கிளிநொச்சியில் அபிவிருத்தித் திட்டங்களுக்கான நியாயமற்ற நில அபகரிப்புக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் சுயாதீனமான இயக்கத்தை கட்டியெழுப்புங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தின் கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு, பொன்னாவெளி மற்றும் பாலாவி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், ஒரு பாரிய காற்றாலைத் திட்டம், சுண்ணக்க்கல் அகழ்வு மற்றும் சீமெந்து தொழிற்சாலைக்காகவும் தங்களது நிலங்களைக் கையகப்படுத்தும் அரசின் முயற்சிகளுக்கு எதிராக மாதக்கணக்கில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பூநகரிப் பிரதேச செயலகத்தின் கீழ் வரும் கிராஞ்சியில், தென்னந்தோட்டங்கள் மற்றும் பிற தனியார் நிலங்களில் 11 காற்றாலைகள் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு காற்றாலைக்கும் 6.25 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது, மேலும் ஒவ்வொரு காற்றாலைக்காகவும் 60 முதல் 80 தென்னை மரங்கள் வரை அழிக்கப்பட வேண்டும். மொத்தத்தில், சுமார் 56.25 ஏக்கர் தனியார் நிலம் கையகப்படுத்தப்படும். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவது தங்களின் வீடுகளுக்கும் வாழ்வாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் என்று அப்பகுதி மக்கள் உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) தெரிவித்தனர். 22 விவசாயக் குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 2,500 தென்னை மரங்கள் அழிக்கப்படும் அபாயத்தில் உள்ளன.

நில அபகரிப்புக்கு எதிராக கிராஞ்சியில் கிராமவாசிகள் 28 மே 2026 அன்று ஊர்வலம் நடத்திய போது

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வேரவில், வலைப்பாடு, பொன்னாவெளி மற்றும் பாலாவி ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள், வரையறுக்கப்பட்ட டோக்கியோ சிமென்ட் கம்பெனி (லங்கா) முன்மொழிந்த சர்ச்சைக்குரிய 500 மில்லியன் அமெரிக்க டாலர் திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், பூநகரியின் பொன்னாவெளி பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டத்தில், சுண்ணாம்புக்கல் அகழ்வுக்காக 3,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, ஒரு சிமென்ட் தொழிற்சாலை கட்டப்படவுள்ளது.

இலங்கையின் பல தசாப்த கால உள்நாட்டுப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இப்பிராந்தியங்களில் உள்ள மக்கள், இந்த மாபெரும் திட்டத்திற்காகத் தங்கள் நிலங்களை இழப்பது என்பது, தங்கள் வாழ்வாதாரத்தையும் இழந்து, மேலும் ஆழமான வறுமை மற்றும் இன்னல்களுக்குள் தள்ளப்படுவார்கள் என்று அஞ்சுவது நியாயமானதாகும்.

தங்கள் நிலங்களை இழந்துவிடுவோமோ என்று குடியிருப்பாளர்கள் அஞ்சுவது மட்டுமல்லாமல், அந்தத் திட்டங்களால் ஏற்படும் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் தங்கள் வாழ்க்கையை மேலும் சீரழித்துவிடும் என்றும் பீதியடைந்துள்ளனர்.

முன்மொழியப்பட்ட காற்றாலை மற்றும் சீமெந்து தொழிற்சாலைத் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றுபட்ட மக்கள் அமைப்பு, பெப்ரவரி 7 அன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகவுக்கு எழுதிய கடிதத்தில், தங்களது கவலைகளை எடுத்துரைத்து கூறியதாவது: “குடியிருப்புப் பகுதிகளில் நிறுவப்பட்ட காற்றாலைகளால் ஏற்படும் இரைச்சலும், காலை மற்றும் மாலை நேரங்களில் சூரிய ஒளி இல்லாததும், ஒற்றைத் தலைவலி, மன அழுத்தம், சலிப்பு, மற்றும் மாணவர்களால் கல்வியில் கவனம் செலுத்த இயலாமை போன்ற உடல் மற்றும் உளப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன...”

காற்றாலைப் பண்ணையானது, தாவரங்கள் அடர்ந்த பகுதிகளிலும், விவசாயத்திற்குப் பொருந்தாத பயனற்ற, நீர் தேங்கிய அல்லது தரிசு நிலங்களிலும் அமைக்கப்படும் என்ற அரசாங்கத்தின் “நிபுணர் குழுவின்” கூற்றை அந்தக் கடிதம் சவால் செய்தது. மாறாக, இந்த நிலங்கள் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாதவை என்று அந்தக் கடிதம் குறிப்பிட்டது. பொதுமக்களை ஏமாற்றி, உள்ளூர் மக்களின் வாழ்வாதார அழிவை எளிதாக்கும் முயற்சியில், திட்ட ஆதரவாளர்கள் நிலத்தின் தன்மை மற்றும் பயன்பாட்டை பற்றி வேண்டுமென்றே பொய்யாக சித்தரிப்பதாக அது குற்றம் சாட்டியது.

மே 28 அன்று ஒன்றுபட்ட மக்கள் அமைப்பு ஒரு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்தப் போராட்டத்தில் 500 பேர் வரை கலந்துகொண்டனர். போராட்டக்காரர்கள், “எங்கள் அமைதியான வாழ்க்கையை அழிக்கும் காற்றாலைகள் இனி வேண்டாம்,” “உயிரினங்களை அழிக்காதீர்கள்,” “எங்களுக்கு எங்கள் நிலம் வேண்டும்,” “எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள்,” “இயற்கை சமநிலையை அழிக்கும் காற்றாலைகள் எங்களுக்கு ஏன் தேவை?” “சுண்ணக்கல் சுரங்கத்திலிருந்து வரும் நச்சுப் புகையை நாங்கள் விரும்பவில்லை” போன்ற கோசங்களை எழுப்பினர். மேலும், பெருநிறுவனங்களின் இலாபத்திற்காக மக்களின் நிலங்களை விற்பதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்றும், உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காப்பது குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

லா வியா கம்பெசினா (ஒரு சர்வதேச விவசாய இயக்கம்) அமைப்பின் 2024 ஜூன் 27 திகதியிட்ட கட்டுரை, டோக்கியோ சிமென்ட் நிறுவனம் 2012 இல் ஒரு ஆய்வு உரிமத்தைப் பெற்றதாகவும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) இல்லாமல் அதனைச் செயல்படுத்துவது சுற்றுச்சூழல் சட்டத்தை மீறும் என்றும் நிலத்திற்கான மக்கள் உரிமை கூட்டணி மற்றும் நிலம் மற்றும் விவசாய சீர்திருத்தத்திற்கான இயக்கம் (MONLAR) குற்றம் சாட்டியுள்ளதாகத் தெரிவிக்கிறது. மேலும் அந்தக் கட்டுரை, “நிறுவனத்தின் நடவடிக்கைகள் உள்நாட்டுச் சட்டங்களை மீறுவது மட்டுமல்லாமல், சர்வதேச மனித உரிமைக் கோட்பாடுகளையும் மீறுகின்றன” என்று கூறுகிறது.

அந்தக் கட்டுரை மேலும் குறிப்பிட்டதாவது, “பாதிக்கப்பட்ட பகுதியில், பல்வேறு கடல்வாழ் உயிரினங்களுக்கும் வலசைப் பறவைகளுக்கும் வாழ்வாதாரமாக விளங்கும் சதுப்புநிலக் காடுகள், உவர் சதுப்பு நிலங்கள் மற்றும் சிறுகாடுகள் போன்ற முக்கிய சுற்றுச்சூழல் பிரதேசங்கள் அடங்கியுள்ளன. டோக்கியோ சிமெண்ட்டின் செயல்பாடுகள் இந்த வாழ்விடங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன், விவசாயத்திற்கும் கால்நடை வளர்ப்புக்கும் இன்றியமையாத நிலத்தடி நீர் உவர்மயமாதலை அதிகரிக்கச் செய்யும் அபாயத்தையும் ஏற்படுத்துகின்றன. மேலும், சுரங்கத் தொழிலுக்காக காடுகளை அழிப்பது, யானைகளின் வாழ்விடங்களைச் சீர்குலைப்பதன் மூலம் மனித-யானை மோதல்களை அதிகரிக்கக்கூடும்.”

நில அபகரிப்புக்கு எதிராக கிராஞ்சியில் கிராம மக்கள் 28 மே 2026 அன்று ஊர்வலத்தின் பின்னர் மறியல் போராட்டம் நடத்தினர்

2022 இல், பூநகரியில் கனிம-மணல் படிவுகள் இருப்பதை ஆய்வுகள் கண்டறிந்ததைத் தொடர்ந்து, 16 கிலோமீட்டர் நீளமுள்ள கடலோரப் பகுதியில் மணல் அகழ்வு செய்வதற்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. பொன்னாவெளியில் சுண்ணாம்புக்கல் அகழ்வு செய்வதற்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கு மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் கடல்நீரை நிலத்திற்குள் நுழைய அனுமதித்து, நிலத்தடி நீரை உப்பாக மாசுபடுத்தக்கூடும் என்று அப்பகுதி மக்கள் எச்சரிக்கின்றனர். இது கடலோரக் கிராமங்களில் ஏற்கனவே நிலவிவரும் சுத்தமான குடிநீர் பற்றாக்குறையை மேலும் மோசமாக்கும் என்றும், அதே நேரம், ஆழமான சுண்ணாம்புக்கல் அகழ்வு நிலத்தடி நீர் உவர்மயமாதல் அபாயத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள்.

நாட்டின் வடமேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள மன்னார் தீவின் சர்ச்சைக்குரிய காற்றாலைத் திட்டம் உட்பட, முந்தைய திட்டங்களின் பேரழிவுகரமான விளைவுகளைப் பற்றிப் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.

2025 நவம்பரில், இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி ஸ்ரீலங்கா லிமிடெட் நிறுவனம், மன்னாரில் முன்மொழியப்பட்ட நாட்டின் மிகப்பெரிய காற்றாலை திட்டத்தின் 250 மெகாவாட் இரண்டாம் கட்டப் பணிகளை நிறுத்த நிர்ப்பந்திக்கப்பட்டது. 420 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்தத் திட்டத்திற்கு, உள்ளூர்வாசிகள், மீனவர்கள், மதகுருக்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் பலர் மூன்று மாதங்களாகப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். நிலம் மற்றும் மீன்பிடித் தளங்களுக்கான பிரவேசம் கட்டுப்படுத்தப்பட்டது, கட்டுமானம் தொடர்பான வெள்ளப்பெருக்கு மற்றும் வடிகால் மாற்றங்கள், இரைச்சல், குறைந்துவரும் மீன் பிடிப்பு மற்றும் அர்த்தமுள்ள கலந்தாலோசனை இல்லாமை ஆகியவை குறித்தும் குடியிருப்பாளர்கள் கவலைகளை எழுப்பினர்.

காற்றாடியின் இரைச்சல் கரையோர மீன்களை விரட்டியடித்து, பாரம்பரிய மீன்பிடித்தலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்ற மீனவர்களின் அச்சத்தை, இத்திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஏற்றுக்கொண்டது. வங்காலை சரணாலய ராம்சார் தளத்திற்கு அருகில், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பறவைகளுக்கு மோதல்கள் மற்றும் வாழ்விடச் சீர்குலைவு உட்பட கடுமையான அபாயங்கள் இருப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. தற்போதுள்ள தம்பபவனி வசதியை கண்காணித்ததில், 2021 செப்டம்பர் முதல் 2023 மார்ச் வரை 376 பறவை மற்றும் வௌவால்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கிராஞ்சி-வேரவில் மற்றும் மன்னார் காற்றாலைத் திட்டங்கள் தனித்தனியாக அமைந்திருந்தாலும், அவை இலங்கையின் வடமேற்குக் கடற்கரை காற்றாலைப் பகுதியில், மன்னார்-பூநகரி பகுதியைச் சுற்றி அமைந்துள்ளன. முன்மொழியப்பட்ட சீமெந்து தொழிற்சாலையுடன் சேர்ந்து, முன்னர் போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியைத் தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டு வலையமைப்புகளில் ஒருங்கிணைக்க அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள் மேற்கொண்ட பரந்த கொள்கையை இவை பிரதிபலிக்கின்றன. மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் இந்தச் செயல்முறையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. 'அபிவிருத்தி' மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி விரிவாக்கம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் இந்தக் கொள்கை, இலாபத்தை நோக்கமாகக் கொண்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நிலம், இயற்கை வளங்கள் மற்றும் மலிவு உழைப்பு சந்தையையும் திறந்துவிட்டுள்ளதுடன், இது பெரும்பாலும் இந்த நிலங்களையும் நீரையும் சார்ந்துள்ள விவசாய மற்றும் மீன்பிடி சமூகங்களின் இழப்பிலேயே அமைந்துள்ளது.

ஐந்து கிராமங்களின் குடியிருப்பாளர்களிடமிருந்து எழுந்த பரவலான எதிர்ப்பு, அரசாங்கத்தின் திட்டங்களை இதுவரை தாமதப்படுத்தியுள்ளது. திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் இழப்பீடு, வீதிகள் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, அதிகாரிகள் தனித்தனி சந்திப்புக்கள் மூலம் தனிப்பட்ட நில உரிமையாளர்களின் சம்மதத்தைக் கோரி வருகின்றனர். இத்தகைய வாக்குறுதிகள், குறிப்பாக வீதிகள் போன்றவை, பல தசாப்தங்களாக அரசாங்கங்களின் புறக்கணிப்பால் ஏற்பட்ட இன்னல்களைச் சுரண்டிக்கொள்ளும் ஒருவகை இலஞ்சமாகும். 2009இல் போர் முடிவடைந்த போதிலும், இந்தக் கிராமங்களை மன்னார்-யாழ்ப்பாணம் ஏ32 வீதியுடன் இணைக்கும் பிரதான பாதை, கடுமையாகச் சிதைந்தும், பெரும்பாலும் செப்பனிடப்படாமலும், குண்டும் குழிகளும் நிறைந்து காணப்படுகிறது.

சலுகைகளுக்காக ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து, இந்தத் திட்டங்களை நிறுத்திவிடலாம் என்ற மாயையை உருவாக்கும் அதேவேளை, ஒன்றுபட்ட மக்கள் அமைப்பின் தலைவர்கள் “அரசியல் வேண்டாம்” என்ற பதாகையை ஏந்தி நிற்கின்றனர். ஜூன் 24 அன்று பூநகரி பிரதேச தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நடவடிக்கைக் குழுவை அமைப்பதற்கான முன்முயற்சியை ஏற்கெனவே எடுத்துள்ள சோசலிச சமத்துவக் கட்சியால் முன்வைக்கப்பட்ட சுயாதீனமான புரட்சிகர வேலைத்திட்டத்தைப் புறக்கணிப்பதே இதன் உண்மையான நோக்கமாகும்.

இந்த முயற்சிகளைத் திசைதிருப்பும் நோக்கத்தில் ஒன்றுபட்ட மக்கள் அமைப்பானது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் போராட்ட முன்னணி உட்பட தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.

ஆகஸ்ட் 16 அன்று, கிராஞ்சிக்கு வருகை தந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், போராட்ட இயக்கத்தில் தமிழ் இனவாத நஞ்சைக் கொட்டும் முயற்சியில் ஈடுபட்டார். “2009 க்குப் பிறகு, அவர்கள் [கொழும்பு அரசாங்கங்கள்] தமிழர்களின் கடலோரப் பகுதிகளை முழுமையான அரச கட்டுப்பாட்டின் கீழ், அதாவது சிங்களவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். தெற்கிலும்கூட, தமிழர்கள் வாழும் பகுதிகளில் இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழ் தேசியவாதத்திற்காக ஆயுதங்களால் நடத்தப்பட்ட மக்கள் போர், இனச் சுத்திகரிப்பின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும், அரசியல் ரீதியாகப் போராடும் மக்களிடம் பேசாமலும், அவர்களின் உரிமைகளை வழங்காமலும், அவர்கள் தொடர்ந்து இதே முறையில் செயல்பட்டு வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.

மூன்று தசாப்த காலப் போரினால் அழிக்கப்பட்ட இந்தப் பிரதேசங்களில், நிலத்தை உச்சபட்சமாகச் சுரண்டுவதையும் மலிவான உழைப்பைப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்ட கொடிய முதலாளித்துவத் தாக்குதல்களுக்கு எதிராக, சிங்கள மற்றும் தமிழ் மக்கள் இரு பிரிவினரும் சுயாதீனமாக அணிதிரள்வதைத் தடுப்பதே இத்தகைய பிற்போக்கு கூற்றுகளின் ஒரே நோக்கமாகும்.

இந்தத் திட்டங்களை எதிர்ப்பதற்காக, இந்தக் கட்சிகளையோ முன்னிலை சோசலிஸ்ட் கட்சி உட்பட போலி இடதுக் குழுக்களிடமும் விண்ணப்பிக்கும் ஒன்றுபட்ட மக்கள் அமைப்பு போன்ற அமைப்புகளையோ அல்லது தமிழ் முதலாளித்துவக் கட்சிகளையோ மக்கள் நம்பி இருக்க முடியாது. மன்னாரின் அனுபவம் இதைத் தெளிவாக நிரூபிக்கிறது. முன்மொழியப்பட்ட காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுத் திட்டங்களுக்கு எதிராக மன்னார் பிரஜைகள் குழு 105 நாட்கள் போராட்டம் நடத்தியது. ஆனால், காற்றாலைகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் கனிம மணல் அகழ்வை நிறுத்துவது போன்ற உறுதிமொழிகளின் அடிப்படையில் அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டிற்கு வந்ததாகக் கூறப்பட்ட பின்னர், அந்தப் போராட்டத்தைக் கைவிட்டது.

இது ஒரு காட்டிக்கொடுப்பாக நிரூபணமானது. 2025 நவம்பரில், அரசாங்கம் தங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாகக் கூறி, அருட்தந்தை மார்கஸ் போராட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவித்தார். ஆயினும், ஜனாதிபதி திசாநாயக பின்னர் 20 மெகாவாட் திட்டம் ஒன்றைத் தொடங்கி வைத்ததோடு இன்னுமொரு 50 மெகாவாட் திட்டத்தையும் முன்னெடுத்ததுடன் முள்ளிக்குளத்தில் மற்றொரு 50 மெகாவாட் ஹெய்லிஸ் ஃபென்டன்ஸ் காற்றாலைத் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார். இந்த சம்பவங்கள், மதத் தலைமையின் கீழ் இயங்கும் பிரஜைகள் குழுவானது, மக்களைப் போராடத் திரட்டுவதற்குப் பதிலாக, போராட்டத்தை முடக்குவதில் அரசாங்கத்துடன் ஒத்துழைத்தது என்பதை நிரூபிக்கின்றன.

ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து செயல்படுவதாலும், இந்தத் திட்டங்களைத் தொடர உறுதியாக இருப்பதாலும், இத்திட்டங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருப்பவர்களின் போராட்டம் முதலாளித்துவ அரசின் இலாப நலன்களை நேரடியாக எதிர்கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, அந்த இலாப நலன்களுக்குச் சவால் விடுக்காமல், முதலாளித்துவ அரசாங்கத்திடம் பயனற்ற வேண்டுகோள்களைச் செய்வதன் மூலம் அவர்களால் ஒரு அடி கூட முன்னேற முடியாது. சோசலிச சமத்துவக் கட்சியைத் தவிர, இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள எந்தவொரு வேறு எந்தக் கட்சியோ அல்லது அமைப்போ, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் முதலாளித்துவ அமைப்புக்குச் சவால் விடுப்பதில்லை.

கிராஞ்சி மற்றும் பூநகரி மக்களின் போராட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் சோசலிச சமத்துவக் கட்சி, பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் ஒரு சுயாதீனமான பிரதேச நடவடிக்கைக் குழுவை அமைக்குமாறு அழைப்புவிடுக்கிறது. முதலாளித்துவக் கட்சிகள், அரசாங்கம் மற்றும் போலி இடது அமைப்புகளிடமிருந்து விலகி, இந்தக் குழுவானது, தங்கள் மரங்களையும் நிலங்களையும் இழந்து தவிக்கும் தென்னந்தோட்ட  விவசாயிகளையும், 3,000 ஏக்கர் டோக்கியோ சிமெண்ட் நில அபகரிப்பை எதிர்கொள்ளும் கிராம மக்களையும், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், இல்லத்தரசிகள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவினரையும் ஒன்றிணைத்து, அத்தகைய நடவடிக்கை குழுக்களின் வலையமைப்பு மூலம், அனைத்து நில அபகரிப்புகளையும் தடுத்து நிறுத்தவும், ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகவும் போராட வேண்டும்.

Loading