இலங்கை அரசாங்கம் நீதித்துறையைப் பாதிக்கும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முன்நகர்த்துகிறது

இது, செப்டெம்பர் 4 சிங்கள மொழியில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கமாகும்.

செப்டெம்பர் 1 அன்று, இலங்கையின் உயர் நீதிமன்றமானது அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள, சாதனை எண்ணிக்கையான 67 “சிறப்புத் தீர்ப்பு” மனுக்கள் தொடர்பான விசாரணையை ஆரம்பித்தது. இந்தத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அங்கீகரிப்பதற்கு மேலதிகமாக, சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என்று தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.

ஆகஸ்ட் 18 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தத் திருத்தம், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும் உயர்த்துவதற்கு முன்மொழிகிறது. அதற்கு மேலதிகமாக, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதும் எண்ணிக்கையும் அரசியலமைப்பினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இத்தகைய மாற்றங்களைச் செய்வதற்கு அரசியலமைப்புத் திருத்தம் அவசியமாகிறது. கீழ்நிலை நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்காக நீதித்துறை அமைப்புச் சட்டத்திலும் திருத்தங்களைக் கொண்டுவரப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.), 2024 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்குமான தனது பிரச்சாரத்தின்போது, அரசியலமைப்பில் பகுதிபகுதியாகத் திருத்தங்களைக் கொண்டுவருவதைத் தான் எதிர்ப்பதாகக் கூறியதோடு ஒரு விரிவான புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதாக உறுதியளித்தது.

எவ்வாறாயினும், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் மே மாதத்தில் புதிய திருத்தம் தொடர்பான பிரச்சாரத்தை ஆரம்பித்ததுடன், ஆகஸ்ட் மாதத்தில் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டது. புதிய சட்டத்தை விரைவாக நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, செப்டெம்பர் மாதத்தில் திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, அக்டோபர் மாதத்தில் அதைச் சட்டமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூறினார். ஆளும் கட்சி தனது 159 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலான பலத்தைப் பயன்படுத்தி புதிய திருத்தத்தை நிறைவேற்றத் தயாராகி வருகிறது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை “நீதித்துறையின் சுயாதீனத்துக்கு” பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம், மேலும் பல சர்வதேச அமைப்புகள், நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுயாதீனம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி உட்பட சட்டத்துறை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இந்தத் திருத்தம் விரைவாக நிறைவேற்றப்பட்டால், அதன் உடனடி பயனாளியாக இருப்பவர் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன ஆவார். அவர் இந்த ஆண்டு டிசம்பர் தொடக்கத்தில் ஓய்வுபெற வேண்டியிருந்தபோதிலும், இந்தத் திருத்தத்தின் காரணமாக அவர் மேலும் இரண்டு ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடிக்க முடியும். 2024 அக்டோபர் மாதத்தில் அவரை பிரதம நீதியரசராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக நியமித்தார்.

ஆட்சியில் இருந்தபோது ஜனநாயக விரோத துஷ்பிரயோகங்களுக்குப் பேர்போன ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) உட்பட இலங்கையின் எதிர்க்கட்சிகளும் இப்போது ஜனநாயகவாதிகளாக முகமூடி அணிந்துகொள்ள முயன்று வருகின்றன. அவர்களும் இந்தத் திருத்தத்திற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

திருத்தம் தொடர்பாக பரவலாக முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களை அரசாங்கம் முற்றிலுமாக நிராகரித்துள்ளதுடன், நீதித்துறையைப் பலப்படுத்துவது மட்டுமே தனது நோக்கம் என்று பொய்யாக வலியுறுத்துகிறது. எவ்வாறாயினும், ஆகஸ்ட் 12 அன்று சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் திசாநாயக வழங்கிய நீண்ட விளக்கமானது, அரசாங்கத்தின் உண்மையான நிகழ்ச்சி நிரல் நீதித்துறையில் தலையிடுவதைத் தாண்டியும் செல்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

ஆகஸ்ட் 12 அன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடல்

[Photo: President's Media Division]

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதையும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதற்கான முன்மொழிவை, தான் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுத்த நபர்கள் குழுவொன்றை அந்த நீதிமன்ற நிறுவனங்களுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சியாக எவரும் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியும் என்றாலும், அது அவ்வாறு அல்ல என்று திசாநாயக சட்டத்தரணிகளின் பிரதிநிதிகளிடம் கூறினார். எவ்வாறாயினும், சட்டத்தரணிகள் சங்கத்துடனான அவரது உரையாடலில் அவர் வெளியிட்ட கருத்துக்கள், அரசாங்கம் செய்யத் தயாராகி வருவது சரியாக அதுதான் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

சட்டத்தரணிகள் சங்கத்தினர் கோரியவாறு ஒரு மாதத்திற்குள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப முடியும் என்று திசாநாயக கூறிய போதிலும், அவ்வாறு செய்யாததற்கு “ஒரு குறிப்பிட்ட காரணம்” இருப்பதாக அவர் குறிப்பிட்டார். “ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கு இருக்கிறது” என்று அவர் கூறினார். அந்த வழக்கை மிகவும் சிரேஷ்ட நீதிபதிகள் சிலர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழு விசாரித்து வருவதாகவும், பின்னர் அந்த நீதிபதிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு நியமிக்கத் தகுதியானவர்கள் மத்தியில் இருப்பார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். “எனது அணுகுமுறைக்குப் பின்னால் இருக்கும் பரிசீலனை இதுதான்...” என்று திசாநாயக கூறினார்.

ஜனாதிபதியின் “அணுகுமுறை” தெளிவானது. அவர் மேலே குறிப்பிட்டுள்ளவாறு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள வெற்றிடங்களை உடனடியாக நிரப்பாததற்குக் காரணம், மேல் நீதிமன்றத்தில் ஈஸ்டர் ஞாயிறு வழக்கை விசாரித்து வரும் அந்த சிரேஷ்ட நீதிபதிகளின் பதவி உயர்வுகளை அது பாதிக்கும் என்பதாகும். இரு நீதிமன்றங்களிலும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதன் மூலம், அந்த சிரேஷ்ட நீதிபதிகளை உயர் நீதிமன்றங்களுக்கு நியமிப்பதற்குப் பரிசீலிப்பதற்கான நிலைமைகளை உருவாக்குவதற்காகவே அவர் இந்தத் திருத்தத்தைக் கொண்டுவருகிறார். நீதிபதிகளை நியமிக்கும் போது முன்மொழியப்படும் பெயர்களைப் பரிசீலிப்பதற்காக, பெரும்பாலும் அரசாங்கத்துக்கு ஆதரவான பிரதிநிதிகளைக் கொண்ட அரசியலமைப்புச் சபையும் உள்ளது. அவர்களை நியமிப்பதற்கான இறுதி அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு வழக்குகளுக்கே தான் முன்னுரிமை கொடுப்பதாக அவர் வலியுறுத்தினார். “நான் விரும்பியிருந்தால், ஈஸ்டர் ஞாயிறு வழக்கைச் சிதைந்து போக அனுமதித்திருக்கலாம். இந்த வழக்கு தொடர்பாக ஏறக்குறைய 23,000 குற்றச்சாட்டுகள் உள்ளன, 3,000 சாட்சிகள் உள்ளனர். மீண்டும் இப்படியான ஒரு வழக்கை விசாரிக்க முன்வருபவர் யார்? இறுதியில் மக்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?” என்று அவர் கூறினார்.

எளிமையாகக் கூறினால், ஈஸ்டர் ஞாயிறு வழக்குகளின் விசாரணை தொடர்வதை உறுதிப்படுத்துவதற்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேவை என்று திசாநாயக கூறுகிறார்.

ஜனாதிபதி திசாநாயக இங்கு குறிப்பிடுவது, 2019 ஏப்ரல் 21 அன்று மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் மூன்று ஆடம்பர ஹோட்டல்கள் மீது ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாகவே ஆகும். அந்தத் தாக்குதல்களில் 268 பேர் கொல்லப்பட்டதுடன், 568 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைக் கொண்டிருந்த இலங்கையின் இஸ்லாமியவாதக் குழுவான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினால் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், பாதுகாப்புப் படைகளின் தலைவர்கள் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல், வெகுஜனப் படுகொலை இடம்பெற அனுமதித்தனர். கடந்தகால அரசாங்கங்கள் அரை டசினுக்கும் அதிகமான ஆணைக்குழுக்களையும் குழுக்களையும் நியமித்த போதிலும், தாக்குதலுக்கு தெரிந்தே இடமளித்த குற்றவாளிகள் சுதந்திரமாக உள்ளனர்.

திசாநாயக தலைமையில் நடத்தப்படும் புதிய விசாரணையானது உளவுத்துறையுடனும் பயங்கரவாதக் குழுக்களுடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த ஹன்சீர் அசாத் மௌலானாவினால் 2023 இல் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வருவதற்குத் தேவையான நிலைமையை உருவாக்குவதற்காக, முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலே தாக்குதல்களைத் தயாரிப்பதில் தொடர்புபட்டிருந்ததாக அவர் குற்றம் சாட்டினார். சலே பெப்ரவரி மாதத்திலிருந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மௌலானாவின் குற்றச்சாட்டுகள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இலங்கையின் ஆளும் உயரடுக்கினர், இராணுவம், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை எந்திரத்தின் சில பிரிவுகள், 26 ஆண்டுகால இனவாதப் போரின் போது இத்தகைய நடவடிக்கைகளை ஒழுங்கமைத்ததில் பேர்போன வரலாற்றைக் கொண்டுள்ளன.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் விரோத ஆத்திரமூட்டல்களைத் தூண்டுவதிலும் அடக்குமுறைச் சட்டங்களை அமுல்படுத்துவதிலும் நேரடியாக ஈடுபட்டதற்கான இழிபுகழ் பெற்ற வரலாற்றை ஜே.வி.பி. கொண்டுள்ளது. ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் இந்த விசாரணையை நடத்துவது, பாதிக்கப்பட்டவர்கள் மீதான அனுதாபத்தினால் அல்ல. ஒருபுறம், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்டதாக குற்றம் சாட்டப்படும் கட்சிகளை மௌனமாக்க அரசாங்கம் விரும்புகிறது. “ஊழலுக்கு எதிரான போரை” நடத்துவதாகக் கூறிக்கொண்டு, திசாநாயக அரசாங்கம் கடந்தகால அரசாங்கங்களின் தலைவர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. மக்களால் வெறுக்கப்பட்டு அவப்பெயரடைந்துள்ள ஸ்ரீ.ல.பொ.ஜ.மு., ஐ.தே.க., ஸ்ரீ.ல.சு.க. தலைவர்களும் ஆளும் உயரடுக்கின் ஏனைய பிரிவுகளும் இந்த முறைகேடுகளில் ஈடுபட்டிருந்தனர் என்பதில் சந்தேகமில்லை. எவ்வாறாயினும், இவர்களுடன் கடந்த காலத்தில் அரசியல் ரீதியாக கூட்டுச் சேர்ந்திருந்த, கொடூரமான சிக்கனத் திட்டத்தில் பங்கேற்றிருந்த, திசாநாயக உட்பட ஜே.வி.பி. தலைவர்கள், இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது பொதுமக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற அக்கறையினால் அல்ல.

அரசாங்கத்தின் உண்மையான இலக்கு, நீதித்துறையையும் தனது செல்வாக்கிற்கு உட்படுத்தி, நிறைவேற்று அதிகாரத்தின் கரங்களைப் பலப்படுத்தி, தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பை நசுக்குவதே ஆகும்.

தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பைக் கண்டு அரசாங்கம் மேலும் மேலும் பீதியடைந்து வருகிறது. கடந்த வாரம் வெரிட்டே ரிசேர்ச்ச் நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, திசாநாயக அரசாங்கத்தின் “மக்கள் ஆதரவு” பெப்ரவரி மாதத்தில் 65 சதவீதமாக இருந்த நிலையில் இருந்து, ஜூலை மாதத்தில் 49.83 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது, வெறும் ஐந்து மாதங்களில் கிட்டத்தட்ட 15 சதவீதப் புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

திசாநாயக அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தால் விதிக்கப்பட்ட சிக்கனக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக நிலைமைகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தி ஒடுக்குவதற்கான ஒரு பொறிமுறையாகச் செயல்படும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் காட்டிக்கொடுப்புகள், அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ள பிதான முண்டுகோளாகும். எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியம் கோரும் சிக்கனத் தாக்குதல்களை அமைதியான முறையில் நடைமுறைப்படுத்த முடியாது என்பதை திசாநாயக அரசாங்கம் அறிந்துள்ளது.

ஆட்சிக்கு வந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளில், தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அது தொடர்ச்சியாகக் கொடூரமான அத்தியாவசிய சேவை விதிமுறைகளை அமுல்படுத்தி வந்துள்ளது. பல மாதங்களாக அவசரகால நிலையைப் பேணி வந்துள்ளதுடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் அடக்குமுறைக்குப் பயன்படுத்தியுள்ளது. இராணுவத்தையும் பொலிசையும் பயன்படுத்தி தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டுள்ளன.

இந்த அடக்குமுறை சர்வாதிகார திசையை நோக்கிய ஆட்சிமுறை மாற்றம் இலங்கைக்கு மட்டும் மட்டுப்பட்டதல்ல. உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள், ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கும் வளர்ந்து வரும் சமூக எதிர்ப்புக்கும் பதிலளிக்கும் வகையில், அடக்குமுறை அரச எந்திரத்தைப் பலப்படுத்தி, சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன. அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகம், ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்தியாவின் தீவிர வலதுசாரி நரேந்திர மோடி அரசாங்கமும் நிறைவேற்று அதிகாரத்தைப் பலப்படுத்தி, ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஐரோப்பா முழுவதிலும் உள்ள அரசாங்கங்களும் அதிகரித்து வரும் சமூக கோபத்தை எதிர்கொண்டு, மேலும் மேலும் எதேச்சதிகார மற்றும் தீவிர வலதுசாரி நடவடிக்கைகளைத் தழுவி வருகின்றன.

சட்டத்தரணிகள் சங்கமும் ஏனைய குழுக்களும் “நீதித்துறையின் சுயாதீனத்துக்காக” பிரச்சாரம் செய்து வருகின்றன. போலி இடதுசாரி முன்னிலை சோசலிசக் கட்சியும், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரசாங்க மருத்துவ அதிகாரிகள், ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உட்பட 40 தொழில்முறை தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவமும் புதிய திருத்தத்திற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. முதலாளித்துவ அரசின் “ஜனநாயக அம்சங்களைப்” பாதுகாப்பதே அவர்களின் நோக்கமாகும், தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பது அல்ல. நெருக்கடியில் சிக்கியுள்ள முதலாளித்துவ வர்க்கம், இதுவரை பேணப்பட்டு வந்த நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் பாரபட்சமின்மை, அதிகாரப் பகிர்வு மற்றும் கட்டுப்பாடு போன்ற வடிவங்களைத் தகர்த்து வருகிறது.

அரசாங்கத்தின் சர்வாதிகாரத் திட்டங்களுக்கு எதிராக ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை, அதன் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாது. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கமே அவசியமானதாகும். அந்த இயக்கம் கிராமப்புற ஏழைகளையும் இளைஞர்களையும் அணிதிரட்டி, சோசலிசக் கொள்கைகளுக்கு அர்ப்பணித்துக்கொள்ளும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அமைப்பதற்காகப் போராட வேண்டும். அது தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்காக முன்னெடுக்கப்படும் பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

Loading