இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் நான்காவது தேசிய பேராளர் மாநாட்டின் தீர்மானம்

ஜே.வி.பி. அரசாங்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிரான போராட்டத்தில் சோ.ச.க.யின் மூலோபாயமும் வேலைத் திட்டமும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கொழும்பில் 2026 ஆகஸ்ட் 11 முதல் 13 வரை நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) நான்காவது பேராளர் மாநாட்டின் பிரதான தீர்மானத்தின் முதல் பகுதியை நாங்கள் இங்கே வெளியிடுகிறோம். இத்தீர்மானம் மாநாட்டில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது மூன்று பகுதிகளாக வெளியிடப்படும்.

1. இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) நான்காவது பேராளர் மாநாடானது, ஏகாதிபத்திய சக்திகளால் திணிக்கப்பட்டு வரும் உலகப் போர் மற்றும் ஆளும் வர்க்கம் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை திணிக்க மேற்கொள்ளும் நகர்வுகளால் வெளிப்படுத்தப்படும் உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நடத்தப்படுகிறது. உலகளவில் இடம்பெறும் வர்க்கப் போராட்டத்தின் எழுச்சி, முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் அரசியல் நெருக்கடியைத் தீவிரப்படுத்தும் ஒரு முக்கியமான பிரதான காரணியாகும்.

2. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர், ஏகாதிபத்திய ஆதரவிலான இஸ்ரேலின் காசா மீதான இனப்படுகொலை போர் மற்றும் அமெரிக்கா சீனாவிற்கு எதிரான போர்த் தயாரிப்புகளை தீவிரப்படுத்தி வருவதுடன் சேர்த்து, பெப்ரவரி 28 அன்று தொடங்கிய ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் குற்றவியல் போர், இந்த ஏகாதிபத்திய உலகப் போரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக அணிதிரட்டி தடுத்து நிறுத்தாவிட்டால், தலைதூக்கிவரும் இந்த உலகப் போர் ஒட்டுமொத்த பூமியையும் பேரழிவை நோக்கி இழுத்துச் செல்லும்.

7 ஏப்ரல் 2026 அன்று, போர் எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அரசியல் அறிக்கையை ஆழ்ந்து கவனிக்கின்றனர்.

3. அமெரிக்க ஏகாதிபத்தியம், ஈரான் மீதான போரில், ஈரானிய அரசாங்கத்தைக் கவிழ்ப்பது மற்றும் அதன் இராணுவ சக்தி மற்றும் அணுசக்தி திட்டத்தை அழிப்பது ஆகிய அதன் நோக்கங்கள் எதையும் அடைவதில் தோல்வியுற்று, முன்னெப்பொழுதும் இல்லாத பின்னடைவைச் சந்தித்துள்ளதால், அது எதிர்கொள்ளும் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது. எவ்வாறாயினும், ஈரான் மீதான போரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் எதிர்கொள்ளும் இந்த நெருக்கடியானது அதன் போர் முயற்சிகளைக் குறைத்துவிடவில்லை.

4. 2025 இல் ட்ரம்ப் நிர்வாகம் ஆட்சிக்கு வந்தமை, முதலாளித்துவத்தின் பூகோள புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை ஆழமாக தீவிரப்படுத்தி, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலகளாவிய ஆதிக்கத்தின் சரிவுக்கு காட்டிய ஒரு அவநம்பிக்கையான மற்றும் ஈவிரக்கமற்ற பிரதிபலிப்பை குறிக்கிறது. ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச சட்டத்தை பகிரங்கமாக மீறி வெனிசுலாவில் ஒரு இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொண்டு, அதன் ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் கடத்தியே 2026 புத்தாண்டைத் தொடங்கியது. அடுத்த இரண்டே மாதங்களில், அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது ஒரு குற்றவியல் அழித்தொழிப்பு மற்றும் நிர்மூலமாக்கல் போரைத் தொடங்கி, ஒட்டுமொத்த மத்திய கிழக்கிற்கும், உண்மையில் முழு உலகிற்கும் தீ மூட்டுவதற்கு அச்சுறுத்துகிறது.

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியக் குழு 2 மார்ச் 2026 அன்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளவாறு: “ஈரானுக்கு எதிரான போரானது, இந்த அர்த்தத்தில், தெஹ்ரானை நோக்கி மட்டுமன்றி, பெய்ஜிங், மாஸ்கோ மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களை நோக்கியும் இலக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு பூகோள மேலாதிக்கத்திற்கான போராகும். இந்த நாடுகள் மத்திய கிழக்கு எரிசக்தியில் தங்கியிருக்கின்றமை, அவற்றின் மீது வாஷிங்டன் தனது அழுத்தத்தைப் பிரயோகிக்க பயன்படுகின்றது. ட்ரம்ப் நிர்வாகம் ஈரானை மட்டுமன்றி, ஐரோப்பியப் பொருட்களுக்கு வரிகளை விதிப்பது, கிரீன்லாந்தை அச்சுறுத்துவது, வெனிசுலாவின் எண்ணெய்க் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவது என அதன் பெயரளவு கூட்டாளிகளையும் அச்சுறுத்தியுள்ளமை, பெரும் வல்லரசுப் போட்டிகள் உருவாகி வரும் இந்த காலகட்டத்தில், பூமியின் ஒவ்வொரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியத்தின் மீதும் தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக்கொள்ள அமெரிக்கா தனது இராணுவ மேலாதிக்கத்தைப் பயன்படுத்த உத்தேசித்துள்ளது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.”

5. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரானது, சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுத்து வரும் பிரச்சாரத்தின் அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 3 மார்ச் 2026 அன்று உலக சோசலிச வலைத் தளத்தில் (WSWS) டேவிட் நோர்த் எழுதியவாறு:

“தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் இந்தப் போரிலிருந்து தேவையான முடிவுகளை எடுக்க வேண்டும். அதிர்ச்சியடைவது மட்டுமே போதுமானதல்ல. பீதியான உணர்வை அப்படியே விட்விட்டால், அது செயலற்ற விரக்தியிலோ அல்லது தனிநபர் எதிர்ப்பின் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்களிலோ வீணாகிவிடும். சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தினால் வழிநடத்தப்படும், உண்மையான புரட்சிகர ஒழுக்கநெறியைக் கொண்ட, மற்றும் ஆளும் வர்க்கத்தின் சீரழிவை அனைத்து விதங்களிலும் எதிர்க்கின்ற ஒரு வெகுஜன தொழிலாள வர்க்க சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே அவசியமான நடவடிக்கையாகும்.”

வாஷிங்டனின் பின்னடைவுக்கு மத்தியில் தெஹ்ரானுடன் எட்டப்பட்ட 60 நாள் “சமாதான ஒப்பந்தம்” போரின் முடிவைக் குறிக்கவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது நிலையை மீட்டெடுப்பதற்காக புதிய போர்களுக்குத் தயாரிப்பு செய்யும். இலங்கையில் சோ.ச.க., நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளுடன் இணைந்து, இலங்கையிலும் தெற்காசியாவிலும் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் சர்வதேசப் போர் எதிர்ப்பு இயக்கத்திற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.

6. பூகோளமயப்பட்ட பொருளாதாரத்துக்கும் தேசிய அரச முறைமைக்கும் இடையிலான முரண்பாடு, சமூகமயப்பட்ட உற்பத்திக்கும் உற்பத்திச் சாதனங்களின் தனியார் உடமைக்கும் இடையிலான முரண்பாடு, ஆகிய முதலாளித்துவ அமைப்பின் அடிப்படை முரண்பாடுகளின் தொடர்ச்சியான மற்றும் கட்டுப்பாடற்ற வளர்ச்சியானது ஏகாதிபத்தியத்தை உள்நாட்டில் வர்க்கப் போரையும், வெளிநாட்டில் உக்கிரமான கொள்ளையடிக்கும் போரையும் நாடுவதற்கு நிர்ப்பந்திக்கின்றது.

7. 7 ஜூன் 2026 அன்று வெளியிடப்பட்ட உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுவின் அறிக்கை குறிப்பிட்டவாறு: “ஏகாதிபத்தியத்தைப் போரை நோக்கித் தள்ளும் அதே முரண்பாடுகளே தொழிலாள வர்க்கத்தையும் போராட்டத்தை நோக்கித் தள்ளுகின்றன. வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியானது, போரை உருவாக்கும் அதே நெருக்கடியிலிருந்தே ஊற்றெடுக்கிறது. அந்த நெருக்கடியிலிருந்தே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய ஒரே சமூக சக்தி உருவாகிறது. போரும் சமூகப் புரட்சியும் ஒரே வரலாற்றுச் செயல்முறையின் இரு பக்கங்களாகும்.”

போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய ஆளும் வர்க்கத்தின் நகர்வுகள், தொழிலாள வர்க்கத்திடமிருந்து அதிகரித்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்கின்றன. அமெரிக்காவில், பல தசாப்தங்களாக திணிக்கப்பட்ட செயலற்ற தன்மைக்குக்குப் பிறகு தொழிலாள வர்க்கம் மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது: பெருமளவிலான சுகாதாரத் துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள், கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி மாணவர்களின் பரவலான வெளிநடப்புகள், ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றவாசிகளுக்கு எதிரான கொடூரமான ஒடுக்குமுறை மற்றும் நகரத்தை மத்திய அரசு ஆக்கிரமித்தமைக்கு எதிராக மினியாபோலிஸில் நடைபெற்ற ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்குபற்றிய வெகுஜனப் போராட்டங்கள், மற்றும் அரசின் கொலைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்குப் பதிலடியாக ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான இயக்கம் தன்னிச்சையாக வெடித்தமை ஆகியவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இதேபோல், இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் உட்பட தெற்காசியாவிலும், ஐரோப்பாவிலும் தொழிலாளர்களின் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த வர்க்கப் போராட்டங்களின் வளர்ச்சியானது போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், இலங்கையில் சோ.ச.க. உட்பட அதன் பிரிவுகளும் கட்டியெழுப்பப் போராடி வருகின்ற, தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட சர்வதேச இயக்கத்திற்கான புறநிலை அடிப்படையை வழங்கியுள்ளன.

8. இந்தியப் பெருங்கடலில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள இலங்கை, ஏற்கனவே உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் சுழலுக்குள் இழுக்கப்பட்டுள்ளது; அதன் நெருக்கடியானது வெறுமனே தேசிய அளவிலானதல்ல, மாறாக பூகோள முறைமை தகர்ந்து போவதன் ஒரு உறுதியான வெளிப்பாடாகும். தேசிய-அரசு முறைமையின் பொறிவு, விரிவடைந்து வரும் உலகப் போர், மற்றும் சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியிலும் வெளிப்பட்டுள்ள, உலக முதலாளித்துவ நெருக்கடியின் தற்போதைய சூழலுக்குள் இருத்தி ஆராய்வதன் மூலம் மட்டுமே, இலங்கை நெருக்கடியின் புரட்சிகர தாக்கங்களையும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயப் பணிகளையும் புரிந்து கொள்ளவும் அதற்காகப் போராடவும் முடியும்.

9. கடன் சுமையிலுள்ள, ஒரு சிறிய, அரை-காலனித்துவ நாடு என்ற மட்டத்தில் இருந்து பார்க்கும் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவின் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) அரசாங்கம் ஆட்சிக்கு வந்தமையானது, இந்த பூகோள நெருக்கடியின் ஒரு தெளிவான வெளிப்பாடாகும். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), இராஜபக்ஷக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), ஐ.தே.க.விலிருந்து பிரிந்து உருவான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) மற்றும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் உட்பட ஆளும் உயரடுக்கின் பாரம்பரியக் கட்சிகள் மீதான வெகுஜனக் கோபத்தை சுரண்டிக்கொண்டு, 2024 இன் பிற்பகுதியில் ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சிக்கு வந்தது.

10. அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ நாட்டை விட்டு ஓடி இராஜினாமா செய்யவும், அவரது அரசாங்கம் கவிழ்வதற்கும் வழிவகுத்த 2022 வெகுஜன எழுச்சிக்குப் பின்னரான தொடர்ச்சியான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலும் பாரம்பரியக் கட்சிகளின் வீழ்ச்சி நிலமைகளின் கீழும், ஆளும் உயரடுக்கின் ஒரு கனிசமான பகுதி, வல்லரசுகளின் ஆதரவுடன், இலங்கையில் முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்கான மாற்றீடாக, இதுவரை ஆட்சியில் இருந்திராத ஜே.வி.பி./தே.ம.ச.யைத் தேர்ந்தெடுத்தது. உழைக்கும் மக்களின் எதிர்ப்பை ஒடுக்கி, சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள சிக்கன நடவடிக்கைகளை ஈவிரக்கமின்றி நடைமுறைப்படுத்தும் நிச்சயமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவே ஆளும் வர்க்கத்தின் குறித்த பிரிவினரால் ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சிக்கு கொண்டு வரப்பட்டது.

11. 1960களின் பிற்பகுதியில் மாவோவாத-காஸ்ட்றோவாத கொரில்லா வாதம் மற்றும் சிங்கள ஜனரஞ்சகவாதத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கலவையின் அடிப்படையில் ஒரு குட்டி-முதலாளித்துவ தீவிரவாத அமைப்பாக உருவாக்கப்பட்ட ஜே.வி.பி., ஆறு தசாப்தங்கள் ஊடாக, முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் முற்றிலும் ஏகாதிபத்திய-சார்பு கட்சியாக பரிணமித்து, இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கட்டளைகளையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயத் தேவைகளையும் நடைமுறைப்படுத்துகிறது. ஜே.வி.பி.யின் இந்தப் பரிணாம வளர்ச்சி ஒரு பிறழ்வு அல்ல, மாறாக அதன் குட்டி-முதலாளித்துவ வர்க்கத் தன்மையினதும் அதன் அரசியலினதும் தவிர்க்க முடியாத விளைவாகும். மாவோவாத-ஸ்டாலினிச இரண்டு கட்டப் புரட்சிக் கோட்பாட்டின் மீதான தனது விசுவாசத்துடன், நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை எதிர்த்த ஜே.வி.பி., தனது பகைமையை தொழிலாள வர்க்கத்தின் மீதும், குறிப்பாக தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் மீதும் கட்டவிழ்த்து விட்டது.

12. முதன்முதலில் லியோன் ட்ரொட்ஸ்கியால் 1905 இல் உருவாக்கப்பட்ட நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு, 1917 அக்டோபர் புரட்சியில் ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தை வெற்றியை நோக்கி வழிநடத்தியது. இலங்கை போன்ற முதலாளித்துவ அபிவிருத்தி தாமதமான நாடுகளில், தேசிய முதலாளித்துவ வர்க்கமானது நில சீர்திருத்தம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஜனநாயக உரிமைகள் போன்ற ஜனநாயகக் கடமைகளை பூர்த்தி செய்ய இலாயக்கற்றது என்று அது விளக்குகிறது. கிராமப்புற விவசாயிகளையும் ஏனைய ஒடுக்கப்பட்டவர்களையும் வழிநடத்தக்கூடிய தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே, சோசலிச நடவடிக்கைகளுடன் சேர்த்து ஜனநாயகப் பணிகளையும் நிறைவேற்ற முடியும். ஜனநாயக கடமைகளிலிருந்து சோசலிசப் பணிகளுக்கு தடையின்றி முன்னேறுவதிலும், அதன் சர்வதேச விரிவாக்கத்திலும் புரட்சி 'நிரந்தரமானதாக' இருக்க வேண்டும். இது மென்சிவிக்கின் இரண்டு கட்டக் கோட்பாட்டிற்கு முற்றிலும் முரணானது ஆகும். பின்னர் இந்த மென்சிவிக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட ஸ்டாலினிசம், 'தேசிய ஜனநாயக' கட்டத்தை நிறைவு செய்வதாகக் கூறிக்கொண்டு, தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கு அடிபணியச் செய்ததுடன் சோசலிச நடவடிக்கைகளை ஒருபோதும் வராத தூர எதிர்காலத்திற்கு ஒத்திவைத்தது.

13. ஒரு குட்டி-முதலாளித்துவ தீவிரவாத இயக்கமாக இருந்த ஜே.வி.பி., சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் நேரடிக் கருவியாக மாறியுள்ளமையானது, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (பு.க.க.) அதன் பின்வந்த சோசலிச சமத்துவக் கட்சியும் ஆறு தசாப்தங்களாக முன்னெடுத்த அரசியல் மற்றும் தத்துவார்த்த போராட்டத்திற்கு கிடைத்த ஒரு சக்திவாய்ந்த சான்றாகும். அனைத்து குட்டி-முதலாளித்துவ தேசியவாதப் போக்குகளும், அவற்றின் வாய்ச்சவடால்கள் எவ்வளவு தீவிரமானதாக இருந்தாலும், சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் மீதான அவற்றின் விரோதப் போக்கின் காரணமாக, தவிர்க்க முடியாமல் முதலாளித்துவ ஆட்சியினதும் ஏகாதிபத்தியத்தினதும் தூண்களாக மாறுகின்றன என்பதை இது உறுதிப்படுத்துகிறது. எனவே, பு.க.க./சோ.ச.க. முன்னெடுத்த இந்தப் போராட்டத்தின் மூலோபாய மற்றும் வேலைத்திட்ட ரீதியிலான படிப்பினைகள், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், முதலாளித்துவ ஆட்சி மற்றும் உலக ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக கிராமப்புற ஏழைகள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களை அணிதிரட்டிக்கொண்டு, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும், அந்தப் போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு வழிநடத்தத் தேவையான புரட்சிகரக் கட்சியை உருவாக்குவதற்கும், இன்றைய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மிகவும் தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

ட்ரொட்ஸ்கிசம் காட்டிக்கொடுக்கப்பட்டமையும் ஜே.வி.பி.யின் தோற்றமும்

1953 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹர்த்தாலின் போது, ​​கொழும்பில் உள்ள காலி முகத் திடலில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ல.ச.ச.க. தலைவர் என். எம். பெரேரா உரையாற்றிய போது

14. லங்கா சம சமாஜக் கட்சி (ல.ச.ச.க.) ட்ரொட்ஸ்கிசத்துக்கு செய்த வரலாற்றுக் காட்டிக்கொடுப்பின் பின்னர், 1965 மே மாதத்தில் ரோஹண விஜேவீர மற்றும் ஒரு சிறிய இளைஞர் குழுவினரால் ஜே.வி.பி. ஸ்தாபிக்கப்பட்டது. 1964 இல், சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்களின் பிரம்மாண்டமான வேலைநிறுத்த அலை உருவாகிக் கொண்டிருந்த அதேநேரம், ல.ச.ச.க. அவரது முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் (ஸ்ரீ.ல.சு.க.) கூட்டணி அரசாங்கத்தில் நுழைந்துகொண்டது. ல.ச.ச.க. ஏற்கனவே, போருக்குப் பிந்தைய ஏகாதிபத்திய உடன்படிக்கையின் ஒரு பகுதியாக 1948 இல் சுதந்திரம் எனப்படுவதன் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட முதலாளித்துவ அரசுக்கு அடிபணிந்து, தேசியவாத பாராளுமன்றப் பாதையில் அரசியல் ரீதியாக சீரழியத் தொடங்கியிருந்தது.

1950களின் முற்பகுதியில் ட்ரொட்ஸ்கிச நான்காம் அகிலத்திற்குள் உருவான மைக்கேல் பப்லோவுடன் தொடர்புடைய ஒரு திருத்தல்வாதப் போக்கான பப்லோவாதம், முதலாளித்துவ தேசியவாதத்திற்கு அடிபணிவதை ஊக்குவித்ததன் மூலமும், தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதைக் கைவிட்டதன் மூலமும், ல.ச.ச.க.யின் தேசியவாதச் சீரழிவுக்கு அரசியல் ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து, அது 1964 காட்டிக்கொடுப்பில் உச்சக்கட்டத்தை எட்டியது.

15. பப்லோவாதிகளுக்கு எதிராக, நான்காம் அகிலத்தின் மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் 1953 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டது. பப்லோவாதிகள், ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நிராகரித்ததுடன், ஸ்டாலினிச அதிகாரத்துவத்திற்கும் முன்னாள் காலனித்துவ நாடுகளில் உள்ள முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களுக்கும் ஒரு முற்போக்கான பாத்திரத்தை ஆற்ற முடியும் எனக் கூறியதுடன், தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட புரட்சிகரக் கட்சிகளைக் கட்டியெழுப்ப வேண்டிய அவசியத்தையும் நிராகரித்தது. இந்தத் திருத்தல்வாதப் போக்கிற்கு எதிராகவும், மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்தைப் பாதுகாப்பதற்காகவும் அனைத்துலகக் குழு நடத்திய போராட்டம், இலங்கையில் ல.ச.ச.க.யின் அரசியல் சீரழிவை அம்பலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது.

16. முதல் முறையாக, நான்காம் அகிலத்தின் வரலாற்றில், டிராட்ஸ்கிசக் கட்சி என்று உரிமை கோரிய ஒரு கட்சியான ல.ச.ச.க., 1964 இல் முதலாளித்துவ அரசாங்கத்தில் பகிரங்கமாக இணைந்துகொண்டு காட்டிக்கொடுத்தமை, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்தின் மீது பரந்த அளவிலான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டிருந்த நம்பிக்கையைச் சிதைத்தது. இதனால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடமே இலங்கையில் ஜே.வி.பி. போன்ற குட்டி-முதலாளித்துவ போக்குகள் உருவாவதற்கு வழிவகுத்தது.

17. சோசலிச அனைத்துலகவாதம், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் ஆகிய ட்ரொட்ஸ்கிசக் கோட்பாடுகளுக்கு ல.ச.ச.க. இழைத்த துரோகமானது, அது சிங்கள ஜனரஞ்சகவாதத்திற்கு அடிபணிந்தமையுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்தது. 1964 காட்டிக்கொடுப்புக்கு முந்தைய ஆண்டுகளில், ல.ச.ச.க., பிலிப் குணவர்தனவின் சிங்கள பேரினவாத மகாஜன எக்சத் பெரமுனவுடன் (மக்கள் ஐக்கிய முன்னணி) இணைந்து ஐக்கிய இடதுசாரி முன்னணியின் பங்காளிகளாக அணிசேர்ந்தது. 1964 இல் ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் நுழைந்துகொண்டதைத் தொடர்ந்து, தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் ஒரு பகுதியினரை இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கான சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தை ல.ச.ச.க. ஆதரித்தது. மேலும், 1970 இல் ஆட்சிக்கு வந்த ஸ்ரீ.ல.சு.க.-ல.ச.ச.க.-கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் இரண்டாவது கூட்டணி அரசாங்கத்தில், ல.ச.ச.க. தலைவரான கொல்வின் ஆர். டி சில்வா, அரசியலமைப்பு விவகார அமைச்சராக இருந்து, சிங்களத்தை அரச மொழியாகவும் பௌத்தத்தை அரச மதமாகவும் ஆக்கி, சிங்கள/பௌத்த மேலாதிக்கத்தை அரசியலமைப்பில் சட்டப்பூர்வமாக்கிய, புதிய அரசியலமைப்பை வரைந்தார்.

18. ல.ச.ச.க.யின் காட்டிக்கொடுப்பு இலங்கையிலும் சர்வதேச அளவிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரதானமாக இந்தியாவில் இருந்த பல்வேறு மாவோவாதப் போக்குகள், ல.ச.ச.க.யின் காட்டிக்கொடுப்பைப் பயன்படுத்தி, ட்ரொட்ஸ்கிசத்தை கண்டனம் செய்ததோடு, விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட கொரில்லா வாதத்தையும் குட்டி-முதலாளித்துவ இனவாத அரசியலையும் ஊக்குவித்து, தீவிரமடைந்து வந்த இளைஞர்கள் மத்தியில், உண்மையான மார்க்சிசத்தின் இழப்பில், செல்வாக்கைப் பெற்றன.

19. முன்னாள் ஸ்டாலினிச-மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த ஒரு குழுவினரால் உருவாக்கப்பட்ட ஜே.வி.பி.யால், தீவின் தென்பகுதியில் உள்ள வேலையற்ற சிங்கள கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் விரிவடைய முடிந்தது. ஜே.வி.பி.யின் தோற்றமானது, ல.ச.ச.க.யின் காட்டிக்கொடுப்புக்கு எதிரான ஒரு வலதுசாரி குட்டி-முதலாளித்துவ பிரதிபலிப்பாக இருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களின் தேசிய முதலாளித்துவ முகவர்களுக்கு எதிராக, ஒட்டுமொத்த தெற்காசியாவிற்கும் ட்ரொட்ஸ்கிச நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு அரசியல் வேலைத்திட்டத்தையும் முன்னோக்கையும் பாதுகாத்து உருவாக்குவதற்காக, 1942 இல் ல.ச.ச.க. தலைவர்களின் முன்முயற்சியுடன் நான்காம் அகிலத்தின் இந்தியத் துணைக் கண்டப் பிரிவாக உருவாக்கப்பட்ட இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (BLPI) உட்பட, இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் நடத்திய போராட்டத்தில் இருந்த அனைத்து ஆக்கப்பூர்வமான அம்சங்களையும் எதிர்ப்பதற்கு ஜே.வி.பி. இந்தக் காட்டிக்கொடுப்பைப் பயன்படுத்திக் கொண்டது. அப்போது பி.எல்.பீ.ஐ. இந்தியாவில் (1947) மற்றும் இலங்கையில் (1948) வழங்கப்பட்ட போலிச் சுதந்திரத்தையும், காலனித்துவ ஆட்சியாளர்களுடன் ஒத்துழைத்த ஸ்டாலினிஸ்டுகளையும் எதிர்த்ததுடன், சோசலிச சர்வதேசவாதக் கொள்கைகளின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களை அணிதிரட்டி, இப்பிராந்தியத்தில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஒருங்கிணைந்த இயக்கத்தைக் கட்டியெழுப்பப் போராடியது. ஜே.வி.பி. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தை நிராகரித்ததுடன், ஒடுக்கப்பட்ட விவசாய இளைஞர்களைப் புரட்சிகர சக்தியாக முன்னிறுத்தி, முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை நனவுப்பூர்வமாக சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதற்குப் பதிலாக, சதித்திட்டம் மிக்க 'ஆயுதப் போராட்டத்தை' பிரதியீடு செய்தது.

20. ல.ச.ச.க. காட்டிக்கொடுப்பானது தெற்கில் உள்ள கிராமப்புற ஏழைகளுக்கும், முதலாளித்துவ வர்க்கத்தின் சிங்களப் பேரினவாத மற்றும் பாரபட்சமான ஆட்சியை எதிர்கொண்ட ஒடுக்கப்பட்ட தமிழ் சிறுபான்மையினருக்கும் தலைமை தாங்கக்கூடிய, தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதைத் தடுத்தது. இது தமிழ் தேசியவாத முதலாளித்துவக் கட்சிகளை பலப்படுத்தியதுடன், பின்னர் 1970களின் பின்பாதியில் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் பிரிவினைவாதக் குழுக்கள் உருவாவதற்கான சூழ்நிலைகளையும் உருவாக்கியது.

21. அந்தக் குட்டி-முதலாளித்துவப் போக்குகளின் தோற்றத்திற்கு நேர்மாறாக, ல.ச.ச.க. செய்த காட்டிக்கொடுப்பை எதிர்த்த புத்திஜீவி இளைஞர்கள் குழுவொன்றால், அனைத்துலகக் குழுவின் தலையீட்டுடன் பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிராக உண்மையான ட்ரொட்ஸ்கிசத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடிந்தது. அனைத்துலகக் குழுவுடன் செயற்பட்டு இலங்கை பிரிவாக 1968 இல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை (பு.க.க.) அவர்கள் ஸ்தாபித்தனர்.

கீர்த்தி பாலசூரிய

22. குட்டி-முதலாளித்துவ தீவிரவாதத்திற்கு எதிரான அனைத்துலகக் குழுவின் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, பு.க.க. ஸ்தாபகப் பொதுச் செயலாளரான தோழர் கீர்த்தி பாலசூரிய, ஜே.வி.பி.யின் பிற்போக்கு அரசியலை எதிர்த்துப் போராடுவதற்கான முன்முயற்சியை எடுத்தார். 1970 இல் வெளியான அவரது முன்னோடி படைப்பான ஜே.வி.பி.யின் அரசியலும் வர்க்கத் பண்பும் என்ற நூல், இந்த அரசியல் போராட்டத்தில் ஒரு தீர்க்கமான தலையீட்டைக் குறித்ததுடன், ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சியை உருவாக்குவதற்கான ஒரு அத்தியாவசியக் கூறாகவும் அமைந்தது.

23. ஜே.வி.பி. தன்னை ஒரு 'மார்க்சிச-லெனினிச' கட்சியாகக் கூறிக்கொள்ளும் மோசடியான கூற்றை கீர்த்தியின் பகுப்பாய்வு அம்பலப்படுத்தியது. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் வகிபாகத்தை ஜே.வி.பி. நிராகரிப்பதும் அதன் தேசியவாத, குட்டி-முதலாளித்துவ கண்ணோட்டமும் தவிர்க்க முடியாமல் அதனை முதலாளித்துவ முகாமிற்கு இட்டுச் செல்லும் என்று அவர் தீர்க்கதரிசனமாக எச்சரித்தமை, அடுத்து வந்த தசாப்தங்களிலும், 2024 இன் இறுதியில் ஜே.வி.பி. அரசாங்க அதிகாரத்தை ஏற்றுக்கொண்டதன் மூலமும் உயர்ந்த மட்டத்தில் நிரூபிக்கப்பட்டது.

ட்ரொட்ஸ்கிசத் தலைவர் ஆழ்ந்த நுண்ணறிவுடன் குறிப்பிட்டதாவது: “ஜனநாயகப் புரட்சியின் பணிகளை பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் மூலமாக மட்டுமே யதார்த்தமாக்க முடியும் என்ற முடிவை அடிப்படையாகக் கொள்ளாத எந்தவொரு தலைமைத்துவமும், தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கு அடிபணியச் செய்து, அதனைப் பேரழிவுகரமான தோல்விகளுக்கே இட்டுச் செல்லும். இந்த முடிவை நிராகரிக்கும் ஜே.வி.பி.யும், முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு அங்கமாகவே முடிவடைவது தவிர்க்க முடியாததாகும்.”

24. மார்க்சிசத்தை பொய்மைப்படுத்திய அதனது “ஐந்து வகுப்புகளில்”, தொழிலாளர்களின் சுயாதீனமான போராட்டங்களை “முதலாளித்துவ உத்திகள்” என்று கண்டனம் செய்த ஜே.வி.பி., இந்திய வம்சாவளி தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களைச் சலுகை பெற்ற அந்நியர்களாகவும், 'இந்திய விரிவாக்கவாதத்தின்' ஒரு பகுதியாகவும் சித்தரித்தது.

இந்த பிற்போக்கு கண்ணோட்டத்தின் விளைவுகளை முன்கூட்டியே கணித்த கீர்த்தி, நெருக்கடியான காலப்பகுதியில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் இலங்கை முதலாளித்துவ வர்க்கமும் தோட்டத் தொழிலாளர்களின் நிலைமைகளை சீரழித்தது போலவே, ​​“இதே தொழிலாளர்கள் மீதான குட்டி-முதலாளித்துவ விரோதப் போக்கு, ஏகபோக முதலாளித்துவத்தின் கைகளில் ஒரு கருவியாக மாறும். இந்த இனவாதம் பாசிசத்திற்கு இட்டுச் செல்லும் ஒன்றாகும். இலங்கையில் ஜே.வி.பி., எதிர்காலத்தில் ஒரு பாசிச இயக்கத்தினால் நன்கு பயன்படுத்தப்படக் கூடிய ஒரு தொழிலாளர்-விரோத இயக்கத்தை உருவாக்கி வருகிறது,” என்று எச்சரித்தார். இந்த எச்சரிக்கை இரண்டு தசாப்தங்களுக்குள் உறுதிப்படுத்தப்பட்டது.

25. தொழிலாள வர்க்கத்தைப் புறக்கணித்து, கிராமப்புற சிங்கள இளைஞர்களை அணிதிரட்டி 1971 ஏப்ரலில் ஜே.வி.பி. நடத்திய கொரில்லா கிளர்ச்சியானது, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் முன்கூட்டியே அம்பலப்படுத்தியிருந்த அதன் தீவிரவாத குட்டி-முதலாளித்துவ போதனைகளின் வங்குரோத்தை மட்டுமே வெளிக்காட்டியது. ஜே.வி.பி. தலைமையிலான அந்த ஆயுத கிளர்ச்சி, இந்தியாவின் இராணுவ உதவியுடன் ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தால் நசுக்கப்பட்டதில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டதுடன், விஜேவீர உட்பட அதன் தலைவர்களும், ஆயிரக்கணக்கான உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் சிறையிலடைக்கப்பட்டனர்.

26. ஜே.வி.பி.க்கு எதிரான இந்த அடக்குமுறையையும், 1971 இன் இரத்தக்களறி ஒடுக்குமுறையையும் எதிர்த்த பு.க.க., அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது. அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரும் போராட்டத்திலும் கிராமப்புற இளைஞர்களை பாதுகாப்பதிலும் தொழிலாளர் வர்க்கம் முன்னணி வகிக்க வேண்டுமென அவர்கள் மத்தியில் பு.க.க. மேற்கொண்ட பிரச்சாரமானது, தொழிலாள வர்க்கத்தைச் சூழ கிராமப்புற வெகுஜனங்களை அணிதிரட்டுவதற்கான அதன் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இக்கோரிக்கை பின்னர் 1976 இல் ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக நடந்த பொது வேலைநிறுத்தத்தின் பிரதான கோஷமாக மாறியமை, பு.க.க. பிரச்சாரத்தின் அரசியல் தாக்கத்தை நிரூபித்தது.

27. 1977 இல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கம், இந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டது. கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பிரதிபலிக்கும் விதமாக, இலங்கையை 'திறந்த சந்தை' பொருளாதாரக் கொள்கைகளை நோக்கி நகர்த்தி, நாட்டை பூகோளமயமாக்கப்பட்ட முதலாளித்துவ முறைமையுடன் ஒருங்கிணைத்த நிலையில், ஜே.வி.பி. பகிரங்க அரசியலில் ஈடுபட ஜயவர்தன அனுமதித்தார். தொழிலாள வர்க்கத்தின் மீதான ஜே.வி.பி.யின் பகைமைப் போக்கு மற்றும் அதன் இனவாத அரசியலைக் கருத்திற்கொண்டு, தனது அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை ஒடுக்குவதற்கு ஜே.வி.பி.யை ஒரு முக்கியமான கருவியாகப் பயன்படுத்துவதே ஜயவர்தனவின் கணிப்பீடாக இருந்தது. ஜே.வி.பி.யின் பின்னரான நகர்வுகள் ஜெயவர்தனவின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாக அமைந்தன.

28. ஜயவர்த்தன அரசாங்கம் 1980 இல் அரச ஊழியர்களின் பொது வேலைநிறுத்தத்தை நசுக்கியதுடன், சுமார் 100,000 தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கியது. அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான தொடர்ச்சியான வெகுஜன எதிர்ப்பை முன்கூட்டியே கணித்த அது, தமிழர்களுக்கு எதிரான இனவாத வன்முறையைத் தீவிரப்படுத்தியது. இதுவே 1983 இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 26 ஆண்டுகால இனவாதப் போராக உச்சகட்டத்தை அடைந்தது. ஆளும் உயரடுக்கின் இந்த நகர்வுகளை ஜே.வி.பி. ஆதரித்தது; அது 1980 வேலைநிறுத்தம் ஐ.தே.க. ஆட்சியை பலப்படுத்தும் என்ற போலி கூற்றுடன் அதனை எதிர்த்தது. ஜே.வி.பி.யின் இந்த கருங்காலி வகிபாகமும், ஐ.தே.க. அரசாங்கத்திற்கு எதிரான ஓர் அரசியல் வேலைத் திட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட மறுத்த ல.ச.ச.க., ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சி, நவ சம சமாஜக் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினதும் துரோக வகிபாகமும், தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு வரலாற்றுத் தோல்வியைத் திணிக்க அந்த அரசாங்கத்திற்கு வழிவகுத்துக் கொடுத்தன.

29.1980 வேலைநிறுத்தத்தின் போது, ஜே.வி.பி.யின் வேலைநிறுத்த கருங்காலி வகிபாகத்துக்கும், 'இடது' கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் துரோகத்திற்கும் எதிராக, ஐ.தே.க. அரசாங்கத்திற்கு எதிராக சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்களை ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தில் அணிதிரட்டுவதற்காக பு.க.க. தொழிலாளர்கள் மத்தியில் ஒரு துணிச்சலான பிரச்சாரத்தை மேற்கொண்டது.

இலங்கையின் கொழும்பு நகரின் புறக்கோட்டை பகுதியில், 1983 ஆகஸ்ட் 1 அன்று எரிக்கப்பட்ட தமிழர்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள். இனக் கலவரத்தின் போது தமிழர்களின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களும் வீடுகளும் அழிக்கப்பட்டன. [AP Photo/JLR]

30. 1983 இல் ஜயவர்தனவின் ஐ.தே.க. அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட புலிகளுக்கு எதிரான இனவாதப் போரானது, 1948 இல் பெறப்பட்ட பெயரளவு சுதந்திரத்திற்குப் பின்னர் கொழும்பில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட தமிழர்-விரோத பாரபட்சங்களின் உச்சக்கட்டமாகும். அதன் தொடக்கத்திலிருந்தே, அனைத்து அரசாங்கங்களும் எதிர்க்கட்சிகளின் உதவியுடன், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் போராட்டங்களை ஒடுக்குவதற்கும், தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தி பலவீனப்படுத்துவதற்கும் இந்த தமிழர்-விரோத இனவாதப் போரைப் பயன்படுத்தின. இந்த 26 ஆண்டுகாலப் போர் காலத்தில், இனவாதப் போருக்கும் புலிகளின் பிரிவினைவாத வேலைத்திட்டத்திற்கும் எதிராக, பு.க.க./சோ.ச.க. தனித்து நின்று, சர்வதேச சோசலிசத்தின் அடிப்படையில் இனப் பிரிவினைகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தப் போராடியது.

31. “தாய்நாட்டைப்” பாதுகாப்பது என்ற பேரில் புலிகளுக்கு எதிரான இனவாதப் போரை ஜே.வி.பி. முழுமையாக ஆதரித்தது. 1985 இல், ஜே.வி.பி. தலைவர் விஜேவீர கட்சியின் மத்திய குழுவில் ஆற்றிய உரை, பின்னர் தமிழீழப் போராட்டத்திற்கு தீர்வு என்ன? என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. அதில் அவர், புலிகளை இலங்கை மீதான இந்தியாவின் பழங்காலச் சோழர் படையெடுப்பின் ஒரு பகுதி என முத்திரை குத்தினார். 1987 ஜூலையில், அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் ஜனாதிபதி ஜயவர்தனவும் கையெழுத்திட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா தலையிட்டபோது, ஜே.வி.பி.யின் 'தாய்நாட்டைப் பாதுகாக்கும்' பிரச்சாரம் இன்னும் அசிங்கமான வடிவத்தை எடுத்தது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், புலிகளை நிராயுதபாணியாக்கி போரை முடிவுக்குக் கொண்டுவருவதோடு, தமிழ் உயரடுக்கினருக்கு சில சலுகைகளை வழங்குவதன் மூலம் இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டின் மீது இப்போரின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதும், அங்கு அரசியல் ஸ்திரமின்மை ஏற்படுவதைத் தடுப்பதும், தீவில் முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாப்பதுமாக இருந்தது.

32. 1987-89 காலப்பகுதி, தொழிலாள வர்க்கத்திற்கும் அரசியல் எதிரிகளுக்கும் எதிராக இயக்கப்பட்ட ஒரு பாசிச இயக்கமாக ஜே.வி.பி. பரிணமித்ததை நிரூபித்தது. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தையும் இந்திய இராணுவத் தலையீட்டையும் வலதுசாரிக் கண்ணோட்டத்தில் எதிர்த்த ஜே.வி.பி., ஒப்பந்தம் 'தாய்நாட்டைப் பிளவுபடுத்தும்' என்று குற்றம் சாட்டியதுடன் தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் மூலம் ஒரு பாசிசப் பிரச்சாரத்தைத் தொடங்கியது. இந்த அமைப்பு அரசை அன்றி, தொழிலாளர்கள், இடதுசாரிகள் மற்றும் தொழிற்சங்கப் போராளிகளை இலக்கு வைத்து கொலைப் படைகளின் வலையமைப்பாகச் செயல்பட்டது. ஜே.வி.பி.யின் இந்த கொலைவெறி பாசிசப் பிரச்சாரம், ஐ.தே.க. அரசாங்கத்துடனும் அதன் இராணுவத்துடனும் நெருக்கமான இணக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டதுடன், குறிப்பாக அக்காலத்தில் ஜே.வி.பி. முதலில் பிரதமராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் இருந்த ஐ.தே.க. தலைவர் ஆர். பிரேமதாசாவுடன் நெருக்கமாக ஒத்துழைத்துச் செயல்பட்டது.

33. ஜே.வி.பி.யின் பேரினவாத-பாசிசப் பிரச்சாரத்திற்கும், இந்த ஒப்பந்தத்தை ஆதரித்து ஜயவர்தனவுடன் அணிவகுத்து நின்ற ல.ச.ச.க., ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பப்லோவாத ந.ச.ச.க. ஆகிய தரப்பிற்கும் எதிராக, தொழிலாள வர்க்க அனைத்துலகவாதத்தின் அடிப்படையில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை எதிர்ப்பதில் பு.க.க. ஒரு தனித்துவமான நிலைப்பாட்டை எடுத்தது. இந்த ஒப்பந்தத்திற்கும் இந்திய இராணுவத் தலையீட்டிற்கும் எதிராக இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த பு.க.க. போராடியது.

1987 நவம்பரில் அனைத்துலகக் குழு வெளியிட்ட, “இலங்கையின் சூழ்நிலையும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் பணிகளும்” என்ற தலைப்பிலான அறிக்கை, உறுதியான முறையில் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, சிங்கள மற்றும் தமிழ் இனப் பிரிவினைகளைக் கடந்து சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தின் மூலம் மட்டுமே தீவில் உள்ள தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதை நிலைநாட்டியது. அது முதன்முறையாக, ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகள் என்ற அழைப்பை முன்வைத்தது.

இலங்கை-இந்திய உடன்படிக்கை தேசிய முதலாளித்துவத்தின் வஞ்சகமான தன்மையை எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது:

“இந்த நூற்றாண்டின் எண்ணற்ற துயரமான அனுபவங்கள், பின்தங்கிய நாடுகளிலுள்ள தேசிய முதலாளித்துவத்தின் வஞ்சகமான மற்றும் பிற்போக்கு தன்மையை ஏற்கனவே போதுமான அளவு நிரூபிக்கவில்லை என்றாலும், இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமையும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மீதான இந்தியப் படையெடுப்பும் ஒடுக்கப்பட்ட உழைப்பாளர்களுக்கு மற்றொரு கசப்பான படிப்பினையை வழங்குகின்றன. . . . இந்தியா மற்றும் இலங்கையின் தேசிய முதலாளித்துவ வர்க்கம் தத்தமது நாடுகளின் எதிர்காலத்தில் ஏதேனும் முற்போக்கான பங்கை வகிக்க வேண்டியுள்ளது என்ற கட்டுக்கதையில் எஞ்சியிருந்த அனைத்தையும் ஜயவர்தன மற்றும் காந்தியின் கொள்கைகள் தகர்த்துவிட்டன.”

இந்திய முதலாளித்துவ வர்க்கத்திடம் புலிகள் சரணடைந்ததன் மூலம், குட்டி-முதலாளித்துவ தேசியவாதத்தின் திவால் நிலை எவ்வாறு வெளிப்பட்டுள்ளது என்பதை விளக்கி அந்த அறிக்கை குறிப்பிட்டதாவது:

“இந்த சமீபத்திய வரலாற்று அனுபவமானது, தேசிய சுயநிர்ணயத்தை அடைவதற்கு இலாயக்கற்றதாக நிரூபிக்கப்பட்டுள்ள குட்டி-முதலாளித்துவ தேசியவாதத்தின் வங்குரோத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த மக்களின் தலைவிதியும் ஊசலாடிக்கொண்டிருக்கும், வரலாற்று ரீதியான நெருக்கடி காலங்களில், உணர்ச்சிவசப்படுவதற்கு இடமில்லை. புலிகள் எதிர்கொண்டுள்ள அவலநிலை மீதான அனுதாபமும், அதன் போராளிகளின் தலைவிதி குறித்த கவலையும், சொல்ல வேண்டியதைச் சொல்லத் தவறுவதற்கு சாக்குப்போக்காகிவிட முடியாது: 29 ஜூலை 1987 முதல் தேசியப் போராட்டம் சந்தித்துள்ள கடுமையான பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகளின் கொள்கைகளே முதன்மையாகப் பொறுப்பாகும்.”

தேசிய முதலாளித்துவத்தின் பிற்போக்குப் பண்பிலிருந்தும் குட்டி-முதலாளித்துவ தேசியவாதத்தின் வங்குரோத்தில் இருந்தும் அரசியல் முடிவுகளை எடுத்த அனைத்துலகக் குழு, ஜனநாயகப் புரட்சியின் கடமைகள் தொழிலாள வர்க்கத்தின் மீதே சுமத்தப்படுகின்றது என்று அறிவித்தது. ஒடுக்கப்பட்ட தேசங்களின் ஜனநாயக உரிமைகள், “பாட்டாளி வர்க்கத்தினால் வழிநடத்தப்படும் சோசலிசப் புரட்சியின் ஒரு பக்கவிளைவாகவே வென்றெடுக்கப்படுகிறது. இந்த பாட்டாளி வர்க்கம் தனது சர்வாதிகாரத்தை நிலைநிறுத்திய பின்னர், ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அவர்களின் நியாயமான ஜனநாயக உரிமைகளை உத்தரவாதம் செய்கிறது. இனங்களின் உண்மையான சமத்துவத்திற்கான கட்டமைப்பாக, அது தானாக முன்வந்து ஒன்றிணையும் ஒரு சோசலிசக் கூட்டமைப்பை உருவாக்குவதை முன்மொழிகிறது,” என்று அந்த அறிக்கை விளக்கியுள்ளது.

34. ஜே.வி.பி.யின் பாசிசப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பு.க.க.யின் மூன்று உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர்: 1988 நவம்பரில் ஆசிரியர் ஆர்.ஏ. பிடவெல; அதே ஆண்டு டிசம்பரில் பேராதனைப் பல்கலைக்கழக ஊழியர் பி.எச். குணபால; மற்றும் 1989 ஜூனில் சிலாபத்தைச் சேர்ந்த இளைஞரான கிரேஷன் கீகியனகேவும் கொல்லப்பட்டனர். இனப் பிளவுகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைக்கும் முன்னோக்கின் அடிப்படையில், இந்திய இராணுவத் தலையீட்டையும் இலங்கை அரசாங்கத்தின் போரையும் எதிர்த்ததாலும், தெற்காசியாவிலும் சர்வதேச ரீதியிலும் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசை அமைப்பதற்காகப் போராடியதாலும், ஜே.வி.பி. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை (பு.க.க.) இலக்குவைத்தது.

35. பு.க.க., அனைத்துலகக் குழுவின் உதவியுடன், ஐ.தே.க. அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும், ஜே.வி.பி.யின் பாசிசத் தாக்குதல்களுக்கு எதிராகவும் தொழிலாளர் அமைப்புகளின் ஐக்கிய முன்னணி ஒன்றிற்கான சர்வதேசப் பிரச்சாரத்தைத் தொடங்கியது. இது தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் ஒரு பகுதியாகவும், ல.ச.ச.க., ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சி, சந்தர்ப்பவாத ந.ச.ச.க. மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினதும் துரோகத்தை அம்பலப்படுத்துவதாகவும் அமைந்தது. அவர்கள் ஐக்கிய முன்னணிக்கான பு.க.க.யின் அழைப்பை நிராகரித்து, முதலாளித்துவ அரசை நோக்கித் திரும்பியதோடு தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதை எதிர்த்து, ஜே.வி.பி.யின் பாசிச பயங்கரவாதத்தை எதிர்கொள்ள ஐ.தே.க. அரசாங்கம் வழங்கிய ஆயுதங்களை ஏற்றுக்கொண்டனர். இது இந்த கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் முதலாளித்துவ அரசுக்குக் கீழ்ப்படிந்த அரசியல் குணாம்சத்தை வெளிப்படுத்தியது.

36. ஐ.தே.க. அரசாங்கம், குறிப்பாக ஜனாதிபதி பிரேமதாசவின் கீழ், அதிகரித்து வந்த கிராமப்புற அமைதியின்மையைக் கட்டுப்படுத்தவும் முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்காகவும் ஜே.வி.பி.யைப் பயன்படுத்தும் நோக்கில் அதனுடன் ஒரு உடன்பாட்டை எட்ட முயன்றது. எவ்வாறாயினும், ஜே.வி.பி.யால் அந்தப் பணியைச் செய்ய முடியாது என்பதை உணர்ந்த போது, பிரேமதாச அரசாங்கம் 1989 நவம்பரில் ஜே.வி.பி.க்கு எதிராகத் திரும்ப முடிவு செய்ததுடன், கிராமப்புற இளைஞர்களுக்கு எதிரான ஒரு இரத்தக்களறி ஒடுக்குமுறையையும் கட்டவிழ்த்து விட்டது.

கிராமப்புற இளைஞர்களின் அமைதியின்மையை ஒடுக்குவதற்காக ஐ.தே.க. அரசாங்கம் அரச பயங்கரவாதத்தை ஈவிரக்கமின்றி ஏவிவிட்டு, குறிப்பாக கிராமப்புறங்களில், சுமார் 60,000 இளைஞர்களையும் அதே போல், ஜே.வி.பி. தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களையும் படுகொலை செய்தது. பு.க.க. 1990 நவம்பரில் கிராமப்புற படுகொலையை நிறுத்து! என்ற அறைகூவலை விடுத்ததுடன், அனைத்துலகக் குழுவின் ஒத்துழைப்புடன் கிராமப்புற இளைஞர்கள் மீதான இரத்தக் களறி ஒடுக்குமுறைக்கு எதிராக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான பிரச்சாரத்தை ஒழுங்கமைத்தது.

37. மறு ஒழுங்கமைக்கப்பட்ட ஜே.வி.பி. 1994 இல் மீண்டும் அரசியலில் பிரவேசித்தமை மற்றொரு திருப்புமுனையைக் குறித்தது. ஆழமான அரசியல் நெருக்கடி மற்றும் ஐ.தே.க.யின் 17 ஆண்டுகால ஆட்சியின் வீழ்ச்சிக்கு மத்தியில், ஆளும் உயரடுக்கு ஜே.வி.பி.யை ஒரு பாதுகாப்பு வால்வாக புனருத்தாரனம் செய்தது. தமிழர்-விரோத இனவாதப் போருக்கான அதன் பலத்த ஆதரவில் தெளிவாக நிரூபிக்கப்பட்டவாறு, முதலாளித்துவ ஒற்றையாட்சி அரசின் தீவிரப் பாதுகாவலனாக ஜே.வி.பி.யின் கடந்தகால வகிபாகமும், தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் பாசிசக் கொலைவெறித் தாக்குதல்களில் வெளிப்பட்டவாறு அதன் தொழிலாளர்-விரோத தன்மையும், அதனை மீண்டும் பிரதான அரசியல் நீரோட்டத்திற்குக் கொண்டுவருவதற்கான ஆளும் வர்க்கத்தின் முடிவிற்கு அடிப்படையாக அமைந்தன. 'சோசலிச' மற்றும் மார்க்சிச வார்த்தை ஜாலங்களைத் தொடர்ந்து பயன்படுத்திய போதிலும், ஜே.வி.பி. தலைமைத்துவமானது கொழும்பின் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்திற்குள் தன்னை ஒருங்கிணைத்துக் கொண்டு பாராளுமன்ற அரசியலில் நுழைந்தது.

38. இந்த வலது நோக்கிய நகர்வானது, 1980களில் தொடங்கிய பூகோளமயமாக்கல் நிகழ்வுப் போக்கு, மற்றும் குறிப்பாக 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமை மற்றும் அதே காலகட்டத்தில் கிழக்கு ஐரோப்பாவில் இருந்த அதன் செயற்கைக்கோள் ஸ்டாலினிச அதிகாரத்துவ ஆட்சிகளின் வீழ்ச்சிக்கும் அது தன்னை தகவமைத்துக் கொண்டதைப் பிரதிபலித்தது. ஜே.வி.பி.யின் இந்த தகவமைவானது, கொரில்லா உடைகளையும் ஏகே-47 துப்பாக்கிகளையும் கைவிட்டு பாராளுமன்ற உடைகளை அணிந்துகொண்ட நிகரகுவாவின் சாண்டினிஸ்டா இயக்கம் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஏ.என்.சி. ஆகியவற்றில் காணப்பட்டவாறு, ஒரு சர்வதேச அபிவிருத்தியின் பாகமாகவே இருந்தது.

39. ஜே.வி.பி., வெகுஜனங்களை ஏமாற்றுவதற்காக மார்க்சிச அல்லது சோசலிச வார்த்தை ஜாலங்களைத் தொடர்ந்து பரப்பி வந்த போதிலும், காலாவதியான 'வாதங்களை' கைவிடுவதாக பகிரங்கமாக அறிவித்ததுடன், முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு உகந்த பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டது. 1990களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும், அது ஸ்ரீ.ல.ச.க. தலைமையிலான நிர்வாகங்களை ஆதரித்ததுடன், 2004 இல் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டதுடதோடு இன்றைய ஜனாதிபதி திசாநாயக உட்பட ஜே.வி.பி.யின் நான்கு முன்னணி உறுப்பினர்கள் சுமார் ஒரு வருட காலம் அமைச்சர் பதவிகளை வகித்தனர்.

40. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உயரடுக்குகளுக்கு இடையே மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டின் மூலம் பேச்சுவார்த்தை மூலமான தீர்வை எட்டுவதற்கான எந்தவொரு முயற்சியையும் சிங்கள பேரினவாதக் கண்ணோட்டத்தில் இருந்து கடுமையாக எதிர்த்த ஜே.வி.பி., தமிழர்-விரோத இனவாதப் போருக்கான தனது பலத்த ஆதரவை தொடர்ந்தது. ஜே.வி.பி.யே பலமுறை தம்பட்டம் அடித்துக் கொண்டவாறு, 2005 இல் ஆட்சிக்கு வந்த ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை 2006 இல் போரை மீண்டும் தொடங்குமாறு அழுத்தம் கொடுத்தது.

41. முதலாளித்துவ ஸ்தாபனத்திற்குள் ஜே.வி.பி. தன்னை ஒருங்கிணைத்துக் கொண்டமையானது, ஏகாதிபத்திய சக்திகளை நோக்கி, குறிப்பாக அமெரிக்காவை நோக்கிய அதன் திருப்பத்துடன் இணைந்திருந்தது. அது ஜோர்ஜ் புஷ்ஷின் 'பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு' பகிரங்கமாக ஆதரவளித்ததுடன் இலங்கையின் இனவாதப் போரை நடத்துவதற்கு அமெரிக்க உதவியைக் கோரியது. 31 ஜனவரி 2002 அன்று வெளியிடப்பட்ட, இலங்கைக் கட்சிகள் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஏகாதிபத்திய போரை ஆதரிக்கின்றன என்ற தலைப்பிலான உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) கட்டுரை, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஜே.வி.பி. அணிசேர்ந்துள்ளதை அம்பலப்படுத்தி பின்வருமாறு குறிப்பிட்டது: “ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்கப் போருக்கான தனது ஆதரவை வெளிப்படுத்தியதன் மூலம், புலிகளுக்கு எதிராக அமெரிக்க இராணுவ உதவியை எதிர்பார்த்திருந்த இராணுவம், அரச அதிகாரத்துவம் மற்றும் வணிகத் துறையினரின் கருத்துக்களையே ஜே.வி.பி. வெளிப்படுத்தியது. 'நாட்டின் ஒற்றையாட்சித் பண்பைப் பாதுகாக்கவும் பிரிவினைவாதத்தைத் தோற்கடிக்கவும் தற்போதைய உலகச் சூழலைப் பயன்படுத்துவதற்கு நமக்கு இராஜதந்திர நுணுக்கம் தேவை,' என்று அதன் அறிக்கை குறிப்பிட்டது.”

42. முதன்மையான தமிழ் பிரிவினைவாத அமைப்பான புலிகள் இயக்கம், பல விதங்களில் ஜே.வி.பி.யின் பரிணாம வளர்ச்சியைப் போன்ற ஒன்றையே பெற்றது. ஆயுதப் போராட்டத்தை ஊக்குவித்து, தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதையும் ஐக்கியப்படுத்துவதையும் நிராகரித்த அது, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வழியாக ஒரு தனித் தமிழ் அரசை நிறுவுவதை முன்வைத்தது. எவ்வாறாயினும், ஒரு குட்டி-முதலாளித்துவ தேசியவாத இயக்கம் என்ற வகையில், ஏகாதிபத்தியத்திலிருந்தோ அல்லது இந்திய முதலாளித்துவ வர்க்கத்திலிருந்தோ தனது அரசியல் சுயாதீனத்தைத் தக்க வைத்துக்கொள்ள அது இலாயக்கற்று இருந்தது. இது ஆரம்பத்தில் புலிகள் இலங்கை-இந்திய உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டதன் மூலமும், 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வல்லரசுகள் கொழும்பின் இனவாதப் போரை ஆதரித்த போதிலும், தனது பிரிவினைவாத திட்ட நிரலுக்கு ஆதரவு கோரி ஏகாதிபத்திய சக்திகளிடம் அது மென்மேலும் கோரிக்கை விடுத்தன் மூலமும் நிரூபிக்கப்பட்டது. 2009 மே மாதத்தில் புலிகள் சந்தித்த இராணுவத் தோல்வியானது வெறும் போர்க்களப் பின்னடைவு மட்டுமன்றி, மாறாக அதன் வரலாற்று ரீதியாக திவாலாகிப்போன முதலாளித்துவ தேசியவாத மற்றும் பிரிவினைவாத முன்னோக்கின் தர்க்கரீதியான விளைவாகும். கால் நூற்றாண்டிற்கும் மேலாக நீடித்த இனவாதப் போரின் கசப்பான அனுபவமும், அதன் இரத்தக்களறி முடிவும், பு.க.க./சோ.ச.க. போராடி வந்த நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை சக்திவாய்ந்த முறையில் நிரூபித்துள்ளன. தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசுக்கான போராட்டத்தில் கிராமப்புற ஏழைகளை ஒன்றிணைத்துக்கொண்டு —சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்— தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி, சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

43. 2015 இல், இலங்கையின் வெளியுறவுக் கொள்கை நோக்குநிலையை சீனாவிற்கு எதிராக அமெரிக்காவிற்கு சார்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு வாஷிங்டனின் அனுசரணையில் நடந்த ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையாக, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷசவை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, 'நல்லாட்சி' என்ற பெயரில் மைத்திரிபால சிறிசேனவை ஆட்சியில் அமர்த்துவதற்கான பிரச்சாரத்தில் ஜே.வி.பி. கணிசமான பங்கை வகித்தது. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்கவும் இந்நடவடிக்கையின் மையமாக இருந்தனர். அடுத்த நான்கு ஆண்டுகளில், ஜே.வி.பி. தலைமைத்துவம் இந்த அமெரிக்க சார்பு உயரடுக்கு மற்றும் 'சிவில் சமூக' வேடமிட்ட கல்விமான்கள் உட்பட சலுகை பெற்ற மத்தியதர வர்க்கப் பிரிவினருடன் நெருக்கமாக ஒத்துழைத்துச் செயல்பட்டது.

44. ஜே.வி.பி., தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) என மறுபெயரிடப்பட்டமையானது அந்த அமைப்பின் ஆறு தசாப்த கால வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையைக் குறித்தது. 2019 நவம்பரில் பகிரங்கமாகத் தொடங்கப்பட்ட இந்த புதிய முன்னணி, மேல்-மத்தியதர வர்க்க மற்றும் உயரடுக்கு பிரிவினர் மற்றும் பெருவணிகங்களின் சில பிரிவினருடன் இணைந்து திசாநாயக தலைமையிலான ஜே.வி.பி.யின் கீழ் கவனமாகத் திட்டமிடப்பட்ட ஒரு முன்முயற்சியாகும். தேசிய புத்திஜீவிகள் அமைப்பைத் தொடங்கியதன் மூலம், ஜே.வி.பி.யானது கல்விமான்கள், தொழிலறிஞர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்களைத் தன்னுடன் இணைத்துக்கொண்டது. ஐ.தே.க., ஸ்ரீ.ல.சு.க. போன்ற பாரம்பரியக் கட்சிகள் பிளவடைந்து, வெகுஜன மக்களால் பரவலாக வெறுக்கப்பட்டு வந்த நிலையில், மறுபெயரிடப்பட்ட ஒரு கட்சியைத் தயாரித்து ஆட்சியைக் கைப்பற்றுவதே இதன் நோக்கமாக இருந்தது..

45. ஆளும் உயரடுக்கின் சில பிரிவுகளும், அரசியல் நனவுள்ள உயர் மத்தியதர வர்க்கத்தின் சில அடுக்குகளும், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அதிகரித்து வந்த வெகுஜன மக்களின் கோபத்தைக் கட்டுப்படுத்துவதில் பாரம்பரியக் கட்சிகள் வெளிப்படையாகத் தோல்வியடைந்த நிலையில், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரள்வைத் திறம்படத் தடுத்து நிறுத்தக்கூடிய ஒரு மாற்றீட்டைத் தேடிக்கொண்டிருந்தன.

2024 அக்டோபர் 20 அன்று சண்டே டைம்ஸ் இதழின் அரசியல் பத்தியொன்று, 2019 இன் முற்பகுதியில் ஜே.வி.பி. தலைவர் திசாநாயகவுடன் நடந்த ஒரு தனிப்பட்ட உரையாடலில், “ஐ.தே.க.யின் தூண்களில் ஒருவர்… ஜே.வி.பி.யின் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டு, கட்சியை மறுவகைப்படுத்துமாறு ஒரு ஆலோசனையை வழங்கினார்… ஒரு புதிய முகம் உள்நாட்டிலும் வெளி உலகிற்கும் ஈர்க்கக்கூடியதாக இருக்கும் என்று அவர் கூறினார்,” என வெளிப்படுத்தியது. அது “வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஜே.வி.பி.யின் கடந்தகால வரலாறு குறித்த விமர்சனங்களை திசைதிருப்பவும்” உதவும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

46. நாட்டின் முதலாளித்துவ ஆட்சிக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறான அரசியல் நெருக்கடியை ஏற்படுத்திய 2022 வெகுஜன எழுச்சியை திசைதிருப்பியதிலும், அதனை சீர்குலைத்ததிலும் ஜே.வி.பி./தே.ம.ச. தலைமை ஆற்றிய மைய அரசியல் பங்கு, நாட்டின் ஆளும் வர்க்க மேல்தட்டு, பெரு வணிக நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளால், ஜே.வி.பி. இலங்கை முதலாளித்துவத்தின் பொருத்தமான பாதுகாவலனாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது. இந்த மறுபெயரிடுதலை, முதலாளித்துவ ஊடகங்களும் மேற்கத்திய இராஜதந்திரிகளும் ஜே.வி.பி. தனது முந்தைய ஏகாதிபத்திய-விரோத வார்த்தை ஜாலங்களை கைவிட்டுவிட்டதற்கான ஆதாரமாகக் கருதினர். முன்னாள் முப்படையினரை அவசியமான, ஒழுக்கமான சமூக சக்தியாக முன்னிறுத்தி, “முப்படைகளின் கூட்டமைப்பு” என அழைக்கப்பட்டதை ஸ்தாபிப்பது போன்ற முன்னெடுப்புகள் மூலம், அந்தக் கட்சி இராணுவத்தின் ஆதரவை வளர்த்துக்கொண்டதுடன், சர்வாதிகார வழிமுறைகளில் ஆளும் வர்க்கம் அதிகரித்தளவில் தங்கியிருப்பதற்கும் தன்னை இசைவுபடுத்திக்கொண்டது.

தொடரும்…

Loading