கடந்த ஒரு வாரமாக, பிரான்ஸ் முழுவதும் உயர்நிலைப் பள்ளிகளில் சிக்கன நடவடிக்கைகளுக்கும் பொலிஸ் அடக்குமுறைக்கும் எதிராக நடைபெற்றுவரும் போராட்டங்கள், அரசுடனான நேரடி மோதலாக வளர்ச்சியடைந்துள்ளன. பாரிஸுக்கு அருகிலுள்ள கிரெதெய் (Créteil) நகரின் ஒரு உயர்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 21 அன்று தொடங்கிய பள்ளி ஆக்கிரமிப்புப் போராட்டங்கள், செப்டம்பர் 29 அன்று நடைபெற்ற பொதுத்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தத்தின்போது நாடு முழுவதும் பரவியதுடன், அந்த ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்குப் பிறகு போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
பிரான்சில் உள்ள சுமார் 3,000ம் உயர்நிலைப் பள்ளிகளில் கால் பகுதியளவிலான பள்ளிகள், மாணவர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளன அல்லது இளைஞர்கள் ஒன்றுகூடுவதைத் தடுப்பதற்காக அரசாங்கத்தால் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன.
பதவிக்காலம் முடியும் தறுவாயில் உள்ள ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் கட்டவிழ்த்துவிட்டுள்ள கொடூரமான பொலிஸ் அடக்குமுறைக்கு எதிராக ஆத்திரம் அதிகரித்து வருகிறது. கடந்த திங்கட்கிழமையிலிருந்து 5,000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறார்கள். பலர் அவசர அவசரமாகப் போலி நீதிமன்றங்களின் முன் நிறுத்தப்பட்டனர். இளைஞர்களை பொலிசார் தாக்கும் காணொளிகள் மில்லியன் கணக்கானோரால் பார்க்கப்பட்டுள்ளன. செயின்துவான்-அமோன் என்ற இடத்தில் 14 வயது சிறுவனின் முகத்தில் மிக அருகில் இருந்து கண்ணீர்ப் புகைக் குண்டு வீசும் கருவியால் சுடுவதும், அலென்சோன் என்ற இடத்தில் 14 வயது சிறுமியின் கழுத்தைப் பிடிப்பதும், டூர்ஸில் உள்ள பால்சாக் உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் ஒரு இளைஞன் கண்ணை இழக்கும் அபாயத்தில் விடப்படுவதும் அந்தக் காணொளிகளில் காட்டப்பட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமையன்று, இந்தப் போராட்டம் பல்கலைக்கழகங்களுக்கும் பரவியது. அன்று காலை பாரிஸ், லியோன், மார்சேய், லில், துலூஸ், மொண்ட்பெலியே, ரென், ரூவான், ரென்ஸ், புவாற்றியே, டிஜோன் மற்றும் பிரெஸ்ட் ஆகிய நகரங்களில் உள்ள வளாகங்கள் உட்பட 29 பல்கலைக்கழகங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமையன்று, CGT, CFDT, FO, FSU, UNSA மற்றும் SUD ஆகியவற்றைக் கொண்ட அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டணி, அக்டோபர் 6 செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய கல்வித்துறை வேலைநிறுத்தத்திற்குக் கூட்டாக அழைப்பு விடுத்தது.
ஆளும் வர்க்கமானது, 1968 மே மாதத்தைப் போன்ற ஒரு சூழலையிட்டு தெளிவாக அஞ்சுகிறது. அப்போது சேர்போன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டமைக்கு எதிரான போராட்டங்கள், பிரெஞ்சு வரலாற்றில் மிகப்பெரிய பொது வேலைநிறுத்தம் வெடிப்பதற்கு வழிவகுத்தன.
பிரெஞ்சு அதிகாரிகள் முக்கிய நகரங்களில் பொதுப் போக்குவரத்தை அவசரகால நடவடிக்கையாக நிறுத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களின் தாக்குதலில் இருந்து போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக எனக் கூறி, மார்சேய், கிரெனோபிள் ஆகிய நகரங்களில் போக்குவரத்து நிர்வாகங்களும் தொழிற்சங்கங்களும் இணைந்து முழு அமைப்பையுமே முடக்கியதால், பெருந்திரளான பயணிகள் நடுவழியில் தவிக்க நேர்ந்தது. துலூஸில் பல்கலைக்கழகப் பகுதிக்கான போக்குவரத்துச் சேவை துண்டிக்கப்பட்டது; ஸ்ட்ராஸ்பேர்க், மூல்லூஸ் ஆகிய இடங்களில் ட்ராம் (trams) சேவைகள் நிறுத்தப்பட்டன.
மக்ரோன் அரசாங்கமும் நாவ-பாசிச தேசிய பேரணியும் (RN), இந்தப் போராட்டங்கள் ஜோன்-லுக் மெலன்சோனின் அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சியின் ஒரு கம்யூனிச சதி என்று கண்டனம் தெரிவித்தன. அவசரமாக கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் செபாஸ்டியன் லூகோர்னுவின் உதவியாளர் ஒருவர் கூறுகையில், பிரெஞ்சு உளவுத்துறை இந்தப் போராட்டங்களை LFI மற்றும் அதன் “தீவிர-இடதுசாரி பினாமிகள்” செய்துள்ள ஒரு “சூழ்ச்சி” என்று அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார். RN தலைவர் மரின் லூ பென் அவற்றை “தொழில்முறையாளர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு, அடிபணியாத பிரான்ஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்பார்வையிடப்படும் கலவரங்கள்” என்று குறிப்பிட்டார்.
ஆனால், அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டணியானது, மெலன்சோனையும் அவரது அரசியல் துணைக் கட்சிகளையும் போலவே, போராட்டங்களுக்குத் தலைமை தாங்குவதற்கு அல்ல, மாறாக அவற்றைத் திசைதிருப்பவே முயன்று வருகிறது. பெருமளவில் வெறுக்கப்பட்ட மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுகளுக்கு எதிராக 2023ஆம் ஆண்டில் நடைபெற்ற பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தை காட்டிக்கொடுத்ததற்காக, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் குறிப்பிடத்தக்க பிரிவினரிடையே அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டணி மதிப்பிழந்துள்ளது. வேலைநிறுத்தம் உச்சத்தில் இருந்தபோது, உயர்மட்ட தொழிற்சங்க அதிகாரிகள் தொலைக்காட்சியில் தோன்றி, மக்ரோனுக்கு எதிரான சமூகக் கோபத்தைக் கண்டு தாங்கள் அஞ்சுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, 1968-க்குப் பிறகு பிரான்சில் நடந்த மிகப்பெரிய வேலைநிறுத்த இயக்கத்தை அது பலவீனப்படுத்தி, இறுதியில் முடக்கியது.
கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்குமாறு வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்த மெலன்சோன், 1980 மற்றும் 1990-களில் சோசலிஸ்ட் கட்சியின் (PS) அரசாங்கங்கள் கடைப்பிடித்த கொள்கைகளை மீண்டும் கொண்டுவருவதாகவும் உறுதியளித்தார். சோசலிசக் கட்சி அமைச்சர் லியோனல் ஜோஸ்பன் 1986ஆம் ஆண்டிலும் 1990ஆம் ஆண்டிலும் உயர்நிலைப் பள்ளிப் போராட்டக்காரர்களைச் சந்தித்ததாகவும், “இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு 4.5 பில்லியன் கொடுக்கப்பட்டது” என்றும் குறிப்பிட்ட மெலன்சோன், “சரி, பில்லியன்களை வெளியே எடுங்கள். அது எப்படிச் செய்வதென்று எனக்குத் தெரியும்” என்றும் கூறினார்.
ஆனால் உருவெடுத்து வருவது, முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு அழுத்தம்கொடுத்து வழங்கப்படும் சீர்திருத்தங்களால் தீர்க்கப்படக்கூடிய ஒரு தேசியப் போராட்ட இயக்கம் அல்ல. இது, ஒருபுறம் முதலாளித்துவ தன்னலக்குழுவுக்கும் பொலிஸ் அரசுக்கும், மறுபுறம் சிக்கன நடவடிக்கைகள், நவ-பாசிசம் மற்றும் போருக்கு எதிரான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் இடையிலான சமரசம் செய்ய முடியாத வர்க்க மோதலாகும். மேலும், இது சர்வதேச அளவில் விரிவடைந்து வரும் ஒரு மோதலாகும்.
ஸ்பெயினில், ஒரு வாரத்திற்கு முன்பு 87 வயதான மரிகார்மென் என்பவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் கோரும் உயர் வாடகைகளுக்கும், வெளியேற்றப்படுவதுக்கும் எதிராக மாபெரும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. வெளியேற்றப்படுவதுக்கு பகுதியளவிலான தடை விதிக்கும் முன்மொழிவை நாடாளுமன்றம் வாக்கெடுப்பில் தோற்கடித்ததையடுத்து, போராட்ட முகாம்கள் மாட்ரிட்டிலிருந்து பார்சிலோனா, செவில்லே, பம்ப்லோனா, பில்பாவோ ஆகிய நகரங்களுக்குப் பரவின. இந்த நகரங்களிலும், வலென்சியா, கிரனாடா, முர்சியா மற்றும் காடிஸ் ஆகிய இடங்களிலும் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டங்களுக்கு முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை மாட்ரிட்டில் உள்ள வாடகைதாரர்கள் சங்கம் வீட்டு வசதிக்காக ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.
ஐரோப்பா முழுவதும் வேலைநிறுத்தங்களும் சமூகப் போராட்டங்களும் வெடித்து வருகின்றன. போர்த்துக்கலில், 15 சதவீத ஊதிய உயர்வைக் கோரி பொது நிர்வாகத் தொழிலாளர்கள் ஒருநாள் தேசிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ள தொடர்ச்சியான பணிசார் போராட்டங்களின் ஒரு பகுதியாகும். கடந்த வியாழக்கிழமையன்று, லியேஜ் நகரைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், பிரான்சில் தொடங்கிய போராட்ட இயக்கத்தை பெல்ஜியத்திற்கும் கொண்டு சென்றனர். ஜேர்மனியில், மீள் இராணுவமயமாக்கல் மற்றும் கட்டாய இராணுவ சேவை முறைக்கு எதிராக இளைஞர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
நெரிசல் மிகுந்த வகுப்பறைகள் மற்றும் கட்டுப்படியாகாத வீட்டு வாடகைகள் முதல் குறைந்த ஊதியங்கள் மற்றும் கட்டாய இராணுவ சேவை வரை, இந்தப் போராட்டங்களை உந்தித் தள்ளும் பிரச்சினைகள் அனைத்தும், தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி, போரின் விரிவாக்கம், ஒட்டுமொத்த சமூகமும் முதலாளித்துவ தன்னலக்குழுவின் நலன்களுக்கு அடிபணியச் செய்தல் ஆகியவற்றுடன் நேரடியாகப் பிணைந்துள்ளன.
ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளைப் போலவே, பிரான்சும், அமெரிக்க இறக்குமதி வரிகள், ஈரான் மீதான போரின் மத்தியில் பாரசீக வளைகுடா எரிசக்தி விநியோகத்தின் மீது அமெரிக்கா விதித்துள்ள முற்றுகை, சீனச் சந்தைகளின் இழப்பு, ரஷ்யாவுடனான போருக்காகக் கடுமையாக உயர்ந்து வரும் இராணுவச் செலவினம், தாங்க முடியாத அரசு கடன் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தாக்கத்தின் கீழ் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரான்சின் பில்லியனர்களின் செல்வம் பதினான்கு மடங்கு அதிகரித்து 1.1 டிரில்லியன் யூரோவுக்கு மேல் ஆகியுள்ளது. அதே வேளையில், பிரான்சின் அரசு கடன் ஐந்து மடங்கு அதிகரித்து 3.5 டிரில்லியன் யூரோவைத் தாண்டியுள்ளது. லூகோர்னுவின் 54 பில்லியன் யூரோ சிக்கன நடவடிக்கைக்கான வரவு-செலவுத் திட்டமும், நவ-பாசிச RN-இன் 125 பில்லியன் யூரோ வெட்டுகளுக்கான அழைப்பும், எந்தவொரு அர்த்தமுள்ள சீர்திருத்தத்தையும் சகித்துக்கொள்ள தன்னலக்குழு மறுப்பதையே வெளிப்படுத்திக் காட்டுகின்றன.
ஐரோப்பிய முதலாளித்துவத்தின் நெருக்கடியானது, ரஷ்யாவுடனான போரின் பொறுப்பற்ற தீவிரப்படுத்தலில் மிகக் கூர்மையாக வெளிப்படுகிறது. அணு ஆயுதங்களைக் கொண்டு பதிலடி கொடுக்கப்போவதாக மாஸ்கோ எச்சரித்துள்ள போதிலும், காலினின்கிராட்டை முற்றுகையிட ஐரோப்பிய சக்திகள் தயாராகி வருகின்றன. பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலும் இராணுவத்திற்குத் திருப்பிவிடப்படும் பல பத்து பில்லியன் யூரோக்கள், வெளிநாடுகளில் கொள்ளையடிப்பதற்கான போர்களுக்குத் தயாராவதற்கும், உள்நாட்டில் அடக்குமுறைப் படைகளைக் கட்டியெழுப்புவதற்கும் நோக்கம் கொண்டவை. கண்டம் முழுவதும் தற்போது வெடித்துக் கிளம்பும் போராட்டங்கள், அந்த சக்திகள் ஒடுக்குவதற்குத் தயார்ப்படுத்தப்பட்டு வரும் வர்க்க முரண்பாட்டையே வெளிப்படுத்துகின்றன.
இந்தப் போராட்டங்கள் முன்வைக்கும் தீர்க்கமான பிரச்சினை, சிக்கன நடவடிக்கைகள், நவ-பாசிசம் மற்றும் போருக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் நனவுபூர்வமான அரசியல் இயக்கமாக அவற்றை எவ்வாறு ஐக்கியப்படுத்தி வளர்த்தெடுப்பது என்பதேயாகும். மாணவர் போராட்டங்களால் தாமாகவே அரசு இயந்திரத்தைத் தோற்கடிக்க முடியாது. அவர்களது போராட்டமானது, தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டிய அவசியத்தை முன்வைக்கிறது. அதே வேளையில், பொலிஸ் அடக்குமுறைக்கு எதிராக இளைஞர்களைப் பாதுகாக்கவும், ஊதியம், வேலைவாய்ப்பு, வீட்டுவசதி, சமூக சேவைகள் மற்றும் போர் தொடர்பான வளர்ந்து வரும் போராட்டங்களுடன் இந்தப் போராட்டத்தை இணைக்கவும் தொழிலாளர்கள் முன்வர வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சி (PES), பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பணியிடங்களில் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதை முன்னிறுத்துகிறது. இந்தக் குழுக்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் கட்சிகளிடமிருந்து சுயாதீனமாகச் செயல்பட வேண்டும். இத்தகைய குழுக்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், பொலிஸ் அடக்குமுறை மற்றும் கைதுகளை எதிர்க்கவும், தொழிற்சங்க அமைப்புகளால் திணிக்கப்படும் தனிமைப்படுத்தலை உடைத்தெறியவும், மேலும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த இயக்கத்தைத் தயார்படுத்தவும் ஒரு வழிமுறையை வழங்கும்.
இந்த அணுகுமுறை மார்க்சிச இயக்கத்தின் வரலாற்றில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது. 1935-36ல் பிரான்சில் வெடித்த வர்க்கப் போராட்டங்களுக்கு மத்தியில், லியோன் ட்ரொட்ஸ்கி போராட்டத்திலிருந்து நேரடியாக எழும் நடவடிக்கைக் குழுக்களுக்கு அழைப்பு விடுத்தார். அவை தொழிலாளர்களைப் பட்டறைக்குப் பட்டறை, தொழிற்சாலைக்குத் தொழிற்சாலை, குடியிருப்புப் பகுதிக்குக் குடியிருப்புப் பகுதி, நகரத்துக்கு நகரம் என இணைக்க வேண்டும் என்றும், அதன் மூலம் வெகுஜனங்களே தமது போராட்டத்தை ஒருங்கிணைத்து விரிவுபடுத்தக்கூடிய சுயாதீனமான அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதே அடிப்படைப் பிரச்சினை இன்று சர்வதேச அளவில் முன்வைக்கப்படுகிறது. பிரான்சில் வளர்ந்து வரும் போராட்டங்களை, ஸ்பெயினில் கட்டுப்படியாகாத வீட்டுவசதிக்கு எதிரான போராட்டங்கள், போர்த்துக்கலில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள், ஜேர்மனியில் கட்டாய இராணுவ சேவை மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான எதிர்ப்பு, அல்லது ஐரோப்பா முழுவதும் வளர்ந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்கள் ஆகியவற்றிலிருந்து பிரித்துவிட முடியாது. இந்த இயக்கங்கள் தேசிய எல்லைகளைக் கடந்து, சிக்கன நடவடிக்கைகள், அடக்குமுறை மற்றும் போர் தீவிரமடைவதற்கு எதிரான பொதுப் போராட்டத்தில் நனவுபூர்வமாக ஐக்கியப்படுத்தப்பட வேண்டும் என்று PES வாதிடுகிறது.
PES-ஐப் பொறுத்தவரை, இதற்குத் வெறுமனே ஒரு பரந்த போராட்ட இயக்கம் மட்டுமல்லாமல், சமூக சமத்துவமின்மையையும் போரையும் உருவாக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு சோசலிச அரசியல் முன்னோக்கும் தேவைப்படுகிறது. இது, தொழிலாள வர்க்கத்தில் சர்வதேச அரசியல் தலைமையை உருவாக்குவதுடன், சுயாதீனமான போராட்ட அமைப்புகளைக் கட்டியெழுப்புவதை இணைக்கிறது - அதாவது, சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி மூலமாகவும், ஐரோப்பாவெங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் மற்றும் PES ஐக் கட்டியெழுப்புவதன் மூலமாகவும் இது இணைக்கிறது.
