இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஒகஸ்ட் 25, திங்கட்கிழமை அன்று, காணாமல் போனோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வின் போது, யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்திற்குள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த முயன்ற வடக்கு மற்றும் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளை, யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை பொலிஸ் பலவந்தமாக துன்புறுத்தி அகற்றியது.
சங்கத்தின் நான்கு உறுப்பினர்கள் ஏற்கனவே செயலக வளாகத்திற்குள் நுழைந்திருந்த நிலையில், பொலிசார் நுழைவாயிலை மறித்து, மற்றவர்களை அவர்களுடன் சேரவிடாமல் தடுத்தனர். உள்ளே இருந்தவர்களை வெளியேறுமாறு ஒரு பொலிஸ் அதிகாரி உத்தரவிட்டபோது, அந்தப் பிரதிநிதிகள் தங்கள் போராட்டப் பதாகையை விரிக்க முயன்றனர். அதில் “எங்கள் உறவினர்கள் எங்கே? காணாமல் போனவர்களுக்கு நீதி வேண்டும்! காணாமல் போனோர் அலுவலகம் என்ற வஞ்சக நாடகம் இனி வேண்டாம்! இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் உறவினர்களுக்கு என்ன ஆனது? இழப்பீடு வேண்டாம்!” போன்ற கோரிக்கைகள் அதில் அடங்கியிருந்தன.
பொலிஸ் அதிகாரிகள் உடனடியாகப் போராட்டக்காரர்கள் மீது பாய்ந்து, அவர்களின் பதாகைகளைப் பறிக்க முயன்றனர். அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்தபோது, பொலிசார் அவர்களை வலுக்கட்டாயமாகத் தள்ளியதால் அவர்கள் தரையில் விழுந்தனர். பொலிஸ் அவர்களை கைது செய்வதாகவும் மிரட்டியது. அதனைத் தொடர்ந்து, பெண் பொலிசார் பெண் போராட்டக்காரர்களின் கைகளைப் பிடித்து, அவர்களைக் கட்டிடத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியே தள்ளினர். பின்னர், அவர்கள் மீண்டும் உள்ளே நுழைவதைத் தடுப்பதற்காகக் பொலிசார் நுழைவாயிலில் காவல் காத்தனர்.
பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வை, காணாமல் போனோர் அலுவலகம் (OMP) ஏற்பாடு செய்திருந்தது. இதில், நீதி மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, மீன்பிடித்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், வட மாகாண ஆளுநர் என். வேதநாயகம், காணாமல் போனோர் அலுவலகத் தலைவர் மகேஷ் கட்டுலந்த, பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் எனக் கூறப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரும் கலந்துகொண்டனர்.
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் 2009 மே மாதம் முடிவடைந்த 26 ஆண்டுகால இரத்தக்களரி இனவாதப் போரின்போது இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் எழுந்த சீற்றத்தைத் தொடர்ந்து, காணாமல் போனோர் அலுவலகம் முதன்முதலில் 2016 ஓகஸ்ட்டில் நிறுவப்பட்டது. இலங்கை இராணுவ மற்றும் அரசியல் தலைவர்களின் போர்க்குற்றங்களுக்கு அவர்களை பொறுப்பாக்கும் நோக்கிலான எந்தவொரு விசாரணையையும் ஒடுக்குவதில் காணாமல் போனோர் அலுவலகம் ஒரு அங்கமாகச் செயல்படுகிறது என்பதை கடந்த தசாப்த அனுபவம் நிரூபிக்கின்றது.
காணாமல் போனவர்களின் குடும்பங்கள் மீது நத்தப்பட்ட பொலிஸ் வன்முறைத் துன்புறுத்தலை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) வன்மையாகக் கண்டிக்கிறது. இது ஒரு ஜனநாயக விரோதச் செயலாகும். பாதுகாப்புப் படையினரால் தங்கள் அன்புக்குரியவர்கள் கடத்தப்பட்ட இந்தக் குடும்பங்களுக்கு, போராட்டம் நடத்துவதற்கும், குற்றங்களுக்குப் பொறுப்பான அரசிடம் பொறுப்புக்கூறலைக் கோருவதற்கும் முழு உரிமை உண்டு.
பொலிசின் இந்த நடவடிக்கை, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகவின் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் தனது திட்டநிரலுக்கு விரோதமான எதிர்ப்பைச் சகித்துக்கொள்ளாது என்பதைக் காட்டுகிறது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களை செயலகத்திலிருந்து பொலிஸ் இழுத்துத் தள்ளும் காணொளி, செய்தித்தாள்களிலும் சமூக ஊடகங்களிலும் வேகமாகப் பரவி, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரவலான கோபத்தைத் தூண்டியது.
மீன்பிடித்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், ஊடகங்களிடம் பேசுகையில், பொலிசின் துன்புறுத்தலை நியாயப்படுத்தியதோடு, அந்தச் சம்பவத்தை செய்தியாக வெளியிட்ட பத்திரிகையாளர்களையும் குற்றம் சாட்டினார்.
வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்தத் தாய்மார்களிடம், “வந்து எங்களுடன் பேசுங்கள். வெளியே இருந்து கூச்சலிடாதீர்கள்; உங்கள் வேதனையை நாங்கள் புரிந்துகொள்கிறோம் என்று நாங்கள் கேட்டுக்கொண்டோம்,' எனக் கூறிய சந்திரசேகரன், பின்னர் “போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்தத் தாய்மார்களைப் பொலிசார் வெளியே இழுத்துச் சென்றதாகவும், 'போர்க்களமானது யாழ் கச்கேரி' என்றும் ஊடகங்கள் எழுதுகின்றன,” என்று பத்திரிகையாளர்களைச் சாடினார். மேலும், 'மக்களுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்... இந்தப் பாவம் உங்களைப் பின்துரத்தும்,' என்றும் பத்திரிகையாளர்களை அவர் எச்சரித்தார்.
“அனுரவின் [குமார திசாநாயக்க] சிறந்த அரசாங்கம் நல்ல முடிவுகளை எடுத்து மக்களுக்கு நன்மை செய்து கொண்டிருக்கும் போது, பத்திரிகையாளர்கள் இப்படி எழுதினீர்கள் எனில், உங்கள் பிள்ளைகளே காறித்துப்பும்,“ என சந்திரசேகரன் மேலும் கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர் நாணயக்கார ஆற்றிய உரை, அரசாங்கத்தின் “சிறந்த” பணி எனச் சொல்லப்படுவதை அம்பலப்படுத்துகிறது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசாரணைகளை அரசாங்கம் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், தற்போது சுதந்திரமாகச் செயல்படும் கானாமல் போனோர் அலுவலகத்தில் 69 வெற்றிடங்களை நிரப்பியுள்ளதாகவும் நாணயக்கார தெரிவித்தார். பெறப்பட்ட புகார்களில், 16,966 புகார்கள் விசாரணைக்கு உகந்தவை எனக் கருதப்பட்டுள்ளதாகவும், 2027 இறுதிக்குள், அனைத்து முதற்கட்ட விசாரணைகளையும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுவரை, 1,594 வழக்குகள் மேலதிக விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதேவேளை, காணாமல் போனமைக்கான 2,719 சான்றிதழ்களும், 409 இறப்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. காணாமல் போன 31 பேர் குறித்த இறுதித் தகவல்கள் பெறப்பட்டு, அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. 2025-ஆம் ஆண்டில் மொத்தம் 375 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது, இதில் செம்மணி சமூகப் புதைகுழியின் விஞ்ஞான ஆய்வுகளுக்காக 57 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுவசதி, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு “விஷேட உதவித் பொதி” வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்
காணாமல் போனோர் அலுவலகமானது பத்து ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்ற போதிலும், அது ஒரு குற்றவாளியைக் கூட அடையாளம் காணவில்லை அல்லது ஒரு வழக்கைக் கூடத் தொடுக்கவில்லை. காணாமல் போனதற்கான சான்றிதழ்களும் இறப்புச் சான்றிதழ்களும் வெறும் அதிகாரத்துவ ஆவணங்களே தவிர, நீதியல்ல. அவை ஒரு குற்றம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்துகின்றன, ஆனால் அதற்காக யாரையும் பொறுப்பேற்கச் செய்வதில்லை.
அரசின் முக்கியக் கொள்கை “சட்டம் அனைவருக்கும் சமமானது. சட்டத்திற்கு மேற்பட்டவர் எவரும் இல்லை… காணாமல் ஆக்கபட்டடோர் விவகாரம் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில்கூட, அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு” என்று அவர் கூறினார்.
இந்த அறிவிப்பு பாசாங்கானதாகும். “யாரும் சட்டத்திற்கு மேற்பட்டவர் அல்ல” என்று அரசாங்கம் அறிவிக்கின்ற போதிலும், காணாமல் போன சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் எவரும் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத அதேவேளை, அதன் சொந்த பொலிஸே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களையும், நீதிக்காகக் குரல் எழுப்பியவர்களையும் உடல்ரீதியாகத் துன்புறுத்தியுள்ளது.
“விசேட உதவிப் பொதி” என்பது நீதியின் அளவுகோல் அல்ல; அது, பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது வழக்குத் தொடர்வதற்குப் பதிலாக, கோப்புகளை மூடுவதற்கும் மௌனத்தை விலைக்கு வாங்குவதற்கும் வடிவமைக்கப்பட்ட ஒரு பணப் பரிவர்த்தனை ஆகும்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கமானது காணாமல் போனோர் அலுவலகத்தின் விசாரணை, இறப்பு சான்றிதழ்கள் மற்றும் இழப்பீட்டையும் நிராகரிக்கும் அதேநேரம், 'சர்வதேச சமூகத்தின்' சர்வதேச விசாரணையை கோருகிறது. இந்த அமைப்பு தமிழ் தேசியவாதக் கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சங்கத்தின் தலைவர்களுக்கும் இந்த தேசியவாதக் கட்சிகளுக்கும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் எந்த அக்கறையும் கிடையாது. அவர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போன்ற ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்து நீதியை நாடுகின்றனர். உண்மையில், இந்த சக்திகள் இந்தியாவுடன் சேர்ந்து, அடுத்தடுத்து வந்த கொழும்பு அரசாங்கங்களின் இனவாதப் போரை ஆதரித்தன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை இந்தப் போரின் ஒரு பகுதியாகும்.
போரை முழுமூச்சுடன் ஆதரித்த சிங்களப் பேரினவாத ஜே.வி.பி., தன்னை தேசிய மக்கள் சக்தி எனப் பெயர் மாற்றிக்கொண்டு, ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலராகத் தன்னைக் காட்டிக்கொண்டு ஆட்சிக்கு வந்தது. போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் அழுகிப்போன தமிழ் முதலாளித்துவக் கட்சிகளை வெறுத்த மக்களின் வாக்குகளை சுரண்டிக்கொள்வதற்காக பல்வேறு வாக்குறுதிகளை அளித்த ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாக்குறுதிகளைக் கைவிட்டது.
இந்த மாகாணங்களில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்கின்ற அதே வேளை, மக்கள் மீதான இராணுவ மற்றும் பொலிஸ் கண்காணிப்பும் தொடர்கிறது. “பயங்கரவாத” அச்சுறுத்தல்கள் என்ற போலியான குற்றச்சாட்டின் மூலம் கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது.
இது சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதோடு தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் எதிர்ப்பை அடக்குவதற்காக நாடு முழுவதும் அரசாங்கம் பின்பற்றி வரும் கொள்கைகளின் ஒரு பகுதியாகும்.
மேலும் படிக்க
- போக்டன் சிரோட்டியுக்கின் விடுதலைக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பிரச்சாரம் செய்த சோ.ச.க. உறுப்பினர்களுக்கு இலங்கை பொலிஸ் தொந்தரவு
- இலங்கை அரசாங்கம் யுத்த காலத்தில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை திருப்பித் தர மறுக்கிறது
- இலங்கையின் வடக்கில் தமிழ் பொதுமக்களின் வெகுஜனப் புதைகுழியை நீதி அமைச்சர் பார்வையிட்டார்
