இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
அடிபணியா பிரான்ஸ் (La France Insoumise, LFI) கட்சியின் கோடைப் பள்ளியில், உருவாகிவரும் 2027 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் குறித்து ஜோன்-லுக் மெலோன்சோன் ஒரு குறிப்பிடத்தக்க எச்சரிக்கையை விடுத்தார். இது தமக்கும் நவ-பாசிச தேசிய பேரணிக்கும் (Rassemblement National, RN) இடையிலான ஒரு போட்டியாக அமைய வாய்ப்புள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர் இவ்வாறு கூறினார்: “பிரான்ஸ் முட்டுச்சந்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், ஒவ்வொரு மனசாட்சியிலும், ஒரு தனிப்பட்ட தேர்வு வரலாற்றை உருவாக்கும். எந்தக் கொள்கை மேலோங்கும்: தனிமனிதவாதமா அல்லது அனைவரும் ஒன்றாகவா, இன மேலாதிக்கவாதமா அல்லது கூட்டுவாதமா?”
பிரெஞ்சு முதலாளித்துவ தன்னலக்குழுவின் பெரும் பிரிவுகள் ஒரு தீவிர வலதுசாரி சர்வாதிகாரத்தை நிறுவ இலக்கு வைத்துள்ளன என்பதை வலியுறுத்திய மெலோன்சோன், இந்த நிலைமையை 1930களுடன் ஒப்பிட்டார். 1936 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்திற்குப் பிறகு ஆளும் வர்க்கத்தைப் பற்றிக்கொண்ட நாஜி-சார்பு வெறித்தனத்தை அவர் சுட்டிக்காட்டினார்; அது மக்கள் முன்னணி (Popular Front) அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்ததோடு, 1940 இல் நாஜி ஆக்கிரமிப்புடனான ஒத்துழைப்புக்கு அடித்தளமிட்டது:
குடியரசு தீப்பற்றி எரிந்து சிதைந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஆதிக்கம் செலுத்துபவர்கள் உங்களுக்கு முன்மொழிவதற்கு வேறு ஆவேசங்களைக் கொண்டுள்ளனர். வலதுசாரியும் மையக் கட்சிகளும் தேசிய பேரணியுடன் இணைந்த ஒரே கருத்தியல் அணியாக மாறும் மாபெரும் மாற்றத்தை நாம் காண்கிறோம். அவர்கள் ஏற்கெனவே அங்கே இருக்கிறார்கள், அனைவரும் அணிவகுத்து நிற்கிறார்கள்… நாம் வெற்றியை நோக்கி முன்னேறுவதைக் கண்டு, “மக்கள் முன்னணியை விட ஹிட்லரே மேல்” என்று ஏற்கெனவே சொல்லத் தொடங்கிவிட்டவர்கள்.
இன்றைய முதலாளித்துவ வர்க்கத்தின் கண்ணோட்டத்திற்கும், 90 ஆண்டுகளுக்கு முன் அது காட்டிய பிற்போக்குத் துரோகத்திற்கும் இடையிலான ஒப்பீடு மிகைப்படுத்தப்பட்டதல்ல. சாதகமான ஊடகச் செய்திப்பரப்பால் உந்தப்பட்டு, RN ஒவ்வொரு கருத்துக் கணிப்பிலும் முன்னிலை வகிக்கிறது. உக்ரேன் முதல் ஈரான் வரையிலும், சாஹெலில் பிரான்ஸ் நடத்தும் போர்கள் வரையிலும், ஒரு புதிய உலகப் போர் வெடித்துக் கொண்டிருக்கிறது. தாங்க முடியாத அளவிலான கடனை எதிர்கொள்ளும் பிரான்சும் ஐரோப்பாவின் அனைத்து முக்கிய நாடுகளும், பத்துக் கணக்கான அல்லது நூற்றுக் கணக்கான பில்லியன்களைப் போருக்குச் செலவழிக்கும் அதே வேளையில், மக்கள்தொகையின் மிகப் பெரும் பெரும்பான்மையினரால் நிராகரிக்கப்பட்ட சிக்கனக் கொள்கைகளைத் திணிக்கின்றன.
ஆனால், இன்றைய முதலாளித்துவ வர்க்கத்திற்கும் நாஜி ஒத்துழைப்புக் காலத்திய முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையிலான இந்த ஒப்பீடு, நவ-பாசிச சர்வாதிகாரம், சிக்கனம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தை, முதலாளித்துவ-சார்பு அரசியல்வாதியான மெலோன்சோனிடம் தொழிலாளர்கள் ஏன் ஒப்படைக்க முடியாது என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது.
90 ஆண்டுகளுக்கு முந்தைய பிரான்சின் அனுபவம் எதைக் காட்டுகிறது? தொழிலாள வர்க்கத்தின் எதிரி உள்நாட்டிலேயே இருக்கிறது; தேர்தல் சூழ்ச்சிகளால் அதைத் தோற்கடிக்க முடியாது. ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை முறையாக அணிதிரட்டுவதற்குப் போராடுவதற்கான ஒரு களமே தேர்தல்கள். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி, வர்க்கப் போராட்டத்தின் முழுமையான, தடையற்ற வளர்ச்சிதான்; அதன் வழியாக, ஒரு சோசலிசப் புரட்சி மூலம், அதிகாரத்தையும் பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டையும் ஆளும் வர்க்கத்தின் கைகளிலிருந்து பறித்தெடுக்கத் தொழிலாளர்கள் போராட முடியும்.
1936 இல், முதலாளித்துவ ரேடிக்கல் (Radical), சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச கட்சிகளால் ஆதரிக்கப்பட்ட ஒரு மக்கள் முன்னணி அரசாங்கத்தை பிரான்ஸ் தேர்ந்தெடுத்தது; சிறிது காலத்திற்குப் பிறகு, 1936 பொது வேலைநிறுத்தம் வெடித்தது. ஆனால் வேலைக்குத் திரும்புவதைத் திணிக்க முதலாளித்துவ வர்க்கம் ஸ்ராலினிஸ்டுகளின் சேவைகளைப் பயன்படுத்தி, மத்தினியோன் ஒப்பந்தங்களில் (Matignon Accords) தொழிலாளர்களுக்குச் சமூக சலுகைகளை வழங்கியது. பின்னர், பணவீக்கம் மற்றும் அரசுக் கடனுக்கு எதிரான ஊகவணிகத்தின் மூலம் இந்தச் சலுகைகளைத் திரும்பப் பெற்றது; இறுதியாக, 1940-இல் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தின் ஆதரவுடன் மார்ஷல் பெத்தேன் (Marshal Pétain) நாஜி படையெடுப்புக்குச் சரணடைவதைத் திணித்த பிறகு, அவற்றை முற்றிலுமாக நிராகரித்தது.
1940 ஆம் ஆண்டு முதலாளித்துவ வர்க்கத்தின் வாரிசுகளை எதிர்கொள்ளும் மெலோன்சோன் எதை முன்மொழிகிறார்? வர்க்கப் போராட்டத்தை அணிதிரட்டுவதற்கோ அல்லது முதலாளித்துவத்தைக் கவிழ்க்கும் ஒரு சமூகப் புரட்சியின் வழியாகச் சமூகத்தை மாற்றியமைப்பதற்கோ அவர் அழைப்பு விடுக்கவில்லை. தனது மார்க்சிய-எதிர்ப்பு ஜனரஞ்சகவாதத்தின் அடிப்படையில், பிராந்திய மட்டத்தில் சூழலியல் திட்டமிடலை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஐந்தாம் குடியரசிலிருந்து ஆறாம் குடியரசுக்கு மாறி, பிரெஞ்சு முதலாளித்துவ அரசை அரசியலமைப்பு ரீதியாக மறுநிறுவுவதை நோக்கிய ஒரு தேர்தல் பிரச்சாரத்தை அவர் முன்மொழிந்தார்:
LFI முன்மொழியும் குடிமக்கள் புரட்சி என்பது ஒரு கலாச்சாரப் புரட்சி ஆகும்; அதாவது, சமூகம் கொண்டிருக்கும் குறிப்புச் சட்டகங்களில் ஒரு உறுதியான மாற்றம். அதனால்தான், சூழல்-பிராந்தியங்கள் பற்றிய எங்கள் முன்மொழிவு எங்கள் ஆறாம் குடியரசுக்கான ஒரு மையத் திட்டமாக உள்ளது. பயனுள்ள சூழலியல் திட்டமிடலைச் செய்வதற்காக, நகராட்சி நிர்வாகங்களுடன் இணைந்து ஒருங்கிணைக்கப்படும், தரைமட்டத்திற்கு மிக அருகிலான அடித்தளமே சூழல்-பிராந்தியம் ஆகும்.
முதலாளித்துவ அரசின் இந்த மறுநிறுவுதல் அதை ஜனநாயகப்படுத்தும் என்றும், வரவு-செலவுத் திட்டம் (பட்ஜெட்) மற்றும் கடன் நெருக்கடிகளுக்கு முதலாளித்துவ வர்க்கம் பதிலளிக்கும் வழியாக இருக்கும் சிக்கன நடவடிக்கைகளை நிறுத்தும் என்றும் மெலோன்சோன் வலியுறுத்தினார். அவர் மேலும் கூறினார்: “நாங்கள்தான் தீவிரமான, பொறுப்பான மக்கள்.… நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பொது நிதிநிலையை மீண்டும் ஒழுங்குக்குக் கொண்டு வருவோம் என்று உறுதியளிக்கிறோம்; ஏனெனில் அதைச் செய்யக்கூடியவர்கள் நாங்கள்தான் — வரி செலுத்தாத பல்லாயிரக்கணக்கான பெரும் செல்வங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் மீது இறுதியாக வரி விதிப்பதன் மூலம்.”
முதலாளித்துவ ஏகபோக நிறுவனங்கள் மற்றும் பெரும் செல்வங்களைப் பறிமுதல் செய்யக் கோருவதைத் தவிர்க்கும் இந்தக் கொள்கை, நவ-பாசிசம் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில் ஒரு அரசியல் முட்டுச்சந்தாகும்.
1936-1940 பேரழிவின் ஒரு மறக்க முடியாத பாடம் ஏதேனும் இருக்குமானால், அது இதுதான்: முதலாளித்துவ அரசைப் பயன்படுத்தி தொழிலாளர்களால் தன்னலக்குழுவின் செல்வத்தைக் கைப்பற்ற முடியாது. வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பை எதிர்கொள்ளும்போது முதலாளித்துவ வர்க்கம் தற்காலிகமாகப் பின்வாங்கினாலும் கூட, அது பின்னர் இன்னும் அதிக வன்முறையான, அவநம்பிக்கையான கொள்கையுடன் திரும்பி வருகிறது. தனது செல்வத்தைப் பாதுகாப்பதற்காக, மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகள் முதல், தேசத்தின் “புனித கௌரவம்” பற்றிய அதன் அழைப்புகள் வரை, அனைத்தையும் காலடியில் மிதிக்க அது தயாராக உள்ளது.
இதனால்தான் 1940 இல் மக்கள் முன்னணியின் சீர்திருத்தங்களை விட ஹிட்லரை பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் விரும்பியது; இதனால்தான் இன்று அது அதிகரித்து வரும் அளவில் RN-க்குப் பின்னால் அணிவகுத்து நிற்கிறது.
ஆறாம் குடியரசு மற்றும் சூழலியல் திட்டமிடல் குறித்த மெலோன்சோனின் தேய்ந்துபோன முன்மொழிவுகள், இத்தகைய ஒரு நெருக்கடியைக் கையாள்வதற்குப் போதுமானவை அல்ல. தற்போதைய ஒழுங்குமுறையின் ஆழமடைந்து வரும் நெருக்கடியைத் தனது சொந்தப் பாணியில் எடுத்துரைக்க முடியும் என்பதால், மெலோன்சோன் ஒரு தொழிலாள வர்க்க வாக்காளர் தளத்தைத் தக்கவைத்துக் கொள்கிறார். இவ்வாறாக, தனது கோடைப் பள்ளியில் அவர் கூறினார்:
20 ஆம் நூற்றாண்டின் பெரும் வல்லரசுகள் தங்களைத் தாங்களே தோற்கடித்துக் கொண்டன. ட்ரம்பும் நெதன்யாகுவும் ஈரானால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். புட்டின் உக்ரேனில் சிக்கித் தவிக்கிறார். உலகம் முழுவதும் புவிசார் அரசியல் சமநிலைகளும் கூட்டணிகளும் சிதைந்து கொண்டிருக்கின்றன. … செயற்கை நுண்ணறிவு (AI) குமிழி மற்றும் அமெரிக்க டாலரின் நிலைமை காரணமாக, 2008 ஐ விட இன்னும் தீவிரமான ஒரு உலகளாவிய நிதி நெருக்கடியின் அச்சுறுத்தலையும் இந்த ஒட்டுமொத்த சித்திரத்துடன் நான் சேர்ப்பேன்.
ஆனால் இந்த நிலைமைக்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர எதிர்த்தாக்குதல் தேவைப்படுகிறது. போருக்கு எதிராகத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டவோ, உக்ரேனில் நடக்கும் போருக்கான இராணுவச் செலவின் வெடிப்பையும் ஐரோப்பாவின் இராணுவமயமாக்கலையும் நிறுத்தவோ, RN-ஐ அம்பலப்படுத்தவோ மெலோன்சோன் அழைப்பு விடுக்கவில்லை. முதலாளித்துவத்திற்கு எதிரான இடதுசாரி எதிர்ப்பை நோக்கி அவர்களை மீண்டும் வென்றெடுக்கப் போராடுவதற்காக, RN தலைவர் ஜோர்டன் பர்தெல்லாவின் €100 பில்லியன் சிக்கனத் திட்டம் குறித்து மெலோன்சோன் தொழிலாள வர்க்க RN வாக்காளர்களை எச்சரிக்கவில்லை. இது அவரது சூழல்-பிராந்திய திட்டமிடல் பிரச்சாரத்தின் தேர்தல் கணக்கீடுகளில் இடம்பெறவில்லை. ஆனால் இது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு வாழ்வா சாவா என்ற கேள்வியாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, சர்வதேச வர்க்கப் போராட்டத்திலிருந்து தொழிலாளர்களின் கவனத்தை மெலோன்சோன் திசைதிருப்புகிறார். ஈரானில் ட்ரம்ப் அடைந்த அவமானகரமான பின்னடைவும், ட்ரம்புக்கு எதிரான “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்களில் மில்லியன் கணக்கான அமெரிக்க இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் வெகுஜன அணிதிரட்டலும், வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய சகாப்தம் தொடங்கிவிட்டது என்பதன் அறிகுறிகளாகும். ஆனால் முற்றிலும் தேசிய, தேர்தல் மூலோபாயத்தால் கட்டுண்டு கிடந்தால், தொழிலாளர்களாலும் இளைஞர்களாலும் போரைத் தடுத்து நிறுத்த முடியாது.
சாமானிய தொழிலாளர் மட்டத்தில், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) கட்டியெழுப்பி, தொழிலாளர்கள் சுயாதீனமாக அணிதிரள வேண்டும். மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான 2023 வெகுஜன வேலைநிறுத்தங்களை தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் முடக்கியதிலிருந்து பெறப்படும் பாடம் இதுவே ஆகும்; இந்த வேலைநிறுத்தங்கள் ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் வேலைநிறுத்த அலைக்கு மத்தியில் நிகழ்ந்தன.
அப்போது மெலோன்சோன், ஒரு பொது வேலைநிறுத்தத்தின் சாத்தியக்கூறை ஒரு உரையில் ஒருமுறை மட்டும் எழுப்பியதோடு தன்னை மட்டுப்படுத்திக் கொண்டார். மக்ரோனுக்கு எதிராக வெடித்த வெகுஜன போராட்டங்களால் திகிலடைந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், தமது பங்குக்கு, மக்ரோனின் முறைகேடான வெட்டுக்கள் நிறைவேற்றப்பட்டவுடனேயே அந்த இயக்கத்தை முடக்கிவிட்டன. ஐரோப்பா முழுவதிலும் உள்ள பிரெஞ்சு தொழிலாளர்களின் வர்க்க சகோதர சகோதரிகளுக்கும், ஐரோப்பாவின் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்திற்கும் முதுகு காட்டிய மெலோன்சோன், தொழிற்சங்கக் காட்டிக்கொடுப்புடன் தன்னைத் தகவமைத்துக் கொண்டார்.
ஆனால் தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்து சுயாதீனமாக ஒரு புரட்சிகர முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் போராடும் திறன் பெற வேண்டுமானால், அத்தகைய ஒரு முன்னோக்கின் பாதுகாவலர்கள் முதலில் ஒன்றுதிரள வேண்டும். LFI இன் முதலாளித்துவ-சார்பு முன்னோக்கின் அடிப்படையில் இதைச் செய்ய முடியாது. இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய ஆண்டுகளில் ட்ரொட்ஸ்கி விடுத்த எச்சரிக்கையைப் பின்பற்றி, சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste) தனக்குத்தானே விதித்துக்கொள்ளும் பணி இதுவேயாகும்:
பிரான்சின் நிலைமையைக் காப்பாற்றக்கூடியது, நிலைமையைத் தெளிவாகப் புரிந்துகொண்ட, முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ பொதுக் கருத்தின் (”சோசலிச”, “கம்யூனிச”, “அராஜக-தொழிற்சங்கவாத” முதலியவற்றின்) செல்வாக்கிலிருந்து முற்றிலும் விடுபட்ட, இறுதிவரை செல்லத் தயாராக உள்ள, சில ஆயிரம் பேர் கொண்ட ஒரு உண்மையான புரட்சிகர முன்னணிப் படையை உருவாக்குவதே ஆகும். அத்தகைய ஒரு முன்னணிப்படைக்கு, வெகுஜனங்களைச் சென்றடையும் வழியை எவ்வாறு கண்டறிவது என்பது தெரியும்.
