இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
2022 மே மாதம் இலங்கையின் வெகுஜன எழுச்சியின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரள மற்றும் அவரது பொலிஸ் மெய்ப்பாதுகாவலர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, பெப்ரவரி மாதத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரின் குடும்பங்கள், அவர்களது மேல்முறையீட்டு வழக்குகளுக்கான நிதியைத் திரட்டும் நோக்கில் நிட்டம்புவ மக்கள் ஒன்றியத்தை அமைத்துள்ளன.
பெப்ரவரி 11 அன்று இந்தக் குற்றவியல் தீர்ப்புகளும் மரண தண்டனைகளும் வழங்கப்பட்டபோது, சோசலிச சமத்துவக் கட்சி அவற்றை எதிர்த்து அப்போது வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: 'மிகவும் பலவீனமான சான்றுகளையும் குறைபாடுகள் நிறைந்த சட்டவியல் தர்க்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு, அதுகோரளவின் கொலைக்காக நீதிமன்றம் 12 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இது தற்போதைய மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைத் திட்டத்திற்கு எதிராக வளர்ந்துவரும் எதிர்ப்பை அச்சுறுத்தி அடக்குவதை நோக்கமாகக் கொண்ட வர்க்கப் ஒரு பழிவாங்கல் நடவடிக்கையாகும்.'
ஜூரியர் குழு இல்லாமல், மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்ற விசேட அமர்வினால் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பில் 2:1 பிளவு உள்ளது. அமர்வின் தலைவர் நீதிபதி சஹான் மாப்பா பண்டார, குற்றச்சாட்டை நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் நிரூபிக்க வழக்குத் தொடுனர் தரப்பு தவறியுள்ளதாகக் கூறி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். ஆனால் பெரும்பான்மை நீதிபதிகள், சூழ்நிலைச் சான்றுகளையும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் குற்றச் செயலுக்கு 'ஏதோ ஒரு வகையில் பங்களித்திருந்தால்' அவர்களது 'குற்றம்' நிரூபிக்கப்பட்டதாகக் கருதலாம் என்ற தெளிவற்ற சட்டக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு மரண தண்டனையை விதித்தனர்.
2022 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான வெகுஜன எழுச்சியின் மத்தியிலே, அதுகோரளவும் அவரது மெய்ப்பாதுகாவலரும் கொல்லப்பட்டனர். இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து, விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததுடன், உணவு, எரிபொருள், மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையும் நீடித்த மின்வெட்டும் ஏற்பட்டன. இந்தப் பெரும் நெருக்கடியை எதிர்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் அதன் முழுச் சுமையையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தியது.
வளர்ந்துவரும் எதிர்ப்பை அச்சுறுத்தும் நோக்கில், அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, மே 9 அன்று கொழும்பிலுள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லமான அலரி மாளிகையில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) ஆதரவாளர்களை அழைத்தார். பிரதமரும் ஏனைய கட்சித் தலைவர்களும் ஆத்திரமூட்டும் உரைகளை நிகழ்த்தியதைத் தொடர்ந்து, அங்கிருந்து புரப்பட்ட குண்டர்கள் குழுவொன்று வன்முறையில் ஈடுபட்டு, முதலில் அலரி மாளிகைக்கு வெளியேயும் பின்னர் அருகிலிருந்த காலிமுகத்திடல் ஆக்கிரமிப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தவர்களையும் தாக்கியது. நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்கள் குண்டர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டபோது, பொலிஸாரும் இராணுவமும் அதை வேடிக்கை பார்த்தனர். பல அரசாங்க அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அந்தக் குண்டர்களுக்கு நேரடியாக வழிகாட்டுவதையும் காணக் கூடியதாக இருந்தது.
அரசாங்கத்தால் தூண்டிவிடப்பட்ட இந்தத் தாக்குதலில் சுமார் 150 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்தனர்; அவர்களில் பலர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் வெகுஜனக் கோபத்தைத் தூண்டியதோடு பெருந்தொகை தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்கள் தீவு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் இணைந்தனர். ஆயிரக்கணக்கான தபால் மற்றும் சுகாதாரத் துறைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். உடனடியாக ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கினர்.
பல எதிர்ப்புப் போராட்டங்களில் ஒன்றாக, மே 9 மாலை, கொழும்பிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நிட்டம்புவ நகரில் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டிருந்தனர். அமரகீர்த்தியின் வாகனம் அங்கு தடுத்து நிறுத்தப்பட்டது. அவரது மெய்ப்பாதுகாவலர் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கிச் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்தார். அதன் பின்னர் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பாராளுமன்ற உறுப்பினரும் அவரது மெய்ப்பாதுகாவலரும் அருகிலிருந்த கட்டிடமொன்றுக்குள் தப்பிச் சென்றனர். பின்னர் அவர்களது சடலங்கள் அங்கிருந்து மீட்கப்பட்டன. அந்தக் கட்டடத்துக்குள் உண்மையில் என்ன நடந்தது என்பதற்கு நேரடியான எந்தச் சான்றும் இல்லை.
நிட்டம்புவ மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதி ஒருவர், ஜூலை 10 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியதாவது: 'எங்கள் குடும்ப உறுப்பினர்கள் நிரபராதிகள் என்பதில் எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. அவர்களுக்காக எங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றோம். ஏற்கனவே மேல்முறையீட்டைத் தாக்கல் செய்துள்ளோம். இந்தச் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு, பொதுமக்களின் ஆதரவு எங்களுக்கு உண்மையிலேயே தேவைப்படுகிறது.'
இந்தக் குடும்பங்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி அளவிட முடியாததாக உள்ளது. 'கடந்த நான்கு ஆண்டுகளாக நாங்கள் சொல்லொணாத துயரங்களை அனுபவித்து வருகிறோம். இந்தச் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியதால், எங்களில் பலர் எங்கள் வீடுகள், காணிகள் மற்றும் ஏனைய சொத்துக்களை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். இப்போது செலவிடுவதற்கு எங்களிடம் எந்தப் பணமும் இல்லை. தாங்க முடியாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறோம்,' என்று அந்தப் பிரதிநிதி விளக்கினார்.
மேல்முறையீட்டு வழக்கிற்கான ஆவணங்களை கம்பஹா மேல் நீதிமன்றம் தற்போது தயாரித்து வருகிறது. ஒரு பிரதிவாதிக்கான வழக்குப் பதிவு மட்டும் சுமார் 17,000 பக்கங்களைக் கொண்டுள்ளது. இந்த ஆவணங்களைப் பிரதியெடுப்பதற்கே மிகப் பெரிய நிதிச் செலவு ஏற்படுகிறது. சட்டத்தரணிகளின் கட்டணங்கள் மொத்தமாக சுமார் 18 மில்லியன் ரூபாயாக (53,565 அமெரிக்க டாலர்) மதிப்பிடப்பட்டுள்ளன. அதாவது ஒருவருக்கு சுமார் 1.5 மில்லியன் ரூபாய் செலவாகிறது.
இந்தப் பாரிய செலவுகள், நீதித்துறை முறைமை எவ்வாறு ஏழைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் எதிராக அமைக்கப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்துகின்றன. தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் செலவுகளை ஏற்க முடியாதவர்கள், நடைமுறையில் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையையே இழக்கின்றனர். குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள இந்த 12 பேரும், செல்வந்தர்களோ அல்லது அதிகாரமிக்க சட்டக் குழுக்களின் உதவியைப் பெறக்கூடியவர்களோ அல்லர். அவர்கள், 2022 மே 9 அன்று நடைபெற்ற பரபரப்பான அரசியல் நிகழ்வுகளில் சிக்கிக்கொண்ட சாதாரண உழைக்கும் மக்களே ஆவர்.
2022 மே 9 அன்று காலிமுகத்திடலில் நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலைத் திட்டமிட்டு ஏற்பாடு செய்து நிறைவேற்றியவர்களில் எவரும்—குறிப்பாக ராஜபக்ஷ சகோதரர்கள்—இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை. இது முதலாளித்துவத்தின் கீழ் பேசப்படும் 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்ற கூற்று ஒரு மோசடியே என்பதை அம்பலப்படுத்துகிறது. அந்த முறைமையில் ஆளும் வர்க்கம் எந்தப் பொறுப்புக்கூறலிலிருந்தும் நடைமுறையில் பாதுகாக்கப்படுகிறது.
2022 மே 9 அன்று காலிமுகத்திடலில் நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், வெகுஜன எழுச்சியின் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தீவு முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தன்னிச்சையாக வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டனர். இதன் அழுத்தத்தின் காரணமாக தொழிற்சங்கங்கள் மே 11 அன்று காலவரையற்ற பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டன. இந்தப் போராட்டம் தமது கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் என்ற அச்சத்தில், அநேகமாக ஜே.வி.பி. சார்பானவை மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி இடது அமைப்புகளின் ஆதரவுடன் கூடியவை உட்பட பெரும்பாலான தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்னரே அதைக் கைவிட்டன. இருப்பினும், வெகுஜன எழுச்சி தொடர்ந்ததன் விளைவாக, 2022 ஜூலை 9 அன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பியோடி, நான்கு நாட்களின் பின்னர் பதவியை இராஜினாமா செய்யத் தள்ளப்பட்டார்.
ஜே.வி.பி. / தேசிய மக்கள் சக்தி மற்றும் பிரதான பாராளுமன்ற எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் (ஐ.ம.ச.), முன்னிலை சோசலிசக் கட்சியும் தொழிற்சங்க அதிகாரத்துவமும் வழங்கிய ஆதரவுடன், வெகுஜன எழுச்சியை நாடாளுமன்ற அரசியலின் முட்டுச்சந்துக்குள் தள்ளுவதற்கு அவசரமாக முயன்றன. தொழிலாள வர்க்கத்தால் வெறுக்கப்பட்ட அனைத்து நாடாளுமன்றக் கட்சிகளையும் உள்ளடக்கிய 'இடைக்கால அனைத்துக் கட்சி அரசாங்கம்' அமைக்கப்பட வேண்டும் என்று அவை கோரின.
இந்த அரசியல் சூழ்ச்சிகளே, வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கிழந்த தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக ஜனநாயக விரோதமான முறையில் நியமிப்பதற்கான பாதையைத் திறந்துவிட்டன. அவர் பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டு, ஜனாதிபதி செயலகத்தையும் காலிமுகத்திடலையும் ஆக்கிரமித்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை வன்முறையாக வெளியேற்றினார். அதேவேளை, சர்வதேச நாணய நிதியம் கோரிய கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்தவும் ஆரம்பித்தார்.
தொழிற்சங்க எந்திரமும் முன்னிலை சோசலிசக் கட்சியும் தொழிலாள வர்க்கத்தை கலைத்துவிட்டு, அரசியல் ரீதியில் நிராயுதபாணியாக்கிய பின்னரே, நிட்டம்புவ சம்பவம் தொடர்பான 'சந்தேகநபர்கள்' எனப்படுவோரை பொலிஸார் போலிக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்தனர்.
2022 வெகுஜன எழுச்சியின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாக பொய்யாகக் கூறும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், நடைமுறையில் இந்தத் தீர்ப்பை முழுமையாக அங்கீகரித்துள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்தத் தீர்ப்பு 'அரசியல் தீர்மானமல்ல' என்று அறிவித்தார்.
பெப்ரவரி 23 அன்று, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை விளக்கும் கடிதமொன்றை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஜனாதிபதி செயலகத்தில் கையளித்தன. ஆனால் அதற்கு இதுவரை எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை. இதேவேளை, கொழும்பைத் தளமாகக் கொண்ட சில ஊடகங்கள் இந்தத் தீர்ப்பை அவசியமான 'பாடம்' எனப் பாராட்டியுள்ள அதே நேரம், அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் மௌனம் காத்துள்ளன.
இந்த வழக்கு தொடர்பாக முன்னிலை சோசலிசக் கட்சி எடுத்துள்ள நிலைப்பாடு, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்திற்கு அரசியல் முட்டுக்கொடுத்து வரும் அதன் ஒட்டுமொத்த அரசியல் பாத்திரத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது. குற்றவியல் தீர்ப்புகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக அணிதிரட்ட வேண்டும் என்ற அழைப்பை அது எதிர்க்கிறது.
சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.), சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE), இலங்கையிலும் அனைத்துலக அளவிலும் உள்ள தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்த 12 பேர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் உடனடியாக விலக்கிக்கொண்டு, அவர்களை எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யக் கோரி போராடுமாறு அழைப்பு விடுக்கின்றன. அதேபோல், ஒடுக்கப்பட்ட மக்களை அச்சுறுத்தவும் அடக்கவும் பயன்படுத்தப்படும் காட்டுமிராண்டித்தனமான கருவியான மரண தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்றும் அவை வலியுறுத்துகின்றன.
2022 மே 9 அன்று நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களை ஒழுங்கமைத்து நடத்திய உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவர்.
12 ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை, மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மீது தீவிரமடைந்து வரும் தாக்குதல்களுக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பை ஒடுக்குவதற்காக ஆளும் வர்க்கம் எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காது என்பதற்கான எச்சரிக்கையாகும். குறிப்பிட்ட தொழில்துறைகளில் வேலைநிறுத்தங்களைத் தடைசெய்வது உட்பட, அரசாங்கம் ஏற்கனவே பொலிஸ்-அரசு நடவடிக்கைகளை நாடி வருகிறது.
ஜூலை 26 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிக்கு, '2022 வெகுஜன எழுச்சியின் படிப்பினைகள்' என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் நடத்தும் சூம் கூட்டத்தில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் அனைவரையும் பங்குபற்றுமாறு நாங்கள் அழைக்கிறோம். பங்குபற்றுவதற்கு தயவுசெய்து முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.
மேலும் படிக்க
- சோ.ச.க./IYSSE நடத்தும் பகிரங்க நிகழ்நிலை விரிவுரை: தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் 2022 இலங்கை வெகுஜன எழுச்சியின் படிப்பினைகள்
- தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவந்திருக்க முடிந்திருந்தால் எங்கள் இலக்குகளை நிறைவேற்றியிருப்போம் என ஏகல தொழிலாளர்கள் கூறுகின்றனர்
- இலங்கை: வெலிக்கடை சிறைச்சாலை கைதியின் மரணம் பாரதூரமான கேள்விகளை எழுப்புகிறது
- இலங்கை: நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரங்களில் குறைந்தபட்சம் 27 பேர் உயிரிழந்துள்ளனர்
