சவூதி அரேபியாவில் இலங்கை புலம்பெயர் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக எதிர்ப்பு அதிகரிக்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சவூதி அரேபிய நீதிமன்றம் இலங்கை புலம்பெயர் தொழிலாளியான சிவராசா அனோஜனுக்கு விதித்துள்ள மரண தண்டனை பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. இந்த காட்டுமிராண்டித்தனமான தண்டனை நிபந்தனையின்றி இரத்து செய்யப்படுவதுடன் அனோஜன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

சிவராசா அனோஜன்

சவூதி அரேபியாவின் அல்-அஹ்சா குற்றவியல் நீதிமன்றம், முகநூல் பதிவொன்றில் இஸ்லாமிய இறைத்தூதர் முஹம்மதுவை அவமதித்ததாகக் கூறி ஜூலை மாதம் அனோஜனை குற்றவாளியாகத் தீர்ப்பளித்தது. அனோஜன் தனது வருத்தத்தைத் தெரிவித்து காணொளி அறிக்கையொன்றை வெளியிட்டதுடன், முதலாவது பதிவையும் விரைவாக நீக்கியிருந்தபோதிலும், சவூதி அரேபியாவின் இணையக் குற்றத் தடுப்புச் சட்டத்தின் 6வது பிரிவின் முதல் பந்தியின் கீழ் கிடைக்கக்கூடிய அதிகபட்ச தண்டனையான ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால்கள் (800,775 அமெரிக்க டொலர்கள்) அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டது.

எனினும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், செப்டெம்பர் 21 அன்று சவூதி மேன்முறையீட்டு நீதிமன்றம் அனோஜனின் தண்டனையை மரண தண்டனையாக அதிகரித்துள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தனது தண்டனையைக் குறைக்குமாறு அனோஜன் மேன்முறையீடு செய்திருந்தார், ஆனால் மரண தண்டனையாக தண்டனையை அதிகரிக்குமாறு அரச தரப்பு வழக்குத்தொடுநர் முன்வைத்திருந்த தனியான மேன்முறையீட்டை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

27 வயதான அனோஜன், இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் உள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்தவர். தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்கள் வாழும் இப்பகுதியில் முஸ்லிம்களே பெரும்பான்மையாக உள்ளனர். அவர் சவூதி அரேபியாவில் ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே பணியாற்றியிருந்ததோடு மேலும் இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்தார்.

அனோஜன் இயந்திரப் பொறியியல் கல்வியை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் பயின்ற பின்னர், மின்கலத் தொழிற்சாலையொன்றில் தொழில்நுட்பப் பொறியியலாளராகப் பணியாற்றுவதற்காக கடந்த ஆண்டு சவூதி அரேபியாவுக்குச் சென்றதாக அவரது இளைய சகோதரர் சிவராஜா ரெம்சிதன் உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்தார்.

அவர்களது குடும்பத்தில் நான்கு உறுப்பினர்கள் இருப்பதோடு அவர்களது தந்தையோ தாயோ தொழில் செய்யவில்லை. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தனது சகோதரரை விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் முழுநேரமாக ஈடுபடுவதற்காக காப்புறுதி நிறுவனமொன்றில் தான் செய்துவந்த வேலையை விட்டுவிட நிர்ப்பந்திக்கப்பட்டதாக ரெம்சிதன் தெரிவித்தார்.

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தி உள்ளூர் ஊடகங்களில் வெளியானதிலிருந்து, குறிப்பாக இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அனோஜனை உடனடியாக விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தலையிட வேண்டும் எனக் கோரி, நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். செப்டெம்பர் 22 அன்று, சர்வதேச மன்னிப்புச் சபையின் உதவியுடன் அனோஜனின் உறவினர்கள் கொழும்பிலுள்ள சவூதி தூதரகத்தில் மேன்முறையீடு ஒன்றை சமர்ப்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

20 செப்டெம்பர் 2026 அன்று சம்மாந்துறையின் வலத்தாப்பிட்டியவில் அனோஜனை விடுதலை செய்யக் கோரி மனுவில் கையெழுத்திடும் மக்கள் [Photo: Facebook/newsinlanka]

இந்தத் தண்டனை, சவூதி அரேபியாவின் ஏகாதிபத்திய ஆதரவுபெற்ற முடியாட்சியின் கொடூரமான மற்றும் பிற்போக்கு தன்மையை மீண்டும் அம்பலப்படுத்துகிறது. இதனை நியாயப்படுத்துவதற்காகக் கூறப்படும் ஷரியா சட்டம், வர்க்க ஆட்சி மற்றும் ஒடுக்குமுறைக்கான ஒரு கருவியாகும். சவூதி ஆளும் வர்க்கத்திற்கு பல்லாயிரக்கணக்கான மில்லியன் டொலர் வருமானத்தை உருவாக்குகின்ற, பெருமளவில் சுரண்டப்படுகின்ற புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட, தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் அச்சுறுத்தி ஒடுக்குவதற்கு முடியாட்சி இதைப் பயன்படுத்துகிறது.

சவூதி அரேபியாவில் மரண தண்டனை வதிக்கப்பட்டவர்களில் ஏறத்தாழ பாதிப் பேர் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர். 2007 ஆம் ஆண்டு, கிழக்கு மாகாணத்தில் உள்ள மூதூரைச் சேர்ந்த 17 வயதான இலங்கை வீட்டுப் பணியாளரான ரிசானா நபீக், தான் பராமரித்து வந்த நான்கு மாதக் குழந்தையை கொலை செய்ததாக குற்றவாளியாகக் காணப்பட்டார். இந்தத் தீர்ப்பு நிர்ப்பந்தத்தின் மூலம் பெறப்பட்டது. அவர் 2013 ஜனவரி 9 அன்று கொல்லப்பட்டார்.

அனோஜனைப் போலவே, நபீக்கும் பல தசாப்தங்களாக நாட்டின் நீடித்த இனவாதப் போரினால் பேரழிவுக்குள்ளான இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட தொழிலாள வர்க்க குடும்பத்தின் இளம் உறுப்பினராவார்.

அந்த நேரம், புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் வெளிநாட்டுப் பணவரவுகளில் பெரிதும் தங்கியிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசாங்கம், சவூதி உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு அமைதியாக உடன்பட்டது.

2025 டிசம்பர் 21 அன்று, மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய சவூதி அமைப்பு (ESOHR), சவூதி அரேபியா 2024 ஆம் ஆண்டில் 345 மரண தண்டனைகளையும் 2025 ஆம் ஆண்டில் 347 மரண தண்டனைகளையும் நிறைவேற்றியதாகத் தெரிவித்தது. 2025 ஆம் ஆண்டின் எண்ணிக்கை ஒரு புதிய சாதனை என்றும், அந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளில் மிகப் பெரும்பான்மையானவை (79 சதவீதம்) உயிரிழப்பை ஏற்படுத்தாத குற்றங்களுக்காக, பிரதானமாக போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக விதிக்கப்பட்டவை என்றும் அது தெரிவித்தது.

2025 ஆம் ஆண்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 57 சதவீதமானளவு பெரும்பான்மையோர் வெளிநாட்டினராக இருந்தனர். இது 2024 ஆம் ஆண்டின் 31 சதவீதத்திலிருந்து அதிகரித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவில் தூக்கிலிடப்பட்ட 202 வெளிநாட்டவர்களில் 94 சதவீதம் பேர் உயிரிழப்பை ஏற்படுத்தாத போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகக் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தனர். ESOHR இன் கூற்றுப்படி, “அவர்களின் விசாரணைகளில் நியாயமான நடைமுறைகள் பெரும்பாலும் மீறப்பட்டிருந்தன.”

சவூதி அரேபியா ஒரு முழுமையான முடியாட்சி ஆகும். மன்னர் வரம்பற்ற அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார். பாராளுமன்றம் அல்லது வேறு எந்த ஜனநாயக நிறுவனத்தாலும் அவரது அதிகாரம் கட்டுப்படுத்தப்படவில்லை. அவர் அரச தலைவராகவும் அரசாங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

சவூதி அரேபியாவின் நடைமுறை ஆட்சியாளரான பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், 2018 அக்டோபர் 2 அன்று துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்தில், சவூதி நாட்டவரும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளருமான ஜமால் கஷோகியை கொடூரமாகக் கொலை செய்த குற்றவியல் நடவடிக்கைக்கு பொறுப்பானவராவார். பின் சல்மானின் கொலைக்கான நேரடிப் பொறுப்பை உறுதிப்படுத்திய உத்தியோகபூர்வ அமெரிக்க புலனாய்வு அறிக்கைகள் வெளியான போதிலும், குடியரசுக் கட்சி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி ஜோ பைடனும் சவூதி ஆட்சியாளரை தொடர்ந்து பாதுகாத்தனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியமனாது மத்திய கிழக்கில் வாஷிங்டனின் புவிசார் அரசியல் நலன்களுக்கு மிகவும் முக்கியமானதாக, அவரது ஆட்சியுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வருகிறது. ஈரானுக்கு எதிரான குற்றவியல் அமெரிக்க போருக்கு உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் பிரதான நாடாக சவூதி அரேபியா விளங்குகிறது.

சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக பொதுமக்களின் எதிர்ப்பு அதிகரித்து வருகின்ற நிலையில், இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் அவருக்காக நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளன. எனினும், கொழும்பு அரசியல்வாதிகளில் எவரும் மரண தண்டனை உட்பட சவூதி முடியாட்சியின் கொடூரமான ஒடுக்குமுறையைப் பற்றி, எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை. அத்துடன், அந்த நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இரக்கமற்ற நிலைமைகள் குறித்தும் அவர்கள் எதுவும் பேசவில்லை.

அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரைச் சந்தித்த பின்னர், செப்டெம்பர் 21 அன்று திசாநாயக தனது லிங்க்ட்இன் பதிவொன்றில், “மன்னிப்பு வழங்குமாறு கோரி சவூதி அரேபிய மன்னரிடம் உத்தியோகபூர்வ எழுத்துமூல இராஜதந்திர மேன்முறையீடு” சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வொன்றின் பக்க நிகழ்வில் சவூதி வெளிவிவகார அமைச்சரைச் சந்திக்க எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஹேரத் தெரிவித்தார். அப்போது அனோஜனின் மரண தண்டனையை மாற்றியமைக்க அல்லது குறைக்குமாறு அவர் கோரிக்கை விடுப்பார்.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அஸார்ட் நவாவி தலைமையிலான நான்கு பேர் கொண்ட சட்டக் குழுவொன்று சவூதி அரேபியாவுக்குச் சென்று, தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளைத் தயாரித்து முன்னெடுக்கவுள்ளது.

ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் உண்மையான அக்கறை புலம்பெயர் தொழிலாளர்களைப் பாதுகாப்பது அல்ல. மாறாக, அனோஜனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை, இலங்கையின் பொருளாதாரத்திற்கு பிரதான பணவரவு மூலமாக விளங்கும் சவூதி அரேபியாவுடனான அதன் உறவுகளைப் பாதிக்கக்கூடும் என்பதே அதன் கவலையாகும். மேலும், இந்தத் தண்டனைக்கு எதிரான வெகுஜன போராட்டங்கள் இலங்கையில் சமூக சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் அதிகரித்து வரும் வெகுஜன கோபத்தை மேலும் தூண்டிவிடும் என்றும் அரசாங்கம் அஞ்சுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்படும் பரந்த சிக்கன நடவடிக்கைகளை அது திணித்து வருகின்ற நிலையில், இலங்கையின் ஆளும் உயரடுக்கினர் எதிர்ப்பை அச்சுறுத்துவதற்கு தங்களது சொந்த கொடூரமான வழிமுறைகளை நாடுகின்றனர். 2022 வெகுஜன எழுச்சியில் பங்கேற்ற 12 பேருக்கு, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கொலை செய்ததாகப் புனையப்பட்ட வழக்கில் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைகள் இதற்கு சான்றாகும்.

Loading