இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணாலம்.
ஜூலை 6 அன்று கடலோர நகரமான நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த மோதல்களில் குறைந்தபட்சம் 20 கைதிகள் கொல்லப்பட்டதுடன், பெரும்பாலும் கைதிகளான சுமார் 100 பேர் காயமடைந்தனர். இது இலங்கையின் வரலாற்றில் முன்னர் இடம்பெற்ற சிறைச்சாலை படுகொலைகளை நினைவூட்டும் ஒரு கொடூரமான நிகழ்வாகும்.
அதே சிறைச்சாலையில் ஜூலை 5 அன்று இடம்பெற்ற முந்தைய மோதலில் ஏற்கனவே இருவர் உயிரிழந்திருந்தனர். அதன் பின்னர் ஏற்பட்ட மோதலிலேயே உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 27 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஏழு பேர் சிறைச்சாலை அதிகாரிகள் ஆவர்.
படுகாயமடைந்த பலர் விசேட சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். மற்றவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். கலவரங்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கான காரணங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், கிடைக்கப்பெற்றுள்ள ஆதாரங்கள் குறைந்தபட்சம் சில கைதிகள் துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன. நீர்கொழும்பு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் புஷ்ப கம்லத், ஏஜன்சி பிரான்ஸ் பிரஸ் (Agence France-Presse) செய்தி நிறுவனத்திடம், “சில பாதிக்கப்பட்டவர்களுக்கு துப்பாக்கிக் காயங்கள் உள்ளன; சிலருக்கு வெட்டுக் காயங்களும் கடுமையான அடிபட்ட காயங்களும் உள்ளன” என்று தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்கவின் கூற்றுப்படி, அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ விளக்கம் பின்வருமாறு: பாதாள உலகத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரால் இயக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறைச்சாலை போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு அம்பலமானதைத் தொடர்ந்து, ஜூலை 5 அன்று விளக்கமறியல் கைதிகளுக்கும் தண்டனை பெற்ற கைதிகளுக்கும் இடையில் முதலில் வன்முறை வெடித்தது. அந்த அமைதியின்மை தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், மறுநாள் காலை உணவின் போது மோதல்கள் மீண்டும் வெடித்தன. கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளைத் தாக்கி, பிரதான வாயிலை உடைத்து வெளியேற முயன்றதாகவும், இதனால் ஒழுங்கை மீட்டெடுக்கத் தேவையான “குறைந்தபட்ச பலத்தை” மட்டுமே அதிகாரிகள் பயன்படுத்தியதாகவும் அதிகாரிகள் கூறிக்கொள்கின்றனர்.
இந்த சம்பவங்களின் உத்தியோகபூர்வ வடிவம், அதிலுள்ள பாரிய முரண்பாடுகள் மற்றும் விளக்கமின்மைகள் இருந்தபோதிலும், பெருநிறுவன ஊடகங்களால் எந்த விமர்சனமும் இன்றி மீண்டும் மீண்டும் பரப்பப்பட்டு வருகிறது. முதல் நாளிலேயே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் நிலைமை, அதை “கட்டுப்படுத்த” அழைத்து வரப்பட்ட பேர்போன விசேட அதிரடிப் படை உறுப்பினர்கள் உட்பட கணிசமான பாதுகாப்புப் படையினர் இருந்தபோதும், எவ்வாறு மறுநாள் கொலைவெறி மோதலாக அது வெடித்தது என்பதை இது விளக்கவில்லை. உண்மையில், அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்களின் கீழ் விசேட அதிரடிப் படையும் இலங்கைப் பொலிஸாரும், சிறைச்சாலைகளிலும் சமூகங்களிலும் திட்டமிட்டோ அல்லது பொறுப்பற்ற முறையிலோ வன்முறையைத் தூண்டிவிட்டு, பின்னர் மரணகரமான அடக்குமுறைகளை முன்னெடுத்த பின்னர், திட்டமிட்ட மூடிமறைப்புகளையும், குற்றவாளிகளுக்கு கிட்டத்தட்ட முழுமையான தண்டனையின்மையையும் உறுதிப்படுத்திய நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன.
ஜூலை 5 அன்று ஆரம்ப மோதல்கள் பற்றிய செய்திகள் பரவியதும், நூற்றுக்கணக்கான கைதிகளின் உறவினர்கள் தங்கள் அன்புக்குரியவர்களைப் பற்றிய தகவல்களை அறிய நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு வெளியே திரண்டனர். இதற்கு பதிலளித்த மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம், பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறி, இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான படையினரை அங்கு குவித்தது. கனரக ஆயுதங்கள் ஏந்திய பாதுகாப்புப் படையினர், கவச வாகனங்கள், இராணுவ ஜீப்புகள் மற்றும் ட்ரோன்கள் நிறுத்தப்பட்ட நிலையில், சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதி, அங்கு கூடியிருந்த மக்களை அச்சுறுத்தும் ஒரு போர்க்களத்தை ஒத்ததாக மாற்றப்பட்டது.
வன்முறை தீவிரமடைந்தபோது, சிறைச்சாலை வளாகம் முழுவதும் எதிரொலித்த துப்பாக்கிச் சூட்டுக்கு, உள்ளே இருந்தவர்கள் பலியாகி இருக்கலாம் என அச்சமடைந்த ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் கதறி அழுதும், தங்கள் அன்புக்குரியவர்களின் நிலை குறித்து மீண்டும் மீண்டும் தகவல் கோரியும் நின்றனர். ஆனால் அவர்களின் அவசர வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டன. நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்புகளின்போதும் துப்பாக்கிச் சத்தம் தொடர்ந்து கேட்டது. பின்னர் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, நிலைமையை “கட்டுப்பாட்டுக்குள்” கொண்டு வருவதற்காக இராணுவத்தினர் “குறைந்தபட்ச பலத்தை” மட்டுமே பயன்படுத்தியதாகக் கூறினார்.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட ஒரு காணொளியில், மூடப்பட்டிருந்த பிரதான வாயிலுக்கு வெளியே நின்றிருந்த ஒரு சிறைச்சாலை அதிகாரி, வாயிலிலிருந்த குறுகிய இடைவெளி வழியாக மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த பகுதியை நோக்கி துப்பாக்கியால் சுடுவது காணப்பட்டது. இந்தக் காணொளி குறித்து ஜூலை 7 அன்று கேட்கப்பட்டபோது, பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார, பேரழிவை ஏற்படுத்தக்கூடிய சிறைச்சாலை உடைப்பைத் தடுக்கவும், உள்ளே சிக்கியிருந்த அதிகாரிகளைப் பாதுகாக்கவும் அந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறி அந்த அதிகாரியின் நடவடிக்கையை நியாயப்படுத்தினார். அவரது கருத்துக்கள், பிரதான வாயிலுக்கு அருகே திரண்டிருந்த கைதிகளைச் சிதறடிப்பதற்காக சிறைச்சாலை அதிகாரிகளும் பாதுகாப்புப் படையினரும் திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தெளிவுபடுத்துகின்றன.
கைதிகளின் தாய்மார்கள் மற்றும் மனைவியர் உட்பட, பெரும்பாலும் ஏழைக் கிராமப்புறங்களைச் சேர்ந்த உறவினர்கள், கைதிகளைப் பாதுகாக்கத் தவறியதற்காகவும், எந்த தகவலையும் வழங்க மறுத்ததற்காகவும் அரசாங்கத்தையும் பொலிஸாரையும் கடுமையாகக் கண்டித்தனர்.
நீதியமைச்சர் நாணயக்கார, சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருட்கள் மற்றும் பிற சட்டவிரோதப் பொருட்கள் நுழைவதைத் தடுக்க அரசாங்கம் “கடுமையான நடவடிக்கைகளை” எடுத்ததைத் தொடர்ந்து, கைதிகள் “சிறைச்சாலை நிர்வாகத்தின் சீரான செயல்பாட்டை சீர்குலைக்க” முயன்றதாகக் கூறி மரணகரமான சக்தியைப் பயன்படுத்தியதை நியாயப்படுத்த முயன்றார். கலவரத்தின் போது உடல் பரிசோதனை ஸ்கேனர் மற்றும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கமெராக்கள் அழிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கதை, அரசாங்கம் தீவிரப்படுத்தி வரும் “போதைப்பொருளுக்கு எதிரான போர்” என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்தக் கொலைகளை இணைத்து, அவற்றுக்கு அரசியல் மூடிமறைப்பை வழங்கும் கருவியாகச் செயல்படுகிறது.
ஜூலை 7 அன்று பாராளுமன்றத்தில் பேசிய நாணயக்கார, நீர்கொழும்பு படுகொலைகள் ஒரு “துயரச் சம்பவம்” எனக் குறிப்பிட்டதுடன், சிறைச்சாலைகளில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை மற்றும் அளவுக்கு மீறிய நெரிசலையும் தீர்ப்பதாக உறுதியளித்தார். ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரி ஒருவர் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் அடங்கிய மூவர்குழு உட்பட பல விசாரணைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் முந்தைய சிறைச்சாலை படுகொலைகளுக்குப் பின்னர் அமைக்கப்பட்ட இதேபோன்ற விசாரணைகளைப் போலவே, இவ்விசாரணைகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதி வழங்குவதற்குப் பதிலாக, சிறைச்சாலை அதிகாரிகளையும் பாதுகாப்புப் படையினரையும் குற்றப் பொறுப்பிலிருந்து பாதுகாக்கும் அரசியல் போர்வையாகவே செயல்படும்.
ஜூலை 7 அன்று, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு (Committee for Protecting the Rights of Prisoners - CPRP), நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைக்குப் பின்னர் அங்கிருந்து மாற்றப்பட்ட கைதிகள், அவர்கள் மாற்றப்பட்டுள்ள சிறைச்சாலைகளில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டியது. சுமார் 700 கைதிகள் நாடு முழுவதுமுள்ள பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், அமைதியின்மைக்கு தலைமை தாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட லசந்த பிரதீப் குமார உட்பட ஐந்து கைதிகள் இரகசிய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இது “அவர்களின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலை” ஏற்படுத்துவதோடு, அவர்கள் சித்திரவதைக்கு உள்ளாகும் அபாயத்தையும் அதிகரித்துள்ளதாகவும் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு எச்சரித்தது.
சிறைச்சாலை படுகொலைகள், கைதிக் குழுக்களுக்கிடையேயான மோதல்கள் அல்லது போதைப்பொருள் தொடர்பான சதிகளின் விளைவாகும் என்ற வாதம், இலங்கை அரசால் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய தந்திரமாகும். 2020 நவம்பரில் மஹர சிறைச்சாலையில் 11 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டபோது, அன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம், அதற்கு மனநல மருந்துகள், போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் மர்மமான சதிகாரர்களையே காரணமாகக் குற்றம்சாட்டியது. அப்போதைய சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, “திடீரென செயற்பட்ட ஒரு கண்ணுக்குப் புலப்படாத கை” இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் இருந்ததாக அபத்தமான விளக்கமொன்றைக் கூறினார்.
இந்தப் புனைகதைகளை மறுக்கும் வகையில் இலங்கை மனநல மருத்துவர்கள் கல்லூரி, மனநல மருந்துகளுக்கும் வன்முறையான நடத்தைக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு “எந்தவித பகுத்தறிவான அடிப்படையும் அற்றது” என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிடத் தள்ளப்பட்டது. உண்மையில், அரசாங்கத்தின் முழுக் கதையும் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரு பொய்யாகும். கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை கோரி போராடிய நிராயுதபாணி கைதிகள் மீது சிறைச்சாலை காவலர்களும் விசேட அதிரடிப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்திய உண்மையை மறைப்பதற்காகவே அந்தப் பொய்கள் உருவாக்கப்பட்டன.
இலங்கையின் சிறைச்சாலைகள் அளவுக்கு அதிகமான கைதிகளால் நிரம்பியுள்ளதோடு போதிய வளங்களின்றி இயங்குவதுடன் நடைமுறையில் ஒரு நரகத்தை ஒத்தவையாக உள்ளன. இதனால் பதற்றங்கள் எளிதில் மோதல்களாக வெடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சுமார் 900 கைதிகளை மட்டுமே தங்க வைக்கும் வகையில் கட்டப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையில் தற்போது கிட்டத்தட்ட 2,400 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கடுமையான நெரிசல், தொற்றுநோய்கள் பரவும் அபாயத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது. ஜூலை 5 அன்று அமைதியின்மை வெடித்த அதே நேரம், டெங்கு நோய் பரவலை எதிர்த்து, பாதிக்கப்பட்டிருந்த சுமார் 20 பெண் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கோரி பெண் கைதிகள் குழுவொன்று சிறைச்சாலை கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டது. அத்தியாவசிய மருந்துகள் இல்லாததோடு தொற்றுக்குள்ளான கைதிகள் தனிமைப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் பரவிய காணொளியொன்றில், அந்தப் பெண்கள் அவசர மருத்துவ சிகிச்சை வழங்குமாறு முறையிட்டனர். ஆனால் அரசாங்க ஆதரவு ஊடகங்கள், அந்தப் போராட்டத்தை மோதிக்கொண்ட கைதிக் குழுக்களில் ஒன்றுக்கு ஆதரவாக நடத்தப்பட்டதாக பொய்யாக சித்தரித்தன.
மொத்தத்தில், வெறும் 11,762 கைதிகளை மட்டுமே தங்க வைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இலங்கையின் சிறைச்சாலைகளில் தற்போது 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். இது அவற்றின் திட்டமிடப்பட்ட கொள்ளளவை விட நான்கு மடங்குக்கும் அதிகமாகும். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, 2021 ஆம் ஆண்டில் வெளியிட்ட 850 பக்க அறிக்கையில், கைதிகள் நின்றபடியே தூங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமை, பொலித்தீன் பைகளில் மலசலம் கழிக்க வேண்டிய நிலை மற்றும் ஒரு கைதி கூறியவாறு “பூனைகளும் நாய்களும் கூட உண்ண மறுக்கும்” உணவை உண்டு உயிர்வாழ வேண்டிய சூழ்நிலையையும் ஆவணப்படுத்தியுள்ளது.
கைதிகளில் பெரும்பாலானவர்கள் சமூகத்தின் மிகவும் ஏழ்மையான அடுக்குகளைச் சேர்ந்தவர்கள். பலர் பிணையில் வெளிவரத் தேவையான பணமோ அல்லது சட்டப் பிரதிநிதித்துவத்தைப் பெறும் வசதியோ இல்லாத காரணத்தினால் மட்டுமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் சிறைச்சாலை கைதிகளில் சுமார் 75 சதவீதமானோர் இன்னும் விசாரணைக்காகக் காத்திருக்கும் விளக்கமறியல் கைதிகளே ஆவர்.
மஹிந்த இராஜபக்ஷவின் “புனர்வாழ்வு” வாக்குறுதிகளிலிருந்து கோட்டாபய இராஜபக்ஷவின் ஆடம்பரமாக விளம்பரப்படுத்தப்பட்ட ஐந்தாண்டு சிறைச்சாலை மறுசீரமைப்புத் திட்டங்கள் வரை; சிறிசேனவின் “இடைக்கால நீதி” வாக்குறுதிகளிலிருந்து ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் “முறைமை மாற்றம்” மக்கள் ஆணை வரை, தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் அனைத்தும் சிறைச்சாலை வன்முறைகளுக்கு மறுசீரமைப்பு வாக்குறுதிகளையே பதிலாக வழங்கியுள்ளன.
இத்தகைய வாக்குறுதிகள் வெறும் வெற்று அரசியல் சம்பிரதாயமாக மட்டுமே உள்ளன. மக்கள் மத்தியில் எழும் கோபத்தைத் தணிக்கும் முயற்சியாக விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்படுகின்றன; திட்டங்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால் வன்முறையை உருவாக்கும் அடிப்படை காரணிகளான—அளவுக்கு மீறிய நெரிசல், வறுமையால் நீடிக்கும் விளக்கமறியல் காவல், மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்படும் தண்டனையிலிருந்து விலக்களிப்பு ஆகியவை மேலும் மேலும் மோசமடைந்துள்ளன.
2020 மஹர, 2012 வெலிக்கடை, 2011 அனுராதபுரம் மற்றும் 2000 களுத்துறை சிறைச்சாலை கலவரங்களும் படுகொலைகளும் நடந்த வரிசையில், நீர்கொழும்பு படுகொலைகளும் நடந்துள்ளன. 2024 இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பொலிஸ் அரசின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ள அரசாங்கம், அதிகரித்து வரும் வெகுஜன எதிர்ப்புகளுக்கு கொடூரமான பலத்தின் மூலம் பதிலளித்து வருவதன் தர்க்கரீதியான வெளிப்பாடே இந்தப் படுகொலைகளாகும்.
மேலும் படிக்க
- நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட இலங்கை சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் கணேஷ்குமார் அரச துரோகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்
- இலங்கையின் புதிய "பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள்" ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதல்களை முன்னறிவிக்கின்றன
- இலங்கை பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் முல்லைத்தீவு பத்திரிகையாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்
