இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
நிதி வெட்டுக்களுக்கும் காவல்துறை ஒடுக்குமுறைக்கும் எதிராகப் பல வாரங்களாகப் போராடி வரும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், எரிபொருள் மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வை எதிர்க்கும் “மஞ்சள் அங்கி” இயக்கத்தினருடன் அக்டோபர் 17 சனிக்கிழமை நடைபெற்ற தேசிய நடவடிக்கை தினத்தில் இணைந்தனர். உள்துறை அமைச்சகத்தின் கணக்குப்படி 550,000 பேருக்கும் மேற்பட்டோர் அணிவகுத்தனர்; நகரம் நகரமாகக் கலகத் தடுப்புக் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பிரான்சில் முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடி கண்கூடாகத் தெரியவந்தது.
இளைஞர்கள் நெரிசலான வகுப்பறைகள், ஆசிரியர் பற்றாக்குறை, பார்கூர்சப் (Parcoursup) (பிரான்சில் உயர்கல்விச் சேர்க்கைக்கான இணையவழித் தளம்) பல்கலைக்கழகத் தேர்வு முறை ஆகியவற்றுக்கு எதிராகப் போராடுகின்றனர். தொழிலாளர்களால் எரிபொருளையும் உணவையும் இனியும் வாங்க முடியவில்லை. இந்தக் குறைகளுக்குப் பின்னால், சமூக சமத்துவமின்மை, ஒடுக்குமுறை, ஏகாதிபத்தியப் போர், நவ-பாசிசம், முதலாளித்துவ ஆளும் தன்னலக்குழுவுக்கு எதிராக வளர்ந்து வரும் ஆத்திரம் உள்ளது.
பிரான்சில் நடைபெறும் வெடிப்பான சமூக-அரசியல் நிகழ்வுகள் ஐரோப்பா முழுவதும் அதற்கு அப்பாலும் எதிரொலிக்கின்றன. வீட்டுவசதிக்கான பெருந்திரள் போராட்டங்கள் ஸ்பெயினை உலுக்கியுள்ளன; அல்பேனியாவில் இளைஞர் போராட்டங்கள் வளர்ந்து வருகின்றன; பொதுத்துறை வேலைநிறுத்தங்கள் அயர்லாந்தையும் பெல்ஜியத்தையும் போர்த்துக்கலையும் தாக்கியுள்ளன; இத்தாலி எங்கும் போர்-எதிர்ப்புப் போராட்டங்கள் காவல்துறையுடனான மோதல்களாக வெடித்துள்ளன.
பிரான்சின் ஆளும் அரசியல் ஸ்தாபனம் இரட்டைப் பாதை மூலோபாயத்தைப் பின்பற்றி வருகிறது. தொழிற்சங்க அதிகாரத்துவமும் ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியாத பிரான்ஸும் (LFI) போராட்டங்களை முதலாளித்துவ அரசுக்குக் கீழ்ப்படுத்த முயலும் அதே வேளையில், அரசாங்கமே சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள், அக்டோபர் 17 போராட்டங்கள் தொடர்பாக ஏறத்தாழ 2,400 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், வன்முறைக்கு “தீவிர இடதுசாரிக் குறுங்குழுக்களைச் சேர்ந்த கலகக்காரர்களே” காரணம் என்று குற்றம் சாட்டினார். அதைக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் “எவ்வித ஐயத்திற்கும் இடமின்றிக் கண்டிக்க” வேண்டும் என்று கோரிய அவர், போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக முதலாளிகள், தொழிற்சங்க அதிகாரிகள், உள்ளூர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் மாணவர் அமைப்புகளையும் பங்கேற்க அழைத்தார்.
திங்களன்று அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய பிரதமர் செபஸ்தியன் லெகோர்னு, “பாரிய தண்டனை நடவடிக்கை” எடுக்கப்போவதாக உறுதியளித்தார். மார்சேய் காவல்துறை மாகாண ஆட்சியகம் நகரம் முழுவதும் ஒன்றுகூடல்களைத் தடை செய்த அதே நேரத்தில், “பகுதியளவிலான மற்றும் மிகவும் வரையறுக்கப்பட்ட வட்டார ஊரடங்கு உத்தரவுகளை” அவர் அறிவித்தார். ஜனநாயக உரிமைகளை இடைநிறுத்தி, குடிமக்களைத் தன்னிச்சையாகக் கைது செய்ய காவல்துறைக்கு அனுமதி அளிக்கும் அவசரகால நிலையை அறிவிப்பாரா என்று கேட்கப்பட்டபோது, லெகோர்னு பதிலளித்தார்: “தேவைப்பட்டால், தெளிவாக எங்களால் முடியும். இப்போதைக்கு, ஊரடங்கு உத்தரவுகளே நிலைமைக்குப் பொருத்தமானவையாகத் தோன்றுகின்றன.”
அரசாங்கத்தின் நெருக்கடி எதிர்வினை குறித்த கூட்டங்களில் பங்கேற்குமாறு தீவிர வலதுசாரி RN (தேசிய பேரணி) கட்சியை லெகோர்னு அழைத்துள்ளார்; தற்போது கருத்துக்கணிப்புகளில் RN முன்னிலை வகிக்கும் 2027 ஜனாதிபதித் தேர்தலை இடதுசாரி எதிர்ப்பிலிருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார். “தீவிர இடது இயக்கம் ஒன்று ஜனாதிபதித் தேர்தல் வரை நாட்டில் ஆழ்ந்த ஒழுங்கின்மையை உருவாக்க விரும்புவது நிரூபிக்கப்பட்ட உண்மை” என்று குற்றம் சாட்டிய அவர், “ஜனாதிபதித் தேர்தலின் தேதியையும் ஏன், தேர்தல் நடத்தப்படுவதையுமே கேள்விக்குள்ளாக்கும் வகையில் தன்னைச் செயல்படுத்திக்கொள்ளக்கூடிய தெளிவற்ற வலைப்பின்னல் ஒன்று இருக்கிறது” என்றும் கூறினார்.
தனது “நிரூபிக்கப்பட்ட உண்மைக்கு” லெகோர்னு எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. உண்மையில், ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் அவரது சொந்தக் காவல்துறை அரசு நடவடிக்கைகளிலிருந்தே வருகிறது. மக்ரோனின் கீழ் RN அரசாங்கத்தை நிறுவுவதற்கான சாத்தியம் குறித்து 2024 தேர்தல்களுக்கு முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற லெகோர்னு, 2027இல் RN அல்லது அதைப் போன்ற ஒடுக்குமுறைமிக்க வலதுசாரிக் கட்சி ஒன்றின் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில் அரசியல் களத்தை வடிவமைக்கும் ஆளும் உயரடுக்கின் திட்டங்களை இந்தப் போராட்டங்கள் அச்சுறுத்துகின்றன என்று கவலை கொள்கிறார்.
லெகோர்னு இன்று நாடாளுமன்றத்தில் 54 பில்லியன் யூரோ சிக்கன வரவு-செலவுத் திட்டத்தை முன்வைக்கும் நிலையில், பிரான்சின் பெருமளவிலான கடனை நிலைப்படுத்த ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகள் வேண்டும் என்ற RN-இன் அழைப்பைச் சர்வதேச முதலீட்டாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். RN தலைவர் மரின் லு பென் அக்டோபர் 6 அன்று 2032க்குள் 140 பில்லியன் யூரோ வெட்டுக்களை முன்மொழிந்ததையடுத்து, பிரெஞ்சுக் கடனுக்கு எதிரான ஊகவணிகத்திலிருந்து பத்திரச் சந்தைகள் பின்வாங்கின. அடுத்த ஆண்டு RN ஜனாதிபதி பதவியைப் பெறுவதை, பிரெஞ்சு அரசுக்கு வழங்கிய கடன்கள் வட்டியுடன் திரும்பக் கிடைப்பதை உறுதிசெய்யக்கூடிய சாத்தியமானதுடன் விரும்பத்தக்கதுமான வழியாக முதலாளித்துவத் தன்னலக்குழுவின் சக்திவாய்ந்த பிரிவுகள் காணத் தொடங்கியுள்ளன.
பிரான்சில் வெடித்துள்ள பெருந்திரள் எதிர்ப்பு இந்தத் திட்டங்களுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது. ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் பொறுப்பற்ற போரை மேலும் தீவிரப்படுத்துவதற்கும் அது குறுக்கே நிற்கிறது. கடந்த வாரம் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற உச்சிமாநாட்டில், மாஸ்கோவுடன் வாஷிங்டன் டீசல் ஒப்பந்தம் செய்துகொண்ட பின்னரும் உக்ரேன் போருக்கு நிதியளிப்பதைத் தொடர ஐரோப்பிய சக்திகள் உறுதியளித்தன. “ஐரோப்பாவை மீள் ஆயுதமயமாக்கு” திட்டத்தின் கீழ் 800 பில்லியன் யூரோ வரையிலான கூடுதல் இராணுவச் செலவினத்திற்கு அவை தயாராகி வருகின்றன.
இந்த அளவிலான போருக்கான நிதியைத் திரட்டுவதற்கு சமூகச் செலவினங்கள் வெட்டிச் சிதைக்கப்பட வேண்டும்; அதற்கு உள்நாட்டில் எழும் எதிர்ப்பை ஒடுக்குவது அவசியமாகிறது. பிரெஞ்சு மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் நிதி மற்றும் இராணுவ நலன்களையே லெகோர்னுவின் ஊரடங்கு உத்தரவுகள் பாதுகாக்கின்றன.
இடதுசாரி எதிர்ப்பை ஒடுக்குவதற்காக ஆளும் வர்க்கம் பாசிச RN கட்சியைத் தயார்படுத்தி வருகிறது என்பதை அந்தக் கட்சியின் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. சனிக்கிழமை வீதிகளில் இருந்தவர்கள் “உழைக்கும் பிரான்ஸ்” அல்ல, “குழப்பத்தின் தொழில்முறையாளர்கள்” மட்டுமே என்று RN கட்சியின் தலைவரான ஜோர்தான் பார்தெல்லா அறிவித்தார். “கொள்ளையடித்து, சூறையாடி, அழித்து, பாதுகாப்புப் படைகளைத் தாக்கிய” கலகக்காரர்கள், “தீவிர இடதுசாரிகளால் பணயக் கைதிகளாகப் பயன்படுத்தப்பட்ட” அக்டோபர் 17 போராட்டங்களைச் “சீரழித்துவிட்டனர்” என்று RN கட்சியின் முன்னணித் தலைவரான மரின் லு பென் எழுதினார். தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், பிரெஞ்சு மக்களை “தீவிர இடதின் வன்முறையிலிருந்து” பாதுகாப்பேன் என்றும் அவர் கூறினார்.
ஒடுக்குமுறை என்பது ஆளும் வர்க்கத்தின் மூலோபாயத்தின் ஒரு பாதை. மற்றொன்று, இயக்கத்தை மீண்டும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தொழிற்சங்க அதிகாரத்துவமும் LFIயும் மேற்கொள்ளும் முயற்சி. இங்கு, அக்டோபர் 17 போராட்டங்களுக்கு மெலோன்சோனின் எதிர்வினை மிகவும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. ஞாயிற்றுக்கிழமை LCI தொலைக்காட்சியில், இளைஞர்களுக்கு மக்ரோன் சலுகைகள் வழங்குவார் என்ற மாயைகளை விதைத்த அவர், எல்லாவற்றுக்கும் மேலாக இயக்கம் முடிவுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
“நமது இளைஞர்களுக்கு இந்த நிகழ்வுத் தொடருக்கு ஒரு நல்ல முடிவு தேவை. அவர்களின் கோரிக்கைகள் செவிமடுக்கப்பட வேண்டும்” என்று மெலோன்சோன் கூறினார். இயக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர மக்ரோன் என்ன வழங்கக்கூடும் என்று வலியுறுத்திக் கேட்கப்பட்டபோது அவர் பதிலளித்தார்: “வாழ்க்கைச் செலவு உயர்வுக்குப் பதிலளியுங்கள், விலைகளை முடக்குங்கள். இரண்டாவதாக, இளைஞர்களுக்குப் பதிலளியுங்கள்; அவர்களுக்கு 10 பில்லியன் யூரோ கொடுத்து, பார்கூர்சப்பை ஒழியுங்கள். மேலும், கடைகள் கொள்ளையடிக்கப்பட்ட துரதிர்ஷ்டமான மக்களின் துயரத்திற்கும் பதிலளியுங்கள்.”
அதன் பின்னர் மெலோன்சோன் 1968 மே பொது வேலைநிறுத்தத்தைக் குறிப்பிட்டார்; பல்கலைக்கழகப் போராட்டங்கள் மீதான வன்முறைமிக்க காவல்துறை ஒடுக்குமுறையைத் தொடர்ந்து அது வெடித்தது. ஆனால் அவர் அதைக் குறிப்பிட்டது, ஒடுக்குமுறைக்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிரான பொது வேலைநிறுத்தத்திற்குத் தயாராவதன் அவசியத்தை வலியுறுத்துவதற்காக அல்ல. மாறாக, பொது வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக பிரதமர் ஜோர்ஜ் பொம்பிடு (Georges Pompidou) ஸ்ராலினிச CGT (பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு) அதிகாரத்துவத்துடன் செய்துகொண்ட கிரெனெல் (Grenelle) ஒப்பந்தங்களை, போராட்டத்தின் மூலம் அடையக்கூடிய சலுகைகளுக்கான எடுத்துக்காட்டாக முன்வைத்தார்.
“லெகோர்னு வரலாற்றிலிருந்து உத்வேகம் பெறலாம். ... பொம்பிடு என்ன செய்தார்? அவர் எல்லோரையும் ஒன்றுகூட்டினார்; எதற்காக? முடிந்தவரை அதிகமான சலுகைகளை வழங்குவதற்காக. ஒரே இரவில், குறைந்தபட்ச ஊதியத்தில் 30 சதவீத உயர்வையும், நிறுவனங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பையும், மேலும் பல சலுகைகளையும் நாங்கள் பெற்றோம்” என்று மெலோன்சோன் கூறினார்.
மெலோன்சோனின் வரலாற்றுப் பாடம், 1968 எவ்வாறு முடிவடைந்தது என்பதைக் குறிப்பிடாமல் விட்டுவிடுகிறது. மே 27 அன்று ரெனோ-பியாங்கூர் (Renault-Billancourt) தொழிலாளர்களிடம் CGT தலைவர் ஜோர்ஜ் செகி (Georges Séguy) கிரெனெல் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை முன்வைத்தபோது, அவர்கள் அவரை ஆரவாரக் கூச்சல்களால் நிராகரித்தனர்; வேலைநிறுத்தம் தொடர்ந்தது. மே 30 அன்று தெ கோல் தேசிய சட்டமன்றத்தைக் கலைத்து தேர்தல்களை அறிவித்தார். அன்று மாலையே பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி (PCF) அந்த முடிவை ஆதரித்தது; அதேவேளை, வாக்கெடுப்புக்கு முன்னர் வேலைநிறுத்தங்களையும் ஆலை ஆக்கிரமிப்புகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்காக CGT தனது முழு சக்தியையும் செலவிட்டது. பொது வேலைநிறுத்தத்தைத் தேர்தல் பாதைக்குத் திசைதிருப்பியதன் மூலம் தெ கோலைக் (de Gaulle) காப்பாற்றியது ஸ்ராலினிஸ்டுகளே.
மெலோன்சோன் இதற்கு ஒப்பான பாத்திரத்தை வகிக்கிறார். ஆனால் 2026இல் கிரெனெல் ஒப்பந்தங்கள் இருக்கப்போவதில்லை. ஐரோப்பா முழுவதிலுமுள்ள நாடுகளைப் போலவே, பிரெஞ்சு அரசும் திவால்நிலையில் உள்ளது; முதலாளித்துவத் தன்னலக்குழுவிலுள்ள அதன் கடனளிப்போரால் அழுத்தப்படுகிறது; பல பத்து பில்லியன் யூரோக்களைப் போருக்குத் திருப்பிவிடுகிறது. கணிசமான சலுகைகளை வழங்குவதற்கான நிதி வசதி அரசிடம் இல்லாததாலேயே லெகோர்னு ஊரடங்கு உத்தரவுகள் குறித்தும் அவசரகால நிலை குறித்தும் பேசுகிறார். இயக்கத்தைக் காட்டிக்கொடுக்கும் ஒப்பந்தத்தை மெலோன்சோன் திட்டமிட்டு நிறைவேற்றி, தொழிலாளர்களை முதலாளித்துவ அரசுடன் பிணைத்து அவர்களின் நம்பிக்கைகளைப் பொய்ப்பித்தால், அரசியல் ரீதியாகப் பயனடையப்போவது தீவிர வலதுதான்.
CGT அதிகாரத்துவமும் இதே பாத்திரத்தையே வகிக்கிறது. அக்டோபர் 17 அன்று நிகழ்ந்த காவல்துறை வன்முறை குறித்து “விசாரணை ஆணையம்” ஒன்றை அமைக்க வேண்டும் என்று அதன் அறிக்கை கோருகிறது; அதேவேளை, “மாதக்கணக்கில் வெளிப்படுத்தப்பட்டு வரும் சமூகக் கோரிக்கைகளுக்கு” அரசாங்கம் “அரசியல் தீர்வுகளைக்” காண வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. ஆனால் தனது சொந்தக் காவல்துறையைத் தண்டிக்கவோ, எந்தக் கணிசமான சமூகச் சலுகைகளையும் வழங்கவோ அரசாங்கம் எண்ணவில்லை. தொழிலாளர் வர்க்கத்தின் பரந்த அணிதிரட்டலைத் தாமதப்படுத்தி தடுப்பதற்காக, நாடு தழுவிய நடவடிக்கையை நவம்பர் 5 வரை ஒத்திவைத்துள்ள CGTயையே அது நம்பியுள்ளது.
இது, போராட்டத்தை இறுதியில் தொழிற்சங்க அதிகாரத்துவமே வழிநடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் மொரேனோவாத நடுத்தர வர்க்கக் குழுக்களான ரெவோலூசியோன் பெர்மனோன் (Révolution permanente, RP) போன்றவற்றின் திவால்நிலையை எடுத்துக்காட்டுகிறது. “தொழிலாளர் இயக்கம் 1968 போலவே போருக்குள் இறங்க வேண்டும்” என்ற தலைப்பிலான RP-இன் அக்டோபர் 17 அறிக்கை, “தொழிற்சங்கத் தலைமைகள் மீது ஒரு போராட்டத் திட்டத்தைத் திணிப்பதே பொருளாதாரத்தை முடக்கும் திறன்கொண்ட ஒரு சக்தியைக் கட்டியெழுப்புவதற்கான திறவுகோல்” என்றும், அதுவே அரசாங்கத்தின் சிக்கனக் கொள்கைகளைத் தோற்கடிக்கும் வழி என்றும் அறிவிக்கிறது.
மக்ரோனுக்கும், நிதிச் சந்தைகளுக்கும், நவ-பாசிசத்திற்கும் எதிரான போராட்டத்தை முதலாளித்துவ அரசாங்கங்களைப் பின்வாங்கச் செய்யும் முன்னோக்கின் அடிப்படையில் நடத்த முடியாது என்று பிரான்சின் சோசலிச சமத்துவக் கட்சி (PES) வலியுறுத்துகிறது. சமரசம் செய்ய முடியாத வர்க்க மோதல் உருவாகியுள்ளது. தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்கொள்ளும் மாற்று மக்ரோன், மெலோன்சோன் மற்றும் லு பென் ஆகியோருக்கு இடையிலானது அல்ல; முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலானதாகும்.
நிலவும் ஆழமான, வெடிப்புமிக்க சமூக எதிர்ப்பை இந்தப் போராட்டங்கள் வெளிப்படுத்தியுள்ளன. ஆயினும் இதுவரை அவை முதன்மையாக இளைஞர்களிடையே அடித்தளம் கொண்டுள்ளன. இயக்கத்தைத் தொழிலாளர் வர்க்கத்திற்குள் மிகப் பரந்த அளவில் விரிவுபடுத்துவதற்காக PES போராடுகிறது. தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் LFI-இல் உள்ள அவற்றின் கூட்டாளிகளும் நிர்ணயிக்கும் கால அட்டவணைக்காக தொழிலாளர் வர்க்கம் காத்திருக்க முடியாது.
பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பணியிடங்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கட்டுப்படுத்தப்படும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களிடமிருந்தும் முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்தும் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புமாறு PES அழைப்பு விடுக்கிறது. இந்தக் குழுக்கள் போராட்டத்தின் கட்டுப்பாட்டை அதிகாரத்துவங்களின் கைகளிலிருந்து பறித்தெடுக்க வேண்டும். சிக்கன நடவடிக்கைகள், ஒடுக்குமுறை, போர் ஆகியவற்றுக்கு எதிரான பொது வேலைநிறுத்தத்திற்குத் தயாராவதற்காக, பிரான்சிலுள்ள தொழிலாளர்களையும் இளைஞர்களையும், ஐரோப்பா முழுவதும் உலகெங்கிலும் இப்போது போராட்டத்தில் நுழைந்துவருகின்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் அவை ஒன்றிணைக்க வேண்டும்.
இதற்கு ஒரு புரட்சிகர அரசியல் முன்னோக்கு அவசியம்: பாசிசம், போர், முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு எதிராகத் தொழிலாளர் அதிகாரத்திற்கும் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்குமான போராட்டம். இந்த முன்னோக்கை ஏற்றுக்கொள்ளும் அனைத்துத் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து, பிரான்சில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமையாக அதைக் கட்டியெழுப்புமாறு அது அழைக்கிறது.
