இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) தேசியத் தலைவர் டேவிட் நோர்த் அவர்களால் வழங்கப்பட்ட, சோசலிச சமத்துவக் கட்சியின் (ஐக்கிய அமெரிக்கா) ஒன்பதாவது காங்கிரஸின் ஆரம்ப அறிக்கையின் மூன்றாம் பகுதியை இங்கே வெளியிடுகிறோம். (பகுதி 1 மற்றும் பகுதி 2-ஐப் பார்க்கவும்). இந்தக் காங்கிரஸ் 2026 ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெற்றது. இந்த அறிக்கை, ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட “சோசலிச சமத்துவக் கட்சியும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும்” என்ற முதல் தீர்மானத்தை அறிமுகப்படுத்தியது.
III. 1991-ம் ஆண்டும் தற்போதைய போரின் தோற்றுவாயும்
28. தற்போதைய உலக மோதலானது 2022-லிருந்தோ அல்லது 2014-லிருந்தோ உருவானதல்ல. மாறாக 1990–91 காலப்பகுதியிலிருந்தே வளர்ச்சியடைந்து வந்துள்ளது. ஸ்டாலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதும், அதன் எதிர்ப்புரட்சி பரிணாம வளர்ச்சியின் இறுதிக்கட்ட நடவடிக்கையாக அமைந்த அந்த நிகழ்வும், 1917-ல் தொடங்கிய போராட்டத்தின் இறுதி வெற்றியாகவே மேற்கத்திய ஆளும் வர்க்கங்களால் வரவேற்கப்பட்டன. 'வரலாற்றின் முடிவு' என்ற பிரகடனம், அடிப்படையில் தாராளவாத ஜனநாயகம் பற்றிய ஒரு கோட்பாடு அல்ல. மாறாக, அது சோசலிசம் என்ற பூதம் இறுதியாக விரட்டியடிக்கப்பட்டுவிட்டதாகவும், அக்டோபர் புரட்சி விடுத்த சவால் உறுதியாக ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும், இருபதாம் நூற்றாண்டையே இனி ரத்து செய்துவிடலாம் என்றும் அறிவிப்பதாகவே அது அமைந்திருந்தது.
29. சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு ஏகாதிபத்தியம் அளித்த எதிர்வினை, அக்டோபர் புரட்சி ஒருபோதும் நிகழாதிருந்தால் உலகம் எப்படி இருந்திருக்குமோ, அப்படியே அதை மீண்டும் உருவாக்குவதற்கான ஒரு முயற்சியைத் தவிர வேறொன்றுமில்லை: புரட்சியும் அதன் பின்னதிர்வுகளும் ஏகாதிபத்திய அமைப்பிலிருந்து அகற்றிய, அல்லது அதற்கு எதிராகப் பாதுகாத்த ஒவ்வொரு பிரதேசம், வளம் மற்றும் மக்கள்தொகையின் மீதும் மூலதனத்தின் இடைநிலையற்ற ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதும்; முதலாம் உலகப் போரில் அமெரிக்கா நுழைந்தபோது கொண்டிருந்த நோக்கத்தை, அதாவது, ஜனாதிபதி ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் 'புதிய உலக ஒழுங்கு' (New World Order) என்று வர்ணித்ததன் கீழ், அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தின் கீழ், முழுக் கிரகத்தையும் ஒழுங்கமைக்கும் அந்த நோக்கத்தை, எழுபத்தைந்து ஆண்டுகள் தாமதமாக நிறைவேற்றுவதும் ஆகும்.
30. இதிலிருந்து, சோவியத் யூனியனுக்குப் பிந்தைய ஏகாதிபத்தியக் கொள்கையின் இரண்டு வரையறுக்கப்பட்ட மூலோபாய உந்துதல்கள் உருவாகின. முதலாவது, முன்னாள் சோவியத் பகுதிகளையே மீண்டும் மறுபங்கீடு செய்வதாகும். சோவியத் யூனியனின் வீழ்ச்சியானது, தொழிலாளர் அரசின் கட்டமைப்பிற்குள் இருந்த பரந்த நிலப்பரப்பு, தொழில் துறை மற்றும் வளங்களின் பாரம்பரியத்தை துண்டாடிப் பிரித்தெடுப்பதற்கான சாத்தியத்தை நேரடியாக ஏற்படுத்தியது. இது ஏகாதிபத்திய வரலாற்றிலேயே உரிமை கோரப்படாத மிகப்பெரிய பரிசாகும். அந்தத் தருணத்திலிருந்து, உலகை மறுபங்கீடு செய்வது என்பது, நடைமுறையில் முன்னாள் சோவியத் அரசின் முழுப் பகுதியையும் ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதோடு பிணைக்கப்பட்டிருந்தது: அதாவது அதன் நிலம், எரிசக்தி, கனிம வளங்கள், உழைப்பு மற்றும் யூரேசியாவிற்கு நடுவே அமைந்த அதன் முக்கிய மூலோபாய அமைவிடம் ஆகியவற்றைத் தன்வசப்படுத்துவதாகும்.
31. இந்த நோக்கம் முப்பத்தைந்து ஆண்டுகளாக அமெரிக்க மற்றும் ஐரோப்பியக் கொள்கையின் மையத்தில் நிலைத்திருந்துள்ளது. இது ஏற்கனவே 1992ஆம் ஆண்டு பாதுகாப்புத் திட்டமிடல் வழிகாட்டுதலிலேயே (Defense Planning Guidance) நெறிமுறைப்படுத்தப்பட்டது. யூரேசிய நிலப்பரப்பில் எந்தவொரு புதிய போட்டியாளர் உருவாவதையும் தடுப்பதை அது அமெரிக்க மூலோபாயத்தின் முதல் நோக்கமாக வரையறுத்தது. சோவியத்துக்குப் பிந்தைய புறப்பகுதியின், எல்லாவற்றிற்கும் மேலாக உக்ரேனின், கட்டுப்பாட்டை உலக முதன்மைக்கான திறவுகோலாக அடையாளம் கண்ட புவிசார் அரசியல் இலக்கியத்திலும் இது வெளிப்படையாகக் கோட்பாட்டுரீதியில் முன்வைக்கப்பட்டது. நேட்டோவின் ஐந்து கட்டக் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தின் மூலம் ரஷ்யாவின் எல்லைகள் வரை இது செயல்படுத்தப்பட்டது[4]. 1945-க்குப் பிறகு ஐரோப்பாவின் முதல் போராக அமைந்து, 'மனிதாபிமான' ஏகாதிபத்திய தலையீட்டிற்கான முன்மாதிரியை வழங்கிய யுகோஸ்லாவியாவின் இராணுவ அழிவு மற்றும் பிரிவினையில் இது செயல்படுத்தப்பட்டது. மேலும் முன்னாள் சோவியத் குடியரசுகள் முழுவதும் வரிசையாக ஒருங்கிணைக்கப்பட்ட 'வண்ணப் புரட்சிகள்' மூலமாகவும் இது செயல்படுத்தப்பட்டது. இதன் உச்சக்கட்டமாக 2014-இல் கியேவில் நடந்த ஆட்சிமாற்றச் சதி, உக்ரேனை கிழக்கு நோக்கிய உந்துதலின் முன்தளமாக மாற்றியது.
32. நேட்டோவின் ஆத்திரமூட்டலுக்குப் புட்டின் ஆட்சி அளித்த எதிர்வினையின் பிற்போக்குத்தனமான தன்மை இருந்தபோதிலும், 2022இல் வெடித்த போர், இந்த ஒட்டுமொத்தப் பாதையின் உச்சக்கட்டமாகும். 'மூலோபாயத் தோல்வி', 'காலனித்துவநீக்கம்' எனும் மொழியில் மேற்கத்திய மூலோபாயச் சொல்லாடலில் இப்போது மேன்மேலும் வெளிப்படையாகக் கூறப்படும் அதன் நோக்கம், ரஷ்யக் கூட்டமைப்பை உடைத்துச் சிதறடிப்பதாகும்.
33. இரண்டாவது மூலோபாய உந்துதல், உலகின் ஏனைய பகுதிகளில் சோவியத் ஒன்றியம் என்ற எதிர் சக்தி அகற்றப்பட்டதிலிருந்து உருவானது. காலனித்துவ மற்றும் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் சோவியத் ஸ்டாலினிசக் கொள்கை ஒருபோதும் உண்மையிலேயே ஏகாதிபத்திய-எதிர்ப்புத் தன்மை கொண்டதாக இருந்ததில்லை. சோவியத் ஒன்றியத்தின் மீதான ஏகாதிபத்திய அழுத்தத்தைப் பலவீனப்படுத்தும் ஒரு வழிமுறையாகவே, 'மூன்றாம் உலகில்' சுயநிர்ணயத்திற்கான தேசிய இயக்கங்களை கிரெம்ளின் ஆதரித்தது. சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளுக்கு அப்பால் சோசலிசப் புரட்சியை கிரெம்ளின் ஒருபோதும் ஆதரிக்கவும் இல்லை, ஊக்குவித்ததும் இல்லை.
34. எவ்வாறாயினும், ஸ்டாலினிச வெளியுறவுக் கொள்கையின் நலன்களுக்காக கிரெம்ளின் இவற்றை எவ்வளவு சூழ்ச்சிகரமாகப் பயன்படுத்திக் கையாண்டபோதிலும், சோவியத் ஒன்றியத்தின் இருப்பு, முன்னாள் காலனித்துவ உலகில் இருந்த முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளின் ஒரு முழு அடுக்கிற்கும் இராஜதந்திர, இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் ஓரளவு பாதுகாப்பை வழங்கியிருந்தது. இந்த ஆட்சிகளின் சூழ்ச்சித் திறனானது ஏகாதிபத்திய மற்றும் ஸ்டாலினிச முகாம்களுக்கு இடையே சமநிலையைப் பேணும் திறனையே சார்ந்திருந்தது. சோவியத் ஒன்றியத்தின் மறைவு, அவர்கள் மீதான நேரடி ஏகாதிபத்திய வன்முறைக்கான அனைத்துத் தடைகளையும் நீக்கியது.
35. சோவியத் ஒன்றியம் கலைந்துகொண்டிருந்த காலகட்டத்தில் தொடுக்கப்பட்ட 1990–91ன் வளைகுடாப் போர், 'முடிவில்லாப் போர்களின்' சகாப்தத்தைத் திறந்து வைத்தது. 1990 ஆகஸ்டில், அமெரிக்காவும் ஏகாதிபத்திய சக்திகளின் ஒரு கூட்டணியும் ஈராக்கை உடனடியாகப் படையெடுக்கவிருந்த சூழலில், வேர்க்கர்ஸ் லீக்கின் (சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி அமைப்பு) ஒரு சிறப்புக் காங்கிரஸ் கூட்டப்பட்டது. அந்தக் காங்கிரஸுக்கு நான் அளித்த அறிக்கையில் பின்வருமாறு கூறினேன்:
ஈராக்குக்கு எதிரான இந்தச் சர்வதேசக் குண்டர் நடவடிக்கை, பாரசீக வளைகுடா நெருக்கடியின் வரலாற்றுச் சாரத்தின் வெளிப்பாடாகும். இது உலகை ஏகாதிபத்திய சக்திகள் புதிதாகப் பங்கிட்டுக்கொள்ளும் ஒரு காலகட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. 2ம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் முடிவு என்பது காலனித்துவத்திற்குப் பிந்தைய சகாப்தத்தின் முடிவையும் குறிக்கிறது. 'சோசலிசம் தோல்வியடைந்துவிட்டது' என்று பிரகடனப்படுத்தும் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கம், இன்னும் வார்த்தைகளால் கூறாவிட்டாலும், தனது செயல்களின் மூலம் தேசியச் சுதந்திரமும் தோல்வியடைந்துவிட்டதாகப் பிரகடனப்படுத்துகிறது. அனைத்து முக்கிய ஏகாதிபத்திய சக்திகளும் எதிர்கொள்ளும் தீவிரமடைந்து வரும் நெருக்கடி, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வளங்கள் மற்றும் சந்தைகளின் மீது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்திக்கொள்ள அவற்றைக் கட்டாயப்படுத்துகிறது. ஓரளவு சுதந்திரத்தைப் பெற்றிருந்த முன்னாள் காலனிகள் மீண்டும் அடிமைப்படுத்தப்பட வேண்டும். ஈராக்குக்கு எதிரான தனது கொடூரமான தாக்குதலின் மூலம், இரண்டாம் உலகப் போருக்கு முன்பு நிலவியதைப் போன்ற, பின்தங்கிய நாடுகளின் மீதான கட்டுப்பாடற்ற மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டவே தான் உத்தேசித்திருப்பதாக ஏகாதிபத்தியம் எச்சரிக்கை விடுக்கிறது.[5]
36. அதைத் தொடர்ந்து நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளும் இந்தப் பகுப்பாய்வை உறுதிப்படுத்தியுள்ளன. ஈராக் 1990கள் முழுவதும் நிரந்தர முற்றுகைக்கும் குண்டுவீச்சுக்கும் உள்ளாக்கப்பட்டு, 2003இல் படையெடுப்பால் அழிக்கப்பட்டது. சோமாலியா மற்றும் யூகோஸ்லாவியா மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆப்கானிஸ்தான் இருபது ஆண்டுகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. லிபியா 2011இல் இடிபாடுகளாக்கப்பட்டது. சிரியா ஒரு தசாப்தகால பினாமிப் போரால் விழுங்கப்பட்டது. ஏமன் பட்டினிக்கு ஆளாக்கப்பட்டது; சூடான் துண்டாடப்பட்டது. இப்போது, 2026இல், ஈரான் வெளிப்படையான, வரம்பற்ற போருக்கு உட்படுத்தப்படுகிறது. பால்கனிலிருந்து இந்து குஷ் வரையிலான பரந்த பிராந்தியத்தில் நீடிக்கும் இந்த மூன்றரை தசாப்த கால இடைவிடாத போர்கள், ஒரு நீண்டகாலத் தொடர் நடவடிக்கையாக அமைந்துள்ளன: அதாவது, உலகின் மிக முக்கியமான எரிசக்தி உற்பத்திப் பகுதிகளில் ஏகாதிபத்தியத்தின் நேரடி மேலாதிக்கத்திற்கு எதிராக இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகர மற்றும் காலனித்துவ-எதிர்ப்பு எழுச்சிகளால் உருவாக்கப்பட்ட தடைகள் ஒவ்வொன்றையும், ஒவ்வொரு நாடாகத் திட்டமிட்டு அழித்தொழிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
37. ஈரானுக்கு எதிரான போர், இந்த 35 ஆண்டுகால முழுப் பாதையின் உச்சக்கட்டமாகும். இது, அதன் வரலாற்றுரீதியான கணக்குத் தீர்க்கும் தருணமாகவும் அமைகிறது. அதீத ஆணவத்திற்கு இப்போது தக்க தண்டனை (Nemesis — கிரேக்கத் தொன்மத்தில் அளவு கடந்த ஆணவத்தைத் தண்டிக்கும் தெய்வம்) கிடைத்து வருகிறது. 1991-க்குப் பிந்தைய திட்டத்தின் மிக முக்கிய நடவடிக்கையாகத் திட்டமிடப்பட்ட பிப்ரவரி 28-ஆம் தேதி தாக்குதல், பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோதே ஒரு நாட்டுத் தலைவரையும் அவரது குடும்பத்தினரையும் படுகொலை செய்ததன் மூலம் தொடங்கப்பட்டது. அமெரிக்க இராணுவப் பலத்தின் ஒருங்கிணைந்த பிரயோகத்தை எந்த அரசாலும் தாங்கிக்கொள்ள முடியாது என்பதை, என்றென்றைக்குமாக, நிரூபிப்பதே அதன் நோக்கமாக இருந்தது.
38. ஐந்து மாதங்களுக்குப் பிறகு, இதன் முடிவு ஒரு மிகப்பெரிய மூலோபாயப் பின்னடைவாக அமைந்துள்ளது. ஈரான் சரணடையவில்லை. உலகின் ஐந்திலொரு பங்கு கச்சா எண்ணெய் கடந்து செல்லும் ஹோர்முஸ் நீரிணை, இன்னமும் தகராறுக்குரிய போர்க் களமாகவே உள்ளது. அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்புகள் தீர்ந்துவிட்டனழ இந்தப் பிராந்தியத்திலுள்ள படைத் தளக் கட்டமைப்பு தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்கா தனது இலக்குகளை அடைய முடியாத ஒரு 'மூலோபாய முட்டுச்சந்தை' அடைந்துவிட்டதாக, வாஷிங்டனின் சொந்த மூலோபாய ஆய்வாளர்களே இப்போது ஒப்புக்கொள்கின்றனர். தற்போதைய முட்டுச்சந்திலிருந்து தப்பிப்பதற்கு, ஈரான மீதான படையெடுப்பு உட்பட மேலும் போரை தீவிரப்படுத்துவதன் மூலம் ட்ரம்ப் நிர்வாகம் வழிதேட முயலாது என்று இந்த மதிப்பீட்டிற்குப் பொருள் கொள்ளக்கூடாது. ஆனால், அத்தகைய மிகக் கொடூரமான பொறுப்பற்ற நடவடிக்கை, இந்த பேரழிவின் அளவை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
39. படையெடுப்பு இல்லாமலேயே, இந்தப் பேரழிவின் முக்கியத்துவம் பாரசீக வளைகுடாவைத் தாண்டி வெகுதூரம் விரிகிறது. 1991 முதல் அமெரிக்கக் கொள்கையை வழிநடத்திய நம்பிக்கை — இராணுவ பலத்தின் கட்டுப்பாடற்ற பிரயோகத்தின் மூலம் உலகின் மீது ஓர் அமெரிக்க அமைதியை திணிக்க முடியும் என்ற நம்பிக்கை — ஒரு மாயை என அம்பலமாகியுள்ளது. முந்தைய தொடர் போர்களுக்கு இரையானவை தனிமைப்படுத்தப்பட்ட, வறிய நிலையில் உள்ள மற்றும் இராணுவ ரீதியாகப் பலவீனமான நாடுகளாகும். அத்தகைய நாடுகளுக்கு எதிராக மூன்று மற்றும் அரை தசாப்தங்களாக நடத்தப்பட்ட போர்கள் கூட ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்கவில்லை, மாறாக இடிபாடுகளையே எஞ்சின. ஆனால் 90 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஈரானுக்கு எதிராக, அந்தச் சூத்திரம் முற்றிலும் செயலிழந்துவிட்டது. ஆயினும், இந்த மாயை, தனது பொருளாதார நிலையின் நீடித்த வீழ்ச்சியை இராணுவ வழிமுறைகள் மூலம் தலைகீழாக்க முயன்ற ஒரு ஆளும் வர்க்கத்தின் கருத்தியல் எதிர்வினையேயாகும். துல்லியமாக இந்தக் காரணத்தினாலேயே, வளைகுடாவில் ஏற்பட்ட இந்த மூலோபாயப் பின்னடைவானது, பின்வாங்கலை ஏற்படுத்தாமல், ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராக இயக்கப்படும் மேலும் வெறித்தனமான தீவிரப்படுத்தலையே உருவாக்கும்— அதாவது, இந்த அறிக்கை எந்த உலகப் போரின் முனையை ஆய்வு செய்கிறதோ, அதன் விரிவாக்கத்தையே உருவாக்கும்.
40. அமெரிக்கா புதிய ஏகாதிபத்தியச் சிலுவைப்போரை வழிநடத்துகிறது. ஆனால் அது ஒருபோதும் அமெரிக்காவின் தனி முயற்சியாக இருந்ததில்லை. 1990 அறிக்கை குறிப்பிட்டதுபோல்,
'பழைய உலகின்' ஏகாதிபத்திய மூலோபாயவாதிகள், காலனித்துவ பாணியிலான மேலாதிக்கத்தை மீட்டெடுக்க புஷ் வழங்கியுள்ள வாய்ப்பை வரவேற்கின்றனர். அமெரிக்கத் தலையீடு, உலகைப் புதிதாக மறுபங்கிடுவதன் தொடக்கமாகக் கருதப்படுகிறது. அதனால்தான் ஒவ்வொரு ஏகாதிபத்திய அரசும், ஈராக்கிய மத விரோதிக்கு எதிரான இன்றைய சிலுவைப்போரில் பங்கேற்க இத்தனை ஆர்வமாக உள்ளன. மிகத் தொய்ந்துபோன வயதான அயோக்கியர்கள்கூட, தங்கள் தொப்பை வயிறுகளை உள்ளிழுத்துக்கொண்டு, பல தசாப்தங்களாகக் கிடங்கில் போட்டு வைக்கப்பட்டிருந்த ஏகாதிபத்திய சீருடைகளை மீண்டும் அணிய முற்படுகின்றனர்.[7]
41. முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவுடன் தீவிரமடைந்துவரும் மோதல் இதே வரலாற்றுத் தொகுதியைச் சேர்ந்ததாகும். சீனா அமெரிக்காவின் சக்திவாய்ந்த பொருளாதாரப் போட்டியாளராக மாறியுள்ளது. இதை வாஷிங்டனால் சகித்துக்கொள்ள முடியாது. ஆனால், சீனாவின் பிரம்மாண்டமான பொருளாதார வளர்ச்சியை அதன் புரட்சிகர வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாது என்ற உண்மை, இந்தப் பதட்டத்தை மேலும் தீவிரப்படுத்துகிறது. அக்டோபர் புரட்சியால் (1917) தொடங்கப்பட்ட காலகட்டத்தின் விளைவாக அமைந்த 1949-ஆம் ஆண்டு சீனப் புரட்சி, ஒரு நூற்றாண்டு கால ஏகாதிபத்தியச் சிதைவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அந்நிய மூலதனத்தை வெளியேற்றியதுடன் நாட்டை ஒருங்கிணைத்தது. மாவோயிசத்தின் கீழ் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் 1978-இல் தொடங்கப்பட்ட முதலாளித்துவ மீட்சி ஆகியவற்றைக் கடந்து பார்த்தாலும், அக்டோபர் புரட்சியால் தூண்டப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியிலேயே வேர்களைக் கொண்ட ஒரு அரசை அது உருவாக்கியது. அதன் வளர்ச்சித் திறன் என்பது அந்தப் புரட்சியின் நேரடி மரபுரிமையாகும்.
42. சீனாவில் அமெரிக்காவின் கொள்கையானது, அங்கு முதலாளித்துவம் மீண்டும் நிறுவப்படுவதை, மலிவான உழைப்பின் எல்லையற்ற களஞ்சியத்தை உள்ளடக்குவதாகக் கருதி ஆரம்பத்தில் வரவேற்றது. அந்த ஒருங்கிணைப்பு அடிபணிதலுக்கு வழிவகுக்கும்; இறுதியாக—ஏகாதிபத்தியப் பொருளாதார அழுத்தம் மற்றும் மொழி, இனம், தேசிய மோதல்களைத் தூண்டுதல் ஆகியவற்றின் கலவையின் மூலம்— சீனாவின் சிதைவுக்கு வழிவகுக்கும் என்று அது கருதியது.
43. கடந்த பதினைந்து ஆண்டுகளின் முழு மூலோபாய நோக்குநிலையும், அதாவது 'திசைமாற்றம்', வர்த்தகப் போர், தொழில்நுட்ப முற்றுகை, குவாட் (Quad) முதல் ஆகஸ் (AUKUS) வரையிலான கூட்டணிகளின் வலைப்பின்னல் ஆகியவை, இந்தக் கருதுகோள் தோல்வியடைந்துவிட்டது என்ற கண்டறிதலாலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீன முதலாளித்துவ அரசு தனக்கு ஒதுக்கப்பட்ட கீழ்நிலைப் பாத்திரத்தை ஏற்க மறுத்துவிட்டது. எனவே, அதன் பொருளாதார எழுச்சியானது, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பதைத் தொடர்ந்து உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் முனைப்பிற்கு ஒரு சந்தை வாய்ப்பாக இல்லாமல், ஒரு போட்டியாளரான முதலாளித்துவ சவாலாகவே வாஷிங்டனுக்கு முன் நிற்கிறது.
44. தேசியவாதத்தில் ஊறிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) அரசியல் பாதை அடிப்படையில் பிற்போக்கானது என்ற உண்மையை இது மாற்றாது. 'சீனப் பண்புகளுடன் கூடிய சோசலிசம்' என்பது சொற்களிலேயே ஒரு முரண்பாடாகும். அதன் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், சீனாவின் தலைவிதி என்பது சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் முடிவாலேயே தீர்மானிக்கப்படும். அதில், ஆளும் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான சீனத் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் மகத்தான பங்கை வகிக்கும். முதலாளித்துவ தன்னலக்குழுவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, சீனாவிலேயே ஒரு உண்மையான தொழிலாளர் அரசை நிறுவும் ஒரு சமூகப் புரட்சி இல்லாமல், சீனாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவுடனான ஒரு பேரழிவுகரமான போருக்குத் தவிர்க்கவியலாமல் இட்டுச்செல்லும்.
45. தற்போதைய நிலைமையின் மிகக் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் எதிரான போர் தவிர்க்கமுடியாதது என்றும், அதற்குத் தயாராவதே அரசு நிர்வாகத்தின் பணி என்றும் பிரதான ஏகாதிபத்திய நாடுகளின் தலைவர்கள் தங்களின் நம்பிக்கையை இனி ரகசியமாக வைக்கவில்லை என்பதாகும். பனிப்போரின் உச்சக்கட்டத்தில், அவர்களின் தயாரிப்புகளின் உண்மைத்தன்மை எதுவாக இருந்தாலும், பிரதான நாடுகளின் தலைவர்கள் போரைத் தடுப்பது பற்றியே பகிரங்கமாகப் பேசினர். ஜூன் 1963 இல் அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ஜனாதிபதி கென்னடி, அணு ஆயுத யுகத்தில் 'முழுமையான போர் என்பது அர்த்தமற்றது' என்று தனது பார்வையாளர்களிடம் கூறினார். அமைதி என்பது 'சிந்தனைத் திறன் கொண்ட மனிதர்களின் அவசியமான மற்றும் பகுத்தறிவு சார்ந்த இலக்கு' என்றும் பிரகடனப்படுத்தினார்.
46. கென்னடியின் புகழ்பெற்ற உரை, அவரது சொந்தக் கொள்கைகளே கியூபா ஏவுகணை நெருக்கடிக்கு வழிவகுத்து ஓராண்டுக்குள்ளாகவும், அவரது படுகொலைக்கு வெறும் ஐந்து மாதங்களுக்கு முன்னருமாக நிகழ்த்தப்பட்டது. அக்டோபர் 1962 இல் அணு ஆயுத போரின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டதால், அத்தகைய முடிவு 'அர்த்தமற்றது' என்ற அவரது பிரகடனத்தில் ஒருவேளை அவர் நேர்மையாக இருந்திருக்கலாம். ஆனால் கென்னடியின் முடிவில் இருந்த அடிப்படைக் குறைபாடு என்னவென்றால், ஏகாதிபத்தியமானது மனித உயிர்வாழ்விற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு தருமநெறி சார்ந்த பகுத்தறிவால் நிர்வகிக்கப்படுகிறது என்று அது அனுமானித்ததாகும். இன்றைய ஆட்சியாளர்கள் பைத்தியக்காரர்களைப் போல செயல்படுவதாகத் தோன்றினால், அதற்கு காரணம் அவர்களின் முடிவுகள்—விளைவுகள் எதுவாக இருந்தாலும்—உலகம், சந்தைகள், மூலப்பொருட்கள் மற்றும் முதலீட்டு மண்டலங்களின் மறுபங்கீட்டிற்கான வன்முறைப் போராட்டத்திலேயே தீவிரமாக இருக்கும் ஒரு பெருநிறுவன-நிதிய தன்னலக்குழுவின் அடிப்படையில் பகுத்தறிவற்ற நலன்களால் தீர்மானிக்கப்படுவதே ஆகும்.
47. இன்று ஒவ்வொரு ஏகாதிபத்தியத் தலைநகரிலும் 'போருக்குத் தயாராதல்' என்பதே முக்கிய முழக்கமாக உள்ளது. 'நாம் போரில் இல்லை, ஆனால் நாம் இனி அமைதியிலும் இல்லை' என்று ஜேர்மன் மக்களிடம் அதிபர் மேர்ஸ் கூறியுள்ளார். அரசு, பொருளாதாரம் மற்றும் சமூகத்தை 'நெருக்கடியைத் தாங்கும் திறன் கொண்டதாக' மாற்றும் வகையிலான போர் நடவடிக்கைகளை அவரது அரசாங்கம் செயல்படுத்தி வரும் சூழலிலும், 2029-ஆம் ஆண்டிற்குள் ஜேர்மனி போருக்குத் தயாரான நிலையை (kriegstüchtig) அடைய வேண்டும் என்று அவரது பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டிருக்கும் சூழலிலும் இக்கருத்துகள் கூறப்பட்டுள்ளன. பிளாக் ரொக் ஜேர்மனி நிறுவனத்தின் மேற்பார்வைக் குழுவின் முன்னாள் தலைவரான மெர்ஸ், கெய்சர் வில்ஹெல்மைப் போலத் திமிராக நடந்துகொள்வதோ அல்லது அடொல்ஃப் ஹிட்லரைப் போல ஆவேசமாகப் பேசுவதோ இல்லை. ஆனால், ரஷ்யாவுடனான போருக்கான அவரது தயாரிப்புகள், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் ஜேர்மன் ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கை நோக்கங்களின் வரலாற்றுத் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளன.
48. முன்னாள் பிரதமர் கியர் ஸ்டார்மர் 2025 ஜூனில், பிரிட்டன் 'எமது ஆயுதப் படைகளின் மைய நோக்கமாகப் போர்-நடத்தும் தயார்நிலைக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது' என்று அறிவித்ததுடன், 'போர்க்கால வேகத்தில்' புத்தாக்கம் செய்வதாகவும் உறுதியளித்தார். பிரெஞ்சு இராணுவ பட்ஜெட்டை இரட்டிப்பாக்குவதாக அறிவித்த ஜனாதிபதி மக்ரோன், '1945-க்குப் பிறகு சுதந்திரம் இவ்வளவு அச்சுறுத்தலுக்கு உள்ளானதில்லை' என்று அறிவித்ததுடன், 'இந்த உலகில் சுதந்திரமாக இருக்க வேண்டுமெனில், நீங்கள் பயத்தை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும்; பயத்தை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டுமெனில், நீங்கள் சக்திவாய்ந்தவராக இருக்க வேண்டும்' என்று தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தினார்.
49. இந்த ஜனவரி தனது புத்தாண்டு உரையில் ஆயுதப் படைகளிடம், 'நாம் தயாராக இருக்கிறோம்' என்றும், பிரெஞ்சு மறுஆயுதமயமாக்கலின் தசாப்தம் 'பலனளித்துள்ளது' என்றும் அவர் தெரிவித்தார். ஜூலை மாதத்திற்குள், 'எமது இரத்தத்தின் விலையிலும்கூட' போரிடுவதற்கான பிரான்சின் தயார்நிலையை மக்ரோன் பிரகடனப்படுத்திக்கொண்டிருந்தார். இந்த வார்த்தைகளை வாசிக்கும்போது, 'இந்தப் பைத்தியக்காரத்தனம் எங்கிருந்து வருகிறது? அவர்கள் தங்கள் சொந்த வார்த்தைகளையேனும் நம்புகிறார்களா?' என்று ஒருவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளத் தோன்றும். இவை இராணுவத் தலைமையின் தனிப்பட்ட கணக்கீடுகளோ, அல்லது பத்திரிகைகளுக்குக் கசிந்த தகவல்களோ, அல்லது ஒரு இராணுவப் பேரழிவிற்குப் பிறகு வரலாற்றாசிரியர்களால் தொகுக்கப்பட்டவையோ அல்ல. இவை, அரசாங்கத் தலைவர்கள் தங்கள் சொந்த மக்களிடம் ஆற்றிய பொது உரைகள். மக்களின் விருப்பத்திற்கு மாறாகவும், அவர்களின் தலைக்கு மேலாகவும் நடத்தப்படும் போருக்கு அவர்களைப் பழக்கப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
50. இந்தப் போர் வெறி பழைய ஏகாதிபத்திய மையங்களுக்குள் மட்டும் அடங்கிவிடவில்லை. உலகப் போர் தீவிரமடைவது, பிராந்திய சக்திகளை மேலும் மேலும் ஆழமாக அதன் சுழலுக்குள் இழுக்கிறது. அவற்றில் எதுவும் துருக்கியைப் போல் அவ்வளவு ஆக்ரோஷமாக இழுக்கப்படவில்லை. ஐரோப்பிய நேட்டோவின் மிகப்பெரிய தரைப்படையையும், வேகமாக விரிவடையும் ஆயுதத் தொழிற்துறையையும் கொண்ட துருக்கிய எர்டோகன் அரசாங்கம், சிரியா, லிபியா மற்றும் தெற்கு காக்கசில் இராணுவ ரீதியாகத் தலையிட்டு, ஆப்பிரிக்காவில் தனது பொருளாதார மற்றும் இராணுவச் செல்வாக்கை விரிவுபடுத்தியுள்ளது. இன்று அது உலக நெருக்கடியின் இன்றியமையாத நடுவராகத் தன்னை முன்னிறுத்துகிறது. மாஸ்கோவுக்கும் கீயேவ்வுக்கும் இடையே தொடர்பு வழிகளை அது பராமரித்து வருகிறது. இன்சிர்லிக், கோன்யா மற்றும் கூரெசிக்கில் உள்ள நேட்டோ தளங்கள் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலின் ஒருங்கிணைப்பு மற்றும் உளவு மையங்களாகச் செயல்படும் வேளையிலும், ஈரானுக்கு எதிரான போரில் மத்தியஸ்தராகத் தனது சேவைகளை அது முன்வைக்கிறது. மேலும் இந்த ஜூலையில் அங்காராவில் நேட்டோ உச்சிமாநாட்டை நடத்தியது. இந்த உச்சிமாநாட்டிலிருந்துதான் எர்டோகன், துருக்கியை 'ஒரு புரவலர் நாடு மட்டுமல்ல, ஒரு முக்கிய கூட்டாளி' என்று பிரகடனப்படுத்தினார்.
51. உலக அரசியலில் தீவிரமடைந்துவரும் இந்தத் தலையீடு வலிமையை வெளிப்படுத்தவில்லை, மாறாக நடுநிலை வகிப்பதன் இயலாமையையே காட்டுகிறது: போரின் புற்றுநோய்ப் பரவல், ஒவ்வொரு பிராந்திய சக்தியின் முதலாளித்துவ வர்க்கத்தையும், தானே அந்த மறுபங்கீட்டின் பொருளாகிவிடாதிருக்கும் பொருட்டு, உலகின் மறுபங்கீட்டில் ஒரு இடத்தைப் பிடிப்பதற்கான போட்டியில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுகிறது. மேலும், எல்லா இடங்களிலும் காணப்படுவதைப் போலவே, இராணுவ வலிமையை வெளிநாடுகளில் பிரயோகிப்பதும் உள்நாட்டு பிற்போக்குத்தனமும் ஒன்றோடொன்று பிணைந்துள்ளன—எதிர்க்கட்சித் தலைவர்களைச் சிறையில் அடைத்தல், குர்திஷ் மக்கள் மீதான பல தசாப்த கால ஒடுக்குமுறை மற்றும் போர்-எதிர்ப்பு மற்றும் சோசலிச எதிர்ப்பாளர்கள் மீதான திட்டமிட்ட துன்புறுத்தல் ஆகியவை இதில் அடங்கும்.
52. 2026 கோடையில் நாம் கூடும் இந்த வேளையில், ஐந்து கண்டங்களில் போர்கள் நடைபெற்று வருகின்றன: ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களிலும்; வெனிசுவேலா மீதான நடவடிக்கையின் மூலமாகவும், கியூபா நோக்கிய அதன் விரிவாக்கம் மற்றும் அதையொட்டி கரீபியன் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் இராணுவமயமாக்கல் மூலமாகவும் வட மற்றும் தென் அமெரிக்காவிலும் போர்கள் நடக்கின்றன. மெக்சிகோ, கனடா, அமெரிக்கா மற்றும் கிரீன்லாந்து ஆகியவை இன்னும் நேரடி இராணுவ மோதலில் ஈடுபடவில்லை என்றாலும், அவை பொருளாதார மற்றும் அரசியல் மோதல்களின் பெரும் தீவிரமடைதலைக் கண்டு வருகின்றன; இம்மோதல்கள் போராக வெடிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளன.
53. எனவே, மூன்றாவது உலகப் போர் என்பது எதிர்காலத்தைப் பற்றிய ஒரு யூகம் அல்ல. அது தற்போதைய நிகழ்வுகளின் விவரிப்பாகும். போருக்கு எதிரான போராட்டம் வரும் தசாப்தத்தின் மையத்தில் நிற்கும் என்ற 2020 ஆம் ஆண்டின் அறிக்கையின் எச்சரிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் போர் என்பது ஆரோக்கியமான அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது திணிக்கப்பட்ட ஒரு அசாதாரண நிலை அல்ல. அது பொருளாதாரத்தின் சொந்த முரண்பாடுகளின் அரசியல் விளைவாகும். 2020 ஆம் ஆண்டின் அறிக்கை இந்த வீழ்ச்சிக்கான புறநிலை குறியீடுகளைச் சுட்டிக்காட்டியது. ஆறரை ஆண்டுகளுக்குப் பிறகு, ஒவ்வொரு குறியீடும் பன்மடங்கு மோசமடைந்துள்ளது.
தொடரும்…
