இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
அக்டோபர் 13 அன்று நடைபெற்ற இளைஞர்களின் சமீபத்திய ஆர்ப்பாட்டம், காவல்துறை அரசுக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிரான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் இயக்கம் பிரான்சில் ஆழமாக வேரூன்றியுள்ளதை வெளிப்படுத்தியது; இது பெல்ஜியத்தில் பள்ளி மாணவர்களின் போராட்டங்கள், ஸ்பெயினில் வீட்டுவசதிக்கான போராட்டங்கள், போர்த்துக்கல் மற்றும் அயர்லாந்தில் நடைபெறும் வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றுடன் இணையாக நடந்து வருகிறது. பிரான்ஸ் முழுவதும் நடந்த பேரணிகளில் பங்கேற்பு, அக்டோபர் 8 உடன் ஒப்பிடுகையில் மீண்டும் தெளிவாக உயர்ந்திருந்தது. பிரான்சின் அனைத்துப் பெரிய நகரங்களிலும் 450,000 பேருக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சமூக ஊடகங்களில் “மஞ்சள் அங்கி” இயக்கத்தைப் புதுப்பிக்குமாறு விடுக்கப்படும் அழைப்புகளின் அடிப்படையில் அக்டோபர் 17 அன்று நடைபெறவுள்ள நடவடிக்கை நாளுக்கு முன்னதாக, முடக்கங்கள் தீவிரமடைந்து வருகின்றன. நிர்வாகங்களால் மூடப்பட்ட பல உயர்நிலைப் பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும், இனி எந்த வகுப்பும் நடத்தப்படாத அந்த நிறுவனங்களை இளைஞர்கள் தங்களது சொந்த முடக்கத்தின் மூலம் செயலிழக்கச் செய்வதற்காக வளாகங்களுக்குள் நுழைந்துள்ளனர். ஆனால், இயக்கத்தின் எண்ணிக்கை அளவுக்கு அப்பால், தீர்மானகரமான கேள்வி இந்தப் போராட்டத்தின் அரசியல் முன்னோக்கு என்பதும், தொழிலாள வர்க்கத்தை இன்னும் பரந்த அளவில் எவ்வாறு இதில் ஈடுபடுத்துவது என்பதுமே.
சமீப ஆண்டுகளின் வர்க்கப் போராட்ட அனுபவங்களைத் தொடர்ந்து, இந்தப் போராட்டத்தின் போக்கில் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களில் கணிசமான பிரிவினர் அரசியல்மயமாகி வருவது தெளிவாகத் தெரிகிறது. 1968 மே பற்றிய கேள்வியும், மாணவர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான தொழிலாளர்களின் கோபத்திலிருந்து அப்போது வெடித்த பொது வேலைநிறுத்தம் பற்றிய கேள்வியும் எல்லோருடைய மனதிலும் உள்ளன; அத்துடன், 2023ஆம் ஆண்டில் மக்ரோனின் ஓய்வூதியச் சீர்திருத்தத்திற்கு எதிரான வெகுஜன வேலைநிறுத்தங்களைக் காட்டிக்கொடுத்த தொழிற்சங்கக் கூட்டணியான அன்டெர்சான்திகால் (intersyndicale - பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு) திவால்நிலையும் அவர்களின் மனதில் உள்ளது. இராணுவச் செலவினங்களின் வெடிப்பு, போர்களின் தீவிரமடைதல், நவ -பாசிசம் மற்றும் காவல்துறை அரசின் எழுச்சி ஆகியவற்றுக்கு எதிராகப் பரந்த நிராகரிப்பு உருவாகி வருகிறது.
சாமானிய மட்டத்திலிருந்து ஒரு சுயாதீனமான, சர்வதேசியவாதப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக நடவடிக்கைக் குழுக்களை அமைக்க அழைப்பு விடுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) முழக்கங்களும், ஒரு புதிய இடது-ஜனரஞ்சகவாத முதலாளித்துவ அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான ஜோன்-லூக் மெலென்சோனின் (Jean-Luc Mélenchon) தேசிய வேலைத்திட்டம் மீதான விமர்சனங்களும் உண்மையான எதிரொலியைப் பெற்றுள்ளன. போர், பாசிசம் மற்றும் காவல்துறை ஒடுக்குமுறைக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தின் புரட்சிகர அணிதிரட்டல் என்ற கேள்வி, வளர்ந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பிரிவினரின் நனவில் எழுகிறது.
சென்-டெனியில் உள்ள பாரிஸ் 8 பல்கலைக்கழக முடக்கப் போராட்டத்தில், தோமா WSWS-இடம் கூறியதாவது: “தொழிற்சங்கங்களின் எல்லைகளைக் கடந்து செல்லும் ஒரு பரந்த அரசியல்மயமாக்கல் கட்டத்தை நாம் எட்டியுள்ளோம். அதேவேளை, 1968 மே மாதத்தின் புரட்சிகர அரசியல் மரபும் அதனுடன் தொடர்புடைய இலட்சியங்களும் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. மக்கள் கிட்டத்தட்ட ஒரு புதிய 1968 மே மாதத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் 1968 மே மாதத்தை மீண்டும் முன்வைப்பது என்பது அதன் குறியீடுகளையோ போராட்ட உணர்வையோ மட்டும் அல்ல; அதன் அரசியல் இலக்குகளையும் மீண்டும் முன்வைப்பதாகும். அவற்றில் மையமானது, தற்போதைய அரசாங்கத்தை அகற்றுவதாகும்.”
புதிய 1968 மே குறித்த அழைப்புகள், தொழிற்சங்கத் தலைமைகள் ஏற்படுத்தும் தடையை முறியடிக்க வேண்டிய அவசியத்துடனும், தொழிற்சாலைகளிலும் பொருளாதாரத்திலும் தொழிலாளர் கட்டுப்பாடு என்ற கேள்வியுடனும் தொடர்புடையவை என்று தோமா விளக்கினார்: “தொழிற்சங்கங்கள் தங்களது வரலாற்றுப் பாத்திரத்தை இழந்துவிட்டன. அவை வெகுஜனங்களை ஒழுங்கமைப்பதில்லை. எப்படிப் பார்த்தாலும், வெகுஜனத் தொழிற்சங்கங்கள் என்பவை இப்போது இல்லை. மேலும், அவை இனி முடக்குவதுமில்லை. 1968 மே மாதத்தில் மக்கள் முதலாளிகளைத் தொழிற்சாலைகளுக்குள் அடைத்து வைத்ததையும், தொழிற்சாலையைத் தொழிலாளர் கட்டுப்பாட்டின் கீழ் மூடியே வைத்திருந்ததையும் அறிந்து நான் அதிர்ச்சியடைகிறேன். இன்று அப்படி எதுவும் இல்லை.”
தேசிய தொழிற்சங்க எந்திரங்களிலிருந்து சுயாதீனமாகத் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டுவதற்காக பிரான்சிலும் சர்வதேச அளவிலும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கும் கேள்வியை WSWS செய்தியாளர்கள் முன்வைத்தபோது, தோமா பதிலளித்தார்: “முன்னோக்கு சர்வதேசியவாதமாக இருக்க வேண்டும், அது மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் பொதுவான சுய ஒழுங்கமைப்பு என்ற கேள்வியில் அமைந்திருக்க வேண்டும் என்பதில் நான் முழுமையாக உடன்படுகிறேன்.”
அக்டோபர் 13 அன்று பாரிஸில் நடந்த அணிதிரள்வில், ஈவா, லூனா ஆகிய இரு மாணவிகள் WSWS-இடம் விளக்கினர்: “உண்மையில் இது தசாப்தங்கள் தசாப்தங்களாக நீடித்து வரும் கோபம்; இன்றுதான் அது வெடித்திருக்கிறது.” அவர்கள் மேலும் கூறினர்: “பாரிஸில் புகழ்பெற்ற பெரிய பல்கலைக்கழகங்களில் கூட, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பெரும் பெயர்களைக் கொண்டவற்றில் கூட, பேராசிரியர் பற்றாக்குறைப் பிரச்சினைகள் உள்ளன; பேராசிரியரே இல்லாத மாணவர்கள் இருக்கிறார்கள்.” மாணவர்கள் “நிர்வாகத்தால் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளனர்” என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
போராடும் இளைஞர்கள் மீதான வன்முறை நிறைந்த காவல்துறை ஒடுக்குமுறையை அவர்கள் கண்டித்தனர்: “இது முற்றிலும் அவமானகரமானது. பிரான்ஸ் ஒரு மனித உரிமைகளின் நாடு; நமது வரலாறு பல புரட்சிகளால் குறிக்கப்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும், இது இயல்பானதல்ல; எந்த நாடும் இத்தகைய வன்முறையை ஏற்றுக்கொள்ளக் கூடாது … மக்ரோனின் அரசாங்கம் ‘மஞ்சள் அங்கி’ இயக்கத்தினரை எப்படி நடத்தியது என்பதையும், சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களை எப்படி நடத்தியது என்பதையும் பார்த்தால், அப்போதும் இதே அளவுக்கு ஒடுக்குமுறை இருந்தது.”
பிரான்சில் நடைபெறும் போராட்டங்களை ஐரோப்பா முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் போராட்டங்களுடன் ஒன்றிணைக்க வேண்டும் என்ற WSWS-இன் முன்னோக்குடன் தாங்கள் உடன்படுவதாக அவர்கள் வலியுறுத்தினர்: “இந்த இயக்கத்தின் மிகவும் ஊக்கமளிக்கும் அம்சம் என்னவென்றால், மேலும் மேலும் ஐரோப்பிய நாடுகளில் மக்கள் எழுச்சி பெறுவதை நாம் காண்கிறோம். இதனால், நாம் எதிர்கொள்ளும் பிரச்சினை வெறுமனே பிரான்சுக்குள் மட்டுப்பட்டதல்ல; அது ஐரோப்பிய அளவிலும் உலகளாவிய அளவிலும் உள்ள ஒரு பிரச்சினை என்பதும் தெளிவாகிறது. எனவே, இளைஞர்கள் எழுச்சி பெறத் தொடங்கியுள்ள நிலையில், ஐரோப்பிய மட்டத்திலும் ஐரோப்பிய ஒன்றிய அளவிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.”
சென்-டெனியில் நடைபெற்ற முடக்கப் போராட்டத்தில், பியர் WSWS-இடம் கூறியதாவது: “உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் இயக்கத்திற்கு ஆதரவளிப்பதற்காக நாங்கள் எங்கள் பல்கலைக்கழகத்தை முடக்கினோம். ஆனால் அதற்கு பதிலடியாக, பல்கலைக்கழக நிர்வாகமே நுழைவாயில்களை மூடி எங்களை வளாகத்திற்குள் செல்லவிடாமல் தடுத்து, பல்கலைக்கழகத்தை தானாகவே மூடிக்கொண்டது. எனவே இப்போது நாங்கள் பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஒன்று கூடி, இயக்கத்தின் அடுத்த கட்டத்தைப் பற்றி விவாதித்து வருகிறோம். அடுத்த கட்டத்தில், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும், வேலைநிறுத்தத்தில் உள்ள தொழிலாளர்களுக்கும், தொழிற்துறைத் தொழிலாளர்களுக்கும், ரயில்வேத் தொழிலாளர்களுக்கும், அங்குள்ள பேருந்துப் பணிமனையில் பணிபுரிபவர்களுக்கும் பல்கலைக்கழகம் ஒரு புகலிடமாகவும் அணிதிரள்வதற்கான மையமாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.”
போர் மற்றும் இராணுவச் செலவினங்களின் தீவிரப்படுத்தல் இளைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்வைக்கும் அடிப்படைப் பிரச்சினையை அவர் வலியுறுத்தினார்: “இன்று அரசாங்கத்திற்கு இராணுவத்திற்கு நிதி திரட்டுவதில் சிரமம் இல்லை; இராணுவத்தின் வரவு-செலவுத் திட்டம் மீண்டும் அதிகரிக்கிறது. ஆனால் கல்வி என்பது ஒரு முக்கியமான துறை; கல்விதான் நம் இளைஞர்களை உருவாக்குகிறது, வேலை உலகிற்குள் நுழைவதற்கு நம்மைத் தயார்படுத்துகிறது; அதற்கான வளங்களைத் திரட்டுவதில் மட்டும் அரசுக்கு மிக அதிகச் சிரமம் இருக்கிறது. ”
இயக்கம் ஒரு சர்வாதிகார ஆட்சிமுறையை நிறுவும் ஒரு முயற்சியை எதிர்கொள்கிறது என்றும், இந்த முயற்சி 2023இல் நடந்ததைப் போலவே நாடாளுமன்ற வாக்கெடுப்பு கூட இல்லாமல், அரசியலமைப்பின் 49.3 பிரிவைப் பயன்படுத்தி சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்கிறது என்றும் பியர் வலியுறுத்தினார்: “நீங்கள் கூறியது போல, அரசு எல்லாப் பணத்தையும் போருக்காகச் செலவிடுகிறது. மேலும் இன்று காலை, வரவு-செலவுத் திட்டத்தில் 54 பில்லியனை வெட்டப் போவதாக அரசு கூறிக்கொண்டிருந்தது. … சட்டங்களை நிறைவேற்றுவதற்கு அது 49.3 பிரிவைப் பயன்படுத்தப் போகிறது. இதை நாங்கள் எப்படித் தடுத்து நிறுத்த முடியும்? தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது அது மிகவும் கடினமான கேள்வியாக இருக்கிறது.”
வர்க்கப் போராட்டத்தின் புரட்சிகர அணிதிரட்டலின் அவசியத்தையும், நவ-பாசிசம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களும் இளைஞர்களும் ஜனாதிபதித் தேர்தல்களில் மெலோன்சோன் தேர்ந்தெடுக்கப்படக்கூடும் என்ற ஊகத்தையே நம்பியிருக்க முடியாது என்பதையும் WSWS எழுப்பியபோது, பியர் தமது உடன்பாட்டைத் தெரிவித்தார்.
அவர் விளக்கினார்: “நேற்று நான் ஒரு பொதுச் சபைக் கூட்டத்தில் இருந்தேன்; அங்கு அவர்கள் இதைப் பற்றித்தான் விவாதித்துக் கொண்டிருந்தனர். அவர் விளக்கினார்: “நேற்று நான் ஒரு பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டேன்; அங்கு அவர்கள் இதைப் பற்றித்தான் விவாதித்துக்கொண்டிருந்தனர். … இன்று எங்களுக்குத் தெரிந்தது என்னவென்றால், ஒரு ஜனாதிபதி இருக்கிறார், ஒரு அரசாங்கம் இருக்கிறது என்பது உண்மைதான்; ஆனால் ஏராளமான அரசு அமைப்புகள் இன்னும் மக்ரோனிஸ்டுகளால் நிர்வகிக்கப்படுகின்றன; மெலோன்சோன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் அவை தொடர்ந்து அவர்களாலேயே நிர்வகிக்கப்படும்.”
தேசிய தொழிற்சங்க எந்திரங்களிலிருந்து சுயாதீனமாக, நடவடிக்கைக் குழுக்களையும் சாமானிய மட்டத்திலிருந்து இயக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் குறித்துப் பேசியபோது, தொழிற்சங்கத் தலைமைகள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி, நீண்ட இடைவெளிகளில் அணிதிரட்டல்களுக்கு அழைப்பு விடுக்க முயல்வதைச் சுட்டிக்காட்டிப் பியர் பதிலளித்தார்: “அன்டெர்சான்திகால், CGT (பொது தொழிலாளர் கூட்டமைப்பு) போன்றவை நவம்பர் 5 அன்று ஒரு அணிதிரட்டலுக்கு அழைப்பு விடுத்துள்ளன; எனவே அவர்கள் யதார்த்தத்திலிருந்து ஓரளவு துண்டிக்கப்பட்டவர்கள்தான் என்பதைப் பார்க்கிறோம் … அன்டெர்சான்திகால் என்பது ஒரு அரசியல் தொழிற்சங்கமாகவே இருக்கிறது. எனவே உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் அணிதிரட்டல்களில் அவர்களும் ஆதாயத்தில் தங்களுக்கான பங்கையும், களத்தில் தங்களுக்கான இடத்தையும் தேடுகின்றனர்.”
அவர் மேலும் கூறினார்: “ஐரோப்பாவில் ஒரு விழிப்பு உருவாகியிருக்கலாம்; அந்த விழிப்பு வளர்த்தெடுக்கப்பட வேண்டும். நம்மிடம் தோன்றியுள்ள இந்தச் சிறு தீப்பொறிகளும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் அவை வளர்த்தெடுக்கப்பட வேண்டுமானால், பாரிஸ் 8 இல் நாம் செய்துவருவதைப் போல மாணவர்கள் தொழிலாளர்களை நோக்கித் திரும்ப வேண்டும்; ஆலைத் தொழிலாளர்களை நோக்கித் திரும்ப வேண்டும். ஏனெனில் இந்தக் கிளர்ச்சி உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடமிருந்து தொடங்கியது; பின்னர் அது பல்கலைக்கழக மாணவர்களிடமும் பரவியது. இப்போது அது பணியுலகிற்கும், தொழிலாளர்களுக்கும், ஆலைத் தொழிலாளர்களுக்கும் பரவ வேண்டும்.”
