முன்னோக்கு

பிரான்சில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் ஐரோப்பா முழுவதும் பரவுகின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

2026 அக்டோபர் 22 வியாழக்கிழமை, பாரிஸில் பள்ளிகளின் மோசமான கல்விச் சூழ்நிலைகளுக்கு எதிராகப் போராட்டக்காரர்கள் ஒன்றுகூடியபோது போலிஸை எதிர்கொள்கின்றனர். [AP Photo/Teresa Suarez]

ஒரு மாதத்திற்கு முன்னர், பிரான்சில் உயர்நிலைப் பள்ளிகளின் முடக்கங்களையும் மூடல்களையும் மையமாகக் கொண்ட ஓர் இயக்கம் தொடங்கியது. அது பிரெஞ்சு அரசாங்கத்தை ஆழமாக உலுக்கியதோடு மட்டுமல்லாமல், ஐரோப்பா முழுவதும் பரவியுள்ளது. ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் இளைஞர்களும் தொழிலாளர்களும் ஒரே கோரிக்கைகளை முன்வைக்கும் அதேவேளையில், எல்லா இடங்களிலும் அரசாங்கங்கள் இந்தப் போராட்டங்களுக்குப் போலிஸ் வன்முறை மற்றும் ஒடுக்குமுறையின் மூலம் பதிலளிக்கும் நிலையில், ஒரு சர்வதேச இயக்கம் வளர்ந்து வருகிறது.

கண்டம் முழுவதும் புரட்சிகரக் கொந்தளிப்புகள் நிகழ்ந்த 1848ஆம் ஆண்டின் எதிரொலியைத் தற்போதைய நிகழ்வுகளில் உணர முடிகிறது. இது நிச்சயமாக ஓர் ஒப்புமையே தவிர, திட்டவட்டமான ஒப்பீடு அல்ல. 2026இன் உலகம் 1848இன் உலகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஆயினும், பிரான்சிலிருந்து ஐரோப்பா முழுவதும், அதற்கு அப்பாலும் வெகுஜனப் போராட்டங்கள் விரைவாகப் பரவியிருப்பது, தற்போது வளர்ந்துவரும் இயக்கத்தின் அடிப்படையான உலகளாவிய தன்மையை வெளிப்படுத்துகிறது. அதைவிட அடிப்படையாக, அதன் உருப்பெற்று வரும் சமூக மற்றும் அரசியல் சாராம்சம் முதலாளித்துவ-ஜனநாயக இயல்புடையதல்ல; மாறாக, தொழிலாள வர்க்க மற்றும் சோசலிச இயல்புடையதாகும்.

ஐரோப்பா முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பகிர்ந்துகொள்ளும், ஆனால் உத்தியோகபூர்வ அரசியல் நீண்டகாலமாக ஒடுக்கி வந்துள்ள உணர்வுகளை கடந்த ஒரு மாதம் மேற்பரப்புக்குக் கொண்டுவந்துள்ளது. கல்வி, ஓய்வூதியங்கள், சமூகச் செலவினங்கள் ஆகியவற்றிலிருந்து நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்கள் இராணுவத்திற்கும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போருக்கும் திருப்பிவிடப்படுவதற்கு எதிராகவும்; வீட்டுவசதி, எரிசக்தி விலைகளை உயர்த்தும் நிதி ஊகவணிகத்திற்கு எதிராகவும்; நிதிச் சந்தைகளால் கட்டளையிடப்படும் சமூக வெட்டுக்களுக்கு எதிராகவும்; போலிஸ் ஒடுக்குமுறைக்கும் நவ-பாசிசத்தை ஊக்குவிப்பதற்கும் எதிராகவும் ஆழமான எதிர்ப்பு நிலவுகிறது. இவை சர்வதேசப் பிரச்சினைகள்; இவை தொடர்பான போராட்டங்கள் தேசிய எல்லைகளைக் கடந்து பரந்த ஆதரவைப் பெற்றுள்ளன.

புதன்கிழமை அன்று கிரீஸில் 50க்கும் மேற்பட்ட நகரங்களிலும் ஊர்களிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் பொதுத்துறைத் தொழிலாளர்களும் அணிவகுத்துச் சென்றனர்; ஏதென்ஸில் மட்டும் ஏறத்தாழ 20,000 பேர் பங்கேற்றனர். குறைந்த ஊதியங்கள், பொதுக் கல்வியின் நிலை, மாணவர் தங்குமிடங்களின் தாங்க முடியாத செலவு ஆகியவற்றுக்கு எதிராக அவர்கள் போராடியதுடன், பிரான்சில் நடைபெறும் பெருந்திரள் போராட்டங்களையும் சுட்டிக்காட்டினர். ஏதென்ஸில் ஒரு பதாகையில் “கிரீஸிலிருந்து பிரான்ஸ் வரை, கல்விக்குப் பணம் கொடுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது; ஏதென்ஸ், தெசலோனிகி, பட்ராஸ் ஆகிய இடங்களில் போராட்டக்காரர்களின் கூடாரங்களில் “கிரீஸ், பிரான்ஸ், எங்கும் கிளர்ச்சி; அதே பிரச்சினைகள், அதே எதிரி” என்ற முழக்கம் எழுதப்பட்டிருந்தது. தொழிற்சங்கத் தலைமை நவம்பர் 25 வரை மற்றொரு நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவிக்கவில்லை.

இத்தாலியில், பிரான்சுடனான ஒருமைப்பாட்டைத் தெரிவித்து மாணவர் குழுக்கள் வெகுஜனப் போராட்டங்களை ஒழுங்கமைத்துள்ளன. Rete degli studenti (மாணவர் வலையமைப்பு) பிரெஞ்சு வேலைநிறுத்தக்காரர்களுக்கு விடுத்த வேண்டுகோளில் பின்வருமாறு குறிப்பிட்டது: “நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம். அவர்களின் போர்களைக் கைவிட்டு நாங்கள் விலகுவோம். பள்ளிகளுக்குப் பணம், ஆயுதங்களுக்கு அல்ல.” அக்டோபர் 16 அன்று நாடு முழுவதும் உள்ள நகரங்களில் மாணவர்கள் அணிவகுத்து, “நிலைமைகள் மாறாவிட்டால், பிரான்சில் அவர்கள் செய்ததையே நாங்களும் செய்வோம்” என்று முழக்கமிட்டனர். இத்தாலி, பிரான்ஸ், கிரீஸ், துருக்கி, மொரோக்கோ, பாஸ்க் பிரதேசம் ஆகியவற்றின் துறைமுகத் தொழிலாளர் சங்கங்கள், போருக்கும் துறைமுகங்களின் இராணுவமயமாக்கலுக்கும் எதிராக அக்டோபர் 30 அன்று ஒரு சர்வதேச நடவடிக்கை தினத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இத்தாலிய பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு (CGIL) நவம்பர் 20 அன்று ஒரு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.

பிரான்சில் நடைபெற்ற பள்ளிப் போராட்டங்கள் விரைவிலேயே, லியேஜ், பிரஸ்ஸல்ஸ் ஆகிய நகரங்களில் கல்விச் செலவு உயர்வுக்கு எதிரான பெல்ஜிய மாணவர்களின் ஒருமைப்பாட்டுப் போராட்டங்களுக்கு வழிவகுத்தன. பெல்ஜிய அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கும் இராணுவச் செலவின உயர்வுக்கும் எதிராக நீண்டகாலமாக நடைபெற்று வரும் நாடு தழுவிய போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றுக்கு இடையிலேயே இவை நடந்தன; அண்மையில் அக்டோபர் 9 அன்று பிரஸ்ஸல்ஸில் தேசிய ஆர்ப்பாட்டமும், அக்டோபர் 12 அன்று பொதுத்துறை வேலைநிறுத்தமும் நடைபெற்றன.

50க்கும் மேற்பட்ட நகரங்களில் நூறாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற வீட்டுவசதிக்கான வெகுஜனப் போராட்டங்கள் பிரெஞ்சு மாணவர் இயக்கத்துடன் இணையாக வெடித்த ஸ்பெயினில், போராட்டக்காரர்கள் பிரெஞ்சுப் போராட்டங்களுடனான தங்கள் ஒருமைப்பாட்டைப் பலமுறை அறிவித்துள்ளனர். ஸ்பெயினில் நகரச் சதுக்கங்களை ஆக்கிரமித்துள்ள போராட்டக்காரர்களின் முழக்கங்களில் ஒன்று “நாம் பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்பதாகும். நவம்பர் 11 அன்று ஒரு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில், 130க்கும் மேற்பட்ட நகரங்களில் “கட்டாய இராணுவச் சேவைக்கு எதிரான பள்ளி வேலைநிறுத்தம்” இயக்கத்தில் பத்தாயிரக்கணக்கான இளைஞர்கள் செயல்பட்டு வருகின்றனர்; “கட்டாய இராணுவச் சேவைக்கும், குடிமைச் சேவைக்கும், போருக்கும் இல்லை”, “பணக்காரர்கள் போரை விரும்புகின்றனர்; இளைஞர்கள் எதிர்காலத்தை விரும்புகின்றனர்” போன்ற முழக்கங்களை அவர்கள் எழுப்புகின்றனர். பேர்லினில் உள்ள பிரெஞ்சு ஜிம்னாசியம் (Französisches Gymnasium) என்ற உயர்நிலைப் பள்ளியை மாணவர்கள் முடக்கினர்; “தீப்பொறி பிரான்சிலிருந்து ஜேர்மனிக்குத் தாவ வேண்டும்” என்று அழைப்பு விடுக்கும் துண்டறிக்கைகளைத் தாங்கள் கண்டெடுத்ததாகப் போலிஸ் தெரிவித்தது. அக்டோபர் 20 அன்று மியூனிக்கில் நடைபெற்ற பள்ளி வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, அக்டோபர் இறுதியில் பல ஜேர்மன் நகரங்களில் கட்டாய இராணுவச் சேவைக்கு எதிரான மேலும் பல போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளுக்கு அப்பால், போர்த்துக்கல், அயர்லாந்து, அல்பேனியா ஆகிய நாடுகளிலும் வேலைநிறுத்தங்கள் அல்லது இளைஞர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஐரோப்பா முழுவதும் இளைஞர்களும் தொழிலாளர்களும் முன்வைக்கும் கோரிக்கைகளை, முதலாளித்துவ அரசாங்கங்கள் மேலிருந்து வழங்கும் சீர்திருத்தங்கள் மூலம், தேசிய அடிப்படையில் வென்றெடுக்க முடியாது. சலுகைகளை வழங்க ஆளும் வர்க்கம் விரும்பவும் இல்லை; வழங்கும் நிலையிலும் இல்லை. ஜனநாயக ஆட்சி வடிவங்களுக்குப் பொருந்தாத அளவிலான செல்வக் குவிப்பை நிதியியல் தன்னலக்குழு ஒன்று திரட்டியுள்ளது.

பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், கிரீஸ் ஆகிய நாடுகளின் பொதுக் கடன்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 100 சதவீதத்திற்கும் மேல் உள்ளன; ஸ்பெயினின் கடனும் அதற்கு நெருக்கமாக உள்ளது. கடன் வழங்குவோரால் நெருக்கப்பட்டு, தங்கள் கடன்களுக்கு எதிரான ஊகவணிகத்தையும் எதிர்கொள்ளும் இந்த அரசாங்கங்கள், தன்னலக்குழுவுக்கு வரி விதிப்பதன் மூலம் மட்டுமே சமூகச் சலுகைகளுக்கு நிதியளிக்க முடியும்; ஆனால் அதைச் செய்ய அவை மறுக்கின்றன.

அதற்குப் பதிலாக, அவை வளங்களைப் போருக்காக வாரி இறைக்கின்றன. கடந்த ஒரு மாதத்தில், மேலும் தீவிரப்படுத்துவது அணு ஆயுதப் போரைத் தூண்டக்கூடும் என்று மாஸ்கோ விடுத்த எச்சரிக்கைகளையும் மீறி, ஐரோப்பிய சக்திகள் ரஷ்யாவுக்கு எதிரான போரைப் பொறுப்பற்ற முறையில் தீவிரப்படுத்தின. மாஸ்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் மற்றும் பிற ரஷ்ய நகரங்கள் மீது ட்ரோன் (ஆளில்லா விமானம்) மூலமான பாரிய தாக்குதல்களை நடத்துவதற்காக உக்ரேனிய ஆட்சிக்கு அவை ஆயுதம் வழங்கின; அதேவேளை, காலினின்கிராட் மீதான முற்றுகைக்காக நேட்டோ தயாரிப்புகளை மேற்கொண்டது.

“ஐரோப்பாவை மீள் ஆயுதமயமாக்கு” (ReArm Europe) திட்டத்தின் கீழ் 800 பில்லியன் யூரோ வரையிலான கூடுதல் இராணுவச் செலவினத்திற்கு அவை திட்டமிட்டுள்ளன; பாரிய மீள் ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக, இராணுவச் செலவினத்திற்குத் தனது அரசியலமைப்பு ரீதியான கடன் தடுப்பு விதியிலிருந்து ஜேர்மனி விலக்கு அளித்துள்ளது. இந்த அளவிலான தொகைகளைச் சமூகச் செலவினங்களை வெட்டிச் சிதைப்பதன் மூலம் மட்டுமே அவற்றால் திரட்ட முடியும்.

இதனால்தான் ஐரோப்பாவில் ஒவ்வொரு அரசாங்கமும் இந்த இயக்கத்திற்கு ஒரே விதமாகப் பதிலளிக்கிறது. தனது சொந்தச் செல்வத்தைத் தொடவோ தனது போர் இலக்குகளைக் கைவிடவோ மாட்டாத ஆளும் வர்க்கம், இந்தக் கொள்கைகளைச் சர்வாதிகார ஆட்சி வடிவங்கள் மூலமாக மட்டுமே திணிக்க முடியும். வெகுஜன எதிர்ப்புக்கு அது போலிஸ் அரசு நடவடிக்கைகளாலும் நவ-பாசிச சக்திகளை ஊக்குவிப்பதாலும் பதிலளிக்கிறது.

இந்தப் பிரச்சினைகளின் மூல காரணமான முதலாளித்துவ அமைப்புமுறையையே எதிர்த்துப் போராடும் கடமையைத் தொழிலாள வர்க்கத்தின் முன் இது வைக்கிறது.

தேர்தல் அரசியலின் கட்டமைப்பிற்குள்ளும், முதலாளித்துவ அரசுடன் தொழிற்சங்கங்கள் நடத்தும் பேச்சுவார்த்தைகளின் கட்டமைப்பிற்குள்ளும் இந்தப் போராட்டத்தைத் தொழிலாளர்களாலும் இளைஞர்களாலும் நடத்த முடியாது என்பதை பிரான்சின் நெருக்கடி காட்டுகிறது. அரசாங்கம் பின்வாங்கும் என்ற மாயையைத் தொழிற்சங்க அதிகாரத்துவமும் ஜோன்-லூக் மெலோன்சோன் போன்ற “மக்கள்வாத” அரசியல்வாதிகளும் பரப்பி வரும் அதேவேளையில், ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ஒரு இரக்கமற்ற மூலோபாயத்தைப் பின்பற்றுகிறார். பாரிய கைதுகளாலும், டஜன் கணக்கான மாணவர்களை ஊனமாக்கிய காவல்துறை வன்முறையாலும் அவரது அரசாங்கம் போராட்ட இயக்கத்திற்குப் பதிலளித்துள்ளது.

ரஷ்யா மற்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர்களாலும் எரிசக்தி முற்றுகைகளாலும் உயர்ந்துள்ள எரிபொருள், வாழ்க்கைச் செலவுகளை எதிர்த்துப் போராடும் “மஞ்சள் அங்கி” இயக்கத்தினருடன் அக்டோபர் 17 அன்று இளைஞர்கள் பெருந்திரளாக அணிவகுத்தனர். பல நகரங்களில் கலகத் தடுப்பு போலிஸாரை அந்தப் போராட்டம் திணறடித்தது; உள்துறை அமைச்சர் லோரன் நுனேஸ் “கட்டுப்பாட்டை இழந்துவிட்டோம்” என்பதை ஒப்புக்கொண்டார். அதன் பின்னர், பல முக்கிய நகரங்களில் அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவுகளை அமல்படுத்தியுள்ளனர்; இயக்கம் தொடங்கியதிலிருந்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000ஐக் கடந்துள்ளது.

சனிக்கிழமை, அக்டோபர் 24 அன்று நடைபெறவுள்ள போராட்டத்திற்காக அரசாங்கம் இராணுவத்தைக் களமிறக்குகிறது. சென்டினெல் நடவடிக்கையின் (Opération Sentinelle) இராணுவத்தினர் காவல் கடமைகளை ஏற்று, போலிஸாரையும் ஜென்டார்ம் படையினரையும் (gendarmes: இராணுவ அந்தஸ்து கொண்ட, உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசியப் போலிஸ் படை) அந்தக் கடமைகளிலிருந்து விடுவிப்பர். இவ்வாறு விடுவிக்கப்படும் அவர்கள், GIGN (ஜென்டார்ம் படையின் தேசியத் தலையீட்டுக் குழு; பயங்கரவாத-எதிர்ப்பு, பணயக்கைதி மீட்புப் பணிகளுக்கான உயரடுக்குப் பிரிவு), RAID (தேசிய போலிஸின் உயரடுக்கு அதிரடிப் பிரிவு), BRI (போலிஸின் தேடல் மற்றும் தலையீட்டுப் படைப்பிரிவு; ஆயுதமேந்திய குற்றவாளிகளுக்கு எதிரான சிறப்புப் பிரிவு) ஆகிய அதிரடித் தாக்குதல் பிரிவுகள், கவச வாகனங்கள், ஹெலிகாப்டர்கள், நீர்ப் பீரங்கிகள் ஆகியவற்றுடன் இணைந்து போராட்டக்காரர்களை எதிர்கொள்வர். படைகள் மேலும் விரைவாக நகர்ந்து செயல்படக்கூடியவையாக இருக்க வேண்டும் என்று நுனேஸ் கூறுகிறார்; முன்கூட்டியே அறிவிக்கப்படாத ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்வது குறித்தும் அவர் பரிசீலித்து வருகிறார்.

அடிப்படை ஜனநாயக உரிமைகளை முடக்கும் வகையிலான அவசரகால நிலை குறித்து அரசு அதிகாரிகள் கலந்தாலோசித்து வருகின்றனர். அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகளில் முன்னிலை வகிக்கும் நவ-பாசிச RN (தேசிய பேரணி) கட்சி, 2032க்குள் 140 பில்லியன் யூரோ வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களைக் கோருகிறது; அதன் தலைவரான ஜோர்தான் பார்தெல்லா போராட்டக்காரர்களை “குழப்பத்தின் தொழில்முறையாளர்கள்” எனக் கண்டித்துள்ளார். வலதுசாரி லே ரிபப்ளிகன் (LR) கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான புருனோ ரெத்தாயோ, அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சியைத் தடை செய்யும் யோசனையை முன்வைத்துள்ளார்; 2022இல் அக்கட்சியின் வேட்பாளரான மெலோன்சோன் ஏறத்தாழ 8 மில்லியன் வாக்குகளைப் பெற்றிருந்தார்.

அதேவேளை, பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பின் (CGT) அதிகாரத்துவம், நவம்பர் 5 அன்று நடைபெறவுள்ள ஒரு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் வரை வேலைநிறுத்த நடவடிக்கையை ஒத்திவைத்து, இளைஞர்களையும் “மஞ்சள் அங்கி” இயக்கத்தினரையும் தனிமைப்படுத்தியுள்ளது. அந்த நாளில் தொழிலாளர்கள் பெருமளவில் வேலைநிறுத்தம் செய்தால் மக்ரோன் பின்வாங்குவார் என்று CGT பொதுச் செயலாளர் சோஃபி பினே கூறி வருகிறார்: “தொழிலாளர்கள் வேலையை நிறுத்தும்போது நாடே ஸ்தம்பிக்கிறது, பொருளாதாரம் முடங்குகிறது, எங்கள் கோரிக்கைகள் செவிமடுக்கப்படும்.”

மெலோன்சோனோ, இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு மக்ரோன் இணங்கியவுடன் போராட்டங்கள் முடிவுக்கு வரக்கூடும் என்று கூறுகிறார்: “நமது இளைஞர்களுக்கு இந்த நிகழ்வுத் தொடருக்கு ஒரு நல்ல முடிவு தேவை. அவர்களின் கோரிக்கைகள் செவிமடுக்கப்பட வேண்டும்.” முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாத்துக்கொண்டே 1968 மே பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து காட்டிக்கொடுத்ததை நியாயப்படுத்துவதற்காக, முதலாளித்துவ அரசுக்கும் ஸ்ராலினிசப் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே பேசி முடிவுசெய்யப்பட்ட சமூகச் சலுகைகளிலிருந்து அரசாங்கம் உத்வேகம் பெறக்கூடும் என்று அவர் ஊகிக்கிறார்.

ஆனால் மக்ரோன் சமரசத்தை அல்ல, சர்வாதிகாரத்தையே தயாரித்து வருகிறார். பினேவும் மெலோன்சோனும் தேசியவாத மாயைகளைப் பரப்புகின்றனர்; போருக்கு எதிரான போராட்டம், முதலாளித்துவத் தன்னலக்குழுவின் சொத்துக்களைக் கைப்பற்றுவது, ஐரோப்பா முழுவதும் வெடித்து வரும் வர்க்கப் போராட்டம் ஆகியவை குறித்து அவர்கள் எதுவும் கூறுவதில்லை. பிரெஞ்சுத் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஐரோப்பாவின் பிற பகுதிகளிலுள்ள அவர்களின் வர்க்கச் சகோதர சகோதரிகளிடமிருந்து அவர்கள் துண்டித்து விடுகின்றனர்; ஆளும் வர்க்கத்தின் திட்டங்களை எதிர்த்துப் போராடுவதற்கு எந்த வழியையும் முன்வைக்கவில்லை.

பிரான்சின் சோசலிச சமத்துவக் கட்சியும் (PES) ஐரோப்பாவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) சகோதரக் கட்சிகளும், பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பணியிடங்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவதற்கு அழைப்பு விடுக்கின்றன.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களாலும் இளைஞர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களால் கட்டுப்படுத்தப்பட்டு, தொழிற்சங்க அதிகாரத்துவங்களிடமிருந்தும் முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்தும் சுயாதீனமாகச் செயல்படும் இந்தக் குழுக்களால், அதிகாரத்துவங்கள் வகுக்கும் கால அட்டவணைகளுக்குக் கட்டுப்படாமல், வேலைநிறுத்தங்களை மிகப் பரந்த அளவுக்கு விரிவுபடுத்துவதற்காகப் போராட முடியும்.

ஐரோப்பா முழுவதும் இப்போது வெடித்து வரும் போராட்டங்களை ஒன்றிணைப்பதே நடவடிக்கைக் குழுக்களின் மையப் பணியாகும். மக்ரோனின் போலிஸ் அரசுக்கு எதிராக, பிரெஞ்சுத் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் மிக வலிமையான கூட்டாளிகள், ஐரோப்பா முழுவதும் இப்போது போராட்டத்தில் இறங்கியுள்ள தொழிலாளர்களும் இளைஞர்களுமே. அவர்களின் போராட்டங்கள் ஒரே நேரத்தில் வெடித்திருப்பது ஒரு ஐரோப்பிய பொது வேலைநிறுத்தத்தின் அவசியத்தை முன்வைக்கிறது; தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் தேசியக் கட்டமைப்பை உடைத்துக்கொண்டு செல்வதன் மூலம் மட்டுமே அந்தப் பொது வேலைநிறுத்தத்தைத் தயார்படுத்த முடியும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இந்தக் குழுக்களைச் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) மூலம் சர்வதேச அளவில் இணைக்கப் போராடுகிறது.

இத்தகைய குழுக்கள், ஏகாதிபத்தியப் போரை நிறுத்துவதற்கும், நவ-பாசிசத்தின் எழுச்சியைத் தடுப்பதற்கும், முதலாளித்துவத் தன்னலக்குழுவின் சொத்துக்களைக் கைப்பற்றுவதன் மூலம் கடன் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்குமான இயக்கத்தின் மையமாக மாற முடியும். தரமான பள்ளிகள், மலிவு விலை வீட்டுவசதி, கட்டாய இராணுவச் சேவைக்கும் போருக்கும் முடிவு ஆகிய இளைஞர்களின் கோரிக்கைகள், அந்தத் தன்னலக்குழு பொருளாதாரத்தையும் அரசையும் கட்டுப்படுத்தும் வரை நிறைவேற்றப்பட முடியாது. எனவே சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் சகோதரக் கட்சிகளும், தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவும், ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் பதிலாக ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை நிறுவுவதற்காகவும் போராடுகின்றன.

Loading