின் விலையேற்றத்தால் அந்தத் தொகை போதுமானதாக இல்லை. யூரியா, டி.எஸ்.பி. (TSP) மற்றும் எம்.ஓ.பி. (MOP) ஆகிய மூன்று வகையான உரங்களின் விலையும் மூன்று மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது,” என அவர் விளக்கினார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர் மேலும் கூறுகையில்: “செலவு அதிகமாக உள்ளது, ஆனால் வருமானம் குறைவாக உள்ளது. தனியார் வர்த்தகர்கள் ஒரு கிலோகிராம் நெல்லை 110–114 ரூபாவுக்குக் கொள்வனவு செய்கிறார்கள், ஆனால் குறைந்தது 140 ரூபாவாவது தேவைப்படுகிறது. கடந்த ஆண்டு, ஒரு ஏக்கருக்கான மொத்த பயிர்ச்செய்கை செலவு சுமார் 120,000 ரூபாவாக இருந்தது; இந்த முறை அது 140,000 ஐத் தாண்டும். விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் இல்லை.”

ருவன்

அம்பலாந்தோட்டை, மயூரபுரவின் பல்லகஸ்வெவவைச் சேர்ந்த குத்தகை விவசாயியான ருவன், நீர்ப்பாசன முறையின் கீழ் சுமார் இரண்டு ஏக்கர் மேட்டு நிலத்தில் விவசாயம் செய்கிறார். “வறட்சி காரணமாக குளங்கள் வற்றியுள்ளதால், இந்த நிலங்களுக்குத் தண்ணீரோ அல்லது உரமோ வழங்கப்பட மாட்டாது என்று விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கில் நிலவும் போரின் தாக்கம் காரணமாக உர விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கேள்விப்படுகிறோம். நீர்ப்பாசன நெல் நிலங்களுக்கு மட்டுமே குறைந்த அளவு வழங்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

தற்போது ஒரு ஏக்கருக்கு 750 கிலோகிராம் நெல்லுக்கு இணையான தொகையைக் குத்தகையாகச் செலுத்துவதாக விவரித்த ருவன் மேலும் கூறுகையில், “தற்போதைய சூழ்நிலையில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் வாழையும் பயிரிட்டிருந்தேன். அதிக வட்டிக்குக் கடன் வாங்கித்தான் உரம் வாங்கினேன். எனது வருமானம் இல்லாமல் போனால் என்ன நடக்குமோ என்று நான் உண்மையிலேயே பயப்படுகிறேன்,” என்றார்.

அதே பகுதியைச் சேர்ந்த இளம் விவசாயியான தர்ஷன கூறுகையில்: “இப்போது கூலிச் செலவு ஒரு நாளைக்கு 4,000 முதல் 4,500 ரூபா வரை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு ஏக்கரை உழுவதற்கு 25,000–27,000 ரூபா செலவானது; இந்த முறை அது 35,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த பருவத்தில் 50 கிலோகிராம் உர மூட்டை 11,500 ரூபாவாக இருந்தது, ஆனால் இப்போது அது 13,500 ரூபாவாகும். அரசாங்கம் ஒரு ஏக்கருக்கு 50 கிலோகிராம் மட்டுமே வழங்குகிறது, அதைப் பெறுவதற்குக் கூட மூன்று வெவ்வேறு நிறுவனங்களில் பதிவு செய்ய வேண்டும். தனியார் வர்த்தகர்களிடம் அதிக விலைக்கு உரம் வாங்குவதற்கு எங்களிடம் போதிய பணம் இல்லை.”

நெலும் சிந்தக்க

அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு விவசாயியான நெலும் சிந்தக்க, நீர் மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக இந்த பருவத்தில் பயிர்ச்செய்கை செய்ய வேண்டாமென முடிவெடுத்துள்ளதாகக் கூறினார். “கடந்த சில வருடங்களில் நான் 600,000 ரூபாவுக்கும் அதிகமான தொகையைக் கடனாகப் பெற்றுள்ளேன். அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவது இப்போது ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது,” என்று அவர் கூறினார்.

நிலையான வருமானம் இல்லாததால், அவர் ஒரு மோட்டார் கேரேஜில் தற்காலிக வேலைக்குச் சேர்ந்து, கடன்களை அடைப்பதற்கும் தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கும் தேவையான பணத்தைத் திரட்டப் போராடி வருகிறார். உர நெருக்கடி நிலவினாலும், பெரிய வர்த்தகர்களுக்குப் போதிய விநியோகம் கிடைப்பதாகவும், சிறு விவசாயிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு (தே.ம.ச.) வாக்களித்ததாகச் சிந்தக்க கூறினார். “2022 மக்கள் எழுச்சியின் போது ஜே.வி.பி. ஒழுங்கமைத்த போராட்டங்களில், நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் நான் பங்கேற்றேன். ஆனால் இப்போது நடந்து கொண்டிருப்பது முற்றிலும் அதற்கு நேர்மாறானது,” என்றார்.

ஜே.வி.பி.யின் சர்வதேச நாணய நிதிய சார்புக் கொள்கைகள் மற்றும் போரின் அபாயங்கள் குறித்து சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) எச்சரித்திருந்ததை அவர் நினைவு கூர்ந்தார். “அந்த நேரத்தில், நான் சோசலிச சமத்துவக் கட்சியின் எச்சரிக்கையை உன்னிப்பாகக் கவனிக்கவில்லை. ஆனால் அது உண்மை என்பதையும், ஜே.வி.பி. எங்களை ஏமாற்றிவிட்டது என்பதையும் இப்போது என்னால் காண முடிகிறது. போரின் தாக்கம் நம் அனைவரையும் வந்தடைந்துள்ளது. இங்குள்ள விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். போருக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுக்கும் போராட்டம் மிகவும் முக்கியமானது,” என்று சிந்தக்க கூறினார்.

இலங்கையிலுள்ள ஏழை விவசாயிகள் பல தசாப்தங்களாக நிலப் பற்றாக்குறை, வங்கிகள், வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மற்றும் விவசாய வர்த்தக நிறுவனங்களின் சுரண்டல், மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் பயிர்ச்செய்கை செலவினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 1977 இல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் திறந்த சந்தைக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள், உரம் மற்றும் ஏனைய அத்தியாவசிய விவசாய உள்ளீடுகளுக்கான மானியங்களை வெட்டிய அதேவேளை, சிறு அளவிலான விவசாயத்தைப் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்திற்குள் தள்ளின.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதாகக் கூறி, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடைகளுக்கு எதிராக, 2021 செப்டம்பர் முதல் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பல மாதங்கள் நீடித்த போராட்டங்களை நடத்தினர். ஆழமடைந்து வரும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் கோவிட்-19 தொற்றுநோயால் தீவிரமடைந்த அந்நிய செலாவனி கையிருப்பு கடுமையான வீழ்ச்சியடைந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது. 2022 ஆம் ஆண்டில், இராஜபக்ஷவை நாட்டை விட்டு ஓடவும், பதவியைத் துறக்கவும் நிர்ப்பந்தித்த வெகுஜன எழுச்சியில் பெருமளவிலான கிராமப்புற ஏழைகள் இணைந்தனர்.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடியைத் தீர்ப்பதாகப் பொய் வாக்குறுதிகளை அளித்து, 2024 தேர்தல்களில் ஆட்சிக்கு வருவதற்கு ஜே.வி.பி./தே.ம.ச. கூட்டணி இந்த பரந்த வெகுஜனக் கோபத்தைப் பயன்படுத்திக்கொண்டது.

ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கை உத்தரவுகளை அமுல்படுத்தும் அதே வேளை, பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் போரின் தாக்கத்தையும் தொழிலாளர் வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகள் மீது இரக்கமின்றி சுமத்தி வருகிறது. தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகள் எதிர்கொள்ளும் ஆழமடைந்து வரும் இந்த நெருக்கடியை, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதன் மூலமோ அல்லது அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதன் மூலமோ தீர்க்க முடியாது.

கிராமப்புற உற்பத்தியாளர்களை விவசாய வர்த்தகக் கூட்டுத்தாபனங்கள், சுரண்டல் இடைத்தரகர்கள் மற்றும் கடன் சுமையைக் கொடுக்கும் வங்கி முறையின் ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதன் மூலம் மட்டுமே விவசாய மக்கள் எதிர்கொள்ளும் அவசரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். இதற்கு பிரதான பெருந்தோட்டங்கள், விவசாய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்க வேண்டும்.

சர்வதேச சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் உட்பட முதலாளித்துவ ஆட்சியை ஒழிப்பதற்காக, தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தில் மட்டுமே இத்தகைய நடவடிக்கைகளை சாதிக்க முடியும். இப்போராட்டத்தில், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளை முதலாளித்துவத்திற்கு எதிரான பொதுவான போராட்டத்தில் ஒன்றிணைக்க, நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதன் மூலம் தொழிலாளர் வர்க்கம் கிராமப்புற மக்களுக்கு அரசியல் தலைமையை வழங்கி வழிநடத்த வேண்டும். உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் போராடுவதற்குத் தேவையான மூலோபாயத்தைப் பற்றி கலந்துரையாட, இந்த நடவடிக்கை குழுக்கள் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டைக் கட்டியெழுப்ப போராட வேண்டும்.

Loading