கடந்த மாத இறுதியில் நடைபெற்ற வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் மாநாடு, 1983 முதல் ஆட்சியில் இருந்த இலங்கை அரசாங்கங்கள் முன்னெடுத்த 26 ஆண்டுகால தமிழர்-விரோத இனவாதப் போரினால் ஏற்பட்ட பேரழிவை எதிர்கொண்ட தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை ஏகாதிபத்திய சக்திகளிடம் முறையிடுவதன் மூலம் தீர்க்க முடியும் என்று கூறிக்கொள்ளும் தமிழ் தேசியவாத அரசியலின் வங்குரோத்தை அம்பலப்படுத்தியது.
தமிழ் தேசியவாதக் கட்சிகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பல்வேறு “சிவில் சமூக” அமைப்புகளால், ஆகஸ்ட் 30 அன்று நினைவுகூறப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தை முன்னிட்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இளைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், 1974 ஆம் ஆண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை இடம்பெற்ற நினைவிடத்திலிருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா மண்டபம் வரை பேரணியாகச் சென்று, போரின்போது இடம்பெற்ற காணாமல் ஆக்குதல்களால் தொடர்ந்தும் எதிர்கொள்ளும் துயரத்தை எடுத்துக்காட்டினர்.
போராட்டக்காரர்கள், தங்களது காணாமல் ஆக்கப்பட்ட அன்புக்குரியவர்களின் படங்களை ஏந்தியவாறு “எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் எங்கே?”, “இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவினர்கள் எங்கே?”, “காணாமல் போனோர் அலுவலகம் வேண்டாம்! நாம் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்!” போன்ற கோஷங்களை எழுப்பினர்.
கூட்டத்தில் பங்கேற்ற பலர், தமது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்ன என்பதை அறிந்துகொள்ள அவர்களின் இடைவிடாத போராட்டத்தைப் பற்றி உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்களுடன் கருத்துப் பகிர்ந்தனர்.
கொழும்பு அரசாங்கத்தின் 26 ஆண்டுகாலப் போர், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் 2009 மே மாதம் முடிவுக்கு வந்தபோது, சுமார் 100,000 பேர் கொல்லப்பட்டிருந்தனர். ஐ.நா. தகவலின்படி, இராணுவத் தாக்குதலின் விளைவாக இறுதிக் கட்டத்தின் சில மாதங்களில் மட்டும் சுமார் 40,000 தமிழ் பொதுமக்கள் உயிரிழந்தனர். போர் முடிவடைந்த பின்னர் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வெறுமனே காணாமல் ஆக்கப்பட்டதாக குடும்பங்கள் முறையிடுகின்றன.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவர் யோகராசா கனகரஞ்சனி, மதகுருமார் மற்றும் தமிழரசுக் கட்சியினதும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினதும் தலைவர்களும் மாநாட்டு மேடையில் அமர்ந்திருந்தனர்.
போர் முடிவடைந்து கடந்த 17 ஆண்டுகளில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை குறித்த உண்மையைக் கண்டறிவது உட்பட போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கு ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடனான ஒரு “சர்வதேச பொறிமுறை” தமிழ் மக்களுக்குத் தேவை என்று இந்த அமைப்புகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளன.
அவர்கள் உதவிக்காக “சர்வதேச சமூகத்திடம்” —அதாவது, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டனிடம்— வேண்டுகோள் விடுத்தனர். போர்க்குற்றங்கள் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களின் இரத்தக்கறை படிந்த பதிவைக் கொண்ட இந்த சக்திகள், குறிப்பாக அமெரிக்கா, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு ஆதரவளிக்கும் என்ற மாயையை தமிழ் உயரடுக்குக் கட்சிகள் பரப்பின. இந்தக் கட்சிகளுடன் இணைந்த செயற்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கமும் இதே நிலைப்பாட்டையே ஊக்குவிக்கின்றது.
எவ்வாறெனினும், பார்வையாளர்கள் முன் உரையாற்றிய கனகரஞ்சனி, “பிராந்திய அரசியல், புவிசார் அரசியல் பரிசீலனைகள்” மற்றும் “பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களும் ... மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான எமது முயற்சிகளுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளன” என்று ஒப்புக்கொண்டார்.
“போரின் இறுதிக் கட்டங்களில் எங்களைப் பாதுகாக்கத் தவறிய சர்வதேச சக்திகளும் நிறுவனங்களும், அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட பொறுப்புடன் பதிலளிக்கவும் தவறிவிட்டன” என்றும் அவர் ஒப்புக்கொண்டார். இந்த சக்திகள் கொடூரமான கொள்கைகளை முன்னெடுத்த போதிலும், தங்களுடைய சங்கம் அதே சக்திகளிடமே தொடர்ந்து முறையிட்டு வந்தது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
தங்களது வேண்டுகோள்களை ஒடுக்குவதிலும் மற்றும் அவற்றின் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களைப் முன்நகர்த்துவதிலும் ஏகாதிபத்திய சக்திகளதும் அதே போல் இந்தியாவினதும் குற்றவியல் பொறுப்பை, சில தயக்கங்களுடனாவது, பகிரங்கமாக ஒப்புக்கொண்டு அவர் இத்தகைய கருத்துக்களை வெளியிட்டது இதுவே முதல் தடவை ஆகும். எனினும், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, இந்த சக்திகள் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு ஆதரவளிக்கும் என்று, துல்லியமாக இதே மோசடி மாயையை பரப்புவதன் அடிப்படையிலேயே, கானாமல் போனோரின் உறவினர்களின் சங்கங்கள் துயரப்படும் குடும்பங்களை அணிதிரட்டியிருந்தன.
இந்த கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட்ட பின்னரும், கனகரஞ்சனியும் தமிழ் கட்சித் தலைவர்களும் புதியதொரு வேலைத்திட்டத்தை முன்வைத்தார்களா? இல்லை. மாறாக, அவர் அதே வேண்டுகோளை பரிதாபகரமாக மீண்டும் முன்வைத்தார்: “ஒரு சமூகத்தின் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமென்றால், அரசியல் நலன்கள் மற்றும் மூலோபாயக் கணக்கீடுகளுக்கு அப்பால், நீதிக்கான அவர்களின் கோரிக்கை செவிமடுக்கப்பட வேண்டும்,” என அவர் கூறினார். இந்த சக்திகள் “சர்வதேச மனித உரிமைத் தரங்களுக்கு இணங்க, உண்மையைக் கண்டறிவதற்கும் பொறுப்புக்கூறலுக்கும் சுயாதீனமான, பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட பொறிமுறைகளை” உருவாக்க உதவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழ் கட்சிகளின் தலைவர்களும் கானாமல் போனோரின் உறவினர்களின் அமைப்பும், பெரும் வல்லரசுகளின் ஆதரவு தொடர்பாக தாம் ஒரு தசாப்த காலமாகப் பரப்பி வந்த மாயை சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் தகர்ந்து விட்டதை நன்கு அறிந்துள்ளனர். எனவே, தாம் ஏகாதிபத்திய-சார்பு நிலைப்பாட்டைத் தொடர்ந்து பின்பற்றுவதற்கு ஏதுவாக, “தமிழ் சமூகத்தின் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு” ஏதாவது பாசாங்கை காட்டுமாறு இந்த சக்திகளிடம் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அடுத்துவந்த பேச்சாளர்களின் உரைகளில் இது மேலும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன், “சர்வதேச சமூகத்திடம்” [கொழும்பு அரசாங்கத்தின் மீது] “அழுத்தம் கொடுக்குமாறும்”, போர்க்குற்ற விசாரணைகளில் “நேரடி சர்வதேச மேற்பார்வை” மற்றும் “சர்வதேச தலைமைத்துவம்” வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
வோஷிங்டனைப் பாராட்டிய அவர், 2011ல் இலங்கை தொடர்பான முதலாவது மனித உரிமைகள் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) கொண்டுவரப்பட்டதில் இருந்து, அமெரிக்கா குறிப்பிடத்தக்க ஆதரவை வழங்கி வந்துள்ளதாகத் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தனது “ஆழ்ந்த பாராட்டுக்களையும்”, இந்தியாவுக்கு தனது “நன்றியையும்” அவர் தெரிவித்தார்.
போரின் இறுதி மாதங்கள் தொடர்பான அக்கறையின் காரணமாகவே, அமெரிக்காவானது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய நாடுகளுடன் இணைந்து 2011 முதல் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தீர்மானங்களை முன்வைத்ததாக தமிழரசுக் கட்சித் தலைவர் புழுகினார். அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் கொழும்பு அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திய போருக்கு ஆதரவளித்தன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நிதியுதவிக்கும் இராணுவத் தளவாடங்களைப் பெறுவதற்காகவும் பெய்ஜிங்கை அதிகளவில் சார்ந்துகொள்ளத் தொடங்கியபோதே, அமெரிக்கா “இராணுவ அத்துமீறல்கள்” தொடர்பாக மோதலின் இறுதி மாதங்களிலேயே கவலைகளை வெளிப்படுத்தத் தொடங்கியது.
சீனாவுக்கு எதிரான இராணுவக் கட்டியெழுப்பலின் ஒரு பகுதியாக, பெய்ஜிங்கிலிருந்து விலகி நிற்குமாறும், சீனாவை இராஜதந்திர ரீதியாகவும் மூலோபாய ரீதியாகவும் தனிமைப்படுத்துவதற்கான வாஷிங்டனின் “ஆசியாவில் முன்னிலை” கொள்கைக்கு ஆதரவளிக்குமாறும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவே வொஷிங்டன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமைகள் தொடர்பாக வெளிப்படுத்திய போலியான அனுதாபத்தைப் பயன்படுத்தியது. சீனாவின் எழுச்சியை அமெரிக்கா ஒரு பிரதான அச்சுறுத்தலாக அடையாளம் கண்டது. ராஜபக்ஷ அமெரிக்காவை எதிர்க்கவில்லை, ஆனால் பெய்ஜிங்குடனான உறவுகளைத் துண்டிப்பதில் தயக்கம் காட்டினார். பின்னர், 2015 ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷவைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கு பிரதான அமைச்சரான மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து, வாஷிங்டன் கொழும்பில் ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையை ஒருங்கிணைத்தது.
சிறிசேன தலைமையிலான அரசாங்கம் நாட்டின் வெளியுறவுக் கொள்கையை வாஷிங்டனுக்கு சாதகமாக மாற்றியது. அதன் பின்னர், தற்போதைய ஜனாதிபதி திசாநாயக தலைமையிலான அரசாங்கம் உட்பட ஆட்சியில் இருந்த இலங்கை அரசாங்கங்கள், அமெரிக்காவுடனும் தெற்காசியாவில் அதன் கூட்டாளியான இந்தியாவுடனும் வெளியுறவுகளையும் பாதுகாப்பு உறவுகளையும் ஆழப்படுத்தியுள்ளன.
அனைத்து தமிழ் கட்சிகளையும் உள்ளடக்கிய முன்னாள் கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அமெரிக்காவின் கொள்கையை ஆதரித்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவடைந்த பின்னரும், அதன் பங்காளிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட ஏனைய குழுக்களும், அமெரிக்காவையும் இந்தியாவையும் ஆதரிப்பதன் மூலம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகளவிலான அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு கொழும்பு அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்த சக்திகளிடம் வேண்டுகோள்விடுக்க முடியும் என்ற பொதுவான கொள்கையைத் தொடர்ந்தும் கடைப்பிடித்தன.
சமீபத்திய ஆண்டுகளிலும் மாதங்களிலும், இந்த நிலைப்பாடு, ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆதரவுடன் காஸா மீது இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலை ஆக்கிரமிப்பையும், ஈரானுக்கு எதிராக வாஷிங்டன் நடத்தும் போரையும் ஆதரிக்கும் அளவுக்கு மிகக் கொடூரமான வடிவத்தை எடுத்துள்ளது.
ஒடுக்கப்பட்ட நாடான பாலஸ்தீன் மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பைக் கண்டிக்க தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஏனைய கட்சிகளும் மறுத்தன. இறுதி இராணுவ நடவடிக்கைகளின்போது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு “உலகம்” எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதால், தாங்கள் மற்றவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய கடப்பாடு இல்லை என்று அவர்கள் பொய்யாகக் கூறினர். ஈரானைப் பொறுத்தவரை, அது கொழும்பு அரசாங்கம் நடத்திய போருக்கு ஆதரவளித்திருந்ததாகவும், எனவே ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஆக்கிரமிப்பைத் தாங்கள் எதிர்க்கவில்லை என்றும் அவர்கள் வாதிட்டனர்.
வவுனியா தாயக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் எஸ். ராஜ்குமார், மார்ச் 4 அன்று வவுனியாவில் நடைபெற்ற போராட்டத்தின்போது, தனது தமிழ் தேசிய மக்கள் முன்னணி, “ஈரானுக்கு எதிராக எடுக்கப்பட்ட சர்வதேச நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி ட்ரம்பைப் பாராட்டுகிறது” என்று தெரிவித்ததுடன், தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ் கட்சிகள் மற்றும் காமாணல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான குழுக்களின் தலைவர்கள், தமிழ் உயரடுக்கிற்கான சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் துன்பங்களை அமெரிக்கா மற்றும் இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்கு பலியிட்டுள்ளனர். முதலாளித்துவ வளர்ச்சி பின்தங்கிய நாடுகளில், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் உயரடுக்கினர் வகிக்கும் துரோகமான பாத்திரம் இதுவாகும். ஒடுக்குமுறைகளை முன்னெடுக்கும் நாடுகளின் தொழிலாள வர்க்கம் உட்பட, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்புவதானது தங்களது முதலாளித்துவ அபிலாஷைகளுடன் மோதிக்கொள்ளும் என்பதால், அவர்கள் அதை கடுமையாக எதிர்க்கின்றனர்.
மறுபுறம், இலங்கை ஆளும் உயரடுக்கின் ஒரு குறிப்பிடத்தக்க பிரிவினர், சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் இராணுவக் கட்டியெழுப்பலுடன் இலங்கையை ஒருங்கிணைக்க முயன்று வருகின்றனர். இது இந்தப் பிரச்சினையின் மறுபக்கமாகும்—தற்போதைய மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) நிர்வாகம் உட்பட, கொழும்பில் உள்ள ஏகாதிபத்திய ஆதரவு கைக்கூலிகளால் இலங்கை ஆளப்படுகிறது. தமிழ் தலைவர்களுடன் உறவுகளை வளர்த்துக்கொள்ளும் அதேவேளை, அமெரிக்காவும் இந்தியாவும் கொழும்புக்கு ஆதரவளிக்கின்றன.
தமிழ் கட்சிகள், சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.-இலங்கை) மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க.) வேலைத்திட்டத்தை கடுமையாக எதிர்த்து வந்துள்ளன. எமது வேலைத்திட்டம், “தேசிய முதலாளித்துவத்தின்” அனைத்து கன்னைகளும், ஏகாதிபத்தியத்திலிருந்தும் ஏனைய பிற்போக்கு சக்திகளிலிருந்தும் முறித்துக்கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் போராட இலாயக்கற்றது என நிறுவிய ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாகும். அவர்கள் தொழிலாள வர்க்கத்தைக் கண்டு அஞ்சுகின்றனர்.
நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சோ.ச.க./பு.க.க., தமிழர்-விரோத இனவாதப் போரை எதிர்த்ததுடன், இன வேறுபாடுகளைக் கடந்து தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தவும், ஆதரவுக்காக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திருப்பவும் முயன்றது. இனவாதப் பாகுபாட்டை ஆழப்படுத்தி, தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தி ஒடுக்குவதற்கான ஒரு வழிமுறையாக, போரைத் தூண்டிவிட்டு முன்னெடுத்த முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கியெறியக் கூடிய ஒரே கொள்கை இதுவாகும். வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து இராணுவத்தை விலக்கிக்கொள்ளுமாறும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உட்பட போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறும் நாம் கோருகிறோம்.
இது, தெற்காசியாவிலும் சர்வதேச ரீதியிலும் சோசலிசக் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசின் வடிவில் தொழிலாளர்கள் மேலும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டமாகும்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் துயரத்தைத் தமது அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி, அவர்களை ஒரு முட்டுச்சந்துக்குக் கொண்டு சென்ற வலிந்து காணாமால் ஆக்கப்பட்டோரின் உறுவினர்கள் சங்கங்கள், தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஏனைய குழுக்களின் அதே தலைவர்களுக்கு, ஏகாதிபத்திய சக்திகளின் முன்னால் அடிவருடுவதைத் தவிர வேறு மாற்று எதுவும் இல்லை. இந்தக் கொள்கைகளை நிராகரித்து, மேலே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் சோ.ச.க. கேட்டுக்கொள்கிறது.
