முன்னோக்கு

பத்திரச் சந்தைகள், மீள் ஆயுதமயமாக்கல் மற்றும் சமூகச் செலவினங்கள் மீதான உலகளாவிய தாக்குதல்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், 2026 ஏப்ரல் 8 புதன்கிழமை பாரிஸில் உள்ள எலிசே மாளிகையில் நடைபெறவிருந்த சந்திப்புக்கு முன்னர், கானா ஜனாதிபதி ஜோன் ட்ரமானி மகாமாவை வரவேற்பதற்காகக் காத்திருக்கிறார். [AP Photo/Michel Euler]

எரிபொருள், வாழ்க்கைச் செலவு உயர்வுகளுக்கும் கல்வி முறையின் நெருக்கடிக்கும் எதிரான தேசிய நடவடிக்கை தினமான அக்டோபர் 17 அன்று 550,000க்கும் அதிகமானோர் அணிவகுத்தனர்; இந்த வெகுஜனப் போராட்டங்களுக்கு விடையிறுப்பாக மக்ரோனின் அரசாங்கம் சர்வாதிகாரத்தைத் திணிக்க நகர்ந்து வரும் நிலையில், சர்வதேச நிதி மூலதனம் தனது கட்டளைகளைப் பிறப்பித்து வருகிறது.

பிரெஞ்சு அரசின் நிதி நெருக்கடி ஆழமடைந்து வரும் நிலையில், இராணுவச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்காக, தேவையான எந்த நடவடிக்கைகளின் மூலமாகவும் சமூகச் செலவினங்களில் பாரிய வெட்டுக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆளும் வர்க்கத்தின் உடனடியான நிகழ்ச்சிநிரல், 54 பில்லியன் யூரோ வரவுசெலவுத் திட்ட வெட்டுக்களை நடைமுறைப்படுத்துவதாகும்; இது சமூகச் செலவினங்கள் மீது ஒரு பாரிய தாக்குதலைக் குறிக்கிறது. ஆனால் இது ஒரு தொடக்கம் மட்டுமே. இலக்கு வேறெதுவும் அல்ல; இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் தொழிலாள வர்க்கத்தின் கடுமையான போராட்டங்களுக்கு விடையிறுப்பாக நிறுவப்பட்ட ஒட்டுமொத்த சமூகப் பாதுகாப்பு அமைப்பையும் அழிப்பதே ஆகும்.

பத்திரச் சந்தைகள் ஊடாக நிதி மூலதனத்தின் கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. முதலீட்டாளர்கள் பிரெஞ்சு அரசுக் கடன் பத்திரங்களை விற்றுத் தள்ளுவதன் மூலம் வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றனர். திங்கட்கிழமை, 10 ஆண்டு கால பத்திரங்களின் வருவாய் விகிதம் 4.80 சதவீதத்திலிருந்து 4.90 சதவீதமாக உயர்ந்தது; இது ஒரு பாரிய அதிகரிப்பாகும்.

இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆண்டுக் கூட்டத்தில், நீண்டகால வட்டி விகிதங்களின் அதிகரிப்பு தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி விகிதத்தை மிஞ்சிவிட்டதால், உலகளவில் பொதுச் செலவினங்களில் வெட்டுக்களை மேற்கொள்வது “அவசரமான தேவையாக” மாறியுள்ளது என்று அது அறிவித்தது. இதன் மூலம், சர்வதேச நிதி மூலதனத்தின் கோரிக்கைகள் தெளிவாக முன்வைக்கப்பட்டன.

இந்த நிதிப் புயலின் மையத்தில் பிரான்ஸ் உள்ளது. பொதுக் கடன் 3.5 டிரில்லியன் யூரோவாக உள்ளது; இது GDP-யின் 120 சதவீதத்திற்குச் சமம், மேலும் அது அதிகரித்து வருகிறது. கடன் சேவைச் செலவுகள், அதாவது வட்டிக் கொடுப்பனவு, இந்த ஆண்டு 25 சதவீதம் அதிகரித்து 65 பில்லியன் யூரோவை எட்டவுள்ளது. பொது நிதிநிலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பிரான்ஸ் “வட்டி விகிதங்களால் கழுத்து நெரிக்கப்படும்” ஆபத்தில் உள்ளது என்று பிரான்ஸ் மத்திய வங்கியின் தலைவர் இமானுவேல் மூலேன் தெரிவித்துள்ளார்.

அதாவது, நிதி மூலதனத்தின் ஓநாய்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கான விலையைத் தொழிலாள வர்க்கமே செலுத்த வைக்கப்பட வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீதான இந்தத் தாக்குதல், பிரான்சிலும் உலகளவிலும் நடைபெற்று வரும் மீள் ஆயுதமயமாக்கலுக்கு நிதியளிப்பதுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது.

போருக்கு நிதியளிப்பதற்கு மேலும் கடன்பத்திரங்களை வெளியிடுவது அவசியமாகிறது. கூடுதல் கடன் வட்டி விகிதங்களை உயர்த்துகிறது; இதனால் தேசிய அரசின் நிதிநிலையைப் பாதுகாப்பதற்காகச் சமூகச் செலவினங்கள் வெட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமடைகின்றன.

இந்தத் தொடர்பு பிரதமர் செபாஸ்தியேன் லெகோர்னுவால் சுட்டிக்காட்டப்பட்டது. செப்டம்பர் 17 அன்று லு ஃபிகாரோவிடம் அவர் தெரிவித்ததாவது: “அடுத்த ஆண்டு, வட்டி விகிதங்களை உயர்த்தி வரும் புவிசார் அரசியல் சூழல் காரணமாக, நாடு கூடுதலாக 10 பில்லியன் யூரோவைத் திரட்ட வேண்டியிருக்கும்.” அவர் குறிப்பிட்ட “புவிசார் அரசியல் சூழல்” என்பது அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும் மேற்கொண்டு வரும் பாரிய மீள் ஆயுதமயமாக்கலே ஆகும்.

இங்கு ஒரு பின்னூட்டச் சுழற்சி இயங்குகிறது. இராணுவத்திற்கு நிதியளிப்பதற்காகப் பணம் கடனாகப் பெறப்படுகிறது, அது வட்டி விகிதங்களை உயர்த்துகிறது; பின்னர் கூடுதல் வட்டிச் செலவைச் செலுத்துவதற்காகச் சமூகச் செலவினங்களில் வெட்டுக்கள் மூலம் மேலும் பணம் திரட்டப்பட வேண்டியுள்ளது.

ஒவ்வொரு பெரிய பொருளாதாரத்திலும் இதே இயங்குமுறையே செயல்படுகிறது. அமெரிக்காவில் வட்டிச் செலவு 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாகி, வரவு-செலவுத் திட்டத்தின் மிகப் பெரிய செலவினமாக விரைவாக மாறி வரும் நிலையில், போர்ச் செலவினங்களின் காரணமாக சமூகச் சேவைகளுக்காக இனி நிதி எதுவும் இல்லை என்று ட்ரம்ப் ஏற்கெனவே கூறியுள்ளார்.

பிரெஞ்சு நெருக்கடியில், உலக சோசலிச வலைத் தளம் விளக்கியுள்ளபடி, ஆளும் வர்க்கம் இரட்டைப் பாதைக் கொள்கையைப் பின்பற்றுகிறது. ஒருபுறம், சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நிறுவுவதற்கு அது விரைவாக நகர்ந்து வருகிறது. மறுபுறம், தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ அரசுக்கு அடிபணிய வைப்பதற்குத் தொழிற்சங்க அதிகாரத்துவத்தையும், ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியாத பிரான்சையும் (LFI) அது சார்ந்துள்ளது.

கடன் நெருக்கடி குறித்தும் பத்திரச் சந்தைகளின் கட்டளைகள் குறித்தும் அவர் கொண்டுள்ள அணுகுமுறையில் மெலோன்சோனின் பாத்திரம் அப்பட்டமாக வெளிப்படுகிறது. கடந்த ஆண்டு LFI-இன் கோடைக்காலப் பள்ளியில் ஆற்றிய உரையில், நெருக்கடி என்று எதுவும் இல்லை என்றும், அது வெறுமனே மக்ரோனும் பிரதமர் பிரான்சுவா பெய்ரூவும் உருவாக்கிய ஒன்று என்றும் அவர் வலியுறுத்தினார். மக்ரோன் “வெளியேற வேண்டும்” என்பதே இலக்கு என்றும், பிரான்ஸ் ஒரு நெருக்கடியிலிருந்து 1,000 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

பொருளாதார யதார்த்தம் குறித்த இந்தத் திரிக்கப்பட்ட சித்தரிப்பு, சோசலிசப் புரட்சி நிகழ்ச்சிநிரலில் இல்லை, புரட்சிகரத் தலைமை அவசியமில்லை, மாற்றம் வாக்குப் பெட்டி மற்றும் நாடாளுமன்ற அமைப்புமுறை மூலமாக மட்டுமே வர முடியும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த அவரது அரசியல் முன்னோக்கிலிருந்தே நேரடியாக எழுந்தது.

பிரான்ஸ் மத்திய வங்கி தன்வசமுள்ள பிரெஞ்சுக் கடனை, அதாவது மொத்தத்தில் 18 சதவீதமான சுமார் 600 பில்லியன் யூரோவை, சமூகச் செலவினங்களுக்கான நிதி வளங்களை விடுவிப்பதற்காக “எரித்துவிட வேண்டும்” என்பதே மெலோன்சோனின் சமீபத்திய முன்மொழிவாகும். இதன் மூலம் மெலோன்சோன் மீண்டும் இளைஞர்கள், “மஞ்சள் அங்கி” இயக்கத்தினர், தொழிலாள வர்க்கம் ஆகியோரின் கண்களில் மண்ணைத் தூவி, அவர்கள் எதிர்கொள்ளும் புரட்சிகரக் கடமைகளைக் காண முடியாதபடி குருடாக்க முயல்கிறார்.

அதாவது, மெலோன்சோனின் கருத்துப்படி, பிரான்சின் நிலைமை, பிரெஞ்சு மற்றும் உலக முதலாளித்துவத்தின் தொடர்ந்து ஆழமடைந்து வரும் நெருக்கடியிலிருந்து தோன்றுவது அல்ல; அனைத்து முக்கிய பொருளாதாரங்களிலும் வளர்ந்து வரும் கடன் மலை, அந்த நெருக்கடியின் அம்சங்களில் ஒன்றாகும். மாறாக, அவரது கருத்துப்படி, இது கணக்குப் பதிவுகள் மூலம் தீர்க்கக்கூடிய ஒரு வெறும் தொழில்நுட்பப் பிரச்சினையாக மட்டுமே உள்ளது.

மெலோன்சோனின் திவாலான முன்மொழிவு, பிரான்ஸ் மத்திய வங்கி “மக்களின்” நலன்களுக்காகச் செயல்படுமாறு உத்தரவிடப்படக்கூடிய ஏதோவொரு நடுநிலை அமைப்பு அல்ல என்பதையும், மாறாக அது ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) ஊடாகச் சர்வதேச நிதி மூலதனத்தின் வலையமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள அதன் ஒரு நிறுவனக் கருவி என்பதையும் புறக்கணிக்கிறது.

அதுமட்டுமல்லாமல், மத்திய வங்கி வைத்திருக்கும் கடன் மொத்தத்தில் ஒரு சிறு பகுதி மட்டுமே; அதன் பெரும்பகுதி தனியார் வங்கிகள், முதலீட்டு நிதியங்கள் மற்றும் செல்வந்த தன்னலக்குழுவினரின் கைகளில்தான் உள்ளது.

அத்தகைய நடவடிக்கைக்கான அவர்களது எதிர்வினை, பிரெஞ்சுப் பத்திரங்களை உடனடியாக விற்றுத் தள்ளுவதாக இருக்கும்; அதன் மூலம், தங்களது கட்டளைகளை அமல்படுத்துவதற்காக வட்டி விகிதங்களில் பெரும் உயர்வையும் நிதி நெருக்கடியின் ஆழமடைதலையும் அவர்கள் தூண்டுவார்கள்.

இதைத் தனது சொந்த அனுபவத்திலிருந்தே மெலோன்சோன் அறிவார். அவர் சோசலிஸ்ட் கட்சியின் (PS) உறுப்பினராக இருந்தார். அந்தக் கட்சியைச் சேர்ந்த மித்தரானின் அரசாங்கம், 1981ஆம் ஆண்டில், சமூகச் சீர்திருத்த வேலைத்திட்டத்திற்கான மக்களின் உற்சாக அலையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிதிச் சந்தைகளின் கடுமையான, பாதகமான எதிர்வினை, அந்த வேலைத்திட்டம் முற்றாகத் தலைகீழாக மாற்றப்படுவதற்கு வழிவகுத்தது; அதன் விளைவாக அந்த அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை ஆழப்படுத்தியது.

2015ஆம் ஆண்டில் கிரீஸ் பெற்ற அனுபவம் இந்தப் படிப்பினைகளை உறுதிப்படுத்துகிறது. அங்கு சிரிசா (SYRIZA), ECB, சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி மூலதனம் ஆகியவற்றின் கட்டளைகளுக்கு எதிராக நிற்பதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்தது; ஆனால் ஜூலை பொதுவாக்கெடுப்பில் [கடன் வழங்கிய தரப்புகளின் சிக்கனக் கோரிக்கைகளை ஏற்பதா என்பது குறித்து 2015 ஜூலை 5 அன்று நடத்தப்பட்டது] 62 சதவீத வாக்காளர்கள் “இல்லை” என வாக்களித்த போதிலும், பாரிய சிக்கன நடவடிக்கைகளுக்கான அவற்றின் கோரிக்கைகளுக்கு அது பணிந்தது.

இதற்கான காரணம் என்னவென்றால், நிதி மூலதனத்தின் பிடியை உடைப்பதற்கு இருந்த ஒரே வழி, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கிரேக்கத் தொழிலாள வர்க்கத்தைப் புரட்சிகரமாக அணிதிரட்டுவதும், அதே வேளையில் ஐரோப்பா முழுவதிலுமுள்ள தொழிலாள வர்க்கத்திடம் உடனடியாக ஆதரவுக்காகக் கரம் நீட்டுவதுமே ஆகும்.

சிரிசாவும் அதன் கூட்டாளிகளும் அத்தகைய முன்னோக்கை எதிர்த்ததுடன் அதற்குப் பகைமையுடனும் நடந்துகொண்டன; ஏனெனில் அவை உழைக்கும் மக்களின் நலன்களை அல்ல, மாறாக முதலாளித்துவ அமைப்புமுறைக்குள் தங்கள் நிலையைப் பேணிக்கொள்ள முயலும் நடுத்தர வர்க்கத்தின் மேல் அடுக்குகளையும், முதலாளித்துவ வர்க்கத்தின் சில பிரிவுகளையுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

மெலோன்சோனும் அவரது LFI-யும் இதே பாத்திரத்தையே வகிக்கின்றனர்.

இந்த சக்திகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கம் தனது போராட்டத்தை நிதி மூலதனத்துடனான முழுமையான முறிவை அடிப்படையாகக் கொண்ட ஒரு மூலோபாயத்தின் மீது கட்டியெழுப்ப வேண்டும். இதற்குக் குறைவான எதுவும், அது எவ்வளவு “தீவிரமானதாக” ஒலித்தாலும், நிதி மூலதனத்தின் கட்டளைகளுக்கு அடிபணிவதையே அர்த்தப்படுத்தும்.

நிதி நெருக்கடியைச் சீரமைப்புகள், ஒட்டுவேலைகள், கணக்குப் பதிவு நடவடிக்கைகள் மூலம் தீர்க்க முடியாது. முதலில், கடன் நிராகரிக்கப்பட வேண்டும். அது தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக அல்ல, முதலாளித்துவத் தன்னலக்குழுவின் நலன்களுக்காகவே வாங்கப்பட்டது. பிரெஞ்சு ஏகாதிபத்தியம் உலகை மறுபங்கீடு செய்வதற்கான போராட்டத்தில் தனது சர்வதேச சகாக்களுடன் இணைந்துகொள்ளும் நிலையில், அதிகரித்த இராணுவச் செலவினத்திற்கான கோரிக்கைகளால் அந்தக் கடன் மேலும் குவிக்கப்படுவது தூண்டப்பட்டு வருகிறது.

சமூகம், அரசு ஆகியவற்றின் வளங்களை விழுங்கும் வங்கிகள், நிதி நிறுவனங்களின் வலையமைப்பு, முதலாளித்துவத் தன்னலக்குழுவினர் ஆகியவற்றிடமிருந்து சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு, தனியார் உடைமையிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதையே கடன் நிராகரிப்பு அர்த்தப்படுத்துகிறது.

அனைத்துச் சமூகத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கும், சமூகத்தை மேலும் வளர்த்தெடுப்பதற்கும் தேவையான வளங்கள் மிகுதியாகவே உள்ளன.

இந்த வேலைத்திட்டத்திற்கான போராட்டம் சர்வதேச மூலதனத்திடமிருந்து தூண்டும் மூர்க்கமான எதிர்வினை, ஐரோப்பிய, சர்வதேச சோசலிசப் புரட்சியை வளர்த்தெடுப்பதற்காக, ஸ்பெயின், பெல்ஜியம், ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளிலும் அவற்றுக்கு அப்பாலும் பெரும் போராட்டங்கள் வெடித்து வரும் ஐரோப்பாவின் ஏனைய தொழிலாள வர்க்கத்தின் ஆதரவை நாட வேண்டிய உடனடித் தேவையைப் பிரெஞ்சுத் தொழிலாள வர்க்கத்தின் முன் நிறுத்துகிறது.

உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, இந்த வேலைத்திட்டத்திற்கான போராட்டத்திற்கு (விரிவடைந்துவரும் புரட்சிகர சூழ்நிலையில் இதுவே ஒரே சாத்தியமான, யதார்த்தமான முன்னோக்கு) ஒரு புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவது அவசியம் என்று விளக்கியுள்ளது. இந்த முன்னோக்கை முன்னெடுப்பதற்காக, தற்போது வெளிப்பட்டு வரும் போராட்டங்களை வளர்த்தெடுப்பதற்கும், அவற்றை அதிகாரத்துவ எந்திரங்களின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கும், ஒரு பொது வேலைநிறுத்தத்திற்குத் தயாரிப்பு செய்வதற்கும், இதன் மூலம் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க அது போராடுகிறது.

Loading