சவூதி அரேபியாவிற்கு பிரெஞ்சுப் படையினரை அனுப்புவதையும், நவ-பாசிசத்தையும் எதிர்ப்போம்!

போருக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிராகத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பிரான்சில் நடைபெறும் பொதுத்துறை வேலைநிறுத்தமானது, போர் மற்றும் அதிதீவிர வலதுசாரிகளின் எழுச்சி ஆகியவற்றின் பின்னணிகளில், சர்வதேச அளவில் சமூகப் போராட்டங்கள் மீண்டும் எழுச்சி பெறுவதன் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. ஸ்பெயினில் அதிகளவில் உயரும் வீட்டு வாடகைக்கு எதிராகவும், ஜேர்மனியில் கட்டாய இராணுவ சேவைக்கு எதிராகவும், அமெரிக்காவில் ட்ரம்பிற்கு எதிராக “மன்னர்கள் வேண்டாம்” என்ற முழக்கத்துடன் நடைபெறும் போராட்டங்களும், துருக்கியில் திடீர் வேலைநிறுத்தப் போராட்டங்களும் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்று வருகின்றன. தற்போது உருவாகி வருவது, ஏதேனும் ஒரு முதலாளித்துவ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தக் கோரும் தேசிய அளவிலான தொழிற்சங்கப் போராட்டங்களின் தொடர் அல்ல.

எல்லா இடங்களிலும் தொழிலாளர்கள் நிதியியல் தன்னலக்குழுவுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் களமிறங்கி வருகின்றனர். பிரான்சில் தீயணைப்பு படை வீரர்கள், மின்சாரத் துறை ஊழியர்கள், எரிவாயு மற்றும் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் மற்றும் கல்வித் துறைப் பணியாளர்கள் முன்வைக்கும் ஊதியம் மற்றும் பணியிடத்தில் வளங்கள் தொடர்பான கோரிக்கைகள் நியாயமானவையாகும். ஆனால், சமூக நலன்களைப் பாதுகாப்பதற்கும், 2023-ல் ஓய்வூதியச் சீர்திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தின்போது நடந்தது போல தொழிற்சங்கத் தலைமைகள் போராட்டத்தைக் காட்டிக்கொடுப்பதைத் தடுப்பதற்கும், போர், சர்வாதிகாரம் மற்றும் அவற்றை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராகத் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு அரசியல் இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

கடந்த பத்தாண்டுகளில், மக்ரோன் இராணுவ வரவுசெலவுத் திட்டத்தை 70 பில்லியன் யூரோக்களுக்கும் மேலாக இரட்டிப்பாக்கி, செல்வந்தர்களுக்கான வரிவிதிப்பை முற்றிலுமாக ஒழித்து, 3 டிரில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான ஒரு பிரமாண்டமான கடனை உருவாக்கியுள்ளார். அதே நேரத்தில், தேசியப் பேரணிக் கட்சியானது (RN), ஆண்டுக்கு 100 பில்லியன் அல்லது 125 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான சிக்கன நடவடிக்கைகளை முன்மொழிந்த போதிலும், 2027 ஜனாதிபதித் தேர்தல் கருத்துக்கணிப்புகளில் இக்கட்சியை ஊடகங்கள் முன்னிலைப்படுத்தி வருகின்றன. ஆளும் வர்க்கம், பாசிச சர்வாதிகாரம் மற்றும் போர் மூலம் தொழிலாளர்களின் கோரிக்கைகளைக் காலடியில் போட்டு நசுக்கத் திட்டமிட்டு வருகிறது.

கடந்த வியாழன் மாலை மக்ரோன் தொலைக்காட்சியில் அளித்த நேர்காணல், சிக்கன நடவடிக்கைக்கும் நவ காலனித்துவப் போருக்கும் இடையிலான நேரடித் தொடர்பை உறுதிப்படுத்தியது. ஈரானுக்கு எதிரான வாஷிங்டனின் ஆக்கிரமிப்புப் போரின்போது ஹூவுதிகளின் தாக்குதல்களுக்கு உள்ளான சவூதி எண்ணெய்த் துறைமுகமான யான்புவைக் கட்டுப்பாட்டில் எடுப்பதற்குப் பிரெஞ்சுப் படைகளை அனுப்ப அவர் முன்மொழிந்தார். அதே வேளையில், பொதுத்துறை ஊதிய முடக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய 54 பில்லியன் யூரோ சிக்கனத் திட்டத்தை அவர் “நியாயமானது” என்று குறிப்பிட்டார்.

மக்ரோனின் நேர்காணல், முதலாளித்துவ நெருக்கடியின் பிரம்மாண்டத்தையும், தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அரசியல் பணிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. உக்ரேனில் நேட்டோ நடத்தும் போர், பிரான்சின் எரிசக்தி விநியோகத்தைத் துண்டித்து, பணவீக்கத்தை அதிகரித்து வருகிறது என்று கூறுவது “உண்மைதான்” என அவர் ஒப்புக்கொண்டார். பிரெஞ்சு இராணுவத்தினரின் உதவியுடன் உக்ரேன் நடத்திவரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக மாஸ்கோ பிரான்சில் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்பதையும், அல்லது ஐரோப்பாவிற்கு எதிரான தனது பொருளாதாரப் போரின் ஒரு பகுதியாக ட்ரம்ப் டீசல் விநியோகத்தைத் துண்டித்தால் எரிசக்தி பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்பதையும் தன்னால் நிராகரிக்க முடியாது என அவர் ஒப்புக்கொண்டார்.

வெளிப்படையாகச் சொன்னால், முதலாளித்துவத் தன்னலக்குழு உலகப் போரை நோக்கியும், நிதித் திவால்நிலையை நோக்கியும், எரிசக்தி பற்றாக்குறையால் தூண்டப்படும் பொருளாதார மற்றும் சமூகச் சரிவை நோக்கியும் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறது. இத்தகைய நிலைமைகளின் கீழ், பொருளாதாரத்தின் மீதும் அரசியல் வாழ்வின் மீதுமான கட்டுப்பாட்டை ஆளும் வர்க்கத்திடமிருந்து பறித்தெடுக்காமல், தொழிலாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு நீடித்த பாதுகாப்பு சாத்தியமில்லை.

இதைச் செய்வதற்கு, 2023-ல் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தை தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் காட்டிக்கொடுத்ததிலிருந்தும், பின்னர் புதிய மக்கள் முன்னணி என்ற பெயரில் தங்களை அணிதிரட்டிக்கொண்ட அரசியல் சக்திகளின் உடந்தையிலிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்வது அவசியமாகும். மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அந்தச் சீர்திருத்தத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்தனர். நாடாளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமல் மக்ரோன் அதைத் திணித்தபோது நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன. 1968ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற பொது வேலைநிறுத்தத்திற்குப் பிறகு பிரான்சில் ஏற்பட்ட மிகப்பெரிய அரசியல் நெருக்கடி அதுவே என்று முதலாளித்துவ விமர்சகர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மக்ரோனை வீழ்த்தி, “எந்த வர்க்கம் ஆட்சி செய்கிறது?” என்ற கேள்வியை நேரடியாக எழுப்பியிருக்கக்கூடிய ஒரு பொது வேலைநிறுத்தத்தை நோக்கி வர்க்கப் போராட்டம் வளர்ச்சியடைவதைத் தடுத்தது எது? அது தொழிலாளர்களிடையே போர்க்குணமிக்க தன்மையோ அல்லது கோபமோ இல்லாததனால் ஏற்பட்டது அல்ல.

பிரான்சில் ஊடகங்கள் “இடது” என்று முன்னிறுத்தும் அனைத்தும் அந்தப் போராட்ட இயக்கத்தை அடக்கி, கழுத்தை நெரிக்கும் வகையில் செயல்பட்டன. ஒருபுறம், சமூக ஆத்திரம் வெடிப்பது குறித்துத் தமக்குள்ள அச்சத்தை வெளிப்படுத்திய தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் தலைவர்கள், மக்ரோன் தனது சட்டபூர்வமற்ற சீர்திருத்தத்தைச் சட்டமாக அறிவித்தவுடன் வேலைநிறுத்தங்களை நிறுத்திக்கொண்டனர். மறுபுறம், மெலன்சோனும் அவரது அடிபணியாத பிரான்ஸ் கட்சியும் தலைமை தாங்கிய NFP சக்திகளும், ரெவல்யூசியோன் பெர்மனான்ட் (Révolution Permanente) போன்ற அவற்றின் துணை அமைப்புகளும், தொழிற்சங்கத் தலைமைகள் ஒரு “போர்த் திட்டத்தை” தயாரிக்கும் என்ற வீண் மாயையில் தொழிலாளர்கள் நம்பிக்கை வைக்குமாறு கூறின.

நிகழ்வுகளின் போக்கானது சோசலிச சமத்துவக் கட்சியை (PES) நியாயப்படுத்தியுள்ளது. இக்கட்சியானது, மக்ரோனைப் பதவி நீக்கம் செய்வதற்காகவும், போரையும் இராணுவச் செலவினங்களின் அதிகரிப்பையும் நிறுத்துவதற்காகவும் ஒரு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. மக்ரோன் பதவி விலக வேண்டும், அவரது சட்டபூர்வமற்ற சீர்திருத்தம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கோருவதற்காகப் பணியிடங்களிலும் பள்ளிகளிலும் தொழிலாளர்களும் இளைஞர்களும் கீழிருந்து அணிதிரட்டப்பட வேண்டும் என்று PES அழைப்பு விடுத்தது. தற்போது, வர்க்கப் போராட்டம் நெரிக்கப்பட்டதைப் பயன்படுத்தி நவ-பாசிச சர்வாதிகாரத்தை நிறுவ முதலாளித்துவ வர்க்கம் முயன்று வரும் நிலையில், துல்லியமாக அத்தகைய ஒரு சுயாதீனமான போராட்டமே கட்டியெழுப்பப்பட வேண்டும்.

வெளிநாடுகளில் இராணுவத் தீவிரமடைதலை நிறுத்துவதற்கு மெலன்சோனிடம் முன்வைக்க எதுவுமே இல்லை. சவூதி அரேபியாவுக்குப் படைகளை அனுப்புவது குறித்த மக்ரோனின் நேர்காணலுக்குப் பிறகு, மெலன்சோன் X தளத்தில் இந்தக் கொள்கையைக் கண்டித்துப் பதிவிடவில்லை; மாறாக, அதற்குச் சட்டபூர்வமாக்கும் பாராளுமன்ற வாக்களிப்புக்கு அழைப்பு விடுத்தார். ஈரான் மீதான போரில் பிரான்ஸ் இழுக்கப்படும் ஆபத்து இருப்பதால், “எனவே இது குறித்து நாடாளுமன்றம் வாக்களிக்க வேண்டும். இது அரசியலமைப்பின் 35வது பிரிவு” என்று அவர் எழுதினார்.

தொழிலாளர்களின் முன்னால் உள்ள பணி, பிற்போக்குத்தனமான மக்கள் பிரதிநிதிகளின் வாக்கெடுப்பு மூலம் நவ-காலனித்துவத்தையும் உலகப் போரையும் சட்டப்பூர்வமாக்குவதல்ல, மாறாக அவற்றை நிறுத்துவதே ஆகும். இதைச் சாதிக்க, தொழிலாளர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்திடமிருந்து சுயாதீனமாகத் தங்களை ஒழுங்கமைத்துக்கொள்ள வேண்டும்; ஏனெனில், இந்த அதிகாரத்துவ அமைப்புகள் பணியிட மன்றங்கள் மூலம் தொழில்துறையின் இராணுவமயமாக்கலிலிருந்து பயன் அடைகின்றன. ஆகவே, தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை, சர்வதேச அளவில் உள்ள தங்கள் வர்க்கச் சகோதர சகோதரிகளின் போராட்டங்களுடன் இணைக்க வேண்டும்.

பிரான்சில் 2018-லேயே, சமூக ஊடகங்கள் வாயிலாகச் சமூகப் போராட்டங்களைச் சுயாதீனமாக முன்னெடுக்க முடியும் என்பதை “மஞ்சள் அங்கி” (yellow vests) இயக்கம் நிரூபித்தது. இதனாலேயே, “மஞ்சள் அங்கி” இயக்கம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவி வருகின்றன; அவை உண்மையான ஆர்வத்தையும் ஈர்த்துள்ளன. வர்க்கப் போராட்டத்தின் மீது அதிகாரத்துவ அமைப்புகள் சுமத்தும் தேக்கநிலையை உடைத்தெறிய வேண்டும் என்ற தொழிலாளர் வர்க்கத்தின் இயல்பான உணர்வுடன் இந்தக் கோரிக்கைகள் ஒத்துப்போகின்றன.

“மஞ்சள் அங்கி” இயக்கத்தின் போராட்டத்திலிருந்து பெறக்கூடிய அரசியல் பாடங்கள் மிகவும் மதிப்புமிக்கவை. ஒருபுறம், பல மாதங்களாக மக்ரோனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததன் மூலம், சுயாதீனமான சமூகப் போராட்டத்தின் வலிமையை அந்த இயக்கம் உறுதிப்படுத்தியது. மறுபுறம், அப்போராட்டத்தின் வெளிப்படையான அரசியல் சார்பற்ற தன்மையும், வர்க்கப் போராட்ட மூலோபாயத்தை நிராகரித்தமையும், சிக்கன நடவடிக்கைகள், போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராகத் தொழிலாளர்களைச் சர்வதேச அளவில் ஒரு பரந்த புரட்சிகரப் போராட்டமாக அணிதிரட்டுவதற்கான சாத்தியக்கூறிலிருந்து அதைத் துண்டித்தது. அத்தகையதொரு போராட்டத்தை இன்று அவசரமாகக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.

பிரெஞ்சு மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தினுள் அரசியல்ரீதியாகச் சுயாதீனமான ஓர் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே இன்றைய தீர்க்கமான பிரச்சினையாகும். தொழிற்சங்கத் தலைமைகளால் போராட்டங்கள் காட்டிக்கொடுக்கப்படுவதை முறியடிப்பதற்கும், தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் அல்லாதவர்கள் என அனைத்துத் தொழிலாளர்களையும் தேசிய எல்லைகளைக் கடந்து ஐக்கியப்படுத்துவதற்கும், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) ஒரு ஆயுதமாகத் திகழ்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஏகாதிபத்தியப் போருக்கும் சர்வாதிகாரத்துக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான, சர்வதேசப் போராட்டத்தை ஆதரிப்பவர்கள், இந்த முன்னோக்கை வர்க்கப் போராட்டத்திற்குள் கொண்டு செல்வதற்காக அரசியல்ரீதியாக ஒழுங்கமைந்து ஐக்கியப்பட வேண்டும். இந்த அடிப்படையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சுப் பிரிவான PES, தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ICFI-இன் பணிகளை ஆதரிக்கவும், உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) படிக்கவும், தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர முன்னணியாக ICFI-இன் பிரிவுகளைக் கட்டியெழுப்பவும் அழைக்கிறது.

Loading