இலங்கை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசினர்

ஒஸ்ட் 30 அன்று, இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் (வடக்கு–கிழக்கு) மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும் அணிசேர்ந்து யாழ்ப்பாண நகரில் உள்ள தந்தை செல்வா மண்டபத்தில் ஒரு மாநாட்டை நடத்தின.

ஐக்கிய நாடுகள் சபையின் “சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை” முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தனது குடும்பம் எதிர்கொண்ட துயர்மிகுந்த நிலைமையை உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) செய்தியாளர்களிடம் விளக்கியவர்களில் கிழக்கு மாகாணத்தின் மூதூர் நகரைச் சேர்ந்த 56 வயதான ஆர். கோமளாதேவியும் ஒருவர்.

ஆர். கோமளாதேவி

“எனது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரையும் உறவினர்களையும் இழந்துவிட்டேன். அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதால், நான் முற்றிலும் தனித்து விடப்பட்டுள்ளேன். 1995 இல், இராணுவத்தினர் எனது மாமாவையும் மாமியையும் வெட்டிக் கொன்று, அவர்களது உடல்களுக்குத் தீ வைத்தனர். இராணுவத்தினர் அவர்களது நான்கு மகன்களையும் கடத்திச் சென்றனர். பின்னர் அவர்களும் காணாமல் ஆக்கப்பட்டனர். 1990 இல் எனது தாத்தா, பாட்டி, தம்பி மற்றும் மருமகனும் காணாமல் ஆக்கப்பட்டனர்.

“2008 இல், எனது தந்தை, மூத்த மற்றும் இளைய சகோதரர்கள், கணவர் மற்றும் மைத்துனர் ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுவிட்டனர்.”

அவர்களைக் கண்டறிவதற்காகத் தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் அவர் மேலும் பேசினார்.

“அவர்களைத் தேடி நான் செல்லாத அரசாங்க அலுவலகமே இல்லை. ஐ.நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் (UNHCR), சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC), மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி செயலகம், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) மற்றும் பொலிஸ் நிலையங்கள் எனப் பல இடங்களுக்கும் புகார் அளிப்பதற்காக அலைந்து திரிந்துள்ளேன். இருந்தபோதிலும், இதுவரை எனக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை,” என்று அவர் கூறினார்

அவர் மேலும் கூறியதாவது: “போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்த பின்னரும் நாங்கள் இன்னமும் வீதிகளில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்காது என்பது எங்களுக்குத் தெரியும். ஏனெனில், அவர்கள் எங்களுடைய அன்புக்குரியவர்களைக் கொன்றுவிட்டார்கள். அவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்பதை நாங்கள் அறிய வேண்டும். அவர்களைக் கொன்றது யார்? எவ்வாறு கொன்றார்கள்?”

மாநாடு குறித்துப் பேசிய அவர், பலர் “நம்பிக்கையின்மையுடனேயே” அங்கு வந்ததாகக் குறிப்பிட்டார். “தங்களுடைய சொந்த நலன்களால் உந்தப்படும் இந்தச் சங்கத்தின் தலைவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை,” என்றும் அவர் கூறினார்.

வாழ்வாதார உதவிகள் வழங்கப்படும் எனத் தலைவர்கள் உறுதியளித்திருந்தபோதிலும், அவை எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. குற்றங்களை விசாரிப்பதற்கான “சர்வதேச பொறிமுறை” ஒன்றை உருவாக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அவர் குறிப்பாக விமர்சித்தார்.

“இது ஒரு மோசடியாகும். அந்தச் சர்வதேச அரசாங்கங்களும் இந்தியாவும் போருக்கு ஆதரவளித்தன. இந்த அரசாங்கங்களும் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும்.”

வறிய மக்களுக்காக அரசாங்கம் வழங்கும் வரையறுக்கப்பட்ட “அஸ்வெசும” கொடுப்பனவைத் தவிர, அவருக்கு வேறு எந்தவொரு நிதியுதவியும் கிடைக்கவில்லை. கோமளாதேவிக்கு முறையான வீடு இல்லை. மழை பெய்யும்போதெல்லாம் ஒழுகும் தற்காலிகக் குடிசையிலேயே அவர் வாழ்ந்து வருகிறார். கூலித் தொழில்களைச் செய்து தனது வாழ்க்கையை நடத்திவரும் அவருக்கு, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு அரசாங்கம் உறுதியளித்த நிவாரணப் பொதிகளும் கிடைக்கவில்லை.

அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் தயாவதி, வங்கியொன்றில் வேலைக்குச் சென்ற தனது மகனும் தம்பியும் காணாமல் போய்விட்டதாகக் கூறினார். “அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை எங்களால் கண்டறிய முடியவில்லை. இராணுவத்தினர் அவர்களைத் தடுத்து வைத்திருந்ததாக நாங்கள் நம்புகிறோம்.” மற்றொரு ஆண்டில் [அந்த ஆண்டை அவரால் நினைவுகூர முடியவில்லை], அவரது மற்றொரு மகனும் காணாமல் போனார்.

சுப்பிரமணியம் தயாவதி

அவரது தம்பியும் “வெள்ளை வான்” ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். “நான் அவர்களைத் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது: “திருகோணமலையில் ஒரு மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு இடங்களிலும் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. எங்களுடைய அன்புக்குரியவர்கள் இனி உயிருடன் இல்லை என்பது தெளிவாகிறது. இராணுவத்தினரும் துணை இராணுவக் குழுக்களும் எங்களுடைய சகோதரர்களையும் பிள்ளைகளையும் கொன்றுவிட்டதாக நான் நம்புகிறேன். எனினும், உண்மை எங்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். எங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.”

அவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மாதாந்தம் 8,500 ரூபாய் அஸ்வெசும கொடுப்பனவே அவருக்குக் கிடைக்கும் ஒரேயொரு வருமானமாகும். அவருக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் கொடுப்பனவும் நிறுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் செங்கலடியைச் சேர்ந்த துரைசாமி செல்லம்மா (81), 1996 ஆம் ஆண்டு முதல் தனது மகன் பாக்கியராசா காணாமல் ஆக்கப்பட்டிருப்பதாக எங்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் செங்கலடியில் உள்ள பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்தார். அங்கு நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் அவரைக் கைது செய்தனர். அவர் ஒரு மாணவர் என்பதை நிரூபிப்பதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து, அரசாங்க அலுவலகங்களுக்கும் இராணுவ முகாம்களுக்கும் சென்றார். இருந்தபோதிலும், அவரது மகன் ஒருபோதும் அவரிடம் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை.

துரைசாமி செல்லம்மா

அவர் கேள்வி எழுப்பியதாவது: “எனது மகன் இன்னமும் உயிருடன் இருக்கிறார் என்று நான் நம்பவில்லை. ஆனால், நாங்கள் நீதியைக் கோருகிறோம். ஒருவர் கொலை செய்தால், நீதிமன்றங்கள் அவருக்குத் தண்டனை விதிக்கின்றன. அரச படைகள் மக்களைக் காணாமல் ஆக்கி, அவர்களைக் கொன்றால் அதற்கான தண்டனை என்ன? அதற்குப் பொறுப்பேற்பவர் யார்?”

தங்களது வாழ்க்கை நிலைமைகள் குறித்தும் அவர் பேசினார்: “எனது கணவர் ஒரு விவசாயி. அவர் இறந்துவிட்டார். நான் அப்பம் சுட்டு விற்பனை செய்து வாழ்க்கை நடத்துகிறேன். எனக்கென்று சொந்தமாக ஒரு வீடுகூட இல்லை. எனது மகளுடன் வாழ்ந்து வருகிறேன். எனது இளைய மகன் இராணுவத்தினரால் அடித்துச் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் நோய்வாய்ப்பட்டார்.”

அவரது பிள்ளைகள் தங்களது சொந்தக் குடும்பங்களைப் பராமரிப்பதற்கே போராடி வருகின்றனர். அவர்கள் நாளாந்தக் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து, நாளொன்றுக்கு 1,500 ரூபாய் சம்பாதிக்கின்றனர். செல்லம்மா தனியாக வாழ்ந்து வருவதுடன், அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு நிதியுதவியையும் பெறுவதில்லை.

Loading