இலங்கையில் தலைக்கவச தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜூலை 21 அன்று, கொழும்பிலிருந்து தென்கிழக்கே சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில் ஹோமாகவில் ்கஉள்ள கட்டுவானை தொழிற்பேட்டையில் அமைந்துள்ள நிமாட்டோ தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஐந்து தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் இலங்கையின் மிக மோசமான தொழில்துறை அனர்த்தங்களில் ஒன்றாகும். இது அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் கூட புறக்கணிக்கப்படும் தொழிற்சாலைகளில் மக்களை வேலை செய்ய நிர்ப்பந்திக்கும் இலாப நோக்குடைய முறைமையின் விளைவே அன்றி, தற்செயல் விபத்து அல்ல.

தீயில் எரிந்து நாசமான கட்டுவானை தலைக்கவச தொழிற்சாலை

செவ்வாய்க்கிழமை காலை சுமார் 9.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அதிகளவிலான PVC, பொலிஸ்டைரீன் நுரை (polystyrene foam) மற்றும் மிக எளிதில் தீப்பற்றக்கூடிய ஏனைய பொருட்கள் தொழிற்சாலைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் காரணமாக, சில நிமிடங்களுக்குள்ளேயே தீ மூன்று மாடிக் கட்டடம் முழுவதையும் சூழ்ந்துகொண்டது.

அந்த நேரத்தில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். ஆனால் தீ விபத்து ஏற்பட்டபோது அவர்களில் பெரும்பாலானோர் காலை உணவு இடைவேளையில் இருந்தனர். அனைவரும் தங்களது வேலைத் தளங்களில் இருந்திருந்தால், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளின்படி, ஒரு மின்விசிறி பெயிண்ட் தின்னர் (paint thinner) நிரப்பப்பட்டிருந்த கொள்கலனுக்குள் விழுந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட மின் தாக்கமே தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தொழிலாளர்கள் தீயணைப்புக் கருவிகளைப் பயன்படுத்தி தீயை அணைக்க முயன்றபோது, சிக்கிக்கொண்டிருந்த அவர்களது சக தொழிலாளர்கள் உதவிக்காக அலறிக் கூவினர். ஆனால் அடர்ந்த புகையும் கடுமையான வெப்பமும் மிக வேகமாக கட்டடம் முழுவதையும் ஆக்கிரமித்ததால், மூன்றாவது மாடியில் சிக்கியிருந்தவர்களுக்கு தப்பிச் செல்ல எந்த வழியும் இருக்கவில்லை.

54 வயதான உற்பத்தி மேற்பார்வையாளரான மரியோ எட்வர்ட், தீயை அணைக்கும் முயற்சியில் முன்னின்றவர்களில் ஒருவராவார். அவர் தரைத்தளத்திலிருந்து தீயணைப்புக் கருவி ஒன்றை எடுத்துக்கொண்டு மீண்டும் மேல்மாடிக்குச் சென்றபோது, தீயில் சிக்கி உயிரிழந்தார்.

உயிரிழந்த ஏனைய நால்வரும் வறுமையால் பாதிக்கப்பட்ட விவசாயப் பகுதிகளிலிருந்து வேலை தேடி நகரத்துக்கு வந்த இளம் தொழிலாளர்கள் ஆவர். அவர்களில் இருவருக்கு 19 வயதும், மற்ற இருவருக்கு 24 வயதும் ஆகும். ஊடகச் செய்திகள் படி, அவர்கள் திலிப் திலங்க, பஹன் உதார, சச்சின் தில்ஷான் மற்றும் டி. தமயந்தி ஆவர்.

சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகியிருந்தன. அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

முதலைக் கண்ணீர் வடித்த பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு “ஆழ்ந்த அனுதாபங்களை” தெரிவித்ததுடன், “விரிவான விசாரணை” நடத்தப்படும் என்றும் உறுதியளித்தார். ஆனால் இதுபோன்ற எண்ணற்ற விசாரணைகளைப் போலவே, இதுவும் இந்த அனர்த்தத்தின் உண்மையான காரணங்களை மூடிமறைப்பதற்கும், நிறுவன நிர்வாகத்தைப் பாதுகாப்பதற்கும் மட்டுமே பயன்படும்.

நிறுவனத்திற்கு ஒரு அடையாள அபராதம் கூட விதிக்கப்படுவது சந்தேகத்திற்குரியதே. மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம், தொழிற்சாலை உரிமையாளர்களை பொறுப்புக்கூறச் செய்வதன் மூலம் முதலீட்டாளர்களின் “நம்பிக்கைக்கு” பாதிப்பு ஏற்படுத்த விரும்பவில்லை.

ஏற்கனவே தெளிவாகியிருப்பது என்னவென்றால், இலங்கையின் சுதந்திர வர்த்தக வலயங்களிலும் தொழிற்பேட்டைகளிலும் உள்ள பல தொழிற்சாலைகளைப் போலவே, இந்த தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலையும் ஒரு மரணப் பொறியாக இருந்தது என்பதாகும். சுமார் 2010 முதல், இந்தத் தொழிற்சாலை மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் இயங்கி வந்தது. அங்கு பெருமளவிலான தொழிலாளர்கள் மிகவும் குறுகலான இடத்தில் நெருக்கமாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். தரைத்தளத்தில் கனரக இயந்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இரண்டாவது மாடியில் வர்ணம் பூசும் பிரிவு இயங்கியது. மூன்றாவது மாடியில், பொலிஸ்டைரீன் நுரை மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய ஏனைய பொருட்கள் பயன்படுத்தப்பட்ட தலைக்கவசங்களை ஒன்றுசேர்க்கும் பிரிவு இயங்கியது.

எரிந்த இரசாயனப் பொருட்களும் தீப்பற்றக்கூடிய பொருட்களும் தீயை வேகமாகப் பரவச் செய்ததால், சில நிமிடங்களிலேயே கட்டடம் முழுவதும் தீயினால் சூழப்பட்டது. பிரதான நுழைவாயில் வழியாக உட்புகுந்த காற்று தீயின் வேகத்தை மேலும் அதிகரித்தது. கட்டடத்தின் உறுக்கு கட்டமைப்பு இடிந்து விழுந்ததால் அவசரகால வெளியேறும் வழிகள் அடைபட்டன. வெளிப்புற அவசரகால படிக்கட்டு கட்டடத்திலிருந்து பிரிந்து விழுந்ததால், மூன்றாவது மாடியில் இருந்த தொழிலாளர்கள் தப்பிச் செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

ஊடகச் செய்திகளின்படி, மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA), நிமாடோ தொழிற்சாலை 2024 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தனது சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தை (Environmental Protection Licence) புதுப்பிக்கவில்லை என்பதை கண்டறிந்துள்ளது. கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டிய ஒலி மற்றும் காற்றுத் தர மதிப்பீட்டு அறிக்கைகளையும், கழிவு முகாமைத்துவ அறிக்கையையும் அது சமர்ப்பிக்கவில்லை. மேலும், தீப்பற்றினால் நச்சுத்தன்மை வாய்ந்த சேர்மங்களை வெளியிடும் பெருமளவிலான PVC மற்றும் இரசாயனப் பொருட்களை அந்தத் தொழிற்சாலை சேமித்து பயன்படுத்தி வந்தது.

இதிலும் கடுமையான விடயம் என்னவென்றால், தீ விபத்து அல்லது வேறு ஏதேனும் தொழில்துறை அனர்த்தம் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதற்கான எந்த அவசரகால நடவடிக்கைத் திட்டமும் அந்தத் தொழிற்சாலையில் இல்லை என்பதை மத்திய சுற்றாடல் அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விதிமீறல்களைச் சரிசெய்யுமாறு அதிகாரிகள் பலமுறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தனர். அண்மையில் ஜூலை 2 அன்றும் இதுபற்றி அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொழிற்சாலை பாதுகாப்பான நிலைக்கு கொண்டுவரப்படும் வரை உற்பத்தியை நிறுத்துவதற்கோ அல்லது தொழிலாளர்கள் எதிர்கொண்ட ஆபத்துகள் குறித்து அவர்களை எச்சரிப்பதற்கோ மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த அனர்த்தம், உத்தியோகபூர்வ அலட்சியத்தின் மேலும் ஒரு வெளிப்படையான எடுத்துக்காட்டை அம்பலப்படுத்தியுள்ளது. கட்டுவானை தொழிற்பேட்டையில் சுமார் 2,000 தொழிலாளர்கள் பணியாற்றுவதுடன், அருகிலுள்ள டெம்பிள்பேர்க் தொழிற்பேட்டையில் இயங்கும் 34 நிறுவனங்களில் மேலும் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்கின்றனர். இருப்பினும், கட்டுவானை தொழிற்பேட்டைக்குள்ளோ அல்லது 237,000க்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட ஹோமாகமையிலோ ஒரு தீயணைப்பு நிலையம்கூட இல்லை.

கட்டுவானை தலைக்கவச தொழிற்சாலையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்

சம்பவ இடத்திற்கு மிக அருகிலுள்ள தீயணைப்பு படை, சுமார் 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கோட்டை மாநகர சபையினால் இயக்கப்படுகிறது. தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தை அடைய ஏறக்குறைய ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டன. அதற்குள் தொழிற்சாலை முழுவதும் தீயில் மூழ்கியிருந்ததால், உள்ளே சிக்கியிருந்த தொழிலாளர்கள் உயிர் தப்புவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தது.

இலங்கையின் தொழிற்சாலை ஆய்வு முறைமை ஆபத்தான அளவுக்கு ஊழியர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. 2019 ஜனவரியில் சண்டே டைம்ஸ் வெளியிட்ட தகவலின்படி, தொழிற்சாலைச் சட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பைக் கொண்ட தொழில்துறை பாதுகாப்புப் பிரிவில் தகுதிபெற்ற 25 தொழிற்சாலை ஆய்வுப் பொறியியலாளர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். இலங்கை முழுவதும் உள்ள சுமார் 30,000 தொழிற்சாலைகளை மேற்பார்வையிட குறைந்தபட்சம் 100 பொறியியலாளர்கள் தேவைப்படுவார்கள் என தொழிலாளர் துறை அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.

மேலும், கொழும்பு தீயணைப்புச் சேவையில் தீ பாதுகாப்பு ஆய்வுகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் வெறும் 10 பேர் மட்டுமே என்றும், தலைநகரில் உள்ள கட்டடங்களில் சுமார் 20 சதவீதத்தை மட்டுமே ஆய்வு செய்வதற்கான பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சண்டே டைம்ஸ் தெரிவித்தது.

ஹோமாகமை அனர்த்தம், அண்மைக்கால தொழில்துறை உயிரிழப்புகளின் தொடரில் இடம்பெற்றுள்ள சமீபத்திய சம்பவமாகும். 2025 நவம்பரில், ஒரே வாரத்திற்குள் இடம்பெற்ற இரண்டு தனித்தனி தொழிற்சாலை விபத்துகளில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பல தசாப்தங்கள் பழமையான இயந்திரம் ஒன்று ரப்பர் பதப்படுத்தும் தொழிற்சாலையில் வெடித்ததில் ராஜினிகாந்தா உயிரிழந்தார். அதேவேளை, கட்டாயமாக பொருத்தப்பட வேண்டிய பாதுகாப்புக் கவசங்கள் இல்லாத தேயிலை உருட்டும் இயந்திரத்தில் கிருஷ்ணன் விஜயகுமார் இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார்.

2025 ஆகஸ்டில், கொழும்பு துறைமுக சர்வதேச கொள்கலன் முனையத்திலும் மாகொலவில் உள்ள ஒரு தொழிற்சாலையிலும் இடம்பெற்ற தனித்தனி விபத்துகளில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்பட்டதாகவோ அல்லது நிறுவன உரிமையாளர்கள் பொறுப்புக்கூறச் செய்யப்பட்டதாகவோ எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தகவலின்படி, இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 60 முதல் 80 வரையான உயிரிழப்பை ஏற்படுத்தும் வேலைத்தள விபத்துகளும், சுமார் 2,000 உயிரிழப்பை ஏற்படுத்தாத வேலைத்தள விபத்துகளும் பதிவாகின்றன. எனினும், இந்த எண்ணிக்கைகள் தொழில்துறை உயிரிழப்புகள் மற்றும் காயங்களின் உண்மையான அளவை பெருமளவில் குறைத்தே காட்டுகின்றன என்பது கிட்டத்தட்ட உறுதியானதாகும்.

இதே போக்கு சர்வதேச அளவிலும் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.

  • * 2026 ஜூலை 12 அன்று, பாங்கொக்கில் உள்ள ஒரு மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 பேர் உயிரிழந்ததுடன், டசின் கணக்கானோர் காயமடைந்தனர்.
  • * 2026 மார்ச் மாதத்தில், தென் கொரியாவின் டேஜோனில் அமைந்திருந்த வாகன உதிரிப்பாகத் தொழிற்சாலையில் 14 தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். அந்தத் தொழிற்சாலையில் இதற்கு முன்னரும் பலமுறை தீ விபத்துகள் ஏற்பட்டிருந்தன. அவசர சேவைகளை அழைத்த தொழிலாளர்கள் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
  • * 2025 அக்டோபரில், அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் உள்ள வெடிமருந்து உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதே மாதத்தில், பங்களாதேஷின் டாக்காவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் 16 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

இந்த அனர்த்தங்கள் அனைத்தும் கட்டாயமான பாதுகாப்பு விதிமுறைகள் இன்மை மற்றும் அரசாங்க அதிகாரிகள் அவற்றை அமுல்படுத்தத் தவறியமையுடனும் நேரடியாக தொடர்புபட்டுள்ளன.

இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் தொழிலாளர் சட்டங்களில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளத் தயாராகி வருகிறது. இந்த மாற்றங்கள், சுரண்டல்மிக்க மற்றும் உயிருக்கு ஆபத்தான வேலைநிலைமைகளுக்கு எதிராகப் போராடும் தொழிலாளர்களின் இயலுமையை மேலும் கட்டுப்படுத்தும். முன்மொழியப்பட்டுள்ள “சீர்திருத்தங்களில்”, தொழிற்சங்கங்கள் சட்டபூர்வ அங்கீகாரம் பெற குறைந்தபட்சம் 100 உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையும், எந்தவொரு தொழிற்போராட்டத்துக்கும் முன்பாகவும் கட்டாய இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற விதியும் உள்ளடங்குகின்றன. வேலைப் பாதுகாப்பையும் வேலைநிறுத்த உரிமையையும் நசுக்கும் வகையில் 29 தொழிலாளர் சட்டங்களை நான்கு தொழிலாளர் சட்டத் தொகுதிகளால் மாற்றிய இந்திய அரசாங்கத்தின் பாதையையே இந்த அரசாங்கம் பின்பற்றுகிறது.

கட்டுவானையில் நடந்தது, மனித உயிர்களை முதலாளித்துவ அமைப்பின் இலாப வெறிக்கு இடையறாது கீழ்ப்படுத்துவதன் விளைவான ஒரு தொழில்துறை கூட்டுப் படுகொலையே அன்றி, ஒரு “விபத்து” அல்ல. தொழிலாளர்களின் பாதுகாப்புக்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் முதலாளிகளின் இலாபத்திலிருந்து கழிக்கப்படும் ஒரு ரூபாயாகக் கருதப்படுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் புறக்கணிக்கப்படுவதுடன் அமுல்படுத்தப்படுவதில்லை. ஒழுங்குமுறைச் சட்டங்களில் செய்யப்படும் எந்தவொரு சிறிய திருத்தமோ அல்லது முதலாளித்துவ வர்க்கத்தின் மனச்சாட்சிக்கு விடுக்கும் எந்த வேண்டுகோளோ இந்தக் கொலைகளைத் தடுக்காது.

நிறுவனங்களினதும் அரசினதும் முகவர்களாகச் செயல்படும் தொழிற்சங்கங்கள், வேலைத்தளப் பாதுகாப்பு முற்றாகச் சீரழிக்கப்படுவதற்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் எழும் எதிர்ப்பை ஒடுக்கி வந்துள்ளன.

தங்களது பாதுகாப்பையும் உயிரையும் காப்பாற்றிக்கொள்ள தொழிலாளர்களுக்கு, அவர்கள் தாமே கட்டுப்படுத்தும் புதிய அமைப்புகளை கட்டியெழுப்புவது அவசரத் தேவையாகும். நிறுவன-சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்து சுயாதீனமான, சாதாரணத் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்கள் ஒவ்வொரு வலைத் தளத்திலும் உருவாக்கப்பட வேண்டும். தொழிற்சாலைகள் பாதுகாப்பற்றதாக இருக்கும் போது, இந்தக் குழுக்கள் உற்பத்தியை நிறுத்துவதோடு, வேலைகளையும் ஊதியங்களையும் பாதுகாப்பதற்காகவும் போராட வேண்டும். அனைத்து பாதுகாப்புத் தகவல்களையும் முழுமையாக வெளியிடக் கோரி தொழிலாளர்களை அணிதிரட்டுவதுடன், உயிரிழப்புகளுக்கும் காயங்களுக்கும் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தவும் அவை போராட வேண்டும்.

இலங்கை தொழிலாளர்கள், முதலாளித்துவத்திற்கு எதிராகவும் சர்வதேச சோசலிசத்திற்காகவும் தொழிலாளர்களை சர்வதேச அளவில் அணிதிரட்டிப் போராடிவரும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் சர்வதேசத் கூட்டணியின் ஊடாக, இந்தியா மற்றும் ஏனைய நாடுகளிலுள்ள தொழிலாளர்களின் போராட்டங்களுடன் தங்களது போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

Loading