இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
2023ஆம் ஆண்டு ஓய்வூதியச் சீர்திருத்தத்திற்கு எதிரான போராட்டத்திற்குப் பிறகு, மக்ரோனின் அரசாங்கத்திற்கு எதிரான மிகப்பெரிய அணிதிரட்டல் சனிக்கிழமை நடைபெற்றது. எரிபொருள் விலை உயர்வு, சிக்கன நடவடிக்கைகள், பிரெஞ்சுப் பொருளாதாரத்தின் இராணுவமயமாக்கல் ஆகியவற்றால் குறிக்கப்படும் வெடிப்புமிக்க சமூகச் சூழலில், உயர்நிலைப் பள்ளிகளை முடக்கி வரும் இளைஞர்களும் 2018 மஞ்சள் அங்கி இயக்கத்தில் இருந்து வந்த தொழிலாளர்களும் பாரிஸுக்கு வெளியே உள்ள பிராந்தியங்களிலும் பெருமளவில் அணிதிரண்டனர்.

அக்டோபர் மாத உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் கிளர்ச்சி 1968 மேயின் பூதத்தை மீண்டும் எழச் செய்துள்ளது; அதை அரசாங்கம் கொடூரமான காவல்துறை ஒடுக்குமுறையாலும் ஆயிரக்கணக்கான உயர்நிலைப் பள்ளி மாணவர்களைக் கைது செய்வதாலும் அடக்க முயல்கிறது. ஆர்ப்பாட்டக்காரர்களின் வலுவான அணிதிரட்டலைக் குறைத்து மதிப்பிட்டிருந்த ஒழுங்குக் காப்புப் படைகளுக்கும் அரசாங்கத்திற்கும், இந்தப் போராட்டங்களின் சூழல் குறிப்பாகப் பதற்றமானதாக இருந்தது. பல சந்தர்ப்பங்களில் அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் திணறடிக்கப்பட்டனர்.

மார்சேயில், அக்டோபர் 17 சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வியூ-போர் பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம், இறுதியில் ஒரு மணி நேரம் தாமதமாக ரெஃபோர்மே பகுதியில் நடைபெற்றது. உயர்நிலைப் பள்ளி மாணவர் இயக்கத்திற்கு ஆதரவாகவும், “வாழ்க்கைச் செலவு உயர்வு குறித்த சலிப்பை” வெளிப்படுத்தவும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம், போராட்ட உற்சாகம் நிறைந்த சூழலில் முன்னெடுக்கப்பட்டது.
ரெபுப்ளிக் வீதியின் கீழ்ப்பகுதியில் லா புரோவான்ஸ் (La Provence) நாளிதழால் பேட்டி காணப்பட்ட, மஞ்சள் அங்கி இயக்கத்தைச் சேர்ந்தவரும் பாண்டோலைச் சேர்ந்த ஓய்வுபெற்றவருமான பியர் கூறியதாவது: “நாங்கள் எங்கள் குரலை வெளிப்படுத்த முடியும் என்று நம்பினோம். ஆனால் எங்களிடமிருந்து இந்த ஆர்ப்பாட்டத்தையே பறித்துக்கொள்ள அவர்கள் அனைத்தையும் செய்தனர். இன்று காலை முதல் ஐந்து முறை கண்ணீர்ப்புகைத் தாக்குதலுக்கு நான் உள்ளாகியுள்ளேன். இப்போது ஒழுங்குக் காப்புப் படைகள் தங்களது சென்டோர் (Centaure) கவச வாகனத்தையும் களமிறக்கியுள்ளன... அவர்கள் மக்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ளனர்.”
“இது புரட்சி, பஸ்தீயைக் கைப்பற்றுவோம்” என்று முழக்கமிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மார்சேய் நகர மண்டபத்திற்குள் நுழைந்தனர்; பின்னர் CRS (கலகத் தடுப்புப் படை) பிரிவினரால் வெளியேற்றப்பட்டனர். நாள் முழுவதும் இளம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ஒழுங்குக் காப்புப் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல்கள் தொடர்ந்தன.

மார்சேயின் சோசலிஸ்ட் கட்சி (PS) மேயரான பெனுவா பயான் தனது கோபத்தை வெளிப்படுத்தியதுடன், ஒடுக்குமுறைக்கு வெறித்தனமான அழைப்புகளையும் விடுத்தார்: “ஆர்ப்பாட்டக்காரர்கள் நாசகாரர்கள் அல்ல. ஆனால் நாசகாரர்களோ சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை அறிய விரும்புகிறேன். என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன்.”

அவிஞோனில் (Avignon), காலை முழுவதும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் இடையேயான ஒற்றுமையால் அமைதியான அணிதிரட்டல் நடைபெற்றது. ஆனால் பிற்பகல் நிகழ்வுகள் வேறொரு திருப்பத்தை எடுத்தன. பிற்பகல் 2.30 மணியளவில் மாகாண ஆட்சியகத்தின் முன்பாக, அனைவரும் கலைந்துவிட்டதாகத் தோன்றிய நிலையில், காவல்துறைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முதல் மோதல்கள் வெடித்தன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கண்ணீர்ப்புகைக் குண்டுகள், கல்வீச்சுகள் மற்றும் வாணவேடிக்கைகளுடன் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். பின்னால் நின்றிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் கேலிக் கூச்சல்கள் மோதலுக்கு பின்னணியாக ஒலித்தன. இறுதியில் கூட்டம் கலைந்து, திருத்தந்தையர் அரண்மனைச் சதுக்கத்திற்குத் (Palais des Papes) திரும்பி ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்தது.

ஜிரோண்டில் இந்த சனிக்கிழமை காலை ஆரம்ப முடக்கங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து, போர்தோவில் பூர்ஸ் சதுக்கத்தில் பிற்பகல் 2 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது; அங்கு மாகாண ஆட்சியகத்தின் கணக்குப்படி 7,000 பேரும் CGT (பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு) கணக்குப்படி 100,000 பேரும் திரண்டனர். பிற்பகல் 2 மணிக்குச் சற்றுப் பின்னர், கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மூலம் பூர்ஸ் சதுக்கத்தை வெறுமையாக்கி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க ஒழுங்குக் காப்புப் படைகள் முயன்றன; ஆனால் அது பலனளிக்கவில்லை. அதே வேளையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் போர்தோ வர்த்தக, தொழில் சபையின் முகப்பைச் சேதப்படுத்தினர்.

மாகாண ஆணையர் சோஃபி ப்ரோகாவின் இல்லம் சூறையாடப்பட்டதைத் தொடர்ந்து, ஓர் ஆர்ப்பாட்டத்தின்போது அரிதாகவே நிகழும் வகையில், RAID (சிறப்பு அதிரடிப் பிரிவு) களமிறக்கப்பட்டது.

அன்றைய மாலை, குப்பைத் தொட்டிகளும் மின்சார மிதிவண்டிகளும் தீ வைக்கப்பட்டதாலும், தடுப்பரண்கள் அமைக்கப்பட்டதாலும், கடைகள் சூறையாடப்பட்டதாலும் குறிக்கப்பட்டது. “இதைச் செய்தவர்கள் குடியரசின் நிறுவனங்களையும் அரசின் அதிகாரத்தையும் நேரடியாகக் குறிவைத்தனர். சேதங்களையும் வன்முறையையும் நான் உறுதியாகக் கண்டிக்கிறேன்” என்று போர்தோ மேயர் தோமா கசெனாவ் ஓர் அறிக்கையில் எழுதினார்.
லிமோஜ் நகர மண்டபத்திற்குத் தீ வைக்கப்பட்டதால், 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தக் கட்டிடம் “பெரும்பாலும் அழிந்துவிட்டது”. இதற்குப் பதிலளித்த லிமோஜ் மேயர் கூறியதாவது: “நகரத்தின் எல்லாக் கேமராக்களையும் நீங்கள் அழித்துவிடவில்லை; அவற்றின் பார்வைக்குள் இருந்தபடியே நீங்கள் சென்றுள்ளீர்கள். எல்லா வழிகளிலும் நான் புகார் அளிக்கப் போகிறேன். இணையக் கணக்குகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பவர்களையும் கண்டுபிடிக்கப் போகிறேன். [...] 30 நகராட்சிக் காவல்துறையினர் மட்டுமே இருக்கும்போது, இத்தகைய ஊடுருவலைத் தடுக்க முடியும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?”

அக்டோபர் 17 சனிக்கிழமையன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல பத்தாயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துலூஸ் (ஓத்-கரோன்) நகர நிர்வாகம், தீவைப்புச் சம்பவங்களைத் தவிர்க்கும் நோக்கில், உள்ளூர் குடியிருப்பாளர்கள் தங்களது குப்பைத் தொட்டிகளை வெளியில் வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. கத்தலான்கள் பாலத்தைக் கடந்த பின்னர், சாங்-சிப்ரியென் பகுதியில் மாலை 4 மணிக்குச் சற்றுமுன், ஊர்வலத்தின் முன்வரிசைக்குத் தங்களை நிலைநிறுத்தியிருந்த சுமார் 200 ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ஒழுங்குக் காப்புப் படைகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. காவல்துறையினரால் நடத்தப்பட்ட “தொழிற்சங்க முன்வரிசை அணிவகுப்பின் மீதான தாக்குதலை” CGT கண்டனம் தெரிவித்தது.
கடைகள் குறிவைக்கப்பட்டன; நகர மையத்தின் முக்கிய வணிகத் தெருக்களான அல்சாஸ்-லொரேன் வீதியும் செயிண்ட்-ரோம் வீதியும் குறிப்பாக இலக்காகின. கப்பிட்டோல் சதுக்கத்திலுள்ள நகர மண்டபத்தை நெருங்க முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களை CRS பிரிவினர் தடுத்து நிறுத்தினர்.

அரசாங்கத்தின் கணக்குப்படி 20,000 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகக் கூறப்படும் லியோனில், பல ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு இருந்தபோது சுற்றுலா அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது.

