இலங்கையின் முன்னணி தமிழ் பத்திரிகை போக்டன் சிரோட்டியுக்கின் விடுதலையை கோரி கட்டுரை வெளியிட்டுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

செப்ரம்பர் 6 அன்று வட இலங்கைளில் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட பிரதான தமிழ்ப் பத்திரிகையான உதயன் பத்திரிகை உக்ரேனிய சோசலிசவாதியான போக்டன் சிரோட்டியுக்கின் விடுதலைக்கான சர்வதேச பிரச்சாரத்திற்கு ஆதரவளித்து இரண்டு பக்க நீண்ட கட்டுரையை வெளியிட்டுள்ளது.

உக்ரேனிய சோசலிசவாதியான போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்யும் பிரச்சாரத்திற்கு ஆதரவாக உதையன் இதழில் வெளியான சிறப்புக் கட்டுரை, செப்டம்பர் 6, 2026. [Photo: Uthayan]

ஓகஸ்ட் 10 அன்று, பெவோமைஸ்க்கில் உள்ள ஒரு நீதிமன்றம் 27 வயதான சோசலிசவாதியும் போல்ஷிவிக்-லெனினிஸ்ட் இளம் காவலர் அமைப்பின் தலைவருமான போக்டனுக்கு இராணுவச் சட்டத்தின் கீழ் ”அதி உச்ச தேசத்துரோக குற்றச்சாட்டில் 15 ஆண்டு கால சிறைச் தண்டணை விதித்துள்ளது. ரஷ்யா உடனான அமெரிக்க-நேட்டோ பினாமிப் போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரேனிய மற்றும் ரஷ்யத் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக அழைப்புவிடுத்து உலக சோசலிச வலைத் தளத்தில் கட்டுரை எழுதியமையே அவரின் ”குற்றம்” ஆகும்.

இணையவழி கையெழுத்து மனு ஒன்றையும் உள்ளடக்கிய, போக்டனை உடனடியாக விடுதலை செய்யக் கோரும் பிரச்சாரத்திற்கு, உலகம் முழுவதிலுமிருந்து தொழிலாளர்கள், புத்திஜீவிகள், கல்வியாளர்கள், இளைஞர்கள் மற்றும் பிறரிடமிருந்து பரவலான ஆதரவு கிடைத்துள்ளது. இலங்கையில், தொழிலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள், உக்ரைனில் உள்ள பாசிச செலென்ஸ்கி ஆட்சிக்கு எதிராகத் தங்கள் ஆதரவையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

கொழும்பை தளமாகக் கொண்ட பெரும்பாலான முதலாளித்துவ ஊடகங்கள், போக்டன் மீதான துன்புறுத்தல்களைப் பற்றி செய்தி வெளியிடுமாறு உலக சோசலிச வலைத் தளம் விடுத்த அழைப்புகளை முற்றிலுமாகப் புறக்கணித்து மௌனம் காத்து வருகின்றன. போக்டனின் விடுதலைக்கான பிரச்சாரத்தின் போது, ​​யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்களை பொலிஸ் துன்புறுத்தியுள்ளது — இது, சிறையில் உள்ள அந்த சோசலிசவாதிக்கு மாணவர்கள் மத்தியில் கிடைக்கும் ஆதரவு குறித்து ஆளும் வர்க்கத்தினர் கொண்டிருக்கும் பதற்றத்தின் அறிகுறியாகும்.

உதயன் இதழில் ஞாயிற்றுக்கிழமை வெளியான கட்டுரையின் தலைப்பு, “போர் எதிர்ப்புக் குரலுக்குப் புதைக்கபடும் நீதி!” என்பதாகும். போக்டனின் குற்றத்தீர்ப்பு மற்றும் தண்டனைத் தீர்ப்பு குறித்த WSWS இன் செய்திகளின் அடிப்படையில் அமைந்த அந்தக் கட்டுரை, அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரும் பிரச்சாரத்தில் உள்ள அடிப்படைக் பிரச்சினைகளை முன்வைத்ததுடன், போக்டனின் வண்ணப் புகைப்படங்களையும் உள்ளடக்கியிருந்தது.

1980களின் நடுப்பகுதியில், போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்ட உதயன், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கொழும்பு நடத்திய பல தசாப்த கால இனவாதப் போரின் போது, ​​மிகவும் கடினமான சூழ்நிலைகளில் இயங்கியது. ஏனைய யாழ்ப்பாணச் செய்தித்தாள்கள் வெளியீட்டை நிறுத்த நிர்பந்திக்கப்பட்ட போதிலும் அல்லது ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்த போதிலும், இது தொடர்ந்து வெளியானது.

உதயனின் அலுவலகம் 1987இல் குண்டுவீச்சுக்கு உள்ளானது மற்றும் 1990இல் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளானது. 1995-96 இராணுவ நடவடிக்கைகளின் போதும் அது தொடர்ந்து பிரசுரித்து வந்தது. 1999இல், அது ஒரு கையெறி குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானதுடன் 2000 ஆண்டில், அரசாங்கம் அவசரகால விதிமுறைகளின் கீழ் அந்தப் பத்திரிகையைத் தற்காலிகமாக மூடியது. 2006இல், ஆயுததாரிகளால் இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டனர்; 2009இல் விநியோகஸ்தர்கள் தாக்கப்பட்டதுடன் பத்திரிகைகள் எரிக்கப்பட்டன. அதே ஆண்டில், பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாத்ததற்காக அந்தப் பத்திரிகை சேபால குணசேகர விருதைப் பெற்றது.

WSWS ஆல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, சிறிதளவு திருத்தங்கள் செய்யப்பட்ட கட்டுரையின் முழு உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

****

போரெதிர்ப்புக் குரலுக்குப் புதைக்கப்படும் நீதி!

2024 ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி… உக்ரைனின் தெற்குப் பகுதியில் அமைதியற்ற அமைதியுடன் பொழுது விடிந்துகொண்டிருந்தது. போல்ஷிவிக்-லெனிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் “முன்னணி உறுப்பினரும். 27 வயதேயான சோசலிசப் போராளியுமான போக்டன் சிரோட்டியுக் வழக்கம் போலத் தனது அன்றாட அரசியல் மற்றும் எழுத்துப்பணிகளில் ஈடுபட்டிருந்தார். ஆனால், அன்றையநாள் தனது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றப்போகும் ஒரு நாளாக அமையும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

உக்ரேனின் பாதுகாப்புச் சேவையான எஸ்.பி.யு. (Security Service of Ukraine SBU) அதிகாரிகளின் படையொன்று போக்டனின் இருப்பிடத்தைச் சூழ்ந்தது. எவ்வித முன்னறிவிப்புமின்றி, எவ்வித முறையான தகுந்த ஆதாரங்களுமின்றி போக்டன் கைது செய்யப் பட்டார். “இராணுவச் சட்டத்தின் கீழ்... நாட்டின் மீது கடு மையான தேசத் துரோகம் புரிந்தார்” என்றும், ரஷ்ய அரசாங்கத்தின் முகவராகச் செயற்பட்டு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சதி செய்தார் என்றும் அரசுத்தரப்பு அவர் மீது மிகக் கொடூரமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது. ஆனால் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும், அந்த அவதூறான குற்றச்சாட்டுக்கு அரசாங்கத்தால் எவ்வித ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் முன்வைக்க முடியாமல் போனது என்பதுதான் வேதனையான உண்மை!

ஓகஸ்ட் 10 தீர்ப்பு: கருத்துச் சுதந்திரத்தின் மீதான கொடூரத் தாக்குதல்

நீண்ட விசாரணை நாடகங்களுக்குப் பிறகு. 2026 ஒகஸ்ட் 10 அன்று, நிக்கோலாயேவ் பிராந்தியத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம் தனது அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பை வழங்கியது. 27 வயதான போக்டன் சிரோட்டியுக்கிற்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது

அத்துடன் தீர்ப்பு நின்றுவிடவில்லை. போக்டனின் சொத்துக்கள் மற்றும் மின்னணுச் சாதனங்களைப் பறிமுதல் செய்யவும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சோசலிசப் புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள். மார்க்சிய அமைப்பின் கையேடுகள் மற்றும் வேலைத்திட்ட ஆவணங்களை முற்றாகக் கொளுத்தி அழிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. எதிர்ப்பாளர்களைச் சிறை யிலடைப்பது. அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது. அவர்களின் சிந்தனைகளையும் எழுத்துக்களையும் கொளுத்தி அழிப்பது என்பவை வரலாற்றில் பாசிச ஆட்சிகள் மட்டுமே செய்த கறைபடிந்த வழிமுறைகளாகும். இன்று ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகக் கூறும் உக்ரேனிய அரசு, அதே பாசிச வழிமுறையைக் கையில் எடுத்துள்ளது என்பதை இந்தத் தீர்ப்பு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அதுமட்டுமன்றி, போக்டனைத் தண்டிப்பதற்காக உக்ரேன் அரசு நியமித்த தடயவியல் ஆய்வுகளுக்கான செலவுகளுக்காக 178,000 ஹிரைவ்னியாவுக்கும் (உக்ரேன் பணம்) அதிகமான தொகையை போக்டனே செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசத்துரோகப் பட்டியலில் இடம்பெற்ற ஆபத்தான எழுத்துக்கள்!

போக்டன் சிரோட்டியுக் மீது சுமத்தப்பட்ட தேசத் துரோக வழக்கின் பதிவுகளைப் புரட்டிப் பார்த்தால். அங்கே ஏந்தவொரு இராணுவச் சதியோ. உளவு வேலையோ, நாசவேலையோ அல்லது எதிரி நாட்டு இராணுவப் படையுடன் அவர் மேற்கொண்ட கூட்டுச் செயற்பாடோ இடம்பெறவில்லை என்பது புலனாகும். அவருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட ஒரே ஆதாரம் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான அவரது கட்டுரைகளும், அவற்றை வெளியிட்ட சர்வதேச ஆசிரியர்களுடன் அவர் மேற்கொண்ட மின்னஞ்சல் தொடர்புகளும் மட்டுமே

அரசின் தடயவியல் நிபுணர்கள் போக்டன் எழுதிய 14 கட்டுரைகளை ஆய்வு செய்து. அவற்றில் 7 கட்டுரைகளைக் குற்றப் பத்திரிகையில் சேர்த்தனர். ஆனால் வேடிக்கை என்னவென்றால், அந்த 7 கட்டுரைகளில் ஒன்றைமட்டும் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதுதான். இராணுவப்பணிக்கு ஆட்சேர்ப்பவர்கள், போருக்குச் செல்லாமல் தப்பிச் செல்பவர்களை வன்முறையாகப் பிடித்துச் செல்வது பற்றி போக்டன் எழுதியிருந்த அந்த ஒரு கட்டுரையில் குற்றவியல் சார்ந்த எதுவும் இல்லை என்பதை அரசின் சொந்தத் தடயவியல் ஆணையகமே ஒப்புக்கொண்டது

இறுதியில் எஞ்சிய 6 கட்டுரைகளுக்காகவே போக்டனுக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றக் குற்றப்பத்திரிகையின்படி போக்டனின் கட்டுரைகளில் இடம்பெற்றிருந்த பெரும் குற்றங்கள் இவை:

  • உக்ரேனின் சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமை மற்றும் ஜனநாயக செயல்முறைகளை அங்கீகரிக்கத் தவறியமை-அரசின் கொள்கைகளையும் வரலாற்றுப் புள்ளிகளையும் பாசிஸ்டுகள் மற்றும் நாஜிக்களுடன் ஒப்பீடு செய்து எழுதியமை
  • உக்ரேனின் ஆயுதப் படைகள் பற்றிய எதிர்மறையான மதிப்பீடுகளைப் பரப்பியமை
  • தேசிய நாயகர்கள் மற்றும் வரலாற்றுப் புள்ளிவிவரங்களைத் தவறாகச் சித்திரித்தமை

செலென்ஸ்கியின் சட்டப்பூர்வத் தன்மையும் போலி ஜனநாயகமும்

நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிடும் “சட்ட பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட” அரசியல் தலைமை யார்? மே 2024ல் தனது அதிகாரபூர்வப் பதவிக்காலம் முடிவடைந்த ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கிதான் அவர்!

செலென்ஸ்கி, தனது சட்டபூர்வமான பதவிக்காலம் முடிந்த பின்னரும், நிரந்தர இராணுவச் சட்டத்தின் கீழ் கட்டளைகளைப் பிறப்பித்து ஆட்சி நடத்தி வருகிறார். நாட்டில் அனைத்துத் தேர்தல்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன: எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன: கருத்துச் சுதந்திரம் மற்றும் கூட்டங்களை கூட்டும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எந்தவொரு ஜனநாயக நடைமுறைகளுமே இல்லாத ஒரு நாட்டில். “ஜனநாயக நடைமுறைகளை அங்கீகரிக்கத் தவறினார்” என்று கூறி போக்டனுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பது உலகளாவிய சட்ட வரலாற்றிலேயே மிகப்பெரிய நகைமுரணாகும். உண்மையில், சட்ட பூர்வமான தன்மையை இழந்த ஒரு சர்வாதிகார ஆட்சியால், தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள வழங்கப்பட்ட தீர்ப்பே இதுவாகும்.

போக்டன் அம்பலப்படுத்திய உண்மை

போக்டன் “தவறாகச் சித்திரித்தார்” என்று உக்ரைனிய நீதிமன்றம் கூறும் “தேசிய வீரர்கள்” யார் தெரியுமா? இரண்டாம் உலகப் போரின்போது ஸ்டீபன் பண்டேரா (Stepan Bandera) தலைமையிலான உக்ரேனிய தேசியவாதிகளின் O.U.N. அமைப்பும், நாஜிக்களின் வாபென் எஸ்.எஸ் கலீசியா படைப் பிரிவின் தலைவர் களும் தான் அந்தத் தேசிய வீரர்கள். 1941இல், சோவியத் யூனியன் மீதான அடால்ஃப் ஹிட்லரின் கொடூரமான படையெடுப்பை உத்வேகத்துடன் ஆதரித்த இந்த நாஜிக் கூட்டாளிகள், பல்லாயிரக்கணக்கான யூதர்கள், போலந்து மக்கள் மற்றும் சோவியத் பொதுமக்களைப் படுகொலை செய்த இனப்படுகொலைக் குற்றவாளிகள் ஆவர். இன்று உக்ரேனிய அரசு, இந்த நாஜிப் படைகளையும் அதன் தலைவர்களையும் “தேசிய நாயகர்களாக” மாற்றி, அவர்களுக்குச் சிலைகள் அமைத்து உத்தியோகபூர்வமாகக் கொண்டாடி வருகிறது. போக்டன் எழுதிய “உக்ரைனிய மக்களுக்கு எதிரான பண்டேரவாதிகளின் குற்றங்கள்: ஒரு உக்ரைனிய ட்ரொட்ஸ்கிசவாதியின் குறிப்புகள்” என்ற கட்டுரையும், அவரது 2023 மே தின உரையான “ரஷ்யா மற்றும் உக்ரேனின் தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியத்துக்காக!' என்ற எழுத்துக்களும், அரசு செய்துவரும் இந்த நாஜிப் புனரமைப்பைப் படம் பிடித்துக் காட்டின. ஜனநாயக உரிமைகள் சிறிதளவேனும் மதிக்கப்படும் எந்தவொரு நாகரீக நாட்டிலும், இத்தகைய வரலாற்று ஆய்வு எழுத்துக்கள் பாதுகாக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தின்கீழ் வரும். ஆனால், ஷெலன்ஸ்கி ஆட்சியில் இதற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.

போருக்கு எதிரான எதிர்ப்பு வளர்ச்சியடைதல்

போக்டனின் கட்டுரைகளால் “சமூக ரீதியான ஆபத்தான விளைவுகள் ஏற்படும்” என்று தீர்ப்பில் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து ஒரு உண்மை மிகத் தெளிவாகிறது: இந்த வழக்கு போக்டன் மீதான ரஷ்ய ஆதரவு பற்றியது அல்ல; மாறாக, உக்ரைனிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே போருக்கு எதிராகப் பெருக்கெடுத்து வரும் மக்கள் எதிர்ப்பை நசுக்குவதையே இந்த வழக்கு பிரதான இலக் காகக்கொண்டுள்ளது. உக்ரேனுக்குள்ளேயே நேட்டோ ஆதரவுப் போருக்கு எதிரான எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

2022 முதல் இராணுவத்திலிருந்து தப்பியோடியதற்காக அல்லது அனுமதியின்றி தலைமறைவானதற்காகப் படையினருக்கு எதிராக 300,000க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகள் உக்ரேனில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2025ஆம் ஆண்டில், சர்வதேச கேலப் (Gallup) நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், 69 சதவீத உக்ரேனிய மக்கள் பேச்சுவார்த்தை மூலம் போருக்கு உடனடியாக முடிவு காணவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். தனது சொந்த மக்களிடமிருந்தே ஆதரவை இழந்து நிற்கும் செலென்ஸ்கி அரசாங்கம், இந்த மக்கள் எதிர்ப் பைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது. அதனாலேயே, போக்டன் போன்றோரை பலிக்கடா ஆக்கி, பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த முயல்கிறது.

சிறைச்சாலை எனும் மரணக் கூண்டு: ஆபத்தில் போக்டனின் உயிர்!

உக்ரேனிய சிறையில் 15 ஆண்டுகள் தண்டனை என்பது வெறும் சிறைவாசம் அல்ல; அது ஒரு மறைமுக மரண தண்டனைக்குச் சமமானதாகும். உக்ரேனின் சிறைச்சாலைகளின் கொடூரமான நிலைமைகள் உலகளவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

2025 ஏப்ரல் மாதம், ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைக்கு எதிரான குழு வெளியிட்ட அறிக்கையில், உக்ரேனிய சிறைகளில் நிலவும் கடுமையான இடநெருக்கடி, சுகாதாரமற்ற உணவு மற்றும் குடிநீர்ப் பற்றாக்குறை, சுயாதீன மருத்துவப் பரிசோதனைகள் மறுக்கப்படுதல் மற்றும் காவலில் கைதிகள் உயிரிழப்பது அதிகரிப்பது குறித்து மிகக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்திருந்தது. அதேபோல, ஐரோப்பிய கவுன்சிலின் சித்திரவதைக்கு எதிரான குழு உக்ரேனிய விசாரணைச் சிறைகளின் நிலைமை “மனிதத்தன்மையற்றது மற்றும் அவமானகரமானது” என மதிப்பிட்டிருந்தது. கைதுசெய்யப்பட்டபோதே தீவிர உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போக்டனுக்கு, அவசரமாகத் தேவைப்படும் மருத்துவச் சிகிச்சைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருகின்றன.

சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் கழியும் ஒவ்வொரு நொடியும் அவரது உயிருக்கு ஆபத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறது.

நிபுணர் அறிக்கையைப் புறக்கணித்த நீதிமன்றம்

போக்டனைத் தற்காப்பதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட வலுவான ஆதாரங்களை நீதிமன்றம் முற்றாகத் தூக்கி எறிந்தது. உக்ரேனின் முன்னணி குற்றவியல் மற்றும் மொழிவள வல்லுநர்களில் ஒருவரான யூரி இர்கின் தயாரித்த 65 பக்க விரிவான அறிக்கையில்: 'போக்டனின் எழுத்துக்களில் ரஷ்யக் கூட்டமைப்பின் ஆயுத மேந்திய ஆக்கிரமிப்பை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு கூற்றுகளோ, சொற்றொடர்களோ, வாக்கியங்களோ அல்லது வார்த்தைச் சேர்க்கைகளோ இல்லை' என்று தெளிவாகக் கண்டறியப்பட்டது.

இந்தப் புறநிலையான அறிக்கைக்குப் பதிலளிக்க முடியாத நீதிமன்றம். அரசு சார்ந்த வேறொரு தடயவியல் நிறுவனத்திடமிருந்து புதிய ஆய்வு அறிக்கையைக் கோரியது. ஆனால், அந்த அரசு நிறுவனம் கூட, போக்டனின் கட்டுரைகளில் அரசை வீழ்த்துவதற்கோ, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கோ அல்லது நாசகார வேலைகளுக்கோ எவ்வித அழைப்பும் இல்லை என்றே ஒப்புக்கொண்டது. ஆயினும், சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தின் பிரிவு 10ன் கீழ் பாதுகாக்கப்பட்ட போக்டனின் அரசியல் பேச்சை உக்ரேனிய நீதிமன்றம் சட்டவிரோதமாக “தேசத்துரோகம்” என அறிவித்துத் தண்டித்துள்ளது.

உலகளாவிய போராட்டத்திற்கான அழைப்பு!

போக்டன் சிரோட்டியுக் மீதான இந்த அநீதியான தீர்ப்பை எதிர்த்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யப்படவுள்ளது. உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் இந்தச் சட்டப் போராட்டத்துக்கு முழு ஆதரவை வழங்கி வருகின்றன.

அரசியல் எதிர்ப்பாளர்களை ஒடுக்கும் ஒரு சர்வாதிகார அரசின் நீதிமன்றங்களிடம் போக்டனின் விதியை விட்டுவிட முடியாது. சர்வதேச தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட அமைப்புகளின் ஒருங்கிணைந்த போராட்டத்தால் மட்டுமே போக்டனின் விடுதலையைச் சாத்தியமாக்க முடியும்!

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், மாணவர்கள், சிவில் உரிமைக் குழுக்கள் மற்றும் போரெதிர்ப்பு இயக்கங்கள் போக்டனின் வழக்கை உடனடியாகக் கையில் எடுக்க வேண்டும் என்றும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வேலைத் தளங்களில் அவரை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் போருக்கு எதிராகக் குரல் கொடுத்த ஒரே காரணத்துக்காகச் சிறையில டைக்கப்பட்டுள்ள இளம் போராளி போக்டன் சிரோட்டியுக்கின் விடுதலையைச் சாத்தியமாக்க உலகளாவிய ஆதரவுக் கரங்கள் நீள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்!

****

புதிய பிரச்சார இணையதளத்திற்குச் சென்று, போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்வதற்கான போராட்டத்தில் இணைந்துகொள்ளுங்கள்: FreeBogdan.org

Loading