உலகளாவிய போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஈராக்கின் மொசூல் நகரில் உள்ள மக்கள் திரட்டல் படைகளின் தளத்தின் மீது புதன்கிழமை, ஜூலை 29, 2026 அன்று அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்களை ஈராக்கியர்கள் பார்வையிடுகின்றனர். [AP Photo/Farid Abdulwahed]

ஐந்து நாள் இடைவெளிக்குப் பிறகு, உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் மீண்டும் தாக்குதல் நடத்தின. ஈரானிய அரசு ஊடகங்களின்படி, கெஷ்ம் தீவில் 2 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த இந்த ஒரு மணி நேர குண்டுவீச்சை, ஜோர்டான் மற்றும் எகிப்தில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் தெஹ்ரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடி நடவடிக்கையாக வாஷிங்டன் சித்தரித்தது.

அமெரிக்கத் தாக்குதலுக்கு முன்னதாக, புதன்கிழமை வெள்ளை மாளிகையில் பாதாள உலகக் கும்பலின் கூலிக் கொலையாளியைப் போலப் பேசிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கா “ஈரானை மிகக் கொடூரமாக அடித்து நொறுக்கப் போகிறது” என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் அவர்கள் மீது மிகவும் சக்திவாய்ந்த முறையில் தாக்குதல் நடத்தப் போகிறோம், ஏனெனில் இப்போது அவர்களைத் தாக்குவது எங்கள் முறை. அது வரப்போகிறது என்பது அவர்களுக்குத் தெரியும். அதைச் செய்ய வேண்டாம் என்று அவர்கள் எங்களிடம் கேட்டுக்கொண்டார்கள்” என்றார்.

குவைத், ஜோர்டான் மற்றும் பஹ்ரைனில் அமெரிக்க இராணுவத் தளவாடங்கள் அமைந்துள்ள இராணுவத் தளங்கள் மீது வியாழக்கிழமை நடத்தப்பட்ட பதிலடித் தாக்குதல்களுக்கு ஈரானிய புரட்சிகரக் காவல் படை (IRGC) பொறுப்பேற்றது. ஜோர்டானில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று F-35 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும், மேலும் மூன்றிற்குச் சேதம் ஏற்பட்டதாகவும் ஈரானிய உரிமைகோரல்களை வாஷிங்டன் மறுத்தது. இந்தக் கூற்றுகளின் உண்மைத்தன்மை எதுவாக இருந்தாலும், தெஹ்ரானில் உள்ள முதலாளித்துவ-மதகுருமார் ஆட்சி பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்கத் தளங்களைத் தாக்கும் திறனைத் தெளிவாகத் தக்கவைத்துள்ளது. மேலும், போருக்கு முன்பு உலகின் எண்ணெய் டேங்கர் கப்பல் போக்குவரத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டிருந்த மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாட்டையும் அது தக்கவைத்துள்ளது.

அமெரிக்காவின் வெடிமருந்துக் கையிருப்புகள், குறிப்பாக அதன் ஏவுகணைத் தற்காப்பு அமைப்புகளுக்கான கையிருப்புகள் குறைந்துவரும் நிலையில், ஈரானிய இலக்குகள் மீது 13 இரவுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட அமெரிக்க வான்வழித் தாக்குதல்களை இடைநிறுத்துமாறு வெள்ளிக்கிழமை ட்ரம்ப் உத்தரவிட்டார். இருப்பினும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளிகளும் போரைத் திட்டமிட்ட வகையில் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன என்பதை அண்மைய நாட்களின் நிகழ்வுகள் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளன. சனிக்கிழமையன்று, காஸ்பியன் கடலில் இருந்த ஒரு ஈரானியக் கப்பல் மீது உக்ரேன் முதன்முறையாகத் தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு ஈரானிய மாலுமி உயிரிழந்தார். இது, ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்கா/நேட்டோவின் போரும், ஈரானுக்கு எதிரான அமெரிக்கா/இஸ்ரேலின் போரும் வேகமாக ஒன்றிணைந்து ஒரு உலகளாவிய பேரழிவுப் போராக உருமாறி வருவதை நிரூபித்துக் காட்டுகிறது.

ஈராக்கில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது சவூதி அரேபியாவும் அமெரிக்காவும் இணைந்து நடத்தியதாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட முதல் ஒருங்கிணைந்த தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியது. செங்கடலில் உள்ள பாப் எல்-மண்டேப் நீரிணையை முற்றுகையிட்டு, சவூதி அரேபியாவின் எரிசக்தி ஏற்றுமதிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவோம் என்று இந்த மாதத் தொடக்கத்தில் யேமனின் ஹூதிகள் எச்சரித்ததைத் தொடர்ந்து, ரியாத் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

நாட்டின் பாதுகாப்புப் படைகளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள ஷியா ஆயுதக் குழுக்களை உள்ளடக்கிய மக்கள் திரட்டல் படை (Popular Mobilisation Force), இந்தத் தாக்குதல்களில் 20 பேர் கொல்லப்பட்டதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவித்தது. அந்த அமைப்பின் அறிக்கை, சவூதி-அமெரிக்கத் தாக்குதல்களை “ஆபத்தான தீவிரமடைதல், ஈராக்கின் இறையாண்மையை மீறும் செயல் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு நிறுவனங்கள் மீதான தாக்குதல்” என்று கண்டித்தது.

சில மணி நேரங்களுக்குப் பிறகு, எகிப்தின் டமியேட்டா துறைமுகத்தில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) சேமித்து வைத்திருந்த அமெரிக்காவுக்குச் சொந்தமான ஒரு கப்பல் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தச் சம்பவத்துக்கு ஈரான் இதுவரை பகிரங்கமாகப் பொறுப்பேற்கவில்லை. எனினும், வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையின் போது ட்ரம்ப் தெஹ்ரான் மீது குற்றம் சாட்டினார். பிப்ரவரியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் சட்டவிரோதப் போரைத் தொடங்கியதிலிருந்து, எகிப்தில் உள்ள இலக்குகள் தாக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

ட்ரம்ப் நிர்வாகம், ஐரோப்பிய ஏகாதிபத்திய வல்லரசுகளையும் இந்தப் போருக்குள் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பொலிட்டிகோ (Politico) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத், தனது பிரிட்டிஷ் சகாவான வெஸ் ஸ்ட்ரீட்டிங் மற்றும் இரு அரசாங்கங்களின் பிற மூத்த அதிகாரிகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை ஹோர்முஸ் நீரிணையில் ஐரோப்பிய வல்லரசுகள் பங்கேற்கும் ஒரு “தற்காப்பு” ரோந்துப் பணியை உருவாக்குவது குறித்து ஆலோசனை நடத்தினார். அந்தப் பணி அமெரிக்கத் தலைமையில் செயல்படும்; அதில் சில கப்பல்கள் வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பணியிலும், மற்றவை கடல் கண்ணிவெடிகளை அகற்றும் பணியிலும் ஈடுபடுத்தப்படும் என்று பொலிட்டிகோ அறிக்கை குறிப்பிட்டது.

ஸ்ட்ரீட்டிங்கும் ஹெக்செத்தும் இந்த முன்மொழிவு குறித்து பிரெஞ்சு ஆயுதப் படைகளின் அமைச்சரான கேத்ரின் வோத்ரினுடன் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்; மேலும், இந்த வாரம் பிற ஐரோப்பிய தலைநகரங்களுடனும் அவர்கள் பேச்சுவார்த்தைகளைத் தொடர உள்ளனர். ஈரான் மீதான போரைத் தொடங்குவதற்கு முன் ட்ரம்ப் தங்களுடன் ஆலோசனை நடத்தத் தவறிய நிலையில், ஒரு “ஆபத்தான” பணிக்குள் “குதிப்பதற்குத்” தங்கள் தயக்கத்தை ஐரோப்பிய அதிகாரிகள் தெரிவித்தனர் என்று அந்தச் செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் தெரிவிக்கும் எதிர்ப்புகள், இராணுவ வன்முறையை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டவை அல்ல. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், ரஷ்யா மீதான ஆக்கிரமிப்புப் போரின் முன்னணி ஆதரவாளர்களாகவும் நிதியளிப்பவர்களாகவும் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்; ரஷ்யாவில் போர்க்களங்களின் முன்னணிப் பகுதிகளுக்குப் பின்னால் வெகு தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்க உக்ரேன் பயன்படுத்திய நீண்ட தூர ஆயுதங்களுக்கு அவர்கள் நிதியுதவியும் விநியோகமும் வழங்கியுள்ளனர். ஜெர்மனியின் தலைமையில், ஐரோப்பிய அரசாங்கங்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காணப்படாத அளவில் சமூகத்தை மீண்டும் ஆயுதபாணியாக்கவும் இராணுவமயமாக்கவும் ஒரு டிரில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான தொகையைச் செலவிட்டு வருகின்றன. ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் தொடுக்கும் போர், ரஷ்யாவுக்கு எதிரான போரைப் பாதிக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறே பெர்லின், பாரிஸ் மற்றும் லண்டன் ஆகிய தலைநகரங்களின் முக்கிய கவலையாக இருந்தது. ஏனெனில், அத்தகைய போர் அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்புகளை வற்றச் செய்வதுடன், ரஷ்யாவைத் தோற்கடித்து அதனை ஓர் அரை-காலனித்துவ நிலைக்குக் கீழ்ப்படுத்தும் முயற்சியிலிருந்து வாஷிங்டனின் கவனத்தைத் திசைதிருப்பக்கூடும் எனக் கருதப்பட்டது.

காஸ்பியன் கடலில் சனிக்கிழமையன்று (ஜூலை 25) உக்ரேன் நடத்திய ஏவுகணைத் தாக்குதல், வேகமாகத் தீவிரமடைந்து வரும் உலகப் போரின் இரண்டு முனைகளையும் இதுவரை இல்லாத அளவுக்கு நேரடியாக இணைத்துள்ளது. உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ட்ரம்புடன் ஆலோசனை நடத்துவதற்காகச் சில நாட்களுக்குப் பின்னர் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்தார். அதே நாளில், அமெரிக்க அதிபர் ஓவல் அலுவலகத்தில் போர்க் குற்றவாளி பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். நெதன்யாகு தலைமை வகிக்கும் இஸ்ரேலின் இனப்படுகொலை ஆட்சி, வாஷிங்டனுடன் இணைந்து ஈரானுக்கு எதிரான போரை நடத்தி வருகிறது; அதேவேளையில், தெற்கு லெபனான் மீதான தனது இரத்தக்களரியான தாக்குதலையும், மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களின் நிலங்களைச் சட்டவிரோதமாகக் கைப்பற்றுவதையும், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலை நீடிக்கும் காஸா மீதான வழக்கமான தாக்குதல்களையும் அது தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

சமீபத்திய நாட்களின் நிகழ்வுகள், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போர் குறித்து உலக சோசலிச வலைத் தளம் (WSWS) முன்வைத்த மதிப்பீட்டை முழுமையாக உறுதிப்படுத்துகின்றன. ஜனநாயக ரீதியான எந்தவொரு ஆலோசனையுமின்றி, நள்ளிரவில் ட்ரம்ப் போரைத் தொடங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, இப்போரைப் பற்றிய தனது முதல் அறிக்கையில், 1939 செப்டம்பர் 1 அன்று ஹிட்லர் போலந்தை ஆக்கிரமித்த குற்றச் செயலுடன்—இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தைக் குறித்து நின்ற அந்த வரலாற்று ஆக்கிரமிப்புடன்—பிப்ரவரி 28 தாக்குதல் வரலாற்றில் பின்னர் ஒப்பிடப்படும் என்று WSWS குறிப்பிட்டது. WSWS சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் தொடர்ந்து கூறியதாவது:

அவர் [ட்ரம்ப்] அமெரிக்காவையும் ஒட்டுமொத்த உலகையும் ஒரு பேரழிவுகரமான பாதையில் தள்ளியுள்ளார். இந்தப் போர் அமெரிக்க சமூகத்தின் உள்நாட்டு சமூக நெருக்கடியைத் தீர்க்கப்போவதில்லை, அல்லது அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய நிலையில் ஏற்பட்டுள்ள நீண்டகாலச் சரிவை மாற்றியமைக்கவும் போவதில்லை.

உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியிலான இந்த முரண்பாடுகள் அனைத்தும் தீவிரமடையும். இந்தப் போர் தவிர்க்க முடியாமல் தீவிரமடைந்து ஒட்டுமொத்த கிரகத்தையும் ஆட்கொள்ளும்.

ஆறு மாதங்களுக்கும் குறைவான காலத்திலேயே, இப்போரானது முழு மத்திய கிழக்கையும் ஆட்கொண்டுள்ளதுடன், ரஷ்யாவுக்கு எதிரான போருடன் இணைந்து யூரேசிய நிலப்பரப்பின் பெரும்பகுதியைத் தழுவிய ஒரு மோதல் மண்டலமாக விரிவடைந்து வருகிறது.

ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போர், மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான போரைப் போலவே ஆபத்தான முறையில் தீவிரமடைந்து வருகிறது. வியாழக்கிழமை அதிகாலையில் ஏவுகணை ஒன்று போலந்து நிலப்பரப்பிற்குள் நுழைந்து, மக்கள் வசிப்பிடமில்லாத பகுதியில் விழுந்து 10 மீட்டர் அகலமுள்ள பள்ளத்தை உருவாக்கியது என்ற அறிவிப்புக்கு நேட்டோ ஆக்ரோஷமாகப் பதிலளித்தது. போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் கூறுகையில், “அந்த ஏவுகணை தனது பயணத்தைத் தொடர்ந்திருந்தால் அதைச் சுட்டு வீழ்த்த வார்சா தயாராக இருந்தது. அது ரஷ்யாவின் KH-101 குரூஸ் ஏவுகணை என்பதையே அனைத்து ஆதாரங்களும் சுட்டிக்காட்டுகின்றன” என்றார். அந்த நேரத்தில் எல்லை நகரமான எல்விவ் (Lviv) அருகிலுள்ள பகுதிகள் உட்பட உக்ரேனில் உள்ள இலக்குகளை ரஷ்யா தாக்கிக்கொண்டிருந்தது. உக்ரேன் முழுவதும் எட்டு பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில், போலந்தில் விழுந்த அந்த ஏவுகணையால் உயிரிழப்புகளோ அல்லது கட்டிடங்களுக்குச் சேதமோ ஏற்படவில்லை.

நேட்டோவின் உச்சக் கட்டளைப் பிரிவு, போலந்துடன் இணைந்து தனது வான் பாதுகாப்பு அமைப்புகளைச் செயல்படுத்தியிருப்பதை உறுதிப்படுத்தியது. ஐரோப்பிய ஒன்றியக் குழுத் தலைவர் அந்தோனியோ கோஸ்டா “ரஷ்ய ஆக்கிரமிப்பைக்” கண்டித்ததுடன், அது “முழு ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கும் ஒரு அச்சுறுத்தல்” என்றும் அறிவித்தார்.

இந்தச் சீற்றக் கூச்சல்கள் முற்றிலும் பாசாங்குத்தனமானவை; ஏனெனில், நடைமுறையில் நேட்டோ சக்திகள் ரஷ்யாவுடன் நேரடிப் போரிலேயே ஈடுபட்டுள்ளன. சமீபத்திய மாதங்களில், ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் வழங்கிய பில்லியன் கணக்கான யூரோக்கள் மதிப்பிலான கூடுதல் நிதியுதவியைக் கொண்டு, கியேவில் உள்ள தீவிர வலதுசாரி ஆட்சி நீண்டதூரம் பாயும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், குடியிருப்பு அமைப்புகள் உட்பட ரஷ்யா முழுவதிலும் உள்ள இலக்குகள் மீது ஏராளமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. சில்லறை விற்பனை நிறுவனமான வைல்ட்பெர்ரீஸின் (Wildberries) சேமிப்புக் கிடங்குகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களில், சமீபத்திய வாரங்களில் ஏராளமான தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

உக்ரேனின் “ஜனநாயகத்திற்கான” போராட்டத்திற்கு எதிரான “ரஷ்ய ஆக்கிரமிப்பினால்”தான் இப்போரானது தூண்டப்பட்டது எனச் சித்தரிப்பது, இயற்கை வளங்களையும் மலிவான உழைப்பையும் கைப்பற்றுவதற்கும், புவிசார் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும் ஆரம்பத்திலிருந்தே நடத்தப்பட்டு வரும் ஒரு சூறையாடும் போரை மூடிமறைக்க, நேட்டோ நாடுகளின் ஆளும் வர்க்கங்களுக்கு இந்த பிரச்சாரம் ஒரு சாக்காகப் பயன்பட்டுள்ளது. 2022-இல் உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, மாஸ்கோவில் உள்ள புட்டினின் முதலாளித்துவ மறுசீரமைப்பு ஆட்சியின் பிற்போக்குத்தனமான பதிலடியாகும்; ஆனால் அதற்கு முன்னதாக, உக்ரேனை ஏகாதிபத்திய சக்திகளின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நோக்கத்துடன் நேட்டோ மூன்று தசாப்தங்களாகக் கிழக்கு நோக்கி விரிவடைந்ததும், 2014-இல் கியேவில் மேற்கத்திய ஆதரவுடன் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பும் இடம்பெற்றிருந்தன.

மத்திய கிழக்கிலும் இதே ஏகாதிபத்திய இலக்குகளே செயல்பட்டு வருகின்றன. பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்திக்கும் உலகை தேசிய அரசுகளாகப் பிளவுபடுத்துவதற்கும் இடையிலான முரண்பாடு, மற்றும் உற்பத்தியின் வெகுஜன சமூகத் தன்மைக்கும் அதன் தனியார் உடைமைக்கும் இடையிலான முரண்பாடு என முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகள் பெரும் சக்திகளுக்கு இடையிலான பகைமைகளை மேலும் ஆழமாக்கி, உலகப் போரைத் தூண்டிவருகின்றன.

இந்தக் காட்டுமிராண்டித்தனத்திற்குள் இறங்குவதை நிறுத்துவது என்பது, ஏகாதிபத்திய போருக்கும் அதன் மூலக் காரணமான முதலாளித்துவ இலாப முறைமைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்தில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அணிதிரட்டலிலேயே தங்கியுள்ளது.

Loading