இலங்கை வனத் திணைக்கள அதிகாரிகள் பூநகரி ஒன்றுபட்ட மக்கள் அமைப்பின் தலைவரை தாக்கி கைது செய்தனர்

செப்டம்பர் 7 அன்று தெளிகரையில் உள்ள இலங்கை வனத் திணைக்களத்தின் அதிகாரிகள் பூநகரி ஒன்றுபட்ட மக்கள் அமைப்பின் (PUPO) செயலாளர் சங்கரப்பிள்ளை ஆனந்தநடராஜனை வன்முறையாகத் தாக்கி கைது செய்தனர். இது கிளிநொச்சி மாவட்டத்தின் கிராஞ்சி மற்றும் பூநகரிப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், பெருநிறுவனங்களின் நில அபகரிப்புக்கு எதிராக வெளிப்படுத்தும் எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் அவர்களை அச்சுறுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படையான முயற்சி ஆகும்.

பூநகரி ஒன்றுபட்ட மக்கள் அமைப்பானது முன்மொழியப்பட்ட காற்றாலை பண்ணை, கனிய மணல் மற்றும் சுண்ணக்கல் அகழ்வுக்காக நிலத்தை வலுக்கட்டாயமாக அபகரிப்பதை எதிர்த்துப் போராடுவதற்காக அப்பகுதி மக்களால் உருவாக்கப்பட்டது ஆகும்.

சங்கரப்பிள்ளை ஆனந்தநடராஜன்

செப்ரெம்பர் 7 அன்று மாலை சுமார் 5:30 மணியளவில், கிராஞ்சியின் மொட்டையன்குளத்தில் உள்ள ஆனந்தநடராஜனின் நிலத்திற்கு வனத் திணைக்களத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் கொண்ட குழுவினர் வந்தனர். அரசுக்குச் சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக அவர் மீது பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்திய அவர்கள், அவரைச் சூழ்ந்து கொண்டு, விலங்கிட்டு, கடுமையாகத் தாக்கினர். பின்னர் அவர் தெளிகரையில் உள்ள வனத் திணைக்கள அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு சுமார் இரண்டு மணி நேரம் அங்கு தடுத்து வைக்கப்பட்டு பூநகரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

கிளிநொச்சியைச் சேர்ந்த 59 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியரான ஆனந்தநடராஜன், குடலிறக்கம் (hernia), ஆஸ்துமா மற்றும் மூல நோய் உட்பட நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். வனத் திணைக்கள குண்டர்களால் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலால் கடும் வலியால் அவதிப்பட்ட நிலையிலும், மேற்கூறிய நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், அவருக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படாமல் அவர் பொலிஸ் நிலையத்தில் இரவு முழுவதும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அடுத்தநாள் காலை அவர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவருக்குத் சரீரப் பிணை வழங்கப்பட்டு அடுத்த வழக்கு விசாரணையை 2027 செப்டம்பர் 28 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.

கடுமையாக தாக்கப்பட்டதன் காரணமாக பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகு தானாகவே கிளிநொச்சி மருத்துவமனையில் தங்கி அவர் சிகிச்சை பெற்றார்.

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) பூநகரி தொழிலாளர், விவசாயிகள் மற்றும் மீனவர் நடவடிக்கைக் குழுவும் இந்த வன்முறைத் தாக்குதலைக் கண்டிக்கின்றன; அத்துடன் ஆனந்தநடராஜன் மீதான வழக்கை நிபந்தனையின்றி விலக்கிக்கொள்ளுமாறும் கோருகின்றன.

உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்களுடன் பேசிய ஆனந்தநடராஜன், தான் எதிர்கொண்ட கொடூரமான அனுபவத்தை விவரித்தார்.

தனது நிலம் வனத்துறையைச் சேர்ந்தது என்ற அவர்களின் கூற்றை நான் மறுத்தபோது, ​​“திடீரென்று ஒரு அதிகாரி என்னை வன்முறையாகப் பிடித்துக்கொண்டு மற்ற அதிகாரிகளை அழைத்தார். அவர்கள் வலுக்கட்டாயமாக எனக்கு விலங்கிட்டனர். உடனே அவர்கள் தங்கள் கைகளை இறுக்கமாக மூடி, என் மார்பு, வயிறு, முதுகு மற்றும் தோள்பட்டைகளில் கடுமையாகக் குத்தத் தொடங்கினர். அவர்கள் என்னை இழுத்துக்கொண்டு வாகனத்திற்குள் ஏற்றி, பின்னர் அங்கிருந்து உதைத்து வெளியே தள்ளி, என்னைத் தரையில் விழச் செய்தனர். அவர்கள் என்னை ஒரு குற்றவாளியைப் போலவே நடத்தினார்கள்.”

சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய நிலையிலும், தொடர்ந்து மூச்சு விடுவதில் சிரமத்தையும், இதயம், தசைகள் மற்றும் உடலின் பிற பகுதிகளில் வலியையும் தான் எதிர்கொண்டதாக அவர் மேலும் கூறினார்.

தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் காரணமாக மக்கள் விடுதலைத முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பதற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், பூநகரி உள்ளூராட்சி மன்றத்தின் ஜே.வி.பி./தே.ம.ச. பிரதேச சபை உறுப்பினரான வல்லிபுரம் அற்புதராசா, அந்தச் சம்பவத்தின்போது வனத்துறை அதிகாரிகளுடன் வந்திருந்தார் என்று ஆனந்தநடராஜன் WSWSக்குத் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலைக் கண்டித்த மக்கள் அமைப்பின் தலைவர் ஐ. கேசவன் 'பூநகரி மக்களை அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்டே ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.' எனக் கூறினார்.

தங்கள் நிலங்களைப் பாதுகாப்பதற்காக அப்பகுதி மக்கள் மேற்கொண்ட உறுதியான போராட்டங்களை எதிர்கொண்ட நிலையில், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் இப்போது மக்களின் நிலங்களைப் பறித்தெடுக்கும் நோக்கில், அவர்கள் பல தசாப்தங்களாக வசித்து மற்றும் பயிரிட்டு வரும் நிலங்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லை என்று குற்றம் சாட்டும் இழிவான உத்தியைக் கையாளத் தொடங்கியுள்ளது.

ஆனந்தநடராஜனின் நிலம் முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டப் பகுதிக்குள் அமைந்துள்ளதனால் அவர் கைது செய்யப்பட்டதற்கும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான மோதலுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. அவர் 1989இல் அந்த நிலத்தை வாங்கி, பல தசாப்தங்களாக அங்கு தென்னை மரங்களை வளர்த்து வந்துள்ளார். போர்க்காலத்தில், அப்பகுதியைச் சேர்ந்த பலரையும் போலவே அவரும் தனது வீட்டையும் நிலத்தையும் விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார். குண்டுவீச்சினால் அவரது தென்னை மரங்கள் அழிக்கப்பட்டன.

2009 இல் இரத்தக் களரிப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, மற்றவர்களைப் போலவே அவரும் தனது நிலத்திற்குத் திரும்பி மீண்டும் விவசாயத்தைத் தொடங்கினார். பின்னர் அவர் நட்ட தென்னை மரங்கள் அவரது வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாக அமைந்தன. முரண்பாடானவகையில், கடந்த 17 ஆண்டுகளாக அவரது நிலத்தின் சட்டப்பூர்வத் தன்மை குறித்து வனத்துறையோ அல்லது வேறு எந்த அதிகார அமைப்போ எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காத நிலையில், இப்போது திடீரென்று ஆனந்தநடராஜனின் நிலம் தங்களுக்குச் சொந்தமானது என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர்!

பூநகரியில் உள்ள பலர், ஆனந்தநடராஜனைப் போலவே தங்கள் நிலத்திற்கான உரிமையை நிலைநாட்டுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். போரின் போது கட்டாயமாக இடம்பெயர நேரிட்டதால், பல குடும்பங்கள் தங்கள் நில உரிமைக்கான உறுதிகள் மற்றும் பிற ஆவணங்களை இழந்தன. முறையான ஆவணங்கள் இல்லாவிட்டால், தாங்கள் வசிக்கும் மற்றும் பயிரிடும் நிலங்களுக்கு உரிமை கோர முடியாது என்று அதிகாரிகள் பல குடியிருப்பாளர்களுக்கு அதிகாரப்பூர்வமற்ற முறையில் எச்சரிக்கை விடுத்தனர். 'காற்றாலை மின் திட்டத்திற்கு நிலத்தை வழங்காவிட்டால், அரசாங்கம் உங்கள் நிலங்களைக் கையகப்படுத்திக்கொள்ளும்' என்று அந்த அதிகாரிகள் அவர்களிடம் கூறினர். குறைந்தபட்சம் ஒரு சிலர் ஒப்புக்கொண்டதைப் பயன்படுத்திக்கொண்டு, மற்ற குடியிருப்பாளர்களையும் தங்கள் நிலங்களை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பார்கள்.

இத்திட்டங்களால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் இழக்க நேரிடும். அத்துடன், சுற்றுச்சூழல் பேரழிவும் இன்னும் மோசமாக இருக்கும்.

கிராஞ்சியில், தென்னந்தோப்புகள் மற்றும் தனியார் நிலங்களிலும் 11 காற்றாலைகளை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு காற்றாலைக்கும் சுமார் 6.25 ஏக்கர் நிலமும், 60 முதல் 80 தென்னை மரங்களை அகற்ற நேரிடுவதனால் 22 விவசாயக் குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 56.25 ஏக்கர் நிலமும் 2,500 மரங்களும் பாதிக்கப்படும்.

இதற்கிடையில், 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 'டோக்கியோ சிமெண்ட்' (Tokyo Cement) திட்டத்தை வேரவில், வலைப்பாடு, பொன்னாவெளி மற்றும் பாலாவி ஆகிய பகுதிகள் எதிர்கொண்டுள்ளன. இதற்காக சுண்ணாம்புக்கல் அகழ்வு மற்றும் சீமெந்து தொழிற்சாலைக்காக சுமார் 3,000 ஏக்கர் நிலம் தேவைப்படும்.

குடியிருப்பாளர்கள் தங்களின் பரம்பரை நிலங்களை இழப்பது மட்டுமல்லாமல், கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என அஞ்சுகின்றனர். பெப்ரவரி 7 அன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகவுக்கு எழுதிய கடிதத்தில், முன்மொழியப்பட்ட காற்றாலைத் திட்டத்துடன் தொடர்புடைய பிரச்சனைகளை பூநகரி ஒன்றிணைந்த மக்கள் அமைப்பு சுட்டிக்காட்டியது. குடியிருப்புப் பகுதிகளில் காற்றாலைகளின் இரைச்சல் மற்றும் காலை, மாலை நேரங்களில் சூரிய ஒளி குறைவது ஆகியவை மாணவர்களிடையே ஒற்றைத் தலைவலி, மன அழுத்தம், சலிப்பு மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமங்களை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் எச்சரித்தனர். மேலும், இவ்விரு திட்டங்களும் கடல்நீரை விவசாய நிலங்களுக்குள் நுழைய அனுமதித்து, நிலத்தடி நீரை உப்பால் மாசுபடுத்தி, கடலோர கிராமங்களில் ஏற்கனவே நிலவும் சுத்தமான குடிநீர் பற்றாக்குறையை மேலும் மோசமாக்கும் என்றும் குடியிருப்பாளர்கள் அஞ்சுகின்றனர். ஆழமான சுண்ணாம்புக்கல் அகழ்வாராய்ச்சி, நிலத்தடி நீர் உவர்மயமாதல் அபாயத்தை மேலும் அதிகரிக்கக்கூடும்.

இப்பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் பல மாதங்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்; அந்த வகையில், மே 28 அன்று ஆனந்தநடராஜனின் மக்கள் அமைப்பால் நடத்தப்பட்ட போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பெருநிறுவனங்களின் இலாபத்திற்காக மக்களின் நிலங்களை விற்பதை அரசு நிறுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதுடன், உள்ளூர் பாளுமன்ற உறுப்பினர்களின் மௌனம் குறித்தும் கேள்வி எழுப்பினர்.

ஆனந்தநடராஜனுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் பழிவாங்கும் நடவடிக்கை என்பது, வெறும் ஒரு தனிப்பட்ட அதிகார துஷ்பிரயோகச் சம்பவம் மட்டுமல்ல. முதலாளித்துவ அரசு, அதன் பெருநிறுவன ஆதரவாளர்கள் மற்றும் சர்வதேச நிதிய மூலதனம் ஆகியவற்றின் இலாப நலன்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் எதிர்ப்புகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் பரந்த அளவிலான நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இது அமைந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச நிதிய மூலதனத்தின் பொருளாதாரக் கட்டளைகளுக்கு இணங்கிச் செயல்படும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், பெருநிறுவனங்களின் சுரண்டலுக்கு நிலம் மற்றும் இயற்கை வளங்களைத் திறந்துவிடுவதன் மூலம் முதலீடுகளை ஈர்க்க முற்படுகிறது.

ஆனந்தநடராஜனின் விவகாரமானது, பூநகரி ஒன்றிணைந்த மக்கள் அமைப்பின் 'அரசியல் வேண்டாம்' என்ற கோஷத்தின் பிற்போக்கு தன்மையையும் அரசியல் திவால்தன்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இக் கோஷத்தை முன்னெடுப்பதன் மூலம், மக்கள் எதிர்கொள்ளும் தாக்குதல்களை எதிர்த்துப் போராடக்கூடிய ஒரு சுயாதீனமான அரசியல் வேலைத்திட்டத்திலிருந்து அவர்களை விலக்கி வைக்கும் அதேவேளை, அரசாங்கத்துடன் சமரசம் செய்துகொள்ளத்  தயாராக இருப்பதையே இந்த அமைப்பு உணர்த்துகிறது. அதிகாரிகளிடம் விடுக்கப்படும் பயனற்ற கோரிக்கைகளால் இத்தகைய தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த முடியாது. நிலம் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் போராட்டமானது, அரசாங்கத்திற்கும் இத்திட்டங்களுக்கு அடிப்படையாக விளங்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிரான அரசியல் போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும்.

முதலாளித்துவ அரசு மற்றும் அதன் நிறுவனங்கள் குறித்து மாயைகளை விதைக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டு வரும் தமிழ் தேசியவாதக் கட்சிகளிடம் முறையிடுவதன் மூலமோ அல்லது அவற்றுடன் அரசியல் ரீதியாக அணிசேர்வதன் மூலமோ முன்னேற்றத்திற்கான எந்த வழியும் காண முடியாது.

உதாரணமாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் பேசுகையில், 'இநாட்டில் சட்டத்தின் ஆட்சியும் நீதித்துறையும், அதேபோல பொலிஸ் நிலையங்களும் உள்ளன. வனத் திணைக்களம் இவிவகாரத்தைக் பொலிஸ் அல்லது நீதிமன்றங்கள் ஊடாகக் கையாண்டிருக்கலாம்,' என்று கூறினார். இருப்பினும், அந்தத் தாக்குதலைக் கண்டிப்பதற்குப் பதிலாக, சிறீதரன் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மறைமுகமாக நியாயப்படுத்தவே செய்தார். வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் நடவடிக்கையில் அரசியல் உள்நோக்கம் ஏதுமில்லை என்று கருதிய அவர், 'இத்தகைய அதிகாரத் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு நாடு சட்டரீதியான அதிகாரத்தை வழங்கியுள்ளதா?' என்று கேள்வி எழுப்பினார். ஆனந்தநடராஜனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையிலிருந்து அரசாங்கத்தை விடுவிப்பதாகவே இது அமைகிறது.

ஆனந்தநடராஜனின் அமைப்பு ஆதரவு கோரும் தமிழரசுக் கட்சியின் இந்த பிரதிபலிப்பு, அந்த இயக்கத்தின் ஆழமான அரசியல் வங்குரோத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இது, அரசு ஒடுக்குமுறை, நிலப் பறிப்பு மற்றும் வடக்கின் பெருநிறுவனச் சுரண்டல் ஆகியவற்றிற்கு எதிராகத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் ஒரு சுயாதீனமான அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை உடனடியாக எழுப்புகிறது.

பூநகரி, கிராஞ்சி மற்றும் வடக்கு-கிழக்கு உட்பட இலங்கை முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளை, நில அபகரிப்பு மற்றும் பெருநிறுவனத் திட்டங்களை எதிர்த்தமைக்காக ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் ஆனந்தநடராஜா மற்றும் ஏனைய அனைவரினதும் பாதுகாப்பிற்காக முன்வருமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.

நிலம், வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான போராட்டமானது, முதலாளித்துவச் சுரண்டல், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நிதிய மூலதனத்திற்கு இலங்கை அடிபணிதல் ஆகியவற்றிற்கு எதிரான பரந்த தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

Loading