இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
உயர்நிலைப் பள்ளி மாணவர் இயக்கத்தின் மீதான ஒடுக்குமுறைக்கும், எரிசக்தி விலைகளும் வாழ்க்கைச் செலவும் உயர்வதற்கும் எதிராக நேற்று பிரான்ஸ் முழுவதும் பாரிய எண்ணிக்கையிலான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்கள் பெருமளவில் கைது செய்யப்படுவதற்கும், காவல்துறையின் கைகளில் அவர்கள் ஊனமாக்கப்படுவதற்கும் எதிரான ஆத்திரம் அதிகரித்து வரும் நிலையில், போராட்டக்காரர்களுக்கும் காவல் படைகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. பல நகரங்களில், போராட்டக்காரர்களின் பெருந்திரளால் காவல் படைகள் சமாளிக்க முடியாமல் திணறின.

நேற்றிரவு தாமதமாக, உள்துறை அமைச்சகம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை குறித்த தனது சொந்த மதிப்பீட்டையும், அன்டெர்சான்திகாலின் (தொழிற்சங்கக் கூட்டணி) மதிப்பீட்டையும் உயர்த்தி, பிரான்ஸ் முழுவதும் 400,000 என முன்பு தெரிவித்திருந்த எண்ணிக்கையை 550,000 ஆகத் திருத்தியது. பாரிஸில் 110,000 பேர், மொன்பெலியேவில் (Montpellier- 35,000 பேர், துலூஸில் (Toulouse) 32,000 பேர், நாந்திலும் (Nantes) லியோனிலும் தலா 20,000 பேர் பங்கேற்றதாக அது தெரிவித்தது. உள்ளூர் ஏற்பாட்டாளர்களோ, லீலில் ( Lille) 80,000 பேர், ரென்னிலும் (Rennes) கானிலும் ( Caen) தலா 30,000 பேர், ஸ்ட்ராஸ்புர்கில் ( Strasbourg) 20,000 பேர், பிரெஸ்டிலும் (Brest) பெசாங்சோனிலும் (Besançon) தலா 10,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாகவும், பிரான்ஸ் முழுவதும் மொத்தம் 800,000 பேர் திரண்டதாகவும் கூறினர்.

ஆனால் இந்த எண்ணிக்கைகளும் உண்மையான பங்கேற்பை விடக் குறைவாகவே உள்ளன. போர்தோவில் (Bordeaux), மாகாண ஆட்சியகம் 7,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் மட்டுமே பங்கேற்றதாக மதிப்பிட்ட நிலையில், CGT (பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு) 100,000 பேர் திரண்டதாகக் கணக்கிட்டது. இதேபோன்ற எண்ணிக்கையிலானோர் மார்சேயிலும் (Marseille) ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்; பாரிஸில் நூறாயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கினர். மொத்தத்தில், வீட்டுவசதி நெருக்கடிக்கு எதிராக மில்லியன் கணக்கான மக்களின் ஆர்ப்பாட்டங்கள் ஸ்பெயினை உலுக்கி வரும் நிலையிலும், பெல்ஜியம், போர்த்துக்கல் மற்றும் அயர்லாந்தில் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராகப் பாரிய வேலைநிறுத்தங்கள் நடைபெற்று வரும் நிலையிலும், நேற்று பிரான்சில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை பல மில்லியன்களை எட்டியிருக்கலாம்.
மக்ரோனைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கும், சமூகச் சிக்கனக் கொள்கைகளையும் ஐரோப்பாவில் போர்களின் தீவிரப்படுத்தலையும் நிறுத்துவதற்குமான ஒரு பொது வேலைநிறுத்தம் இதுவரை நடைபெறவில்லை என்றால், அதற்குக் காரணம் போராடும் விருப்பம் இல்லாததல்ல. தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் செயலற்ற காத்திருப்புக் கொள்கையும், ஜோன்-லூக் மெலன்சோனின் அடிபணியாத பிரான்ஸ் (La France insoumise) போன்ற அவற்றின் அரசியல் கூட்டாளிகளின் நிலைப்பாடும் தான் அதற்குக் காரணமாகும். வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியை இடைவெளிவிட்டு மந்தப்படுத்துவதற்கும், தொழிலாளர்களுக்கும் வெறுக்கப்படும் பிரெஞ்சு அரசாங்கத்திற்கும் இடையே ஒரு புரட்சிகர மோதல் உருவாவதைத் தடுப்பதற்கும் முயன்று, தொழிற்சங்கக் கூட்டணி நவம்பர் 5 ஆம் தேதிக்கு ஒரு நாள் நடவடிக்கையை மட்டுமே திட்டமிட்டுள்ளது.
தொழிற்சங்க அதிகாரத்துவ எந்திரங்களிலிருந்து சுயாதீனமாக, நடவடிக்கைக் குழுக்களின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தைத் தயார்படுத்தி ஒழுங்கமைப்பதே, அதிகாரத்துவங்கள் தடுக்க முயன்று வரும் பொது வேலைநிறுத்தத்திற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதில் மையப் பணியாகத் தொடர்கிறது. இருப்பினும், நிலைமை ஏற்கனவே அரச எந்திரத்துடனான நேரடி மோதலாக மாறி வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் லிமோஜ் (Limoges) நகர மண்டபத்திற்குத் தீ வைத்தனர்; மார்சேய் மற்றும் லீல் நகர மண்டபங்களுக்குள் நுழைந்தனர்; போர்தோவில் காவல்துறை மாகாண ஆணையரின் உத்தியோகபூர்வ இல்லத்தைச் சூறையாடினர். துலூஸ் மற்றும் மெட்ஸ் (Metz) நகர மண்டபங்களை நோக்கிச் சென்ற ஊர்வலங்களையும், பாரிஸில் எலிசே மாளிகையை நோக்கிச் சென்ற அணிவகுப்புகளையும் பாதுகாப்புப் படைகள் தடுத்து பின்னுக்குத் தள்ளின.
அரசாங்கத்தின் தலைவர்களும் நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்களும், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வழியில், இந்த இயக்கம் குறித்த தங்களது பீதியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். “குழப்பத்தை விதைப்பவர்களுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்” என்று மக்ரோன் அறிவித்தார். LR (லே ரிபப்ளிகன்) கட்சியின் சார்பில் புருனோ ரெத்தாயோ, ஆர்ப்பாட்டங்களின் “முன்னெப்போதும் இல்லாத தீவிரத்தைக்” கண்டித்து, “அரசின் இரக்கமற்ற பலத்தை”ப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு “சிறைத் தண்டனை” வழங்கப்பட வேண்டும் என்றும் கோரினார்.
மெலோன்சோன் தனது மில்லியன் கணக்கான வாக்காளர்களையும் தொழிலாளர்களையும் பொது வேலைநிறுத்தத்திற்கும் புரட்சிகரப் போராட்டத்திற்கும் அணிதிரட்டுமாறு அழைப்பு விடுக்கவில்லை. எக்ஸ் தளத்தில் அவர் அறியாமை பாவனையுடன், “எங்கும் ஏராளமான மக்கள் இருக்கிறார்கள்; காவல்துறையினர் இல்லாத இடங்களில் எல்லாம் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவுகின்றன” என்று கூறினார். முக்கியமாக, காவல்துறை ஒடுக்குமுறை “குழப்பத்திற்கான கதவைத் திறந்துவிட்டது” என்று குறைகூறிய அவர், “கொள்ளையையும் சூறையாடலையும்” கண்டித்து, “அரசியல் அர்த்தமற்றதும் எங்கள் வழிமுறைகளுக்கு முரணானதுமான நடவடிக்கைகளில் பங்கேற்பதை நாங்கள் மறுக்க வேண்டும்” என்று அழுத்தமாகக் கூறினார்.

நவ-பாசிச RN (தேசிய பேரணி) கட்சியின் சார்பில் மரின் லு பென், “தீவிர இடதால் பணயக் கைதிகளாக்கப்பட்டவை” என்றும் “நாட்டைக் குழப்பத்தில் தள்ளத் துடிப்பவை” என்றும் ஆர்ப்பாட்டங்களைக் கண்டித்தார். ஆனால் உண்மையில், நேற்றைய பாரிய அணிதிரட்டல், பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலும் பெரும் ஊடகங்கள் “தீவிர இடது” என்று சித்தரிக்கும் எந்திரங்களின் தலைவர்கள் செய்த சதி அல்ல. மாறாக, அந்த எந்திரங்களிடமிருந்து போராட்டத்தின் மூலம் தம்மை விடுவித்துக் கொள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் மேற்கொண்ட முயற்சியே அது.
பாரிஸில் போராட்டக்காரர்கள் உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS), பள்ளி மாணவப் போராட்டக்காரர்கள் பெருமளவில் கைது செய்யப்படுவதற்கும் ஊனமாக்கப்படுவதற்கும் எதிரான தங்கள் எதிர்ப்பையும், குறிப்பாக எரிசக்தி உள்ளிட்ட விலை உயர்வுகள் மீதும், இன்னும் பரந்த அளவில் போர், காவல்துறை அரசு, முதலாளித்துவ தன்னலக்குழு ஆகியவற்றின் மீதும் தங்கள் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தினர். அல்ஜீரிய விடுதலைப் போரின்போது, 1961 அக்டோபர் 17 அன்று பாரிஸ் காவல்துறை அல்ஜீரிய ஆர்ப்பாட்டக்காரர்களைப் படுகொலை செய்ததைக் குறிக்கும் வகையில், பல போராட்டக்காரர்கள் அல்ஜீரியக் கொடியை ஏந்தியிருந்தனர்.
“மஞ்சள் அங்கி” இயக்கத்தைச் சேர்ந்தவரும் மிதிவண்டி பழுதுபார்ப்பவருமான அகஸ்டின், பள்ளி மாணவர்களுக்கு ஆதரவாகவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும் தான் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதாகக் கூறினார்: “மக்ரோனின் ஆட்சியின் 10 ஆண்டுகளில், சராசரி பிரெஞ்சுக்காரரின் சம்பளத்தின் வாங்கும் சக்தி 4 முதல் 5 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் பெர்னார் ஆர்னோவின் செல்வம் நான்கு மடங்காக உயர்ந்துள்ளது. நாங்கள் மிகவும் வலதுசாரி தாராளவாதக் கொள்கையைக் கண்டுள்ளோம். முதலாளிகள் செலுத்தும் சமூகப் பங்களிப்புகள் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளன. செல்வ வரி நீக்கப்பட்டுவிட்டது. விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால், பில்லியனர்கள் எங்களைவிடக் குறைவாகவே வரி செலுத்துகின்றனர்.”
ரஷ்யா மற்றும் ஈரானுக்கு எதிரான போர்கள் எண்ணெய், எரிவாயு கிடைப்பதைத் துண்டித்து விலைகளைக் கடுமையாக உயரச் செய்யும் நிலையில், குறிப்பாகப் போருக்குத் தனது எதிர்ப்பை அகஸ்டின் வலியுறுத்தினார்: “போர்ப் பதற்றத்தைத் தணிக்க வேண்டும். நமது இராணுவத்தின் ஆட்பலத்தைக் குறைக்க வேண்டும்; ஆயுதப் படைகளின் அளவையும் சுருக்க வேண்டும். ஏனெனில், உலக அமைதியை உருவாக்குவதே நமது இலக்காக இருந்தால், அது இராணுவச் செலவுகளையும் இராணுவ வளங்களையும் அதிகரிப்பதன் மூலம் அடையப்பட முடியாது.”
2027 ஜனாதிபதித் தேர்தலில் மெலோன்சோன் வெற்றி பெறுவது நிலைமையை மாற்றக்கூடும் என்று தான் நம்புவதாக அகஸ்டின் கூறினார். அதேவேளை, மெலோன்சோனின் ஜனாதிபதி ஆட்சி தன்னை ஏமாற்றினால் மீண்டும் போராட்டத்தில் இறங்குவேன் என்றும் அவர் தெரிவித்தார்: “மெலோன்சோன் துரோகம் செய்தால், நாங்கள் பத்து மடங்கு வலிமையுடன் தெருக்களில் இறங்குவோம். ஏனென்றால், உண்மையில், அதுதான் எங்களது கடைசி நம்பிக்கை. ... என்னைப் பொறுத்தவரை, மெலோன்சோன் ஒரு கட்டம் மட்டுமே; அவர் இலக்கு அல்ல. அதுவே முடிவும் அல்ல.”
மாணவரான ஈத்தன் கூறினார்: “தேசியக் கல்வி அமைப்பு முற்றிலும் சீர்குலைந்து வருகிறது. பிரான்சில் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர். உழைப்பின் மதிப்பை உயர்த்துவதற்குப் பதிலாக, மூலதனத்திற்குப் பெரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. நடுத்தர வர்க்கமும் உழைக்கும் மக்களும் கடுமையாகத் தாக்கப்பட்டு வருகின்றனர். இது வெட்கக்கேடானது. அதனால்தான், இதை நாங்கள் ஏற்கமாட்டோம் என்பதைத் தெரிவிப்பதற்காக இங்கு வந்துள்ளோம்.” அவர் மேலும் கூறியதாவது: “நான் தொழிற்சங்கங்களுடன் தொடர்பில் இல்லை. எனக்கு எல்லாத் தகவல்களும் தெரியாது. ஆனால் இது வெட்கக்கேடானதாகத் தோன்றுகிறது. அதிகாரமும் ஒழுங்கமைப்பு வளங்களும் கையில் இருந்தும், தொழிற்சங்கங்களை விட மக்கள் தங்களை மிக விரைவாக ஒழுங்கமைத்துக் கொள்கிறார்கள்.”
ஆர்தர், லொரேன் சிலுவை (Croix de Lorraine) பொறிக்கப்பட்ட கொடியை ஏந்தியிருந்தது பிரெஞ்சு தேசிய வெறியால் அல்ல; பாசிச-எதிர்ப்பு உணர்வாலும், எதிர்ப்பியக்கத்தின் வரலாற்று நினைவுக்கு ஒரு இடதுசாரி உள்ளடக்கத்தை மீண்டும் வழங்குவதற்காகவுமாகும்: “லொரேன் சிலுவை என்பது சுதந்திரப் பிரான்சின் சின்னமாகும். அது 1940களில் நாஜிக்களுக்கும் பாசிஸ்டுகளுக்கும் எதிராகப் போராடிய எதிர்ப்பியக்கத்தின் அடையாளமாக இருந்தது. இன்று, இனப்படுகொலை மறுப்புவாதத்தில் ஈடுபடுபவர்களால் இந்தச் சின்னம் களங்கப்படுத்தப்படுவதைக் காண்கிறோம். இந்தச் சின்னத்தை மீண்டும் நமதாக்கிக் கொள்வது முக்கியமானது. இது இன்னும் வலிமையான பாசிச-எதிர்ப்புச் சின்னமாகவே இருக்கிறது. ... அதற்கு மீண்டும் ஒரு இடதுசாரி உள்ளடக்கத்தை வழங்க நான் முயற்சிக்கிறேன்.”
கொலின் WSWS-இடம் கூறினார்: “நான் ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவி. வசதிகள் குறைந்த மற்றும் புறக்கணிக்கப்பட்ட அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும் ஆதரவாக இங்கு வந்துள்ளேன். பணவீக்கம், டீசல் விலை உயர்வு, உண்மையில் பிரான்சில் எல்லாப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களும், எங்களது முந்தைய அணிதிரட்டல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட காவல்துறை ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களும் ஒன்றிணைந்து வருகின்றன. … தற்போது ஆட்சியில் உள்ள இந்த அரசாங்கம் வெளியேற வேண்டும். ஏனெனில் இது ஒரு நல்ல அரசாங்கம் அல்ல. இது மக்களின் குரலை சிறிதளவும் செவிமடுக்கவில்லை.”
இரண்டாம் உலகப் போரின்போது நாஜிக்களுடன் ஒத்துழைத்த சர்வாதிகாரியான பெத்தேனின் நாய்கள் என்று அரசாங்கத்தை அவரது பதாகை குறிப்பிடுவதை WSWS சுட்டிக்காட்டியபோது, “கண்டிப்பாக” என்று கொலின் பதிலளித்தார். எதிர்ப்பியக்கம் முக்கியமாகத் தொழிலாள வர்க்கத்தை அடித்தளமாகக் கொண்ட ஒரு ஐரோப்பிய எழுச்சி இயக்கம் என்பதையும், ஐரோப்பா முழுவதிலும் உலகெங்கிலும் ஒரு சர்வதேச இயக்கம் வளர்ந்து, பொது வேலைநிறுத்தத்திற்கும் புரட்சிகரப் போராட்டத்திற்கும் மீண்டும் வழி திறந்து வருவதையும் WSWS நினைவூட்டியது. தொழிலாளர்களின் சர்வதேசப் புரட்சிகர அணிதிரட்டல் என்ற முன்னோக்குடன் தான் உடன்படுவதாகக் கொலின் தெரிவித்தார்.
தற்போதைய இயக்கம், “சமூக வர்க்க மட்டத்திலான ஓர் இயக்கமும் கூட; ஏனெனில் இப்போது பார்த்தால், அதிபணக்காரர்கள் இருக்கிறார்கள், மக்கள்தொகையின் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது பிரான்சில் அவர்கள் இவ்வளவு செல்வந்தர்களாக இருந்ததே இல்லை. எனவே இது ஒரு சமூக வர்க்கப் போராட்டமாகவும் இருக்க வேண்டும், பள்ளி மாணவர்களின் சமூக இயக்கங்கள் மட்டுமே அல்ல. அதிபணக்காரர்களுக்கும் பில்லியனர்களுக்கும் எதிராகவும் நாங்கள் கிளர்ந்தெழ வேண்டும். எனவே ஆம், இது முன்பு நடந்த எதிர்ப்பியக்கத்தை மிகவும் எதிரொலிக்கிறது; ஏனெனில் இது தொழிலாள வர்க்கத்தின் இயக்கமாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
அவர் மேலும் கூறினார்: “ஒரு புரட்சி நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன், ஒரு உண்மையான புரட்சி; இது சற்றுக் கடுமையானதுதான், ஆனால் எல்லாம் தூக்கியெறியப்பட வேண்டும், எங்களுக்கு ஒரு புதிய அமைப்புமுறை வேண்டும்.”
பிரான்சில் பள்ளி மாணவர் இயக்கத்தின் பாரிய அணிதிரட்டல்களும், ஐரோப்பா முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அணிதிரட்டல்களும் உண்மையில் அத்தகைய ஒரு தீர்வை நோக்கிய பாதையைத் திறக்கின்றன. ஆனால் முதலாளித்துவ அரசாங்கங்கள் போரையோ, ஒடுக்குமுறையையோ, சர்வாதிகாரத்தின் எழுச்சியையோ நிறுத்தப் போவதில்லை. பிரான்சில், முதலாளித்துவ வர்க்கம் மாறாக ஒடுக்குமுறையின் தீவிரப்படுத்தலையே உறுதியளிக்கிறது; நேற்றைய ஆர்ப்பாட்டங்களின்போது காவல்துறை ஏற்கனவே 1,200 பேரையும், இயக்கம் தொடங்கியதிலிருந்து ஏறத்தாழ 8,000 பேரையும் கைது செய்துள்ளது. செயிண்ட்-எத்தியேனில் (Saint Etienne) காவல்துறையின் கிரனேட் ஒன்றினால் ஒரு போராட்டக்காரரின் கை துண்டிக்கப்பட்டது; நேற்றைய ஒடுக்குமுறையின் முழு விளைவு இன்னும் தெரியவில்லை.

1968 மே மாதத்தைப் போன்ற ஒரு பொது வேலைநிறுத்தத்திற்குத் தயாராகும் முன்னோக்கு, ஆர்ப்பாட்டக்காரர்களிடையே ஏறத்தாழ ஒருமனதாக ஏற்கப்படுகிறது. இப்போது அத்தகைய ஓர் இயக்கத்தைத் தயாரிப்பதற்காகவும், அதிலிருந்து எழும் புரட்சிகரப் பணிகளுக்குத் தொழிலாள வர்க்கத்தைத் தயார்படுத்துவதற்காகவும் போராட வேண்டியுள்ளது. இதற்கு, ஏற்கனவே அணிதிரண்டுள்ள இளைஞர்களையும் தொழிலாளர்களையும் பிரான்சிலும் ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளிலும் நடவடிக்கைக் குழுக்களில் ஒன்றிணைத்து, பணியிடங்களுக்குச் சென்று, ஏகாதிபத்தியப் போர், சிக்கன நடவடிக்கைகள், சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கு எதிரான பொது வேலைநிறுத்தத்தில் அணிதிரள வேண்டியதன் அவசியத்தையும், முதலாளித்துவ தன்னலக்குழுக்களிடமிருந்து அதிகாரத்தைப் பறித்துத் தொழிலாளர்களிடம் மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் தொழிலாளர்களுக்கு இன்னும் பரந்த அளவில் விளக்க வேண்டும்.
